Sunday, December 20, 2009

சங்க காலச் சோழர்கள்

இப்பதிவு நான் முன்னர் எழுதிய சோழர்கள் பதிவின் தொடர்ச்சியே ஆகும்

சங்ககாலச் சோழர்களின் காலம், கிறிஸ்து ஆண்டின் முதற்ச் சில நூற்றாண்டுகள். சங்ககாலச் சோழர்களைப் பற்றி அறிய சங்ககால நூல்கள் தான் வழி கோல்கின்றன. இக்காலச் சோழர்களைப் பற்றி அறிய வரலாற்றுச் சான்றுகள் இல்லை என்று சொல்லும் அளவிற்கு மிகக் குறைவே. சங்ககாலச் சோழர்களில் கரிகார்ச் சோழன் அளவிற்கு ஒப்பாரும் மிக்காரும் இலர். கரிகார்ச் சோழனின் காலத்தில் சோழர்களின் நிலப்பரப்பு தற்போதைய திருச்சி,தஞ்சை மாவட்டங்களையும் புதுக்கோட்டையின் சில பகுதிகளையும் உள்ளடக்கியது. சோழர்கள் ராஜேந்திர சோழன் காலத்தில் உச்சத்தில் இருந்த போது இருந்த நிலப்பரப்பை விட இது மிகவும் சிறியதே. ராஜேந்திர சோழன் காலத்தில் தென்னகம் முழுவதும் சோழர்களின் ஆட்சியில் இருந்தது. மேலும் ஒரிசா, வங்காளம், பர்மா, மலேசியா,தாய்லாந்து, இந்தோனேசியா வரை சோழர்களின் ஆதிக்கத்தில் இருந்தது.

சங்க காலத்தில் மிகப் புகழ் பெற்றிருந்த சோழர்கள் கரிகார்ச் சோழன் மற்றும் கோச்செங்கணன். கரிகார்ச் சோழன் என்பதற்கு கரிய காலை உடையவன் என்று பொருள். பிற்காலத்தில் வட மொழி ஆதிக்கம் ஏற்ப்பட்ட பிறகு இதற்க்கு கரி - யானை, காலன் - எமன் என்று யானைகளுக்கு எமனானவன் என்று பொருள் ஏற்ப்பட்டது. சங்ககாலத்தில் ஒரே நேரத்தில் பல சோழ அரசுகள் இருந்தன மேலும் அவற்றிற்கிடையே பகையும் இருந்தது.

சோழர்கள் தங்களை சூரியனின் வழி வந்தோர் என்று கூறிக் கொண்டனர். அதேபோல் கன்றை இழந்த தாய்ப் பசுவின் துயர் தீர்க்க தன் மகனை தேர் ஏற்றிக் கொன்ற மனு நீதிச் சோழன் மற்றும் புறாவுக்கு தன் கறி கொடுத்த சிபிச் சக்ரவர்த்தியின் வம்சத்தவர்கள் தாங்கள் என்று கூறிக் கொள்வதிலும் பெருமை கொண்டனர். இதில் மனு நீதிச் சோழன் தமிழகத்தில் வாழ்ந்த மன்னன் அல்லன். அவன் இலங்கையை ஆட்சி செய்தவன் என்பது ஒரு ஆச்சரியமான தகவல்.

கரிகார்ச் சோழன் மிகப் புகழ் பெற்றவன். அவன் வெண்ணி என்னும் இடத்தில் வைத்து சேரன், பாண்டியன் மற்றும் பதினோரு குறுநில மன்னர்களையும் தோற்கடித்தான். அதன் பிறகுதான் நிலையான ஆட்சி அமைந்தது.இவனுடைய காலத்திலேயே காவிரிப் பூம்பட்டினம் சிறப்புற்றது. கரிகார்ச் சோழனுக்கு வெற்றி மேல் வெற்றி கிடைத்தது. கரிகார்ச் சோழன் நாட்டிலும் பல மாற்றங்களை ஏற்ப்படுத்தினான். அவன் காலத்தில் வாணிகம், தொழிர்த் துறை, விவசாயம் போன்றவை செழித்து விளங்கின.

ஒரே நேரத்தில் பல சோழ மன்னர்கள் இருந்தார்கள். புகார் எனும் காவிரிப் பூம்பட்டினத்தை தலைநகராகக் கொண்டு நலங்கிள்ளியும் உறையூரிலிருந்து நெடுங்கிள்ளியும் அரசாண்டனர். அவர்களுக்கிடையே பகையும் இருந்தது. இவர்களுக்கிடையே காரியாற்றில் நடந்த போரில் நெடுங்கிள்ளி கொல்லப்பட்டதிலிருந்து சோழர்களுக்கிடையேயான போர் முடிவிற்கு வந்தது எனலாம். நாம் கூட பள்ளி பருவத்தில் நலங்கிள்ளி நெடுங்கிள்ளிக்கிடையேயான போரைப் பற்றி படித்திருக்கிறோம்.

நலங்கிள்ளி, நெடுங்கிள்ளி காலத்தில் வாழ்ந்த மற்றொரு முக்கியமான் மன்னன் கிள்ளிவளவன். இவன் சேரர்களின் தலைநகரான கரூரைக் கைப்பற்றினான்.
இந்தக் கரூரும் தற்பொழுது இருக்கும் கரூரும் ஒன்றா என்று எனக்குத் தெரியவில்லை .

இதே போல் நாம் பள்ளிப் பருவத்தில் படித்த மற்ற சில முக்கியமானவர்கள் கோப்பெருன்சோழரும் பிசிராந்தையாரும். பிசிராந்தையார் பாண்டிய நாட்டைச் சார்ந்தவர். அவர் பாண்டிய மன்னனுக்கு அறிவுரை கூறும் அளவிற்கு நெருக்கம் கொண்டவர். கோப்பெருன்சோழன் தன் பிள்ளைகளுக்கிடையே ஏற்ப்பட்ட வேறுபாடுகளைக் களைய முடியாமல் வடக்கிருந்து உயிர் துறக்க எண்ணினான். இதைப் பாண்டிய நாட்டில் கேள்விப்பட்ட பிசிராந்தையார் மன்னனுக்குத் துணையாக தானும் வடக்கிருந்து உயிர் நீத்தார்.


பின் குறிப்பு:
1. சங்க காலச் சோழர்களை பற்றி எழுதவே அதிகம் உள்ளது. இவர்களைப் பற்றி பின் வரும் பதிவுகளில் மேலும் அதிகம் எழுதுகிறேன்.
2. நாளை சோழர்கள் ஆண்ட நிலப் பகுதிகளின் வரை படத்தை அளிக்கிறேன்.
3. இப்புத்தகத்தில் சங்க காலச் சோழர்களைப் பற்றிய காலக் குறிப்புகள் தெளிவாக இல்லை. அதனால் யார் முன்னர் ஆண்டனர், யார் பின்னர் ஆண்டனர் போன்ற குறிப்புகள் அளிக்க முடியவில்லை.

Saturday, December 12, 2009

கனவு, மழை மற்றும் நான்

இன்று பகல் பொழுது ஒரு நல்ல தூக்கம். கனவில் முதலை வந்த ஒரு கெட்ட கனவு வந்தது. நாங்கள் ஒரு முதலைப் பண்ணைக்கு செல்வது போலவும் அவற்றுடன் போக்கு காட்டிக் கொண்டு விளையாடிக் கொண்டிருந்தபொழுது அம்முதலை எங்களுக்கு முன்னாடி சென்றவரைக் கடிப்பதாகவும் கனவு வந்தது. எனக்கு முதலை ஒரு பிடிக்காத உயிரினம். எனக்குத் தெரிந்து அதுதான் மனிதனுடன் பழகாத உயிரினம். அக்கனவின் முடிவில், அது ஒரு கனவு தான் என்ற புரிதல் ஏற்ப்படவுடன் ஏற்பட்ட மகிழ்ச்சி அருமையானது. கெட்ட கனவின் முடிவில் ஏற்ப்படும் மகிழ்ச்சி எத்தகையது? நல்லவேளை, இது வெறும் கனவு என்ற புரிதல் தரும் மகிழ்ச்சி மட்டும்தானா?. எனக்கு அதையும் தாண்டி ஏதோ ஒன்று இருப்பது போலேயே தோன்றுகிறது. ஒர் உண்மையான திகில் அனுபவத்தை எந்த ஒரு இழப்பும் இல்லாமல் அனுபவித்த உணர்வு தான் அது என்று தோன்றுகிறது.

கனவானது எத்தகையது? . சில நேரங்களில் கனவானது ஒரு நாளின் இயக்கத்தையே தீர்மானிக்கும் சக்தி வாய்ந்ததாக இருக்கிறது. ஒரு நல்ல கனவு அந்த நாளையே ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி உள்ளதாக்கும் அதேபோல் கெட்ட கனவிற்கும் ஒரு நாளைத் தீர்மானிக்கும் சக்தி உண்டு.

கனவானது வித்யாசமானது. கனவில் வரும் நிகழ்ச்சிகள் ஒன்றுக்கொன்று தொடர்புடையதாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. அதே நேரத்தில் அவை முரண்பட்டதாகவும் இருக்கும். இந்த கனவில் காசு கொடுக்காமல் கிரிக்கெட்டும் பார்த்தேன் ;-). இன்று உண்மையில் ஸ்ரீலங்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையே T20 ஆட்டம் இருந்தது. இந்த கனவில் சேவக் ஸ்ரீலங்காவிற்க்காக விளையாடினார். நேஹரா இந்தியாவிற்காக விளையாடி 30 ஓட்டங்கள் பெற்றிருந்தார் என்பதிலிருந்து கனவு எந்த அளவு முரண்பட்டது என்பதை அறியலாம் :-). கனவுகள் சில சமயம் நடக்கப் போவதை முன் கூட்டியே அறிவுக்கும் சக்தி கொண்டது என்று சொல்வார்கள். கனவின் பலன்களைக் கூற கனவு சாஸ்திரமெல்லாம் உண்டு. என்னுடைய கனவிற்கும் நடக்கப் போவதை முன்கூட்டியே அறிவிக்கும் ஆற்றல் உண்டா இல்லையா என்று தெரியவில்லை . ஆனால் தூங்கி எழுந்து பார்க்கும் பொழுது என் கனவில் கண்டபடி 4 விக்கெட்டுகள் உண்மையில் விழுந்திருந்தன. என்ன என் கனவில் இந்தியா 4 விக்கெட்டுகளை இழந்திருந்தது ஆனால் உண்மையில் ஸ்ரீலங்கா 4 விக்கெட்டுகளை இழந்திருந்தது ;-). சரி விக்கெட்டுகள் என்ற அளவில் என் கனவு பலித்திருந்தது என்று சந்தோசப்பட்டுக் கொண்டேன்.

கனவுகள் முன் கூட்டியே அறிவிக்கும் ஆற்றல் கொண்டிருக்கிறதா இல்லையா என்பதோடு மட்டுமல்லாமல், பல செயல்களுக்கும் கண்டுபிடிப்பிற்கும் காரணமாயிருக்கின்றன. தையல் இயந்திரத்தை கண்டுபிடித்தவர் கிட்டத்தட்ட அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டாராம். ஆனால் தைக்கும் ஊசிக்கு எங்கு துளை வைக்கவேன்றும் என்று தெரியவில்லையாம். ஒரு நாள் கனவில் அவரை ஆதிவாசிகள் சூழ்ந்து கொண்டு அவரை ஈட்டியால் குத்த வந்தார்களாம். அப்பொழுதுதான் அவர் கவனித்தாராம் அந்த ஈட்டிகளின் முனையில் துளை இருந்ததாம். அதிலிருந்துதான் தைய்யல் இயந்திரங்களின் ஊசியின் முனையில் துளை வைத்தாராம்.

சரி தூக்கம் முடிந்து எழுந்து வந்தால் சரியான மழை பிடித்துக் கொண்டது. அப்பொழுது ஏனோ s.ராமகிருஷ்ணன் எழுதிய "மழை என்ன செய்யும்" என்ற கட்டுரை நினைவிற்கு வந்தது. அவர் கட்டுரையில் இருந்தபடியே நல்ல மழை ஆனால் அது சிறிது நேரமே நீடித்தது. அவர் கூறியபடி நான் கதவைத் திறந்து மழையை வரவேற்க்கவில்லை. மழையில் நனையப் பிடிக்கும் தான் ஆனால் ஏனோ அன்று மனம் மழையை வரவேற்கவில்லை. குளிரவேற செய்தது.

twitter இல் சுருதி ஹாசனும் அஹமத்- ம் இந்த குளிரில் ஹாட் சாக்லேட் சாப்பிட்டால் நன்றாக இருக்கும் என்று கூறியது நினைவிற்கு வந்தது. எனக்கும் சாப்பிட்டால் நன்றாக இருக்கும் என்றுதான் தோன்றியது. அதனால் pizza corner ஐ அழைத்து ஹாட் சாக்லேட் தருவிக்கலாம் என்று நினைத்தால், ஹாட் சாக்லேட் இல்லையாம். சரி அன்று இரவு pizza உடன் முடிந்தது .

இவ்வாறாக கனவில் ஆரம்பித்து மழையில் நனைந்து pizza வில் முடித்த மனதின் கோர்வையை நினைத்தால் ஆச்சரியமாக உள்ளது.

Wednesday, December 9, 2009

விருப்பு வெறுப்புகள், ரசிப்புத் திறன் மூலம் ஒருவரை அடையாளப்படுத்துவது சரியா?

பொதுவாக ஒவ்வொருவருக்கும் அவர்களுக்குப் பிடித்தவர்கள் என்று பல பேர் இருப்பார்கள். அவர்கள் அவர்களுக்கு நெருக்கமானவர்களாகவோ அல்லது தூரத்தில் இருக்கும் நட்சத்திரமாகவோ இருக்கலாம். தனிமனிதருக்கும், அவருக்கு பிடித்தமானவர்களுக்கும் இடையே உள்ள தொடர்பை என்னவென்று சொல்வது, அரசியல் என்றால் தலைவர் - தொண்டர், கலைத்துறை என்றால் கலைஞன் - ரசிகன். சில நேரங்களில் பொதுவான வார்த்தையாக விசிறி. தொண்டன், ரசிகன் போன்ற வார்த்தைகள் அவற்றிற்க்கான இயல்பான அர்த்தத்தை இழந்துவிட்டதாகவே எனக்குத் தோன்றுகிறது. தற்காலங்களில் ஒரு தலைவருக்குத் தொண்டன் என்றோ அல்லாத ஒரு கலைஞனுக்குத் ரசிகன் என்று கூறினாலே அவன் ஏதோ, தவறான செயலை செய்பவனாகவோ அல்லது இன்னும் கூடுதலாகச் சொல்லப்போனால் ஒரு படிக்காத காட்டுமிராண்டி என்றோ எண்ணத் தோன்றும். தன்னை முகம் தெரியாத, தனக்குப் பழக்கமே இல்லாத மூன்றாம் மனிதரிடம் முழுவதுமாக ஒப்படைப்பதை பிறகு என்னவென்று சொல்லுவது?. எனக்கும் ஒருவருக்கு கண்மூடித்தனமான ரசிகனாகவோ அல்லது ஒரு தொண்டனாகவோ இருப்பதில் விருப்பம் இல்லை. ரசிகன் என்ற சொல்லை விட தொண்டன் என்ற சொல் எனக்கு மிகவும் அருவருப்பான சொல்லாகத் தோன்றுகிறது. அதற்க்கு இக்கால அரசியல் தலைவர்கள் காரணமாக இருக்கலாம்.

நான் ஒருதடவை அலுவலகத்தில் என் குழுவில் இருந்தவருடன் பேசிக்கொண்டிருந்தபோது ஒரு சுவாரசியமான விவாதம் நடந்தது. அப்பொழுது அவர் சொன்னார், ஒருவனின் ரசிக்கும் தன்மையை வைத்தோ அல்லது அவன் யாரை ரசிக்கிறான் என்பதை வைத்தோ அவனையோ அல்லது அவன் நடத்தையையோ தீர்மானிக்கக்கூடாது. அப்படிச் செய்தால் அதுவும் ஒரு வகைத் தீண்டாமைதான் என்றார். அப்படிப் பார்த்தால் பீட்சா சாப்பிடுபவன் உயர்ந்தவனாகவும் இட்லி சாப்பிடுபவன் தாழ்ந்தவனாகவும் ஆகும், அதை நீங்கள் ஒப்புக்கொள்வீர்களா? என்றார். அவருக்கு நிச்சயமாக என்ன பதில் சொல்லுவது என்று எனக்குத் தெரிந்துருக்கவில்லை. ஒரு நாகரீக சமூகத்தில் ஒருவன், தான் ஒசாமா பின் லேடனுக்கு ரசிகன் என்று கூறினால் அவன் எப்படி பார்க்கப்படுவான் என்று எனக்குத் தெரியவில்லை.

ஒரே ஆளைப் பற்றி இருவரிடம், உங்களுக்கு ஏன் அவரைப் பிடித்திருக்கிறது என்று கேட்டால், நிச்சயமாக இருவரும் வெவ்வேறு காரணங்களைச் சொல்வார்கள். ஒருவரை, ஒவ்வொருவரும் பார்க்கும் கோணங்களும் மற்றும் அவரைப் பற்றி ஒவ்வொருவருக்கும் கிடைக்கும் தகவல்களும் வேறுபடும். மேலும் பார்க்கும் ஒவ்வொருவரின் குணாதீசியங்களும் அவரின் ரசிக்கும் திறனை மாற்றியமைக்கும் இயல்பு கொண்டவை. இத்தகைய காரணங்களாலே ஒருத்தருக்கு ஒருவர் மிகப் பிடித்தவராகவும் மற்றொருவருக்கு பிடிக்காதவராகவும் ஆகிவிடுவார்.


மற்றொரு முக்கியமான அம்சம் ஒரு தனிமனிதர் அல்லது ஒரு குழுமம் எந்த வகையில் முன்னிறுத்தப்படுகிறார்/கிறது என்பதைப் பொருத்தும் அமையும். எடுத்துக்காட்டாக வால்மீகி ராமாயணத்தில், ராவணன் மிகக் கொடூரவனாகவும், மிகக் கொடியவனாகவும் சித்தரிக்கப்பட்டிருப்பான். ஆனால் கம்ப ராமாயணத்தில், ராவணன் மிகச் சிறந்த சிவ பக்தனாகவும், கலைத்தாயின் தலைமகனாகவும், மிகச் சிறந்த ஆட்சியாளனாகவும் சித்தரிக்கப்பட்டிருப்பான். அவன் செய்த ஒரே பாவச் செயல் பிறன் மனை நோக்கியதுதான் என்று கம்ப ராமாயணம் வாதிடும். கம்ப ராமாயணத்தைப் படித்தவர்களுக்கு ராவணன் கொடூரமானவனாகத் தெரியமாட்டான். ஏன், தமிழிலே ராவண காவியம் என்று ராவணனைப் பற்றி ஒரு காவியமே உள்ளது .

ஒரு சிலருக்கு ஒருவரைப் ஏதோ ஒரு சில காரணத்திற்க்காகப் பிடித்துவிட்டால், பின் அவருடைய எந்த செயலும், ஏன் தவறான செயல்கள் கூட கண்ணுக்குத் தெரியாது, காதலில் இருப்பதைப் போல! அதனால்தான் வரலாற்றில் கொடியவர்களாக இருந்தவர்களுக்கு கூட உண்மையான காதலிகள் இருந்தார்கள்.

எனக்குத் தெரிந்து பல நேரங்களில் தீமையே நன்மையை விட பராக்கிரமசாலியாகவும, தந்திரம் மிகுந்ததாகவும் இருக்கும். தீமையே பெரும்பாலும் ரசிக்கும்படியாகவும் கவர்ச்சியாகவும் இருக்கும். வில்லன்களே அதிக சக்தி உடையவர்களாக இருப்பார்கள். அதனாலேயே வில்லன்களுக்கும் ரசிகர்கள் அதிகம் உண்டு. ஹிட்லர் எனக்குத் தெரிந்து இதற்க்கு மிகச் சிறந்த உதாரணம். இரண்டாம் உலகப் போரின்போது சுற்றி இருக்கும் அனைத்து நாடுகளின் மீதும் போர் தொடுக்கும் தைரியமும் திறமையும் ஜெர்மனி கொண்டிருந்ததது. அக்காலங்களில் பொறியியல் உள்ளிட்ட பல துறைகளில் ஜெர்மனி மிகச் சிறந்து விளங்கியது. அதற்க்கு மிக முக்கியக் காரணம், ஹிட்லர்.

ஹிட்லர் மிகத் திறமைசாலி. அவர் ஒரு மிகச் சிறந்த தலைவராகவும் , தன் பேச்சால் ஜெர்மனி மக்களை கட்டிப் போடும் திறமையைக் கொண்டிருந்தார். ஆனால் இரண்டாம் உலகப் போரின் சமயத்தில் ஹிட்லரைப் பற்றி பேசுவது என்பதே மிகக் கொடிய குற்றம் செய்ததாகக் கருதப்பட்டது . முதலாம் உலகப் போரின்போது ஜெர்மன் ஷெப்பர்ட் நாயின் பெயரே மாற்றப்பட்டு அல்சேசன் என்று அழைக்கப்பட்டது. அந்த அளவிற்கு ஜெர்மனியின் மீதான வெறுப்பு இருந்தது. 1977 ஆம் ஆண்டுதான் திரும்பவும் ஜெர்மன் ஷெப்பர்ட் என்று பெயர் மாற்றப்பட்டது.

விருப்பு வெறுப்புகள் காலத்திற்கு காலம் , ஆளுக்கு ஆள் வேறுபடும். மேற்க்கூறிய ஜெர்மன் ஷெப்பர்ட் நாயே அதற்க்கு ஒரு உதாரணம். உலகப் போரின் தாக்கம் வரை அந்நாய் அல்சேசன் என்று அழைக்கப்பட்டது. அதே நாய் உலகப் போர்களின் தாக்கம் முடிந்த பிறகு திரும்பவும் ஜெர்மன் ஷெப்பர்ட் என்று மாற்றப்பட்டு, உலகம் முழுவதும்
அதிகமாக விரும்பப்படும் நாயாக உள்ளது.

ஆக ஒருவர் மற்றொருவரின் மீது கொண்ட விருப்பு வெறுப்புகள் ,ரசிக்கும் தன்மை ஆகியவற்றை கொண்டு ஒருவரை அடையாளப்படுத்துவது
சரியா?

Saturday, December 5, 2009

ஒரு வழியாக ஷேக் ஹசினாவிற்கு நீதி கிடைத்தது

பங்கபந்து என்று அழைக்கப்படுபவர் பங்களாதேஷின் தந்தை முஜிபுர் ரஹ்மான். பாகிஸ்தானிடமிருந்து பங்களாதேஷின் விடுதலைக்கு போராடி இந்தியாவின் உதவியுடன் விடுதலைப் பெற்றுத் தந்தவர். இதற்குப் பின் பங்களாதேஷின் முதல் குடியரசுத் தலைவரானார். 1975 ஆம் ஆண்டு ஆகஸ்டு 15 ஆம் நாள் முஜிபுர் ரஹ்மானும் அவருடைய குடும்பத்தாரும் பங்களாதேஷின் ராணுவத்தைச் சேர்ந்தவர்களால் குடியரசுத் தலைவர் இல்லத்தில் வைத்தே படுகொலை செய்யப்பட்டனர். இப்படுகொலையிலிருந்து வெளிநாட்டிலிருந்த அவருடைய இரு மகள்கள் மட்டுமே தப்பினர். அதற்குப் பின் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது மற்றும் முஜிபுர் ரஹ்மானின் படுகொலைக்கு காரணமானவர்களை தப்பிப்பதற்க்கும் வழிகோலியது . இதற்குப் பின் அவருடைய மகள்களில் ஒருவரான ஷேக் ஹசினா, வெளிநாட்டிலிருந்த படியே முஜிபுர் ரஹ்மானின் கட்சியான அவாமி லீகின் தலைவரானார். 1980 ஆம் ஆண்டு நாடு திரும்பி ராணுவத்துக்கு எதிராக பல போராட்டங்களை நடத்தினார். 1996 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் வெற்றி பெற்று பிரதம மந்திரி ஆனார். இதற்குப் பிறகே முஜிபுர் ரஹ்மானின் படுகொலைக்குக் காரணமானவர்களின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதற்கடுத்த தேர்தலில் எதிர்க் கட்சியைச் சேர்ந்த கலிதா ஜியா பிரதம மந்திரி ஆனார். முஜிபுர் ரஹ்மானின் படுகொலை வழக்கும் கிடப்பில் போடப்பட்டது. அதற்குப் பிறகு குடியரசுத் தலைவர் ஆட்சி வந்தது. பின் 2008 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் திரும்பவும் ஷேக் ஹசினா வெற்றி பெற்றார். அதற்குப் பிறகுதான் முஜிபுர் ரஹ்மானின் வழக்கு சூடு பிடித்தது. ஒரு வழியாக முஜிபுர் ரஹ்மான் படுகொலை மீதான வழக்கில் சென்ற நவம்பர் மாதம் தீர்ப்பு வழங்கப்பட்டது. இப்படுகொலைக்கு காரணமானவர்களில் 5 பேருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. முஜிபுர் ரஹ்மான் படுகொலைக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படும் வரை ரத்தக் கரை படிந்த தன் வீட்டிற்கு ஷேக் ஹசினா வெள்ளை அடிக்கமாட்டேன் என்று சபதம் ஏற்றிருந்ததாகக் கூட நான் கேள்விப்பட்டேன். ஒரு வழியாக கிட்டத்தட்ட 34 வருட வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது.

பின் குறிப்பு :
ஷேக் ஹசினா பல நிலைகளில் தான் இந்தியாவிற்கு ஆதரவானவர் என்று நிரூபித்துள்ளார். அதுவே இப்பதிவு எழுதுவதற்கு ஒரு முக்கியக் காரணம்.

Wednesday, December 2, 2009

குடியேறிகள்

ஒரு நாள் பக்கத்து வீட்டுப் பையனை கபடி விளையாடக் கூப்பிட்டேன் . அவன் கபடினா என்ன? என்று கேட்டான். பிறகு அவனிடம் எப்படிச் சொல்லுவது இந்தியா கபடில தங்கப்பதக்கம்லாம் வாங்கிருக்குனு. சரி கிட்டினாவது என்னான்னு தெரியுமா என்றேன். அதற்க்கு அவன் கிரிக்கெட் பேட்டையும், பந்தையும் கொண்டு வந்தான். பரவாயில்ல கிட்டிக்கும் கிரிக்கெட்டுக்கும் சம்பந்தம் உண்டுன்னு ஓரளவுக்கு சமாதானம் அடைந்தேன். ஒரு நாள் தொலைக்காட்சி செய்தியில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டைப் பற்றிக் காட்டினார்கள். நான் பக்கத்து வீட்டுப் பையனிடம் எப்படி கொம்பு பிடித்து காளையை அடக்குகிறார்கள் பார் என்றேன். அதற்க்கு அவன் கொம்ப வச்சு பந்தல் தான் போடுவாங்க, மாடு எப்படி பிடிப்பாங்க என்றான் மாட்டுக் கொம்புக்கும், கழிக்கும் (கம்பு) வித்தியாசம் தெரியாத பையன் .

இது கூட பரவாயில்லை, எங்களின் கல்லூரிப் படிப்பின் மூன்றாம் ஆண்டு சுற்றுலா சென்றார்கள். சென்னை சென்ட்ரலிலிருந்து கோவா செல்வதாக ஏற்ப்பாடு. எங்கள் நண்பர்களில் ஒருவன் "சென்ட்ரல் ஸ்டேஷனுக்கு எப்படிடா போகணும்னு கேட்டான் ". நம்புங்கள் அவன் 22 வருடமாக கோடம்பாக்கத்தில் பிறந்து வளர்ந்தவன் !

பொதுவாக மாநகரங்களில் வசிக்கும் பிள்ளைகளின் தேவைகள் அனைத்தும் அம்மாநகரத்திலேயே நிறைவேற்றப்பட்டு விடுவதால் அவர்களுக்கு பிற இடங்களைத் தேடி அலையவேண்டிய தேவை இல்லை. அதனால் மாநகர வாழ்க்கையைத் தவிர வேறொன்றும் தெரிவதுமில்லை. சென்னையில் வாழும் பல பேர்கள், தமிழ்நாடு முழுவதும் ஓடும் அனைத்துப் பேருந்துகளின் பெயரும் "பல்லவன்" தான் என்று நினைத்து கொண்டிருந்தார்கள். ஓவ்வொரு ஊரிலும் அந்தந்த ஊர்களில் புகழ் வாய்ந்த அரசர்களின் (சேரன், சோழன்,பாண்டியன் ...) பெயரில் பேருந்துகள் இயங்கின என்பதோ , பின்னர் ஜாதிக் கலவரங்களின் பொழுது எதிர் ஜாதிக்கார மன்னரின் பெயரைத் தாங்கிய பேருந்துகள் தாக்கப்பட்டன என்பதால் அனைத்துப் பேருந்துகளின் பெயர்களும் மாற்றப்பட்டு, அந்தந்த பேருந்துகள் இயங்கிய கோட்டங்களின் பெயரில் அழைக்கப்பட்டன என்பதோ தெரிந்திருக்கவில்லை.

பெரிய மாநகரங்களிலிருந்து சிறிய ஊர்களுக்குச் செல்வோருக்கு ஏற்ப்படும் ஆச்சரியங்கள் போலவே , புதிதாக மாநகரங்களுக்குச் செல்பவர்களுக்கும் (பெரும்பாலும் ஏமாற்றமே) ஏற்ப்படும். எனக்குத் தெரிந்து சென்னையைத் தவிர்த்து மற்ற ஊர்களிலெல்லாம் பேருந்துகளில் பயணச்சீட்டு பயணிகளைத் தேடி வரும். நம்புங்கள், அதிக பேருந்து வசதி இல்லாத ஊர்களிலெல்லாம், சின்னப் பசங்களும், ஆண்களும் பேருந்தின் மேல் (Top) ஏறிக்கொள்வார்கள். இங்கு stage போடுவதைப் போல, அங்கும் stage போட்டு நடத்துனர் பேருந்தின் மீது ஏறி பயணச்சீட்டுத் தருவார். ஆனால் இங்கு சென்னையிலோ காலியாக இருக்கும் பேருந்தில் கூட நாம்தான் சென்று பயணச்சீட்டு வாங்க வேண்டும். என்னை ரொம்ப சங்கடப்படுத்தும் இன்னொன்று, எங்கள் ஊரில் "நீங்கள் " விளையாடும் இடங்களிலெல்லாம் இங்கு வயது வித்யாசமின்றி "நீ " விளையாடுகிறது.

பொதுவாக எல்லா ஊர்களும் அவற்றிற்கே உரிய திருவிழாக்களைக் கொண்டிருக்கும். அந்த திருவிழாக்களின் பின்னே சரித்திரங்களும், பல புனைக் கதைகளும் பின்னப் பட்டிருக்கும். அந்த புனைக் கதைகள் உண்மையோ அல்லது பொய்யோ, யாருக்கும் தெரியாது. இருந்தாலும் அவற்றை பாட்டிமார்கள் சொல்லச் சொல்ல ஆனந்தமாக இருக்கும் .மதுரையின் சித்திரைத் திருவிழா மிகச் சிறப்பாக ஒன்று. அத்திருவிழவுக்கான கதைகளும் அருமையாக இருக்கும். சித்திரைத் திருவிழாக் காலம் முடிந்த பிறகு ஒரு குருவி "அக்காாாா அக்காாாா" என்று கத்தும். அதன் பெயரே அக்கா குருவி. இதற்க்கு ஒரு கதை சொல்லுவார்கள். திருவிழாக் கூட்டத்தில் இந்தக் குருவி தன்னுடைய அக்காவைத் தொலைத்துவிடுமாம். அதை தேடிக் கொண்டு அக்கா அக்கா என்று அலையுமாம். அடுத்து வரும் ஒரு திருவிழாவில்தான் அவைகள் ஒன்று சேருமாம். அதுவரை இப்படியேதான் கூவிக் கொண்டு அலையும் என்று கதை சொல்லுவார்கள். அப்பொழுதெல்லாம் திருப்பி கேட்கத் தோன்றவில்லை, ஏன் தங்கச்சிக் குருவி மட்டும் தான் "அக்கா அக்கா " என்று தேடுமா? ஏன் அக்கா குருவி "தங்கச்சி தங்கச்சி " என்று தேடாதா? என்று. இருந்தாலும் அந்த புனைக் கதைகள் சுவாரசியமாகத்தான் இருந்தன. மாநகரங்களில் வசித்த பிள்ளைகள் இப்படிப்பட்ட கதைகளைக் கேட்டிருப்பார்களா என்று எனக்குத் தெரியவில்லை.

எனக்குத் தெரிந்து சென்னையில் நடக்கும் திருவிழாவில் முக்கியமானது, மயிலையில் அறுபத்து மூன்று நாயன்மார்களின் ஊர்வலம். ஆனால் அது மதுரை சித்திரைத் திருவிழாப் போல் ஊரே கூடி கொண்டாடும் திருவிழா என்று கூற முடியாது.

மார்கழி மாதக் குளிரில் அதிகாலையில் எழுந்து படிப்பதென்பது சற்றுக் கடினம் தான், இருந்தாலும் அதனையும் சுவாரசியமாக்கியவை, வெகு தூரத்தில் உள்ள சிறு கோயிலிருந்து ஒலிக்கும் L.R.ஈஸ்வரியின் அம்மன் பாடல்களும், ஐய்யப்பன் பாடல்களும்தான். கஷ்டப்பட்டு அதிகாலை 4 மணியிலிருந்து 5 மணிவரைப் படித்த பின் பார்த்தால், தெருவே களை கட்டத் தொடங்கிவிடும் . ஓவ்வொரு வீட்டிலிருந்தும் பெரிய பெரிய கோலங்கள் போட ஆரம்பிப்பார்கள். நாங்களும், அலுவலகப் பணி முடித்து அசதியாகத் தூங்கிகொண்டிருக்கும் எங்கள் அம்மாவை எழுப்பி பெரிய கோலம் போடச் சொல்லுவோம். எங்கள் அம்மா சில நேரம் சிறிய கோலமாகப் போட்டுவிடுவார்கள். அப்பொழுதெல்லாம் நாங்கள் எங்கள் மாடி வீட்டு அக்காவிடம் தஞ்சம் அடைந்துவிடுவோம், எங்கள் வீட்டு வாசலில் பெரிய கோலம் போடச் சொல்லி. பின்னர் அவற்றிற்கு வர்ணப் பொடி கொண்டு வண்ணம் தீட்டுவோம். விடிந்தவுடன் சிறுவர்களுக்கிடையே யார் வீட்டு கோலம் பெரிது என்று பெரிய போட்டியே நடக்கும். ஆனால் சென்னையிலோ மார்கழிக் கோலங்கள் இரவில் ஆரம்பித்து நடுச்சாம நாய்களின் குரைப்புடன் முடிந்துவிடுகின்றன.


எனக்கு எப்பொழுதும், சென்னைத் தவிர மற்ற சிறு நகரங்களிலும், ஊர்களிலும் இருக்கும் வீடுகள் பெரிதாகவேத் தோன்றுகின்றன. அதற்க்குக் காரணம் மனமா? அல்லது (வாடகைப்)பணமா? என்று தெரியவில்லை. எனக்கு என்னவோ சென்னைக் குடிமக்கள், குருவிகள் கூட கூடு கட்டத் தயங்கும் குறைந்த சதுர அடி வீட்டில்தான் குடியிருப்பதாகத் தோன்றுகிறது.

இப்படி குடியேறிய ஊரைப் பற்றி குறைகள் கூறக் கூடாதுதான், இருந்தாலும் மழைக்காலத்தில் தண்ணீர் தீவுகள் தேடும் காலடித் தடங்கள் போல மனமானது, குடியேறிய ஊரின் ஓவ்வொரு நடத்தையிலும் சொந்த ஊரின் சாயலைத் தேடுகிறது.

Tuesday, December 1, 2009

Over Night இல் உலக வல்லரசு !

இந்தியப் பிரதமர், அரசு முறைப் பயணமாக அமெரிக்க சென்றிருந்தார்( அல்லது சென்றிருக்கிறார்). ஒபாமா, அமெரிக்க ஜனாதிபதியாகப் பொறுப்பேற்ற பின் ஒரு வெளிநாட்டுத் தலைவரை அமெரிக்காவில் சந்திப்பது இதுவே முதல் முறை. ஒபாமாவும் சீனா உட்பட கிழக்காசிய நாடுகளுக்குச் சென்று விட்டு இப்பொழுதுதான் திரும்பியுள்ளார். அதனால் அவர் சீனாவுடன் தான் பேசிய விசயங்களை நமது பிரதமருடன் விவாதிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. மேலும் இச்சந்திப்பின் போது அமெரிக்கா, இந்தியாவை ஒரு "World Power" ஆக அங்கீகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.இதன் மூலம் UN Security counsel - இல் இந்தியாவிற்கு நிரந்தர இடம் கிடைக்க பெரும் வாய்ப்பாக இருக்கும். அந்த நிரந்தர இடம் கிடைப்பது Veto power உடனா அல்லது Veto power இல்லாமலா என்பதை அடுத்து பார்த்துக் கொள்ளலாம் . அப்படி ஏதாவது அமெரிக்கா, இந்தியாவை அங்கீகரித்ததா? கடந்த 5, 6 நாட்களாக நான் இந்த உலகத்திலேயே இல்லை. ஒரே காய்ச்சல். அதனால் தயவு செய்து என்ன நடந்தது என்று கூறுங்கள். இந்தியா over night ல உலக வல்லரசாக ஆயிடுச்சா? யாராவது சொல்லுங்கப்பா :)

Sunday, November 29, 2009

நிலா

நான் உறங்கும் போது சில நேரங்களில் உலகம் என்னுடைய காலடிகளிலிருந்து நழுவி என்னைத் தனியே விட்டு விட்டு நிலவையும், நட்சத்திரங்களையும் களவாடிக் கொண்டு செல்வது போல் தோன்றும். அந்த நேரங்களில் எல்லாம் உறக்கத்திலிர்ந்து சடாரென்று எழுந்து, என்னுடைய காலடிகளை நிலத்தில் அழுத்தமாக ஊன்றிக் கொண்டு என் நிலவும் நட்சத்திரங்களும் பத்திரமாக இருக்கிறதா என்று ஜன்னலின் வழியே எட்டிப் பார்ப்பேன், பின் அவற்றை என் வீட்டின் ஜன்னல் கம்பிகளுக்கிடையே சிறைவைப்பேன். பின்னும் உறக்கம் வரப் பிடிக்காமல் நிலவை ரசித்துக் கொண்டே அதற்க்குக் காவலிருப்பேன் .

பௌர்ணமி நிலவைப் பார்ப்பதென்பதே மிக அழகா இருக்கும். அந்த முழு நிலவில் இருக்கும் பாட்டி சுட்ட வடையையும் (மலைகளையும் , மேடுகளையும் ), அந்த முழு நிலவைச் சுற்றி அமைந்திருக்கும் அழகிய ஆரோவிலும், அந்த நிலவு தரும் குளுர்ச்சியும் மிக அற்புதமாக இருக்கும் .

ஒரு முழு நிலவு நாளன்று, யாருமற்ற கடற்கரையில் தனியாகப் படுத்துக்கொண்டு, நிலவையும் அதைச் சுற்றியுள்ள ஒளி வட்டத்தையும் இரவு முழுவதும் பார்ப்பதென்பது மிக அற்புதமாக இருக்கும். நிலவு அற்ற அமாவாசை இரவு கூட இனிமையாகத்தான் இருக்கும். அன்று வானம் முழுவதும் நட்ச்சத்திரங்களைக் கட்டி தொங்கவிட்டது போன்று மிக அழகாக இருக்கும்.

நீங்கள் கவனித்திருப்பீர்களேயானால், வானத்தில் சூரியனைக் கடக்கும் பறவைகளைக்காட்டிலும் நிலவைக் கடக்கும் பறவைகள் மிக அழகாக இருக்கும்.

எந்த ஒரு அழகிய இயற்கைகாட்சிப் புகைப்பபடங்களிலும் பத்தில் ஒரு புகைப்படமாவது, ஒரு மலைத்தொடரின் இடுக்கிலிருந்து முழு நிலவு வெளிவருவது போலவும் , அது வீசும் பால் போன்ற மென்மையான ஒளியும் ,அழகிய சிற்றோடையும் அதில் ஒரு சிறிய படகும் ,அந்த ஓடையின் இரு புறங்களிலும் ஓங்கி உயர்ந்த தென்னை மரங்களையும் , அப்பொழுது இரண்டு மூன்று பறவைகள் எட்ட முடியாத நிலவைக் கடக்க முயற்சித்துக் கொண்டிருப்பதைக் காணலாம் . அதுதான் இயற்க்கை அதுதான் நிலா.

பலபேர் நிலவை இட்லி , வடை என்று அபத்தமாக எதனெடனோ ஒப்பிடுவார்கள். என்னைப் பொறுத்தவரை நிலவை ஒரு அழகிய புதிய வெள்ளிக் கிண்ணத்தில் ஊற்றி வைத்த பசும் பாலுடன் தான் ஒப்பிட வேண்டும். நிலவின் ஒளியானது பூரணமாக வெண்மையாக இருக்காது. அது போலவே அப்பொழுதுதான் கறந்த பசும் பாலும் பூரண வெண்மையாக இருக்காது. அது ஒரு மஞ்சள் நிறம் கலந்ததாக இருக்கும். அது போல்தான் நிலவின் வெண்மையும். அது எதோ ஒரு மஞ்சள் நிறம் சிறிதளவு கலந்ததாகவோ அல்லது சிறிதளவு சாம்பல் நிறம் கலந்ததாகவோ அல்லது ஏன் சிறிதளவு நீலம் கலந்ததாகவோ இருக்கிறது என்று தோன்றும். என்னால் சரியாக அனுமானிக்க முடியவில்லை. எதுவாக இருந்த போதிலும் அந்த பூரண நிலா அமைதியைக் கொடுக்கும்.

நம் குழந்தைகள் பால்சோறு சாப்பிட்டு வளர்ந்ததைவிட நிலாச் சோறு சாப்பிட்டே வளர்ந்ததே அதிகம் .

சூரியனானது வீரத்தையும், பெருமையையும், வெற்றியையும் குறிக்க பெரியவர்களுக்கு என்று ஆனபோது, குழந்தைகளுக்கு எட்டிப் பிடித்து விளையாடுவதற்கும், மேகங்களில் ஒளிந்துகொண்டு கண்ணாம்பூச்சி விளையாடுவதற்கும் நிலா ஆனது.

நிலா குழந்தைகளுக்கானது என்று மட்டுமல்லாமல் பெரியவர்களுக்கான பரிமாணங்களையும் எடுக்கிறது. அக்காலங்களில் காந்தர்வத் திருமணங்கள் பெரும்பானவைகள் நிலவைச் சாட்சியாகக் கொண்டே நிகழ்ந்த்தன. ஏன் இன்றும் கூட பல காதல்களுக்கு தூதுவனாகவும், அந்த காதல்களுக்குச் சாட்ச்சியாகவும், சில நேரங்களின் அந்த காதல்களின் பிரிவிற்க்கும் சாட்ச்சியாகின்றது.

சங்ககாலக் கவிஞர்கள் முதல் இக்காலக் நிலா ரசிகன் வரை நிலவைப் பாடாதவர்கள் கிடையாது.

அவற்றில் ஒன்று கீழே:

நிலவு பாக்கலாம் வா!

நீ விண்ணில் பார்க்க ...
நான் உன்னில் பார்க்க ....
வெண்ணிலா என்று சொல்லாமல் .. உனக்கு
வேறு பெயர் வைத்தவர் யார் ?..நீ
விண்ணிலே இல்லாததால ?..உன்னிலே
களங்கமே இல்லாததாலா ?

ஒவ்வொரு இரவும்
வெண்ணிலா முழிப்பது
என் நிலா தூங்குவதாலா?!

பின் குறிப்பு:

இக்கவிதை என்னுடையதல்ல. பாடலுக்கு நன்றி தயா from forumhub.com . எழுத்துக்கள் என்னுடையவை :)

இக்கவிதை நிலவை பற்றியது அல்லது காதலியைப் பற்றியதா என்பதை உங்களின் அனுமானத்திற்கு விட்டு விட்டு விடுகிறேன் :).

Wednesday, November 25, 2009

டாட்டா குழுமம் மற்றும் ரத்தன் டாட்டா

டாட்டா, எனக்கு மிகப் பிடித்தமான ஒரு குழுமம். இந்தியாவில் உள்ள குழுமங்களில் மிகப் பெரியதும், அதிகமாக மதிக்கப்படும் குழுமங்களில் ஒன்று, டாட்டா. கிட்டத்தட்ட 140 ஆண்டுகால பழமையான குழுமம். ஜாம்ஜெட்ஜி நௌரோஜி டாட்டா அவர்களால் ஆரம்பிக்கப்பட்டது. இக்குழுமத்தில் 114 நிறுவனங்கள் உள்ளன. 6 கண்டங்களில் கிட்டத்தட்ட 80 க்கும் மேற்ப்பட்ட நாடுகளில் செயலாற்றி வருகிறது. 2009 ஆம் ஆண்டு Reputation Institute ஆல் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் உலகளவில் மதிக்கப்படும் குழுமங்களில் 11 ஆவது இடத்தைப் பெற்றுள்ளது.

எனக்கு டாட்டாவைப் பிடிக்க மிக முக்கியக் காரணம், இந்தியா மீதான அதன் பற்று. டாட்டா நிறுவனங்களின் ஊழியர்கள் வெளி நாட்டுக்குச் செல்லும் போது, அவர்களுக்குக் கூறப்படும் அறிவுரைகளில் முதலிடத்தைப் பெறுவது "நீங்கள், இந்தியாவின் தூதுவராகச் செல்லுகிறீர்கள். அதனால் இந்தியாவின் மதிப்புக் குறையாமல் காக்க வேண்டியது உங்கள் பொறுப்பு" . டாட்டா தன்னுடைய சாதனைகளைச் சொல்லும்போது இந்தியாவையே முன்னிறுத்தும். இக்காரணத்தாலையே எனக்கு டாட்டாவை ரொம்ப பிடித்துப் போனது.

டாட்டா குழுமங்களில் மக்களுக்கு மிக அதிகமாக பரிச்சயமானது டாட்டா மோட்டார்ஸும் அதன் பேருந்துகளும். சிறு வயதில் நானும் மதுவும் டாட்டா நிறுவனம் கிட்டத்தட்ட எங்களுடைய சொந்த நிறுவனம் போலவே நினைத்துக்கொண்டோம். அதனாலையே அப்பொழுது எங்களுக்கு அசோக் லேய்லான்ட் நிறுவனத்தை பிடிக்காது. தமிழ்நாட்டில் அசோக் லேய்லான்ட் பேருந்துகளே அதிகம். அப்பொழுதெல்லாம் அசோக் லேய்லான்ட் பேருந்துகளைப் பார்த்தாலே நானும் மதுவும், "தமிழ்நாட்டுல மட்டும்தான் அசோக் லேய்லான்ட் இருக்கு. வட இந்தியாலலாம் டாட்டா தான் " என்று எங்களுக்குள்ளேயே சொல்லிக்கொள்வோம்.

சின்ன வயதில் எங்கள் மாமா பையனுக்கு TCS இல் வேலை கிடைத்தபோது, அவருக்கு வேலை கிடைத்தது என்பதை விட டாட்டா குழுமத்தில் வேலை கிடைத்ததையே எண்ணிப் பெருமிதம் கொண்டோம். அந்த அளவுக்கு எங்களுக்கு டாட்டாவின் மோகம் பிடித்திருந்தது. கல்லூரி முடித்த பிறகு TCS இன் நேர்முகத்தேர்வுக்குப் பிறகு எனக்கு எப்படியாவது TCS இல் வேலை கிடைத்துவிட வேண்டும் என்று அடுத்த ஒரு வாரத்திற்கு நான் கோயில் கோயிலாக ஏறி இறங்கி, இறைவனை இரங்கினேன். அப்பொழுது வேலை கிடைக்க வேண்டும் என்பதை விட TCS இல் வேலை கிடைக்க வேண்டும் என்றே எனக்குத் தோன்றியது.

இந்த அளவுக்கு எனக்கு டாட்டாவைப் பிடிக்கக் காரணம் அதன் நேர்மை. ஒரு முறை ரத்தன் டாட்டாவிடம் நீங்கள் ஏன் அரசியல்வாதிகளுடன் அதிகம் பழகுவதில்லை என்று கேட்டபோது, அதற்க்கு அவர் "அவர்கள் அவர்களுடைய வேலையைப் பார்க்கிறார்கள், நான் என்னுடைய வேலையைப் பார்க்கிறேன்" என்றார். டாட்டா நானோவை அறிமுகப் படுத்தும் போது ரத்தன் டாட்டா "பத்து ஆண்டுகளுக்கு முன் ஒரு லட்ச ரூபாய் காரைப் பற்றி அறிமுகப்படுத்தும் போது இருந்த இரும்பின் விலையும், இப்பொழுது இருக்கும் இருக்கும் இரும்பின் விலையும் உங்களுக்குத் தெரியும். இருந்தாலும் நானோ ஒரு லட்ச ரூபாய்க்கே விற்கப்படும். ஏனென்றால் Promise is a promise " என்றார். இந்த நேர்மைதான் டாட்டா.

அந்த டாட்டா குழுமத்தின் தலைவரான ரத்தன் டாட்டா அவர்கள் போர்ப்ஸ் பத்திரிக்கையின் 2009 ஆம் ஆண்டு உலகின் மிக சக்தி வாய்ந்த மனிதர்களில் 59 ஆவது இடத்தைப் பெற்றுள்ளார். வாழும் மனிதர்களில் எனக்கு மிகவும் பிடித்தவர்களில் ஒருவர்.

ரத்தன் டாட்டா அவர்கள் டாட்டா குழுமத்தில் 1961 ஆம் ஆண்டு சேர்ந்தார். 1991 ஆம் ஆண்டு அதன் தலைவரானார். ரத்தன் டாட்டா, டாட்டா குழுமத்தின் தலைவரான பிறகு பல மாறுதல்களைச் செய்தார். எந்த ஒரு தனி டாட்டா நிறுவனத்தையும் விட டாட்டா குழுமமே முக்கியமானது என்ற கொள்கையைக் கொண்டுவந்தார். அனைத்து டாட்டா நிறுவனங்களுக்குமான தற்போதிருக்கும் பொதுவான டாட்டா logo வைக் கொண்டுவந்தார். நஷ்டமடைந்த பல டாட்டா நிறுவனங்களிளிருந்து தைரியமாக வெளியே வந்தார். ரத்தன் டாட்டா தலைவராகப் பதவியேற்ற பிறகு டாட்டா குழுமத்தின் வருமானம் பத்து மடங்கானது. கோரஸ் குழுமத்தையும், போர்ட் நிறுவனத்திடமிருந்து ஜாகுவார் மற்றும் லான்ட் ரோவர் நிறுவனங்களை வாங்கியதும் உலகில் மிகக் குறைந்த விலை கொண்ட நானோ காரை அறிமுகப்படுத்தியதும் இவருடைய சாதனைகளில் சில.

ரத்தன் டாட்டாவும் டாட்டா குழுமமும் மேலும் பல சாதனைகள் படைக்க எனது வாழ்த்துக்கள் .

என்பதே எனக்கு முக்கியமாகப்பட்டது.



http://www.indianexpress.com/news/ratan-tata-keeps-his-promise-unveils-nano/438296/1
http://en.wikipedia.org/wiki/Ratan_Naval_Tata
http://en.wikipedia.org/wiki/Tata_Group
http://people.forbes.com/profile/ratan-n-tata/2766
http://www.forbes.com/2009/11/11/worlds-most-powerful-leadership-power-09-people_land.html

Saturday, November 21, 2009

மீள் ஆற்றல்

நான் சிறுவயதில் என் பாட்டி ஊருக்குச் செல்லும் போது அங்கு சூரிய ஒளியால் இயங்கும் தெரு விளக்கைப் பார்த்திருக்கிறேன். அப்பொழுது அது எனக்கு மிகப் புதுமையாகவும் வியப்பாகவும் இருக்கும். அப்பொழுதெல்லாம் தூர்தர்சனில் மீள் ஆற்றல் எனப்படும் renewable energy ஆகிய சூரிய ஒளி மற்றும் bio gas ஆல் இயங்கக்கூடிய அடுப்புகளைப் பயன்படுத்துமாறுக் கூறும் விளம்பரங்களை பார்த்திருக்கிறேன். இருந்தாலும் இந்தியா போன்ற சூரிய ஒளி அபரிமிதமாகக் கிடைக்கும் நாட்டில், சூரிய ஒளி அதிக அளவில் பயன்படுத்தப்படவில்லை என்றேக் கூறவேண்டும். நகரங்களை ஒப்பிடும் போது கிராமங்கள் பரவாயில்லை. கிராமங்களில் சூரிய ஒளியால் இயங்கக்கூடிய தண்ணீர்இறைக்கும் மோட்டர்களையும், மின் அடுப்புகளையும், மின்சார வேலிகளையும் காணலாம்.

இந்தியா போன்ற ஆண்டுக்கு 7% க்கும் மேல் பொருளாதார வளர்ச்சி கொண்டிருக்கும் நாடு தன்னுடைய ஆற்றல் தேவைக்காக, பெரும் பகுதி பணத்தை பிற நாடுகளுக்கு வாரி இறைக்க முடியாது. பிரேசில் நாடு தன்னுடைய ஆற்றல் தேவைக்காக எத்தனால் போன்ற bio fuel ஐ அதிக அளவில் பயன்படுத்துகிறது. அதற்காக தன்னுடைய நாட்டில் அதிக அளவில் விளையும் கரும்பைப் பயன்படுத்திக் கொள்கிறது.

அணு உலைகளிலிருந்து பெறப்படும் ஆற்றல் மிகப் பயனுள்ளதுதான். பிரான்ஸ் போன்ற நாடுகள் தன்னுடைய ஆற்றல் தேவையில் 70% ஐ அணு உலைகளின் மூலம் பூர்த்தி செய்துகொள்கிறது. இருந்தாலும் நம்முடைய அணு உலைகளின் தேவையான மூலப் பொருள்களுக்கு நாம் ஆஸ்திரேலியா, அமெரிக்கா, பிரான்ஸ் போன்ற நாடுகளையேச் சார்ந்துள்ளோம். இதற்க்கு அமெரிக்காவுடன் நாம் செய்து கொண்ட அணுஒப்பந்தம் பயனுள்ளது. இருந்தாலும் நாம் பிற நாடுகளை அதிக அளவில் சார்ந்திருக்க முடியாது. இதற்காக தோரியம் சார்ந்த அணு உலைகளைப் பற்றிய ஆராய்ச்சிக்கு நாம் அதிக அளவில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். உலகில் இருக்கும் தோரியத்தில் 40% இந்தியாவில் உள்ளது. அவற்றின் பெரும்பகுதி கேரளக் கடற்கரையில் உள்ளது.

எதிர்கால அணு உலைகளில் மூலப் பொருளாக இருக்கக்கூடியது ஹீலியம். சந்திரனில் அதிக அளவில் ஹீலியம் உள்ளது. இந்தியா மேற்கொண்ட சந்திராயன் ஆராய்ச்சியும் அதன் மூலம் நம் மூவர்ணக்கொடி கொண்ட ஆராய்ச்சிப் பொருளை சந்திரனில் விழச் செய்ததும், எதிர்காலத்தில் சந்திரனில் இருக்கும் ஹீலியத்தின் மீது நம்முடைய பங்கை உறுதி செய்யும் செயலே ஆகும்.

தற்போது இந்தியா தன்னுடைய ஆற்றலின் தேவைக்கு நிலக்கரி மற்றும் பெட்ரோலியத்தையே பெரும்பகுதி நம்பி உள்ளது. ஆனாலும் நாம் ரொம்ப காலத்திற்கு இந்த மீளா ஆற்றலை நம்ப முடியாது . அணு உலைகளின் மூலம் கிடைக்கும் ஆற்றலும் ரொம்ப காலத்திற்குக் கிடைக்காது. ஆக மிகச் சிறந்த ஆற்றல் மூலம் காற்றும், சூரிய ஒளியுமே ஆகும். ஆனாலும் இந்தியாவில் சூரிய ஒளியின் மூலம் தயாரிக்கப்படும் மின்சாரம் 6 megawatts தான். சூரிய ஒளி மின்சாரத்தை நாம் அதிக அளவில் அதிகரிக்க வேண்டும்.

சில நாட்களுக்கு முன்பு இந்தியா வரும் 2022 க்குள் சூரிய ஒளி மூலம் தயாரிக்கப்படும் மின்சாரத்தை 20 gigawatts ஆக உயர்த்த எண்ணியுள்ளதாக அறிவித்துள்ளது. மூன்று கட்டமாக நடத்த உள்ள இத்திட்டத்திற்கு , முதல் கட்டத்திற்கு மட்டும் 4300 கோடி ரூபாய் செலவிடவுள்ளதாகக் கூறியுள்ளது. இது ஒரு மிகச் சிறந்த நடவடிக்கை. உலகம் வெப்பமயமாகிக் கொண்டிருக்கும் இன்றைய காலகட்டத்தில் CO2 போன்ற green house வாயுக்களைக் குறைக்க இந்த நடவடிக்கை உதவும்.

ஆனால் சூரிய ஒளியிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் செயலில் நாம் இன்னும் அதிக தூரம் செல்ல வேண்டியுள்ளது. தற்பொழுது இந்தியாவில் சூரிய ஒளியிலிருந்து மின்சாரம் தயாரிக்க ஆகும் செலவானது நிலக்கரியிலிருந்து மின்சாரம் தயாரிக்க ஆகும் செலவைப் போல் இரண்டரை மடங்காகும். நாம் மேலும் பல ஆராய்ச்சிகள் செய்யவேண்டும் . இருந்த போதிலும் இந்தியா 2022 க்குள் 20 gigawatts சூரிய மின்சாரம் தயாரிக்க வேண்டும் என்று அறிவித்திருப்பது மிகச் சிறந்த நடவடிக்கையாகும்.

Sunday, November 15, 2009

சோழர்கள்

சென்ற மாதம் ஒரு நாள் வள்ளுவர் கோட்டத்திற்கு நானும் மதுவும் சென்றிருந்தோம். அங்க ஒரு book stall இருந்தது. சரி சும்மா பார்ப்போமே என்று அங்கு இருக்கும் புத்தகங்களை நோட்டம் விட்டோம். அப்பொழுது அங்கு, நீலகண்ட சாஸ்திரி அவர்கள் எழுதிய "சோழர்கள்" புத்தகம் இருந்தது.

நீலகண்ட சாஸ்திரி அவர்கள் தென்னிந்திய வரலாற்றை பற்றி மிகப் பெரிய ஆராய்ச்சி நடத்தியவர். கல்வெட்டுகள், செப்பேடுகள், சங்க காலப் இலக்கியங்களை எல்லாம் ஆராய்ந்து, தென்னிதிய வரலாற்றிற்கு உலகளவில் அங்கீகாரம் பெற்றுத் தந்தவர். அவர் சென்னை பல்கலைக்கழகம், மைசூர் பல்கலைக்கழகம், சிகாகோ பல்கலைக்கழகம், பானரஸ் இந்து பல்கலைக்கழகம் என்று பல பல்கலைக்கழகங்களில் பேராசிரியராகப் பணி புரிந்தவர். யுனேஸ்கோவின் Institute of Traditional Cultures of South East Asia வின் Director ஆக பணிபுரிந்தவர். இந்தியாவின் மூன்றாவது மிக உயரிய civilian விருதான பத்மபூசன் விருது பெற்றவர். அவர் எழுதி 1955 ஆம் ஆண்டு வெளிவந்த புத்தகமே "சோழர்கள்".

அந்த புத்தக் கடையில் ஒரே ஒரு பதிப்பு மட்டும் தான் இருந்தது. அந்த புத்தகத்தை வாங்கும்பொழுது அந்த கடைக்காரர், "சார், நீங்க ரொம்ப அதிர்ஷ்டசாலி சார். இந்த புத்தகம் எங்கும் கிடைப்பதில்லை. அனைத்தையும் நூலகங்களுக்கே கொடுத்துவிட்டார்கள். என்னிடம் இருந்ததுதான் கடைசி பிரதி. இனிமே இந்த புத்தகம் அச்சிட்டால்தான் உண்டு" என்றார். நானும் சிரித்துக் கொண்டு வாங்கி வந்தேன்.

நானும் மதுவும் மதுரைக்காரைய்ங்யதால (ய்ங்ய வை அழுத்தி உச்சரிக்கவும் :) ), எங்களுக்கு இயல்பாகவே பாண்டியர்கள் மீது ஒரு ஈர்ப்பும், அதனால் ஒரு பெருமை கலந்த கர்வமும் உண்டு. சின்ன வயதில் பாண்டியன் பேருந்தையும், அந்த பாண்டியன் என்ற பெயரில் "ண" க்கு மேல் புள்ளிக்குப் பதிலாக பாண்டியரின் சின்னமாகிய மீனைப் பார்ப்பதும் மிக ஆனந்தமாக இருக்கும். பாண்டியன் பேருந்து பிற பேருந்துகளை முந்திச் செல்லும்போது "ஹே, எங்க பாண்டியன் முந்திருச்சு" என்று பெரிதாக சத்தம் போடுவோம்.

பள்ளி நாட்களில் சமூக அறிவியல் பாடத்தில் இந்திய வரைபடம் கொடுக்கும்போது வைகையையும், மதுரையையும் தான் முதலில் தேடுவோம். நாங்கள் வட இந்தியச் சுற்றுலா சென்ற போது, எங்களுடன் சுற்றுலா வந்த நெல்லைகாரர்களுடன் "நீங்கலாம், எங்கப் பாண்டியப் பேரரசிற்குட்பட்டவர்கள்" என்று நானும் மதுவும் சண்டைலாம் போட்டோம். அப்பொழுதெல்லாம் பாண்டிய நாட்டையும், பாண்டியர்களையும் பிற நாட்டுடனும், மற்றவர்களுடனும் ஒப்பீடு செய்து குதூகலிப்பதே வழக்கமாக இருக்கும். இதே மாதிரி ஒரு தடவை எங்க அப்பாவிடம் நாங்கள், "அப்பா, காவிரி பெருசா, இல்ல வைகை பெருசா?" என்றுக் கேட்டோம். அதற்க்கு எங்க அப்பா, "வைகை எல்லாம் காவிரியுடன் ஒப்பிடவே முடியாது. காவிரி ரொம்பப் பெரியது" என்றார். அன்றுடன் பாண்டியரை பிறருடன் ஒப்பீடு செய்யும் கேள்விகளை எங்க அப்பாவிடம் கேட்பதையே விட்டு விட்டோம். ஒரு தடவை என்னிடம் ஒருவர், "ஏன் மதுரக்காரங்க எல்லாம் பாண்டி னு அதிகமா பெயர் வைக்குறாங்க" என்றார். சற்றும் தாமதிக்காமல் நான், "ஏன்னா, நாங்கல்லாம் பாண்டியப் பேரரசின் குடிமக்கள்" என்றேன்.

இப்படி பாண்டியர்கள் மீது மிகப் பெரிய பற்று கொண்ட எனக்கு, வயது ஆக ஆக, மேலும் அதிகம் படிக்க படிக்க சோழர்கள், பாண்டியர்களை விட மிகப் புகழ் வாய்ந்தவர்கள் என்றும் , மிகப் பெரிய பரப்பளவை ஆண்டவர்கள் என்றும் புரிய ஆரம்பித்தது. உடனே நானும் பாண்டியர்கள் என்பதிலிருந்து சற்று பெரிய மனது பண்ணி வெளியே வந்து, நாங்கல்லாம் தமிழர்கள் என்று கூறிக் கொண்டு சோழர்களின் பெருமையில் பங்கெடுத்துக்கொள்ள ஆரம்பித்தேன். இப்படி என்னை மாற்றியதில் கல்கியின் "பொன்னியின் செல்வன்" க்கு மிகப் பெரிய பங்கு உண்டு (பொன்னியின் செல்வன், ராஜராஜ சோழனைப் பற்றியது).

சோழர்கள் கிருஸ்துவிற்கு முந்திய சில நூற்றாண்டுகளிலிருந்து பதிமூன்றாம் நூற்றாண்டு இறுதி வரை தமிழகத்தை ஆண்டவர்கள். சேர, பாண்டிய அரசுகளைப் போலவே சோழப் பேரரசும் ஏற்ற, இறக்கங்களை கொண்டாதாகவே இருந்தது.

சோழர்கள் காலத்தை நான்காகப் பிரிக்கலாம்,

  1. Early Chozhas எனும் சங்க காலச் சோழர்கள் ஆண்ட கி.மு.300 - கிறிஸ்து பிறப்பிற்கு பிந்தைய சில நூற்றாண்டுகள்.
  2. Interregnum Chozhas எனும் சங்க காலச் சோழர்களுக்கும் விஜயாலச் சோழனின் தலைமுறைக்கும் இடைப்பட்டவர்கள் ஆண்ட கிறிஸ்து பிறப்பிற்கு பிந்தைய சில நூற்றாண்டுகள் - கி.பி 9 ஆம் நூற்றாண்டு .
  3. Medival Chozhas எனும் விஜயாலச் சோழனின் தலைமுறையினர் ஆண்ட கி.பி 9 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி 11 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி வரை.
  4. Later Chozhas எனும் சாளுக்கிய - சோழ குல மன்னனான குலோத்துங்கச் சோழனும் அவன் தலை முறையினரும் ஆண்ட கி.பி 11 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி முதல் கி.பி 13 ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதி வரை.
சோழா என்ற பெயரின் பொருள் என்னதென்று யாருக்கும் தெரியவில்லை. அதே போன்று சோழர்களின் சின்னமான புலி தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான சரியான காரணமும் தெரியவில்லை. ஆனால் இவையிரண்டும் ஆரம்ப காலத்திலிருந்தே புழக்கத்தில் இருந்திருக்கின்றன. சங்க காலச் சோழர்கள் கிள்ளி, வளவன், செம்பியன் என்ற பெயர்களாலும் குறிக்கப்பட்டனர். கிள்ளி என்பது "கிள்" சொல்லிலிருந்து தோண்டுபவன் என்ற பொருளில் வந்தது. வளவன் என்பதற்கு வளமையான நிலத்தை ஆள்பவன் என்று பொருள். செம்பியன் என்பது புறாவிற்கு பதிலாகத் தன் உடம்பிலிருந்து கறி கொடுத்த சிபிச் சக்ரவர்த்தியின் வழி வந்தவர்கள் என்றுக் குறிக்கும். ஆனால் இந்த பெயர்கள் எல்லாம் சங்ககாலச் சோழர்களுக்கு அடுத்து வழக்கில் இல்லாமல் போய்விட்டது. கரிகார்ச் சோழன், கிள்ளி வளவன்,
நலங் கிள்ளி, நெடுங் கிள்ளி ஆகியோரெல்லாம் சங்க காலச் சோழர்களே.

Interregnum Chozhas என்னும் சங்க காலச் சோழர்களுக்கும், விஜயாலச் சோழனின் தலைமுறைக்கும் இடைப்பட்ட சோழர்களைப் பற்றி பெரிதாக குறிப்பு எதுவும் இது வரைக் கிடைக்கவில்லை. அக்காலங்களில் சோழர்கள் பாண்டியருக்கும் பல்லவருக்கும் உட்பட்டவர்களாகவே இருந்தனர். இதனை சோழர்களின் இருண்ட காலம் எனலாம். இக்காலங்களில் சோழர்கள் தங்கள் பழம் பெருமையை் பற்றியும், எதிர்காலத்தைப் பற்றியும் எண்ணிக் கொண்டும் அமைதியாக இருந்தனர். இக்காலங்களில் ஆந்திராவின் சில மாவட்டங்களில் ஒரு தெலுங்கு அரசு ஒன்று இருந்தது. அவர்கள் தங்களை கரிகார்ச் சோழனின் வழி வந்தவர்கள் என்று கூறிக் கொண்டனர். இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.

விஜயாலச் சோழன் தலையெடுக்க ஆரம்பித்த கி.பி 9 ஆம் நூற்றாண்டின் இறுதியிலிருந்து சோழர்களின் பொற்காலம் ஆரம்பம் ஆகிறது. இக்காலகட்டத்தைச் சார்ந்தவர்களே உலகப் புகழ் பெற்ற ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன் ஆவார்கள். இக்காலகட்டத்தைப் பற்றிய நம்பத்தகுந்த ஏராளமான தகவல்கள் கிடைத்துள்ளன.

சோழர்களுக்கும் சாளுக்கியருக்கும் இடையே திருமணங்கள் நடைபெற்று வந்துள்ளன. 1070 இல் விஜயாலச் சோழன் மரபில் வந்த ஆதிராஜேந்திர சோழன் மறைவிற்குப் பின், சோழ - சாளுக்கிய மன்னனான குழோத்துங்கச் சோழன், சோழ மன்னனாக அரியணை ஏறினான். ஆதிராஜேந்திர சோழன் மறைவில் Medieval Chozhas இன் காலம் முற்றுப் பெற்று Later Chozhas இன் காலம் ஆரம்பம் ஆகிறது. Later Chozhas இன் காலம் 1279 இல் மூன்றாம் ராஜேந்திரச் சோழனின் மறைவில் முற்றுப் பெறுகிறது.

இப்படியாகச் சோழர்களின் காலம் கிட்டத்தட்ட 16 நூற்றாண்டுகள் பரந்து விரிந்தது.

பின் குறிப்பு:

இப்பொழுதுதான் இப்புத்தகத்தை ஆரம்பித்துள்ளேன். மேலும் படிக்க படிக்க சோழர்களைப் பற்றி அதிகம் எழுதுகிறேன்.

ஆப்கானிஸ்தான்,தலிபான்,அமெரிக்கா மற்றும் இந்தியா

ஆப்கானிஸ்தான், இன்று உலகின் கவனம் மையம் கொண்டிருக்கும் இடம்.

ஒரு காலத்தில் வணிகர்களுக்கு இன்றியமையாத தலமாக அமைந்த நாடு. ஏனெனில் silk route எனப்படும் ஆசியாவையும் ஐரோப்பாவையும் இணைத்த மிக முக்கியப் பாதை இந்நாடு வழியாகவேச் சென்றது. புத்த மதத்தைச் சார்ந்தவர்களுக்கு மிக முக்கிய இடமாக இருந்த நாடு.

இந்தியாவிற்கும் ஆப்கானிஸ்தானிற்கும் பன்னெடுங்காலமாகவே நெருங்கிய தொடர்பு உண்டு. மகாபாரதத்தில் வரும் நம்முடைய சகுனி மாமா ஆண்ட காந்தாரம், கிழக்கு ஆப்கானிஸ்தானும் வடக்கு பாகிஸ்தானும் சேர்ந்த பகுதியே. அசோகச் சக்ரவர்த்தியின் அப்பாவான பிந்துசாரரின் காலத்திற்க்கு (272 B.C) முற்ப்பட்ட காலம் முதல் நேற்றுவரை ஆண்ட முகலாயர்களின் காலம்(1700 A.D) வரை இந்தியாவின் ஒரு பகுதியாகவே ஆப்கானிஸ்தான் இருந்தது.

மலையும் மலை சார்ந்த பகுதிகளுமாக அமைந்த இந்நாட்டில் நீர் வளம் குறைவுதான். இருந்தாலும் இயற்கையில் சாகோதரன் போல் தனக்குக் கிழக்குப் பக்கத்தில் அமைந்த பாகிஸ்தான் போல் வளமாக(சிந்து சமவெளி நாகரீகம்!) இல்லாவிட்டாலும் தனக்கு மேற்க்கே அமைந்த அரபு நாடுகள் போல் பாலைவனமாக அல்லாமலாவது இருக்கிறோமே என்று 1940 கள் வரை ஓரளவு சந்தோசப்பட்டுக்கொண்டிருந்த நாடு! (1940 களில் தான் அரபு நாடுகளில் எண்ணெய் வளம் கண்டுபிடிக்கப்பட்டது ).

இப்படியாக வறண்டு இருந்தாலும் அமைதியாகவாவது இருந்த இந்நாட்டில் 1979 ஆம் ஆண்டு சோவியத் படையெடுத்ததிலிருந்து கஷ்ட காலம் ஆரம்பித்தது. அது சோவியத்திற்கும் அமெரிக்காவிற்கும் பனிப்போர் நடந்த காலம். அப்பொழுது உலகின் கவனம் முழுவதும் ஆப்கானிஸ்தான் மீது திரும்பியது. அமெரிக்காவின் உதவியுடன் உள்நாட்டு முஜாகிதீன்கள் சோவியத்தை தோற்கடித்தனர். ஒசாமா பின் லேடன் உட்பட இப்பொழுது இருக்கும் தலிபான் தலைவர்கள்் முக்கால்வாசிப் பேர் அமெரிக்காவால் அப்பொழுது ஆதரிக்கப்பட்டவர்களே. சோவியத்தைத் தோற்க்கடித்ததுடன் தங்கள் வேலை முடிந்தது என்று அமெரிக்காவும் மற்ற நாடுகளும் தங்கள் கவனத்தை ஆப்கானிஸ்தானிலிருந்து திருப்பிக்கொண்டன. அதற்கடுத்து ஆப்கானிஸ்தானில் உள்நாட்டுக் கலவரம் ஆரம்பித்தது.

1996 ஆம் ஆண்டு தலிபான்கள் ஆப்கானிஸ்தானைப் பிடித்தபொழுது உலகம் தன் புருவத்தை உயர்த்திப் பார்த்தது. இருந்தாலும் உள்நாட்டில் ஏதோ சண்டையிட்டுக்கொள்கிறார்கள் என்று விட்டுவிட்டார்கள். பாமியான் புத்தர் சிலையை உடைத்தபோதும், இந்தியன் ஏர்லைன்ஸ் கடத்தலின் போதும்தான் தலிபான்கள் உலகின் முழு கவனத்தைக் கவர்ந்தார்கள். அதற்கடுத்து 9/11 தாக்குதலும், அதையடுத்து தலிபான்கள் மீது அமெரிக்காவின் படையெடுப்பும் உலகம் அறிந்ததே.

1996 ஆம் ஆண்டு தலிபான்கள் ஆப்கானிஸ்தானைப் பிடித்தபோழுதே இந்தியாவிற்குத் தெரியும், தலிபான்கள் இந்தியாவிற்கு வேண்டியவர்கள் அல்ல என்று. அதற்க்கு முக்கியக் காரணம் தலிபான்களை பாகிஸ்தான் ஆதரித்ததும், தலிபான்களின் காட்டுமிராண்டித்தனமான ஆட்சியும், பாமியான் புத்தர் சிலை இடிப்பும். அதற்க்கு அப்புறம் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானக் கடத்தலிலிருந்து இந்தியா தலிபான்களை முழுவதுமாக வெறுக்கத்தொடங்கியது. அதிலிருந்து இந்தியா தலிபான்களின் எதிர்க் கூட்டணியான வடக்குக் கூட்டணியை முழுவதுமாக ஆதரிக்கத் தொடங்கியது. 2001 ஆம் ஆண்டு அமெரிக்கப் படையெடுப்பின் போது இந்தியா படைகளை அனுப்பாவிட்டாலும் தலிபான்களைப் பற்றிய ரகசியத் தகவல்களை அளித்து தலிபான் தோல்வியில் முக்கியப் பங்காற்றியது.

தலிபான் தோல்விக்குப் பிறகு ஆப்கானிஸ்தான் புனரமைப்பில் இந்தியா மிக கவனம் செலுத்துகிறது. ஆப்கானிஸ்தானில் தனக்குச் சாதகமான அரசை நிறுவுவதன் மூலம் பாகிஸ்தானை ஓரளவு அடக்கலாம் என்பது இந்தியாவின் எண்ணம். அதற்காக ஆப்கானிஸ்தானுக்கு பல உதவிகளைச் செய்ய ஆரம்பித்தது. தற்போது இந்தியா ஆப்கானிஸ்தானில் ஜனநாயக ஆட்சியை நிறுவததற்கு உதவுவதற்கு அடையாளமாக அங்கு பாராளுமன்ற கட்டிடத்தைக் கட்டி வருகிறது. ஆப்கானிஸ்தான் முற்றிலும் நிலத்தால் சூழப்பட்ட நாடு. அதனால் தன்னுடைய கடல் போக்குவரத்திற்கு பாகிஸ்தானையே நம்பி வருகிறது. ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானைச் சார்ந்திருக்கும் நிலையைக் குறைப்பதற்காக இந்தியா, ஆப்கானிஸ்தானிலிருந்து ஈரானின் Chahbahar துறைமுகத்திற்கு 135 மைல் நீள பாதை அமைத்துக் கொடுத்திருக்கிறது. மேலும் ஆப்கானிஸ்தானின் மின் பிரச்சனையைச் சமாளிப்பதற்காக ஒரு மின் உற்பத்தி ஆலை அமைத்து வருகிறது. தினமும் கிட்டத்தட்ட 20 லட்சம் பள்ளிக் குழந்தைகளுக்கு செறிவூட்டப்பட்ட பிஸ்கட்டுகளை வழங்கி வருகிறது. இப்படிப் பல வகையிலும் இந்தியா ஆப்கனுக்கு உதவி வருகிறது.

ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா வழங்கி வரும் உதவிகளைக் கவனித்தீர்களேயானால், அவை் பெரும்பாலும் மக்களின் அன்றாடப் பிரச்சினைகளைத் களைவதர்க்கான நடவடிக்கைகளே. ஒரு நாட்டை நமக்குச் சாதகமாக மாற்றுவதற்கு முதலில் அந்நாட்டு மக்களைக் கவர வேண்டும் . அந்த வகையில் இந்தியா மிகச் சிறப்பாகச் செயலாற்றிவருகிறது.

2001 ஆம் ஆண்டிற்குப் பிறகு முதன் முதாலாக (2004 ஆம் ஆண்டு) ஆப்கன் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கர்சாய், பல நிலைகளில் தான் இந்தியாவிற்கு ஆதரவானாவன் என்றுக் காட்டியுள்ளார் (கர்சாய் தன்னுடையக் கல்லூரிப் படிப்பை தில்லியில்தான் முடித்துள்ளார்). அந்த வகையில் கர்சாய், தற்பொழுது நடந்த ஆப்கன் ஜனாதிபதித் தேர்தலில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டது இந்தியாவிற்கு நலம் தான்.

ஆனால் தலிபான் ஆப்கனில் மீண்டும் தலையெடுக்கத் தொடங்கியுள்ளது இந்தியாவிற்கு கவலை அளிக்கும் விஷயம்். "War on Terror" இன் மையப் புள்ளி ஆப்கனாகத்தான் இருந்திருக்க வேண்டும், ஆனால் ஈராக்காக அமைந்தது துரதிஷ்டவசமானது். அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா தற்பொழுது ஈராக்கில் படைகளைக் குறைத்து, ஆப்கனில் படைகளை அதிகரிக்க முடிவெடுத்துள்ளது இந்தியாவிற்கு சற்று நம்பிக்கை அளித்துள்ளது.

தலிபான்கள் முற்றிலுமாக அழிக்கப்படவேண்டியது உலகிற்கும் இந்தியாவிற்கும் நல்லது.

Saturday, November 14, 2009

எண்ணம்

Twitter : பன்னெடுங்காலமாக பொண்ணுங்களை மட்டுமே follow பண்ணி பெருமை கொண்ட பசங்களை, பசங்களையும் follow பண்ண வச்ச பெருமை கொண்டது ;).

Monday, November 9, 2009

ஆப்ரிக்காவில் புலி


நேற்று Animal Planet Channel ல், ஒரு பரந்த savanna இல் புலியைப் பார்த்தேன். என்னடா இது ஒரு வித்யாசமான காட்சியாக உள்ளது என்று ஆச்சரியமாக இருந்தது. ஏனெனில் புலிகளின் வசிப்பிடம் பெரும்பாலும் அடர்ந்த காடாக இருக்கும். புலிகளின் வசிப்பிடம் ஆசியா மற்றும் ஐரோப்பாவாகவே இருந்திருக்கிறது. புலிகள் ஆப்ரிக்காவைச் சேர்ந்தவை அல்ல. என்னுடைய முந்தையப் பதிவுகளில் சிங்கமும் புலியும் இருக்கும் ஒரே நாடு இந்தியா என்று கூறியிருப்பேன். அதனால்தான் புலியை ஆப்ரிக்கா savanna புல் வெளிகளில் கண்டபோது மிக ஆச்சரியமாக இருந்தது.

சமீபத்திய ஆராச்சிகளின்படி புலிகள் ஆப்ரிக்காவிலிருந்து 10 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே மறைந்துவிட்டன.

சிங்கத்தையும் புலியையும் ஒப்பிடும்போது, புலியே திட்டமிடுதல், ஆற்றல், திறமை என்று பல விதங்களிலும் மேம்பட்டது. ஆனால் சிங்கத்தின் வேட்டையாடுதல் பற்றிய ஒளிப் பதிவுகள் அளவிற்கு புலியின் வேட்டையாடுதல் பற்றிய ஒளிப் பதிவுகள் கிடையாது. அதற்க்குக் காரணம் சிங்கத்தின் இருப்பிடம் ஆப்ரிக்காவின் பரந்த புல் வெளியாகவும், புலிகளின் இருப்பிடம் அடர்ந்த ஆசியக் காடுகளாகவும் இருப்பதே.

நேற்றுப் பார்த்த நிகழ்ச்சி "Living with Tigers" எனும் ஆப்ரிக்கா காடுகளில் புலிகளை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியாகும். இந்த நடவடிக்கையில் இரண்டு வங்காளப் புலிகள் ஆப்ரிக்காவில் அறிமுகப் படுத்தப்பட்டன. ஒன்று
ரான் எனும் ஆண் புலி மற்றொன்று ஜூலி எனும் பெண் புலி. இரண்டும் அமெரிக்காவில் captivity இல் பிறந்த சகோதர சகோதரிகள்.


இப்புலிகள் அறிமுகப் படுத்தப்பட்ட பகுதி, தென்ஆப்ரிக்காவில் உள்ள சுற்றிலும் மின்சார வேலி அமைக்கப்பட்ட இப்புலிகளுக்கென்றே உருவாக்கப்பட்ட ஒரு சரணாலயம். இது ஒரு தனியார் முயற்சி.

இந்நிகழ்ச்சியில் இப்புலிகளுக்கு காடுகளில் வாழ்வதற்கு படிப்படியாக பயிற்சி கொடுக்கப்பட்டது. முதலில் இப்புலிகளுக்கு simulated prey அறிமுகப்படுத்தப்பட்டது. அதாவது ஒரு இறந்து போன மானின் உடலில் கறியைத் திணித்து அதனை ஒரு ஜீப்பில் கட்டி ஓட்டிச் சென்றார்கள். அதனை இப்புலிகள் வேட்டையாடின. இப்புலிகளின் முதல் உண்மையான வேட்டை ஒரு முள்ளம்பன்றி. இதனை அந்த நிகழ்ச்சியின் வர்ணனையாளரின் வார்த்தையில் கூறுவதென்றால் "Perfect hunt but wrong choice". ஏனெனில் முள்ளம்பன்றி வேட்டை மிக ஆபத்தான ஒன்று. முள்ளம் பன்றிகள் பல புலிகளையும் சிங்கங்களையும் நிரந்தர ஊனமாக்கிவிடும். இந்நிகழ்ச்சியிலும் ரானை முள்ளம் பன்றியின் முட்கள் நன்றாக குத்திவிடும். இருந்தாலும் கடைசியில் அது ஒரு மிகச் சிறந்த வேட்டையாகவே இருந்தது.


அடுத்த வேட்டை ஒரு வான்கோழி. அந்த வேட்டை மிகச் சிறப்பாக இருந்தது. வான்கோழி பறக்கும்போது இரண்டு புலிகளும் எதிர் எதிர் திசைகளிலிருந்து தாவி, வானத்திலேயே பிடிக்கும். மிக அருமையாக இருந்தது அக்காட்சி. அதற்க்கடுத்த வேட்டைக்கான தேர்ந்தெடுத்த மிருகம், அப்புலிகளின் அனுபவமின்மையை நன்றாக காட்டியது. அவற்றின் தேர்ந்த்தெடுப்பு 1400 kg எடை உள்ள காண்டாமிருகம்!. நல்லவேளையாக அக்காண்டாமிருகம் திருப்பித் தாக்கி சட்னி ஆக்காமல்விட்டது.

அதற்கடுத்த வேட்டை ஒரு காட்டுப் பன்றி. காட்டுப் பன்றியின் தோலானது சற்றுக் கடினமானது. அதனால் அப்பன்றியைக் கொல்வதற்கு இரண்டு புலிகளுக்கும் சற்று நேரமானது.

அதற்கடுத்து இப்புலிகளுக்கென்று அந்த மூடிய மின்சார வேலி அமைக்கப்பட்ட சரணாலயத்தில் மான்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இதற்க்கடுத்துதான் உண்மையான வேட்டை ஆரம்பமானது. நான் ஏற்கனவே சொன்ன மாதிரி புலி வேட்டையைப் பார்ப்பது அபூர்வம். நேற்றைய நிகழ்ச்சியில் புலிகளின் மான் வேட்டை மிகச் சிறப்பாக அமைந்தது. ஆரம்பத்தில் இப்புலிகளின் மான் வேட்டை அவற்றின் அனுபமின்மையைக் காட்டியது. புலி வேட்டையாடும் பொழுது இரையின் குரல் வளையை முதலில் பிடித்து அதன் மூச்சை நிறுத்தும். நேற்றைய நிகழ்ச்சியில் இப்புலிகள் குரல் வளையைப் பிடிக்காமல் கழுத்தின் மேற்ப்பகுதியையே பிடித்தன. ஆனால் காலம் செல்லச் செல்ல இரண்டு புலிகளும் வியூகம் அமைத்து மிகச் சிறப்பாக வேட்டையாடின. ஒரு கட்டத்தில் இரண்டு புலிகளும் சேர்ந்து ஒரே வேட்டையில் ஏழு மான்களை வேட்டையாடின!. ஒரு மானை இரண்டு புலிகளும் எதிர் எதிர் திசைகளிலிருந்து தாவி வானத்திலேயே பிடிக்கும். wow, that was a great hunt.

அதற்கடுத்து அச்சரணாலயத்தில் Wildebeest அறிமுகப்படுத்தப்பட்டன. Wildebeest என்பது 160- 290kg எடையுள்ள காட்டெருமை போன்ற ஒரு மிருகம். பொதுவாகப் புலிகள் இந்தியாவில் உலகிலேயே மிகப் பெரிய எருமை இனமான Gaur(1,000–1,500kg) ஐ தனியாகவே வேட்டையாடிவிடும். ஆனால் captivity இல் இருந்த இப்புலிகளுக்கு wildebeest சற்றுக் கடினம்தான். இருந்தாலும் ரானும், ஜூலியும் மிகச் சிறப்பாகவே வேட்டையாடிவிடும்.

அடுத்து நெருப்புக்கோழிகள் அறிமுகப்படுத்தப்பட்டன. நெருப்புக்கோழிகள் புலிகளின் வேகத்தை அளவிடக் கூடியவையாக இருந்தன. ஏனெனில் நெருப்புக்கோழிகள் மணிக்கு 72km வேகத்தில் ஓடும். அதையும் இரண்டு புலிகளும் சிறப்பாகவே வேட்டையாடின.

இவ்வாறாக இரண்டு புலிகளுக்கும், இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக பயிற்ச்சி கொடுக்கப்பட்டன. மேற்க்கூறிய காட்ச்சிகள் அனைத்தும் மனித இனம் இதுவரை பார்த்திராத ஒன்று!. ஏனெனில் Wildebeest ம்,Thomson Gazelle ம், நெருப்புக் கோழியும் புலிகள் இருக்கும் இடத்தில்(ஆசியா) கிடையவே கிடையாது. புலிகளின் வேட்டையை பரந்த புல் வெளியில் காண்பது என்பது மிக அருமையாக இருந்தது.

தற்பொழுது ரான் மற்றும் ஜூலிக்கு 10 வயதாகிறது. செயற்கை கருவூட்டல் முறையில் ஜூலி 5 குட்டிகளை ஈன்றிருக்கிறது.

ஆப்ரிக்கா காடுகளில் புலிகளை இனப்பெருக்கம் செய்யவைப்பது கண்டனங்களை எழுப்பாமல் இல்லை. ஏனெனில் ஆப்ரிக்கா புலிகளின் உண்மையான இருப்பிடம் இல்லை. மேலும் இப்புலிகளின் "genetic purity" பற்றிய சந்தேகங்கள் எழுந்துள்ளன. பெரும்பாலும் உலகில் காடுகளைத் தவிர்த்து மிருகக்காட்சி சாலைகளிலும் மற்ற இடங்களிலும் உள்ள புலிகள் பெரும்பாலும் "genetically impure" ஆகவே உள்ளன. அதாவது அவைகள் ஏதேனும் இரண்டு அல்லது அதற்க்கு மேற்ப்பட்ட இனப் புலிகளின் கலப்பாகவே உள்ளன. மேலும் இந்த முயற்சி ஒரு தனியார் பண்ணுவது. அதனால் இது பணம் பண்ணுவதற்க்கான முயற்சியே என்ற குற்றச்சாட்டும் உள்ளது .

இந்த நிகழ்ச்சியைப் பார்த்த பொழுது எனக்கு கோவமும் ஆத்திரமுமே மேலோங்கியது. ஏனெனில் இவ்வளவு முயற்சி செய்து ஆப்ரிக்காவில் இல்லாத புலியை உருவாக்க முயற்சி நடக்கும் பொழுது, புலிகளின் தாயகமாக விளங்கும் இந்தியாவில் புலிகள் பாதுகாக்கப்படவில்லை என்று எண்ணும்போது கோபம்தான் மேலோங்குகிறது.

மேலும் அறிய கீழே உள்ள பதிவுகளைக் காண்க,

http://www.jvbigcats.co.za/
http://www.lairweb.org.nz/tiger/release10.html
Photos Courtesy : http://www.jvbigcats.co.za/

பள்ளிக்கரணை சதுப்பு நிலம்

பள்ளி நாட்களில் சமூக அறிவியல் பாடத்தில் சதுப்பு நிலங்களை பற்றி படித்த போது, அது சற்று வித்யாசமான பெயராகவும், கற்பனையில் ஒரு வித்யாசமான நிலமாகவும் தோற்றம் அளித்தது. ஏனெனில் தமிழ் நாட்டில் பெரிதாக சதுப்பு நிலப் பகுதிகள் கிடையாது. அதனால் அதனைப் பார்த்தது கிடையாது. மேற்கு வங்கத்தில் உள்ள சுந்தரவனக் காடுகளின் சில பகுதிகள் சதுப்பு நிலத்தால் ஆனவை.

பிற்காலத்தில் பறவைகள் மற்றும் விலங்குகளின் மீது மேலும் அதிக ஆர்வம் ஏற்ப்பட்டபோது, சதுப்பு நிலங்களின் முக்கியத்துவம் தெரிந்தது. சதுப்பு நிலமானது எப்பொழுதும் அல்லது பெரும்பாலான நாட்களில் குறைந்த அளவு நீர் மட்டம் இருக்கும் பகுதிகளாகும். இச்சதுப்பு நிலங்களில் நீர்ப்பறவைகள் கூடு கட்டி இனப்பெருக்கம் செய்கின்றன. மேலும் இந்நிலங்களில் எப்பொழுதும் நீர் தேங்கி இருப்பதால், சுற்றுப்புறப் பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் உயர்வதில் பெரும் பங்கு வகிக்கின்றன.

நான் சென்னைக்கு வந்த புதிதில் தாம்பரத்திலிருந்து வேளச்சேரிக்கு பேருந்தில் வரும் பொழுது ஜெருசலேம் கல்லூரி அடுத்த பகுதிகளில் நீர் தேங்கி இருப்பதைப் பார்த்திருக்கிறேன். அப்பொழுதெல்லாம் அது சாதாரணமாக நீர் தேங்கி இருக்கும் பகுதி என்று தோன்றும். பின்னாட்களில்தான் அது சென்னையில் கடைசியாக எஞ்சி இருக்கும் வனப்பகுதிகளில் ஒன்று என்று தெரிந்தது. கடந்த 2007 ஆம் ஆண்டு பள்ளிகரணை சதுப்பு நிலங்களில் சில பகுதிகள் பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியாக அறிவிக்கப்பட்டதிலிருந்து இப்பகுதியின் முக்கியத்துவத்தை அறியலாம்.


பள்ளிக்கரணை சதுப்பு நிலமானது 61 வகைத் தாவர இனங்களுக்கும், 46 வகை மீன் இனங்களுக்கும்,106 வகை பறவை இனங்களுக்கும், 7 வகை வண்ணத்து பூச்சி இனங்களுக்கும், 21 வகை ஊர்வனங்களுக்கும் இருப்பிடமாக உள்ளது என்பதிலிருந்து உயிரியலில் இப்பகுதி எந்த அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை அறியலாம்.




பத்து, பதினைந்து வருடங்களுக்கு முன்பு இங்கு பறவைகள் அதிக அளவில் இருந்து இருக்கின்றன, ஆனால் இப்பொழுது ரொம்ப பெரிய அளவில் பறவைகளைக் காண முடிவதில்லை. மேலும் ஆக்கிரமிப்புகளாலும் மாநகராட்சிக் குப்பைகளை இங்கு கொட்டுவதாலும் பள்ளிக்கரணை சதுப்பு நிலம் அழிந்து வருகிறது. பள்ளிக்கரணை சதுப்பு நிலப் பகுதியின் எல்லைகள் இன்னும் முழுமையாக வரையறுக்கப்படாததால், இப்பகுதி முழுவதையும் பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியாக அறிவிப்பதில் தடங்கல்கள் உள்ளன.




இந்தியா வேற்றுமையில் ஒற்றுமை காணும் நாடு என்பது அதன் மக்கள் மற்றும் கலாச்சாரத்தைப் மட்டுமே குறிப்பது அல்ல, அதன் நிலப் பரப்பையும் குறிக்கும். உலகிலேயே மிக உயர்ந்த மலைத்தொடரையும், பாலைவனத்தையும், பீடபூமிகளையும்,சதுப்பு நிலங்களையும், மிகப் பெரிய வளமை வாய்ந்த சமவெளிகளையும், மிக வயது முதிர்ந்த மலைகளையும் ஒரே நாட்டில் காண்பது என்பது மிக அரிது. அதே போன்று மாறுபட்ட விலங்குகளையும், பறவைகளையும் ஒரே நாட்டில் காண்பது என்பது மிக மிக அரிது. இவ்வாறாக மாறுபட்ட விலங்குகளும் பறவைகளும் இருப்பதற்குக் காரணம் இத்தகைய மாறுபட்ட நிலப்பரப்புகளே. இந்தியாவின் இத்தகையப் பெருமையை நாம் அனைவரும் பாதுகாக்கவேண்டும். அதனால் அரசு மிக விரைவில் நடவடிக்கை எடுத்து பள்ளிகரணை சதுப்பு நிலப் பகுதியின் எல்லைகளை வரையறுத்து, இப்பகுதி முழுவதையும் பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியாக அறிவிக்க வேண்டும்.

பின் குறிப்பு :
பள்ளிக்கரணை சதுப்பு நிலம் முழுவதுமாக தொலைந்து போவதற்கு முன்பாக என்னுடைய புகைப் படக் கருவியில் பதிந்து கொள்ள வேண்டும் என்று எண்ணினேன். அதுவே நீங்கள் மேலே பார்த்த புகைப் படங்கள்.

Friday, November 6, 2009

தெரிந்ததைச் சொல்கிறேன் - 2

NEWS - North, East, West, South என்று நான்கு திசைகளிலிருந்தும் செய்திகளைத் தருவதால் NEWS என்று பெயர் வந்தது. நாம வேணும்னா இன்னொரு explanation கொடுப்போம். பல புதியதுகளைத் (செய்திகளைத், NEWs) தர்ரதுனால, அத NEWS வேனா சொல்லுவோம் ;)

Thursday, November 5, 2009

கடவுளிடம் காலை நீட்டினேன் !

நான் அன்று வீட்டில் காலை நீட்டி உட்கார்ந்திருந்தேன். நான் காலை நீட்டி உட்கார்ந்திருந்த இடம் சாமி அறையை நோக்கியவாறு இருந்தது. அதைப் பார்த்த என் அம்மா "டேய், சாமிய நோக்கி காலை நீட்டாதடா" என்றார். ஏனென்றால் அது சாமியை அவமதிப்பதாக இருக்கிறதாம். அப்பொழுதுதான் நான் சாமி அறையை நோக்கியவாறு காலை நீட்டிக்கொண்டிருப்பதை உணர்ந்தேன். என்னுடைய நோக்கம் சாமியை அவமதிப்பதில்லை என்பதால் அது எனக்குப் பெரிதாக தோன்றவில்லை. இருந்தாலும் நான் காலை மடக்கிய பிறகுதான் என் அம்மா சமாதானமடைந்தார்.

அதேபோல் நம் சிறு வயதில் ஏதேனும் சிறு புத்தகத்தையோ அல்லது ஏன் ஒரு சிறு தாளையோ மிதித்துவிட்டால், அது சரஸ்வதி என்று சொல்லி அதனை தொட்டுக் கும்பிடச் சொல்லுவார்கள். இன்றும் கூட நான் அந்தப் பழக்கத்திற்கு அடிமையானவன்தான்.

என்னைப் பொறுத்தவரை கடவுள் மரியாதை, அவமரியாதை இவற்றிற்க்கெல்லாம் அப்பாற்ப்பட்டவர். அப்படி இருந்தால் மட்டுமே அவர் கடவுள்.

சிவபெருமான், தன்னைப் பற்றிக் கூறும்போது கூட "ஒருத்தன் என்னைக் காலால் எட்டி மிதித்தவன்" என்பார். அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான கண்ணப்ப நாயனார், சிவபெருமானின் கண்களிலிருந்து குருதி பெருகுவதைக் கண்டு தன் ஒரு கண்ணைத் தோண்டி சிவபெருமானின் கண்ணில் வைப்பார். அப்பொழுது சிவபெருமானின் மற்றொரு கண்ணிலிருந்தும் குருதி வருவதைக் கண்டு தன் மற்றொரு கண்ணையும் தோண்டி வைக்க முயல்வார். சிவபெருமானின் கண் இருக்கும் இடம் அறியத் தன் காலால் சிவபெருமானின் கண் இருக்கும் இடத்தை மிதித்துக்கொள்வார். அதனையே சிவபெருமான் "ஒருத்தன் என்னைக் காலால் எட்டி மிதித்தான்" என்று நெகிழ்ச்சியுடன் நயம்படக் கூறுவார்.

ஆக சிவபெருமானே தன்னைக் காலால் எட்டி மிதித்ததை அவமரியாதையாகக் கருதவில்லை.

ஏன் மற்றப் பெருமக்களும் அவமரியாதையாகக் கருதவில்லை. மாணிக்கவாசகப் பெருமான், கண்ணப்ப நாயனாரைப் பற்றிக் குறிப்பிடும் போது,

கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை கண்டபின்
என்னப்பன் என்னொப்பில் என்னையும்ஆட் கொண்டருள

கண்ணப்பனுக்கு ஈடான அன்பு என்னிடம் இல்லாவிட்டாலும் கூட இறைவர் என்னையும் ஆட்கொண்டருளியதாகத் திருகோத்தும்பியில் குறிப்பிடுகின்றார்.

நம் உடம்பில் இருக்கும் மற்ற உறுப்புகளைப் போலவே காலும், ஆனால் அதனை மட்டும் அவமரியாதையாகக் கருதுவது ஏனோ என்று தெரியவில்லை.

நான் காலைப் பற்றி இவ்வாறு கூறும்போது என்னிடம் கேட்கப்படும் ஒரு கேள்வி, உன்னை யாராவது காலால் மிதித்தால் ஏற்றுக்கொள்வாயா?.

அதற்க்கு என்னுடைய பதில் அவர் எந்த நோக்கத்தோடு மிதித்திருந்தார் என்பதைப் பொறுத்தது.

என்னை மிதிக்கும் ஒருவர் தெரியாமல் மிதித்திருந்தாலோ அல்லது மிதிக்கும் ஒரு செயல், அவமரியாதை என்ற எண்ணம் இல்லாமல் மிதித்திருந்தாலோ, நான் தவறாக எண்ணமாட்டேன் .

கடவுள் என்று வரும்போது மேற்க்கூறியக் கருத்து இன்னும் மாறுபடும்.

ஒருவன் கடவுளை அவமதிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு மிதித்தாலும், அவன் நல்லவனாக இருக்கும் பட்சத்தில் கடவுள் அதனைப் பெரிதாக எண்ணமாட்டார். எண்ணவும் கூடாது. அப்படி இருந்தால் மட்டுமே அவர் கடவுள்.

அக்பர், பீர்பால் கதைகளில் ஒரு கதை வரும். ஒரு நாள் அக்பர், தன்னுடைய அவையில் வந்து "நேற்று ஒருவன் என்னை நெஞ்சில் ஏறிக் காலால் எட்டி மிதித்தான். அவனை என்ன செய்யலாம்?" என்று கேட்பார். உடனே அவையில் உள்ளவர்கள் எல்லாம் வெகுண்டு எழுந்து, அவன் காலை வெட்ட வேண்டும், அவனைக் கழுவில் ஏற்றவேண்டும், அவன் தோலை உரிக்க வேண்டும் என்று மாறி மாறி சொல்வார்கள். அப்பொழுது பீர்பால் மட்டும் அவன் காலுக்கு பொன்னால் ஆபரணம் அணிவிக்க வேண்டும் என்பார். அப்பொழுது அவையில் உள்ளவர்கள் எல்லாம் திகைத்து என்ன இது என்பார்கள்?. அதற்க்கு பீர்பால், சக்ரவர்த்தியை நெஞ்சில் ஏறி மிதிக்கக் கூடியவர் அவருடைய சிறு குழந்தை அன்றி வேறு யாராக இருக்க முடியும் என்பார்.

ஆக மிதித்தல் என்பது பார்ப்பவரின் கண்களைப் பொருத்தும், அச்செயலைச் செய்பவரின் நோக்கத்தைப் பொறுத்துமே அமைகிறது.

Friday, October 30, 2009

யார் மிகவும் அழகு, ஆணா? பெண்ணா?

இயற்கையில் யார் மிகவும் அழகு,ஆணா? பெண்ணா?. ஒவ்வொரு பாலினரும் இக்கேள்விக்கு விடையாக எதிர்பாலினரே அழகு என்பார்கள். அந்த ஈர்ப்புதான் உலகை இன்றும் இயக்கிக் கொண்டிருக்கிறது. அந்த ஈர்ப்பு இல்லையென்றால் உலகின் இயக்கம் என்றோ நின்று போயிருக்கும். சரி ஈர்ப்பை விட்டு விட்டு வெளியே வந்து பார்ப்போம். உலகில் உண்மையில் யார் அழகு்? ஆண்களா? பெண்களா?. இக்கேள்வி மனிதருக்கானது மட்டும் அல்ல, இக்கேள்வி அனைத்து உயிரினங்களுக்கும் பொருந்தும்.

விலங்கியலில் Sexual Dimorphism என்றொரு சொற்றொடர் உண்டு. ஒரு இனத்தில் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே இனப்பெருக்க உறுப்புகள் தவிர்த்த மற்ற வேறுபாடுகளைக் குறிக்கும் இச்சொற்றோடர். எ.கா: சிங்கம்,மயில்.
விலங்குகளில் Sexual Dimorphism அதிகமாக உள்ளதும் மக்களுக்கு மிக அதிகமாக பரிச்சயமானதுமாக உள்ள விலங்கு, சிங்கம்.


Link
Photo Courtesy : wikipedia(Yaaaay&Falense)

பொதுவாக எல்லா இனங்களிலும் ஆணானது பெண்ணைக் கவர பல வழிகளிலும் முயற்சிக்கும். அதற்க்கு Sexual Dimorphism உதவியாக இருக்கும். அதிக Sexual Dimorphism உள்ள உயிரினமானது அதிகமாக விரும்பப்படும்.
எடுத்துக்காட்டாக அழகாக தோகையைக் கொண்டதும், அழகாக தோகையை விரித்து ஆடும் ஆண் மயிலானது அதிகமாக பெண் மயில்களால் விரும்பப்படும். இங்கு பெண்ணே தன் துணையைத் தேர்ந்தெடுக்கும்.

Photo courtesy: Wikipedia(Superborsuk)

Sexual Dimorphism அதிகமாக உள்ள விலங்குகளில் ஒன்றான யானையில் அதன் பெரிய தந்தங்களும், பெரிய கட்டுமஸ்தான உடம்பு மட்டுமே பெண் யானையுடன் கூடுவதற்கு பயன்படுவதில்லை. ஒரு ஆண் யானையானது தன்னுடைய எதிரி ஆண் யானையுடன் மோதி அதனை வீழ்த்திய பிறகே பெண்ணுடன் கூட முடியும். இங்கு பெண்ணின் விருப்பம் கேட்கப்படுவதில்லை.

Photo Coutesy:Wikipedia.org(Mr Raja Purohit)

மேலே உள்ளது சல்மான்கான் புகழ் Blackbuck. கருப்பாக கொம்புடன் இருப்பது ஆண் மான், மாநிறத்தில் இருக்கும் மற்ற இரண்டும் பெண் மான்கள்.

Sexual Dimorphism இருக்கும் உயிரினங்களில் ஆணானது, பெண்ணிலிருந்து மாறுபட்டு கவர்ச்சியாக,உறுதியாக,அழகாக இருக்கும்.




Photo Courtesy : wikipedia.org(Aviceda&PurpleHz)

மேலே உள்ளது Australian Figbird. முதலில் உள்ளது ஆண் பறவை. அடுத்து் உள்ளது பெண் பறவை .

ஏன்
மனித இனத்திலே Sexual Dimorphism உண்டு.

Photo Courtesy: http://www.zastavki.com/

இதற்க்கு மாறாக சில இனங்களில் பெண் மாறுபட்டு சற்றுப் பெரிதாகவும் கவர்ச்சியாகவும் இருக்கும். எ.கா: தேனீ,சிலந்தி.

இவ்வினங்களில் ்பொதுவாக பெண்ணானது ஆணை விட பெரிதாக இருக்கும். இதற்க்கு Reverse Sexual Dimorphism என்று பெயர் (பெரும்பாலான சிலந்தி இனங்களில் புணர்தலுக்குப் பின் ஆண் சிலந்தியை, பெண் சிலந்தியானது சாப்பிட்டு விடும்!).


Photo Courtesy : Wikipedia.org(Sanba38)

படத்தில் பெரிதாக உள்ளது பெண் சிலந்தி, பக்கத்தில் சிறிதாக உள்ளது ஆண் சிலந்தி .

Sexual Dimorphism இல்லாத இல்லாத உயிரினங்களும் உலகில் அதிகம் உண்டு. பெரும்பாலான பாம்பு இனங்களில் Sexual Dimorphism பெரிதாக கிடையாது. விலங்குகளில் இதற்க்கு உதாரணம் சொல்வதென்றால், Cheetah.

பொதுவாக உலகில் Sexual Dimorphism ஆனது Reverse Sexual Dimorphism த்தை விட அதிகம். அதாவது ஆணே அழகானவன். ஆனால் ஆணின் இந்தக் கவர்ச்சியும்,அழகும்,உறுதியும் பெண்ணைக் கவர்வதர்க்கே!.

Wednesday, October 28, 2009

சோமாலியப் பெண்களை துரத்தும் பசிகொடுமை,கற்பழிப்புகள் மற்றும் கழுதைப்புலிகள்

சோமாலியா - ஆப்பிரிக்காவின் கிழக்குப் பகுதியில் காண்டாமிருகத்தின் கொம்பு போல் இருக்கும் ஒரு நாடு. தென்னிந்தியாவின் பரப்பளவுள்ள இந்நாடு 1960 ஆம் ஆண்டு பிரிட்டனிடமிருந்தும், இத்தாலியிடமிருந்தும் சுதந்திரம் பெற்றது. 1991 ஆம் ஆண்டிலிருந்து மத்திய அரசு என்ற ஒன்று இல்லாமலே இருந்து வருகிறது. 2008 ஆம் ஆண்டின் பின் பகுதியில் இஸ்லாமிய தீவிரவாதிகள் நாட்டின் தலைநகரம் உட்பட தென் பகுதி முழுவதையும் கைப்பற்றிக் கொண்டார்கள். இந்த தீவிரவாதிகளின் ஆதரவுடனையே தற்பொழுது இந்தியப் பெருங்கடலில் கடற்கொள்ளைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. சோமாலியாவிற்க்கென்று ஒரு ராணுவம் கிடையாது.

நெடுங்காலமாகவே இந்நாடு பசிக் கொடுமையால் அவதிப்பட்டுக் கொண்டுவருகிறது. இதற்க்கு மிக முக்கியக் காரணம் அங்கு நடைபெற்றுக் கொண்டுவரும் இனக்கலவரங்களே. ஒரு மத்திய அரசும், ராணுவமும் இல்லாத காரணத்தாலும் பசிக் கொடுமையாலும் அங்கு குற்றங்கள் மிக அதிக அளவில் நடைபெற்றுக் கொண்டுவருகின்றன.

அங்குள்ள பெண்கள் பசிக் கொடுமையால் தங்கள் கணவர்களால் கைவிடப்படுகிறார்கள். சில ஆண்கள் வேலை தேடி பக்கத்து நாடான ஏமனுக்கு கள்ளத்தனமாக செல்கிறார்கள். அப்படிச் சென்றவர்களின் கதி என்னவென்று கூட அவர்களின் மனைவிகளுக்குத் தெரிவதில்லை. இத்தகையப் பெண்களை பசி கொடுமை துரத்துவதோடு அல்லாமல் கற்பழிப்புகளும் தொடர்கின்றன. சில பெண்கள் கால்நடைகளைக் கொண்டு தங்கள் வாழ்க்கையை நடத்திக்கொண்டு வருகிறார்கள். அந்தக் கால்நடைகள் கூட கழுதைப்புலிகளால் தூக்கிக் கொண்டு செல்லப்படுகின்றன. இவ்வாறாக அங்குள்ள பெண்களின் வாழ்க்கை பசி கொடுமையாலும், கற்பழிப்புகளாலும், கழுதைப்புலிகளாலும் கிழிக்கப்படுகின்றது .

மேலும் அறிய இங்கே சொடுக்கவும் .

Monday, October 26, 2009

கற்பனைகள் கட்டுக்கடங்காதவைகள்!

ஒரு விஷயத்தை எழுத்திலிருந்து திரைக்கு கொண்டுவருவது என்பது சற்றுக் கடினமான செயலே. பொதுவாக ஒரு திரைப்பட இயக்குனர் தான் நினைத்ததை அப்படியே திரையில் கொண்டு வந்திருப்பார்களா என்றால், 100% பண்ணி இருக்கமாட்டார்கள். ஒவ்வொரு படத் தோல்வியின் போதும் ஒவ்வொரு நடிகரும் கூறும் குற்றச்சாட்டு, இயக்குனர் என்னிடம் கூறிய கதை வேறு ஆனால் படத்தில் வந்தது வேறு என்பார்கள். நிச்சயம் இயக்குனர் வேறு கதையை படமெடுத்திருக்கமாட்டார், ஆனால், தான் கூறிய கதையையே படமாக்கும் போது அது வேறு பரிமாணம் எடுத்திருக்கும். இது அவரே எதிர்பார்க்காத ஒன்றாக இருக்கலாம். திரைப்படம் எடுக்கும்போது கதை தெரிந்த ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகக் கதையைக் கற்பனை செய்திருப்பார்கள். ஒரு தயாரிப்பாளர் ஒரு விதமாக கற்பனை செய்திருப்பார், கதாநாயகன் ஒரு விதமாக கற்பனை செய்திருப்பார். ஏன் இயக்குனரே ஒரு விதமாக கற்பனை செய்திருப்பார். ஒரு படத்தின் வெற்றியே குறைந்தபட்சம் ஒரு இயக்குனர் ஒரு கதையில் தான் கற்பனை செய்ததில் எத்தனை சதவீதம் திரையில் கொண்டு வர முடிந்தது என்பதில்தான் இருக்கிறது. ஏனெனில் ஒரு மனிதனின் கற்பான சக்திக்கு ஈடு எதுவும் கிடையாது. அது எல்லைகள் அற்றது. அதனை ஒரு குறிப்பிட்ட எல்லைக்குட்பட்ட திரைக்கு கொண்டு வருவதென்பது அசாத்தியமான செயல். அதனை ஒரு இயக்குனர் எந்த அளவுக்கு வெற்றிகரமாகச் செய்கிறார் என்பதில் தான் ஒரு படத்தின் வெற்றியே அடங்கியுள்ளது.

பொதுவாக நாவல்களை படமாக்குவதென்பது சற்று அசாத்தியமான செயலே. ஏனெனில் இங்கு கதையானது ஏற்கனவே ரசிகனுக்கு அறிமுகமானதாக இருக்கும். அந்நாவலை படிக்கும்போது ஒவ்வொரு ரசிகனும் ஒவ்வொரு விதமாக கற்பனை செய்திருப்பான். அதனை ஈடு செய்வதென்பது பெரிய விஷயம். அதனை மிகச் சில இயக்குனர்களே வெற்றிகரமாகச் செய்துள்ளனர். எ.கா : பாலச்சந்தர். அவருடைய 47 நாட்கள், எழுத்தாளர் சிவசங்கரியின் நாவலே. அப்படம் ஒரு வெற்றிப் படமாகவே அமைந்தது. ஆனால், நான் அந்நாவலை படித்தபின் அப்படத்தைப் பார்த்தவர்களைக் கண்டதில்லை. அதனால் அப்படம் ஒரு வாசகனுக்கு எந்த அளவு பிடித்தமாக இருந்தது என்பது எனக்குத் தெரியாது!.

தமிழ்த் திரையில் ஆரம்ப காலத்தில் வந்த படங்கள் எல்லாமே மக்களுக்கு அறிமுகமான கதைகளாகவே இருந்தன. ஆரம்ப காலத்தில் தமிழ்த் திரை உலகம் புராணக் கதைகளையே எடுத்தது. அவை பெரும்பாலும் வெற்றிப் படமாகவே இருந்தன. அவை வெற்றிப் படமாக அமைந்ததற்கு இயக்குனர்கள் மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தார்கள் என்பது மட்டுமே காரணம் அல்ல. அக்காலங்களில் பொழுதுபோக்கு அம்சங்கள் மிகக் குறைவு, அதனால் மக்கள் எதைத் திரையிட்டாலும் பார்த்தார்கள். ஆனால் இக்காலம் அப்படி அல்ல. மேலும் இக்கால (வாசகர்களின்) ரசிகர்களின் எதிர்பார்ப்பும் அதிகம். அதனைப் பூர்த்தி செய்வது என்பது சற்றுக் கடினமானதே.

நான் படித்ததிலேத் திரைக்கு வந்த ஒரு தொடர், லக்கி லூக் கார்ட்டூன். சிறு வயதில் நான் லக்கி லூக்கின் ரசிகன். அக்கார்டூனைப் படிப்பது என்பது எனக்குப் பிடித்தமான ஒன்று. சிறிது காலத்திற்கு முன்பு வரை கூட அக்கார்டூனைத் தேடி அதனைத் தமிழில் வெளியிட்ட ராணி காமிக்ஸ்ற்கு கடிதம் எல்லாம் அனுப்பினேன். அதே லக்கி லூக்கை சுட்டி தொலைக்காட்சியில் பார்த்த போது மிக ஆவலுடன் பார்த்தேன். ஆனால், அது என்னை ஏனோ அவ்வளவாக கவரவில்லை. சில விசயங்களைப் பார்க்கும் போது, இதனைப் பார்க்காமலே இருந்திருக்கலாம் என்று தோன்றும். அதேபோல் தான் லக்கி லூக்கை சுட்டி தொலைக்காட்சியில் பார்த்த போது எனக்குத் தோன்றியது. அதற்குக் காரணம் அது என் கற்பனையை ஈடு செய்யாமல் இருந்தது என்பதோடு மட்டுமல்லாமல் என் கற்பனையில் இருந்த லக்கி லூக்கை சிதைப்பதாகவும் இருந்தது.

கற்பனைகள் கட்டுக்கடங்காதவைகள். அதனை ஈடு செய்வது அவ்வளவு எளிதல்ல!

பின் குறிப்பு:

1. இப்பதிவையே நான் எப்படியோ எழுத எண்ணி எப்படியோ முடித்திருக்கிறேன். அப்படியானால் எண்ணத்திலிருப்பதை எழுத்திற்கும், எழுத்திலிருப்பதை ஒளிக்கும் கொண்டு வருவது எவ்வளவு கடினமான விஷயம்!.

2. 47 நாட்கள் திரைப் படத்தைப் பற்றிக் கூறியதற்காக மதுவிற்கும் கார்த்திக்கிற்கும் நன்றி :)

Sunday, October 25, 2009

Good insight into Taliban

David Rohde - 7 மாதம் 10 நாட்களுக்குப் பிறகு தலிபானிடமிருந்து தப்பி வந்த NewYorkTimes பத்திரிக்கையாளர்.

அவருடைய பதிவைக் காண இங்கே சொடுக்கவும். பின்வரும் பதிவு அவருடைய பதிவின் சுருக்கமே. அவருடைய பதிவைப் படிப்பதாக இருந்தால் இப்பதிவை அவருடையப் பதிவைப் படித்த பின் படிப்பது நலம். ஏனெனில் அவருடைய பதிவு பல திருப்பங்களை கொண்டது. பின் வருவனவற்றைப் படித்த பின் அவருடைய பதிவைப் படித்தால் சுவாரசியம் இருக்காது !

சரி அவருடையப் பதிவின் சுருக்கத்தைக் காண்போம்.

கடந்த 2008 Nov 10 ஆம் தேதி அவர் ஒரு தலிபான் தலைவரை(Abu Tayeb) பேட்டி காணச் செல்லும் வழியில் கடத்தப்பட்டார் . அவருடன் அந்தப் பேட்டிக்கு ஏற்பாடு செய்த ஒரு ஆப்கானிஸ்தான் செய்தியாளர் Tahir Luddin ம், அவர்களுடைய ஊர்தி ஓட்டுனர் Asad Mangal ம் கடத்தப்பட்டனர். அவர்களைக் கடத்தியவன் தன்னை Mullah Atiqullah என்று அறிமுகப்படுத்திக்கொண்டான்். பின்னர் அவர்கள் பாகிஸ்தானுக்கு கொண்டு செல்லப்பட்டனர். பாகிஸ்தானில் அவர்கள் தலிபானின் strong hold ஆன Waziristan பகுதியில் அடைத்துவைக்கப்பட்டனர். பிணையத்தொகையாக பல மில்லியன் டாலர்களும் , தலிபான் கைதிகளும் கேட்கப்பட்டனர். சிறிது நாட்களுக்குப் பிறகே David Rohde க்குத் தெரியவந்தது , Mullah Atiqullah வேறு யாருமல்ல , Abu Tayeb தான். அதாவது David, தான் யாரைப் பேட்டி காணச் சென்றாரோ, அவனாலே கடத்தப்பட்டார். David, வாஜிரிச்டனில் ஒன்பது இடங்களுக்கு இடம் மாற்றப்பட்டார்.

இந்தப் பல மாதங்களில் அபு தயெப், டேவிட்டிடம் பேச்சுவார்த்தை முடிவில் இருப்பதாகவும், நீ விரைவில் ஊர் திரும்புவாய் என்றும் கூறி வந்திருக்கிறான். ஆனால் டேவிட் அவற்றை நம்புவதாக இல்லை. ஏனெனில் அபு தயெப், பேச்சுவார்த்தையில் அரசாங்கம் 7m $ க்கும் மேலும் guantanamo bay இலிருந்து கைதிகளை விடுவிக்க ஒத்துக்கொண்டிருப்பதாகவும் கூறி வந்திருக்கிறார். அமெரிக்காவைப் பற்றித் தெரிந்தவர்கள் யாரும் இதை நம்ம மாட்டார்கள். ஏனெனில் அமெரிக்கா என்றுமே தீவிரவாதிகளுக்குப் பணிந்ததே இல்லை. அமெரிக்கா என்றுமே பிணைக்கைதிகளுக்காக கைதிகளை விடுவித்ததே இல்லை. அதனால் டேவிட் இதனை நம்பாதது ஆச்சரியமில்லை.மேலும் அவர் தான் அந்த அளவிற்கு தகுதி உள்ளவன் என்றும் நம்பவில்லை!.இதற்கிடையில் டேவிட் தங்கியிருந்த வீடு ஒரு தடவை அமெரிக்காவின் ஆளில்லா விமானத் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளது. அதிலிருந்தும் அவர் தப்பித்துள்ளார்.

இப்படியே ஏழு மாதங்கள் சென்றுள்ளது. ஒருநாள் டேவிடும் தகீரும் தப்பிக்க முடிவெடுத்து ஒரு பாகிஸ்தான் ராணுவ சோதனைச்சாவடியை அடைந்தனர். ஆசாதை, டேவிட்டும் தகீரும் நம்பவில்லை. அதனால் அவரை தனியாக விட்டு விட்டு வந்துவிட்டார்கள். டேவிட்கு பாகிஸ்தான் ராணுவ சோதனைச்சாவடிக்குச் செல்வதில் தயக்கம் இருந்தது. ஏனெனில் அவர் பாகிஸ்தான் ராணுவத்தை நம்பவில்லை. அவர்கள் தம்மை திருப்பி தலிபானிடம் ஒப்பைடைத்துவிடக் கூடும் என்று பயந்தார். இருந்தபோதிலும் வேறு வழியே இல்லாமல் பாகிஸ்தான் ராணுவ சோதனைச்சாவடியை அடைந்தார். நல்லவேளையாக அவர் பயந்தபடி எதுவும் நடக்கவில்லை. ஆசாத்தும் பத்து நாட்களுக்குப் பிறகு தப்பி வந்து விட்டார்.

அவருடையப் பதிவு தலிபானின் அன்றாட நடவடிக்கைகளை அறிய உதவியாக உள்ளது.

Saturday, October 24, 2009

ஜென் கதைகள்

ஜென் கதைகள் - எனக்குப் பிடித்தமான ஒன்று. அது உணர்த்தும் தத்துவங்கள் அருமையாக இருக்கும். கல்லூரி நாட்களில், கவிஞர் புவியரசு எழுதிய "மீண்டும் ஜென் கதைகள் " என்ற புத்தகம் வாங்கி இருந்தோம். வாங்கிய அன்றே பல பக்கங்கள் படித்து முடித்திருந்தேன். பிறகுதான் தோன்றியது, ஜென் கதைகளை நாவல்களைப் போன்று ஒரே மூச்சில் படித்து முடிக்கக் கூடாதென்று. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கதையாகப் படித்து உணரவேண்டும் என்று தோன்றியது. அதனால் அப்புத்தகத்தை அத்துடன் விட்டு விட்டேன். பிறகு அப்புத்தகம் இருப்பதே மறந்துவிட்டது. பல ஆண்டுகள் கழித்து சென்ற வாரம் அப்புத்தகத்தைக் கண்டெடுத்தேன். மீண்டும் முதலிலுருந்து படிக்க ஆரம்பித்தேன். ஜென் கதைகள் மீதான ஈர்ப்பு இன்னமும் அப்படியேதான் இருக்கிறது.

சரி புத்தகத்திற்குள் செல்வோம்.

புவியரசு அப்புத்தகத்தை ஆரம்பித்திருப்பதே அருமையாக இருக்கும்.

கடலில் வாழும் ஒருசிறிய மீனுக்கு ஒரு சந்தேகம் வரும். கடல்னா என்ன? அது எப்படி இருக்கும்? என்று. அதனால் அது ஒரு பெரிய மீனிடம் சென்று கேட்க்கும், கடல் என்றால் என்ன? அது எங்கே இருக்கும்? என்று. அதற்க்கு அந்தப் பெரிய மீன் அதுதான் உன்னைச் சூழ்ந்த்திருக்கிர்றது, அதற்குள் தான் நீ இருக்கிறாய், என்று சொல்லும் . அதற்க்கு அந்தச் சிறிய மீன், ஆனால் அது எனக்கு தெரியவில்லையே என்று கேட்கும். அதற்க்கு அந்தப் பெரிய மீன், நீ அதற்குள் இருப்பதால்தான் உனக்குத் தெரியவில்லை, நீ பிறந்ததும் இக்கடலில்தான், வாழ்ந்துகொண்டிருப்பதும் இக்கடலில்தான் , உன்னைச் சுற்றி இருப்பதும் கடல், உன்னுள் இருப்பதும் கடல் என்று சொல்லும்.

அதேபோல்தான் ஜென்னும், அது நம்மைச் சுற்றி இருப்பதாலே அது நமக்குத் தெரிவதில்லை. நாம் இயல்பாகவே ஜென்னில்தான் இருக்கிறோம். அதாவது நம் இயற்கைதான் ஜென் என்று அருமையாக ஆரம்பித்திருப்பார் .

இந்தப் புத்தகத்தில் எனக்குப் பிடித்த பிற இரண்டு விஷயங்கள், ஒவ்வொரு கதைக்கும், அக்கதைக்கு ஈடான, தமிழ் மொழியில் உள்ள தத்துவங்களை கொடுத்திருப்பார். மேலே கூறிய கதைக்கு அருமையான அருளையர் தத்துவம்.

" உள்ளும் புறம்பும் உலாவிய ஒரு பொருள் ".

மற்றொரு முக்கிய அம்சம் ஒவ்வொரு கதைக்கும் அம்சமான ஓவியங்கள். மிக அருமையாக இருக்கும் அந்த ஜப்பானிய ஓவியங்கள்.

இப்புத்தகத்தில் புவியரசு , ஜென் மிகவும் எளிமையானது. மிகவும் எளியதாக இயல்பானதாக இருப்பதாலே அது நமக்கு அரியதாக புதிரானதாகத் தோன்றுகிறது என்பார்.

ஒரு கதையில் ஒரு குருவும் சீடனும் பயணம் மேற்க்கொண்டிருப்பார்கள். அப்பொழுது அவர்கள் வழியில் ஒரு ஆறு குறுக்கிடும். ஆற்றின் கரையில் ஒரு அழகான இளம்பெண் கவலையோடு நின்று கொண்டிருப்பாள். குரு அவளை நெருங்கி ஏனம்மா கவலையோடு நின்று கொண்டுருக்கிறாய் என்பார்? அதற்க்கு அப்பெண், நான் இந்த ஆற்றைக் கடக்க வேண்டும். ஆனால் பயமாக இருக்கிறது என்பாள். உடனே குரு நான் உனக்கு உதவுகிறேன் என்று அவளைத் தூக்கிக் கொண்டு ஆற்றில் இறங்கி நடக்க ஆரம்பிப்பார். சீடனுக்கு ஒரே திகைப்பாகிவிடும். என்னடா நாம் துறவிகள் ஆயிற்றே, நாம் பெண்களை தொடக்கூடாதே, ஆனால் நம் குரு ஒரு பெண்ணைத் தொட்டு தூக்கி கொண்டு செல்கிறாரே? என்று. இருந்தாலும் பேசாமல் குருவுடன் ஆற்றைக் கடப்பான். ஆற்றின் மறு கரையில் குரு அப்பெண்ணை இறக்கி விட்டு நடந்து செல்வார். சீடனும் பேசாமல் ஆனால் இதைப் பற்றி எண்ணிக் கொண்டே பின் தொடர்வான். இருந்தாலும் பொறுக்கமாட்டாமல் அன்று சாயங்காலம் குருவிடம் கேட்டுவிடுவான், குருவே துறவிகளாகிய நாம் பெண்களைத் தொடக்கூடாதே. ஆனால் நீங்கள் இன்று ஒரு பெண்ணைத் தூக்கி கொண்டு சென்றீர்களே? அது எப்படி? என்று கேட்பான்.

அதற்க்கு அந்த குரு "நான் அவளை அப்பொழுதே இறக்கிவிட்டுவிட்டேனே!. நீ இன்னுமா சுமந்து திரிகிறாய் " என்பார்.

இக்கதைக்கு ஒரு அருமையான பாரதி பாடல்

"புறத்தே சுமக்கிறேன்; அகத்தி னுள்ளே இன்னதொரு பழங்குப்பை சுமக்கி றாய்நீ " .

மற்றொரு கதையில் ஒரு பெரிய போர் வீரர் இருப்பார். போர்களில் அவருடைய சாகசத்தைப் பாராட்டி ஒரு அழகிய கோப்பையை பரிசளித்திருப்பார்கள். அக்கோப்பையை கையில் வைத்துப் பார்த்துக் கொண்டிருப்பார். அப்பொழுது அது கை தவறி கீழே விழப் பார்க்கும். கண நேரத்தில் திகைத்து அதனைப் பிடித்து மேசை மீது வைப்பார். பார்த்தால் அதற்குள் அவருக்கு குப்பென்று வேர்த்திருக்கும். அதைப் பார்க்கையில் அவருக்கே வியப்பாக இருக்கும். என்னடா எவ்வளவு பெரிய போர்களில் எல்லாம் பயம் என்பதே அறியாமல் பல சாகசங்களைப் புரிந்திருக்கிறோம் , ஆனால் இக்கோப்பை சட்டென்று நம்மை பயம் கொள்ள வைத்துவிட்டதே என்று வியப்பார். சிறிது யோசித்த பிறகே புரியும் அந்தக் கோப்பையின் மீது வைத்தே பற்றே தன்னைப் பயம் கொள்ளச் செய்தது என்று. உடனே அக்கோப்பையை தூக்கிப் போட்டு உடைத்து அமைதி கொள்வார்.

இதற்க்கு ஒரு குறள்,

அஞ்சுவ தோறும் அறனே ஒருவனை
வஞ்சிப்ப தோறும் அவா.

மற்றொரு கதையில் ஒரு செல்வந்தர், ஒரு ஜென் ஞானியைச் சந்தித்து நல் மொழி கேட்பார். அதற்க்கு அஞ்ஞானி

"தந்தை இறப்பார்
மகன் இறப்பான்
அப்புறம்
பேரன் இறப்பான் " என்பார்.

செல்வந்தர் திடுக்கிட்டு, என்ன ஞானி அவர்களே இவ்வளவு அமங்கலமாக கூறுகிறீர்கள் என்பார்.

ஞானி சிரித்துக் கொண்டு, தந்தை, மகன், பேரன் என்ற வரிசைக்கிரகமாக முதுமை அடைந்த பின் மரணம் நிகழ்வது புனிதமான மகிழ்ச்சியானது அல்லவா? என்பார்.

எவ்வளவு அருமையான மொழிகள்.

Sunday, October 18, 2009

புலி



புலி, இந்தியாவின் தேசிய விலங்கு. புலியின் கம்பீரமே மிக அருமையாக இருக்கும். சொல்லப் போனால் புலிதான் உண்மையான காட்டு ராஜா. ஒரு புலிக்கும் சிங்கத்துக்கும் சண்டை வைத்தால் பெரும்பாலும் புலிதான் ஜெயிக்கும் . சிங்கத்தின் கர்ஜனைக்காகவே சிங்கம் காட்டு ராஜாவாக உள்ளது!.

உலகிலேயே புலிகள் அதிகமாக இருக்கும் நாடு இந்தியா தான். இதற்க்கு நாம் இந்திரா காந்திக்கே நன்றி சொல்ல வேண்டும். 1972 ஆம் ஆண்டு அவர் கொண்டு வந்த "Project Tiger" திட்டமே புலிகளை அழிவின் விளிம்பிலிருந்து காப்பாற்றியது . தற்போது இந்தியாவில் 1411 புலிகள் உள்ளன. இது இதற்க்கு முன்பு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் எண்ணிக்கையைவிட மிகக் குறைவு தான். சென்ற கணக்கெடுப்பின்போது 3000 திற்கும் மேற்ப்பட்ட புலிகள் இருந்தன. இதற்க்கு முக்கியக் காரணம் தற்போதைய கணக்கெடுப்பு சென்ற கணக்கெடுப்பைவிட மேம்பட்ட அறிவியல் முறைப்படி எடுக்கப்பட்டது. அதனால் உண்மையான எண்ணிக்கை தெரிய வந்துள்ளது. மேலும் சென்ற கணக்கெடுப்புகளின் போது அதிகாரிகள் தங்கள் வேலையைக் காப்பாற்றிக்கொள்ள புலிகளின் உண்மையான எண்ணிக்கையைவிட அதிகமாகக் காட்டினார்கள் என்ற குற்றச்சாட்டும் உள்ளது. இப்புலிகளில் பெரும்பாலானவை இந்தியாவின் மேற்கு தொடர்ச்சி மலைதொடரிலும், இந்தியாவின் மத்திய மாநிலங்களில் உள்ள காடுகளிலும், சுந்தரவனக் காட்டிலும் மற்றும் வட கிழக்கு
மாநிலங்களிலும் காணப்படுகின்றன.

இந்தியாவிற்கு அடுத்து புலிகள் அதிகமாக காடுகளில் இருப்பது நேபாளிலும், பங்களாதேசிலும்தான். அதுவும் சில நூறு புலிகளே.

உலகிலேயே புலிகள் அதிகமாக இருக்கும் நாடு இந்தியா என்பது, காடுகளில் இருக்கும் புலிகளின் எண்ணிகையை குறிப்பிடும்போது மட்டும் தான். உண்மையில் புலிகள் அதிகமாக இருக்கும் நாடு அமெரிக்கா. அங்கிருக்கும் புலிகள் அனைத்தும் தனியார் வசமும் மற்றும் Zoo க்களிலும் உள்ளன. அமெரிக்காவில் கிட்டத்தட்ட 12000 மேற்ப்பட்ட புலிகள் உள்ளன. ஆனால் காடுகளில் ஒரு புலி கூட கிடையாது. அதனால் தான் இந்தியாவிற்கு இத்தகையப் பெருமை.

அமெரிக்காவிற்கு அடுத்து புலிகள் அதிகமாக இருக்கும் நாடு சீனா. சீனாவில் புலிகள் Tiger Farm களில் வைத்து வளர்க்கப்படுகின்றன. சீனாவில் புலிகளின் உறுப்புகள் குறிப்பாக எலும்புகள் மருந்துகள் தயாரிக்கப் பயன்படுகின்றன. அதற்குத் தான் இத்தகைய "Tiger Farms". ஆனாலும் சீனா 1993 ஆம் ஆண்டிலிருந்து புலிகளின் உறுப்புகளைப் பயன்படுத்துவதை தடை விதித்துவிட்டது . இருந்தாலும் இத்தகைய "Tiger Farms" இல் புலிகள் வளர்க்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன . இந்த "Tiger Farm" களில் இறக்கும் புலிகளின் உறுப்புகள் சேகரிப்படுகின்றன. சீனாவில் தற்போது இருக்கும் புலிகளின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 5000. அவற்றில் பெரும்பாலனவை இத்தகைய "Tiger Farm" களில் தான் உள்ளன. சில புலிகள் சீனக் காடுகளிலும் உள்ளன. இவ்வாறாக "Tiger Farm" களில் சேகரிக்கப்படும் புலி உறுப்புகளின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டதால், அவற்றையாவது பயன்படுத்தத் தடையை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை சீனாவில் வலுப்பெறுகிறது. இருந்தாலும் அத்தடையை நீக்கக் கூடாது என்று எதிர்ப்புக்குரல் உலகம் முழுவதிலிருந்தும் வலுக்கிறது . இந்தியாவும் தடையை நீக்கக் கூடாது என கோரிக்கை விடுத்துள்ளது. ஏனெனில் அத்தடையை நீக்கினால் இந்தியாவில் புலிகளை வேட்டையாடுதல் அதிகரித்துவிடும்.

இந்தியாவிலும் புலிகள் ஒன்றும் அவ்வளவு பாதுகாப்பாக இல்லை. பன்னா மற்றும் சரிஸ்கா உயிரியல் பூங்காக்களில தற்போது ஒரு புலியைக்கூடக் காண முடிவதில்லை. பெரும்பாலும் வேட்டையாடுதலே அதற்குக் காரணம். அதற்க்கு அதிகாரிகளை மட்டுமே குறை சொல்லிப் பயன் இல்லை. ஏனென்றால் அவர்களுக்குக் கொடுக்கப்படும் ஆயுதங்கள் வேட்டைகாரர்களுடன் சண்டையிடுவதற்கு தகுந்த வகையில் இல்லை. மேலும் வனத் துறையில் உள்ள படையின் எண்ணிக்கையும் மிகவும் குறைவு. இவ்வாறாக பல மாநிலங்களில் புலிகளின் எண்ணிக்கை குறைந்த போதும் தமிழ்நாட்டில் மட்டும் அவற்றின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது நமக்குப் பெருமை தான் !

பல வன உயிரினக்காப்பகங்களிளுருந்து புலிகள் முற்றிலும் காணமல் போனது இந்திய அரசின் கவனத்தைக் கவர்ந்துள்ளது. அதனால் "Project Tiger" க்கு மத்திய அரசு அதிக நிதியை ஒதுக்கி உள்ளது. இருந்த போதிலும் அந்த நிதி ஒழுங்கான முறையில் பயன்படுத்தவேண்டும்.

நம்முடைய சந்ததிகள் புலிகளை படத்தில் மட்டுமே பார்க்கும் நிலைமையை ஏற்ப்படுத்தினால் வருங்காலம் நம்மை மன்னிக்காது.

Saturday, October 17, 2009

தெரிந்ததைச் சொல்கிறேன்

1.பொதுவாக நம் ஊரில் இலவசமாக கிடைப்பதை ஒசியில்் கிடைப்பது என்பார்கள். ஒசி் என்பது தமிழ் வர்ர்த்தை அல்ல . பிரிட்டிஷ் காலத்தில், அரசாங்கத் தபால்களுக்குத் தபால் தலை ஓட்டவேண்டியதில்லை. அவற்றின் மேல் "On Company Service" என்று முத்திரை இடப்பட்டிருக்கும். அவற்றை சுருக்கமாக OC யில் செல்வது என்பார்கள். அதிலிருந்து இலவசமாக கிடைப்பதற்க்கு ஒசி என்று பெயர் வந்து விட்டது.

2.நம் ஊரில் பொதுவாக வழக்கில் இருக்கும் சொல் எம்ப்டன் கப்பல். நீ பெரிய எம்ப்டன் கப்பலா என்பார்கள்?. எம்ப்டன் கப்பல் ஒரு ஜெர்மானியக் கப்பல். முதலாம் உலகப் போரின் போது அக்கப்பல் சென்னைக்கு வந்து சென்னை உயர்நீதிமன்றத்தின் மீதும், ஜார்ஜ் கோட்டையின் மீதும் குண்டு வீசிவிட்டு பிரிட்டிஷ் கப்பல்களிடம் அகப்படாமல் தப்பித்துச் சென்று விட்டது.இன்றும் கூட அக்கப்பல் குண்டு வீசியதால் ஏற்ப்பட்ட இடிபாடுகளை சென்னைத் உயர்நீதிமன்றத்தில் நீங்கள் காணலாம். அதிலிருந்து அசாதாரணச் செயல்களைச் செய்வபர்களைக் குறிப்பிட எம்ப்டன் கப்பல் என்ற சொல் வழக்கில் வந்தது.

Friday, October 16, 2009

சிரிக்கிறேன், அனைவரும் ஒன்று போல் இருப்பதை எண்ணி!

பொதுவாக எனக்கு தமிழ் உச்சரிப்புகள் சிறப்பாக வரவில்லை. குறிப்பாக ர,ற மற்றும் ல,ள,ழ மற்றும் ந,ன,ண க்குரிய வேறுபாடுகள் ஒன்றும் தெரியவில்லை. தவறாகவே உச்சரிக்கிறேன். தமிழ் இலக்கியங்கள், எடுத்துக்காட்டாக கலிங்கத்துப் பரணி, திருக்குறள், புநானூறு ( இவையே இப்போதைக்கு என்னிடம் உள்ள இலக்கியப் புத்தகங்கள். அகநானூரைப் படிக்க வேண்டும் என்ற ஆசைதான்!, ஆனால் புத்தகம் கிடைக்கவில்லை. பரவாயில்லை இப்போதைக்கு காமத்துப்பால் போதும் ;) ) ஐப் படிக்கும் போது தமிழ் அமுதின் சுவையை முழுவதுமாக உணர முடியவில்லை.ஒரு தமிழனாக இருந்து கொண்டு எனக்கு தமிழே சரியாகத் தெரியவில்லை என்று எண்ணும் போது சற்று அவமானமாகத்தான் உள்ளது.

தமிழின் சிறப்பே ர,ற மற்றும் ல,ள,ழ மற்றும் ந,ன,ண க்குரிய வேறுபாடுகள்தான். அதனால் ஒரு நல்ல தமிழாசிரியரிடம் தமிழ் கற்றுக்கொள்ளலாம் என்று, என் நண்பர்களிடம் விசாரித்தேன், உடனே அவர்கள் அனைவரும் சிரித்தனர், இவ்வளவு நாள் கழித்து நீ தமிழ் கற்றுக்கொள்ளப் போய்கிறாயா என்று. பெரும்பாலானோர் இந்த எழுத்துக்களிடையே உள்ள வேறுபாடு தெரியாமல் தான் இருக்கிறார்கள், பின் நீ மட்டும் ஏன் வேறுபடுகிறாய் என்று சிரித்தார்கள். நானும் அவர்களைப் பார்த்து சிரித்தேன், அவர்கள் அனைவரும் ஒன்று போல் இருப்பதை எண்ணி!

Thursday, October 15, 2009

Wildebeest

Wildebeest, one of the animal you can see most in any episodes about Lion,Cheetah,Hyena,Leopards in Animal Planet channel. Because they are huge in number (around 1.4 million in Serengeti national park and Masai Mara game park itself). Wildebeest, one of my favorite animal but not for very right reason, If you watch Wildebeest in Animal planet, definitely you can see a chase by the Lion or Cheetah or Hyena or even by wild dogs in that episode! ;) .

I like chasing esp by the Cheetahs. Did you watch ever cheetahs chase in slow motion? in many directions? . Wow that would be great. k leave that.

now back to wildebeest.

Wildebeest are antelopes not bovine. Their great migration is one of the world's top ten natural wonder. Great migration occur every year between Serengeti National park and Masai Mara game park in October and return in April and May. That is one of the greatest wonder. In that migration around 2 million mammals participate. Among them 1.4 m are Wildebeest, 3-4 lakhs Thompson Gazelle and around 2 lakh Zebras. In that migration they cross Mara river.



In the migration every year around 2.5 lakhs Wildebeest alone die. Mostly by drowning in the river or by hunting by carnivores. In the land they are attacked by Lion,Hyena,Cheetah,Leopard. In the river attacked by the crocodiles. Crossing Mara river is the most important and most dangerous one because hungry crocodiles are waiting for them. They are migrating for fresh pasture.

Wildebeest ensures that carnivores get food. In Feb-March alone 5 lakh new wildebeest born. So, when you get chance to visit Tanzania or Kenya, don't forget to visit Serengeti or Masai Mara to watch great migration.

India's relationship with S.America

Yesterday India inks nuclear pact with Argentina. This is the seventh country India to do so after United States, France, Russia, Kazakhstan, Namibia and Mongolia. This is the right move and right time to be close with resourceful S.America. We need many more such nuclear deals to cope up with our energy needs. That is very important for our economic growth. To be close with S.America also very important. Because that is very resourceful continent.

Ecuador and Venezuela are in OPEC. But how much India will be close with Venezuela is an important question. Because that (closeness) may anger U.S (Note that once Venezuelan president Hugo Chavez called Bush is a devil in UN!). Brazil is an another resourceful country in that continent. India and Brazil are part of BRIC. Thats why i keep on insisting that BRIC is very important. That has to grow like ASEAN,SCO.

In future Brazil may become a major oil producer and exporter as it had made major oil discoveries. Significant amount of the Brazil energy needs are satisfied by renewable energies and ethanol. Brazil is a leading country in the world using ethanol as an energy. In future we have to adopt for Bio-Energy like ethanol. Then only we can satisfy our surging energy needs.

Let our neighboring big friend to say like "(India) befriend the far and attack the near", but we need more friends culturally,economically and politically including friendly relationship with our neighboring big brother.

Wednesday, October 14, 2009

அளவுக்கு அதிகமான அங்கீகாரங்களும்,புறக்கணிப்புகளும் !

எனக்கு ஒரு விஷயம் புரியவே இல்லை. ஒரு வெளிநாடு வாழ் இந்தியர் (1*) ஏதேனும் ஒரு விருதைப் பெற்றால் இந்தியர்களும் இந்திய ஊடகங்களும் அவர்களுக்கு அளவுக்கு மீறி முக்கியத்துவம் கொடுப்பது. அதில் ஒரு latest entry Mr. வெங்கி ராமகிருஷ்ணன். நாம் ஒன்றைப் புரிந்துகொள்ள மறுக்கிறோம் அல்லது மறந்து விடுகிறோம். அவர்கள் இந்தியக் குடியுரிமை வேண்டாம் என்று சென்று விட்டவர்கள். அவர்களை போன்ற பெரும்பாலோனோர் தாங்கள் இந்தியர்கள் என்று சொல்லிக்கொள்வதைக் கூட விரும்பாதவர்கள் போன்றேத் தோன்றுகிறார்கள்.

“All sorts of people from India have been writing to me, clogging up my email box. It takes me an hour or two to just remove their mails,”
என்கிறார் வெங்கி. இருந்தாலும் நம் மக்கள் விடுவதாக இல்லை, அவரைப் பாராட்டி மெயிலா அனுப்பித் தள்ளுகிறார்கள். இதே போன்று மெயில்களை அவருடன் சேர்ந்து நோபெல் விருது பெற்ற மற்ற இருவருக்கும் அனுப்பினார்களா என்று எனக்குத் தெரியவில்லை !. எனக்குத் தெரிந்த வரையில் அவர் இந்தியாவில் பிறந்தவர். அதைத் தவிர எனக்குத் தெரிந்து அவருக்கும் நமக்கும் வேறு எந்தத் தொடர்பும் இல்லை, அவர் கூறியதை போல நாம் அனைவரும் மனிதர்கள் என்பதைத் தவிர!

இதே போன்று கல்பனாச் சாவ்லா இறந்த போது இந்தியா முழுவதும் துக்கம் கொண்டாடியது. அவருடைய இறப்பு மனிதர்கள் என்ற அளவில் அனைவருக்கும் வருத்தம் அளிக்கக் கூடியதே. நாம் நிச்சயம் துக்கம் அனுஷ்டிக்க வேண்டியதுதான், அவரும் ஒரு மனிதர் என்ற அளவில்!. ஆனால் நாம் அதற்க்கும் மேலாகச் சென்று. பல மாநிலங்கள் அவருக்கு இழப்பீடுகளையும், ஏன் தமிழக அரசு அவர் பெயரில் ஒரு விருதே அறிவித்தது!. இறந்து போனவர்களை பற்றிப் பேசக்கூடாதுதான், இருந்தாலும் எனக்கு இவ்விசயங்கள் சற்று அதிகமாகவேப்பட்டது.

இவ்வளவு செய்யும் நாம் ஒன்றை மறந்து விடுகிறோம், இன்னமும் எத்தனையோ நூற்றுக்கணக்கான இந்திய விஞ்ஞானிகள், பல வெளிநாட்டு வாய்ப்புகளை மறுத்துவிட்டு ISRO விலும், DRDO விலும் இன்னும் பல ஆராய்ச்சி நிறுவனங்களிலும், இந்தியாவிற்காக உழைத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

இத்தகைய விஞ்ஞானிகள் வெங்கி ராமகிருஷ்ணனோ அல்லது கல்பனா சாவ்லாவோ பெற்ற அங்கீகாரத்தில் நூற்றில் ஒரு பங்காவது பெற்றிருப்பார்களா என்பது சந்தேகமே!

புறக்கணிப்புகள் மட்டுமல்ல, அளவுக்கு அதிகமான அங்கீகாரங்களும் புறக்கணிப்புகள் ஏற்ப்படுத்தும் அதே விளைவுகளை ஏற்ப்படுத்திவிடும்!

P.S:

1.வெளிநாடு வாழ் இந்தியர் என்ற வார்த்தையிலேயே எனக்கு மாற்றுக் கருத்து உண்டு. அவர்கள் இந்தியர்களே அல்ல. அவர்களோ அல்லது அவர்களின் முன்னோர்களோ இந்தியாவில் பிறந்தவர்கள், அவ்வளவே!. இந்தியா வேண்டாம் என்று வேற்று நாட்டுக் குடியுரிமைப் பெற்ற பின் எப்படி , அவர்கள் இந்தியர்கள் ஆவார்கள்?

மொழி பெயர்ப்பு

ஒரு மொழிக்கு வளமைச் சேர்ப்பது, அம்மொழியிலேயே சிந்தித்து, அம்மொழியிலேயே எழுதப்படும் நூல்கள் மட்டுமே அல்ல, பிற மொழி நூல்களை ஒரு மொழியானது தன்பால் எப்படி ஏற்றுக்கொள்கிறது என்பதைப் பொருத்தும் அமைகிறது. ஒரு சிறந்த மொழியானது பிற மொழி நூல்களை, அந்நூல்களுக்கான கருவிற்கு எந்த வித சேதாரமும் இல்லாமல், அதன் கருத்துக்களை தன்பால், பாலுடன் நீர் கலப்பதைப் போல ஏற்றுக்கொள்ளவேண்டும். இது ஒரு மொழியின் வளமையைப் பொறுத்து மட்டுமே அமைவது அல்ல, அது மொழி பெயர்ப்பாளரையும் சார்ந்தது.

மொழி பெயர்ப்பு என்பது ஒரு விஷயத்தை ஒரு மொழியிலிருந்து பிரதி எடுத்து கொண்டுபோய் பிறிதொரு மொழியில் வைப்பதல்ல. மொழி பெயர்ப்பு என்பது மிகச் சிறந்த கலை. அது எல்லாருக்கும் வாய்ப்பதில்லை. ஏனெனில் அதற்க்கு அந்நூல் எழுதப்பட்ட மொழியிலும், அந்நூல் மொழிப் பெயர்க்கப்படும் மொழியிலும் ஒருவர் புலமை பெற்றிருக்கவேண்டும். இவ்வாறாகா இரண்டு மொழியிலும் புலமை பெற்றிருப்பதன் காரணமாகவே ஒருவர் மிகச் சிறந்த மொழி பெயர்ப்பாளராக ஆகிவிடமுடியாது. எடுத்துக்காட்டாக ஒரு மொழியில் இருக்கும், இரு மொழி புலமை வாய்ந்த ஒரு மிகச் சிறந்த எழுத்தாளர் நிச்சயமாக ஒரு சிறந்த மொழி பெயர்ப்பாளராக இருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. அக்கலை மிகச்சிலருக்கே வாய்த்திருக்கிறது .

பொதுவாக எனக்கு மொழி பெயர்ப்பு நூல்களைப் படிப்பதில் ஈடுபாடு அதிகம். ஏனெனில் அதன் மூலம் நாம் ஒரு புது கலாச்சாரத்தை, புது கருத்துக்களை, புது அறிவைப் பெற முடியும். ஆனால் துரதிஷ்டவசமாக மிகச் சில (எனக்குத் தெரிந்த அளவில் :) ) மொழி பெயர்ப்பு நூல்களே சிறந்த நூல்களாக அமைகின்றன. மொழி பெயர்ப்பு நூல்களில் அமைந்த்துவிடும் மிக முக்கியமானதும், ஏன் அதன் அடிப்படையையே குழைத்துவிடுவதுமானதுமான மிகப் பெரியத் தவறு வரிக்கு வரி, ஏன் சில நேரங்களில் வார்த்தைக்கு வார்த்தை அமைந்துவிடும் மொழிபெயர்ப்பு. மேலும் மொழி பெயர்க்கும் போது அந்நூலின் பின்புலத்தையும், அந்நூல் நடக்கும் களத்தையும், காலத்தையும் பற்றிச் சிறு குறிப்பாவது சேர்த்துக் கொடுக்கவேண்டியது மிக அவசியம். இது படிக்கும் வாசகனுக்கு அந்நூலைப் புரிந்துகொள்ள உதவும். இதைவிட மிக அவசியம் இந்நூல் எத்தகைய வாசகர்களுக்கானது என்றத் தெளிவு!

நான் படித்த மொழி பெயர்ப்பு நூல்களில் ஒன்று ரஷ்ய மொழியிலிருந்து தமிழ் மொழிக்கு மொழி பெயர்க்கப்பட்ட "சகாப்தம் படைத்த ஸ்டாலின்கிராட்" (1*) என்னும் நூல். அந்நாட்களில் ரஷ்ய மொழியிலிருந்து பல இந்திய மொழிகளுக்கு பல நூல்கள் மொழி பெயர்க்கப்பட்டன. அத்தகைய நூல்களில் ஒன்று இந்நூல். இந்நூல், இந்நூலின் ஆசிரியர் சோவியத் யூனியனின் மார்ஷலாக இருந்த வசீலி சுய்க்கோய் எழுதிய ஒரு வரலாற்றுச் சுயசரிதைக் குறிப்பு எனலாம். இந்நூலில் ஆசிரியர் இரண்டாம் உலகப் போரில் ஸ்டாலின்கிராட் நகரை எதிரிகளிடம் (நாஜிக்கள்) இருந்து காப்பாற்றப் போராடியதையும், அதில் வெற்றிப் பெற்றதையும் பற்றிக் குறிப்பிடுகிறார். ஸ்டாலின்கிராட் நகரத் தோல்வியிலிருந்தே ஜெர்மனியின் தோல்வி ஆரம்பம் ஆகிறது. 500 பக்கங்களுக்கு மேல் கொண்ட இந்த நூலை மொழி பெயர்த்தவர் Dr.R.பாஸ்கர். வரலாற்று நூல்களை குறிப்பாக போர் சம்பந்தமான நூல்களை எனக்கு மிகவும் பிடிக்கும் என்ற போதிலும், இந்நூல் பெரிதாக என்னைப் கவரவில்லை. அதற்குக் காரணம் இந்நூல் படைபிரிவுகளைப் பற்றியும், அதன் தொழில்நுட்ப விசயங்களைப் பற்றியும் அளவுக்கு அதிகமாக விவாதித்தது. அதற்க்கு இந்நூலின் ஆசிரியர் ராணுவ மார்சலாக இருந்தது ஒரு காரணமாக இருக்கலாம். மேலும் இந்நூல் ஸ்டாலின்கிராட் வீதிகளில் நடக்கும் போரைப்பற்றியும் அதிகமாக விவாதித்தது. இந்நூல் ஸ்டாலின்கிராட் நகரைப் பற்றி அறிந்த ஒரு ராணுவ வீரருக்கு ஒரு சிறந்த நூலாக இருக்கலாம். ஆனால் என்னைப் போன்ற ஸ்டாலின்கிராட் நகரின் வீதிகளைப் பற்றித் தெரியாத ஒரு சாதாரண வாசகனைக் கவராதது ஆச்சரியம் இல்லை!. மிகக் குறைந்த பட்சம் இந்நூலை மொழி பெயர்த்த ஆசிரியர் ஸ்டாலின்கிராட் நகரின் வீதிகளின் வரை படத்தையும், ஒரு சாதாரண வாசகனுக்கு அதிகப்படியானது என்று தோன்றக்கூடிய விசயங்களைத் தவிர்த்திருந்த்தும் கொடுத்திருந்தால், இந்நூல் தமிழில் ஒரு மிக நல்ல வரலாற்று நூலாக அமைந்திருக்கும்.

ஒரு நூலை மொழி பெயர்க்கும் போது வரிக்கு வரி மொழி பெயர்க்காமல், அது சொல்ல வரும் கருத்துக்களை உள்ளூர உணர்ந்து பின் அதனை மொழி பெயர்த்தால் மிக நன்றாக அமையும். எனக்குத் தெரிந்த வகையில் மொழி பெயர்ப்பு நூல்களில் மிகச் சிறப்பாக அமைந்தது "யயாதி". இது ஒரு புராண நூல். இதன் ஆசிரியர் வி.ஸ.காண்டேகர். யயாதி என்பவன் நகுச மன்னனின் மகன். இவனுடைய மனைவியர் , அசுரர்களின் குரு சுக்கிராச்சாரியார் மகள் தேவயானி மற்றும் அசுர மன்னனின் மகள் சர்மிஷ்டை(2*). இது ஒரு புராண நூல் என்பதற்கு மேலாக எனக்கு அது ஒரு தத்துவ நூலாகவேப்பட்டது. நான் இப்படி கூறுவதற்கு மிகச் சிறந்த உதாரணம் சர்மிஷ்டைக்கு, கசன் எழுதிய வாழ்கையைப் பற்றியக் கடிதம். அக்கடிதத்தில் அவ்வளவு தத்துவங்கள் பொதிந்திருக்கும். பொதுவாக மொழி பெயர்ப்பு நூல்களிலேயே மிகக் கடினமானது தத்துவ நூல்களை மொழி பெயர்ப்பதே. இதில் வரிக்கு வரி, ஏன் சொல்லப் போனால் வார்த்தைக்கு வார்த்தை மொழி பெயர்த்துவிடும் அபாயம் உண்டு. அதையும் தாண்டி இந்நூலை அவ்வளவு அழகாக மொழி பெயர்த்திருப்பர் கா.ஸ்ரீ.ஸ்ரீ . இந்நூல் படிக்கும்பொழுது ஒரு மொழி பெயர்ப்பு நூல் போன்றே தெரியாது. ஏதோ தமிழிலேயே முதன் முதலாக எழுதியது போலவேத் தோன்றும். எனக்குத் தோன்றிய வரையில் மொழி பெயர்ப்பாசிரியர்,
இந்நூலின் மூல நூலை முழுவதுமாகப் படித்துணர்ந்து, பின் அதன் கருத்துக்களை மட்டுமே கொண்டுத் தானே, புதிதாகத் தமிழில் எழுதியிருந்த்திருப்பார். அவ்வளவு அருமையாக இருக்கும் இந்நூல்.

இதே மொழி பெயர்ப்பு விதிகள் மொழி மாற்றுத் திரைப்படங்கள், நாடகங்களுக்கும் பொருந்தும் (Here i am speaking about dubbing not remaking!). திரைப்படங்கள் மற்றும் நாடகங்கள் என்று வரும்போது, இன்னொரு கஷ்டம் கூடவே சேரும், உதட்டசைவிர்க்கேற்ப்ப வார்த்தைகளைத் தேர்ந்தெடுப்பது!. அதுவும் பாடல் காட்ச்சிகள் என்றால் அது அதை விடக் கஷ்டம். எனக்குத் தெரிந்த வரையில் தமிழில் வந்த மொழி பெயர்ப்புத் திரைப்படங்களிலாகட்டும், நாடகங்களிலாகட்டும் மிக மோசமானது, தூர்தர்சனில் ஒளிபரப்பான ஜுனூன் தொடரே. அதில் வார்த்தைக்கு வார்த்தை மொழி பெயர்த்திருப்பார்கள். அவ்வளவு மோசமாக இருக்கும்.

இது போல் அல்லாமல் மொழிமாற்றுத் திரைப்படங்களிலேயே மிகச் சிறப்பாக அமைந்த திரைப்படங்களும் உண்டு. ஒரு பேட்டியின் போது யாரோ ஒருவர் "சலங்கை ஒலி " த் திரைப்படம் ஒரு மொழி மாற்றுத் திரைப்படம் என்றுக் கூறினார். எனக்கு அவர் கூறும் வரை அத்திரைப்படம் ஒரு மொழி மாற்றுத் திரைப்படம் என்றே தெரியாது. இத்தனைக்கும் அத்திரைப்படத்தில் பாடல்கள் அனைத்தும் அவ்வளவு அருமையாக இருக்கும்.

படிக்கும் வாசகனுக்கோ அல்லது பார்க்கும் ரசிகனுக்கோ, இது ஒரு மொழி பெயர்ப்புப் படைப்பு என்றுச் சொல்லும் வரைத் தெரியக் கூடாது. அதுவே மொழி பெயர்ப்பின் வெற்றி!

P.S:

1. அந்நாட்களில் இந்திய, ரஷ்ய நாடுகளுக்கிடையே கலாச்சார ஒற்றுமையை ஏற்ப்படுத்த பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அவற்றுள் ஒன்று இந்திய, ரஷ்ய மொழி நூல்களை ஒரு மொழியிலிருந்து மற்ற மொழிகளுக்கு மொழி பெயர்ப்பது. மேலும் அந்நூல்கள் இலவசம் என்று கூறத்தக்க வகையில் மிகக் குறைந்த விலையில் இந்தியாவில் விற்கப்பட்டன. இந்நூல்கள் ரஷ்யாவிலேயே அச்சிடப்பட்டு இந்தியாவிற்கு கொண்டுவரப்பட்டன.

2. சர்மிஷ்டை கதாப்பாத்திரம் மிகச் சிறப்பாக இருக்கும். எனக்கு ஏதோ அந்தக் கதாப்பாத்திரத்தின் மீது ஒரு ஈர்ப்பு இருந்தது, ஏன் "சர்மிஷ்டை" என்ற பெயரின் ஒலியிலேயே ஒர் ஈர்ப்பு இருந்ததைப் போன்று எனக்கு ஒருத் தோற்றம் . யயாதி நூலில் தேவயானியின் கதாப்பாத்திரம் ஒரு வில்லி போன்றும், சர்மிஷ்டையின் கதாப்பாத்திரம் ஒரு பொறுமையான, அழகான பெண்ணின் கதாப்பத்திரமாகவும் அமைந்த்திருக்கும்.