Showing posts with label தோன்றியது. Show all posts
Showing posts with label தோன்றியது. Show all posts

Saturday, September 7, 2013

உலகமயமாக்கலிலிருந்து உள்ளூர்மயமாக்கல்


சற்று நாட்களுக்கு முன்பு Isle of Wight டூர் போயிருந்தோம் . அங்கு போனபிறகு, சாப்பாட்டிற்கு என்ன வழி என்று திணறியபொழுது கண்ணில் McDee பட்டபிறகுதான் அனைவருக்கும் நிம்மதி. எப்படியும் ரெண்டு நாட்களை McDee யை வைத்து ஓட்டிவிடலாம் என்று தோன்றியது. அப்புறம் சுற்றிப் பார்த்தால் எங்கும் Costa, StarBucks, McDee, Dominoz என்று எங்கும் தெரிந்த உணவுக் கடைகள். உலகமயமாக்களின் (Globalization) னின் ஆகச் சிறந்த மாற்றம் இதுதான். இன்று இந்த உலகின் எந்த மூலைக்குச் சென்றாலும் நிச்சயம் உங்கள் ஊரில் இருக்கும் அதே கடைகளை, பொருட்களை, உணவுகளை அங்கே நீங்கள் பார்க்க முடியும். அதனால் உங்களை பெரிதாக மாற்றிக்கொள்ளாமல் அல்லது மாற்றுவதற்கு அதிக கஷ்டப்படாமல் அங்கு நீங்கள் வாழ முடியும். ஆனால் எனக்கோ இதுதான் globalization னின் மிகப் மோசமான மாற்றமாகத் தோன்றுகிறது.

முன்பெல்லாம் நம்ம ஊரில் , நம்ம அம்மா அப்பா வெளியூருக்குப் போய் வந்தால் அந்த ஊரில் என்ன ஸ்பெசலோ அது நிச்சயம் வாங்கி வருவார்கள். திருநெல்வேலி அல்வா , மதுரை கலர் பூந்தி இப்படி பல. ஆனால் இப்பொழுது நீங்கள் திருநெல்வேலி போகாமலையே உங்க ஊரிலேயே திருநெல்வேலி அல்வா வாங்கிவிட முடியும். இதுதான் உலகமயமாக்கலின் மாற்றம்.

அன்னைக்கு என் friend கிட்ட பேசிகிட்டு இருக்கும்போது , நீ எனக்கு என்ன வாங்கிட்டு வருவன்னு கேட்டா, அதுக்கு நான் , 'என்ன வேணும்னு சொல்லுனு' சொன்னேன். அதுக்கு அவ 'அங்க என்ன special லோ அத வாங்கிட்டு வா' னு சொன்னா. எனக்கு என்ன வாங்கணும்னே தோணல . லண்டன்ல என்ன ஸ்பெசல்னு யோசிச்சுப் பாத்தா எனக்கு எதுவுமே தோணல . இங்க கிடைக்குற எல்லாமே அங்க கிடைக்குது . அப்புறம் என்ன ஸ்பெசல். உலகம் முழுசா கிடைக்குற திருநெல்வேலி அல்வால என்ன ஸ்பெசல் இருக்கப் போகுது.

இந்த உலகமயமாக்கலினால் அனைத்து ஊர்களும்  தங்களோட அடையாளத்தை இழந்துவிட்டதாகவே எனக்குத் தோன்றுகிறது. இப்படி திருநெல்வேலி போன்ற ஊர்கள் தங்களுடைய அடையாளங்களை ஏற்றுமதி செய்து அடையாளங்களை இழக்கும் பொழுது உலகமயமாக்கலால் இறக்குமதி செய்யப்பட்ட வெளியூர் அடையாளங்களினால் தங்களின் உள்ளூர் அடையாளங்களை தொலைத்துவிட்டு இருக்கும் ஊர்கள் ஏராளம். இந்த கலாச்சார மறத்தல் உலக அளவில் நடக்கிறது ஆனால் அது உள்ளூர் அளவில்தான் தொடங்குகிறது. என் பாட்டி காலத்தில் இருந்த பருத்திப்பாலும், பதனியும் எங்க அம்மா காலத்தில் வந்த காப்பியால் மறக்கடிக்கப்பட்டது. அந்த காப்பி இப்பொழுது என் காலத்தில் உள்ள coke ஆல் மறக்கடிக்கப்படுகிறது.

இந்த உலகில் இருந்த நூற்றுக்கணக்கான மொழிகள் ஆங்கிலம், பிரஞ்சு , ஸ்பானிஷ் , ஹிந்தி போன்ற மிக பிரபலமான மொழிகளாலும் பிரதியீடப்படுகின்றன(replace). அந்தந்த வட்டார மொழிகள் மாநில மொழிகளாலும் , மாநில மொழிகள் தேசிய மொழிகளாலும் , தேசிய மொழிகள் சர்வதேச மொழிகளாலும் பிரதியீடப்படுகின்றன. ஒரு மொழி என்பது வெறுமனே மொழி மட்டுமே அல்ல அது ஒரு இனத்தின் கலாச்சராம் , பண்பாடு , பாரம்பரியம் இப்படி பன்முகத்தன்மை கொண்ட ஒரு தகவல் களஞ்சியம் . ஒரு மொழி அழியும் போது நூற்றுக்கணக்கான வருடங்களால் ஒரு இனத்தால் அரும்பாடுபாடு சேர்க்கப்பட்ட தகவல்களும் சேர்ந்து அழிகிறது.

உடை என்று வரும்பொழுது அது உலகமயமாக்கலின் உச்சம். இன்று ஆண்களுக்கு சட்டை , பேன்ட் என்பதை தவிர வேறு உடையே உலகில் இல்லை என்று ஆகிவிட்டது. என்ன ஒரு கொடுமை. நம்ம ஊரில் ஆண்களுக்கு வேட்டி என்று இருப்பது/இருந்தது  போல உலகில் அனைத்து நாகரீகங்களும் அவர்களுக்கு என்று தனித்த பாரம்பரியம் கொண்ட உடைகளை கொண்டிருக்கின்றன . ஆனால் அவை எல்லாம் என்ன ஆனது என்றே தெரியவில்லை.

சிறிய வட்டங்கள் பெரிய வட்டங்களால் விழுங்கப்பட்டு அந்த பெரிய வட்டம் அதை விட பெரிய வட்டத்தால் விழுங்கப்பட்டு கடைசியில் ஒரே ஒரு வட்டம் மட்டுமே எஞ்சி இருப்பது போன்ற நிலைதான் உண்டாகிவிடுமோ என்று பயமாக இருக்கிறது . Atlast only one choice would be leftover for human :( . 

நான் இங்கு வணிகப் போட்டியைப் பற்றி கூறவரவில்லை. எனக்கு மக்களின் ரசனைகள் அனைத்தும் ஒரே மாதிரி ஆகிவிட்டன என்றே பயம். சிறிது நினைத்துப் பாருங்கள் உலகின் அனைத்து மக்களும் Dominoz பீசாவையோ, Indian Curry யோ மட்டுமே சாப்பிட்டுக் கொண்டு,Costa காபியையோ அல்லது Coke யோ மட்டுமே குடித்துக்கொண்டு , ஏதோ Rock இசையை மட்டுமே கேட்டுக் கொண்டு Cricket அல்லது football யோ மட்டுமே விளையாடிக் கொண்டு, ஹாலிவுட் அல்லது பாலிவுட் படங்களை மட்டுமே பார்த்துக் கொண்டு, ஐயையோ நினைத்துப் பார்க்கவே படுபயங்கரமாக இருக்கிறது . இப்படி அனைவரின் ரசனையும் ஒரே மாதிரி ஆகிவிட்டால் அவர்களின் சிந்தனைகளும் ஒரே மாதிரி ஆகிவிடும் என்றே பயமாக இருக்கிறது. சிறிது நினைத்துப் பார்த்தால் மூன்றாம் கண்ணோட்டம் (third party view) என்பதே இல்லாமல் போகிவிடுமோ என்று தோன்றுகிறது. நான் சொல்லுவது கொஞ்சம் அதிகப்படியாகவே தோன்றலாம். ஆனால் நான் சொல்லுவதற்கு கொஞ்சம் குறைந்தோ அல்லது குறைந்த வேகத்திலோ ஆனால் நான் பயப்படும் திசையில் இந்த உலகம் செல்லுவதாகவே தோன்றுகிறது. இதில் இந்த நாடு அந்த நாடு , இவர் அவர் என்றில்லை. பிறரின் எதோ ஒரு அடையாளம் நம்முடைய அடையாளத்தை அழிக்கும்போது நம்முடைய எதோ ஒரு அடையாளம் பிறரின் அடையாளத்தை அழிக்கிறது .

உலகமயமாக்கல் என்பதற்கு ஒரு காலம் உண்டானபொழுது உள்ளூர்மயமாக்கல் (localization) என்பதற்கு ஒரு காலம் வரவேண்டும். குறைந்தபட்சம் உலகமயமாக்களுக்குள் உள்ளூர்மயமாக்கல் என்பதாவது  உருவாகவேண்டும் (localization within globalization).நான், மற்ற பகுதி மக்கள் சார்ந்த விசயங்களை ஒருவர் பின்பற்றக் கூடாது என்று சொல்லவில்லை, ஆனால் நமக்கு சவுகரியமான மற்றவர்களின் விசயங்களைப் பின்பற்றும்போது நாம் சார்ந்த விசயங்களை மறந்துவிடக்கூடாது என்றே தோன்றுகிறது .

எனக்குத் தெரிந்து மற்ற உயிரினங்களைக் காட்டிலும் மனிதர்களிடையே தான் பன்முகத்தன்மை (diversity) அதிகம் என்று தோன்றுகிறது. உணவு , உடை , உறைவிடம் , பொழுதுபோக்கு , ரசனை, கலாச்சாரம், மொழி, கடவுள்(!) இப்படி தான் சார்ந்த அனைத்து விசயங்களிலும் இத்தனை வித்தியாசங்கள் கொண்ட உயிரினம் எனக்குத் தெரிந்து உலகில் இல்லை. மனித வாழ்க்கையில் சுவாரசியத்திற்கு மிக முக்கிய அடிப்படையே  இந்த பன்முகத்தன்மை தான் . மனிதன் தங்களுக்குள்ளே உள்ள வேறுபாடுகளை மறந்து வாழ வேண்டும் ஆனால் அதே சமயம் தான் கொண்ட பன்முகத்தன்மை மறைந்து விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.இல்லையென்றால் வாழ்க்கை சுவாரசியமற்றுப் போவதோடு இல்லாமல் அனைவரின் சிந்தனைகளும் ஒன்றாகி உலகில் ஒரே ஒரு கண்ணோட்டம் என்பதே உருவாகிவிடும் :( .

பின்குறிப்பு :
இங்கு கலாச்சாரம் என்று நான் கூறுவது உணவு , உடை , உறைவிடம் , பொழுதுபோக்கு இப்படி மனிதன் சார்ந்த அனைத்து விசயங்களையும் குறிக்கும் .

Image Courtesy: shutterstock.com

Saturday, August 24, 2013

Cricket - Beauty in Diversity

அன்னைக்கு espncricinfo பார்த்துகிட்டு இருந்தேன். அதோட home page ல ஒரு Test match, ஒரு ODI மற்றும் ஒரு T20 live scoring ஓடிக்கிட்டு இருந்துச்சு, அப்பதான், கிரிக்கெட் மாதிரி மூணு format கொண்ட விளையாட்டு வேறு ஏதாவது இருக்கானு தோணுச்சு.

எனக்குத் தெரிந்து ஒரே காலகட்டத்தில் ஒரே விளையாட்டில் வெவ்வேறு வகை (format) கொண்ட விளையாட்டு கிரிக்கெட் தவிர வேறு எதுவும் உலகில் இல்லை. ஐந்து நாள் ஆட்டம் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் அதற்கு முற்றிலும் மாறான 50 ஓவர் கொண்ட One Day Format அதற்கும் மாறான T20 . இதுல என்ன விசேசம்னா இவை அனைத்தும் ஒரே காலகட்டத்தில் விளையாடப்படுகின்றன.

ஒரு format இல் ஐந்து மணி நேரத்தில் யார் வெற்றியாளர் என்று தெரிந்து விடும்போது அதே விளையாட்டில் மற்றொரு  format இல் ஐந்து நாள் ஆனாலும் விடை தெரியாது. சரி போகட்டும், ஒரே format டிலும் இந்த விளையாட்டு எல்லா காலகட்டத்திலும் ஒரே மாதிரி விளையாடப்பட்டு இருந்திருக்கிறதா என்றால் அதுவும் இல்லை. இன்று ஐந்து நாள் விளையாட்டாக விளையாடப்படும் டெஸ்ட் match ஒரு காலகட்டத்தில் வெற்றியாளர் யார் என்று தெரியும் வரை விளையாடப்பட்டது. இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்காவிற்கு இடையே 1939 இல் நடைபெற்ற டெஸ்ட் match 9 நாள் நடந்தது. அப்படியும் யார் வெற்றியாளர் என்று தீர்மானிக்க முடியவில்லை. ஏனென்றால் அன்று இங்கிலாந்து அணி செல்வதற்கான கப்பலிற்கு நேரமாகியதால் அந்த போட்டி முடிவு காணாமலையே கைவிடப்பட்டது.

இதற்கு அடுத்து ஆடப்பட்ட ஒரு நாள் விளையாட்டுப் போட்டியிலும் அது ஆரம்பிக்கப்பட்ட ஆண்டிலிருந்து இன்று வரை பல மாற்றங்கள்.  முதலில் 60 ஓவர் கொண்ட விளையாட்டாக விளையாடப்பட்டது பிறகு 50 ஓவர் கொண்டதாக குறைக்கப்பட்டது.  இது போதாது என்று இதில் விறுவிறுப்பைக் கூட்ட முதல் பதினைந்து ஓவருக்கு fielding restriction கொண்டு வரப்பட்டது. பின்னர் அது இருபது ஓவராக கூட்டப்பட்டது . முதலில் முதல் இருபது ஓவருக்கு என்று இருந்தது பின்னர் அது 10, 5, 5 ஓவராக மாற்றப்பட்டது.

ஒரு நாள் போட்டியில் ஒருவர் அதிகபட்சம் 10 ஓவர் தான் போட முடியும் என்கிற போது டெஸ்ட் மாட்சில் ஒருவர் எத்தனை ஓவர் வேண்டுமானாலும் போடலாம்.

விளையாடுற பால்லே சிவப்பு பந்து , வெள்ளைப் பந்துனு ரெண்டு வகை. ஒவ்வொரு பாலும் ஒவ்வொரு மாதிரி behave பண்ணும். முதலில் ஒரு இன்னிங்சுக்கு ஒரு பந்துன்னு இருந்தது போய் இப்ப ஒரு இன்னிங்சுல ரெண்டு பந்து வச்சு விளையாடுறாங்க.

இதுக்கப்புறம் T20 வேற .

வேறு எந்த ஒரு விளையாட்டிலும் இத்தனை மாற்றங்கள் இருக்கிறதா அல்லது ஏற்பட்டிருக்கிறதா  என்று எனக்குத் தெரியவில்லை. சரி மேற்சொன்ன மாற்றங்கள் , பல்வேறு விதமான format , வெவ்வேறு விதிமுறைகள் அனைத்தும் கிரிக்கெட்டின் ஒரு அங்கம் என்று வேண்டுமானாலும் கொள்ளலாம் ஆனால் ஒரே format இல் அதுவும் ஒரே காலகட்டத்தில் வெவ்வேறு விதிமுறைகள் பின்பற்றப்படுவதை என்னவென்று சொல்ல. கிரிக்கெட்டில் பின்பற்றப்படும் DRS விதிமுறை அனைத்து நாடுகள் பங்கேற்கும் போட்டிகளிலும் பின்பற்றப்படும் ஆனால் இந்தியா விளையாடும் போட்டியில் மட்டும் பின்பற்றப்படாது. என்ன ஒரு விசித்திரம்!.

கிரிக்கெட்டே ஒரு சமநிலைத் தன்மையுடன் விளையாடப்படுகிறதா என்பதே ஒரு கேள்விக்குறிதான். பல நேரங்களில் ஐந்து நாட்கள் விளையாடப்படும் விளையாட்டின் முடிவை 5 நொடிகளில் போடப்படும் toss யே தீர்மானித்துவிடுகிறது. அன்று Cricinfo வில் கிரிக்கெட் ரசிகரான டென்னிஸ் வீரர் ஒருவர் கூறியது  ' I always like to loose toss in tennis. I don't like to waste my energy in taking useless decision. But in cricket many times the toss itself decides who is the winner even before match starts' . இந்த ஒரு கூற்றே கிரிக்கெட்,  விளையாட்டுகளின் மிக அடிப்படை விதியான ' போட்டியானது அதில் பங்கேற்கும் அனைத்து போட்டியாளர்களுக்கும் சம வாய்ப்பையும் , சம சூழ்நிலையையும் ஏற்படுத்தித் தரவேண்டும் ' என்பதையே மீறுவதை கூறும். காத்து அடிச்சா குத்தம் , மழை தூறுனா குத்தம் , வெயிலடிச்சா குத்தம் , இப்படி சூழ்நிலையில் ஏற்படும் சிறு மாற்றமே கிரிக்கெட்டில் ஒரு அணியின் வெற்றி தோல்வியையே தீர்மானித்துவிடும். Outdoor இல் விளையாடப்படும் வேறு எந்த ஒரு விளையாட்டுமே சுற்றுப்புறத்தில் ஏற்படும் சிறு மாற்றத்தாலும் இந்த அளவிற்கு பாதிக்கப்படுமா என்று தெரியவில்லை .

இப்படி ஒரே விளையாட்டில் இத்துனை முரண்பாடுகள் அல்லது வேறுபாடுகள் இருப்பதால் இந்த விளையாட்டில் ஒரு விளையாட்டு வீரரை மற்றொரு வீரருடனோ அல்லது ஒருவர் நிகழ்த்தும் சாதனையை மற்றொருவரின் சாதனையுடனோ ஒப்பிடுவது கடினம். ஒப்பிட்டாலும் அது பெரும்பாலும் அபத்தமாகவே முடியும் .

மைக்கேல் பெவன் , டான் பிராட்மான் இருவரில் எவர் சிறந்த batsman யார் என்று கேட்டால், Don't compare apple and orange என்றுதான் சொல்ல முடியும். கிரிக்கெட் தெரியாத ஒருவர், ஏன் இருவரும் வெவ்வேறு விளையாட்டைச் சேர்ந்தவர்களா? என்று கேட்டால் நிச்சயம் ஒரு கிரிக்கெட் ரசிகனுக்கு தர்ம சங்கடமான நிலைதான் தோன்றும். சிறிது நினைத்துப் பார்த்தால் கிரிக்கெட்டில் நடந்த சாதனைகள் அனைத்தும் காலத்தால் அழியாதவையே. ஏனெனில் ஒரு சாதனையை மற்றொரு சாதனையுடன் ஒப்பிடவே முடியாது அப்புறம் எப்படி அதை முறியடிப்பது. சச்சின் சதத்தை கேரி சோபர்ஸின் சதங்களுடன் ஒப்பிடவே முடியாது. ஏனெனில் இரண்டும் வெவ்வேறு விதிமுறைகள் இருந்த காலகட்டங்களில் நிகழ்த்தப்பட்டவை.

ஆனால் இத்துனை முரண்பாடுகள் அல்லது வேறுபாடுகள் இருந்தாலும் இதுதான் கிரிக்கெட்டின் அழகு. இந்தியாவைப் பற்றி நாம் Unity in Diversity என்று பெருமையாக சொல்லிக் கொள்வோமே அதுபோல, கிரிக்கெட்டை beauty in diversity னு சொல்லலாம் :) .

Tuesday, November 13, 2012

பயணம்

explore a man walking on a road in tan 235 1024x576 10 Kilimanjaro Trip Tips

இந்த உலகத்துல பயணம் செய்யாத மனிதர்களே இல்லை. ஆதி காலம் தொட்டு இன்று வரை மனிதர்கள் பயணம் பண்ணிகிட்டேதான் இருக்காங்க. பல பயணங்கள் இந்த உலகையே மாத்திருக்கு . சே குவேராவின் 9 மாத காலத்தில் அவர் பயணம் செய்த 8000 km மோட்டார் சைக்கிள் பயணம் இந்த உலகில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. மாவோவின் நெடும் பயணம்தான் இன்றைய சீனாவின் வல்லரசிற்கு காரணம். இந்த உலகில் மனிதன் தோன்றியதிலிருந்து பயணப்பட்டுகிட்டேதான் இருக்கேன். இப்ப இருக்க எல்லாரும் கூட  எப்படியும் பயணம் பண்ணத்தான் செய்றாங்க, அந்த பயணங்களில் ஒவ்வொருத்தவங்களும் எந்த அளவிற்கு தாக்கத்தை உணருராங்கங்கறத  பொறுத்து அவர்களில் மாற்றம் நிகழும்.

பெரும்பாலும் பயணம்கிறத எல்லாரும் வெறும் இலக்கை அடையறுத்துக்கான வழியாதான் நினைக்கிறோம். ஆனா எல்லாப் பயணமும் இலக்கையும்  தாண்டி நமக்கு பலதையும்  சொல்லிக்கிட்டுதான் இருக்கு. ஆனா நாமதான் அத காது கொடுத்து கேக்குறதில்ல.

நான் அன்னைக்கு ஒருநாள் ஒரு சிறுகதை படிச்சேன். அதுல நம்ம கதாநாயகன் சென்னைல இருந்து மதுரைக்கு போகணும். திடீர்னு அவனுக்கு ஒரு நினைப்பு வரும். நாம ஏன் டவுன் பஸ்லயே மதுரைக்கு போகக்கூடாதுன்னு. உடனே தாம்பரத்துக்கு டவுன் பஸ் ஏறுவான். அங்க இருந்து கூடுவாஞ்சேரி . பின்ன அங்க இருந்து அடுத்த ஊருக்குன்னு இப்படியே போவான். வழில ஒரு 5 மணிநேரம் டவுன் பஸ்ஸே இருக்காது. அப்ப பஸ் ஸ்டாண்டுலையே  படுத்து தூங்கிருவான். மறுநாள் முத டவுன் பஸ்ஸ பிடிச்சு பயணம் தொடரும். இப்படியே அவன் ஊர் போய்ச் சேர 30 மணி நேரம் ஆகிரும். அப்ப அவன் நினைச்சுப்பாப்பான், எவ்ளோ ஊரு , என்னனென்ன பேரு, எத்தனை விதமான மனிதர்கள், அவர்களுக்குள்ளே  எவ்வளவு உணர்ச்சிகள், எவ்ளோ வட்டார மொழி இப்படி பல விசயங்கள் அவன் இதுவரைக்கும் வாழ்க்கைல கேட்டே இல்லாததெல்லாம் தெரிய வரும். அந்த பயண முடிவுல அவனுக்கு ஏற்பட்ட பயணக் களைப்பை  விட அவனுக்கு ஏற்பட்ட மன திருப்தி அதிகம் . அந்த ஒரு பயணத்துல அவன் வாழ்க்கை முழுவதற்குமான ஒரு பெரிய பாடத்தையும் கற்றிருப்பான்.

சென்னைல இருந்து இங்க இருக்க மதுரைக்கு உள்ளயே இவ்ளோ விஷயம் இருக்குதுனா , இந்த உலகம் முழுவதும் எவ்ளோ இருக்கும். இந்த ஆர்வம்தான் இன்னமும் இந்த உலக சுத்தி பலரை ஓடவிட்டுகிட்டு இருக்கு.

உலகம் முழுக்க தனியா படகுல, பைக்லனு சுத்தி வர்றவங்க நிறைய. அலஸ்டயர் (Alastair Humphreys) ங்குற பைய்யன்  உலகம் முழுக்க சைக்கிளலையே  சுத்தி வர்றான். இவங்கல்லாம் வருஷ கணக்கா பயணம் செய்றாங்க.  அன்று  மெகஸ்தனிசின் உலகப் பயணம் 30 ஆண்டுகள் நீடித்தது. அவரோட நூல்கள் ஒரே காலகட்டத்தைய  உலக நாடுகள் முழுவதையும் ஒப்பிட்டு பார்க்க உதவுது. அதுவரை அந்தந்த பகுதி மக்களின் பழக்க வழக்கங்கள் அந்தந்த பகுதி மக்களாலையே ஒரே கண்ணோட்டத்தில் பார்த்தது போய் இவர்களால் மூன்றாவது கண்ணோட்டம் கிடைத்தது .இவங்க அளவிற்கு மக்களுடன் யாரும் நெருங்கி இருக்க முடியாது. இவங்கதான் உலகின் உண்மையான தூதுவர்கள்.

என் சிறுவயதில் எங்கள் குடும்பத்துடன் நாங்கள் சென்ற வட இந்தியப் பயணம் என்னுடைய என் தம்பியுடைய கண்ணோட்டத்தில் மிகப்  பெரிய மாற்றத்தை ஏற்ப்படுத்தியது . திருநெல்வேலி தொடங்கி சிம்லா சென்று திரும்பவும் பஸ்சிலேயே வந்த அந்த 23 நாள் பயணத்தில் நான் அதுவரை அறியாத இந்தியாவைப் பார்த்தேன். நினைத்த இடத்தில் தூங்கி, நினைத்த இடத்தில் சாப்பிட்டு, நினைத்த ஆற்றில் குளித்து, நிச்சயம் வாழ்க்கையில் மறக்கமுடியாத பயணம். ஏன் இந்த இடத்தில் இந்த நேரத்தில் நிற்கிறீர்கள் இன்னும் கொஞ்ச நேரத்தில் சம்பல் கொள்ளைக்காரர்கள் வந்துவிடுவார்கள், கிளம்புங்கள் என்று எங்களைப் பற்றிக் கவலைப்பட்டு விரட்டியவரையும் , எதோ ஒரு ஊரைச் சார்ந்த 10 வயதுச் சிறுவனான என்னைக் கூப்பிட்டு தாங்கள் சாப்பிட்ட சப்பாத்தியை என்னுடன் பகிர்ந்துகொண்ட பஞ்சாப் லாரி டிரைவர்களையும் , போகிற வழியெல்லாம் தண்ணீர் கொடுத்து உதவிய மக்களையும், நாங்கள் அவரிடம் வாங்கிய தயிரையே அவர் வீட்டின் அருகிலிருந்து சாப்பிட அனுமதிக்காத அந்த பிராமணரையும், அந்த அலகாபாத்தில் எங்களுக்காக படகு ஒட்டிய அந்த கிழவனாருக்கு நாங்கள் மறைத்து கொடுத்த பணத்தை அந்த முதலாளி வந்து பறித்துக் கொண்டபோது அந்த கிழவனார் பார்த்த அந்த பரிதாப பார்வையையும் என்னால் எப்படி மறக்கமுடியும் . நிச்சயம் அந்தப் பயணம் எனக்கு இந்தியாவைப் பற்றி மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது .

என்னை பொறுத்தவரை பயணம்னா அது மனிதர்களுடன் கலந்ததா இருக்கணும்.  வெறுமனே விமானத்தில் பயணப்பட்டு இலக்கை அடைந்து திரும்பி விமானத்திலேயே திரும்புவதில் எனக்கு பெரிய ஆர்வம் இல்லை. பயணம்குறது வெறும் இடங்களை சுத்தி பார்பதற்கு அல்ல . அது மனிதர்களைப்  பார்க்க . எனக்கும் உலகம் பூரா இப்படி பயணம் செய்யணும்னு  ஆசை. மக்களுடன் அவ்ளோ நெருங்கணும். நம்ம சிறுகதையின் ஹீரோ மாதிரி சென்னைல இருந்து மதுரை வரைக்கும் டவுன் பஸ்லயே பயணம் பண்ணனும் ஆசை.

உலகிலேயே மிகப் பெரிய படிப்பு மனிதர்களை படிக்குறதுதான். மனிதர்களைப் படித்தவர்கள்தான் உலகை வெற்றி கொண்டிருந்திருக்கிறார்கள். அதை இந்த பயணங்கள் தராமல் வேறு எதுவும் தராது.
பின் குறிப்பு : அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள் :)
Photo Courtesy :
http://www.travelinggreener.com/active/10-kilimanjaro-trip-tips/
http://explore.org

Tuesday, September 28, 2010

101*

ஓடிவிட்டது நூறு பதிவுகள், அதில் கால் பங்கு பின் தொடர்வோர், ஒரு வருடம் । நினைத்துப் பார்க்கவே மிக சந்தோசமாக இருக்கிறது. இந்த பதிவுலகம் மிக புதுமையானது எனக்கு. இது தந்த அங்கீகாரம் நான் என்றும் பெற விரும்புவது. ஒரு வலைப்பூ தொடங்கவேண்டும் என்ற நினைப்பு எனக்கு ரொம்ப காலமாகவே உண்டு. ஆனாலும் பதிவை எப்படி ஆரம்பிப்பது, எந்த மொழியில் ஆரம்பிப்பது, அதன் நோக்கம் என்ன என்பதிலேயே பல காலங்களை கழித்துவிட்டேன். முதலில் என் பதிவிற்கு ஒரு நல்ல பெயர் வைக்கவேண்டும் என்பதிலேயே பல மாதங்கள் கழிந்தது. பிறகு போன வருடம் எனக்கு ஒரு மாறுதல் தேவைப்பட்டது.


ஆகவே போன வருடம் ஆகஸ்டு மாதம் ஒரு நல்ல நாளில் பதிவை ஆரம்பித்தேன். அது எனக்குப் பிடித்த உயிரியலில் இருந்தது. அது cheetah வை பற்றிய ஒரு பதிவு. அது ஆங்கிலத்தில் இருந்தது. பதிவு தொடங்கிய பொழுது, என் பதிவின் நோக்கம் என் ஆங்கில அறிவை வளர்த்துக் கொள்ளவேண்டும் என்பதும் அதில் ஒன்று . ஆகவே என் முதல் பதிவை ஆங்கிலத்தில் ஆரம்பித்தேன். என் ஆங்கில பதிவுகளுக்கு proof reader ஆக இருந்தவர் என் அலுவலகத்தில் பணி புரியும் ஜோதி. அப்பொழுதுதான் jdk எனக்கு போன் பண்ணி இருந்தான் . அவனிடம் நான் பதிவு ஒன்று ஆரம்பித்திருப்பதாகவும் அதனை பார்க்குமாறும் கூறினேன் . அவனிடமிருந்து பாராட்டு வரும் என்று ஆவலுடன் எதிர்பார்த்த எனக்கு ஏமாற்றமே மிஞ்சியது. பதிவை படித்தவன் போன் பண்ணி திட்டினான் . என்னடா தமிழ்ல எழுதாம ஆங்கிலத்துல எழுதிருக்கனு. நான் எதிர்பார்த்தபடி என் முதல் பதிவிற்கு எந்த ஒரு பின்னூட்டமும் வரவில்லை. என்னுடைய இரண்டாவது பதிவிற்கே பின்னூட்டம் வந்தது . அந்தபின்னோட்டத்தை அளித்தவர் என் ஆருயிர் நண்பன் அதே jdk.

பின்னர் சென்ற ஆகஸ்டு மாதம் ஒரு டாக்டரை சந்தித்தேன். அவர் ஒரு மிகச் சிறந்த மருத்துவர் மட்டுமல்லாமல் ஒரு சிறந்த தமிழ் பேச்சாளார். பேச்சாளர் என்பது நான் ஒன்றும் மேடைப் பேச்சை எண்ணிக் கூறவில்லை. அவருடைய தமிழ் மொழி உச்சரிப்பு அவ்வளவு அருமையாக இருந்தது. அப்பொழுதுதான் எனக்குத் தோன்றியது இவ்வளவு அருமையான மொழியான தாய் மொழியாம் தமிழ் மொழியை விட்டு விட்டு ஆங்கிலத்தில் எழுதுகிறோமே என்று. பின்னர் செப்டெம்பர் மாதம் கிட்டத்தட்ட இதே கருத்தில் நான் ஏன் தமிழ் மொழியில் பதிவை எழுதப் போகிறேன் என்று ஒரு பதிவை எழுதினேன் . அதில் நான் இனி தமிழில் பதிவுகளை எழுதப் போகிறேன் என்றும் மேலும் ஆங்கிலத்திலும் எழுதுவேன் என்றும் கூறி இருந்தேன். ஆனால் பின்னர் என்னால் ஆங்கிலத்தில் என் பதிவுகளை எழுத முடியாமல் போய்விட்டது. பின்னர் ஆங்கிலத்தில் பதிவு எழுதாததிற்கு வேண்டுமென்றால் ஆங்கிலத்திற்கு என்று தனி வலைப்பூ தொடங்கிக் கொள்ளலாம் என்று என்னை சமாதானப்படுத்திக் கொண்டேன். ஆனால் அது இன்று வரை நிறைவேறவில்லை :-( . என்னுடைய பதிவுகளை தமிழில் எழுத ஆரம்பித்ததில் ஜோதிக்கு ரொம்ப வருத்தம்தான். ஏனென்றால் அவருக்கு தமிழ் படிக்கத் தெரியாது :-(

பின்னர் தமிழிலேயே பதிவுகளை எழுத ஆரம்பித்தேன். அதற்க்கு முக்கிய காரணம் jdk யும் கூட. முதலில் என்னுடைய பதிவில் வரலாறு மற்றும் தினசரி செய்திகள் பற்றிய பதிவுகளே அதிகம் இருக்கப் போகிறது என்று எண்ணி இருந்தேன். ஏனென்றால் அவையே நான் அதிகம் வாசிப்பவை. ஆனால் என்னுடைய பதிவுகளில் அதிகம் என்னுடைய அன்றாட அனுபவங்களும் படைப்புகளும் அதிகம் இடம் பெற்றதில் எனக்கு மகிழ்ச்சிதான் ;-). மேலும் சில சிறுகதைகள் எழுதவும் முயற்சி செய்தேன். ஒன்றிரண்டு எழுதவும் செய்தேன். ஆனால் என்ன அவை எல்லாம் மௌன ராகம் based ஆன மாதிரி இருந்தது. அதான் அதற்கடுத்து வேறு சிறுகதைகள் எழுதவில்லை. ஒரு பதிவாளனின் எழுத்து எதையுமே நேர்த்தியாக சொல்லுவதில்தான் இருக்கிறது. அப்படி இல்லாவிட்டால் அது வெறும் செய்தி ஆகிவிடும். செய்திகளை தினசரி பத்திரிக்கைகளை பார்த்து தெரிந்து கொள்ளலாம் .

என்னுடைய வலைப்பூவை முதலில் என் நண்பர்களுக்கே அறிமுகப்படுத்தி இருந்தேன். என்னுடைய முதல் followers உம் அவர்கள்தான். முதல் பின்னூட்டம் இட்டவர்களும் அவர்கள்தான் . ஒவ்வொரு தடவையும் பதிவை எழுதிவிட்டு அதை யாராவது வந்து பார்க்க மாட்டார்களா, பின்னூட்டம் இடமாட்டார்களா என்று ஆவலுடன் எதிர்பார்த்திருப்பேன் . நானாக என் நண்பர்களிடம் கூறவும்மாட்டேன், அவர்களே அறிந்து பின்னூட்டம் இட வேண்டும் என்று எண்ணுவேன். அப்பொழுது என்னுடைய பதிவுகளை திரட்டிகளில் இணைக்க அதிகம் தயங்கினேன். பின்னர் jdk இன் பேச்சைக் கேட்டே தமிழிஷில் இணைத்தேன்

என்னுடைய பதிவுகளை பிரபலப்படுத்துவதில் என்னை விட என் நண்பன் jdk யே அதிகம் ஆர்வம் கொண்டான் . அவனுடைய யோசனைப்படியே என் பதிவை தமிழிஷில் இணைத்தேன் . JDK, அவனுடைய twitter account இல் எல்லாம் என்னுடைய வலைப்பூ முகவரியையே அவனுடைய முகவரியாக கொடுத்திருப்பான். பெரும்பாலும் என்னுடைய பதிவின் முதல் பின்னூட்டம் அவனுடையதாகவே இருக்கும். எனக்கு பிற வலைப்பதிவர்களை அறிமுகப்படுத்தியதே jdk தான். நான் பிற பிரபல பதிவர்களின் பதிவுகளில் பின்னூட்டம் எதுவும் இடுவதில்லை என்று என்னை அதிகம் கடிந்து கொள்வான். அப்படி பின்னூட்டம் இட்டால்தான் அதிக வாசகர்களை சென்றடைய முடியும் என்பது அவன் எண்ணம். இப்படி என்னுடைய பதிவைப் பற்றி என்னைவிட அதிகம் அக்கறை எடுத்துக்கொள்வது அவன்தான். மிக்க நன்றி நண்பா.

ஒவ்வொரு தடவையும் பதிவை இட்ட பிறகு அதை யாராவது வந்து பார்த்திருக்கிறார்களா, counter கூடி இருக்கிறதா, பின்னூட்டங்கள் எதுவும் வந்திருக்கிறதா என்று பார்ப்பதில் என் ஆர்வம் அதிகமாகியது. இப்பொழுது யாராவது உன்னுடைய மிகப்பெரிய சந்தோசம் எது என்று கேட்டால், பின்னூட்டத்தின் வரவால் என் mail box இல் "blogspot" எனும் folder, bold ஆவதே என்னுடைய மிகப் பெரிய சந்தோசம் என்பேன். பொண்ணுங்களை sight அடிப்பதைவிடவும் அதிக சந்தோசம் தருவது இதுவே ;-). எப்பொழுதுமே நம்முடைய படைப்புகள் அங்கீகாரம் பெறும்போது கிடைக்கும் மகிழ்ச்சி வேறு எதுவும் இல்லை. நான் அதிகம் நினைப்பது உண்டு இப்பொழுது கடவுள் வந்து என்னிடம் உனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்டால் நாம் என்ன கேட்பது என்று . இப்பொழுது நான் கூறுவேன், உயிர் வாழத் தேவையான இருப்புகளையும் மீறி நான் அந்தக் கடவுளிடம் இந்த அகண்ட பெரிய வலைவெளியில் ஒரு சிலருக்கேனும் என்னை ஆதர்ச எழுத்தாளனாக ஆக்கு என்று கேட்டுவிடுவேனோ என்று பயமாக இருக்கு .

இப்பொழுதெல்லாம் ஏனோ தெரியவில்லை அதிக கனவுகள் வருகிறது. அவை மிக சுவாரசியமாகவும் இருக்கின்றன. அப்படிக் கனவுகள் வரும்போது அந்தக் கனவின் ஊடே நான் நினைத்துக் கொள்வேன் ஆகா இன்று பதிவு போட மிக சுவாரசியமான விஷயம் கிடைத்து விட்டது என்று. ஆனால் விடிந்தெழுந்து பார்த்தால் அந்தக் கனவின் எச்சங்கள் கூட மீதி இருப்பத்தில்லை. இப்படி எதையும் பதிவு போடவேண்டும் என்ற நோக்கில் பார்க்க ஆரம்பித்தேன்.

கடந்த ஒரு வருடங்களாக என்னுடைய எழுத்தை படிப்பவர்களுக்கும் , என்னை இந்தப் பெரிய வலைவெளியில் பின் தொடர்பவர்களுக்கும் , என்னுடைய வலைப்பூவைப் பற்றி ஆரோக்கியமான விமர்சனம் தரும் நண்பர்களுக்கும், என்னைத் தெரிந்தோ தெரியாமலோ இவ்வலைவெளியை அடைந்து வாசிப்பவர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

Sunday, August 29, 2010

தாத்தா பாட்டி

எனக்கு சில நாட்களாக ஒரு மாதிரி குற்ற உணர்ச்சியாக இருந்ததது. கடந்த சில நாட்களாக நான் என் பாட்டியை சென்று பார்க்கவில்லை. நான் அவரைப் பார்க்க வேண்டும் என்று சொல்லி அனுப்பியும், நான் சென்று பார்க்கவில்லை . பொதுவாக தலைமுறை இடைவெளி அதிகரிக்க அதிகரிக்க அவர்களுக்கிடையேயான அன்பும் அதிகரிப்பதாகவே எனக்குத் தோன்றுகிறது. ஒரு பாட்டியோ அல்லது ஒரு தாத்தாவோ தன் பேரனிடமோ அல்லது பேத்தியிடமோ கொண்டிருக்கும் அன்பு அவர்களின் மகனோ அல்லது மகளிடமோ கொண்டிருக்கும் அன்பை விட அதிகம் என்பதே என் எண்ணம். அதுபோலவே எதிர்பாலரிடமான அன்பும் இங்கு அதிகம் என்றே எண்ணுகிறேன். அதாவது ஒரு பாட்டிக்கு தன் பேரனிடமும் ஒரு தாத்தாவுக்கு தன் பேத்தியிடமும் பாசம் அதிகமாக இருக்கும். இங்கு வேறுபட்ட இரண்டு தலைமுறைகள் தங்களுக்கிடையே கூட்டணி அமைக்கின்றன. அது ஒத்த கூட்டணியாகவும் அமைகிறது.

இப்படி வேறுபட்ட இரண்டு தலைமுறைகளுக்கிடையே அன்பு அதிகரிக்க காரணம் என்ன?. ஒரு குடும்பத்தில் அப்பாவோ அல்லது அம்மாவோ தன் பிள்ளைகளைக் கண்டிக்கும் போது, வீட்டில் உள்ள எல்லாரும் கண்டிக்கமாட்டார்கள். யாராவது ஒரு சிலர் கண்டிக்காமல் பிள்ளைகளுக்கு ஆதரவாகவோ அல்லது கண்டிகப்படுவதிலிருந்து காப்பாற்றுவதகவோ இருப்பார்கள். அந்த ஒரு சிலர் பெரும்பாலும் தாத்தா பாட்டியாகத்தான் இருப்பார்கள். அதேபோல் அப்பா அம்மா, தாத்தா பாட்டியின் மீது கோவப்படும்போது அங்கு தாத்தா பாட்டிக்கு ஆதரவாக வருவது பேரன் பேத்திகள்தான். இவ்வாறாக இரண்டு வேறுபட்ட தலைமுறைகள் நெருங்கி வருவதில் பாசம் அதிகரிக்கிறது.

இதானாலயே யாரேனும் வயதானவர்களைப் பார்க்கும்போது நமக்கு தாத்தா பாட்டி ஞாபகம் வருகிறது. எனக்கு என் தாய் வழி பாட்டியின் மீது பாசம் அதிகம்.அவரை நான் அம்மாச்சி என்றே அழைப்பேன். அதனாலயே சாலையில் எவரேனும் வயதான பாட்டியை பார்க்கும் போது எனக்கு என் பாட்டி ஞாபகம் வரும். அதனாலயே நான் ஏதேனும் பிட்ச்சை இட்டால் வயதான பாட்டிகளுகே இடுவேன்.

நான் அதிகம் சண்டையிடுவதும் என் அம்மாச்சியிடம்தான். எனக்கு என்னவோ தெரியவில்லை சண்டையானாலும் பாசமானாலும் அவரிடம்தான் காட்டுவேன். என்ன சண்டையானாலும் என்னால் அவரைப் பார்க்காமல் இருக்க முடியாது. எப்படியும் இரண்டொரு நாட்களில் சென்று பார்த்து விடுவேன். அவருக்கு மருந்தும், பிஸ்கட்டும் வாங்கி கொடுப்பது என்னுடைய பணிகளில் ஒன்று. எங்கள் அம்மா எதாவது வாங்க வேண்டும் என்று சொன்னால் அதை தட்டிக் கழிக்கும் நான் என் அம்மாச்சி எதாவது ஒரு மருந்தோ அல்லது பிஸ்கட்டோ வாங்க வேண்டும் என்று சொன்னால் எந்த வேலையின் நடுவிலும் வாங்கி கொடுத்து விடுவேன்.

தாத்தா பாட்டியுடனான பிணைப்பு மிகவும் முக்கியமானது. அது இரண்டு தலைமுறைக்கும் உண்டான பிணைப்பு. ஒரு தலைமுறையின் கலாச்சாரமும்,பண்பாடும் தாய் தந்தையரை விட தாத்தா பாட்டி மூலமாகவே அடுத்த தலைமுறைக்கு கடத்தப்படுகிறது. ஓய்வு நேரத்தில் தாத்தா பாட்டி சொல்லும் கதைகள், அவர்கள் காலத்தில் நிகழ்ந்த நிகழ்வுகள் மூலம் அவை கடத்தப் படுகின்றன. இது எந்த ஒரு முயற்ச்சியும் இன்றி தானாக நடைபெறுகிறது. தாத்தா பாட்டிகள் தங்கள் அடுத்த தலைமுறையுடன் ஒத்துப் போவதை விட அதற்கும் அடுத்த தலைமுறையுடன் எளிதாக ஒத்துப் போகிறார்கள் . அவர்களால் தாய் தந்தையரால் ஏற்க முடியாத பிள்ளைகளின் செயல்களைக்கூட தாத்தா பாட்டியினரால் எளிதாக ஏற்றுக் கொள்ள முடிகிறது. நான் எங்கள் வீட்டில் அதிக முற்போக்கு சிந்தனை கொண்டவர் என்று கருதுவது எங்கள் அம்மாச்சியைத்தான். எங்கள் தாய் தந்தையரால் ஏற்க முடியாத செயல்களைக்கூட அவரால் ஏற்க முடிகிறது. அது வயது தந்த முதிர்ச்சியா அல்லது தங்கள் பேரன் பேத்தி தலைமுறைகளை நன்கு புரிந்து கொண்ட செயலா என்று தெரியவில்லை.

எப்படியானாலும் தாத்தா பாட்டி மற்றும் பேரன் பேத்திகளுக்கு இடையேயான பிணைப்பு போற்றப்படவேண்டியது.

Monday, April 26, 2010

இரவா பகலா

இரவு தனக்கே உரித்தான தன்னியல்பைக் கொண்டது. உலகமானது இரவில் வேறொரு போர்வையைப் போர்த்திக் கொள்கிறது. இரவில் காணும் உலகம் முற்றிலும் மாறுபட்டது.அது இரவில் தனக்கென்று ஒரு முக மூடியைப் போர்த்திக் கொள்கிறது. பகலைச் சார்ந்து பலருடைய வாழ்வு இருப்பது போன்று இரவைச் சார்ந்தும் பலருடைய வாழ்வு இருக்கிறது. அது ஒரு தனி உலகம். அது ஒரு மாய உலகம் கூட. இரவு போர்த்திக் கொள்ளும் போர்வை தன்னிகரற்றது.அது சற்று இரக்கமற்றதும் கூட. பகலில் வாழும் உயிர்களுக்கு இரவு அச்சம் தரக்கூடியது. இரவு உலகம் தனிப்பட்ட உயிர்களுக்கானது அங்கே பகல் உயிரினங்கள் சற்று தயக்கத்துடனேயே வரவேற்க்கப்படுகின்றன அல்லது வரவேற்க்கப்படுவதில்லை .

ஆயிரம் கோடி நட்சத்திரங்கள் கொண்டிருந்தாலும் இரவு தனிமையானது. ஒற்றைச் சூரியனைக் கொண்டிருந்தாலும் பகல் தனிமையற்றது.


இரவா பகலா எது அதிகமாக வரவேர்க்கப் படுகிறது என்று எனக்குத் தெரியவில்லை. இரவு எப்பொழுதும் அமைதியானது . அது பகலைப் போல் எப்பொழுதும் கத்திக் கூச்சலிடுவதில்லை. பகலுக்கு காத்திருக்கும் கடமைகள் அளவிற்கு இரவிருக்கு காத்திருப்பதில்லை. ஏனெனில் பகலைச் சார்ந்த பிராணிகள் அளவிற்கு இரவைச் சார்ந்த பிராணிகள் இல்லை . அதனால்தான் விடிவெள்ளி தெரிந்த அளவிற்கு மற்ற நட்சத்திரங்கள் பெயர்கள் கூட தெரிவதில்லை.

இரவு எப்பொழுதும் ஒய்விர்க்கானதாகவே கருதப்படுகிறது. அதனாலயே பகல் அனுபவிக்கப்பட்ட அளவிற்கு இரவு அனுபவிக்கப்படுவதில்லை. நான் என்பது ஒய்வு எடுப்பதற்கும் தூங்குவதற்கும் ஆனதாகவே உள்ளது.

இரவில் தெரியும் மின்மினிப் பூச்சிகள் பகலில் தெரிவதில்லை . அதற்காக அவை பகலில் இல்லாமலே இருப்பதில்லை என்று அர்த்தம் இல்லை. அவை பகலிலும் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் கண்ணுக்குத் தெரிவதில்லை. இப்படி இல்லாமலேயே இருப்பவை உலகில் பல .

எனக்குத் தெரிந்து இரண்டு உலகங்களையும் முழுமையாகத் தன்னுள் கொண்ட நகரம் என்றால் அது மதுரைதான். அதனை தூங்கா நகரம் என்றே விழிப்பார்கள். அது எந்த நேரமும் தூங்குவதில்லை. அது எப்பொழுதும் கொட்ட கொட்ட விழித்துக் கொண்டே இருக்கிறது. இல்லையேல் யாரேனும் ஒருவர் அதனைத் தட்டி எழுப்பிக் கொண்டே இருக்கிறார்கள். பகலில் எப்படி அது மக்களை ஏற்றுக்கொள்கிறதோ அதேபோல் இரவிலும் ஏற்றுக்கொள்கிறது.மேலும் அது இரவு வாழ்க்கைக்கென தன்னை தகவமைத்துக்கொள்கிறது .
அந்நகரில் எந்நேரமும் எங்கு சென்றாலும் சுடச்சுட உணவு கிடைக்கும். shift போட்டு கடைகள் அங்கு இயங்கும். சாலையோர இட்லிக் கடைகள் அங்கு பிரபலம். இரவு 6 மணியிலிருந்து 10 மணி வரை சில இட்லிக் கடைகள் இயங்கும், பிறகு இரவு 10 மணியிலிருந்து இரவு 2, 3 மணி வரை சில கடைகள் இயங்கும். வேறு சில கடைகள் இரவு 3,4 லிலிருந்து ஆரம்பித்து காலை 6 மணிவரை மற்றும் சில கடைகள் இயங்கும். இவ்வாறாக மதுரை தன்னை தேடி வருபவர்களை எந்த ஒரு சுழிப்பும் இல்லாமல் அப்படியே ஏற்றுக்கொள்ளும்.


நான் பனிரெண்டாம் வகுப்பு படிக்கும்பொழுது தனிமையில் படிப்பதற்காக எங்களுடைய டியுசன் சென்டரிலயே என் நண்பன் மீராவுடன் தங்கி படிப்பதுண்டு. அந்த டியுசன் சென்டரில் பேய் இருப்பதாக ஒரு புரளி உண்டு. அதை எங்கள் அம்மாவிடம் கூறியதிலிருந்து, எங்கள் அம்மா என்னை டியுசன் சென்டரில் இரவு வெகு நேரம் தங்க அனுமதிக்கமாட்டார். எப்படியாகிலும் வீட்டிற்கு வந்து விட வேண்டும் என்பார். அதனால் எனக்கு தூக்கம் வரும்வரை படித்து விட்டு படுக்க சாமத்தில் வீட்டிற்க்குச் செல்வேன். அப்பொழுது அந்த ஊரே நான் பகலில் பார்த்தது போல் இருக்காது. பேருந்து நிறுத்தத்தில் நான்கைந்து ஆட்டோக்கள் நிற்கும். அவையும் இரவிற்கு என்றே ஒட்டப்படும் ஆட்டோக்கள். அந்த ஆட்டோ ஓட்டுனர்களை பகலில் காண முடியாது. இரண்டு மூன்று போலீஸ் காவலர்கள் நிற்பார்கள். பகலில் பார்க்கும் காவலர்களுக்கும் இரவில் பார்க்கும் காவலர்களுக்கும் ஏதோ மிகப் பெரிய வேறுபாடு இருப்பதாகவேத் தோன்றும். இரவில் அவர்கள் எப்பொழுதும் சந்தேகக் கண்கொண்டே பார்ப்பார்கள். நடுச் சாமத்தில் மிதிவண்டியில் செல்லும் என்னைப் போன்ற இரண்டுகெட்டான் வயசுப் பயல்களைக் கண்டாலே நிறுத்தி விசாரிப்பார்கள். அவர்களிடம் புத்தகத்தை காட்டி படித்துவிட்டு வருகிறேன் என்றால் மரியாதையுடன் அனுப்பி வைப்பார்கள்.

அப்படி ஒரு நாள் படித்துவிட்டு இரவில் என் வீட்டிற்கு சென்றேன். செல்லும் வழியில் ஒரு தேநீர்க் கடையில் தேநீர் அருந்தலாம் என்று நினைத்து தேநீர் ஒன்று சொன்னேன். அப்பொழுதான் கவனித்தேன், கடையிலிருந்த பெரும்பான்மையோர் குடித்திருந்தனர். அப்பொழுது அந்த கடையில் நம் ராமாயணம் கதைகளில் வரும் ராட்ட்சசி போன்று 40 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்மணி தலையெல்லாம் விரித்துப் போட்டுக் கொண்டு நின்றிருந்தார். அந்த அகால நேரத்தில் நான் ஒரு பெண்மணியை மற்ற ஆண்களுக்கு நிகராக அங்கு அப்படி எதிர்பார்க்கவில்லை. அத்துடன் அதற்க்கு மேலாக அவர் குடித்திருந்தார். என்னைப் போன்ற ஒரு பையனையும் அந்த நேரத்தில் அவரும் எதிர்பார்க்கவில்லை போலும். அவர் என்னிடம் பல கேள்விகள் கேட்க ஆரம்பித்தார். நான் ஏற்க்கனவே சற்று பயந்து தான் இருந்தேன். ஒவ்வொரு கேள்வியையும் கேட்டு விட்டு அட்டகாசமாக சிரிக்க வேறு செய்தார். நான் ரொம்பவே பயந்துவிட்டேன். வீட்டிற்கு வந்த பிறகும் உறக்கம் பிடிக்கவில்லை.
இவ்வாறாக ஒரு சின்னஞ் சிறு பிராணியைக்கூட அந்த மொரட்டு இரவு விட்டுவைக்கவில்லை .

Friday, April 23, 2010

மழை தரும் நாட்கள் அற்புதமானவை !!!

நீரின்றி அமையாது உலகு

எவ்வளவு அருமையான வார்த்தைகள். நீரால் ஆக்கவும் முடியும் அழிக்கவும் முடியும் .

கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை.


மழை பெய்யாமல் மக்களை வதைப்பதும், அதுவே பெய்து அவர்கள் துன்பம் தீர்ப்பதும் மழையே ஆகும் .

நீரைப் போல் உலகில் வரவேற்க்கப்படுவதும் எதுவும் இல்லை வெறுக்கப் படுவதும் எதுவும் இல்லை.

வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று.


உலகத்தை வாழ வைப்பது மழையாக அமைந்திருப்பதால் அதுவே அமிழ்தம் எனப்படுகிறது.


உலகில் அளவான அளவில் இருக்கும் போது அது அமிர்தமாக கருதப்படுகிறது. அதுவே அளவுக்கு மீறும் போது வெறுக்கவும்படுகிறது.

மழை தரும் நாட்கள் மிக அலாதியானவை. அதுவும் முதல் மழை மக்களுக்கு அமிர்தம்.
நீருக்கென்று வடிவம்,நிறம்,மணம் எதுவும் கிடையாது . அது தான் தங்கும் இடத்திற்கு ஏற்ப வடிவத்தையோ , நிறத்தையோ , மணத்தையோ பெறுகிறது. இவ்வாறாக மனிதன் தான் தங்கும் இடத்திற்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொண்டால் உலகில் பல பிரச்சினைகள் தீரும் .

நீரானது ஒரே இடத்தில் தங்கி விட்டால் கேட்டுப் போய் விடும். அதுபோலவே மனிதனும், ஒரே இடத்தில் தங்கி விட்டால் கேட்டுப் போய் விடுவான்.

நீரானது நம் ஊரில் வளத்திற்கு உரியது மட்டும் அல்ல வழிபாட்டிற்கு உரியதும் கூட . கங்கை நீர் பெறும் அளவிற்கு மதிப்பை இந்த உலகில் எந்த ஒரு நதி நீரும் பெறுவதில்லை. இவ்வாறாக நீரானது இந்தியர்களில் இரண்டறக் கலந்தது.

எனக்குத் தெரிந்து கடலில் மிதக்கும் கப்பல்களை விட மழை நீரில் செல்லும் கப்பல்களே அதிகம். கடலில் ஒரு கப்பல் முதல் முதலில் வெள்ளோட்டம் விடும் போது ஏற்ப்படும் ஆர்ப்பரிப்பை விட மழை நீரில் செல்லும் போது ஏற்ப்படும் ஆர்ப்பரிப்பே அதிகம்.

உலகில் நீரானது தூய்மையானதாக கருதப்படுகிறது . உலகில் எவற்றையும் சுத்தப் படுத்த நீரே பிரதானம். நீர் தன்னுடன் சேரும் அனைத்தையும் நீர்த்துப் போகச் செய்கிறது. அதாவது நீரானது தன்னோடு சேரும் அனைத்தையும் தன் இயல்பை ஏற்கச் செய்கிறது அல்லது அவற்றின் இயல்பை ஏற்கிறது.

நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின்

ஆவியான கடல்நீர் மேகமாகி அந்தக் கடலில் மழையாகப் பெய்தால்தான் கடல்கூட வற்றாமல் இருக்கும். மனித சமுதாயத்திலிருந்து புகழுடன் உயர்ந்தவர்களும் அந்தச் சமுதாயத்திற்கே பயன்பட்டால்தான் அந்தச் சமுதாயம் வாழும்.

உலகில் தோன்றிய நாகரீகங்கள் அனைத்தும் ஆற்றுப்படுகைகளில்லேயே தோன்றின. மெசபடோமியா நாகரீகம் யூப்ரடிஸ், டைகிரிஸ் என்ற இரண்டு நதிகளுக்கிடையே ஏற்ப்பட்ட நாகரீகம். மெசபடோமியா என்றாலே இரண்டு நதிகளுக்கிடைய அமைந்த பகுதி என்று பொருள். சிந்து சமவெளி நாகரீகம் சிந்து நதிக்கரையிலும், எகிப்திய நாகரீகம் நைல் நதிக்கரையிலும் ஏற்ப்பட்டவை. இவ்வாறாக மனித நாகரீகங்களை வளர்த்தவை நதிகளே.

மழை தரும் நாட்கள் அற்புதமானவை.எனக்கு எவரையும் சட்டை செய்யாமல், ஏன் மழையையே சட்டை செய்யாமல் மழை நீரில் நனையப் பிடிக்கும். எவர் கைபடாத, இன்னும் மண்ணைச் சேராததால் எந்த ஒரு தன்மையையும் ஏற்காத அந்த தூய்மையான மழை நீரில் நனையப் பிடிக்கும்.

மழை தரும் நாட்கள் அற்புதமானவை.மழை எனக்கு அந்நியமாகத் தோன்றவில்லை. அது என்னுடன் ஒன்றோடொன்று கலந்ததைப் போல் பிடிக்கும். மழை தரும் சிநேகம் அற்புதமானது. மழையன்றி வேறு எந்த ஒரு சிநேகமும் அவ்வளவு அன்னியோன்யமாகவோ அல்லது தூய்மையானதாகவோ தெரிவதில்லை.

மழை தரும் நாட்கள் அற்புதமானவை. மழை வீட்டைக் கழுவி விடுகிறது, மாட்டை கழுவி விடுகிறது , ஆட்டைக் கழுவி விடுகிறது , ஏன் சின்னச் சிறு புல் பூண்டைக் கழுவி விடுகிறது. மழைக்கடுத்து அனைத்தும் அழகாய்த் தோன்றுகின்றன.

மழை தரும் நாட்கள் அற்புதமானவை. பெரு மழை பெய்யும் போது வீட்டிற்க்குள் அமர்ந்து கொண்டு அந்த சூறைக் காற்றை சன்னல் வழியெப் பார்க்கப் பிடிக்கும். எவற்றையும் தன்னுடன் அடித்துச் செல்வது போல் பெய்யும் அந்த சூறைக் காற்று பலத்தின் உதாரணம். அந்த சூறைக் காற்று தெருவின் மூலை முடுக்கில் இருக்கும் அனைத்தையும் அடித்துச் செல்கிறது. அந்த மழையானது தன்னியல்பில் மாறி அனைத்தையும் இழுத்துச் செல்ல நினைக்கிறது.

அனைத்து இடங்களிலிருக்கும் நீருக்கும் தோற்றமும் சேர்தலும் ஒரே இடமே . மழையானது கடலில் தோன்றி கடலிலேயே சென்றடைகிறது.
மழை தரும் நாட்கள் அற்புதமானவை.

Sunday, March 28, 2010

படிக்காத பத்திரிக்கைகள்


படிக்காத பத்திரிக்கைகள் எப்பொழுதும் ஒரு குற்ற உணர்ச்சியை ஏற்ப்படுத்துகின்றன . அவை எப்பொழுதும் நிராகரிக்கப்பட்டதாகவே தோன்றுகின்றன. அவற்றைப் பார்க்கும்போதெல்லாம் ஒரு அயர்ச்சி ஏற்ப்படுகிறது. பத்திரிகைகள் படிக்கப்படாததர்க்குக் காரணம் நேரமின்யா, ஆர்வமின்மையா அல்லது அயர்ச்சியா. எதுவாகிருந்தாலும் அவை நம்மைப் பார்க்கும்போதெல்லாம் , ஒரு பரிதாபப் பார்வைப் பார்பதாகவேத் தோன்றுகிறது. அவை காற்றில் படபடக்கும் போதெல்லாம் நீ என்னை வாசிக்காமல் ஏன் புறக்கணிக்கிறாய் என்று ஒரு காதலி கேட்பதுபோல் உள்ளது. பத்திரிகைகள் வாசிப்பு ஒருவரின் குணாதிசயத்தைக் காட்டுகின்றன. சிலர் கிடைக்கும் பத்திரிகைகள் அனைத்தையும் படிப்பார்கள், சிலர் சில பத்திரிக்கைகள் மட்டுமே படிப்பார்கள். எனக்குத் தெரிந்து பலர் சில பத்திரிகைகளில் சில பக்கங்களை மட்டுமே படிப்பார்கள்.

படிக்காத பத்திரிகைகள் எப்பொழுதும் சில நிகழ்வுகளை சொல்ல எத்தனிப்பதாகவேத் தோன்றும் . அவற்றை நாம் தான் கவனிப்பதில்லை. வாழ்கையில் கவனிக்கப்படாத பக்கங்கள் இருப்பது போல் பத்திரிக்கையிலும் கவனிக்கப்படாத பக்கங்கள் உள்ளன . எல்லாப் பத்திரிக்கைகளும் சுவாரசியமாய் இருப்பதில்லை. சில நேரங்களில் சில பக்கங்களே சுவாரசியமாய் இருக்கின்றன. அந்த சுவாரசியப் பக்கங்களை தேடும் அயர்ச்சியே , அந்த சோம்பலே படிக்காத பத்திரிக்கைகளை உண்டாக்குகின்றன.

படிக்காத பத்திரிக்கைகில் போலவே படிக்காத புத்தகங்களும். நானும் மதுவும் சென்னையில் நடக்கும் புத்தக கண்காட்ச்சிக்கு செல்வது வழக்கம். அங்கு வாங்கிய புத்தகங்கள் படித்து முடிப்பதற்கும் முன்னாலயே அடுத்த புத்தக கண்காட்சி வந்துவிடும். இப்படியாக சேர்ந்த புத்தகங்கள் அநேகம். எப்பொழுதும் அந்த படிக்காத புத்தகங்களைப் பார்க்கும் போது அதே குற்ற உணர்ச்சி ஏற்ப்படும்.

photo courtesy : http://www.greentaxi.com/wp-content/uploads/2009/03/newspaper-future.jpg

Saturday, March 20, 2010

வீடு

ஒவ்வொருவருடன் ஒன்றாய்க் கலந்த விசயங்களில் வீடும் நிச்சயம் இடம்பெறும். வீடு என்பது வெறுமனே தூங்கி எழுந்திருப்பதற்க்கான ஒன்று அல்ல. அதையும் தாண்டி ஒரு விஷயம் நம்மை வீட்டுடன் கட்டிப்போடுகிறது . வீடு என்பது பெரியவர்களுக்கு மட்டுமே உணர்வுப் பூர்வமானது மட்டும் அல்ல, சிறியவர்களுக்கும் கூட அது உணர்வுப் பூர்வமானது. ஒரு வீட்டிலிருந்து மற்றொரு வீட்டிற்கு குடி ஏறும்போது , பழைய வீட்டை நீங்கிச் செல்லும் வேதனை பெரியவர்களை மட்டுமே அடைவதில்லை அது சிறுவர்களையும் விட்டுவைப்பதில்லை . ஏன் அந்த அனுபவத்தை நானே நிறைய சமயங்களில் உணர்ந்திருக்கிறேன். என் அப்பா அம்மா அரசாங்க ஊழியர்களாக இருந்ததால் நாங்கள் பல ஊருகளுக்கு மாற்றுதல் பெற்றுச் சென்றோம். ஒவ்வொருதடவையும் இவ்வாறு ஒரு வீட்டை நீங்கிச் செல்லும்போது உள்ளூர ஒரு வேதனை உண்டாகும். சிறு வயதிலிருந்தே வீட்டின் மீது ஆர்வம் ஏற்ப்பட்டுவிடுகிறது. அதுதான் மணல் வீடு கட்டும் வகையில் வெளிவருகிறது.

சொந்த வீட்டை தவிர்க்க முடியாத காரணங்களால் விற்றுவிட்டு அதனை நிரந்தரமாக நீங்கிச் செல்லும் போது உண்டாகும் வேதனை சொல்லில் அடங்காது. ஏனெனில் அந்த வீடு அவர்களின் உணர்வோடு ஒன்றுடன் ஒன்றாய் கலந்ததாக இருக்கும். ஒரு வீட்டை கட்டுவதென்பது அவ்வளவு எளிதானது அல்ல. ஒரு வீடு கட்டுவது என்பது வெறும் செங்கலும் சுண்ணாம்பும் சேர்ந்து கட்டுவது மாத்திரம் அல்ல. ஒவ்வொரு வீட்டின் செங்கலுக்குப் பின்னாலும் உழைப்பு, தியாகம், ஆசைகள் என்று பலவற்றைக் கொண்டு கட்டுவது. ஒரு வீடு கட்டுவதற்குப் பின்னாலிருக்கும் உழைப்பு தியாகம் போன்றவற்றை தமிழில் வெளிவந்த "வீடு" என்ற திரைப்படம் அருமையாகக் காட்டும்.

ஒரு வீடு என்பது வீடாகவே மட்டும் இருப்பதில்லை. அது அவ்வீட்டில் குடியிருப்போரின் சந்தோசம், துக்கம், வேதனை , ஏமாற்றம், ஏக்கம், ஆசை, அன்பு போன்றவற்றின் மௌன சாட்சியாக இருக்கிறது. ஒவ்வொரு வீடும் தனக்குள் ஆயிரம் ஆயிரம் கதைகளை கொண்டிருக்கும். எனக்கு என்னவோ ஒவ்வொரு வீடும் அதில் குடியேருவோரின் குணாதிசயங்களுக்கு ஏற்ப தன்னையும் அடிக்கடி மாற்றிக் கொள்கிறது என்றே தோன்றுகிறது. ஒவ்வொரு வீடும் அதில் குடியிருப்போரின் தன்மைக்கு ஏற்ப அறியப்படுகிறது. நாங்கள் சிறு வயதில் கிரிக்கெட் விளையாடும் போது பந்தானது அடிக்கடி ஒரு வீட்டிற்குள் சென்று விடும். அந்த வீட்டுக்காரரைப் பார்த்தாலே எங்களுக்குப் பயம். அவர் சத்தம் போட்டுவிட்டு பந்தை தர மறுப்பார். அதனாலையே அந்த வீட்டைப் பார்த்தாலேயே எங்களுக்குப் பயம். சிறிது காலங்களுக்குப் பிறகு அவர் அந்த வீட்டை காலி செய்து விட்டு வேறொருவர் குடியேறினார். அவர்களுக்கு குழந்தை இல்லாததால் , சிறுவர்களான எங்களுடன் பாசமாக பழகினார்கள். அடிக்கடி எங்களை அவர்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்று பிஸ்கட், குளிர்பானகள் எல்லாம் கொடுப்பார்கள். சிறிது காலத்திற்கு முன்பு வரை அந்த வீட்டைப் பார்த்தாலே எங்களுக்குப் பயம் . அதே வீடு இப்பொழுது முற்றிலும் மாறான பரிமாணம் பெற்றுள்ளது. இப்படியாக வீடானது தண்ணீர் எப்படி தான் இருக்கும் பாத்திரதிற்க்கேற்ப வடிவம் கொள்ளுதோ அதே போல் வீடும் அதில் குடியிருப்போரின் குணாதிசயங்களைப் பெறுகிறது. வெறும் வீடு என்பது வெறும் காலிப் பத்திரம் போலவே தான், அதற்கென்று எந்த குணாதிசயமும் கிடையாது.

நாங்கள் இது வரை பதினோரு வீடுகளில் குடியிருந்திருக்கிறோம். ஓவ்வொரு வீடும் என்னுடைய மற்றும் மதுவின் குணாதிசயங்களை வளர்ப்பதில் பெரும் பங்கு வகித்திருக்கின்றன. இந்த பதினோரு வீடுகளைத் தவிர எங்கள் மாமா வீட்டையும் , பெரியம்மா வீட்டையும் தவிர்க்க முடியாது. நாங்கள் சிறு பிராயத்தில் குடியிருந்த வீட்டை என்னால் இன்னும் மறக்க முடியாது. அந்த வீடானது செட்டிநாட்டுப் பாணியில் கட்டப்பட்டிருக்கும். அந்த வீடு ஒரே நீளமாக இருக்கும். அந்த வீட்டின் நீளம் அளவிற்கு வீட்டின் வெளியே ஒரு பெரிய கல் திண்ணை இருக்கும். அந்த கல் திண்ணையில் அமர்ந்து தான் எங்கள் உயிருக்கு உயிரான அப்பாவிடம் கதை கேட்போம். அந்த வீட்டில் தான் நாங்கள் எங்கள் அப்பாவின் உதவியுடன் முதல் முதலாக தோட்டம் வளர்த்தோம். இப்படியாக எங்களுடை அறிவையும் பிற உயிர்களிடத்தில் அன்பு காட்டுவதையும் அந்த வீடு தான் வளர்த்தது.

எங்கள் சிறு பிராயத்தின் விடுமுறை நாட்களை நாங்கள் எங்கள் மாமா வீட்டிலும், எங்கள் பெரியம்மா வீட்டிலும்தான் கழித்தோம். எங்கள் மாமா வீடு மிகச் சிறியதாக இருந்தது. ஆனால் அந்த வீட்டில் குடியிருந்த வரை எங்களுக்கு அது சிறியதாகத் தெரியவில்லை. இன்று சென்று அவ்வீட்டைப் பார்த்தால் நாங்கள் இத்தனை பேர் எப்படி அந்த வீட்டில் குடியிருந்தோம் என்று நினைக்கும் போது மலைப்பாக உள்ளது . இவ்வாறாக அந்த வீடு ஒவ்வொருவர் வரும் போதும் மறுப்பேதும் சொல்லாமல் தன்னை அகட்டிக் கொண்டு கருப்பையைப் போல் அனைவரையும் ஏற்றுக் கொண்டது.

எங்கள் பெரியம்மா வீடு சற்றுப் பெரியது. அந்த வீட்டிற்கு என்றே தனி மணம் உண்டு. அவர்கள் சிறிது காலத்திற்கு முன் அந்த வீட்டை விற்றுவிட்டார்கள். அதைக் கேட்டபோது எதோ பால்ய கால நினைவலைகளை முற்றிலும் இழந்து விட்டது போன்ற வலி ஏற்ப்பட்டது. இப்படியாக வீடானது பல பேருடன் இரண்டறக் கலந்ததாக உள்ளது.

Wednesday, March 3, 2010

கல்யாணமும் ஜோசியமும்

நம் ஊரில் பெரும்பாலும் ஜாதகம் பார்க்காமல் அநேக திருமணங்கள் நிச்சயிக்கப்படுவதில்லை. இதற்க்கு விதி விலக்கு காதல் திருமணங்களே. பெற்றோர் பார்த்து நிச்சயிக்கப்படும் திருமணங்கள் மணப்பெண் , மணமகன் -ஐ பார்பதைக் காட்டிலும் 14 ஜோசியக் கட்டங்களைப் பார்த்தே நிச்சயிக்கப்படுகின்றன. ஜோசியம் பார்ப்பவர் சொல்லுவதே வேத வாக்கு. இதுலயும் எல்லா ஜோசியக்காரர்களும் ஒரே மாதிரி சொல்லுவார்களா என்றால், மாட்டார்கள். ஒருவர் கணப் பொருத்தம் முக்கியமில்லை என்பார் மற்றொருவர் கணப் பொருத்தம் இல்லையென்றால் திருமணமே செய்யாதீர்கள் என்பார். ஒருவர் ஜாதகத்தில் மாங்கல்ய தோஷம் உள்ளது என்பார் இன்னொருவர் இல்லையென்பார். இப்படி முரண்பட்டவர்களின் வாக்கை வேத வாக்காகக் கொண்டு முரணான திருமணங்கள் நிச்சயிக்கப்படுகின்றன.

இதில் பெரிய கொடுமை என்னவென்றால், பெண் வீட்டில் பையனையும், பையன் வீட்டில் பெண்ணையும் ரொம்ப பிடித்திருக்கும். குணம், வேலை, நல்ல குடும்பம், அழகு என அனைத்துமே இரு வீட்டிலும் பொருந்தி வரும். கட்டக் கடைசியாக ஜாதகம் என்ற ஒன்றைப் பார்ப்பார்கள். அங்கு ஜோசியர் பொருத்தம் 5/10 என்று பாஸ் மார்க் தான் வாங்கியிருக்கு, distinction லாம் இல்ல என்று கூறி அந்த சம்பந்தத்தையே நிறுத்தி விடுவார்கள். (ஜாதகத்தில் 10 பொருத்தம் சரியாக பொருந்துகின்றனவா என்று பார்ப்பார்கள், அது பொருந்துவதைப் பொறுத்து 5/10, 8/10 என்று மார்க் போடுவார்கள்.) ஆக made for each other ஆகிய ஒரு பொருத்தம் ஜாதகம் சரியில்லை என்று நிறுத்தப்பட்டுவிடும்.

சரி ஜாதகம் சரியாக அமைந்து, செய்துவைத்த திருமணங்கள் அனைத்தும் வெற்றிக்கொடி நாட்டுகின்றனவா என்றால் அதுவும் கிடையாது. ஜாதகம் பார்த்து 9/10 என distinction வாங்கிய பல திருமணங்கள் ஆரம்பத்திலயே முறிவு பெறுகின்றன. சரி இப்பொழுது இதற்க்கு என்ன சொல்லப் போறீர்கள் என்று கேட்டால் அங்கு விதி என்ற ஒன்றைச் சொல்லுவார்கள். ஆக இங்கு ஜாதகம் செல்லாது.

அமைந்தால் ஜாதகம், முறிந்தால் விதி இப்படி எதற்கும் ஒரு காரணம் வைக்கிறார்கள்.

சரி ஜாதகத்தை நம்பலாமா கூடாதா ? என்று கேள்வி எழுப்பினால், விடை கிடைப்பதற்குப் பதிலாக அது அதற்க்கு ஆதி கேள்வியான, விதி இருக்கா இல்லையா ? என்ற கேள்வியையும், அது அதற்க்கு ஆதி கேள்வியான, கடவுள் இருப்பது உண்மையா இல்லையா ? என்பதையும் எழுப்புகிறது. இப்படி முரண்பட்ட கேள்விகளைக் கொண்டு முச்சந்தியில் நிற்கின்றன திருமணங்கள்.

ஜாதகம் இருப்பது உண்மையென்றால் எப்படி 9/10 வாங்கிய திருமணங்கள் முறிகின்றன, 4/10 வாங்கிய வரன்கள் (இவை பெரும்பாலும் காதல் திருமணங்கள்) made for each other ஆக உள்ளன. இதற்காக நான் காதல் திருமணங்கள் அனைத்தும் வெற்றி பெறுகின்றன என்று கூறவில்லை. அவைகள் முறிந்தால் ஜாதகம் காரணமாக இருக்காது, கல்யாணத்திற்கு முன் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளாமல் ஒருவரைப் பற்றி மற்றொருவர் கொண்டிருந்த மாய பிம்பங்களே காரணமாக இருக்கும்.

திருமணங்களை மனதைப் பார்த்து நிச்சயுங்கள் கட்டத்தைப் பார்த்து நிச்சயிக்காதீர்கள்.

Wednesday, December 9, 2009

விருப்பு வெறுப்புகள், ரசிப்புத் திறன் மூலம் ஒருவரை அடையாளப்படுத்துவது சரியா?

பொதுவாக ஒவ்வொருவருக்கும் அவர்களுக்குப் பிடித்தவர்கள் என்று பல பேர் இருப்பார்கள். அவர்கள் அவர்களுக்கு நெருக்கமானவர்களாகவோ அல்லது தூரத்தில் இருக்கும் நட்சத்திரமாகவோ இருக்கலாம். தனிமனிதருக்கும், அவருக்கு பிடித்தமானவர்களுக்கும் இடையே உள்ள தொடர்பை என்னவென்று சொல்வது, அரசியல் என்றால் தலைவர் - தொண்டர், கலைத்துறை என்றால் கலைஞன் - ரசிகன். சில நேரங்களில் பொதுவான வார்த்தையாக விசிறி. தொண்டன், ரசிகன் போன்ற வார்த்தைகள் அவற்றிற்க்கான இயல்பான அர்த்தத்தை இழந்துவிட்டதாகவே எனக்குத் தோன்றுகிறது. தற்காலங்களில் ஒரு தலைவருக்குத் தொண்டன் என்றோ அல்லாத ஒரு கலைஞனுக்குத் ரசிகன் என்று கூறினாலே அவன் ஏதோ, தவறான செயலை செய்பவனாகவோ அல்லது இன்னும் கூடுதலாகச் சொல்லப்போனால் ஒரு படிக்காத காட்டுமிராண்டி என்றோ எண்ணத் தோன்றும். தன்னை முகம் தெரியாத, தனக்குப் பழக்கமே இல்லாத மூன்றாம் மனிதரிடம் முழுவதுமாக ஒப்படைப்பதை பிறகு என்னவென்று சொல்லுவது?. எனக்கும் ஒருவருக்கு கண்மூடித்தனமான ரசிகனாகவோ அல்லது ஒரு தொண்டனாகவோ இருப்பதில் விருப்பம் இல்லை. ரசிகன் என்ற சொல்லை விட தொண்டன் என்ற சொல் எனக்கு மிகவும் அருவருப்பான சொல்லாகத் தோன்றுகிறது. அதற்க்கு இக்கால அரசியல் தலைவர்கள் காரணமாக இருக்கலாம்.

நான் ஒருதடவை அலுவலகத்தில் என் குழுவில் இருந்தவருடன் பேசிக்கொண்டிருந்தபோது ஒரு சுவாரசியமான விவாதம் நடந்தது. அப்பொழுது அவர் சொன்னார், ஒருவனின் ரசிக்கும் தன்மையை வைத்தோ அல்லது அவன் யாரை ரசிக்கிறான் என்பதை வைத்தோ அவனையோ அல்லது அவன் நடத்தையையோ தீர்மானிக்கக்கூடாது. அப்படிச் செய்தால் அதுவும் ஒரு வகைத் தீண்டாமைதான் என்றார். அப்படிப் பார்த்தால் பீட்சா சாப்பிடுபவன் உயர்ந்தவனாகவும் இட்லி சாப்பிடுபவன் தாழ்ந்தவனாகவும் ஆகும், அதை நீங்கள் ஒப்புக்கொள்வீர்களா? என்றார். அவருக்கு நிச்சயமாக என்ன பதில் சொல்லுவது என்று எனக்குத் தெரிந்துருக்கவில்லை. ஒரு நாகரீக சமூகத்தில் ஒருவன், தான் ஒசாமா பின் லேடனுக்கு ரசிகன் என்று கூறினால் அவன் எப்படி பார்க்கப்படுவான் என்று எனக்குத் தெரியவில்லை.

ஒரே ஆளைப் பற்றி இருவரிடம், உங்களுக்கு ஏன் அவரைப் பிடித்திருக்கிறது என்று கேட்டால், நிச்சயமாக இருவரும் வெவ்வேறு காரணங்களைச் சொல்வார்கள். ஒருவரை, ஒவ்வொருவரும் பார்க்கும் கோணங்களும் மற்றும் அவரைப் பற்றி ஒவ்வொருவருக்கும் கிடைக்கும் தகவல்களும் வேறுபடும். மேலும் பார்க்கும் ஒவ்வொருவரின் குணாதீசியங்களும் அவரின் ரசிக்கும் திறனை மாற்றியமைக்கும் இயல்பு கொண்டவை. இத்தகைய காரணங்களாலே ஒருத்தருக்கு ஒருவர் மிகப் பிடித்தவராகவும் மற்றொருவருக்கு பிடிக்காதவராகவும் ஆகிவிடுவார்.


மற்றொரு முக்கியமான அம்சம் ஒரு தனிமனிதர் அல்லது ஒரு குழுமம் எந்த வகையில் முன்னிறுத்தப்படுகிறார்/கிறது என்பதைப் பொருத்தும் அமையும். எடுத்துக்காட்டாக வால்மீகி ராமாயணத்தில், ராவணன் மிகக் கொடூரவனாகவும், மிகக் கொடியவனாகவும் சித்தரிக்கப்பட்டிருப்பான். ஆனால் கம்ப ராமாயணத்தில், ராவணன் மிகச் சிறந்த சிவ பக்தனாகவும், கலைத்தாயின் தலைமகனாகவும், மிகச் சிறந்த ஆட்சியாளனாகவும் சித்தரிக்கப்பட்டிருப்பான். அவன் செய்த ஒரே பாவச் செயல் பிறன் மனை நோக்கியதுதான் என்று கம்ப ராமாயணம் வாதிடும். கம்ப ராமாயணத்தைப் படித்தவர்களுக்கு ராவணன் கொடூரமானவனாகத் தெரியமாட்டான். ஏன், தமிழிலே ராவண காவியம் என்று ராவணனைப் பற்றி ஒரு காவியமே உள்ளது .

ஒரு சிலருக்கு ஒருவரைப் ஏதோ ஒரு சில காரணத்திற்க்காகப் பிடித்துவிட்டால், பின் அவருடைய எந்த செயலும், ஏன் தவறான செயல்கள் கூட கண்ணுக்குத் தெரியாது, காதலில் இருப்பதைப் போல! அதனால்தான் வரலாற்றில் கொடியவர்களாக இருந்தவர்களுக்கு கூட உண்மையான காதலிகள் இருந்தார்கள்.

எனக்குத் தெரிந்து பல நேரங்களில் தீமையே நன்மையை விட பராக்கிரமசாலியாகவும, தந்திரம் மிகுந்ததாகவும் இருக்கும். தீமையே பெரும்பாலும் ரசிக்கும்படியாகவும் கவர்ச்சியாகவும் இருக்கும். வில்லன்களே அதிக சக்தி உடையவர்களாக இருப்பார்கள். அதனாலேயே வில்லன்களுக்கும் ரசிகர்கள் அதிகம் உண்டு. ஹிட்லர் எனக்குத் தெரிந்து இதற்க்கு மிகச் சிறந்த உதாரணம். இரண்டாம் உலகப் போரின்போது சுற்றி இருக்கும் அனைத்து நாடுகளின் மீதும் போர் தொடுக்கும் தைரியமும் திறமையும் ஜெர்மனி கொண்டிருந்ததது. அக்காலங்களில் பொறியியல் உள்ளிட்ட பல துறைகளில் ஜெர்மனி மிகச் சிறந்து விளங்கியது. அதற்க்கு மிக முக்கியக் காரணம், ஹிட்லர்.

ஹிட்லர் மிகத் திறமைசாலி. அவர் ஒரு மிகச் சிறந்த தலைவராகவும் , தன் பேச்சால் ஜெர்மனி மக்களை கட்டிப் போடும் திறமையைக் கொண்டிருந்தார். ஆனால் இரண்டாம் உலகப் போரின் சமயத்தில் ஹிட்லரைப் பற்றி பேசுவது என்பதே மிகக் கொடிய குற்றம் செய்ததாகக் கருதப்பட்டது . முதலாம் உலகப் போரின்போது ஜெர்மன் ஷெப்பர்ட் நாயின் பெயரே மாற்றப்பட்டு அல்சேசன் என்று அழைக்கப்பட்டது. அந்த அளவிற்கு ஜெர்மனியின் மீதான வெறுப்பு இருந்தது. 1977 ஆம் ஆண்டுதான் திரும்பவும் ஜெர்மன் ஷெப்பர்ட் என்று பெயர் மாற்றப்பட்டது.

விருப்பு வெறுப்புகள் காலத்திற்கு காலம் , ஆளுக்கு ஆள் வேறுபடும். மேற்க்கூறிய ஜெர்மன் ஷெப்பர்ட் நாயே அதற்க்கு ஒரு உதாரணம். உலகப் போரின் தாக்கம் வரை அந்நாய் அல்சேசன் என்று அழைக்கப்பட்டது. அதே நாய் உலகப் போர்களின் தாக்கம் முடிந்த பிறகு திரும்பவும் ஜெர்மன் ஷெப்பர்ட் என்று மாற்றப்பட்டு, உலகம் முழுவதும்
அதிகமாக விரும்பப்படும் நாயாக உள்ளது.

ஆக ஒருவர் மற்றொருவரின் மீது கொண்ட விருப்பு வெறுப்புகள் ,ரசிக்கும் தன்மை ஆகியவற்றை கொண்டு ஒருவரை அடையாளப்படுத்துவது
சரியா?

Wednesday, December 2, 2009

குடியேறிகள்

ஒரு நாள் பக்கத்து வீட்டுப் பையனை கபடி விளையாடக் கூப்பிட்டேன் . அவன் கபடினா என்ன? என்று கேட்டான். பிறகு அவனிடம் எப்படிச் சொல்லுவது இந்தியா கபடில தங்கப்பதக்கம்லாம் வாங்கிருக்குனு. சரி கிட்டினாவது என்னான்னு தெரியுமா என்றேன். அதற்க்கு அவன் கிரிக்கெட் பேட்டையும், பந்தையும் கொண்டு வந்தான். பரவாயில்ல கிட்டிக்கும் கிரிக்கெட்டுக்கும் சம்பந்தம் உண்டுன்னு ஓரளவுக்கு சமாதானம் அடைந்தேன். ஒரு நாள் தொலைக்காட்சி செய்தியில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டைப் பற்றிக் காட்டினார்கள். நான் பக்கத்து வீட்டுப் பையனிடம் எப்படி கொம்பு பிடித்து காளையை அடக்குகிறார்கள் பார் என்றேன். அதற்க்கு அவன் கொம்ப வச்சு பந்தல் தான் போடுவாங்க, மாடு எப்படி பிடிப்பாங்க என்றான் மாட்டுக் கொம்புக்கும், கழிக்கும் (கம்பு) வித்தியாசம் தெரியாத பையன் .

இது கூட பரவாயில்லை, எங்களின் கல்லூரிப் படிப்பின் மூன்றாம் ஆண்டு சுற்றுலா சென்றார்கள். சென்னை சென்ட்ரலிலிருந்து கோவா செல்வதாக ஏற்ப்பாடு. எங்கள் நண்பர்களில் ஒருவன் "சென்ட்ரல் ஸ்டேஷனுக்கு எப்படிடா போகணும்னு கேட்டான் ". நம்புங்கள் அவன் 22 வருடமாக கோடம்பாக்கத்தில் பிறந்து வளர்ந்தவன் !

பொதுவாக மாநகரங்களில் வசிக்கும் பிள்ளைகளின் தேவைகள் அனைத்தும் அம்மாநகரத்திலேயே நிறைவேற்றப்பட்டு விடுவதால் அவர்களுக்கு பிற இடங்களைத் தேடி அலையவேண்டிய தேவை இல்லை. அதனால் மாநகர வாழ்க்கையைத் தவிர வேறொன்றும் தெரிவதுமில்லை. சென்னையில் வாழும் பல பேர்கள், தமிழ்நாடு முழுவதும் ஓடும் அனைத்துப் பேருந்துகளின் பெயரும் "பல்லவன்" தான் என்று நினைத்து கொண்டிருந்தார்கள். ஓவ்வொரு ஊரிலும் அந்தந்த ஊர்களில் புகழ் வாய்ந்த அரசர்களின் (சேரன், சோழன்,பாண்டியன் ...) பெயரில் பேருந்துகள் இயங்கின என்பதோ , பின்னர் ஜாதிக் கலவரங்களின் பொழுது எதிர் ஜாதிக்கார மன்னரின் பெயரைத் தாங்கிய பேருந்துகள் தாக்கப்பட்டன என்பதால் அனைத்துப் பேருந்துகளின் பெயர்களும் மாற்றப்பட்டு, அந்தந்த பேருந்துகள் இயங்கிய கோட்டங்களின் பெயரில் அழைக்கப்பட்டன என்பதோ தெரிந்திருக்கவில்லை.

பெரிய மாநகரங்களிலிருந்து சிறிய ஊர்களுக்குச் செல்வோருக்கு ஏற்ப்படும் ஆச்சரியங்கள் போலவே , புதிதாக மாநகரங்களுக்குச் செல்பவர்களுக்கும் (பெரும்பாலும் ஏமாற்றமே) ஏற்ப்படும். எனக்குத் தெரிந்து சென்னையைத் தவிர்த்து மற்ற ஊர்களிலெல்லாம் பேருந்துகளில் பயணச்சீட்டு பயணிகளைத் தேடி வரும். நம்புங்கள், அதிக பேருந்து வசதி இல்லாத ஊர்களிலெல்லாம், சின்னப் பசங்களும், ஆண்களும் பேருந்தின் மேல் (Top) ஏறிக்கொள்வார்கள். இங்கு stage போடுவதைப் போல, அங்கும் stage போட்டு நடத்துனர் பேருந்தின் மீது ஏறி பயணச்சீட்டுத் தருவார். ஆனால் இங்கு சென்னையிலோ காலியாக இருக்கும் பேருந்தில் கூட நாம்தான் சென்று பயணச்சீட்டு வாங்க வேண்டும். என்னை ரொம்ப சங்கடப்படுத்தும் இன்னொன்று, எங்கள் ஊரில் "நீங்கள் " விளையாடும் இடங்களிலெல்லாம் இங்கு வயது வித்யாசமின்றி "நீ " விளையாடுகிறது.

பொதுவாக எல்லா ஊர்களும் அவற்றிற்கே உரிய திருவிழாக்களைக் கொண்டிருக்கும். அந்த திருவிழாக்களின் பின்னே சரித்திரங்களும், பல புனைக் கதைகளும் பின்னப் பட்டிருக்கும். அந்த புனைக் கதைகள் உண்மையோ அல்லது பொய்யோ, யாருக்கும் தெரியாது. இருந்தாலும் அவற்றை பாட்டிமார்கள் சொல்லச் சொல்ல ஆனந்தமாக இருக்கும் .மதுரையின் சித்திரைத் திருவிழா மிகச் சிறப்பாக ஒன்று. அத்திருவிழவுக்கான கதைகளும் அருமையாக இருக்கும். சித்திரைத் திருவிழாக் காலம் முடிந்த பிறகு ஒரு குருவி "அக்காாாா அக்காாாா" என்று கத்தும். அதன் பெயரே அக்கா குருவி. இதற்க்கு ஒரு கதை சொல்லுவார்கள். திருவிழாக் கூட்டத்தில் இந்தக் குருவி தன்னுடைய அக்காவைத் தொலைத்துவிடுமாம். அதை தேடிக் கொண்டு அக்கா அக்கா என்று அலையுமாம். அடுத்து வரும் ஒரு திருவிழாவில்தான் அவைகள் ஒன்று சேருமாம். அதுவரை இப்படியேதான் கூவிக் கொண்டு அலையும் என்று கதை சொல்லுவார்கள். அப்பொழுதெல்லாம் திருப்பி கேட்கத் தோன்றவில்லை, ஏன் தங்கச்சிக் குருவி மட்டும் தான் "அக்கா அக்கா " என்று தேடுமா? ஏன் அக்கா குருவி "தங்கச்சி தங்கச்சி " என்று தேடாதா? என்று. இருந்தாலும் அந்த புனைக் கதைகள் சுவாரசியமாகத்தான் இருந்தன. மாநகரங்களில் வசித்த பிள்ளைகள் இப்படிப்பட்ட கதைகளைக் கேட்டிருப்பார்களா என்று எனக்குத் தெரியவில்லை.

எனக்குத் தெரிந்து சென்னையில் நடக்கும் திருவிழாவில் முக்கியமானது, மயிலையில் அறுபத்து மூன்று நாயன்மார்களின் ஊர்வலம். ஆனால் அது மதுரை சித்திரைத் திருவிழாப் போல் ஊரே கூடி கொண்டாடும் திருவிழா என்று கூற முடியாது.

மார்கழி மாதக் குளிரில் அதிகாலையில் எழுந்து படிப்பதென்பது சற்றுக் கடினம் தான், இருந்தாலும் அதனையும் சுவாரசியமாக்கியவை, வெகு தூரத்தில் உள்ள சிறு கோயிலிருந்து ஒலிக்கும் L.R.ஈஸ்வரியின் அம்மன் பாடல்களும், ஐய்யப்பன் பாடல்களும்தான். கஷ்டப்பட்டு அதிகாலை 4 மணியிலிருந்து 5 மணிவரைப் படித்த பின் பார்த்தால், தெருவே களை கட்டத் தொடங்கிவிடும் . ஓவ்வொரு வீட்டிலிருந்தும் பெரிய பெரிய கோலங்கள் போட ஆரம்பிப்பார்கள். நாங்களும், அலுவலகப் பணி முடித்து அசதியாகத் தூங்கிகொண்டிருக்கும் எங்கள் அம்மாவை எழுப்பி பெரிய கோலம் போடச் சொல்லுவோம். எங்கள் அம்மா சில நேரம் சிறிய கோலமாகப் போட்டுவிடுவார்கள். அப்பொழுதெல்லாம் நாங்கள் எங்கள் மாடி வீட்டு அக்காவிடம் தஞ்சம் அடைந்துவிடுவோம், எங்கள் வீட்டு வாசலில் பெரிய கோலம் போடச் சொல்லி. பின்னர் அவற்றிற்கு வர்ணப் பொடி கொண்டு வண்ணம் தீட்டுவோம். விடிந்தவுடன் சிறுவர்களுக்கிடையே யார் வீட்டு கோலம் பெரிது என்று பெரிய போட்டியே நடக்கும். ஆனால் சென்னையிலோ மார்கழிக் கோலங்கள் இரவில் ஆரம்பித்து நடுச்சாம நாய்களின் குரைப்புடன் முடிந்துவிடுகின்றன.


எனக்கு எப்பொழுதும், சென்னைத் தவிர மற்ற சிறு நகரங்களிலும், ஊர்களிலும் இருக்கும் வீடுகள் பெரிதாகவேத் தோன்றுகின்றன. அதற்க்குக் காரணம் மனமா? அல்லது (வாடகைப்)பணமா? என்று தெரியவில்லை. எனக்கு என்னவோ சென்னைக் குடிமக்கள், குருவிகள் கூட கூடு கட்டத் தயங்கும் குறைந்த சதுர அடி வீட்டில்தான் குடியிருப்பதாகத் தோன்றுகிறது.

இப்படி குடியேறிய ஊரைப் பற்றி குறைகள் கூறக் கூடாதுதான், இருந்தாலும் மழைக்காலத்தில் தண்ணீர் தீவுகள் தேடும் காலடித் தடங்கள் போல மனமானது, குடியேறிய ஊரின் ஓவ்வொரு நடத்தையிலும் சொந்த ஊரின் சாயலைத் தேடுகிறது.

Sunday, November 29, 2009

நிலா

நான் உறங்கும் போது சில நேரங்களில் உலகம் என்னுடைய காலடிகளிலிருந்து நழுவி என்னைத் தனியே விட்டு விட்டு நிலவையும், நட்சத்திரங்களையும் களவாடிக் கொண்டு செல்வது போல் தோன்றும். அந்த நேரங்களில் எல்லாம் உறக்கத்திலிர்ந்து சடாரென்று எழுந்து, என்னுடைய காலடிகளை நிலத்தில் அழுத்தமாக ஊன்றிக் கொண்டு என் நிலவும் நட்சத்திரங்களும் பத்திரமாக இருக்கிறதா என்று ஜன்னலின் வழியே எட்டிப் பார்ப்பேன், பின் அவற்றை என் வீட்டின் ஜன்னல் கம்பிகளுக்கிடையே சிறைவைப்பேன். பின்னும் உறக்கம் வரப் பிடிக்காமல் நிலவை ரசித்துக் கொண்டே அதற்க்குக் காவலிருப்பேன் .

பௌர்ணமி நிலவைப் பார்ப்பதென்பதே மிக அழகா இருக்கும். அந்த முழு நிலவில் இருக்கும் பாட்டி சுட்ட வடையையும் (மலைகளையும் , மேடுகளையும் ), அந்த முழு நிலவைச் சுற்றி அமைந்திருக்கும் அழகிய ஆரோவிலும், அந்த நிலவு தரும் குளுர்ச்சியும் மிக அற்புதமாக இருக்கும் .

ஒரு முழு நிலவு நாளன்று, யாருமற்ற கடற்கரையில் தனியாகப் படுத்துக்கொண்டு, நிலவையும் அதைச் சுற்றியுள்ள ஒளி வட்டத்தையும் இரவு முழுவதும் பார்ப்பதென்பது மிக அற்புதமாக இருக்கும். நிலவு அற்ற அமாவாசை இரவு கூட இனிமையாகத்தான் இருக்கும். அன்று வானம் முழுவதும் நட்ச்சத்திரங்களைக் கட்டி தொங்கவிட்டது போன்று மிக அழகாக இருக்கும்.

நீங்கள் கவனித்திருப்பீர்களேயானால், வானத்தில் சூரியனைக் கடக்கும் பறவைகளைக்காட்டிலும் நிலவைக் கடக்கும் பறவைகள் மிக அழகாக இருக்கும்.

எந்த ஒரு அழகிய இயற்கைகாட்சிப் புகைப்பபடங்களிலும் பத்தில் ஒரு புகைப்படமாவது, ஒரு மலைத்தொடரின் இடுக்கிலிருந்து முழு நிலவு வெளிவருவது போலவும் , அது வீசும் பால் போன்ற மென்மையான ஒளியும் ,அழகிய சிற்றோடையும் அதில் ஒரு சிறிய படகும் ,அந்த ஓடையின் இரு புறங்களிலும் ஓங்கி உயர்ந்த தென்னை மரங்களையும் , அப்பொழுது இரண்டு மூன்று பறவைகள் எட்ட முடியாத நிலவைக் கடக்க முயற்சித்துக் கொண்டிருப்பதைக் காணலாம் . அதுதான் இயற்க்கை அதுதான் நிலா.

பலபேர் நிலவை இட்லி , வடை என்று அபத்தமாக எதனெடனோ ஒப்பிடுவார்கள். என்னைப் பொறுத்தவரை நிலவை ஒரு அழகிய புதிய வெள்ளிக் கிண்ணத்தில் ஊற்றி வைத்த பசும் பாலுடன் தான் ஒப்பிட வேண்டும். நிலவின் ஒளியானது பூரணமாக வெண்மையாக இருக்காது. அது போலவே அப்பொழுதுதான் கறந்த பசும் பாலும் பூரண வெண்மையாக இருக்காது. அது ஒரு மஞ்சள் நிறம் கலந்ததாக இருக்கும். அது போல்தான் நிலவின் வெண்மையும். அது எதோ ஒரு மஞ்சள் நிறம் சிறிதளவு கலந்ததாகவோ அல்லது சிறிதளவு சாம்பல் நிறம் கலந்ததாகவோ அல்லது ஏன் சிறிதளவு நீலம் கலந்ததாகவோ இருக்கிறது என்று தோன்றும். என்னால் சரியாக அனுமானிக்க முடியவில்லை. எதுவாக இருந்த போதிலும் அந்த பூரண நிலா அமைதியைக் கொடுக்கும்.

நம் குழந்தைகள் பால்சோறு சாப்பிட்டு வளர்ந்ததைவிட நிலாச் சோறு சாப்பிட்டே வளர்ந்ததே அதிகம் .

சூரியனானது வீரத்தையும், பெருமையையும், வெற்றியையும் குறிக்க பெரியவர்களுக்கு என்று ஆனபோது, குழந்தைகளுக்கு எட்டிப் பிடித்து விளையாடுவதற்கும், மேகங்களில் ஒளிந்துகொண்டு கண்ணாம்பூச்சி விளையாடுவதற்கும் நிலா ஆனது.

நிலா குழந்தைகளுக்கானது என்று மட்டுமல்லாமல் பெரியவர்களுக்கான பரிமாணங்களையும் எடுக்கிறது. அக்காலங்களில் காந்தர்வத் திருமணங்கள் பெரும்பானவைகள் நிலவைச் சாட்சியாகக் கொண்டே நிகழ்ந்த்தன. ஏன் இன்றும் கூட பல காதல்களுக்கு தூதுவனாகவும், அந்த காதல்களுக்குச் சாட்ச்சியாகவும், சில நேரங்களின் அந்த காதல்களின் பிரிவிற்க்கும் சாட்ச்சியாகின்றது.

சங்ககாலக் கவிஞர்கள் முதல் இக்காலக் நிலா ரசிகன் வரை நிலவைப் பாடாதவர்கள் கிடையாது.

அவற்றில் ஒன்று கீழே:

நிலவு பாக்கலாம் வா!

நீ விண்ணில் பார்க்க ...
நான் உன்னில் பார்க்க ....
வெண்ணிலா என்று சொல்லாமல் .. உனக்கு
வேறு பெயர் வைத்தவர் யார் ?..நீ
விண்ணிலே இல்லாததால ?..உன்னிலே
களங்கமே இல்லாததாலா ?

ஒவ்வொரு இரவும்
வெண்ணிலா முழிப்பது
என் நிலா தூங்குவதாலா?!

பின் குறிப்பு:

இக்கவிதை என்னுடையதல்ல. பாடலுக்கு நன்றி தயா from forumhub.com . எழுத்துக்கள் என்னுடையவை :)

இக்கவிதை நிலவை பற்றியது அல்லது காதலியைப் பற்றியதா என்பதை உங்களின் அனுமானத்திற்கு விட்டு விட்டு விடுகிறேன் :).

Thursday, November 5, 2009

கடவுளிடம் காலை நீட்டினேன் !

நான் அன்று வீட்டில் காலை நீட்டி உட்கார்ந்திருந்தேன். நான் காலை நீட்டி உட்கார்ந்திருந்த இடம் சாமி அறையை நோக்கியவாறு இருந்தது. அதைப் பார்த்த என் அம்மா "டேய், சாமிய நோக்கி காலை நீட்டாதடா" என்றார். ஏனென்றால் அது சாமியை அவமதிப்பதாக இருக்கிறதாம். அப்பொழுதுதான் நான் சாமி அறையை நோக்கியவாறு காலை நீட்டிக்கொண்டிருப்பதை உணர்ந்தேன். என்னுடைய நோக்கம் சாமியை அவமதிப்பதில்லை என்பதால் அது எனக்குப் பெரிதாக தோன்றவில்லை. இருந்தாலும் நான் காலை மடக்கிய பிறகுதான் என் அம்மா சமாதானமடைந்தார்.

அதேபோல் நம் சிறு வயதில் ஏதேனும் சிறு புத்தகத்தையோ அல்லது ஏன் ஒரு சிறு தாளையோ மிதித்துவிட்டால், அது சரஸ்வதி என்று சொல்லி அதனை தொட்டுக் கும்பிடச் சொல்லுவார்கள். இன்றும் கூட நான் அந்தப் பழக்கத்திற்கு அடிமையானவன்தான்.

என்னைப் பொறுத்தவரை கடவுள் மரியாதை, அவமரியாதை இவற்றிற்க்கெல்லாம் அப்பாற்ப்பட்டவர். அப்படி இருந்தால் மட்டுமே அவர் கடவுள்.

சிவபெருமான், தன்னைப் பற்றிக் கூறும்போது கூட "ஒருத்தன் என்னைக் காலால் எட்டி மிதித்தவன்" என்பார். அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான கண்ணப்ப நாயனார், சிவபெருமானின் கண்களிலிருந்து குருதி பெருகுவதைக் கண்டு தன் ஒரு கண்ணைத் தோண்டி சிவபெருமானின் கண்ணில் வைப்பார். அப்பொழுது சிவபெருமானின் மற்றொரு கண்ணிலிருந்தும் குருதி வருவதைக் கண்டு தன் மற்றொரு கண்ணையும் தோண்டி வைக்க முயல்வார். சிவபெருமானின் கண் இருக்கும் இடம் அறியத் தன் காலால் சிவபெருமானின் கண் இருக்கும் இடத்தை மிதித்துக்கொள்வார். அதனையே சிவபெருமான் "ஒருத்தன் என்னைக் காலால் எட்டி மிதித்தான்" என்று நெகிழ்ச்சியுடன் நயம்படக் கூறுவார்.

ஆக சிவபெருமானே தன்னைக் காலால் எட்டி மிதித்ததை அவமரியாதையாகக் கருதவில்லை.

ஏன் மற்றப் பெருமக்களும் அவமரியாதையாகக் கருதவில்லை. மாணிக்கவாசகப் பெருமான், கண்ணப்ப நாயனாரைப் பற்றிக் குறிப்பிடும் போது,

கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை கண்டபின்
என்னப்பன் என்னொப்பில் என்னையும்ஆட் கொண்டருள

கண்ணப்பனுக்கு ஈடான அன்பு என்னிடம் இல்லாவிட்டாலும் கூட இறைவர் என்னையும் ஆட்கொண்டருளியதாகத் திருகோத்தும்பியில் குறிப்பிடுகின்றார்.

நம் உடம்பில் இருக்கும் மற்ற உறுப்புகளைப் போலவே காலும், ஆனால் அதனை மட்டும் அவமரியாதையாகக் கருதுவது ஏனோ என்று தெரியவில்லை.

நான் காலைப் பற்றி இவ்வாறு கூறும்போது என்னிடம் கேட்கப்படும் ஒரு கேள்வி, உன்னை யாராவது காலால் மிதித்தால் ஏற்றுக்கொள்வாயா?.

அதற்க்கு என்னுடைய பதில் அவர் எந்த நோக்கத்தோடு மிதித்திருந்தார் என்பதைப் பொறுத்தது.

என்னை மிதிக்கும் ஒருவர் தெரியாமல் மிதித்திருந்தாலோ அல்லது மிதிக்கும் ஒரு செயல், அவமரியாதை என்ற எண்ணம் இல்லாமல் மிதித்திருந்தாலோ, நான் தவறாக எண்ணமாட்டேன் .

கடவுள் என்று வரும்போது மேற்க்கூறியக் கருத்து இன்னும் மாறுபடும்.

ஒருவன் கடவுளை அவமதிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு மிதித்தாலும், அவன் நல்லவனாக இருக்கும் பட்சத்தில் கடவுள் அதனைப் பெரிதாக எண்ணமாட்டார். எண்ணவும் கூடாது. அப்படி இருந்தால் மட்டுமே அவர் கடவுள்.

அக்பர், பீர்பால் கதைகளில் ஒரு கதை வரும். ஒரு நாள் அக்பர், தன்னுடைய அவையில் வந்து "நேற்று ஒருவன் என்னை நெஞ்சில் ஏறிக் காலால் எட்டி மிதித்தான். அவனை என்ன செய்யலாம்?" என்று கேட்பார். உடனே அவையில் உள்ளவர்கள் எல்லாம் வெகுண்டு எழுந்து, அவன் காலை வெட்ட வேண்டும், அவனைக் கழுவில் ஏற்றவேண்டும், அவன் தோலை உரிக்க வேண்டும் என்று மாறி மாறி சொல்வார்கள். அப்பொழுது பீர்பால் மட்டும் அவன் காலுக்கு பொன்னால் ஆபரணம் அணிவிக்க வேண்டும் என்பார். அப்பொழுது அவையில் உள்ளவர்கள் எல்லாம் திகைத்து என்ன இது என்பார்கள்?. அதற்க்கு பீர்பால், சக்ரவர்த்தியை நெஞ்சில் ஏறி மிதிக்கக் கூடியவர் அவருடைய சிறு குழந்தை அன்றி வேறு யாராக இருக்க முடியும் என்பார்.

ஆக மிதித்தல் என்பது பார்ப்பவரின் கண்களைப் பொருத்தும், அச்செயலைச் செய்பவரின் நோக்கத்தைப் பொறுத்துமே அமைகிறது.

Monday, October 26, 2009

கற்பனைகள் கட்டுக்கடங்காதவைகள்!

ஒரு விஷயத்தை எழுத்திலிருந்து திரைக்கு கொண்டுவருவது என்பது சற்றுக் கடினமான செயலே. பொதுவாக ஒரு திரைப்பட இயக்குனர் தான் நினைத்ததை அப்படியே திரையில் கொண்டு வந்திருப்பார்களா என்றால், 100% பண்ணி இருக்கமாட்டார்கள். ஒவ்வொரு படத் தோல்வியின் போதும் ஒவ்வொரு நடிகரும் கூறும் குற்றச்சாட்டு, இயக்குனர் என்னிடம் கூறிய கதை வேறு ஆனால் படத்தில் வந்தது வேறு என்பார்கள். நிச்சயம் இயக்குனர் வேறு கதையை படமெடுத்திருக்கமாட்டார், ஆனால், தான் கூறிய கதையையே படமாக்கும் போது அது வேறு பரிமாணம் எடுத்திருக்கும். இது அவரே எதிர்பார்க்காத ஒன்றாக இருக்கலாம். திரைப்படம் எடுக்கும்போது கதை தெரிந்த ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகக் கதையைக் கற்பனை செய்திருப்பார்கள். ஒரு தயாரிப்பாளர் ஒரு விதமாக கற்பனை செய்திருப்பார், கதாநாயகன் ஒரு விதமாக கற்பனை செய்திருப்பார். ஏன் இயக்குனரே ஒரு விதமாக கற்பனை செய்திருப்பார். ஒரு படத்தின் வெற்றியே குறைந்தபட்சம் ஒரு இயக்குனர் ஒரு கதையில் தான் கற்பனை செய்ததில் எத்தனை சதவீதம் திரையில் கொண்டு வர முடிந்தது என்பதில்தான் இருக்கிறது. ஏனெனில் ஒரு மனிதனின் கற்பான சக்திக்கு ஈடு எதுவும் கிடையாது. அது எல்லைகள் அற்றது. அதனை ஒரு குறிப்பிட்ட எல்லைக்குட்பட்ட திரைக்கு கொண்டு வருவதென்பது அசாத்தியமான செயல். அதனை ஒரு இயக்குனர் எந்த அளவுக்கு வெற்றிகரமாகச் செய்கிறார் என்பதில் தான் ஒரு படத்தின் வெற்றியே அடங்கியுள்ளது.

பொதுவாக நாவல்களை படமாக்குவதென்பது சற்று அசாத்தியமான செயலே. ஏனெனில் இங்கு கதையானது ஏற்கனவே ரசிகனுக்கு அறிமுகமானதாக இருக்கும். அந்நாவலை படிக்கும்போது ஒவ்வொரு ரசிகனும் ஒவ்வொரு விதமாக கற்பனை செய்திருப்பான். அதனை ஈடு செய்வதென்பது பெரிய விஷயம். அதனை மிகச் சில இயக்குனர்களே வெற்றிகரமாகச் செய்துள்ளனர். எ.கா : பாலச்சந்தர். அவருடைய 47 நாட்கள், எழுத்தாளர் சிவசங்கரியின் நாவலே. அப்படம் ஒரு வெற்றிப் படமாகவே அமைந்தது. ஆனால், நான் அந்நாவலை படித்தபின் அப்படத்தைப் பார்த்தவர்களைக் கண்டதில்லை. அதனால் அப்படம் ஒரு வாசகனுக்கு எந்த அளவு பிடித்தமாக இருந்தது என்பது எனக்குத் தெரியாது!.

தமிழ்த் திரையில் ஆரம்ப காலத்தில் வந்த படங்கள் எல்லாமே மக்களுக்கு அறிமுகமான கதைகளாகவே இருந்தன. ஆரம்ப காலத்தில் தமிழ்த் திரை உலகம் புராணக் கதைகளையே எடுத்தது. அவை பெரும்பாலும் வெற்றிப் படமாகவே இருந்தன. அவை வெற்றிப் படமாக அமைந்ததற்கு இயக்குனர்கள் மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தார்கள் என்பது மட்டுமே காரணம் அல்ல. அக்காலங்களில் பொழுதுபோக்கு அம்சங்கள் மிகக் குறைவு, அதனால் மக்கள் எதைத் திரையிட்டாலும் பார்த்தார்கள். ஆனால் இக்காலம் அப்படி அல்ல. மேலும் இக்கால (வாசகர்களின்) ரசிகர்களின் எதிர்பார்ப்பும் அதிகம். அதனைப் பூர்த்தி செய்வது என்பது சற்றுக் கடினமானதே.

நான் படித்ததிலேத் திரைக்கு வந்த ஒரு தொடர், லக்கி லூக் கார்ட்டூன். சிறு வயதில் நான் லக்கி லூக்கின் ரசிகன். அக்கார்டூனைப் படிப்பது என்பது எனக்குப் பிடித்தமான ஒன்று. சிறிது காலத்திற்கு முன்பு வரை கூட அக்கார்டூனைத் தேடி அதனைத் தமிழில் வெளியிட்ட ராணி காமிக்ஸ்ற்கு கடிதம் எல்லாம் அனுப்பினேன். அதே லக்கி லூக்கை சுட்டி தொலைக்காட்சியில் பார்த்த போது மிக ஆவலுடன் பார்த்தேன். ஆனால், அது என்னை ஏனோ அவ்வளவாக கவரவில்லை. சில விசயங்களைப் பார்க்கும் போது, இதனைப் பார்க்காமலே இருந்திருக்கலாம் என்று தோன்றும். அதேபோல் தான் லக்கி லூக்கை சுட்டி தொலைக்காட்சியில் பார்த்த போது எனக்குத் தோன்றியது. அதற்குக் காரணம் அது என் கற்பனையை ஈடு செய்யாமல் இருந்தது என்பதோடு மட்டுமல்லாமல் என் கற்பனையில் இருந்த லக்கி லூக்கை சிதைப்பதாகவும் இருந்தது.

கற்பனைகள் கட்டுக்கடங்காதவைகள். அதனை ஈடு செய்வது அவ்வளவு எளிதல்ல!

பின் குறிப்பு:

1. இப்பதிவையே நான் எப்படியோ எழுத எண்ணி எப்படியோ முடித்திருக்கிறேன். அப்படியானால் எண்ணத்திலிருப்பதை எழுத்திற்கும், எழுத்திலிருப்பதை ஒளிக்கும் கொண்டு வருவது எவ்வளவு கடினமான விஷயம்!.

2. 47 நாட்கள் திரைப் படத்தைப் பற்றிக் கூறியதற்காக மதுவிற்கும் கார்த்திக்கிற்கும் நன்றி :)

Wednesday, October 14, 2009

அளவுக்கு அதிகமான அங்கீகாரங்களும்,புறக்கணிப்புகளும் !

எனக்கு ஒரு விஷயம் புரியவே இல்லை. ஒரு வெளிநாடு வாழ் இந்தியர் (1*) ஏதேனும் ஒரு விருதைப் பெற்றால் இந்தியர்களும் இந்திய ஊடகங்களும் அவர்களுக்கு அளவுக்கு மீறி முக்கியத்துவம் கொடுப்பது. அதில் ஒரு latest entry Mr. வெங்கி ராமகிருஷ்ணன். நாம் ஒன்றைப் புரிந்துகொள்ள மறுக்கிறோம் அல்லது மறந்து விடுகிறோம். அவர்கள் இந்தியக் குடியுரிமை வேண்டாம் என்று சென்று விட்டவர்கள். அவர்களை போன்ற பெரும்பாலோனோர் தாங்கள் இந்தியர்கள் என்று சொல்லிக்கொள்வதைக் கூட விரும்பாதவர்கள் போன்றேத் தோன்றுகிறார்கள்.

“All sorts of people from India have been writing to me, clogging up my email box. It takes me an hour or two to just remove their mails,”
என்கிறார் வெங்கி. இருந்தாலும் நம் மக்கள் விடுவதாக இல்லை, அவரைப் பாராட்டி மெயிலா அனுப்பித் தள்ளுகிறார்கள். இதே போன்று மெயில்களை அவருடன் சேர்ந்து நோபெல் விருது பெற்ற மற்ற இருவருக்கும் அனுப்பினார்களா என்று எனக்குத் தெரியவில்லை !. எனக்குத் தெரிந்த வரையில் அவர் இந்தியாவில் பிறந்தவர். அதைத் தவிர எனக்குத் தெரிந்து அவருக்கும் நமக்கும் வேறு எந்தத் தொடர்பும் இல்லை, அவர் கூறியதை போல நாம் அனைவரும் மனிதர்கள் என்பதைத் தவிர!

இதே போன்று கல்பனாச் சாவ்லா இறந்த போது இந்தியா முழுவதும் துக்கம் கொண்டாடியது. அவருடைய இறப்பு மனிதர்கள் என்ற அளவில் அனைவருக்கும் வருத்தம் அளிக்கக் கூடியதே. நாம் நிச்சயம் துக்கம் அனுஷ்டிக்க வேண்டியதுதான், அவரும் ஒரு மனிதர் என்ற அளவில்!. ஆனால் நாம் அதற்க்கும் மேலாகச் சென்று. பல மாநிலங்கள் அவருக்கு இழப்பீடுகளையும், ஏன் தமிழக அரசு அவர் பெயரில் ஒரு விருதே அறிவித்தது!. இறந்து போனவர்களை பற்றிப் பேசக்கூடாதுதான், இருந்தாலும் எனக்கு இவ்விசயங்கள் சற்று அதிகமாகவேப்பட்டது.

இவ்வளவு செய்யும் நாம் ஒன்றை மறந்து விடுகிறோம், இன்னமும் எத்தனையோ நூற்றுக்கணக்கான இந்திய விஞ்ஞானிகள், பல வெளிநாட்டு வாய்ப்புகளை மறுத்துவிட்டு ISRO விலும், DRDO விலும் இன்னும் பல ஆராய்ச்சி நிறுவனங்களிலும், இந்தியாவிற்காக உழைத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

இத்தகைய விஞ்ஞானிகள் வெங்கி ராமகிருஷ்ணனோ அல்லது கல்பனா சாவ்லாவோ பெற்ற அங்கீகாரத்தில் நூற்றில் ஒரு பங்காவது பெற்றிருப்பார்களா என்பது சந்தேகமே!

புறக்கணிப்புகள் மட்டுமல்ல, அளவுக்கு அதிகமான அங்கீகாரங்களும் புறக்கணிப்புகள் ஏற்ப்படுத்தும் அதே விளைவுகளை ஏற்ப்படுத்திவிடும்!

P.S:

1.வெளிநாடு வாழ் இந்தியர் என்ற வார்த்தையிலேயே எனக்கு மாற்றுக் கருத்து உண்டு. அவர்கள் இந்தியர்களே அல்ல. அவர்களோ அல்லது அவர்களின் முன்னோர்களோ இந்தியாவில் பிறந்தவர்கள், அவ்வளவே!. இந்தியா வேண்டாம் என்று வேற்று நாட்டுக் குடியுரிமைப் பெற்ற பின் எப்படி , அவர்கள் இந்தியர்கள் ஆவார்கள்?

மொழி பெயர்ப்பு

ஒரு மொழிக்கு வளமைச் சேர்ப்பது, அம்மொழியிலேயே சிந்தித்து, அம்மொழியிலேயே எழுதப்படும் நூல்கள் மட்டுமே அல்ல, பிற மொழி நூல்களை ஒரு மொழியானது தன்பால் எப்படி ஏற்றுக்கொள்கிறது என்பதைப் பொருத்தும் அமைகிறது. ஒரு சிறந்த மொழியானது பிற மொழி நூல்களை, அந்நூல்களுக்கான கருவிற்கு எந்த வித சேதாரமும் இல்லாமல், அதன் கருத்துக்களை தன்பால், பாலுடன் நீர் கலப்பதைப் போல ஏற்றுக்கொள்ளவேண்டும். இது ஒரு மொழியின் வளமையைப் பொறுத்து மட்டுமே அமைவது அல்ல, அது மொழி பெயர்ப்பாளரையும் சார்ந்தது.

மொழி பெயர்ப்பு என்பது ஒரு விஷயத்தை ஒரு மொழியிலிருந்து பிரதி எடுத்து கொண்டுபோய் பிறிதொரு மொழியில் வைப்பதல்ல. மொழி பெயர்ப்பு என்பது மிகச் சிறந்த கலை. அது எல்லாருக்கும் வாய்ப்பதில்லை. ஏனெனில் அதற்க்கு அந்நூல் எழுதப்பட்ட மொழியிலும், அந்நூல் மொழிப் பெயர்க்கப்படும் மொழியிலும் ஒருவர் புலமை பெற்றிருக்கவேண்டும். இவ்வாறாகா இரண்டு மொழியிலும் புலமை பெற்றிருப்பதன் காரணமாகவே ஒருவர் மிகச் சிறந்த மொழி பெயர்ப்பாளராக ஆகிவிடமுடியாது. எடுத்துக்காட்டாக ஒரு மொழியில் இருக்கும், இரு மொழி புலமை வாய்ந்த ஒரு மிகச் சிறந்த எழுத்தாளர் நிச்சயமாக ஒரு சிறந்த மொழி பெயர்ப்பாளராக இருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. அக்கலை மிகச்சிலருக்கே வாய்த்திருக்கிறது .

பொதுவாக எனக்கு மொழி பெயர்ப்பு நூல்களைப் படிப்பதில் ஈடுபாடு அதிகம். ஏனெனில் அதன் மூலம் நாம் ஒரு புது கலாச்சாரத்தை, புது கருத்துக்களை, புது அறிவைப் பெற முடியும். ஆனால் துரதிஷ்டவசமாக மிகச் சில (எனக்குத் தெரிந்த அளவில் :) ) மொழி பெயர்ப்பு நூல்களே சிறந்த நூல்களாக அமைகின்றன. மொழி பெயர்ப்பு நூல்களில் அமைந்த்துவிடும் மிக முக்கியமானதும், ஏன் அதன் அடிப்படையையே குழைத்துவிடுவதுமானதுமான மிகப் பெரியத் தவறு வரிக்கு வரி, ஏன் சில நேரங்களில் வார்த்தைக்கு வார்த்தை அமைந்துவிடும் மொழிபெயர்ப்பு. மேலும் மொழி பெயர்க்கும் போது அந்நூலின் பின்புலத்தையும், அந்நூல் நடக்கும் களத்தையும், காலத்தையும் பற்றிச் சிறு குறிப்பாவது சேர்த்துக் கொடுக்கவேண்டியது மிக அவசியம். இது படிக்கும் வாசகனுக்கு அந்நூலைப் புரிந்துகொள்ள உதவும். இதைவிட மிக அவசியம் இந்நூல் எத்தகைய வாசகர்களுக்கானது என்றத் தெளிவு!

நான் படித்த மொழி பெயர்ப்பு நூல்களில் ஒன்று ரஷ்ய மொழியிலிருந்து தமிழ் மொழிக்கு மொழி பெயர்க்கப்பட்ட "சகாப்தம் படைத்த ஸ்டாலின்கிராட்" (1*) என்னும் நூல். அந்நாட்களில் ரஷ்ய மொழியிலிருந்து பல இந்திய மொழிகளுக்கு பல நூல்கள் மொழி பெயர்க்கப்பட்டன. அத்தகைய நூல்களில் ஒன்று இந்நூல். இந்நூல், இந்நூலின் ஆசிரியர் சோவியத் யூனியனின் மார்ஷலாக இருந்த வசீலி சுய்க்கோய் எழுதிய ஒரு வரலாற்றுச் சுயசரிதைக் குறிப்பு எனலாம். இந்நூலில் ஆசிரியர் இரண்டாம் உலகப் போரில் ஸ்டாலின்கிராட் நகரை எதிரிகளிடம் (நாஜிக்கள்) இருந்து காப்பாற்றப் போராடியதையும், அதில் வெற்றிப் பெற்றதையும் பற்றிக் குறிப்பிடுகிறார். ஸ்டாலின்கிராட் நகரத் தோல்வியிலிருந்தே ஜெர்மனியின் தோல்வி ஆரம்பம் ஆகிறது. 500 பக்கங்களுக்கு மேல் கொண்ட இந்த நூலை மொழி பெயர்த்தவர் Dr.R.பாஸ்கர். வரலாற்று நூல்களை குறிப்பாக போர் சம்பந்தமான நூல்களை எனக்கு மிகவும் பிடிக்கும் என்ற போதிலும், இந்நூல் பெரிதாக என்னைப் கவரவில்லை. அதற்குக் காரணம் இந்நூல் படைபிரிவுகளைப் பற்றியும், அதன் தொழில்நுட்ப விசயங்களைப் பற்றியும் அளவுக்கு அதிகமாக விவாதித்தது. அதற்க்கு இந்நூலின் ஆசிரியர் ராணுவ மார்சலாக இருந்தது ஒரு காரணமாக இருக்கலாம். மேலும் இந்நூல் ஸ்டாலின்கிராட் வீதிகளில் நடக்கும் போரைப்பற்றியும் அதிகமாக விவாதித்தது. இந்நூல் ஸ்டாலின்கிராட் நகரைப் பற்றி அறிந்த ஒரு ராணுவ வீரருக்கு ஒரு சிறந்த நூலாக இருக்கலாம். ஆனால் என்னைப் போன்ற ஸ்டாலின்கிராட் நகரின் வீதிகளைப் பற்றித் தெரியாத ஒரு சாதாரண வாசகனைக் கவராதது ஆச்சரியம் இல்லை!. மிகக் குறைந்த பட்சம் இந்நூலை மொழி பெயர்த்த ஆசிரியர் ஸ்டாலின்கிராட் நகரின் வீதிகளின் வரை படத்தையும், ஒரு சாதாரண வாசகனுக்கு அதிகப்படியானது என்று தோன்றக்கூடிய விசயங்களைத் தவிர்த்திருந்த்தும் கொடுத்திருந்தால், இந்நூல் தமிழில் ஒரு மிக நல்ல வரலாற்று நூலாக அமைந்திருக்கும்.

ஒரு நூலை மொழி பெயர்க்கும் போது வரிக்கு வரி மொழி பெயர்க்காமல், அது சொல்ல வரும் கருத்துக்களை உள்ளூர உணர்ந்து பின் அதனை மொழி பெயர்த்தால் மிக நன்றாக அமையும். எனக்குத் தெரிந்த வகையில் மொழி பெயர்ப்பு நூல்களில் மிகச் சிறப்பாக அமைந்தது "யயாதி". இது ஒரு புராண நூல். இதன் ஆசிரியர் வி.ஸ.காண்டேகர். யயாதி என்பவன் நகுச மன்னனின் மகன். இவனுடைய மனைவியர் , அசுரர்களின் குரு சுக்கிராச்சாரியார் மகள் தேவயானி மற்றும் அசுர மன்னனின் மகள் சர்மிஷ்டை(2*). இது ஒரு புராண நூல் என்பதற்கு மேலாக எனக்கு அது ஒரு தத்துவ நூலாகவேப்பட்டது. நான் இப்படி கூறுவதற்கு மிகச் சிறந்த உதாரணம் சர்மிஷ்டைக்கு, கசன் எழுதிய வாழ்கையைப் பற்றியக் கடிதம். அக்கடிதத்தில் அவ்வளவு தத்துவங்கள் பொதிந்திருக்கும். பொதுவாக மொழி பெயர்ப்பு நூல்களிலேயே மிகக் கடினமானது தத்துவ நூல்களை மொழி பெயர்ப்பதே. இதில் வரிக்கு வரி, ஏன் சொல்லப் போனால் வார்த்தைக்கு வார்த்தை மொழி பெயர்த்துவிடும் அபாயம் உண்டு. அதையும் தாண்டி இந்நூலை அவ்வளவு அழகாக மொழி பெயர்த்திருப்பர் கா.ஸ்ரீ.ஸ்ரீ . இந்நூல் படிக்கும்பொழுது ஒரு மொழி பெயர்ப்பு நூல் போன்றே தெரியாது. ஏதோ தமிழிலேயே முதன் முதலாக எழுதியது போலவேத் தோன்றும். எனக்குத் தோன்றிய வரையில் மொழி பெயர்ப்பாசிரியர்,
இந்நூலின் மூல நூலை முழுவதுமாகப் படித்துணர்ந்து, பின் அதன் கருத்துக்களை மட்டுமே கொண்டுத் தானே, புதிதாகத் தமிழில் எழுதியிருந்த்திருப்பார். அவ்வளவு அருமையாக இருக்கும் இந்நூல்.

இதே மொழி பெயர்ப்பு விதிகள் மொழி மாற்றுத் திரைப்படங்கள், நாடகங்களுக்கும் பொருந்தும் (Here i am speaking about dubbing not remaking!). திரைப்படங்கள் மற்றும் நாடகங்கள் என்று வரும்போது, இன்னொரு கஷ்டம் கூடவே சேரும், உதட்டசைவிர்க்கேற்ப்ப வார்த்தைகளைத் தேர்ந்தெடுப்பது!. அதுவும் பாடல் காட்ச்சிகள் என்றால் அது அதை விடக் கஷ்டம். எனக்குத் தெரிந்த வரையில் தமிழில் வந்த மொழி பெயர்ப்புத் திரைப்படங்களிலாகட்டும், நாடகங்களிலாகட்டும் மிக மோசமானது, தூர்தர்சனில் ஒளிபரப்பான ஜுனூன் தொடரே. அதில் வார்த்தைக்கு வார்த்தை மொழி பெயர்த்திருப்பார்கள். அவ்வளவு மோசமாக இருக்கும்.

இது போல் அல்லாமல் மொழிமாற்றுத் திரைப்படங்களிலேயே மிகச் சிறப்பாக அமைந்த திரைப்படங்களும் உண்டு. ஒரு பேட்டியின் போது யாரோ ஒருவர் "சலங்கை ஒலி " த் திரைப்படம் ஒரு மொழி மாற்றுத் திரைப்படம் என்றுக் கூறினார். எனக்கு அவர் கூறும் வரை அத்திரைப்படம் ஒரு மொழி மாற்றுத் திரைப்படம் என்றே தெரியாது. இத்தனைக்கும் அத்திரைப்படத்தில் பாடல்கள் அனைத்தும் அவ்வளவு அருமையாக இருக்கும்.

படிக்கும் வாசகனுக்கோ அல்லது பார்க்கும் ரசிகனுக்கோ, இது ஒரு மொழி பெயர்ப்புப் படைப்பு என்றுச் சொல்லும் வரைத் தெரியக் கூடாது. அதுவே மொழி பெயர்ப்பின் வெற்றி!

P.S:

1. அந்நாட்களில் இந்திய, ரஷ்ய நாடுகளுக்கிடையே கலாச்சார ஒற்றுமையை ஏற்ப்படுத்த பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அவற்றுள் ஒன்று இந்திய, ரஷ்ய மொழி நூல்களை ஒரு மொழியிலிருந்து மற்ற மொழிகளுக்கு மொழி பெயர்ப்பது. மேலும் அந்நூல்கள் இலவசம் என்று கூறத்தக்க வகையில் மிகக் குறைந்த விலையில் இந்தியாவில் விற்கப்பட்டன. இந்நூல்கள் ரஷ்யாவிலேயே அச்சிடப்பட்டு இந்தியாவிற்கு கொண்டுவரப்பட்டன.

2. சர்மிஷ்டை கதாப்பாத்திரம் மிகச் சிறப்பாக இருக்கும். எனக்கு ஏதோ அந்தக் கதாப்பாத்திரத்தின் மீது ஒரு ஈர்ப்பு இருந்தது, ஏன் "சர்மிஷ்டை" என்ற பெயரின் ஒலியிலேயே ஒர் ஈர்ப்பு இருந்ததைப் போன்று எனக்கு ஒருத் தோற்றம் . யயாதி நூலில் தேவயானியின் கதாப்பாத்திரம் ஒரு வில்லி போன்றும், சர்மிஷ்டையின் கதாப்பாத்திரம் ஒரு பொறுமையான, அழகான பெண்ணின் கதாப்பத்திரமாகவும் அமைந்த்திருக்கும்.

Friday, October 9, 2009

எண்ணங்களுக்கும் மணம் உண்டு!


பழைய நினைவுகளை அசைபோடுவதே என்பதே ஒரு மகிழ்ச்சியான செயல்தான். பெரும்பாலும் இச்செய்கைகள் எண்ணப்படுபவைகளாக அமைவதில்லை, தூண்டப்படுபவைகளாகவே அமைகின்றன. ஒரு நாளில் நடைபெறும் ஏதேனும் சிறு செயல்கள் ஒன்றோடொன்று பின்னப்பட்டு பின்னோக்கிச் சென்று பழைய நினைவுகளில் சென்று முடிவடைகின்றன. அவையும் உடனே முடிவடைவதாக இருப்பதில்லை, அந்தப் பழைய நினைவுகள் மேலும் பின்னிப் பிணைந்து மேலும் மேலும் பழைய நினைவுகளைத் தூண்டுகின்றன. ஏதேனும் ஒரு சிறு சம்பவம் தூண்டுகோலாக அமைந்து, எதிலோ ஆரம்பித்து எதிலோ முடியும் நம் எண்ண அலைகளை எண்ணும்போது, மனதைக் கண்டு வியக்கத்தான் தோன்றுகிறது!.

எண்ணங்களைத் தூண்டுவதற்கு ஏதேனும் சம்பவங்கள்தான் வேண்டும் என்பதில்லை, ஏதேனும் ஒரு பாட்டோ, ஒரு பெயரோ அல்லது ஒரு குறிப்பிட்ட மணம் கூட எண்ண அலைகளைத் தூண்டி பழைய நினைவுகளுக்கு இழுத்துச் செல்லும். இந்த எண்ண அலைகள் மகிழ்ச்சி அளிப்பவையாகவோ அல்லது சற்று சங்கடம் அளிப்பவையாகவோ கூட இருக்கலாம். எடுத்துக்காட்டாக என்னுடைய சிறு பிராயத்தில் விடுமுறை நாட்களில் மதுரையில் இருக்கும் எங்களுடைய மாமா மற்றும் பெரியம்மா வீடுகளுக்குச் செல்வது வழக்கம். அந்தத் தருணங்கள் மிக மகிழ்ச்சியான தருணங்கள். பொதுவாக ஒவ்வொரு பகுதிகளுக்கும் தனிப்பட்ட மணம் உண்டு. அவை அப்பகுதியில் உள்ள மண்,மரம்,செடி மற்றும் அவற்றிலுள்ள பூக்கள் ஆகியவற்றின் ஒரு கலவையான மணமாக இருக்கும். அதே போன்று எங்கள் பெரியம்மா வீடு அமைந்த பகுதிகளிலும் நான் ஒரு குறிப்பிட்ட வாசனையை நுகர்ந்திருக்கிறேன். பின் அந்த வீட்டிலிருந்து மாறி சென்னைக்கு என் பெரியம்மா குடி வந்துவிட்டார்கள். அவரைத் தொடர்ந்து நாங்கள்,எங்கள் மாமா என்று ஒவ்வொருவராக சென்னைக்கு குடி பெயர்ந்து, சென்னையே வீடு என்று ஆகிவிட்டது. மதுரையில் இருந்த எங்கள் பெரியம்மா வீட்டையும் மறந்து பல நாட்கள் ஆகிவிட்டன. பின் ஒரு நாள் சென்னையில் ஒரு வீதி வழியே நடந்து வரும்போது ஒரு வாசனையை நுகர்ந்தேன். மதுரையில் நான் என்ன வாசனையை நுகர்ந்தேனோ, அதே வாசனை. ஒரு நிமிடம் நான் சென்னையில் இருப்பதையே மறந்து, மதுரையில் இருப்பதாகவே உணர்ந்தேன். வீட்டிற்கு வந்த பிறகும் என்னால் அந்த எண்ண அலைகளிலிருந்து மீள முடியவில்லை. அந்த எண்ண அலைகள் மேலும் மேலும் பின்னோக்கிச் சென்று அந்த வீட்டில் நாங்கள் விளையாடி மகிழ்ந்த தருணங்கள், மிதி வண்டி பயில கற்றுக்கொண்ட தருணங்கள், இப்படி பலவித எண்ணங்களை தூண்டியது, அந்த கணப் பொழுதில் நான் நுகர்ந்த வாசனை. அந்த இரவு முழுவதும் தூங்கவே இல்லை. ஒரே எண்ண அலைகளாக வந்து மோதிக்கொண்டிருந்தன. மிக மகிழ்ச்சியான ஒரு இரவாக அது அமைந்தது. இப்படியாக மணங்கள் ஒரு நாளின் தன்மையையே தீர்மானிக்கும் ஆற்றல் கொண்டவைகளாக இருக்கும்.

நாங்கள் மிகச் சிறு வயதில் குடியிருந்த வீட்டில் இரண்டு நந்தியாவட்டை மரங்கள் இருந்தன . இன்றும் கூட நந்தியாவட்டை மலரை நுகரும்போது என் மிகச் சிறு வயதில் நாங்கள் இருந்த அந்த ஊரும் அந்த நாட்களும் ஞாபகம் வருகின்றன.

இப்படி மகிழ்ச்சியான தருணங்களை ஞாபகப்படுத்தும் அதே மணமானது சில சங்கடமான அல்லது ஒரு பயம் கலந்த தருணங்களையும் ஞாபகப்படுத்துகின்றன. அது நான் சென்னைக்கு கல்லூரியில் படிப்பதற்காக வந்த தருணம். நான் சென்னைக்கு புதிது, அதுவும் வீட்டை விட்டு முதல் முதலாக தனியாக வந்த தருணம். அப்பொழுது நான் கல்லூரி விடுதியில் தங்கியிருந்தேன். எங்கள் விடுதியானது கல்லூரியிலிருந்து 1 km தள்ளி அமைந்த்திருந்தது. விடுதியிலிருந்து கல்லூரிக்கு நடந்துதான் செல்வோம். ஒவ்வொரு நாளும் கல்லூரி முடிந்து விடுதிக்கு நடந்து செல்லும் போது எவ்வளவு முடியுமோ அவ்வளவு மெதுவாக செல்வோம். ஏனென்றால் ராக்கிங் பயம்!. ஒவ்வொரு நாளும் கல்லூரி முடிந்து விடுதிக்கு செல்வது என்பதே ஒரு பயம் கலந்த சம்பவமாகவே இருக்கும். இன்று எந்த சீனியரிடம் எப்படி மாட்டுவோமோ என்று பயமாகவே இருக்கும். அந்த விடுதிக்குச் செல்லும் வழியில் ஒரு குறிப்பிட்ட மணம் இருக்கும். எட்டு வருடம் கழித்து இன்றும் கூட அந்த வழியாகச் செல்லும் போது, அந்த மணத்தை நுகரும்போது ஒரு பதற்றம் கலந்த பயமானது ஒரு கணமேனும் என்னுள் எட்டிப் பார்க்கிறது!.

இதே போன்று சில காரணங்களால் ரோஜா மலரின் மணமும், சில ஊதுபத்திகளின் மணமும் எனக்குப் பிடிக்காது. நிச்சயமாக என்னுடைய கல்யாண மாலை ரோஜா மாலையாக இருக்காது! ;)

இப்படி ஒவ்வொரு சம்பவமும் குறிப்பாக உங்களைப் பாதிக்கும் ஒவ்வொரு சம்பவமும் அவற்றிருக்கென்று தனி மணத்தையோ அல்லது ஏதேனும் ஒரு மணத்துடன் தொடர்போ கொண்டிருக்கின்றன. அந்த மணமானது ஏதேனும் ஒரு பொழுது எட்டிப் பார்க்கும்பொழுது, உங்களையும் அறியாமல் அந்த சம்பவங்களும் எட்டிப் பார்க்கின்றன.

இப்படியாக சம்பவங்கள் ஏதேனும் ஒரு மணத்துடன்தான் தொடர்பு கொண்டிருக்க வேண்டும் என்று இல்லை, அவை வேறு ஏதேனும் ஒன்றுடனோ, ஏன் ஒரு பாட்டுடனோ கூட தொடர்பு கொண்டிருக்கலாம். நான் கல்லூரி முதலாம் ஆண்டு படிக்கும் போது வெளிவந்த ஒரு படத்திலிருந்த "வாடி வாடி நாட்டுக்கட்டை" பாடல் மிகப் பிரபலம். ஆனால் அது எனக்குப் பிடிக்காது. காரணம், அச்சமயம் நான் என்னுடைய முதல் செமஸ்டருக்காக சிறிது பயத்துடன் படித்துக்கொண்டிருந்த தருணத்தில் அதிகமாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பாடல் (நான் படிக்கும் போது எப்பொழுதும் ஏதேனும் வானொலியோ அல்லது தொலைக்காட்ச்சியோ ஓடிக்கொண்டிருக்க வேண்டும்!). ஆகையால், அந்தப் பாடல் கேட்க்கும் போது என்னுடைய முதல் செமஸ்டர் ஞாபகமும்,அத்துடன் அந்த முதல் செமஸ்டர ஏற்ப்படுத்திய பயமும் இன்றும் எட்டிப் பார்க்கும். ஆதலால் அந்தப்பாடலுக்கு என்னுடைய playlist இல் இன்று இடம் கிடைக்காமல் போய்விட்டது !.

இப்படியாக நமது எண்ணங்கள் ஒன்றோடொன்ரோ அல்லது வேறு ஏதேனும் ஒன்றுருடன் தொடர்பு கொண்டவைகளாக இருக்கின்றன. They are behave just like an atom bomb. A single ignition creates chain reactions!.

ஆக எண்ணங்களுக்கும் மணம் உண்டு! ்

photo courtesy :http://www.merello.com/images/Photos%20Sketches/art_paintings_art_exhibitions_modern_still_lifes.merello._flores_amarillas.jpg.jpg

Monday, October 5, 2009

ஆகையால் எழுத்தை நான் நேசிக்கத்தான் செய்கிறேன்!

நான் பல காலமாகவே blog எழுதவேண்டும் என்று எண்ணினேன். சிறிது காலத்திற்கு முன்பு என் நடைமுறை வாழ்க்கையை மாற்ற எண்ணி blog எழுத ஆரம்பித்தேன். சிறிது சிறிதாக blog எழுதுவது எனக்குப் பிடித்துப் போனது, அத்துடன் கூடவே ஒரு தொந்தரவையும் தர ஆரம்பித்தது, அதாவது அது என்னுடைய நேரத்தையும் அதிகமாக சாப்பிட ஆரம்பித்தது. முக்கியமாக எனக்குப் பிடித்த வாசித்தலுக்குரிய நேரத்தின் பெரும் பகுதியையும் எடுத்துக் கொள்ள ஆரம்பித்தது. என்னடா இவன் பத்து blog எழுதுரதுக்குள்ளவே இப்படி புழம்புகிறான் என்கிறீர்களா?.

பொதுவாக முதல் தடவை குட்டி போடும் யானையை, in experienced mother (இது அனைத்து உயிரினங்களுக்கும் ் பொதுவான வார்த்தை தான்! ) என்பார்கள். அது தன்னுடைய குட்டியை சிறுது நேரம் கூட படுக்க(ஒய்வு எடுக்க) விடாது. அது இறந்து விட்டதோ என்ற பயத்தின் காரணமாக எப்பொழுதும் எழுப்பிக் கொண்டே இருக்கும்.

அது போல, இந்த blog என் நேரத்தைச் சாப்பிடுகிறது என்ற என்னுடைய பயம் , ஒரு வேளை நான் ஒரு in experienced blogger ஆக இருப்பதன் காரணமாகக் கூட இருக்கலாம். ஆனால் இந்தப் புழம்பல் நிச்சயமாக அனுபவமின்மை in experienced காரணமாக மட்டுமே அல்ல. மேலும் இது என் நேரத்தை சாப்பிடுகிறது என்ற பயம் கூட அல்ல, எனக்கு அதையும் தாண்டி ஒரு விஷயம் இருப்பதாகவேத் தோன்றுகிறது. நான் எழுத ஆரம்பித்த பிறகு, என்னுடைய வாசிப்பிற்கான நேரம் குறைந்து விட்டது. அதாவது என்னுடைய எழுத்து என்னுடைய வாசிப்பை தின்று விடுகிறது. அதாவது என்னுடைய எழுத்து, வாசிப்பதின் மூலம் நான் கற்கும் புதுப்புது விசயங்களைத் தடுக்கிறது. இதை நான் நிச்சயமாக என் எழுத்தின் மீது குறை சொல்லக் கூடாது. அது என்னுடைய நேர நிர்வாகத்தின் மீது உள்ள குறைபாடே . மேலும் நான் எழுதும் பதிப்புகளில் 90% க்கு மேலும் , எனக்கு ஏற்கனவே நன்கு தெரிந்த விசயங்களாகவோ அல்லது ஏற்கனவே நான் அவற்றைப் பற்றிப் பலருடன் பல முறை விவாதித்த விசயங்களாகவோதான் இருக்கின்றன. அவற்றை எழுதுவதன் மூலம் நான் புதிதாக எதுவும் கற்பதில்லை. அவற்றை எழுதுதல் என்பது எனக்குத் தெரிந்ததை கக்குவதைப (இதற்க்கு பதமான வார்த்தை எனக்கு தெரியவில்லை, ஆகையால் என்னை மன்னிக்கவும் ;) ) போலவே உணர்கிறேன் .

வாசித்தல் என்பது எனக்கு ரொம்பப் பிடித்த விஷயம். எழுதுதல் என்பதை விட மிகவும் பிடித்த விஷயம் என்றும் கூறலாம். நான் எழுதுவதற்க்காக புதிதாக எதையும் வாசிப்பதில்லை அல்லது கற்பதில்லை. கற்றதையே எழுதுகிறேன். அதுவே எனக்கு ஒரு bore ஆன விசயமாக உள்ளது. மேலும் இதற்கு என்னுடைய typing வேகமும், வார்த்தைகளை கோர்வையாக அமைப்பதில் எனக்கு உள்ளக் குறைபாடும் சில (முக்கியக்) காரணங்கள். என்னுடைய எழுத்துக்களில் நீங்கள் சிறிது எழுத்துப்பிழைகளையும் காணலாம். முக்கியமாக சந்திப் பிழைகள். அவை என்னுடைய கவனமின்மை காரணமாகவும், Google transliterator ஐ பயன்படுத்துவதில் எனக்கு உள்ள அனுபவமின்மை காரணமாகவும் அமைகின்றன . என்னுடைய எழுத்தில் இருக்கும் மிக மிக முக்கிய குறைபாடு வாக்கிய அமைப்பு மற்றும் வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்தல் . இவ்விரண்டிலும்் நான் மிகவும் தேர்ச்சிக் குறைந்தவன். அந்தக் குறைபாடு எனக்கு மிகச் சலிப்பைத் தருகிறது.

இவ்வளவு குறைபாடுகளையும் தாண்டி எழுதுதல் என்பது எனக்கு பிடித்ததாகவே உள்ளது ;). அதற்கு ஒரு முக்கியக் காரணம் எழுத்தில் இருக்கும் ஒரு ஈர்ப்பு. எழுத்தில் இருக்கும் ஈர்ப்பானது மிகவும் ஆச்சரியப்படத்தக்கது. எழுத்தும், பேச்சும் எல்லாரையும் தன் பால் ஈர்க்கும் வல்லமை வாய்ந்தவைகள். நான் என்னை ஒரு வாசிப்பாளன் என்றுக் காட்டிக் கொள்வதன் மூலம், எழுத்தில் இருக்கும் ஈர்ப்பை என்னால் மிக நன்றாக உணர முடிகிறது. மிக நல்ல ஒரு கட்டுரையோ அல்லது மிக நல்ல நாவலையோ படித்து முடித்த பிறகு ஏற்படும் பரவச உணர்வு மிக அற்புதமானது. மிக நல்லக் கட்டுரை அல்லது நாவல் என்பது அது கூற வரும் விஷயங்களை பற்றியது மட்டுமே அல்ல. அந்தக் கட்டுரை அல்லது நாவலில் இருக்கும் கரு, அக்கருவை அது எடுத்துரைக்கும் முறை, அதில் உள்ள வாக்கிய அமைப்புகள், சரியான வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்தல், இப்படி பல விசயங்கள் சேர்ந்து அவற்றை சிறந்தவைகளாக ஆக்குகின்றன. என்னுடைய எழுத்துக்களும் அவ்வாறாகவே இருக்க விரும்புகிறேன். அதை முயற்சியின் மூலமும், பயிற்ச்சியின் மூலமும் மட்டுமே கொண்டுவர முடியும்.

எழுத ஆரம்பித்த பிறகு நான் என்னை ஒரு புது மனிதனாக உணர்கிறேன் . எழுத்தானது எனக்கு ஒரு புது அடையாளத்தைக் கொடுத்துள்ளது. பொதுவாக எப்பொழுதும் நான் விசயங்களைத் தெரிவிப்பதைப் பற்றி் மட்டுமே கவலைப்பட்டேனேயொழிய ,அவற்றைக் கூறும் முறையைப் பற்றிக் கவலைப்பட்டதில்லை். (அதனால் தான் என்னவோ தேர்வில் தமிழில் மற்றப் பாடங்களை விடக் குறைந்த மதிப்பெண்ணைப் பெற்றேன் ;) ). அதே போல் தான் வாசிக்கும் பொழுதும் விசயங்களிலேயே என்னுடைய கவனம் சென்றது. அதில் அமைந்த வாக்கிய அமைப்புகளையோ அல்லது வார்த்தைத் தேர்ந்த்தெடுத்தல்களிலோ கவனம் கொண்டதில்லை. ஆனால் இப்பொழுது வாசிக்கும்பொழுது அவற்றிலும் கவனம் கொள்கிறேன்.

பொதுவாக நான் என்னைச் சுற்றி நடக்கும் விசயங்களிலும் இதுவரை பெரிதாக கவனம் கொண்டதில்லை. ஆனால் இப்பொழுது கவனம் கொள்கிறேன் (blog எழுத உதவும் அல்லவா! ).

இப்படி என்னுள் பல மாற்றங்களை ஏற்ப்படுத்திய எழுத்தை நான் நேசிக்கத்தான் செய்கிறேன் ! :).

Sunday, October 4, 2009

கமல்


கமல் ஒரு பொக்கிஷம். பொக்கிஷம் என்ற வார்த்தை சற்று அதிகப்படியானதாகவே இருக்கலாம். இருந்தாலும் எனக்குச் சரி என்றே படுகிறது. கமல் நடிப்பை பார்க்கும் போது மிக நல்ல ஒரு உணர்வு (எனக்கு ஒரு பெருமித உணர்வேத்) தோன்றும். ஏதோ நாமே அக்கதை நடக்கும் களத்தில் இருப்பது போல் தோன்றும்.

கமல் பேட்டியைக் காண்பது என்பது அதை விட மிகச் சிறப்பாக இருக்கும். கமலின் பேச்சைக் கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்பது போல் தோன்றும். பொதுவாக கமல் பேட்டியின் போது கமல் சொல்வதே சரி என்றும், ஏன் ,கமல் சொல்வது மட்டுமே சரி என்றும் தோன்றும். இப்படி மற்றவரை எதையும் யோசிக்க வைக்க விடாமல், தான் சொல்வதை ஏற்க வைப்பது என்பது ஒரு மிகச் சிறந்த கலை. அந்தக் கலை மிகச் சிலருக்கே வாய்க்கும். எனக்குத் தெரிந்து நான் அந்தக் கலையை கமலிடம் மட்டுமே கண்டுள்ளேன். அக்கலை கமலுக்கு மிகவும் நன்றாக வாய்த்துள்ளது. இப்பாராட்டு ஏதோ வஞ்சப் புகழ்ச்சி அல்ல, நான் கமலின் ஒரு ரசிகன் என்பதில் எனக்கு இருக்கும் கர்வத்திலும், உரிமையிலுமே கூறியது.

பொதுவாக நான் யாருடைய ரசிகன் என்று, என்னை அடையாளப் படித்திக்கொள்ளமாட்டேன். ஏனென்றால், பின் அவர்களுடைய ஒவ்வொரு செயலுக்கும், சொல்லப் போனால் அவர்களுடைய ஒவ்வொரு தவறான படைப்புக்கும் ரசிகன் என்ற முறையில் நான் என்னுடைய ஆதரவையோ அல்லது குறைந்தபட்சம் சப்பைக் கட்டோ கட்ட வேண்டும் என்ற பயம் கூட ஒரு காரணமாக இருக்கலாம் ;). ஏனெனில் இச்சமுதாயம், ஒரு ரசிகன் என்பவனிடமிருந்து அதையும் எதிர்பார்க்கிறது. பொதுவாக எனக்கு அவருடைய comercial படங்கள் என்று சொல்லப்படும் படங்களில் ஈடுபாடு கிடையாது. எ.கா: காதலா காதலா. அவருடைய எதார்த்தப் படங்களிலே ஈர்ப்பு உண்டு. எ.கா: UPO. என்னைப் பொறுத்தவரையில் ஒரு ரசிகனானவன்,ஒரு கலைஞனைக் கண்மூடித்தனமாக ஆதரிக்க வேண்டும் என்பதில் எனக்கு உடன்பாடு கிடையாது. இவ்வளவையும் தாண்டி நான் ரசிகன் என்று கூறிக்கொள்வது என்றால் அது மிகச் சிலருக்கே. அதில் கமலுக்கும் நிச்சயம் ஒரு இடம் உண்டு.

நேற்று (02 Oct 2009) கமல் பேட்டியைக் காணும் வாய்ப்பு வாய்த்தது(கலைஞர் தொலைக்காட்சியில் UPO பேட்டி). அதுவும் கடைசி சில நிமிடங்களே காணக் கிடைத்தது. கமல் பேட்டியைத் தவற விட்டு விட்டோமே என்ற உணர்வு அப்பேட்டி முடியும் வரை, ஏன் அதைத் தாண்டியும் இருந்தது (எவரேனும் அந்தப் பேட்டியின் youtube அல்லது வேறு ஏதேனும் tube இன் link யோ அனுப்பினால், உங்களுக்கு கமலின் அடுத்தப் படத்தின் முதல் காட்சியில் ticket கிடைக்க ஆண்டவனைப் பிராத்திக்கிறேன் ;) ). கமலின் ஒவ்வொரு படங்களின் வெற்றி தோல்விகளும் அவருடைய, பேட்டியில் பிரதிபலிக்கும். சண்டியர் திரைப்படத்தின் பெயரை மாற்ற வேண்டும் என்று எழுந்த பிரச்சினைகளின் போது அவர் கொடுத்த பேட்டியில் தெறித்த அவருடைய கோபம், UPO பட வெற்றியின் போது கொடுத்த அவருடைய பேட்டிகளில் தெரிந்த பெருமித உணர்வு, இப்படி அவருடைய படங்களின் ்வெற்றி தோல்வி அவருடைய பேட்டியில் தெரியும் .

கமல் பேட்டியில் இருக்கும் மிக முக்கிய மற்றொரு அம்சம், கமலின் தமிழ். தமிழ் உச்சரிப்பு,வார்த்தைத் தேர்ந்தெடுப்பு,தான் சொல்ல வருவதை மற்றவரை ஏற்க வைக்கும் பாங்கு. அதுவே என்னைக் கமலின் பேட்டியை காணத் தூண்டும் மிக முக்கிய அம்சம்.

கமல் தமிழ் திரையுலகத்திற்கு பல நிலைகளில் முன்னோடியாக இருந்திருக்கிறார். ஏன் அவருடைய பல திரைப்படங்கள் ,தமிழ் திரையுலகம் mature ஆவதற்கு வெகு முன்பே எடுக்கப்பட்டவை. எ.கா: விக்ரம்,குணா,அன்பே சிவம். குணாத் திரைப்படம், காதல் கொண்டேன் திரைப்படம் வந்த காலத்தில் வந்திருந்திருந்தால் நிச்சயம் 100 நாட்களைக் கண்டிருக்கும்.

சில நேரங்களில் தோன்றும், நடிப்பு என்ற ஒரு தொழிலே இல்லாமல் இருந்திருந்தாலோ அல்லது இத்தொழிலுக்கு கமல் வராமல் இருந்திருந்தாலோ, கமல் என்னவாக ஆகிருப்பார்?. எனக்குத் தோன்றிய வரையில் கமலுக்கு பைத்தியம் பிடித்திருக்கும். எல்லோரும் கூறுவது போல் கமல் ஒரு பிறவிக் கலைஞன். கமலால் நடிக்காமல் இருக்கவே முடியாது. இன்னும் இருபது வருடம் கழித்துக் கூட கமல் கதாநாயகனாகவே நடிப்பார். என்ன அப்பொழுது மரத்தைச் சுற்றி டூயட் பாடும் கதாநாயகனாக அல்லாமல் UPO போன்ற கதாப்பாத்திரங்களில் நடிப்பார். ஏனென்றால் கமலுக்குத் தான் யார் என்றும், தனக்கு என்ன வேண்டும் என்றும் அதை விட முக்கியமாகத் தன்னுடைய களம் என்னவென்றும் மிக நன்றாகத் தெரியும்.

இம்மாபெரும் கலைஞனின் உழைப்பு இத்திரையுலகின் எக்காலத்திலும் ஏதேனும் ஒரு மூலையில், ஒரு சிறு அளவாவது இருக்கும். இம்மாபெரும் கலைஞனின் ரசிகன் என்று சொல்லிக் கொள்வதில் என்றுமே எனக்கு ஒரு பெருமித உணர்வும் அதையும் தாண்டிய ஒரு கர்வமும் உண்டு. கமல் மேலும் UPO போன்ற பல எதார்த்தப் படங்கள் செய்யவும், அதற்க்கு மக்களின் ஆதரவு கிடைக்கவும் என்னுடைய வாழ்த்துக்கள்.