Showing posts with label உதிரிகள். Show all posts
Showing posts with label உதிரிகள். Show all posts

Saturday, September 21, 2013

London Titbits - 2

  • புதிதாக லண்டன் வருபவர்களுக்கு லண்டன் நிச்சயம் ஆச்சரியம் கொடுக்கும். சில பேருக்கு அதிர்ச்சியே கொடுக்கும் . NewYork போன்ற நகரத்தை எதிபார்த்து வந்தால் லண்டன்  நிச்சயம் அதிர்ச்சிதான். ஏனெனில் இங்கு நீங்கள் மிக உயர்ந்த கட்டிடங்களை அதிகம் காண முடியாது. சிறிது காலத்திற்கு முன்பிருந்துதான் உயரமான கட்டிடங்கள் வர ஆரம்பித்துள்ளன. அதேபோல பல முக்கிய சாலைகள் கூட two lane சாலைகள்தான். இரண்டு பஸ்கள் எதிரெதிரே வரும்போது மிக நெருக்கமாகச் செல்லும். நம்ம ஊரில் கூட நீங்கள் இங்கு இருப்பதை விட பெரிய சாலைகளைக் காண முடியும். அதே போல பல வீடுகளில் கார் பார்க்கிங் இருக்காது. அவர்களின் கார்களை சாலையின் இருபுறங்களில்தான் நிறுத்தியிருப்பார்கள். அது அவர்களுக்கு என அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்ட இடம் தான் . அவற்றிற்கிடையே இருக்கும் அந்த ஒரு லேனில் பஸ்ஸு செல்வதே ஆச்சரியமாக இருக்கும். 
  • இங்கிலாந்துகாரர்கள் பழமையை போற்றுபவர்கள் . பாரில் கூட ரொம்ப பழமையான பாரில்தான் அதிக கூட்டம் இருக்கும் . எங்க அலுவலகத்துக்கு முன்னாடி இருக்கும் ஒரு பார் 1615 இல் கட்டப்பட்டது. அந்த பாரில் அவ்வளவு கூட்டம் இருக்கும் . அதே போல் பல வீடுகளில் பெருமையாக 1600, 1700 ,1800 களில் கட்டப்பட்டது என்று குறிப்பிட்டுருப்பார்கள். இங்கு கவுன்சில் அலுவலகங்களில் நீங்கள் குடி இருக்கும் வீட்டில் இதுவரை யார், யார்  குடி இருந்தார்கள் என்று தெரிந்துகொள்ளலாம்.   இங்கிலாந்துகாரர்கள் எந்த அளவிற்கு பழமை விரும்பிகள் என்றால் , அந்த காலங்களில் பஸ்ஸில் போகும்போது ஒரு இடத்தில் இறங்க வேண்டும் என்றால் , அந்த பஸ்ஸில் கட்டி இருக்கும் ஒரு மணியைப் பிடித்து இழுப்பார்கள் , டிரைவர் பஸ்ஸை நிறுத்துவார். அதே போல் இப்பொழுதும் பஸ்ஸை நிறுத்த அழுத்தும் சுவிட்ச்சில் இருந்து மணியோசைதான் வரும் :).  இங்கிலாந்தின் பழமையைப் பாதுகாக்க அதிக முனைப்பு காட்டுவார்கள் . அதனால் ஒரு வீடு கட்டும்போது அந்த வீட்டின் செங்கலின் நிறத்தைக்கூட அந்தந்த பகுதி கவுன்சில்கள்தான் தீர்மானிக்கும். எனவே ஒரு வீடு மற்றொரு வீட்டிலிருந்து வெளிப்புற தோற்றத்தில் பெரிதாக மாறுபடாது.
  • எனக்கு இவர்களின் உணவுப் பழக்க வழக்கங்கள் ரொம்ப பிடிக்கும் . நிச்சயம் சரிவிகித உணவுகளை உண்ணுகிறார்கள். காலையில் காய்கறி அல்லது பழ சாலடையும் , சூப்பும் அதிகம் சாப்பிடுகிறார்கள். உணவிற்குப் பின் நிச்சயம் ஒரு பழம் எடுக்கிறார்கள். அதேபோல் உடற்பயிற்சியில் இவர்களின் ஈடுபாடும் ஆச்சரியம்  அளிக்கிறது.   காலையும் மாலையும் ஜாக்கிங் செல்பவர்களை அதிகம் பார்க்க முடியும் . முடிந்த அளவு சைக்கிளில் அதிகம் செல்ல நினைக்கிறார்கள் . வெயில் காலம் ஆரம்பித்துவிட்டாலே நீங்கள் அதிகம் சைக்கிளைப் பார்க்கலாம். இத்தகைய பழக்க வழக்கங்கள் நிச்சயம் மற்ற மேற்கு உலக நாடுகளிலும் இருக்கலாம் ஆனால் நேரில் பார்க்கும்போது நன்றாக இருக்கிறது. இங்கு உடற்பயிற்சி எடுக்க அரசாங்கம் அதிகம் ஊக்குவிக்கிறது. ஊரின்  ஒவ்வொரு மூலையிலும் பூங்காவை நீங்கள் அதிகம் காண முடியும். அது சிட்டியின் மிக மத்தியப் பகுதிகளாக இருந்தாலும் அவ்வளவு பெரிய பூங்காவை நீங்கள் காண முடியும். இப்படி  மூலைக்கு மூலை பூங்கா இருந்தால் ஏன்தான் எந்த நாடும் ஒலிம்பிக்கில் தங்க பதக்கம் பெறாது. இதைப் பார்க்கும்போது சைக்கிள் கற்றுக் கொள்வதற்குக் கூட பூங்கா இல்லாமல் தெருவில் ஓட்டி மற்றவர்களின் மீது மோதி திட்டு வாங்கும் நம் ஊர் சிறுவர்களை நினைத்தால் பாவமாக இருக்கிறது.
  • இங்கிலாந்தின் மீது இவர்கள் காட்டும் ஈடுபாடு நிச்சயம் ஆச்சரியம் . இந்த வருட ஆ ஷஸ் போட்டியின் போது எங்கும் எப்படி இங்கிலாந்து கிரிக்கெட் fever இருந்ததோ அதேபோன்று விம்பிள்டனில் ஆன்டி முர்ரே ஜெயித்த போது எங்கும் முர்ரே fever தான் . இந்த தடவை final இல் ஆண்டி முர்ரே விளையாடியாதால் , டிக்கெட்டின் விலை 83,000 GBP. அதாவது நம்ம ஊர் மதிப்பில் 83 லட்சம் ரூபாய்!.  இது அதன் முகமதிப்பான 260 GBP ஐ விட 322 மடங்கு அதிகம் . அதேபோன்று supermarket லாம் போனால் British meat, British Milk , British Potato என்று பிரிட்டிஷ் பொருட்களுக்கு என்று தனி விளம்பரமும் மதிப்பும் கொடுப்பார்கள். அதே போன்று பிரிட்டிஷ் கார்களுக்கு என்று எப்பொழுதுமே தனி மதிப்பு கொடுப்பார்கள். இந்த உணர்வு அனைத்து நாடுகளுக்குமே பொருந்தும் என்றாலும் இதை மற்றொரு நாட்டில் நேரில் பார்க்கும் போது ஏதோ இனம் புரியாத ஆச்சரியம் ஏற்படுகிறது .
  • அதே போன்று இங்கிலாந்து அரச குடும்பத்தின் மீது இவர்களின் பற்றும் இவர்கள் காட்டும் மதிப்பும் ஆச்சரியம் . இங்கிலாந்து அரச குடும்பம் பற்றி ஒரு செய்தி அல்லது புகைப்படமாவது இல்லாமல் ஒரு நாளும் இங்கு உள்ள பத்திரிகைகள் வராது . வில்லியமிற்கு அரச வாரிசு ஜார்ஜ் பிறந்தபோது பத்திரிகைகள் எங்கும் அதே செய்தி. ஊரே குதூகலமாக இருந்தது.
  • பல நாட்டவர்கள் அதிகம் இருக்கும் நாடுகளில் இங்கிலாந்து முக்கிய இடம் வகிக்கிறது. அமெரிக்காவிற்கும் இதில் முக்கிய இடம் இருந்தாலும் சதவிகித அடிப்படையில் பார்த்தால் நிச்சயம் இங்கிலாந்து அமெரிக்காவை விட முன்னில் இருக்கும் என்று தோன்றுகிறது. நான் மற்றயதொரு பதிவில் சொன்னமாதிரி லண்டனில் இருக்கும் 33 borough க்களில், 30 borough க்களில் குறைந்தது 100 மொழி பேசுகிறார்கள் . இத்தகைய காரணங்களினால்தான் ICC எப்பொழுதும் இங்கிலாந்திலேயே உலக கோப்பை கிரிக்கெட் நடத்த விரும்பும் . அப்போழுதுதான் அனைத்து நாடுகளின் போட்டிகளுக்கும்  கூட்டம் வரும் என்பதற்காக. ICC இத்தகைய காரணத்தை விரும்பும்போது அதை வெறுப்பவர்களும் இருக்கிறார்கள். இங்கிலாந்து இந்தியாவிற்கு இடையே நடைபெற்ற Champions Trophy கிரிக்கெட் போட்டியின் போது இங்கிலாந்து அணியைவிட இந்திய அணிக்கே அதிக கூட்டம் சேர்ந்தது. பல நேரங்களில் போட்டி மும்பையில் நடக்கிறதா இல்லை லண்டனில் நடக்கிறதா என்றே தெரியாதது மாதிரி இருந்தது . இதனாலையே அதை வெறுத்து , மற்ற நாடுகளில் இருந்து குடியேறிய முதல் தலைமுறையினர், தான் பிறந்த நாட்டின் அணியை ஆதரிக்கட்டும் ஆனால் அவர்களின் தலைமுறையினர் இங்கிலாந்து அணியையே ஆதரிக்க வேண்டும் என்று எழுதியவர்களும் உண்டு. 
  • நம்ம நாட்டை விட இங்கு அதிகம் இரட்டைக் குழந்தைகளைக் காணுவதாக எனக்குத் தோன்றுகிறது. அதிலும் ஒரே trolly யில் இரண்டு அடுக்கு வைத்துக் கொண்டு இரட்டைக் குழந்தைகளை அழைத்துச் செல்பவர்களை அதிகம் காண முடியும்.
Photo Courtesy : http://www.coachcalorie.com/benefits-of-outdoor-exercise/

Saturday, April 6, 2013

London Titbits


  1. நான் பார்த்தவரையில் இங்கு எழுத கணிசமானோர் பென்சிலை பயன்படுத்துகின்றனர்.
  2. இலண்டனில் இருக்கும் 33 Borough க்களில் 30 borough க்களில் குறைந்தது 100 மொழிகள் பேசப்படுகின்றன. இலண்டனில் பேசப்படும் மொத்த மொழிகள் 107. அதனால்தான் London , Global City என்றழைக்கப்படுகிறது. உலகில் மொத்தம் இரண்டே இரண்டு city கள்தான் Global City என்றழைக்கப்படுகிறது . ஒன்று லண்டன் மற்றொன்று நியூயார்க் சிட்டி (Alpha++ category) .
  3. இலண்டனில் ஆங்கிலத்திற்கு அடுத்து அதிகமாக பேசப்படும் மொழி போலிஷ்(Polish) அதற்கு அடுத்த இடங்களைப் பெறுபவை பெங்காலி, குஜராத்தி !.
  4. இலண்டனில் இருக்கும் 81 லட்சம் மக்களில் 3.2 லட்சம் மக்களுக்கு ஆங்கிலம் சுத்தமாக பேசத் தெரியாது அல்லது குறைந்த அளவே பேசத் தெரியும் .
  5. சமீபத்திய மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி முதன்முதலாக லண்டனில் ஆங்கிலேயர்களைவிட(White British) மற்ற இனத்தவர்கள் அதிகம். லண்டனில் ஆங்கிலேயர்கள் 45% தான்.
  6. இடது பக்கமாக வாகனம் ஓட்டுவதைப்  போல escalator இல் நீங்கள் படி ஏறிச் செல்வதாக இருந்தால் இடது பக்கமாகவும் , நிற்பதாக இருந்தால் வலது பக்கமும் நிற்க வேண்டும்.
  7.  ஒரு காலத்தில் உலகின் மிகப் பெரிய துறைமுகமாக இருந்த லண்டனில் கடல் இல்லை. லண்டன் துறைமுகம் அமைந்திருப்பது தேம்ஸ் நதியின் கரைகளில்தான். அதுவும் அது ஒரே துறைமுகமாக ஒரே இடத்தில் அமையவில்லை. தேம்ஸ் நதியின் கரையிலிருந்து வடகடல் வரை பரவி இருக்கிறது.
  8. இலண்டனின் மொத்த குடிநீர்த் தேவையில் மூன்றில் இரண்டு பங்கு தேம்ஸ் நதியின் மூலமே நிறைவேற்றப்படுகிறது . இங்கு பெரும்பாலான வீடுகளில் குடிக்க,குளிக்க மற்றும் எல்லாத் தேவைகளுக்கும் தேம்ஸ் நதியின் தண்ணீர்தான் உபயோகிக்கப்படுகிறது. நம்ம ஊர் பாசையில் சொல்லப்போனால் corporation water. இங்கு வீடுகளில் நான் எங்கும் தண்ணீர் சேமிக்கும் தொட்டிகளைப் பார்த்ததில்லை. ஏனென்றால் 24 மணி நேரமும் குழாயைத் திறந்தால் corporation தண்ணீர் வரும்.
  9. உலகின் costly ஆன நகரங்களில் லண்டனும் ஒன்று. சமீபத்தில் Bank of Canada வின் Governor ஆக இருந்த மார்க் கார்னி Bank of England Governor ஆக நியமிக்கப்படவுள்ளார். அதற்காக அவருக்கு அளிக்கப்படவுள்ள அதிக அளவு சம்பளமான வருடத்திற்கு 8.7 GBP (நம்ம ஊர் மதிப்பில் Rs 71 கோடி ) க்கான காரணங்களை கேட்டதற்கு அவர் கூறிய காரணங்களில் ஒன்று, தான் உலகில் இருக்கும் குறைந்த அளவு செலவாகும் தலைநகரங்களில் ஒன்றான ஒட்டாவாவிலிருந்து உலகில் அதிக அளவு செலவாகும் தலைநகரங்களில் ஒன்றான லண்டனுக்கு வருவது  என்றார் :).
  10. நீங்கள் குடி இருக்கும் வீட்டைப் (அது சொந்த வீடாக இருந்தாலும் வாடகை வீடாக இருந்தாலும்) பொறுத்து உங்கள் வீட்டிற்கு Council Tax விதிக்கப்படும். அது வீடு மற்றும் அந்த வீடு அமைந்திருக்கும் இடத்தைப் பொறுத்து மாறுபடும். இலண்டனில் இந்த வருடத்திற்கு Council Tax 623 - 1871 GBP வரை இருக்கிறது. நம்ம ஊர் மதிப்பின்படி Rs 51,000 - 1,54,000.
  11. டிவிக்கு இங்கு நீங்கள் license வாங்க வேண்டும். கலர் டிவிக்கு அதற்கு வருடத்திற்கு 145 GBP அதாவது நம்ம ஊர் மதிப்பில் கிட்டத்தட்ட Rs 12000. அதனாலையே நம்மைப் போல் இங்கு வந்து ஒரு வருடத்திற்கு வேலை பார்த்துச் செல்பவர்கள் வீட்டில் பெரும்பாலும் டிவி வைத்திருப்பதில்லை . இந்த பணம் BBC க்கு கொடுக்கப்படும். இந்தியாவில் இந்த மாதிரி டிவி மற்றும் ரேடியோக்கு இருந்த license 1984 லேயே விலக்கிக் கொள்ளப்பட்டுவிட்டது.
  12. தேம்ஸ் ஆற்றின் தண்ணீர் உபயோகிப்பதற்கு வருடத்திற்கு 354 GBP செலுத்த வேண்டும் . அதாவது நம்ம ஊர் மதிப்பில் Rs 29,000.Council Tax , கரண்ட் bill , water bill , gas bill , TV license இப்படி எல்லாம் சேர்த்தால் எப்படியும் 200 GBP மாதம் வந்துவிடும் . வருடத்திற்கு 2400 GBP . கிட்டத்தட்ட 2 லட்சம் ரூபாய் !
  13. இலண்டன் சிட்டி மையம் Zone 1 என்று அழைக்கப்படும். அதைச் சுற்றி அடுத்து Zone 2 .  அதற்கடுத்து அடுத்த Zone . இப்படியாக லண்டனை சிட்டியை 9 சுற்றுக்களாகப்  பிரித்திருப்பார்கள் .வெளி வட்டத்திலிருந்து மையம் நோக்கிச் செல்லச் செல்ல பயணக் கட்டண விகிதாச்சாரம் கூடும். Zone 2-4 க்கான கட்டணம் 96 GBP ஆக இருக்கும்போது Zone 1-3 க்கான கட்டணம் 136 GBP .
  14. இங்கு சைனீசுக்கு அடுத்து இந்திய உணவுகள் அதிகம் விரும்பப்படுகின்றன. 26% த்துடன் சைனீஸ் உணவுகள் முதல் இடத்திலும் 24% த்துடன் இந்திய உணவுகள் இரண்டாமிடத்திலும் உள்ளன. சரவண  பவனில் மசாலா தோசாவை விரும்பி உண்ணும் வெள்ளையர்களை அதிகம் பார்த்திருக்கிறேன்.
  15. இங்கு பத்திரிகைகளில் TAXPAYERS MONEY என்பது அதிகம் உபயோகிக்கப்படும் சொற்றொடர் . அதாவது அரசாங்கத்தின் பணம் எங்காவது வீணானால் , TAXPAYERS MONEY வீணாகிறது என்றுதான் எழுதுவார்கள்/கூறுவார்கள் . அதனால் மக்களின் பணம் வீணாகக் கூடாது என்பதில் மக்களுக்கும் அதிக பொறுப்புணர்ச்சி இருக்கிறது (எனக்கு இங்கு 1,75,000 கோடிதான் நினைவுக்கு வருகிறது :( ).
  16. இங்கு புத்தகம் படிப்பவர்களின் எண்ணிக்கை அதிகம்.  ரயில்களில் kindle அல்லது நாவல்கள் வைத்து படிப்பவர்களை அதிகம் பார்க்க முடியும் .  பெரும்பாலும் அவை முறையாக பணம் கொடுத்து வாங்கப்பட்டவையாகவோ அல்லது தரவிரக்கப்பட்டவையாகவோ இருக்கும். அதைப் பார்க்கும்போதுதான் நம்ம ஊர் இலக்கியவாதிகள் ஏன் இந்தியா மேற்குலக நாடுகளைப் போல் மாறவேண்டும் என்று கூறுவதின் அர்த்தம் புரிந்தது ;) .

Tuesday, May 18, 2010

இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே ...

இப்பலாம் blogspot ல பொண்ணுங்க எழுதுற blog ஆ பாத்து பாத்து அதிகமா படிக்கிறேன். எனக்கு தமிழ் பதிவுகளை அறிமுகப்படுத்தினதே என் நண்பன் jdk தான். அவன் வழியாதான் நிறைய ப்ளாக் லிங்க்க பெற்றேன். அதுல ஆரம்பிச்சதுதான் இந்த பொண்ணுங்க ப்ளாக் படிக்கிறது. பொதுவா பொண்ணுங்க இந்த மாதிரி ப்ளாக் எழுதுறதோ, ஏன் ப்ளாக் படிக்கிறது கூட அதிகமா செய்றதில்ல என்பது என் குறுகிய எண்ணம். இந்த எண்ணத்த சம்மட்டியால அடிக்கிற மாதிரி இந்த பதிவுகள் இருக்கிறதாலதான் அதிகமா பொண்ணுங்க பதிவுகள் எடுத்து படிக்கிறேன்.
***************
கடந்த இரண்டு வாரமாக காது வலி. சென்ற வாரம் மருத்துவரிடம் சென்றேன். அவர் காதுக்குள்ள எதையோ வைத்து நோண்டி பாத்துட்டு மருந்து எழுதி தந்தார். மறக்காமல் மூன்று நாள் கழித்து வரவும் சொன்னார். நானும் காது வலி தீந்துச்சுனா நம்ம எங்க வரப் போறம்னு நினச்சுகிட்டு, வரேன்னு தலை ஆட்டிட்டு வந்தேன். மருந்து விலை முன்னூத்திச் சொச்சம், மருத்துவர் செலவு நூத்தைம்பது என மொத்தம் ஐநூறைத் தொட்டது. கடைசில அந்த மருத்துவர் தான் ஜெயிச்சாரு. மூணு நாள் ஆகியும் காது வலி தீரல. தண்ட கருமாந்தரமேன்னு திரும்பவும் மருத்துவர்ட போனேன். திரும்பவும் மருந்து , மாத்திரை, டாக்டர் தண்ட செலவு நூத்தம்பது. ஆனாலும் காது வலி தீரல. வர வர டாக்டர்கள் மேல எனக்கு நம்பிக்கையே இல்ல. மருத்துவர்கள் எல்லாம் கடவுள் மாதிரிங்கறது பழைய காலம் . இப்ப எல்லாரும் காசு பார்க்குரதிலையே குறியா இருக்காங்க. இவங்களுக்கு பீஸ் மட்டும் கிடையாது. மருந்து வாங்குரதிலயும் கமிசன் வேற. இன்னம் சில டாக்டர்கள் அவங்களோட கிளினிக்லையே மருந்து கடை வச்சுருக்காங்க.
***************

T20 உலக கோப்பையில் தொடர்ந்து இரண்டாவது முறையாக சூப்பர் 8 இல் எந்த ஒரு போட்டியையும் ஜெயிக்காததர்க்கு தோனி , IPL இரவு கடந்த பார்ட்டிகளை குற்றம் சாட்டி உள்ளார். அதை ரவி சாஸ்திரியும், கவாஸ்கரும் குற்றம் சாட்டி உள்ளனர்.இதில் நான் தோனி பக்கம். எல்லாம் காசு படுத்தும் பாடு. IPL இந்திய கிரிக்கெட்டையே நாசம் படித்திருச்சு.
***************
சனிக்கிழமை அலுவலகத்துல New Horizon Media புத்தக ஸ்டால் போட்டுருந்தாங்க. அதுல போய் புத்தகம் வாங்கணும்னுதான் தோணுச்சு, இருந்தாலும் போன தடவையும், ஏன் இந்த வருஷ சென்னை book fair ல வாங்குன புத்தகங்களையே இன்னும் படிச்சு முடிக்காததால இந்த தடவ புத்தகம் எதுவும் வாங்கல.
***************
நான் பொதுவா ஒரு நாட்ட பத்திய செய்திகள படிக்கிறதுனா, அந்த நாட்டுல இருக்க பிரசித்தி பெற்ற செய்திதாள்களா இணையத்தில எடுத்து படிக்கிற பழக்கம் உண்டு . அப்படி எனக்கு அறிமுகமானதுதான் பாகிஸ்தானின் டான்(dawn) செய்தித்தாள். இந்த செய்தித்தாள் பாகிஸ்தானின் தந்தையான (
Quaid-e-Azam) முகமது அலி ஜின்னாவால் 1941 ஆம் ஆண்டு டில்லியில் ஆரம்பிக்கப்பட்டது . கொஞ்ச நாளைக்கு முன்னாடி வரைக்கும் ஒரு மொக்க வலைத்தளம் வச்சுருந்தாங்க . இப்ப ரொம்ப நல்ல வலைத்தளமா இருக்கு. அந்த வலைத்தளம் The Hindu செய்திதாளோட beta version மாதிரி இருக்கும். செய்திகளைப் பொருத்தவர எனக்கு ரொம்ப பிடிச்ச வலைத்தளம். பாகிஸ்தான் பத்திரிக்கைங்கிரதால சும்மா இந்தியாவைப் பத்தி திட்டிக்கிட்டு இருக்கமாட்டாங்க . பத்திரிக்கை நடு நிலையாகவே இருக்கும்.

சரி சொல்ல வந்த விசயத்த சொல்றேன். அதுல ஒரு கட்டுரை வந்திருந்துச்சு. நம்மளுக்கு எதுக்கு ஐந்தாண்டு திட்டம். நாம ஓராண்டு திட்டத்தையே ஒழுங்கா நிறைவேத்துரதில்ல பிறகு எதுக்கு
ஐந்தாண்டு திட்டம் அப்படின்னு ஒரு கட்டுரை வந்த்திருந்துச்சு. அதே தான் எனக்கும் தோணுச்சு. இந்தியாவிற்கும் இதே கேசு தான . நாம எப்ப ஓராண்டு திட்டதேயே ஒழுங்கா நிறைவேத்துனோம். பிறகு என்னத்த ஐந்தாண்டு திட்டம்னு தோணுச்சு. என்ன இருந்தாலும் இந்தியாவும் பாகிஸ்தானும் பங்காளிகதான, ஒன்னாத்தான இருப்பாங்க.

****************

Friday, April 30, 2010

உதிரிப் பூக்கள் - 2

Time பத்திரிக்கையின் வருடாந்திர உலகிலேயே அதிகமாக ஆதிக்கம் செலுத்தக்கூடிய 100 நபர்களில் 9 இந்தியர்கள் இடம் பெற்றுள்ளனர். அவற்றில் batting legend சச்சின் டெண்டுல்கரும், பாரதப் பிரதமர் மன்மோகன் சிங்கும் இடம் பெற்றுள்ளனர். kudos indians ...
***************
இந்தியா பாகிஸ்தானிற்கு இடையேயான அமைதி ஒப்பந்தம் ஆடுகளுக்கு கூட பயன்படுகிறது. காஷ்மீரில் உலகிலேயே பெரிய ஆட்டு இனமான markhor உள்ளது. மிக அரிய இனமான இந்த ஆடுகளின் எண்ணிக்கை இந்தியா பாகிஸ்தானிற்கு இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்பட்ட பிறகு அதிகரித்துள்ளது. தற்போது இந்த ஆடுகளின் எண்ணிக்கை Qazinag park கில் 300 ஆக உள்ளது. 2005 இல் இவற்றின் எண்ணிக்கை வெறுமனே 115 ஆக மட்டுமே இருந்தது. இந்தியா பாகிஸ்தானிற்கு இடையே அமைதி ஏற்பட்டால் அது பல வகையிலும் பயன் தரக்கூடியது.
***********************
உலக வங்கியில் இந்தியாவிற்கான voting power அதிகரித்துள்ளது. தற்போது இந்தியாவிற்கான voting power 2.91% ஆக அதிகரித்துள்ளது. இதன் மூலம் வளரும் நாடுகளின் மொத்த voting power 47% மாக அதிகரித்துள்ளது. இதன் மூலம் இந்தியா, உலக வங்கியில் 7 வது மிகப் பெரிய பங்குதாரராக உள்ளது . சீனா 4.42% வீதத்துடன் 3 வது மிகப் பெரிய பங்குதாரராக உள்ளது. இதன் மூலம் இந்தியாவின் குரல் உலக வங்கியில் ஓங்கி ஒலிபதற்க்கான வாய்ப்பு எழுந்துள்ளது.
********************
இன்று வடபழனி 12B பேருந்தில் முதல் தடவையாக ஒரு பெண் நடத்துனரைப் பார்த்தேன். ஏற்கனவே MTC பேருந்தில் பெண் நடத்துனரும், பெண் ஓட்டுனரும் உள்ளனர் என்று கேள்விப்பட்டிருந்தாலும் இப்பொழுதுதான் முதல் தடவையாகப் பார்கிறேன். மிக நன்று.
*******************
அமெரிக்கா, பாகிஸ்தானிற்கு $600 million வழங்க உள்ளது. பாகிஸ்தான் அமெரிக்காவின் தீவிரவாதத்திற்கு எதிரான போரில் பங்கேற்று வருவது அனைவரும் அறிந்ததே. இதற்க்கு அமெரிக்கா பல வகையிலும் பாகிஸ்தானிற்கு உதவி வருகிறது. அந்த வகையில்தான் இந்த $600 million வழங்க உள்ளது. இது அமெரிக்கா பாகிஸ்தானிற்கு வழங்க ஒப்புக்கொண்ட $2 billion ஒரு பகுதியாகும். எனக்கு இந்த நேரத்தில் இந்தியா, அமெரிக்காவிடம் பாகிஸ்தானைப் பற்றி தெரிவித்த கவலை தான் ஞாபகம் வருகிறது. பாகிஸ்தான், தீவிரவாதத்திற்கு எதிரான போரில் பங்கேற்பதற்காகபெறும் நிதியை இந்தியாவிற்கு எதிராக பயன்படுத்தக்கூடும் என்ற கவலைதான் அது.
********************
ஒற்றைக் கொம்பு காண்டாமிருகத்திற்கு பெயர் பெற்ற காசிரங்கா தேசிய புலிகள் காப்பகம், உலகிலேயே புலிகள் நெருக்கமான பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கு சராசரியாக 100 ச.கிமீ க்கு 32.64 புலிகள் உள்ளன. இதற்க்கு முன் இத்தகுதியை பெற்றிருந்தது கார்பெட் தேசிய புலிகள் காப்பகம். அங்கு 100 ச.கிமீ க்கு சராசரியாக 19.6 புலிகள் உள்ளன. இது video trap கணக்கெடுப்பு மூலம் கணக்கெடுக்கப்பட்டுள்ளது. video trap கணக்கெடுப்பு புலிகளின் வரிகளைக் கொண்டு கணக்கெடுக்கப்படுகிறது. இது தான் உலகிலேயே மிக நம்பகமான கணக்கெடுப்பு முறையாகும்.
********************
இலங்கையில் உள்ள அனுராதபுரத்தில் உள்ள போதி மரத்தின், இளைய கன்று ஒன்று இந்தியாவிற்கு அளிக்கப்படுகிறது. கௌதம புத்தர், புத்த கயாவில் உள்ள போதி மரத்தின் கீழ் அமர்ந்து ஞானம் பெற்றார் என்பது அனைவரும் அறிந்த செய்தியே. அந்த மரத்திலிருந்து பெற்ற இளைய கன்று ஒன்று அனுராதபுரத்தில் நடப்பட்டது. நாளடைவில் புத்த கயாவில் இருந்த போதி மரம் பட்டுவிட்டது. பிறகு அனுராதபுரத்தில் இருந்த போதி மரத்திலிருந்து இளைய கன்று ஒன்று பெறப்பட்டு புத்த கயாவில் நடப்பட்டது. அனுராதபுரத்தில் உள்ள இந்த போதி மரம் தான் உலகிலயே வயதான மரம். மீண்டும் இதிலிருந்து பெறப்படும் இளைய மரமானது பாட்னாவில் நடப்பட இருக்கிறது.
********************

Monday, April 19, 2010

உதிரிப் பூக்கள்

சில நாட்கள் முன்பு வடபழனிக்கு செல்ல விஜயநகர் பேருந்து நிறுத்தத்தில் நின்றுகொண்டிருந்தேன். சோதனையாக, அனைத்து D70 பேருந்துகளும் கூட்டமாக இருந்தன. எப்படியடா இதில் அவ்வளவு தூரம் செல்வது என்று எண்ணியபோதே அயர்ச்சியாக இருந்தது. அப்பொழுது நல்லவேளையாக குளிர்சாதனப் பேருந்து (AC bus பா) வந்தது. இப்பேருந்துக்கு கூட்டம் எப்படியும் குறைவாக இருக்கும் என்று நான் எண்ணியதில் இடி விழுந்தது. அந்த பேருந்துக்கும் ஒரு சனம் கூட்டம் நின்றது. நல்லவேளையாக அடித்து பிடித்து ஏறியதில் சன்னலோர இருக்கை கிடைத்தது. ஒரு வழியாக பேருந்து கிளம்பியபோது இருக்கை முழுக்க ஆட்கள் இருந்தார்கள் இன்னும் சில பேர் நின்று கொண்டுருந்தனர். நடத்துனர் டிக்கெட் கொடுக்க ஆரம்பித்தார். குளிர்சாதனப் பேருந்தின் டிக்கெட் கட்டணம் சாதாப் பேருந்தைப் போல 5 மடங்கு. எனக்கு இதில் மிக ஆச்சரியமாக இருந்தது நடத்துனர். "சார் உள்ளே வங்க சார்" , "சார் எங்க போகணும் வடபழனியா சார், இந்த வந்துட்டேன் சார் ", "சார் சில்லறை இல்லையா சார் , பரவாயில்லை சார் நான் பாத்துக்கிறேன்." என்று ஒரு சென்னை MTC நடத்துனர் பேசுவது போலவே இல்லை. அத்தனை சார் போட்டார். கொஞ்சம் கூட சிணுங்கவே இல்லை,எரிச்சல் இல்லை ,மரியாதைக் குறைவான பேச்சு இல்லை இப்படி எதுவும் இல்லை. ஆக மொத்தத்தில் அவர் MTC நடத்துனராகவே இல்லை.


அவரை அவ்வாறாக நடக்க வைத்தது எது? கூட்டம் குறைவா, பேருந்தின் குழுமையா, இல்லை பேருந்தில் இருக்கும் அனைவரும் சற்று வசதி படைத்தவர்கள், சற்று படித்தவர்கள் என்ற எண்ணமா?. எதுவோ ஒரு நடத்துனர் எப்படி நடக்கவேண்டுமோ அப்படி நடந்துகொண்டார். இதற்காகவே அனைத்துப் பேருந்துகளையும் குழுமை பேருந்துகளாக மாற்றிவிடலாம்.

*********************************

நீங்கள் எங்கேனும் தொலை தூரம் செல்லும் பேருந்துகளைப் பார்த்திருக்குரீர்களா?. அத்தகைய பேருந்துகளின் முதல் இருக்கைகளை பெண்களே ஆக்கிரமித்திருப்பார்கள்.அப்பொழுதெல்லாம் எனக்குத் தோன்றும் ஒன்றுக்கொன்று நேருக்கு நேராய் பேருந்துகள் மோதிக் கொள்ளும் விபத்துகளுக்கும், பெண்கள் இப்படி முதல் வரிசையில் அமர்வதற்கும் ஏதேனும் தொடர்பிருக்கிறதா என்று? தெரிந்தவர்கள் சொல்லவும்.

*****************************

சிறு வயதில் இலையில் மீதம் வைக்காமல் தின்றபோது எங்கள் அப்பா சொன்னார், நீ இலையைத் தூக்கி எரியும் போது அதில் மீதமிருக்கும் உணவைச் சாப்பிட பிச்சைக்காரர்கள், காகம், நாய் அழகில் ஜீவராசிகள் காத்திருக்கும். அவர்கள் ஏமாற்றம் அடையக்கூடாது. அதனால் எப்பொழுது சாப்பிட்டாலும சிறிது மீதம் வை என்றார். அன்றிலிருந்து இன்று வரை மீதம் வைத்துக் கொண்டிருக்கிறேன்.

வேலை தேடிய நாட்களில் ஒருநாள் நானும், என் நண்பன் ஆனந்தபாபுவும் ஒரு ஹோட்டலில் சாப்பிட்டுகொண்டிருந்தோம், எப்பயும் போல இலையில் சிறிது மீதம் வைத்தேன். அதற்க்கு பாபு சொன்னான் "இவ்வளவு நல்லவனா இருக்க, உனக்கு ஒரு வேலை கிடைக்க மாட்டேங்குதேடா! " என்றான். அன்றைக்கு ஆரம்பித்த குழப்பம் "இந்த உலகம் நல்லவர்களுக்கானதா இல்லை வல்லவர்களுக்கானதா ?" இன்றும் தீரவில்லை.

அப்பாவிற்கு கொள்ளி வைத்துவிட்டு வந்து சாப்பிட நானும் மதுவும் உட்கார்ந்தோம். இலை போட்டு பரிமாறிய சித்தி சொன்னார், இனிமே எப்ப சாப்பிட்டாலும், சாப்பிடுவதற்கு முன்னாடி அப்பாவிற்கு கொஞ்சம் சாதம் எடுத்து வைக்கணும் என்றார். அன்றிலிருந்து இன்றுவரை இலையில் சாதம் வைக்கிறேன் அப்பாவிற்கும் மற்ற ஜீவராசிகளுக்கும் சேர்த்து!.

*******************************

அனைத்து வேலைகளையும் மதுவின் தலையில் ஒப்படைத்ததால் சனி, ஞாயிறு எல்லாம் இப்பொழுது உண்டு,உறங்கி,தூங்கி எழுந்திருப்பதக்கென்று ஆகிவிட்டது. இங்கு செல்வேந்திரனின் வரியைக் கூறுகிறேன் "செய்வதற்கு ஒன்றும் இல்லாத - இருந்தாலும் செய்யும் உசிதம் இல்லாத தினங்கள் அலாதி! அலாதி!" . ஆனால் எனக்கு சும்மா இருப்பது அவ்வளவு சௌந்தரியமாய் இல்லை. எப்பொழுதும் செய்யக் கூடிய அல்லது செய்ய வேண்டிய வேலைகள் கழுத்தைப் பிடிக்கின்றன. அப்பொழுதெல்லாம் நான் இன்று அந்த சிவனே வந்து எந்த வேலை செய்யச் சொன்னாலும் சிவனே என்றுதான் கிடப்பேன் என்று உறுதி ஏற்றுக் கொள்வேன் . ஆம் செய்வதற்கு ஒன்றும் இல்லாத - இருந்தாலும் செய்யும் உசிதம் இல்லாத தினங்களின் அலாதியை அனுபவிக்க உறுதி ஏற்றுக்கொள்வேன்.

*******************************

வளைவுகள் அதிகம் இல்லாத மலைவாசஸ்தலத்தில் கூட்டம் குறைவான பேருந்தில் ஜன்னலோர இருக்கையில் மலைவாசஸ்தலத்தின் குழுமையை அனுபவித்துக் கொண்டு, நமது இருக்கைக்கு cross ஆக உள்ள இருக்கையில் அமர்ந்த அதிக வளைவுகள் கொண்ட இள மங்கையை ரசித்துக் கொண்டு பயணிப்பது எவ்வளவு அலாதியாக இருக்கும்.
*****************************

8 தடவை மூத்திரம் போயாச்சு, 12 தடவை தண்ணீர் குடித்தாயாச்சு, 4 தடவை காபி குடிக்க எந்திருச்சாயாச்சு, 7 தடவை படித்த blog களையே படித்தாயாச்சு, பிறகு எப்படித்தான் வெள்ளிக் கிழமை மாலையை ஆபீஸில் ஓட்டுவது?

*****************************

IPL ஆரம்பித்ததிலிருந்தே எனக்கு அது பிடித்தமானதாக இல்லை. அதற்க்கு முக்கிய காரணம் அது ICL ஐ முழுங்கி தின்றதுதான்.எத்தனை கிரிக்கெட் வீரர்களின் வாழ்கையை அது விழுங்கியது. நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் "bond" ஐ நியூசிலாந்து அணியில் சேர்க்கவிடாமல் செய்தது. இந்தியாவில் கிரிக்கெட்டிற்கு BCCI ஏகபோக அழிச்சாட்டிய உரிமை கொண்டாடுவது எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. அதிலும் BCCI தன்னுடைய செல்வாக்கை வெளிநாடுகள் வரை செலுத்துகிறது, "தடி எடுத்தவனெல்லாம் தண்டல்காரன் " என்பது போல. நான் கிரிக்கெட்டை விட , இந்திய கிரிக்கெட் அணி இந்தியாவிற்காக விளையாடுவதை தான் விரும்புகிறேன். ஆனால் இங்கு ஒவ்வொரு பிராந்தியமாகப் பிரிந்து இந்தியாவை கூறு போடுகிறார்கள்.

******************************

வார்த்தைகளின் அழகில் உண்மையை மறந்து விடாதே என்கிறது ஒரு ஜென் தத்துவம்.

*******************************
இன்று சோதனையாக D70 ரொம்ப கூட்டமாக வந்தது. அதிலும் நான் நின்ற இடத்திற்கு அருகிலிருந்த இருக்கைகள் எதுவும் காலியாவதாக தெரியவில்லை. அப்பாடா என்கிறமாதிரி ஒரு இருக்கை காலியானது. அதற்கும் போட்டியாக ஒருவன் வந்து ஒருக்களித்தவாறு இடத்தைப் பிடித்துவிட்டான். அப்பொழுது இந்தியன் படத்தில் கிரேசி மோகன், செந்தில் தலையில் ஓங்கி கொட்டுவது போல் அவன்தலையில் கொட்டவேண்டும் என்று ஏனோ தோன்றியது.

******************************

துப்பட்டாவைக் கொண்டு கண்கள் மட்டும் தெரியும்படி மூடிக்கொண்டு செல்லும் பெண்கள் எல்லோரும் எப்பொழுதும் அழகாய்த் தெரிவது ஏன்?

Friday, November 6, 2009

தெரிந்ததைச் சொல்கிறேன் - 2

NEWS - North, East, West, South என்று நான்கு திசைகளிலிருந்தும் செய்திகளைத் தருவதால் NEWS என்று பெயர் வந்தது. நாம வேணும்னா இன்னொரு explanation கொடுப்போம். பல புதியதுகளைத் (செய்திகளைத், NEWs) தர்ரதுனால, அத NEWS வேனா சொல்லுவோம் ;)

Saturday, October 17, 2009

தெரிந்ததைச் சொல்கிறேன்

1.பொதுவாக நம் ஊரில் இலவசமாக கிடைப்பதை ஒசியில்் கிடைப்பது என்பார்கள். ஒசி் என்பது தமிழ் வர்ர்த்தை அல்ல . பிரிட்டிஷ் காலத்தில், அரசாங்கத் தபால்களுக்குத் தபால் தலை ஓட்டவேண்டியதில்லை. அவற்றின் மேல் "On Company Service" என்று முத்திரை இடப்பட்டிருக்கும். அவற்றை சுருக்கமாக OC யில் செல்வது என்பார்கள். அதிலிருந்து இலவசமாக கிடைப்பதற்க்கு ஒசி என்று பெயர் வந்து விட்டது.

2.நம் ஊரில் பொதுவாக வழக்கில் இருக்கும் சொல் எம்ப்டன் கப்பல். நீ பெரிய எம்ப்டன் கப்பலா என்பார்கள்?. எம்ப்டன் கப்பல் ஒரு ஜெர்மானியக் கப்பல். முதலாம் உலகப் போரின் போது அக்கப்பல் சென்னைக்கு வந்து சென்னை உயர்நீதிமன்றத்தின் மீதும், ஜார்ஜ் கோட்டையின் மீதும் குண்டு வீசிவிட்டு பிரிட்டிஷ் கப்பல்களிடம் அகப்படாமல் தப்பித்துச் சென்று விட்டது.இன்றும் கூட அக்கப்பல் குண்டு வீசியதால் ஏற்ப்பட்ட இடிபாடுகளை சென்னைத் உயர்நீதிமன்றத்தில் நீங்கள் காணலாம். அதிலிருந்து அசாதாரணச் செயல்களைச் செய்வபர்களைக் குறிப்பிட எம்ப்டன் கப்பல் என்ற சொல் வழக்கில் வந்தது.