Showing posts with label அனுபவம். Show all posts
Showing posts with label அனுபவம். Show all posts

Saturday, February 13, 2016

செல்லங்கள் .....

alt text

சின்ன வயசுல இருந்தே எனக்கு செல்லப் பிராணிகள்னா ரொம்ப பிடிக்கும். ஆனா வீட்டுல அதுக்குலாம் தடா. இருந்தாலும் ரோட்டுல போ நாய்க்குட்டி, பூனைக்குட்டியலாம் பிடிச்சு கொஞ்சிக்கிட்டு இருப்பேன். பொதுவா இந்த லெகான் கோழிப்பண்ணைகளிலாம் பெண் கோழிக்குஞ்சுகளுக்குதான் மதிப்பு. ஏன்னா அதுதான முட்டை போடும். அதுனால இந்த ஆண் கோழிக்குஞ்சுகளலாம் கழிச்சுருவாங்க. அதலாம் சில பேரு போயி வாங்கிட்டு வந்து கலருல முக்கி சின்னப் பசங்கட்ட விப்பாங்க. ஒன்னு, ரெண்டு ரூபா இருக்கும். அப்பலாம் அதிக பசங்கட்ட ரெண்டு ரூபாலாம் இருக்காதுங்குறதால ஒரு சீட்டு இருபது பைசானு , பத்து சீட்டு போட்டு குலுக்கல் முறைல ஒரு கோழிக்குஞ்சு தருவாங்கவீட்டுல மிட்டாய் வாங்க குடுக்குற காச எடுத்துகிட்டு பொட்டிக் கடைக்கு போனா பக்கத்துலேயே இந்த கலர் கோழிக்குஞ்சுகள வச்சுருப்பாங்க. அப்பலாம் சின்னப் பசங்க சங்கமிக்கி இடமா பொட்டிக் கடைகள் இருந்ததாலும் , அங்க வர்ற பசங்ககிட்டதான் காசு இருக்கும்கிற வியாபார வியூகத்தினாலும் பொட்டிக் கடைக்குப் பக்கத்துலதான் இந்த வியாபாரம் நடக்கும் .

என்னதான் வீட்டுல திட்டு கிடைக்கும்னாலும், நானும் மிட்டாய் வாங்கப்  போகும்போது, ஒரு நப்பாசைல சீட்டு வாங்கிருவேன். என் ராசியோ என்னவோ, நான் சீட்டு வாங்கும்போதுலாம் கோழிக்குஞ்சு விழுந்துரும். இத எப்படி வீட்டுக்கு கொண்டு போகுறதுனு யோசன பண்ணிக்கிட்டே நைசா கொண்டு போவேன். ஆனா எப்படியும் இது கத்திக் காட்டிக்கொடுத்துரும். அப்பறம் கெஞ்சிக் கூத்தாடி வச்சிருப்பேன். ஆனா ரெண்டு நாளுதான். அதத் தூக்கி யாராவது பக்கத்து வீட்டுல கொடுத்துருவாங்கஇப்படி அடிக்கடி நடந்ததால, அதுக்கப்புறம் கோழிக்குஞ்சு சீட்டு வாங்க மாட்டேனு ஒபாமா அமெரிக்க தேசிய கீதம் பாடும்போது நெஞ்சுல கை வச்சு சொல்லுற  மாதிரி, உறுதி மொழி எடுத்தாதான் அடுத்து காசே கிடைக்கும்.

எங்க வீட்டுல கொஞ் அதிக நாள் கூட இருந்தது, எங்க அம்மாக்கு தெரிஞ்சவங்க கொடுத்தது கோழிகுஞ்சுதான். அதுக்கு இர போட்டா அது திங்கிறேன் பேர்வழினு, மண்ணக் கீறி இரைய தோண்டுற பழக்க தோசத்துல, இரையக் காலால கீறீ வீடு முழுசும் பரப்பிவிட்டுரும். இப்படி விட்டா அம்மா இதச் சொல்லியே அத மறுபடியும் நாடு சாரி வீடு கடத்திருவாங்கனுநான் கொஞ்சம் என் சிறு மூளையைக் கீறீ, பேஸ்டு அட்ட டப்பால அது தல மட்டும் போற மாதிரி வெட்டி, அதுல இரையைப் போடுவேன்அப்பயும் அது பழக்க தோசத்துல தரையைக் கீறும். அதப் பாத்துட்டு அப்பா , அதுக்கு மண்ணுல திங்கிற பழக்கமே போகப்போதுனு சொல்லுவாங்க. இந்தப் பிரச்சினைக்கு தீர்வு கண்ட என்னால், அது பின்புறம் ஒரு குட்டிப்பையைக் கட்டிவிடுவதில்(yes, for that purpose only), வெற்றி வாகைச் சூட முடியவில்லை. அதனால் அது இங்கிங்கெனாதபடி, வீடு முழுசும் தன் முழுநேரக் கடனைக் கழித்தது (காலைக் கடன்லாம் சொல்லுவது லாஜிக்கலி incorrect. அது முழித்திருக்கும் நேரம் எல்லாம் போய்கிட்டு இருந்தது அல்லது அப்படித்தான் எங்க அம்மாவால் சொல்லப்பட்டது). பின் இதைக் காரணம் காட்டியே எங்க அம்மாவால் அது வீடு கடத்தப்பட்டது.

சரி இதுதான் பிரச்சினைனு , இந்தப் பிரச்சினை இல்லாத, கலர் மீனு வாங்கிட்டு வந்து ஒரு பக்கெட்டுல போட்டு வச்சேன். அதுக்கும் சைவ பட்சினியான எங்க வீட்டில் முறைக்கப்பட்டதுஅதைத்தவிர அப்பப்ப சில பல காரணங்களால் மீன்கள் இறந்து போய் வீட்டில் பிரச்சினையைக் கிளப்பியது ( பேசிக்கலி நான் ஒரு சோம்பேறி என்பதால், நான் அடிக்கடி தண்ணி மாத்தாதலால்தான் அந்த மச்ச அவதாரங்கள் இறந்தன என்று எங்க அம்மாவால் குற்றம் சாட்டப்பட்டேன் என்பது இங்கு அவசியமில்லை).

இவ்வளவு பிரச்சினைகள் இருந்தாலும், தன் முயற்சியில் சற்றும் தளராத விக்கிரமாதித்தனா இன்னும் பிற வளர்ப்புப் பிராணிகள் கண்டுபிடிப்பதில் ஈடுபட்டுக்கொண்டிருந்தேன். ரொம்ப நாளா எனக்கு கிளி வளக்கணும்னு ஆசை. அப்பொழுது என்னுடன் சுந்தர் என்ற நண்பன் படித்துக் கொண்டிருந்தான். கிளி வளக்கணும்கிற ஆசையை அவன்ட ஒரு நாள் சொன்னேன். அதுக்கு அவன் தனக்கு கிளிக்குஞ்சு எடுப்பவர்கள் தெரியும்னும், தான் ஒரு கிளிக்குஞ்சு தர்றதாவும் சொன்னான். அதுக்கு பிரதி உபகாரமா நான், அடுத்து வர்ற பரிச்சைல என் பேப்பர அவன் பாத்து எழுத கொடுக்கணும்கிற தீர்மானம் ஏற்கப்பட்டதுஅடுத்து அந்த அதிசய சம்பவம் ஒரு நாள் மதியப் பொழுதில் நிகழ்ந்தது (ஆம், எங்க வீட்டில் அனைத்து வளர்ப்புப் பிராணிகளும் எங்க அம்மா ஆபீஸ் போயிருக்கும் மதிய நேரங்களிலேயே என்னால் அனுமதிக்கப்படும்). சுந்தர், ஒரு மஞ்சப் பைல நாலஞ்சு கிளிக்குஞ்சுகளோட வந்திருந்தான். அதைப் பார்த்ததும் எனக்கு பக்குனு ஆயிடுச்சு . ஏன்னா அதப் பாத்தா கிளி மாதிரியே இல்ல. கிளிக்கான லட்சணங்களில் அந்த சிவப்பு மூக்கத் தவுத்து வேற ஒன்னுமே இல்ல. கொஞ்சம் கூட முடி இல்லாம கிட்டத்தட்ட ஒரு மாமிச பிண்டம் மாதிரி இருந்துச்சு, அதப் பார்த்ததும் எனக்கு அம்மாட்ட செம அடி வாங்கிருவோமோனு முத தடவ பயம் வந்துருச்சு. ஆனா கண்ணு திறக்காத அதப் பாத்து பாவமாவும் ஆகிருச்சு. சரினு சுந்தர் கொடுத்த ஒன்ன வாங்கி வீட்டுல ஒளிச்சு வச்சுட்டேன். மீதிய அவன் மத்த பிரன்ஸுகிட்ட கொடுக்க கொண்டு போய்ட்டான். இத எப்படியோ கண்டுபிடிச்ச எங்க அம்மாச்சி சாயங்காலம் எங்க அம்மா வந்துதும் சொல்லிட்டாங்க. எங்கடா கிளினு கேட்ட, எங்க அம்மாட்ட அதக் காட்டவும் ஒரே அலரல். அவங்க, இப்படி ரோமமே இல்லாம, கண்ணு தெரியாத ஒன்ன எதிர்பாக்கல. டேய் , இதலாம் பாவம்அதுக்கு ஒன்னு ஆச்சுனா அந்த பாவம் நம்மலதான் சேரும். இப்படி பண்ணிட்டயேனு சொல்லவும், எனக்கே பயம் வந்துருச்சுகண்ணு கூட திறக்காத அத எப்படி வளக்கனும்னு கூட தெரியல. எப்படி சாப்பாடு கொடுக்கணும்னு கூட தெரியல.

அப்ப எங்க வீட்டு பக்கத்துல, ஐடிஐல படிச்சுகிட்டு இருந்த சில அண்ணாக்கள் இருந்தாங்க. அவங்கட்ட கொடுத்து இத கொஞ்ச நாள் வளக்கச் சொல்லுறதுனும்னும், அதுக்கு முடிலாம் முளச்சு தானா சாப்பிட கத்துகிட்டதும் அத வாங்கிக்கிறதுனும்னு எங்க வீட்டில் முடிவு எடுக்கப்பட்டு, அந்த அண்ணாக்களிடம் அடைக்கலமாக திணிக்கப்பட்டது.(திணிக்கப்பட்டது என்பதுதான் சரி, அவர்களிடம் இதைப் பற்றி கேட்கவே இல்ல. அந்த தெருவிலேயே அவர்கள் TV பாக்க அனுமதித்த ஒரே வீடு எங்க வீடுதான் என்பதால், அந்த அதிகாரம் கைக்கொள்ளப்பட்டது). இப்படி அவர்களிடம் திணிக்கப்பட்ட அந்த கிளிக்குஞ்சு நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்தது. அது வயதுக்கு வந்த பிறகு (அதாங்க, சாம்பல் கலர் கிளிக்குஞ்சுல இருந்து பச்ச கலர் கிளியா மாறுன பின்னாடி), ஒரு திருநாளில்அம்மாவால் முதன் முதலில் எங்க வீட்டில் ஒரு செல்லப் பிராணி அனுமதிக்கப்பட்டது, அதுவும் அது அசிங்கம் பண்ணா அத நானும் என் தம்பி மதுவும்தான் கிளீன் பண்ணணும்கிற சில பல கண்டிசன்களுடன்.

வீட்டிற்கு வந்த அந்த கிளி ஒரு ஆண் கிளி என்பதால் அதற்கு ராஜூ (ராஜு பாய்லாம் இல்ல. வெறும் ராஜு தான்) என்று பெயரிடப்பட்டது. ராஜூக்காக நானும் மதுவும் ஸ்கூலுல இருந்து மத்தியானம் வந்து சாப்பாடு , தண்ணிலாம் வச்சுட்டு கொஞ்ச நேரம் கூண்டுல இருந்து திறந்துவிட்டு, திரும்பியும் ஸ்கூல் போவோம். கொஞ்ச நாளுலயே ராஜூ எங்க வீட்டுல ஒரு உறுப்பினராகவே ஆயிடுச்சு. அதுவும் நாங்கள் சாப்பிடும் பால், ஃபான்டா, ஐஸ் கிரீம், கரும்பு என அனைத்தும் சாப்பிடும். அதுவும் பால் குக்கர் விசில் சத்தம் கேட்டுட்டாலையே அது குதிச்சு , குதிச்சு கிச்சனுக்கு ஒடும். அது எங்க வீட்டுல ஒரு ஆளா ஆனதை அங்கீகரிக்கும் விதமாக அதற்கு பிறந்தநாள் வைத்துக் கொண்டாடலாம் என்று முடிவெடுக்கப்பட்டது. அது பிறந்ததாக கருதப்பட்ட ஜனவரி மாதத்தில் வந்த எங்க தாத்தாவின் பிறந்தநாளை ராஜுவின் பிறந்தநாளாக வருடாவருடம் கொண்டாடப்பட்டது.

கொஞ்ச நாளுல எங்க அம்மாவுக்கும் ராஜுவ பிடிச்சுப் போச்சு. எல்லாரையும் போல அதுக்கும் ஒரு task ஒதுக்கப்பட்டது. என்னனா ஜோசியம் பாக்குறது. கிளி ஜோசியம். ஒரு திருநாளில் எங்க அம்மா, எனக்கும் மதுக்கும் எப்ப காதுகுத்துறதுனு ராஜுட்ட கேட்க( அது ஒன்னும் இல்ல, ஒரு நாலஞ்சு தேதிய எழுதிப் போட்டு எடுக்கச் சொல்லுறது. அதுவும் ஏதோ ஒரு பேப்பர எடுத்து திங்க ஆரம்பிச்சுரும். சில நேரம் அது முழுசா கடிச்சுறதுனால, மீதி கிடக்குற பேப்பர வச்சுதான் அது என்னா எடுத்துச்சுனு கண்டுபிடிப்போம்), அதுவும் எடுத்துக் குடுக்க, கர்ம சிரத்தையா எங்களுக்கு காதுகுத்த நாள் குறிக்கப்பட்டது. எப்ப, நான் ஆறாவது படிக்கும்போது. காது குத்திட்டு, அந்த தோடோட ஸ்கூலுக்கு போகமாட்டோம்னு நானும் என் தம்பியும் அடம் பிடிக்க, கொஞ்ச நாளுக்கு தோடு போடடலனா, காது தூர்ந்து போய், நீ காது குத்தலனு கல்யாணத்துக்கு முத நாள் திரும்பையும் காது குத்துவாங்கனு பயமுறுத்திப் பார்த்தாங்க. இருந்தாலும் அன்று தான் கொண்ட மானமே பெரிசுனு காது தோட்ட கழட்டிட்டுதான் நானும் மதுவும் ஸ்கூல் போனோம். அதுக்கு அப்புறம் ஏழு கழுத வயசாகி ஆபிஸ் போன பின்னாடி, காது குத்தி ஒத்தக் காதுல தோடு போடலாம்னு யொசிச்சதெல்லாம் வேற கதை

அடுத்து எங்க வீட்டுக்கு வர்றவங்கலாம் உங்க கிளி பேசுமானு கேட்க ஆரம்பிச்சாங்க .  சரி எல்லார் வீட்டிலயும் கிளி பேசுதே , நம்ம ராஜுவையும் பேச வைக்கணும்னு நாங்களும் முயற்சி பண்ண ஆரம்பிச்சோம் . அதுவும் பக்கத்து வீட்டுல இருந்த கிளிலாம் , வீட்டுக்கு யாரு வந்தாலும் ‘திருட்டுப்பய திருட்டுப்பய’ னு கத்துமாம். அந்த அளவுக்குலாம் வேண்டாம் , சிவானு என் பேரையோ , இல்ல மதுனு தம்பி பேரையோ சொன்னாப் போதும்னு சொல்லிக் கொடுக்க ஆரம்பிச்சோம்.  அதுவும் ‘சீட்டி’ அடிக்கிறத கொஞ்சம் இழுத்த மாதிரி சொல்லும் . படத்துல வர்ற மாதிரி மிகச் சரியான உச்சரிப்புடன் எதிர்பார்த்த எங்களுக்கு கொஞ்சம் ஏமாற்றம்தான் . அதுக்கு மேல எந்த முயற்சியும் கை கூடாததால் அந்த சீட்டியே எங்கள் கிளி பேசியதாக எடுத்துக் கொள்ளப்பட்டது.  

இப்படி எங்களில் ஒரு ஆளாக இருந்த ராஜு ஒரு நாள் பறந்து போச்சு. திரும்பி வரவே இல்ல.

அதனுடன் செல்லப் பிராணிகளுக்கும் எங்களுக்குமான தொடர்பு அற்று விட்டது என்று இருந்த போது கிட்டதட்ட , 15 வருடங்கள் பிறகு , கழுகுக்கு பயந்த புறா சிபிச் சக்கரவர்த்தியை தஞ்சமடைந்ததைப் போல , காக்கைகளுக்குப் பயந்த ஒரு கிளியானது , எங்களை தஞ்சமடைந்தது. அதுவும் ராஜுவைப் போல ஒரு வளர்ப்புப் கிளிதான். நிச்சயம் வெளியில் விட்டால் பிழைக்காது என்பது தெரிந்தது. சரினு அத காலியாக இருந்த எங்க வீட்டு ஒரு ரூம்ல விட்டொம். அவ்வளவுதான், அந்த ரூம் முழுசும் அதுவே எடுத்துக்குச்சு. யாரையும் உள்ளுக்குள்ள விடுறதே இல்ல. முழு ரூமுக்குள்ளும் பறந்துகிட்டே இருக்கும். எங்க வீட்டுக்கு வந்த எங்க அண்ணன்லாம், டேய் , கொடுக்குற இந்த வாடகைல ஒரு ரூம் முழுசா ஒரு கிளிக்கு குடுத்துருக்கீங்கனு வேற சொல்லிட்டு போனாங்க. அந்த கிளியும் எங்க வீட்டுல ஒரு ஆறு மாசம் இருந்துச்சு. அப்புறம் அந்த கிளிக்காகவே எங்கே வெளிய போனாலும், ராத்திரியே வீட்டுக்கு வந்துருணும். இது ரொம்ப முடியலனு, ஒரு நாள் blue cross கொண்டு போய் கொடுத்துட்டோம். இப்ப கொஞ்ச நாளா எங்க வீட்டுல எந்த செல்லப் பிராணியும் இல்ல. எங்க அம்மாவும் கொஞ்சம் நிம்மதியா இருக்காங்க.

Image Courtesy : Spanishdict

Monday, February 4, 2013

சமையல்



சின்ன வயசுல இருந்து எங்க அம்மாவுக்கு சமயலுல அப்பப்ப கொஞ்சம் உதவி பண்ணுவேன். அதாவது பால் காய்ச்சும்போது அப்பப்ப பக்கத்துல இருந்து பால் பொங்காம பாத்துக்குறது, குக்கருல விசில் போடுறது, குக்கர் விசில் அடிச்சுச்சுனா கரெக்டா எண்ணி சொல்லுறதுனு இப்படி சில. இதனாலையே எனக்கு சமையலாம் பெரிய விசயமே இல்லன்னு ஒரு நினைப்பு அப்பயே வந்துருச்சு. எங்க அம்மாவும் வேற, மத்தவங்ககிட்ட என்னைய விட்டுக்கொடுக்காம சிவா சமயலுல நல்லா உதவி பண்ணுவான்னு பெருமையா (!!!)  சொல்லுவாங்களா, நிஜமாவே எனக்கு, நமக்கு சமையல் தெரியும்லனு ஒரு எண்ணம் வந்துருச்சு. இத்தனைக்கும் நான் முழுசா சமையல் பண்ணது (!!!) ஒரே ஒரு தடவதான். அது நான் காலேஜ் படிக்கும்போது அம்மாவும் அப்பாவும் வீட்ல இல்லாதப்ப செஞ்சேன். அந்த சாப்பாட்ட சாப்பிட்ட ஜீவன்கள் மதுவும் எங்க பெரியப்பா பைய்யன் பிரபுவும்தான். ஒரு சாம்பாரும் சாதமும் காயும் வச்சேன். சொன்னா நம்பணும், கொஞ்சம் கூட மிச்சம் வைக்காம சாப்புட்டுடாய்ங்க. அப்புறம் மத்தியானம் 12 மணிக்கு ஆரம்பிச்சு 4 மணிக்கு முடிச்சா. பசி. அதான் எல்லாம் காலி ;). அப்பயே எனக்கு நம்ம சமையலோட அரும பெரும தெரிஞ்சுருக்கணும் :). ஆனா பசி ருசி அறியாதும்பாங்கல்ல, அதனால நம்ம சமையலோட ருசி தெரியாமலயே போயிருச்சு. 

அதுக்கப்புறம் நம்ம சமயல பத்தி பெரிசா அறிஞ்சுக்குற எண்ணமே வரல. நானும் மதுவும் தனியா இருக்கும்போது கூட எங்க அம்மா, டேய் ரெண்டு பேரும் ஒரு சாதம் வச்சு சாப்புடறதுக்கு என்னடான்னு சொல்லும்போது கூட , நாம சோம்பேறித்தனத்துனாலதான் செய்யாம இருக்கோம், சமயலுலாம் பெரிய விசயமே இல்லன்னுதான் தோணுச்சு. அப்பப்ப மதுகூட, வித்யாட்ட , எங்க அண்ணன் நல்லா சமைப்பானு வேற சொல்லுவான். அப்பலாம் வித்யா, ஏங்க எல்லாரும் நீங்க நல்லா சமைப்பீங்கனு சொல்றாங்க , நீங்க ஒரு தடவ கூட எனக்கு செஞ்சுக் கொடுக்கலன்னு சொல்லும்போது மதுவையும், என்னோட சமையல் திறமையையும் (!!!) நினச்சு பெருமையா இருக்கும். 

Onsite கிளம்பும்போது கூட எப்படி onsiteல சமைச்சு சாப்புடப்போறம்னு பெரிசா பயம் ஒன்னும் தோணல. Onsite வந்ததுப்புறம்தான்  சமையல் பண்ற வாய்ப்பே (!!) வந்துச்சு.  கிளம்பும்போது கூட வித்யா, அங்க போயிட்டு சமையல்ல ஏதாவது சந்தேகம் இருந்துச்சுனா போன் பண்ணுங்க, சொல்றேன்னு சொன்னா. அன்னைக்கு பேசும்போது கூட வித்யா, சமையல்ல பெரிய ஆளுதான் போல, சந்தேகம்லாம் கேட்குறதே இல்லன்னு கேட்டா. ஆனா வித்யாவுக்கு தெரியாது, நம்ம பண்றதுலாம் Just in Time(JIT) னு . எல்லாமே நமக்கு எப்ப வேணுமோ அப்பதான் அதப்பத்தியே யோசிக்க ஆரம்பிக்குறது. ஆமாம், நாம்ம வர்ற 10 மணிக்கு இந்தியால அதிகாலை 3 மணி இருக்கும். அப்ப எங்க போன் பண்ணி சந்தேகம் கேட்குறது. 

அப்படிதான், அன்னைக்கு ஒரு நாள் சமையல் பண்ணலாம்னு ரசப் பொடி எடுக்கும்போதுதான் ரசம் எப்படி பண்ணனும்குறதே தெரியலன்னு தெரிஞ்சது. சரின்னுட்டு ரசம் தயாரிப்பது எப்படின்னு கூகுள் பண்ணேன். வந்ததுல ஒன்ன கிளிக் பண்ணா , எடுத்தவுடனே பருப்புத்தண்ணிய எடுத்துக்கவும்னு போட்டுருந்துச்சு. அப்பதான் ரசத்துக்கு பருப்புத்தண்ணி வேணுமான்னு தெரிஞ்சது. சரி பருப்புத் தண்ணிக்கு எங்க போறது. சரின்னு சாதம் வைக்கும்போது குக்கருல ஒரு டம்ளருல பருப்பும் தண்ணியும் போட்டு வச்சேன். 4 விசில் அடிச்சதும் எடுத்துப்பாத்தா , டம்ளருல பாதி பருப்புதான் இருந்துச்சு. மீதி எல்லாம், நீயும் நானும் ஒன்றன்றி இரண்டில்லைங்குற மாதிரி சாதத்தோட கலந்துருந்துச்சு. சரி இன்னைக்கு தயிர் சாதத்துலையும் பருப்பு போட்டுதான் சாப்பிடணும் போலன்னு நினச்சுட்டு, அப்பயும் மனம் தளரா விக்கிரமாதித்யன் போல ரசம் வைக்குறதுல குறியா இருந்தேன். அப்புறம் அந்த பருப்புல தண்ணிய கரைச்சு பருப்புத் தண்ணியாக்கி, அதுல கொஞ்சம் ரசப்பொடி உப்பு அது இதுன்னு சேத்து ஒரு வழியா ரசம் பண்ணேன். திரும்பவும் பசி ருசி அறியாதுங்குற தமிழ் முதுமொழியால ருசி அறியாமலயே ரசம் சாப்புட்டு முடிச்சேன். அடுத்து மூணு நாளைக்குக்குன்னு  சேத்து வச்ச ரசத்த, அடுத்த மூணு நாள் கழிச்சுதான் எடுத்தேங்குறதால(!!) என் சமையலோட உண்மையான ருசி அறிகிற பாக்கியம் அப்பயும் எனக்கு கிடைக்காம போச்சு :(. 

அடுத்து நம்ம try பண்ணது எண்ணெய் கத்திரிக்காய் !. எனக்கு எண்ணெய் கத்திரிக்காய்னா ரொம்ப பிடிக்கும். சரி அன்னைக்கு எண்ணெய் கத்திரிக்காய் பண்ணலாம்னு நினச்சேன். அத எப்படி பண்றதுன்னு நினைச்சப்ப, எண்ணெய் அதிகமா ஊத்துனா அது எண்ணெய் கத்திரிக்காய்னு என் அறிவுல உதிச்சது. சரின்னு ஒரு அஞ்சு ஆறு கரண்டி எண்ணெய் ஊத்தி அதுல கத்திரிக்காய நாலு கீறு கீறி போட்டேன். அதுல வேண்டிய(!!) மசாலாலாம் போட்டு வதக்கி எடுத்து ஒரு டப்பால போட்டுட்டு ஆபீஸ் கொண்டு போய்ட்டேன். சரின்னு மத்தியானம் லஞ்சுல கொண்டு போயிருந்த தயிர் சாதத்தையும் (ஆமா நாம பண்ற ஸ்பீடுக்கு காலைல இருக்குற முக்கா மணி நேரத்துல சாம்பார், காய்னு ஏதோ ஒண்ணுதான் பண்ண முடியும்), நம்ம எண்ணெய் கத்திரிக்காயையும் எடுத்தேன். அன்னைக்கு ருசி அறியாத பசி எதுவும் இல்லைங்குறதால, மொத வாய் வைக்கும்போதே தெரிஞ்சுருச்சு நாம எண்ணெய் கத்திரிக்காய்ல எண்ணெய் ஊத்த மறக்கல, ஆனா உப்பு போட மறந்துட்டோம்குறது. நமக்குதான் நாம பெரிய சமையல் கலை வல்லுனர்ங்குற எண்ணம் இன்னும் போகலங்குறதால சமையல் பண்ணும்போது ருசிலாம் பாக்குறதே இல்ல. இல்லனா அப்பயே தெரிஞ்சுருக்கும்ல. சரி என்ன பண்ணலாம்னு நினைக்கும்போதுதான், நம்மளுக்குள இருக்க அந்த நளபாகன் எட்டிப்பாத்தான். உப்பு போட்டுதான் சமைக்கணுமா என்ன, சமைச்சுட்டு உப்பு போடக்கூடாதானு நினச்சுட்டு கேண்ட்டீன்ல இருக்குற உப்பு கொஞ்சம் எடுத்துட்டு வந்து உப்பு போட்டு கையாலயே நாலு கிளறு கிளறி  நம்ம எண்ணெய் கத்திரிக்காய் சமையல 6 மணி நேரம் கழிச்சு நிறைவு செஞ்சேன் :) .

அப்படிதான் அன்னைக்கு பண்ண பீன்ஸ் பொரியலுல மசாலா கொஞ்சம் அதிகமாவே போச்சு. சரி என்ன பண்ணலாம்னு நினைக்கும்போதுதான் நான் பீன்ச சமைக்குறதுக்கு முன்னாடி கழுவலல்லன்னு ஞாபகம் வந்துச்சு. சரி அதுனால என்ன, இப்ப பண்ணிரலாம்னு கொஞ்சம் தண்ணி ஊத்தி பொறியலுல இருந்த பீன்ச கழுவுனேன். இதுல பாருங்க ஒரே கல்லுல ரெண்டு மாங்காய்ங்கிற மாதிரி பொரியலுல இருந்த பீன்சும் சுத்தமாகிருச்சு அதிகப்படியா இருந்த மசாலாவும் போயிருச்சு ;).

சின்ன வயசுலலாம் எங்க அம்மா சமையல் பண்ணும்போதே, அம்மா திட்ட திட்ட பாதிலயே அடுப்புல இருந்து எடுத்து சாப்புடுவேன். அதே மாதிரி எங்க அம்மா காய் நறுக்கும்போதே தக்காளி, காரட், வெண்டிக்காய் , வெங்காயம்லாம் எடுத்து பச்சையாவே சாப்புடுவேன்.  இந்த மாதிரி சமையல் அரவேக்காடா இருக்கும்போது சாப்ட்ட அந்த பயிற்சிதான் இப்ப எனக்கு உதவுது.

சின்ன வயசுல எனக்கு இருந்த அந்த பயிற்ச்சியும் , நல்லா சமைக்க தெரிஞ்ச வெங்கட்டோட ரூம் மேட்டா இருக்கிறதாலயும்தான் நான் இன்னைக்கு இப்படி blog எழுதிகிட்டு இருக்கேன். அதனால தாய்மார்களே உங்க பசங்க யாராவது சமையல் பண்ணும்போது அரவேக்காடாவே எடுத்து சாப்பிட்டா யாரும் திட்டாதீங்க. அது அவங்களுக்குள்ள இருக்குற கால காலமா உயிர்கள வாழவைக்குற 'Survival of the fittest' ங்குற காரணியின் பயிற்சியாக கூட இருக்கலாம் :).


Photos Courtesy : http://www.jambottle.com/video/487/

Tuesday, November 13, 2012

பயணம்

explore a man walking on a road in tan 235 1024x576 10 Kilimanjaro Trip Tips

இந்த உலகத்துல பயணம் செய்யாத மனிதர்களே இல்லை. ஆதி காலம் தொட்டு இன்று வரை மனிதர்கள் பயணம் பண்ணிகிட்டேதான் இருக்காங்க. பல பயணங்கள் இந்த உலகையே மாத்திருக்கு . சே குவேராவின் 9 மாத காலத்தில் அவர் பயணம் செய்த 8000 km மோட்டார் சைக்கிள் பயணம் இந்த உலகில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. மாவோவின் நெடும் பயணம்தான் இன்றைய சீனாவின் வல்லரசிற்கு காரணம். இந்த உலகில் மனிதன் தோன்றியதிலிருந்து பயணப்பட்டுகிட்டேதான் இருக்கேன். இப்ப இருக்க எல்லாரும் கூட  எப்படியும் பயணம் பண்ணத்தான் செய்றாங்க, அந்த பயணங்களில் ஒவ்வொருத்தவங்களும் எந்த அளவிற்கு தாக்கத்தை உணருராங்கங்கறத  பொறுத்து அவர்களில் மாற்றம் நிகழும்.

பெரும்பாலும் பயணம்கிறத எல்லாரும் வெறும் இலக்கை அடையறுத்துக்கான வழியாதான் நினைக்கிறோம். ஆனா எல்லாப் பயணமும் இலக்கையும்  தாண்டி நமக்கு பலதையும்  சொல்லிக்கிட்டுதான் இருக்கு. ஆனா நாமதான் அத காது கொடுத்து கேக்குறதில்ல.

நான் அன்னைக்கு ஒருநாள் ஒரு சிறுகதை படிச்சேன். அதுல நம்ம கதாநாயகன் சென்னைல இருந்து மதுரைக்கு போகணும். திடீர்னு அவனுக்கு ஒரு நினைப்பு வரும். நாம ஏன் டவுன் பஸ்லயே மதுரைக்கு போகக்கூடாதுன்னு. உடனே தாம்பரத்துக்கு டவுன் பஸ் ஏறுவான். அங்க இருந்து கூடுவாஞ்சேரி . பின்ன அங்க இருந்து அடுத்த ஊருக்குன்னு இப்படியே போவான். வழில ஒரு 5 மணிநேரம் டவுன் பஸ்ஸே இருக்காது. அப்ப பஸ் ஸ்டாண்டுலையே  படுத்து தூங்கிருவான். மறுநாள் முத டவுன் பஸ்ஸ பிடிச்சு பயணம் தொடரும். இப்படியே அவன் ஊர் போய்ச் சேர 30 மணி நேரம் ஆகிரும். அப்ப அவன் நினைச்சுப்பாப்பான், எவ்ளோ ஊரு , என்னனென்ன பேரு, எத்தனை விதமான மனிதர்கள், அவர்களுக்குள்ளே  எவ்வளவு உணர்ச்சிகள், எவ்ளோ வட்டார மொழி இப்படி பல விசயங்கள் அவன் இதுவரைக்கும் வாழ்க்கைல கேட்டே இல்லாததெல்லாம் தெரிய வரும். அந்த பயண முடிவுல அவனுக்கு ஏற்பட்ட பயணக் களைப்பை  விட அவனுக்கு ஏற்பட்ட மன திருப்தி அதிகம் . அந்த ஒரு பயணத்துல அவன் வாழ்க்கை முழுவதற்குமான ஒரு பெரிய பாடத்தையும் கற்றிருப்பான்.

சென்னைல இருந்து இங்க இருக்க மதுரைக்கு உள்ளயே இவ்ளோ விஷயம் இருக்குதுனா , இந்த உலகம் முழுவதும் எவ்ளோ இருக்கும். இந்த ஆர்வம்தான் இன்னமும் இந்த உலக சுத்தி பலரை ஓடவிட்டுகிட்டு இருக்கு.

உலகம் முழுக்க தனியா படகுல, பைக்லனு சுத்தி வர்றவங்க நிறைய. அலஸ்டயர் (Alastair Humphreys) ங்குற பைய்யன்  உலகம் முழுக்க சைக்கிளலையே  சுத்தி வர்றான். இவங்கல்லாம் வருஷ கணக்கா பயணம் செய்றாங்க.  அன்று  மெகஸ்தனிசின் உலகப் பயணம் 30 ஆண்டுகள் நீடித்தது. அவரோட நூல்கள் ஒரே காலகட்டத்தைய  உலக நாடுகள் முழுவதையும் ஒப்பிட்டு பார்க்க உதவுது. அதுவரை அந்தந்த பகுதி மக்களின் பழக்க வழக்கங்கள் அந்தந்த பகுதி மக்களாலையே ஒரே கண்ணோட்டத்தில் பார்த்தது போய் இவர்களால் மூன்றாவது கண்ணோட்டம் கிடைத்தது .இவங்க அளவிற்கு மக்களுடன் யாரும் நெருங்கி இருக்க முடியாது. இவங்கதான் உலகின் உண்மையான தூதுவர்கள்.

என் சிறுவயதில் எங்கள் குடும்பத்துடன் நாங்கள் சென்ற வட இந்தியப் பயணம் என்னுடைய என் தம்பியுடைய கண்ணோட்டத்தில் மிகப்  பெரிய மாற்றத்தை ஏற்ப்படுத்தியது . திருநெல்வேலி தொடங்கி சிம்லா சென்று திரும்பவும் பஸ்சிலேயே வந்த அந்த 23 நாள் பயணத்தில் நான் அதுவரை அறியாத இந்தியாவைப் பார்த்தேன். நினைத்த இடத்தில் தூங்கி, நினைத்த இடத்தில் சாப்பிட்டு, நினைத்த ஆற்றில் குளித்து, நிச்சயம் வாழ்க்கையில் மறக்கமுடியாத பயணம். ஏன் இந்த இடத்தில் இந்த நேரத்தில் நிற்கிறீர்கள் இன்னும் கொஞ்ச நேரத்தில் சம்பல் கொள்ளைக்காரர்கள் வந்துவிடுவார்கள், கிளம்புங்கள் என்று எங்களைப் பற்றிக் கவலைப்பட்டு விரட்டியவரையும் , எதோ ஒரு ஊரைச் சார்ந்த 10 வயதுச் சிறுவனான என்னைக் கூப்பிட்டு தாங்கள் சாப்பிட்ட சப்பாத்தியை என்னுடன் பகிர்ந்துகொண்ட பஞ்சாப் லாரி டிரைவர்களையும் , போகிற வழியெல்லாம் தண்ணீர் கொடுத்து உதவிய மக்களையும், நாங்கள் அவரிடம் வாங்கிய தயிரையே அவர் வீட்டின் அருகிலிருந்து சாப்பிட அனுமதிக்காத அந்த பிராமணரையும், அந்த அலகாபாத்தில் எங்களுக்காக படகு ஒட்டிய அந்த கிழவனாருக்கு நாங்கள் மறைத்து கொடுத்த பணத்தை அந்த முதலாளி வந்து பறித்துக் கொண்டபோது அந்த கிழவனார் பார்த்த அந்த பரிதாப பார்வையையும் என்னால் எப்படி மறக்கமுடியும் . நிச்சயம் அந்தப் பயணம் எனக்கு இந்தியாவைப் பற்றி மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது .

என்னை பொறுத்தவரை பயணம்னா அது மனிதர்களுடன் கலந்ததா இருக்கணும்.  வெறுமனே விமானத்தில் பயணப்பட்டு இலக்கை அடைந்து திரும்பி விமானத்திலேயே திரும்புவதில் எனக்கு பெரிய ஆர்வம் இல்லை. பயணம்குறது வெறும் இடங்களை சுத்தி பார்பதற்கு அல்ல . அது மனிதர்களைப்  பார்க்க . எனக்கும் உலகம் பூரா இப்படி பயணம் செய்யணும்னு  ஆசை. மக்களுடன் அவ்ளோ நெருங்கணும். நம்ம சிறுகதையின் ஹீரோ மாதிரி சென்னைல இருந்து மதுரை வரைக்கும் டவுன் பஸ்லயே பயணம் பண்ணனும் ஆசை.

உலகிலேயே மிகப் பெரிய படிப்பு மனிதர்களை படிக்குறதுதான். மனிதர்களைப் படித்தவர்கள்தான் உலகை வெற்றி கொண்டிருந்திருக்கிறார்கள். அதை இந்த பயணங்கள் தராமல் வேறு எதுவும் தராது.
பின் குறிப்பு : அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள் :)
Photo Courtesy :
http://www.travelinggreener.com/active/10-kilimanjaro-trip-tips/
http://explore.org

Sunday, October 21, 2012

அபத்தங்கள்




எனக்கு சின்ன வயசுல இருந்து பறவைகள், விலங்குகள்னா ரொம்ப ஆர்வம். அவைகளை பத்திய விசயங்கள  நியூஸ் பேப்பர்ல  தேடித் தேடிப் படிப்பேன். அது புலி மனுசங்கள அடிச்சாலும் சரி , மனுசங்க புலிய அடிச்சாலும் சரி ரொம்ப ஆர்வமா படிப்பேன். அது தொண்ணூறுகளின் ஆரம்பம். அப்ப நான் ரெண்டாவது இல்ல மூணாவது படிச்சுகிட்டு இருந்திருப்பேன். அப்பத்தான் நியூஸ் பேப்பர்லாம் ஓரளவுக்கு எழுத்துக் கூட்டிப் படிக்க ஆரம்பிச்ச தருணம். அப்பத்தான் ராஜீவ் காந்தி கொல்லப்பாட்டிருந்தார் . பேப்பர்லாம், போலீசார் இந்த இடத்தில் 2 புலிகளைப் பிடித்தனர், அந்த ஊரில் 3 புலிகளை தேடி வருகின்றனர் அப்படி இப்படின்னு நியூஸ் வரும். நம்மளுக்குத்தான் சிங்கம், புலிலாம் ரொம்பப் பிடிக்குமே, நானும் ரொம்ப ஆர்வமா படிப்பேன். பாதி படிக்கும் போதே கொஞ்சம் குழப்பமா இருக்கும். என்னடா இது புலிக்கு பேரெல்லாம் வச்சுருக்காங்க, அதோட ஒவ்வொரு புலிக்கும் 20 வயசு , 30 வயசுனு வயசு வேற போடுறாங்கன்னு குழப்பமா இருக்கும். சரி நாம படிக்குறது நிஜ புலிய பத்தி இல்லையோனு நினைக்கும்போது அடுத்த வரில போலீசார் புலிகளை வலை வீசி தேடி வருகின்றனர்னு இருக்கும்.புலியதான வலை போட்டு பிடிக்க முடியும். ஆனா இவங்க எழுதுறத பாத்தா நிஜ புலி மாதிரி தெரியலையேனு ஒரே குழப்பமா இருக்கும். என்னடா இது , இது புலி மாதிரியும் இருக்கு , இல்லாத மாதிரியும் இருக்குனு தோணும்.  அதுக்கப்புறமாதான் தெரிஞ்சது அவங்க சொன்னது நிஜ புலிய இல்ல , அவங்க சொல்றது விடுதலைப் புலியனு ;).

இது நான் நாலாவது இல்ல அஞ்சாவது படிக்கும்போதுன்னு நினைக்கிறேன். அப்ப தமிழ் பாட புத்தக்கத்துலலாம் காந்தி அடிகள் அக்டோபர் திங்கள் 2 ஆம் நாள் பிறந்தார், நேரு நவம்பர் திங்கள் 14 ஆம் நாள் பிறந்தார்னு போட்டுருக்கும். நான் , என்னடா இது எல்லா தலைவர்களும் திங்கள் கிழமையே பிறக்குறாங்க. இல்ல திங்கட்கிழமை பிறந்தாதான் தலைவரா ஏத்துப்பாங்களா? . இல்ல தலைவர்கள் பிறந்தவுடனே அந்த கிழமைய திங்கட்கிழமையா மாத்திருவாங்களானு ஒரே confusion ஆ இருக்கும். அதுவும் எல்லா புத்தகத்துலயும் அக்டோபர் மாதம் திங்கட்கிழமைன்னு போடாம அக்டோபர் திங்கள்னு spelling mistake ஆ எழுதுறாங்கன்னு தோணும். confusion தாங்க முடியாம அப்பாட்ட போய் இதை கேட்டேன். அப்பா சிரிச்சுகிட்டே சிவா , அக்டோபர் திங்கள்னா அக்டோபர் மாதம்னு அர்த்தம்னு சொன்னாங்க. அதாவது தமிழ்ல  திங்கள்னா , மாதம் , நிலான்னு அர்த்தம் இருக்காம்.
what a funny language is tamil ;) 

சின்ன வயசுல ஒரு நாள் பஸ்ல போகும்போது ரோட்டுல செம்மறி ஆடு போய்கிட்டு இருந்துச்சு. அப்ப அப்பாவ  கூப்பிட்டு, அப்பா இங்க பாருங்க வெள்ளாடு போகுதுன்னு  சொன்னேன். அதுக்கு அப்பா இது வெள்ளாடு இல்ல. இது செம்மறி ஆடு. அதோ அதுதான் வெள்ளாடுனாங்க. அதுக்கு நான் அப்பா, அது கருப்பா இருக்கு அத வெள்ளாடுங்குறீங்க. இதுதான் வெள்ளையா இருக்கு அதுனால இதுதான் வெள்ளாடுனேன். இன்ன வரைக்கும் எனக்குப் புரியல, கருப்பா இருக்க ஆட்டுக்கு ஏன் வெள்ளாடுன்னு பேரு வந்துச்சுன்னு :(.

இதுவும் கூட ரெண்டாவது படிக்கும்போதுன்னு நினைக்கிறேன். பக்கத்துவீட்டுப் பய்யன் அவங்க கொய்யா மரத்துல காய்ச்ச கொய்யாவ சாப்ட்டுச் சொன்னான். 'டாய் , அந்த கொய்யா அரப் பழமா இருந்துச்சு அதான் தூக்கி எறிஞ்சுட்டேன்' னுனான். எனக்கு ஒரே கோபம், ஏன் முழுசா தூக்கிப் போட்டான். பழுத்துருக்க பாதி பக்கம் மட்டும் சாப்டுட்டு காயா இருக்க மீதி பக்கத்த தூக்கிப் போடவேண்டியதுதானனு நினச்சேன். அப்புறம்தான் தெரிஞ்சது அரப் பழம்னா பாதி பக்கம் பழுத்து பாதி பக்கம் காயா இருக்காது. மொத்தமுமே காயும் , பழமுமாதான் இருக்கும்னு :(.

ஏழாவது படிக்கும்போது ஒருநாள் class test ல தமிழ் பாடத்துல ராமாயணத்துல இருந்து கேள்வி கேட்டுருந்தாங்க. அது சீதேவிய பத்திய கேள்வி. நான் , நம்ம பசங்க எல்லாத்தையும் தமிழ்ப்படுத்திறாங்கனு நினச்சுகிட்டு , சீதேவின்னு வர்ற இடத்துலலாம் ஸ்ரீதேவினு எழுதி வச்சேன். அந்த பேப்பர திருத்திட்டு வந்த எங்க தமிழாசிரியர் சிரிச்சுகிட்டே, டேய் உனக்கு நடிகை ஸ்ரீதேவினா ரொம்ப பிடிக்குமோ, அது ஸ்ரீதேவி இல்லடா , சீதேவின்னு சொன்னாரு :).

டைடல் பார்க்குல இருந்து மத்திய கைலாஷ் போற வழில பாத்தீங்கனா, "ரோஜா முத்தையா தெரு" னு  ஒரு போர்ட் இருக்கும். கொஞ்ச நாள் முன்ன வர, பலதடவ அத கிராஸ் பண்ணும்போது நினைச்சுப்பேன் , ராஜா முத்தையாங்கிறததான் spelling mistake ஆ ரோஜா முத்தையானு எழுதிட்டாங்கனு . ஆனா அதுக்கு கீழ english லையும் 'Roja Muthiah' னு தான் எழுதி இருப்பாங்க. எப்படி ரெண்டு தடவையும் spelling mistake பண்ணாங்கனு தோணும்.அப்புறம்தான் தெரிஞ்சது நிஜமாவே 'ரோஜா முத்தையா' னு ஒருத்தர் இருந்தாருன்னு :)

இவ்ளோ வளந்தப்புறமும் இன்னமும் குழந்தைப் பிள்ளையாவே இருக்கேன் . என்ன பண்றது :)

பின் குறிப்பு:

ரோஜா முத்தையா என்கிறவர் ஒரு signboard artist ஆ இருந்து ஒரு தனி மனிதனா பழைய புத்தகங்களும், பத்திரிக்கைகளும் சேகரிக்க ஆரம்பிச்சார். 1950 ல இருந்து 1992 இல் அவர் இறக்கும் வரை அவர் சேகரித்த புத்தகங்கள் , பத்திரிக்கைகளின் எண்ணிக்கை 1 லட்சம். இந்த சேகரிப்பில் மிகப் பழமை வாய்ந்த 1804 இல் வெளி வந்த புத்தகம் எல்லாம் உள்ளது. இந்த சேகரிப்பின் மகத்துவத்தை உணர்ந்து சிகாகோ பல்கலைகழகம் இந்த மொத்த சேகரிப்பையும் வாங்கி கொண்டது . இப்பொழுது Roja Muthiah Research Library (RMRL) என்கிற பெயரில் மொத்தம் 15 லட்சம் புத்தகங்களுடன் இன்னும் இந்த நூலகம் சென்னையில் உள்ளது. ஊ.வே. சா, ரோஜா முத்தையா போன்ற தன்னலமற்ற மனிதர்களால்தான் தமிழின் பெருமை உயர்கிறது.


Photo Courtesy :


http://www.flickr.com/photos/27017291@N04/2737307968