Monday, May 24, 2010

அப்பா


என்னுடைய
கல்லூரி தோழர்கள் தங்களுடைய அப்பாவை பிடிக்காது என்று கூறும் போது எனக்கு ஆச்சரியமாக இருக்கும் . எப்படி இவர்கள் அப்பாவைப் பிடிக்காது என்று கூறுகிறார்கள் என்று வியப்பேன். ஏனெனில் எனக்கும் மதுவுக்கும் அமைந்த அப்பா அப்படிப்பட்டவர். அவர் அதிர்ந்து கூட எங்களிடம் பேசியதில்லை. எங்கள் தோழர்கள் அப்பாவை எல்லாம் பிடிக்காது என்று கூறியதில் ஆச்சரியம் இல்லை என்பது எங்களுக்கு வெகு நாட்களுக்குப் பிறகே தெரிந்தது. பெரும்பாலான அப்பாக்கள் தங்கள் பிள்ளைகளுக்கு பிடிக்காத மாதிரிதான் நடந்து கொண்டார்கள் என்பது வெகு நாட்களுக்குப் பிறகே நாங்கள் உணர்ந்தோம். ஏனெனில் நாங்கள் இருவரும் உலகில் உள்ள அப்பாக்கள் அனைவரும் எங்கள் அப்பாவைப் போன்றவர்கள் என்றே எண்ணி இருந்தோம். உலகில் உள்ள அப்பாக்கள் அனைவரும் எங்கள் அப்பாவைப் போன்று இல்லை என்பதை உணரவே எனக்கும் மதுவுக்கும் வெகு நாட்கள் ஆனது. இத்தனைக்கும் எங்கள் அப்பா சாதாரண வேலையில் இருந்தவர் இல்லை. அவர் தபால் துறையில் IPS அதிகாரியாக இருந்து ஒய்வு பெற்றவர். ஆனால் அவருடைய நடத்தையில் அப்படி காட்டிக்கொள்ளவே மாட்டார்.

எங்கள் அப்பாவைப் போன்ற அப்பாக்களைக் காண்பது அரிது என்ற உண்மையை அறியவே எங்களுக்கு வெகு நாட்கள் ஆனது. எங்கள் அம்மாவும் அப்பாவும் அரசாங்க வேலையில் இருந்தததால் இருவருக்கும் பணி மாற்றம் நிகழ்ந்து கொண்டே இருக்கும். இருவரும் வெவ்வேறு இடத்தில் பணி புரிவது சாதாரண நிகழ்வானது. இதானாலையே நாங்கள் எங்கள் அப்பாவுடன் கழித்த நாட்கள் வெகு குறைவே. நானும் மதுவும் எங்கள் அம்மாவுடனே கழித்ததால், எங்கள் வாழ் நாளில் பாதி நாட்களை நாங்கள் எங்கள் அப்பாவுடன் கழித்ததே இல்லை.

எங்கள் அப்பா எங்களிடம் காட்டிய அன்பிற்கு, அவர் எங்களைப் பிரிந்திருந்ததே காரணம் என்றால் அதனை நான் ஏற்றுக் கொள்ளவே மாட்டேன். அவருக்கு இயல்பாகவே எங்களிடம் அன்பு இருந்தது. அவர் எங்களை ஒரு நாள் கூட திட்டியதில்லை. அவர் எங்களை எங்கள் போக்குகே விட்டார். எங்கள் வீட்டில் எனக்கும் மதுவுக்கும் முழு சுதந்திரம் இருந்தது. நாங்கள் கல்லூரி பயின்ற நாட்களில் எங்களுக்குத் தேவையான பணத்தை நாங்களே எங்கள் லாக்கரிலிருந்து எடுத்துக் கொள்வோம் . யாரிடமும் கணக்கு சொல்ல வேண்டியதில்லை. அவ்வளவு சுதந்திரம் கொடுத்திருந்தார்கள் எங்கள் அப்பாவும் அம்மாவும். நானும் மதுவும் கஞ்சத்தனமாய் இல்லாமல் இருப்பத்தர்க்கும், பணத்தின் பின்னால் ஓடாமல் இருப்பத்தர்க்கும் இதுவே காரணம். நான் இன்றளவும் எங்களுக்கு இருக்கும் நல்ல குணங்களில் ஒன்றாக கருதுவது இதைதான்.

எனக்கும் மதுவிற்கும் எங்கள் வாழ்நாளில் சிறந்த நாட்கள் என்றால் அது நாங்கள் எங்கள் அப்பாவுடன் விவரம் தெரிந்து பழகிய நாட்களே. அப்பொழுது நாங்கள் ராமநாதபுரத்தில் குடி இருந்தோம். அப்பொழுது தான் வெகு காலத்திற்குப் பிறகு எங்கள் அப்பாவும் அம்மாவும் ஒரே இடத்தில் பணி புரிந்த்தனர். நான்,மது ,அப்பா,அம்மா அனைவரும் வெகு நாட்களுக்குப் பிறகு ஒன்றாக குடி இருந்தோம். அப்பொழுதுதான் நாங்கள் எங்கள் அப்பாவை உண்மையாக புரிந்து கொண்டோம். அப்பொழுது அவர் ராமநாதபுர மாவட்டத்திற்கு தலைமை தபால் அதிகாரியாக இருந்தார். வேலையில் மிக கண்டிப்பானவர் , ரொம்ப நேர்மையானவர், ரொம்ப சின்சியர் வோர்கர். காலையில் 9 மணிக்கு அலுவலகம் திறந்தால், 9 மணிக்கு அலுவலகத்தில் இருப்பார். அதேபோல் இரவு அலுவலகத்திலிருந்து அனைவரும் சென்றபிறகு வெகு நேரத்திற்குப் பிறகே வீடு வருவார். எங்கள் அப்பாவைப் பார்த்து நான் admire ஆன விசயங்களில் பணியில் அவருடைய நேர்மை, sincerity யும் சில. பொதுவாக பெண் பிள்ளைகளுக்கு அப்பாவையும் ,ஆண் பிள்ளைகளுக்கு அம்மாவையும்தான் ரொம்ப பிடிக்கும் என்பது வழக்கு. ஆனால் இங்கு எங்களுக்கு இருவரையுமே ரொம்ப பிடிக்கும் அதிலும் அப்பாவைதான் ரொம்ப பிடிக்கும் .

எங்களுடைய தேர்வு நாட்களில் எங்கள் அப்பாவும் அம்மாவும் மாறி மாறி இரவில் கண் விழித்து தேர்விற்கு படித்துக்கொண்டிருக்கும் எங்கள் இருவருக்கும் துணை இருப்பார்கள்.

எங்கள் அப்பா, வீட்டில் தான் ஆண் என்றோ, அலுவலகத்தில் பெரிய அதிகாரி என்றோ கர்வம் கொள்ளாதவர். எந்த ஒரு கெட்ட பழக்கமும் இல்லாதவர். நான் பல தடவை நினைப்பதுன்டு, நான் எங்கள் அப்பாவுடன் சேர்ந்து இன்னும் பல காலங்களைக் கழித்திருந்தால் நானும் மதுவும் இன்னும் நன்றாக இருந்திருப்போம் என்று. அவர் மிகச் சிறந்த அறிவாளியும் கூட. ஆங்கிலத்திலும் கணக்கிலும் அவ்வளவு ஞானம் கொண்டவர். எனககு இன்றும் நல்ல ஞாபகம் இருக்கிறது. நான் ஒரு தடவை மதுவிடம் உனக்கு ஒத்தப்படை எண் பிடிக்குமா இல்லை இரட்டைப்படை எண் பிடிக்குமா என்று கேட்டேன். அதற்க்கு அவன் நான் இதே கேள்விய அப்பாவிடம் கேட்டேன், அதற்க்கு அப்பா என்ன பதில் சொன்னாங்க தெரியுமா?. நானும் என்ன பதில் சொன்னாங்க என்று கேட்டேன். அப்பா, ஒத்தப் படை எண் தான் பிடிக்கும்னாங்கடா. அதற்க்கு ஏன் ஒத்தப் படை எண் பிடிக்கும்னு கேட்டேன். அதற்க்கு அப்பா, ஏன்னா அதுலதான் நம்பர் 1 இருக்குனாங்கடா என்றான் . இப்படி எங்க அப்பா எப்பொழுதும் நம்பர் 1 ஆக இருக்க விரும்பினாங்க.

எங்கள் அப்பாவிற்கும் மதுவை விட என்மேல் பாசம் அதிகம். அதில் எனக்கு கர்வமே உண்டு. தங்கள் பிள்ளைகளுக்காக எதையும் செய்தார். அவ்வளவு பாசக்காரர்.நானும் மதுவும் கல்லூரியில் படித்த காலத்தில் எங்கள் அப்பா எங்களுடனே சென்னையில் குடி இருந்தார். அப்பொழுது எங்களுக்கு அவரே சமைத்துப் போட்டார் .. எங்களுடைய கல்லூரித் தோழர்களில் பலருடைய அப்பாக்கள் மற்ற கல்லூரித் தோழர்களை தங்கள் வீட்டிர்க்குள்ளவே அனுமதிக்காத போது, எங்கள் அப்பா , எங்களுக்கு மட்டுமல்ல எங்கள் வீட்டிற்கு வரும் நண்பர்களுக்கும் சேர்த்தே சமைப்பார்.

நானும் மதுவும் கல்லூரி முடித்த பிறகு பல கம்பெனிகளில் முயன்று கொண்டிருந்தோம். அப்பொழுது TCS இல் நான் HR interview வரை சென்று இறுதியில் பணி கிடைக்காமல் போனேன். அதனால் நான் ரொம்ப உடைந்து போயிருந்தேன். இது எங்கள் அப்பாவை ரொம்ப வருத்தத்திற்கு உண்டாக்கியது. என் மேல் ரொம்ப பாசம் அதிகம் என்பதால், அவர் ரொம்ப வருத்தப்பட்டார். எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது அன்று ஆகஸ்ட் 4 ஆம் தேதி. எனக்கும் மதுவிற்கும் AdventNet இல் தேர்வு இருந்த்தது. நாங்கள் கிளம்பும்போது எங்கள் அப்பா என்னிடம் "சிவா, வருத்தப்படாதடா , இன்னைக்கு test எழுதிட்டு வந்திரு. உன்னை நான் எப்படியும் HR interview க்கு தயார் படித்திர்ரேன். கவலைப்படாம போயிட்டு வா." என்றார்.

அன்று நானும் மதுவும் AdventNet இல் தேர்வு எழுதிவிட்டு காண்டீனில் எங்கள் அண்ணாவுடன் பேசிக்கொண்டிருந்தோம். அப்பொழு எங்கள் அம்மா எங்கள் அண்ணனிற்கு போன் பண்ணி, எங்கள் அப்பா accident ஆகி விட்டார் என்று கூறி எங்களை சீக்கிரம் அந்த இடத்திற்குப் போகச் சொன்னார். அங்கு போய் பார்த்தால், எங்கள் அப்பா மீது இருசக்கர வாகனம் மோதி, பற்கள் எல்லாம் உடைந்து, இரண்டு முழங்கால்களும் உடைந்து போய் ambulance இல் இருந்தார். பிறகு எங்கள் அப்பாவை குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு accident formalities முடிக்க கொண்டு சென்றார்கள். அங்கு எங்கள் அப்பா கூறியது இன்னும் ஞாபகம் இருக்கிறது "என்னை சீக்கிரம் ஆஸ்பத்திரிக்கு கொண்டு போங்கடா" என்றார் . அங்கிருந்து அவரை அப்போல்லோ ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றோம். அங்கு அவர் என் கண் முன்னே ரத்த வாந்தி எடுத்தது எனக்கு இன்னம் ஞாபகம் இருக்கிறது. அங்கு அவர் ஆகஸ்டு 13 ஆம் தேதி மரணமடைந்தார்.

இன்று எங்கள் அப்பாவுடைய 65 ஆவது பிறந்தநாள். We miss you dad. we love you so much. உங்களுக்கு நாங்கள் செய்வது என்ன செய்வது கைமாறாக இருக்குமென்றால், உங்களைப் போல் எங்கள் அம்மாவிற்கு நல்ல பிள்ளையாய், மனைவிக்கு நல்ல கணவனாய் பிள்ளைகளுக்கு நல்ல தகப்பனாய் இருப்பதே ஆகும் .

We love you . We need you so much . Your soul may rest in peace.

Photo courtesy : http://ecx.images-amazon.com/images/I/515AdWWSVYL.jpg

Tuesday, May 18, 2010

இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே ...

இப்பலாம் blogspot ல பொண்ணுங்க எழுதுற blog ஆ பாத்து பாத்து அதிகமா படிக்கிறேன். எனக்கு தமிழ் பதிவுகளை அறிமுகப்படுத்தினதே என் நண்பன் jdk தான். அவன் வழியாதான் நிறைய ப்ளாக் லிங்க்க பெற்றேன். அதுல ஆரம்பிச்சதுதான் இந்த பொண்ணுங்க ப்ளாக் படிக்கிறது. பொதுவா பொண்ணுங்க இந்த மாதிரி ப்ளாக் எழுதுறதோ, ஏன் ப்ளாக் படிக்கிறது கூட அதிகமா செய்றதில்ல என்பது என் குறுகிய எண்ணம். இந்த எண்ணத்த சம்மட்டியால அடிக்கிற மாதிரி இந்த பதிவுகள் இருக்கிறதாலதான் அதிகமா பொண்ணுங்க பதிவுகள் எடுத்து படிக்கிறேன்.
***************
கடந்த இரண்டு வாரமாக காது வலி. சென்ற வாரம் மருத்துவரிடம் சென்றேன். அவர் காதுக்குள்ள எதையோ வைத்து நோண்டி பாத்துட்டு மருந்து எழுதி தந்தார். மறக்காமல் மூன்று நாள் கழித்து வரவும் சொன்னார். நானும் காது வலி தீந்துச்சுனா நம்ம எங்க வரப் போறம்னு நினச்சுகிட்டு, வரேன்னு தலை ஆட்டிட்டு வந்தேன். மருந்து விலை முன்னூத்திச் சொச்சம், மருத்துவர் செலவு நூத்தைம்பது என மொத்தம் ஐநூறைத் தொட்டது. கடைசில அந்த மருத்துவர் தான் ஜெயிச்சாரு. மூணு நாள் ஆகியும் காது வலி தீரல. தண்ட கருமாந்தரமேன்னு திரும்பவும் மருத்துவர்ட போனேன். திரும்பவும் மருந்து , மாத்திரை, டாக்டர் தண்ட செலவு நூத்தம்பது. ஆனாலும் காது வலி தீரல. வர வர டாக்டர்கள் மேல எனக்கு நம்பிக்கையே இல்ல. மருத்துவர்கள் எல்லாம் கடவுள் மாதிரிங்கறது பழைய காலம் . இப்ப எல்லாரும் காசு பார்க்குரதிலையே குறியா இருக்காங்க. இவங்களுக்கு பீஸ் மட்டும் கிடையாது. மருந்து வாங்குரதிலயும் கமிசன் வேற. இன்னம் சில டாக்டர்கள் அவங்களோட கிளினிக்லையே மருந்து கடை வச்சுருக்காங்க.
***************

T20 உலக கோப்பையில் தொடர்ந்து இரண்டாவது முறையாக சூப்பர் 8 இல் எந்த ஒரு போட்டியையும் ஜெயிக்காததர்க்கு தோனி , IPL இரவு கடந்த பார்ட்டிகளை குற்றம் சாட்டி உள்ளார். அதை ரவி சாஸ்திரியும், கவாஸ்கரும் குற்றம் சாட்டி உள்ளனர்.இதில் நான் தோனி பக்கம். எல்லாம் காசு படுத்தும் பாடு. IPL இந்திய கிரிக்கெட்டையே நாசம் படித்திருச்சு.
***************
சனிக்கிழமை அலுவலகத்துல New Horizon Media புத்தக ஸ்டால் போட்டுருந்தாங்க. அதுல போய் புத்தகம் வாங்கணும்னுதான் தோணுச்சு, இருந்தாலும் போன தடவையும், ஏன் இந்த வருஷ சென்னை book fair ல வாங்குன புத்தகங்களையே இன்னும் படிச்சு முடிக்காததால இந்த தடவ புத்தகம் எதுவும் வாங்கல.
***************
நான் பொதுவா ஒரு நாட்ட பத்திய செய்திகள படிக்கிறதுனா, அந்த நாட்டுல இருக்க பிரசித்தி பெற்ற செய்திதாள்களா இணையத்தில எடுத்து படிக்கிற பழக்கம் உண்டு . அப்படி எனக்கு அறிமுகமானதுதான் பாகிஸ்தானின் டான்(dawn) செய்தித்தாள். இந்த செய்தித்தாள் பாகிஸ்தானின் தந்தையான (
Quaid-e-Azam) முகமது அலி ஜின்னாவால் 1941 ஆம் ஆண்டு டில்லியில் ஆரம்பிக்கப்பட்டது . கொஞ்ச நாளைக்கு முன்னாடி வரைக்கும் ஒரு மொக்க வலைத்தளம் வச்சுருந்தாங்க . இப்ப ரொம்ப நல்ல வலைத்தளமா இருக்கு. அந்த வலைத்தளம் The Hindu செய்திதாளோட beta version மாதிரி இருக்கும். செய்திகளைப் பொருத்தவர எனக்கு ரொம்ப பிடிச்ச வலைத்தளம். பாகிஸ்தான் பத்திரிக்கைங்கிரதால சும்மா இந்தியாவைப் பத்தி திட்டிக்கிட்டு இருக்கமாட்டாங்க . பத்திரிக்கை நடு நிலையாகவே இருக்கும்.

சரி சொல்ல வந்த விசயத்த சொல்றேன். அதுல ஒரு கட்டுரை வந்திருந்துச்சு. நம்மளுக்கு எதுக்கு ஐந்தாண்டு திட்டம். நாம ஓராண்டு திட்டத்தையே ஒழுங்கா நிறைவேத்துரதில்ல பிறகு எதுக்கு
ஐந்தாண்டு திட்டம் அப்படின்னு ஒரு கட்டுரை வந்த்திருந்துச்சு. அதே தான் எனக்கும் தோணுச்சு. இந்தியாவிற்கும் இதே கேசு தான . நாம எப்ப ஓராண்டு திட்டதேயே ஒழுங்கா நிறைவேத்துனோம். பிறகு என்னத்த ஐந்தாண்டு திட்டம்னு தோணுச்சு. என்ன இருந்தாலும் இந்தியாவும் பாகிஸ்தானும் பங்காளிகதான, ஒன்னாத்தான இருப்பாங்க.

****************

Monday, May 17, 2010

கள்ளத்தனமாய் கண்கள் பேச ...


விளம்பரங்கள் இந்த web 2.0 உலகில் இன்றியமையாதவைகள். ஒரு பொருளை கூவி விற்பதற்க்கே விளம்பரங்கள். ஒரு காலத்தில் வெறுமனே கூவி விற்பதாக அமைந்த விளம்பரங்களில் இன்றோ creativity யோ அல்லது மக்களை கவரும் விதமாகவோ அமையாவிட்டால் இந்த உலகில் எந்த பொருளையும் விற்க முடியாது. அந்த வகையில் என்னைக் கவர்ந்த விளம்பரங்கள் அநேகம். சில நிகழ்சிகளை நான் விளம்பரங்களுக்காகவே பார்கின்றேன்.

புதிய லிம்கா விளம்பரம் ரொம்ப அருமை. அந்த பொண்ணு புத்தகம் படிக்கும் போது அந்த பையன் லிம்கா குடிப்பான் . உடனே அந்த புத்தகம் தண்ணீராய் மாறி சிதறும் . அடுத்து அந்த பெண் துண்டை எடுக்கும் போது அதுவும் தண்ணீராய் மாறி சிதறும். அடுத்து அந்த பெண் பூஞ்சட்டிய எடுத்து வீச அதுவும் தண்ணீரை மாறும் போது, அப்பா அந்த பெண் ஒரு reaction காட்டுவாளே, அய்யகோ அதி அற்புதம். இப்படியாக அனைத்தும் தண்ணீராய் மாறி சிதற, அந்தப் பெண்ணும் லிம்காவைக் குடிக்க அந்த பையன் உக்கார்ந்த இரு சக்கர வாகனம் தண்ணீராய் சிதற அந்தப் பெண்ணும் ஒரு சிரிப்பு சிரிப்பாள். அய்யகோ நான் என் செய்வேன் அந்த இடத்தில் நான் என்னை இழந்தேன். "கள்ளத்தனமாய் கண்கள் பேச , ஏதோ செய்து என்னை வீழ்த்த ..."

கள்ளத்தனமாய் கண்கள் பேச
ஏதோ செய்து என்னை வீழ்த்த
குளிர்ந்து போனேன் சிலிர்த்து நின்றேன்
மீண்டும் என்னை சீண்ட வாயோ
உள்ளிருக்கும் ஆசைகள் உடைந்து கொண்டு பாயாதோ
சாரல் தொட்ட பூவைப் போலே
காலைப் பனியின் கனாவுக்குள்ளே
கலந்து நாமும் கரைந்து போவோம் வா
சின்ன சின்ன சீண்டல்களில் என்னைக் கொஞ்சம் காப்பாயோ ...

மிச்சமான மூணு ரூபால நான் ஐஸ் கிரீம் சாப்ட்டேன் "ஆ....." என்று அந்த குழந்தை வாயைக் காட்டுவதை யார்தான் விரும்ப மாட்டார்கள் ....


ரொம்ப ரொமான்ஸ் ஆனா விளம்பரங்களில் எனக்குப் பிடிச்சது "3 Roses Ad" தான் . அது அவ்வளவு அழகா இருக்க அதுல வர்ற பொண்ணுதான் காரணம். அந்தப் பொண்ணு அவ்ளோ ஹோம்லியா, ரொமாண்டிக்கா,அழகா இன்னம் என்ன என்னவோ மாதிரி இருப்பா . அந்த விளம்பரத்தோட sequence உம் அவ்வளவு நல்லா இருக்கும்.

அதே மாதிரி "I like Adhithya" நு ஆதித்யா சேனல வர்ற பொண்ணும் அவ்வளவு அழகா இருப்பா. (இப்ப வர்ற cooling glass போட்ட பொண்ணு இல்ல, இதுக்கு முன்னாடி வந்த fair இருக்க பொண்ணு.)

Thursday, May 13, 2010

வாழ்த்துக்கள் விஸ்வநாதன் ஆனந்த்

விஸ்வநாதன் ஆனந்த், இந்தியாவின் உண்மையான சாம்பியன். நேற்று அவர் உலக சாம்பியன் ஆனதுடன், நான்காவது முறையாக இந்த பட்டத்தைப் பெறுகிறார். இது அவருடைய undisputed championship - இல் இரண்டாவது சாம்பியன்ஷிப்.

செஸ் உலகம் FIDE World Champions and Classical World Champions என 1993 ஆம் ஆண்டு முதல் 2006 வரை பிரிந்திருந்தது. 1993 ஆம் ஆண்டு காஸ்பரோவும் , நிகெல் ஷர்டும் (Nigel Short) ,FIDE ல ஊழல் அதிகமாகவும் professionalism இல்லாம இருக்குனு சொல்லி அவங்க தனியா பிரிஞ்சு "Professional Chess Association" நு ஒன்ன ஆரம்பிச்சு "Classical World Champions" நு தனியா நடத்தினாங்க. அதே கால கட்டத்தில FIDE உம் FIDE World Champions நு நடத்துச்சு. இப்படி FIDE நடத்திய உலக சாம்பியன்ஷிப்லதான் விஸ்வநாதன் ஆனந்த் , 2 முறை 2000-2002 ஆம் ஆன்டுகளில் சாம்பியன்ஷிப் ஜெயிச்சாரு. ஆனால் அது இரண்டுல ஒரு சாம்பியன்ஷிப்ங்கறதால அதிகமா பேசப்படல . அப்புறம் 2006 ல இரண்டு செஸ் உலகம்களும் இணைந்தாங்க. அப்ப இருந்து நடந்துட்டு வர செஸ் சாம்பியன்ஷிப் undisputed chess championship னு அழைக்கப்படுகிறது. இப்படி நடந்த உலக சாம்பியன்ஷிப்லதான் ஆனந்த் மேலும் இரண்டு முறை champion ஆயிருக்காரு.

நேற்று நடந்த சாம்பியன்ஷிப்ல உலக தர வரிசையில நான்காவது இடம் வகிக்கும் ஆனந்த், இரண்டாம் இடம் வகிக்கும் பல்கேரியாவைச் சார்ந்த "Vaselin Topalov" வ எதிர்கொண்டார். வசெளின் டோபலோவ் 2005-2006 ஆம் ஆண்டு நடந்த FIDE World Championship ஜெயித்தவர். இந்த சாம்பியன்ஷிப்ல நடந்த கடைசி ஆட்டத்துல ஆனந்த், டோபலோவ 6.5-5.5 னு ஜெயிச்சுருக்காரு. இதன் மூலம் ஆனந்த் 1.4 million euro வ ஜெயிச்சுருக்காரு.

இந்த சாம்பியன்ஷிப் ஒன்னும் ஆனந்துக்கு அவ்வளவு இலகுவா இல்ல. ஐஸ்லான்ட் எரிமலைகுமுரலினால் ஆனந்த் பயணிக்கவேண்டிய விமான நேரம் தள்ளி வைக்கப்பட்டது. அதனால அவரால் சரியான நேரத்துக்கு போட்டி நடந்த சோபியாவிர்க்குச் செல்ல முடியல. அதானால் ஆனந்த் போட்டிய 3 நாள் தள்ளி வைக்க முடியுமான்னு கேட்டாரு. ஆனால் போட்டி ஒரு நாள் தான் தள்ளிவைக்கப்பட்டது. இதனால் ஆனந்த் 40 மணி நேரம் தரை வழிப் பயணம் மேற்கொண்டு போட்டி நடந்த சோபியாவை அடைந்தார். மேலும் முதல் போட்டியிலயே ஆனந்த் தோல்வியைத் தழுவினார். பின்னர் வெற்றிகளை மேற்கொண்டு சாம்பியன் ஆயிட்டாரு .

விஸ்வநாதன் ஆனந்துக்கு நமது வாழ்த்துக்களைத் தெரிவிப்போம். Anand, you are a true indian. we are proud of you.

Wednesday, May 12, 2010

நான் பிரதமரானால் - சுகாதாரத்துறை

இப்பதிவு நான் பிரதமரானால் என்ற பதிவின் தொடர்ச்சியே ஆகும். இப்பதிவில் நான் சுகாதாரத் துறையைப் பற்றி ஆலோசிக்கப் போகிறேன்.

இந்தியாவின் சுகாதாரத்துறை 3500 ஆண்டுகள் பழமையானது. 3500 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இந்தியாவில் ஆயுர்வேதம் பின்பற்றப்படுகிறது. பேரரசர் அசோகர் பல பள்ளிகளை நிறுவி மருத்துவக் கல்வியைப் பரப்பினார். மேலும் உலகிலேயே முதல் முறையாக பேரரசர் அசோகர் தன் நாட்டு மக்களுக்கு அனைவர்க்கும் மருத்துவ வசதி கிடைக்க முயற்சி மேற்கொண்டார். இவ்வாறாக இந்தியாதான் தன் நாட்டு மக்களுக்கு மருத்துவ வசதியை அளித்த முதல் நாடு.

ஆனால் இன்றோ நம் ஊரில் வியாதிகளுக்கு பஞ்சமில்லை அத்துடன் சாலை விபத்துகளால் ஏற்ப்படும் உயிரிழப்புகளும் அதிகம் . உலகிலேயே அதிகம் பேர் சாலை விபத்துகளால் உயிரிழப்பவர்கள் இந்தியாவில் தான் அதிகம் . இந்தியாவில் 2007 ஆம் ஆண்டு மட்டும் 1.13 லட்சம் பேர் சாலை விபத்தில் உயிரிழந்துள்ளனர் . இது சாலை விபத்தின் போதே நடக்கும் உயிரிழப்புகளை மட்டுமே கணக்கில் கொண்டதா அல்லது சாலை விபத்துகளுக்கடுத்து நடைபெறும் சிகிச்சையின் போது இழந்த உயிர்களின் எண்ணிக்கையையும் சேர்த்ததா என்று தெரியவில்லை. இது எனக்குத் தெரிந்து சாலை விபத்துகளின் போது நடைபெறும் உயிரிழப்புகளை மட்டுமே கணக்கில் கொண்டதாக இருக்கும். அப்படியானால் உண்மையான எண்ணிக்கை இதைவிட அதிகம். சாலை விபத்துகளின் போது நடைபெறும் உயிரிழப்புகளை சாலை மேம்பாட்டின் மூலம் தடுக்கலாம் . ஆனால் அதற்கடுத்து நடைபெருமிழப்புகளை மேம்பட்ட மருத்துவ முறைகளின் மூலம் மட்டுமே தடுக்க இயலும்.

மேலும் உலகிலேயே சக்கரை நோயின் தலை நகரமாக இந்தியா விளங்குகிறது. 1995 ஆம் ஆண்டு 19 மில்லியன் ஆக இருந்த சக்கரை நோயாளிகளின் எண்ணிக்கை 2007 ஆம் ஆண்டு 40.9 மில்லியன் ஆக உயர்ந்தது. சக்கரை நோய் உலகிலேயே நோய்களின் மூலம் ஏற்ப்படும் உயிரிழப்பில் நான்காவது இடத்தை வகிக்கிறது.

இந்தியாவில் குண்டானவர்களின் (Obesity) எண்ணிக்கை நாட்டின் மக்கள் தொகையில் 5% ஆக உள்ளது. Obesity தான் உலகில் பல நோய்களுக்கு மூல காரணம்.

இந்தியா உலகிலேயே நான்காவது எய்ட்ஸ் நோயாளிகள் அதிகமாக இருக்கும் நாடு.

அதே போல் உலகிலேயே இருதய நோய் அதிகம் இருக்கும் நாடு இந்தியா.

ஏறக்குறைய 10 லட்சம் மக்கள் இந்தியாவில் போதுமான மருத்துவ வசதி இல்லாததால் இறக்கின்றனர். 70 கோடி மக்களுக்கு சிறப்பு மருத்துவ வசதி கிடைப்பதில்லை .
இந்தியாவில் இருக்கும் சிறப்பு மருத்துவ வசதிகளில் கிட்டத்தட்ட 80% நகர்ப் புறங்களிலேயே உள்ளது .

இப்படி பல நோய்களின் தலைமையிடமாக இருக்கும் இந்தியாவில் மக்களுக்கு போதிய மருத்துவ வசதிகள் சென்றடைவதில்லை. இத்தனைக்கும் இந்தியாவில் போதிய மருத்துவ வசதிகள் இல்லாமல் இல்லை. இந்தியா தற்பொழுது மருத்துவச் சுற்றுலாவின் தலைமையிடமாக மாறிக்கொண்டிருக்கிறது . பல வெளிநாட்டுக்காரர்கள் செலவு குறைவாக இருக்கிறது என்று இந்தியாவில் தான் மருத்துவச் சிகிச்சைப் பெறுகிறார்கள் . அந்த அளவிற்கு இந்தியாவில் மருத்துவ வசதிகள் உள்ளன. ஆனால் அவை இந்திய மக்களுக்கு கைக்கெட்டும் தொலைவில் இல்லை.

முதலில் மருத்துவ சிகிச்சைகளுக்குத் ஆகும் செலவீனங்களைப் பார்க்க வேண்டும் . அந்த செலவீனங்கள் அனைத்து மக்களாலும் கொடுக்க முடியாது. ஆக இந்தியாவில் இருக்கும் அனைத்து மக்களுக்கும் இலவச காப்பீடு வழங்க வேண்டும். ஆக மருத்துவச் செலவுகளை காப்பீடுகள் மூலம் அளிக்கலாம். இது ஒன்றும் உலகில் புதுமையானது ஒன்றும் அல்ல . இங்கிலாந்து நாட்டில் ஏற்கனவே NHS (National Health Service) என்ற பெயரில் இருப்பதுதான். இதன் மூலம் அந்நாடு தன் நாட்டு மக்களுக்கு தேவையான மருத்துவச் செலவுகளை இந்த NHS மூலம் அளிக்கிறது. ஏன் அந்நாட்டில் தங்கிப் படிக்கும் வெளிநாட்டு மாணவர்களுக்கு கூட இந்த திட்டத்தின் மூலம் இலவச மருத்துவச் சிகிச்சை அளிக்கிறது .

நூறு கோடி பேருக்கு இன்சூரன்ஸ் அளிப்பதின் மூலம் சில கோடி பேருக்கு உயர்தரச் சிகிச்சை அளிக்க முடியும். இந்த இன்சூரன்ஸ் திட்டத்திற்குத் தேவையான நிதியை முழுவதுமாக அரசாங்கமே ஏற்காமல் அரசும் மக்களும் சேர்ந்து ஏற்கலாம். எப்படி வாகனங்களுக்கு கட்டாயம் இன்சூரன்ஸ் இருக்கவேண்டுமோ அப்படி மக்களுக்கு கட்டாயம் இன்சூரன்ஸ் இருக்க வேண்டும். இந்த இன்சூரன்ஸ் வழங்கும் திட்டத்தை LIC நிறுவனம் ஏற்ப்பது மூலம் இந்த திட்டத்தில் ஏற்ப்படும் வரவு செலவுகளை மறைமுகமாக அரசாங்கமே பெறலாம். இதன் மூலம் அரசாங்கப் பணமானது எங்கும் ஓடிப் போகாமல் அரசாங்கத்திடமே திரும்பி வரும்.

இத்திட்டத்தில் செலவழிக்கப்படும் நிதியானது முழுவதுமாக இன்சூரன்ஸ்கு என்றே செலவழிக்கப்படாமல் குறிப்பிட்ட சதவீதம் மக்களுக்கு பல்வேறு நோய்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்ப்படுத்தவும் , AIIMS போன்ற பல்வேறு மருத்துவமனைகள் ஏற்ப்படுத்தவும் பயன்படும்.

இந்தியாவில் உள்ள 250 ஆங்கில மருத்துவக் கல்லூரிகளிலிருந்தும் , 400 இந்திய மருத்துவ முறைகளிலிருந்தும் கிட்டத்தட்ட 5,00,000 மருத்துவர்கள், செவிலியர்கள்,para professional கள் வெளிவருகின்றனர். இந்த எண்ணிக்கையே போதுமானதாக இல்லை. மேலும் மருத்துவக் கல்லூரிகளின் தரத்தையும் உயர்த்த வேண்டி உள்ளது. நமக்கு AIIMS போன்ற உயர்தர அரசாங்க மருத்துவமனைகள் தேவை.


உலக தர மருத்துவச் சிகிச்சைகளைப் பெறவும், தேவையான மனித ஆற்றலைப் பெறவும் இந்திய அடுத்த 5 ஆண்டுகளில் $20billion முதலீடு செய்ய வேண்டிருக்கும்.
இந்தியாவிலிருக்கும் மருத்துவமனைப் படுக்கைகளின் எண்ணிக்கை மிகவும் குறைவு. உலக அளவில் மருத்துவமனைப் படுக்கைகளின் எண்ணிக்கை 3.96 /1000 மக்களுக்கு இருக்கும்போது இந்தியாவின் சராசரி வெறும் 0.7 தான். இந்நிலைமை மாற அதிக முயற்ச்சிகள் எடுக்கப்படும் .

மேற்க்கூறிய செலவினங்களை கையாளுவதற்கும் மருத்துவ வசதிகளை மேம்படுத்துவதற்கும் நிதி நிலை அறிக்கை போன்று ஒவ்வொரு ஆண்டும் மருத்துவ அறிக்கை சமர்பிக்கப்படும்.

ஆரம்ப சுகாதாரங்களில் வசதிகள் மேம்படுத்தப்படும் மற்றும் மருத்துவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் .

இத்துறையில் இருக்கும் மற்றொரு முக்கியமான பிரச்சினை கிராமப் புறங்களுக்கான பல மருத்துவர்கள் தாங்கள் பணிபுரியும் மருத்துவமனைகளுக்கேச் செல்லாமல் தங்களுடைய தனியார் மருத்துவமனைகளிலேயே தங்கி பணம் சம்பாதிப்பது. அந்த நிலையை மாற்ற கட்டாயமாக சிறப்பு அதிரடி சோதனைப் படை அமைக்கப்படும். தவறிழைக்கும் மருத்துவர்களின் லைசென்ஸ் ரத்து செய்யப்படும்.


http://www.indiastat.com/default.aspx
http://www.indiastat.com/crimeandlaw/6/accidents/35/roadaccidents/17897/stats.aspx

Monday, May 3, 2010

அப்பா வந்திருந்தார்

அன்று வெகு நாட்களுக்குப் பிறகு அப்பா வந்திருந்தார். கணேஷ் இதனை எதிர்பார்கவில்லை.அவனுக்கு ஒரே சந்தோசம். அவனுக்கு அப்பாவிடம் பேச இத்தனை நாட்களில் எவ்வளவோ இருந்தது. அவனை கையால் பிடிக்க முடியவில்லை . அவன் துள்ளி குதித்து கொண்டிருந்தான். பொதுவாக கணேஷிற்கு அம்மாவை விட அப்பாவிடமே பாசம் அதிகம். அதேபோல் அவன் அப்பாவிற்கும் கணேஷிடம் ரொம்ப பாசம் அதிகம். கணேஷின் துள்ளி குதிப்பை அவர் அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தார். அவருக்குத் தெரியும் அவருடைய திடீர் பிரவேசம் அவனை திக்கு முக்காடச் செய்யும் என்று.

அன்று அம்மாவாசை ஆனதால் அவன் அம்மா விருந்து சமைத்து கொண்டிருந்தார். அவன் அப்பாவை அவர் எதிர்பார்த்திருப்பார் போலும். கணேஷ் தான் எதிர்பார்கவில்லை.

அவன் அப்பா இங்கு இருந்த வரை கணேஷ் மனம் கோணக் கூடாதென்று அவன் கூறிய அனைத்தையும் செய்தார் .அவருக்கு அவனுடைய சந்தோசமே பிரதானம். அவர் தபால் துறையில் மிகப் பெரிய அதிகாரியாக இருந்தார். அவர் கடமை தவறாத நேர்மையான அதிகாரியாக இருந்தார் . கணேஷிற்கு அவன் அப்பாவை ரொம்ப பிடிக்கக் காரணம் இதுவும் கூட. அலுவலகத்தில் மிகக் கண்டிப்பான அதிகாரியாக இருந்த அவன் அப்பா வீட்டில் அதற்க்கு நேர் மாறாக தன் பிள்ளைகளிடம் மிக அன்புடன் நடந்து கொண்டிருந்தார். வீட்டில் கணேஷ் தவிர அவன் தம்பி குமாரும் இருந்தான். இருவர் மேலும் அவன் அப்பா அன்பு காட்டினாலும் கணேஷின் மீதுதான் அவருக்கு பாசம் அதிகம். அதற்க்கு ஒரு காரணம் இருந்ததது. கணேஷ் சிறிது அதிர்ந்து பேசினாலோ அல்லது சிறு தோல்வி கண்டாலோ உடனே உடைந்துவிடுவான். அதனாலையே அவர் தன் மகன் மனம் கோணாமல் நடந்து கொண்டிருந்தார் . அவர் தன் பிள்ளைகள் எது கேட்டாலும் வாங்கித் தந்தார். எதற்கும் தன் பிள்ளைகளிடம் எதிர்ப்பு தெரிவிக்கமாட்டார்.

கணேஷ் பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் வரையிலும் கூட அவருடைய விடுமுறை நாட்களில் , மற்றும் கணேஷின் தேர்வு நாட்களில் அவனையும் அவன் தம்பியையும் பள்ளிக்கு தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் கொண்டு சென்று விடுவதும் கூட்டி வருவதும் அவர் தானாகவே விரும்பி ஏற்றுக் கொண்ட ஒரு செயல். அவனுடைய மற்றும் அவன் தம்பியுடைய 11 மற்றும் 12 ஆம் வகுப்பு record நோட்களிலெல்லாம் படம் வரைந்து தருவது கணேஷின் அப்பாவுடைய வேலை. இப்படி பல செயல்களை அவர் தன் மக்களுக்காகச் செய்தார்.

கணேஷ் 12 ஆம் வகுப்பு முடிந்த பிறகு இன்ஜினியரிங் படிப்பிற்காக அவன் சென்னை சென்றான். அவன் ஒவ்வொரு தடவையும் தன் சொந்த ஊரிலிருந்து சென்னைக்குச் செல்லும் போது அவனை தன் இரு சக்கர வாகனத்தில் ஏற்றி வந்து பேருந்து செல்லும் வரைக் காத்திருந்து விடையளிப்பார்.

ஆனால் ஆறு மாதம் கூட கணேஷால் அவன் குடும்பத்தை இருக்க முடியவில்லை. அவன், அவன் அப்பாவிடம் அழுது புரண்டு அவரை சென்னைக்கு மாறுதல் பெற்று வரச் செய்தான். பொதுவாக அவன் அப்பாவிற்கு சென்னையும் , அதன் மரியாதை கெட்டத் தனமும் அறவேப் பிடிக்காது. அவர் தன்னுடைய பணி நாட்கள் முழுவதும் தென் தமிழகத்திலேயே கழித்தவர். அப்படிபட்டவர் தன் மகனுக்காக தனக்குப் பிடிக்காத சென்னைக்கு மாறுதல் பெற்று வந்தார். கணேஷின் அம்மாவும் அரசாங்க வேலை பார்த்ததால் அவர் சொந்த ஊரிலேயே தங்கிவிட்டார். இப்படியா அவர் தன மகனுக்காக தன் மனைவியை விட்டு பிரிந்து சென்னை வந்தார். மேலும் அவர் தன்னுடைய மகன் கல்லூரிக்குச் செல்வதிற்கு கஷ்டப்படக்கூடாதென்று கணேஷின் கல்லூரிக்கு அருகிலேயே வீடு பார்த்து குடியேறினார். குமாரும் சென்னையில் தனியார் கல்லூரியில் எஞ்சினியரிங் சேர்ந்தான். அவரும், குமாரும் தங்கள் பணி மற்றும் கல்லூரி நிமித்தமாக நெடுந்தொலைவு பேருந்தில் பயணப்பட்டனர். அவன் அப்பா கணேஷிர்க்காக அவன் விருப்பப்பட்டதை அனைத்தையும் செய்தார் .

அவர்கள் அப்பொழுது ஒரு வீடு வாங்குவதற்காக பார்த்துக் கொண்டிருந்தனர். அவன் அப்பா ஒரு அழகிய வீட்டையும் குறைந்த விலையில் பார்த்திருந்தார். அந்த வீடு அவருக்கு ரொம்ப பிடித்திருந்தது, ஆனால் கணேஷ் கூறிய உப்பு சப்பில்லாத காரணத்திற்க்காக அதனை வேண்டாம் என்று சொல்லிவிட்டார். இப்படி பல செயல்களை தன் பிள்ளைகளுக்காகச் செய்தார்.

அவன் அப்பா இங்கு இருந்தவரை philatelic ஸ்டாம்ப்ஸ் சேகரித்துக் கொண்டிருந்தார். அவர் மிகப் பெரிய தபால் தலை சேகரிப்பு கொண்டிருந்தார் . அவர் இந்தியாவில் சுதந்திரத்திற்குப் பிறகு வெளி வந்த அனைத்து தபால் தலைகளையும் கொண்டிருந்தார். அவர் போன பிறகு அவர்கள் வீட்டில் அதை பின் தொடர்வோர் யாரும் இல்லை . ஆனால் கணேஷ் மட்டும் அத எப்படியாவது பின் தொடர்வது என்று எண்ணி மாசம் மாசம் தபால் நிலையங்களில் பணம் கட்டி தபால் தலை பெற்றுக் கொண்டிருந்தான். அவன் அம்மாவிற்கு அதில் பெரிதாக ஈடுபாடு இல்லை என்பதால் இது எதற்கு வெட்டிக் காசு என்று திட்டிக் கொண்டிருந்தார், கணேஷிர்க்கும் அதில் ஒன்றும் அவ்வளவு ஈடுபாடு இல்லை தான் . இருந்தாலும் தன் அப்பா தொடர்ந்த செயலை தானும் தொடர வேண்டும் என்று எண்ணித் தொடர்ந்தான்.

தன் அப்பாவிடம் அவர் சென்ற பிறகு தான் சேகரித்த தபால் தலைகள் அனைத்தையும் காட்டி பெருமிதம் கொண்டிருந்தான். மேலும் தன் அம்மாவைப் பற்றியும் கோள் சொல்லிக் கொண்டிருந்தான். அவனுடைய பூரிப்பு தாங்க முடியவில்லை . அவன் அப்பா ஒன்றும் பேசாமல் அவன் செய்வது அனைத்தையும் மௌனமாக கேட்டுக் கொண்டிருந்தார்.

அவன்
அம்மாவும் எதுவும் அலட்டிக் கொள்ளாமல் அவர் பாட்டுக்கு சமையல் செய்து கொண்டிருந்தார். அவரும் எதுவும் பேசவில்லை .ஆனால் வந்ததிலிருந்து அவர் பேசாததுதான் அவனுக்கு நெருடலாக இருந்தது. தீடிரென்று கணேஷின் அம்மா கூப்பிடும் குரல் கேட்டது, "டேய் கணேஷ் எழுந்திரு, போய் காக்கைக்கு சாதம் வை . இன்னைக்கு அம்மாவாசை" என்றார். அப்பொழுதுதான் கணேஷிற்கு விழிப்புத் தட்டியது. எதிரே இருந்த சுவரில் அப்பா போட்டோவில் அசைந்து கொண்டிருந்தார்.