Sunday, November 15, 2009

சோழர்கள்

சென்ற மாதம் ஒரு நாள் வள்ளுவர் கோட்டத்திற்கு நானும் மதுவும் சென்றிருந்தோம். அங்க ஒரு book stall இருந்தது. சரி சும்மா பார்ப்போமே என்று அங்கு இருக்கும் புத்தகங்களை நோட்டம் விட்டோம். அப்பொழுது அங்கு, நீலகண்ட சாஸ்திரி அவர்கள் எழுதிய "சோழர்கள்" புத்தகம் இருந்தது.

நீலகண்ட சாஸ்திரி அவர்கள் தென்னிந்திய வரலாற்றை பற்றி மிகப் பெரிய ஆராய்ச்சி நடத்தியவர். கல்வெட்டுகள், செப்பேடுகள், சங்க காலப் இலக்கியங்களை எல்லாம் ஆராய்ந்து, தென்னிதிய வரலாற்றிற்கு உலகளவில் அங்கீகாரம் பெற்றுத் தந்தவர். அவர் சென்னை பல்கலைக்கழகம், மைசூர் பல்கலைக்கழகம், சிகாகோ பல்கலைக்கழகம், பானரஸ் இந்து பல்கலைக்கழகம் என்று பல பல்கலைக்கழகங்களில் பேராசிரியராகப் பணி புரிந்தவர். யுனேஸ்கோவின் Institute of Traditional Cultures of South East Asia வின் Director ஆக பணிபுரிந்தவர். இந்தியாவின் மூன்றாவது மிக உயரிய civilian விருதான பத்மபூசன் விருது பெற்றவர். அவர் எழுதி 1955 ஆம் ஆண்டு வெளிவந்த புத்தகமே "சோழர்கள்".

அந்த புத்தக் கடையில் ஒரே ஒரு பதிப்பு மட்டும் தான் இருந்தது. அந்த புத்தகத்தை வாங்கும்பொழுது அந்த கடைக்காரர், "சார், நீங்க ரொம்ப அதிர்ஷ்டசாலி சார். இந்த புத்தகம் எங்கும் கிடைப்பதில்லை. அனைத்தையும் நூலகங்களுக்கே கொடுத்துவிட்டார்கள். என்னிடம் இருந்ததுதான் கடைசி பிரதி. இனிமே இந்த புத்தகம் அச்சிட்டால்தான் உண்டு" என்றார். நானும் சிரித்துக் கொண்டு வாங்கி வந்தேன்.

நானும் மதுவும் மதுரைக்காரைய்ங்யதால (ய்ங்ய வை அழுத்தி உச்சரிக்கவும் :) ), எங்களுக்கு இயல்பாகவே பாண்டியர்கள் மீது ஒரு ஈர்ப்பும், அதனால் ஒரு பெருமை கலந்த கர்வமும் உண்டு. சின்ன வயதில் பாண்டியன் பேருந்தையும், அந்த பாண்டியன் என்ற பெயரில் "ண" க்கு மேல் புள்ளிக்குப் பதிலாக பாண்டியரின் சின்னமாகிய மீனைப் பார்ப்பதும் மிக ஆனந்தமாக இருக்கும். பாண்டியன் பேருந்து பிற பேருந்துகளை முந்திச் செல்லும்போது "ஹே, எங்க பாண்டியன் முந்திருச்சு" என்று பெரிதாக சத்தம் போடுவோம்.

பள்ளி நாட்களில் சமூக அறிவியல் பாடத்தில் இந்திய வரைபடம் கொடுக்கும்போது வைகையையும், மதுரையையும் தான் முதலில் தேடுவோம். நாங்கள் வட இந்தியச் சுற்றுலா சென்ற போது, எங்களுடன் சுற்றுலா வந்த நெல்லைகாரர்களுடன் "நீங்கலாம், எங்கப் பாண்டியப் பேரரசிற்குட்பட்டவர்கள்" என்று நானும் மதுவும் சண்டைலாம் போட்டோம். அப்பொழுதெல்லாம் பாண்டிய நாட்டையும், பாண்டியர்களையும் பிற நாட்டுடனும், மற்றவர்களுடனும் ஒப்பீடு செய்து குதூகலிப்பதே வழக்கமாக இருக்கும். இதே மாதிரி ஒரு தடவை எங்க அப்பாவிடம் நாங்கள், "அப்பா, காவிரி பெருசா, இல்ல வைகை பெருசா?" என்றுக் கேட்டோம். அதற்க்கு எங்க அப்பா, "வைகை எல்லாம் காவிரியுடன் ஒப்பிடவே முடியாது. காவிரி ரொம்பப் பெரியது" என்றார். அன்றுடன் பாண்டியரை பிறருடன் ஒப்பீடு செய்யும் கேள்விகளை எங்க அப்பாவிடம் கேட்பதையே விட்டு விட்டோம். ஒரு தடவை என்னிடம் ஒருவர், "ஏன் மதுரக்காரங்க எல்லாம் பாண்டி னு அதிகமா பெயர் வைக்குறாங்க" என்றார். சற்றும் தாமதிக்காமல் நான், "ஏன்னா, நாங்கல்லாம் பாண்டியப் பேரரசின் குடிமக்கள்" என்றேன்.

இப்படி பாண்டியர்கள் மீது மிகப் பெரிய பற்று கொண்ட எனக்கு, வயது ஆக ஆக, மேலும் அதிகம் படிக்க படிக்க சோழர்கள், பாண்டியர்களை விட மிகப் புகழ் வாய்ந்தவர்கள் என்றும் , மிகப் பெரிய பரப்பளவை ஆண்டவர்கள் என்றும் புரிய ஆரம்பித்தது. உடனே நானும் பாண்டியர்கள் என்பதிலிருந்து சற்று பெரிய மனது பண்ணி வெளியே வந்து, நாங்கல்லாம் தமிழர்கள் என்று கூறிக் கொண்டு சோழர்களின் பெருமையில் பங்கெடுத்துக்கொள்ள ஆரம்பித்தேன். இப்படி என்னை மாற்றியதில் கல்கியின் "பொன்னியின் செல்வன்" க்கு மிகப் பெரிய பங்கு உண்டு (பொன்னியின் செல்வன், ராஜராஜ சோழனைப் பற்றியது).

சோழர்கள் கிருஸ்துவிற்கு முந்திய சில நூற்றாண்டுகளிலிருந்து பதிமூன்றாம் நூற்றாண்டு இறுதி வரை தமிழகத்தை ஆண்டவர்கள். சேர, பாண்டிய அரசுகளைப் போலவே சோழப் பேரரசும் ஏற்ற, இறக்கங்களை கொண்டாதாகவே இருந்தது.

சோழர்கள் காலத்தை நான்காகப் பிரிக்கலாம்,

  1. Early Chozhas எனும் சங்க காலச் சோழர்கள் ஆண்ட கி.மு.300 - கிறிஸ்து பிறப்பிற்கு பிந்தைய சில நூற்றாண்டுகள்.
  2. Interregnum Chozhas எனும் சங்க காலச் சோழர்களுக்கும் விஜயாலச் சோழனின் தலைமுறைக்கும் இடைப்பட்டவர்கள் ஆண்ட கிறிஸ்து பிறப்பிற்கு பிந்தைய சில நூற்றாண்டுகள் - கி.பி 9 ஆம் நூற்றாண்டு .
  3. Medival Chozhas எனும் விஜயாலச் சோழனின் தலைமுறையினர் ஆண்ட கி.பி 9 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி 11 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி வரை.
  4. Later Chozhas எனும் சாளுக்கிய - சோழ குல மன்னனான குலோத்துங்கச் சோழனும் அவன் தலை முறையினரும் ஆண்ட கி.பி 11 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி முதல் கி.பி 13 ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதி வரை.
சோழா என்ற பெயரின் பொருள் என்னதென்று யாருக்கும் தெரியவில்லை. அதே போன்று சோழர்களின் சின்னமான புலி தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான சரியான காரணமும் தெரியவில்லை. ஆனால் இவையிரண்டும் ஆரம்ப காலத்திலிருந்தே புழக்கத்தில் இருந்திருக்கின்றன. சங்க காலச் சோழர்கள் கிள்ளி, வளவன், செம்பியன் என்ற பெயர்களாலும் குறிக்கப்பட்டனர். கிள்ளி என்பது "கிள்" சொல்லிலிருந்து தோண்டுபவன் என்ற பொருளில் வந்தது. வளவன் என்பதற்கு வளமையான நிலத்தை ஆள்பவன் என்று பொருள். செம்பியன் என்பது புறாவிற்கு பதிலாகத் தன் உடம்பிலிருந்து கறி கொடுத்த சிபிச் சக்ரவர்த்தியின் வழி வந்தவர்கள் என்றுக் குறிக்கும். ஆனால் இந்த பெயர்கள் எல்லாம் சங்ககாலச் சோழர்களுக்கு அடுத்து வழக்கில் இல்லாமல் போய்விட்டது. கரிகார்ச் சோழன், கிள்ளி வளவன்,
நலங் கிள்ளி, நெடுங் கிள்ளி ஆகியோரெல்லாம் சங்க காலச் சோழர்களே.

Interregnum Chozhas என்னும் சங்க காலச் சோழர்களுக்கும், விஜயாலச் சோழனின் தலைமுறைக்கும் இடைப்பட்ட சோழர்களைப் பற்றி பெரிதாக குறிப்பு எதுவும் இது வரைக் கிடைக்கவில்லை. அக்காலங்களில் சோழர்கள் பாண்டியருக்கும் பல்லவருக்கும் உட்பட்டவர்களாகவே இருந்தனர். இதனை சோழர்களின் இருண்ட காலம் எனலாம். இக்காலங்களில் சோழர்கள் தங்கள் பழம் பெருமையை் பற்றியும், எதிர்காலத்தைப் பற்றியும் எண்ணிக் கொண்டும் அமைதியாக இருந்தனர். இக்காலங்களில் ஆந்திராவின் சில மாவட்டங்களில் ஒரு தெலுங்கு அரசு ஒன்று இருந்தது. அவர்கள் தங்களை கரிகார்ச் சோழனின் வழி வந்தவர்கள் என்று கூறிக் கொண்டனர். இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.

விஜயாலச் சோழன் தலையெடுக்க ஆரம்பித்த கி.பி 9 ஆம் நூற்றாண்டின் இறுதியிலிருந்து சோழர்களின் பொற்காலம் ஆரம்பம் ஆகிறது. இக்காலகட்டத்தைச் சார்ந்தவர்களே உலகப் புகழ் பெற்ற ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன் ஆவார்கள். இக்காலகட்டத்தைப் பற்றிய நம்பத்தகுந்த ஏராளமான தகவல்கள் கிடைத்துள்ளன.

சோழர்களுக்கும் சாளுக்கியருக்கும் இடையே திருமணங்கள் நடைபெற்று வந்துள்ளன. 1070 இல் விஜயாலச் சோழன் மரபில் வந்த ஆதிராஜேந்திர சோழன் மறைவிற்குப் பின், சோழ - சாளுக்கிய மன்னனான குழோத்துங்கச் சோழன், சோழ மன்னனாக அரியணை ஏறினான். ஆதிராஜேந்திர சோழன் மறைவில் Medieval Chozhas இன் காலம் முற்றுப் பெற்று Later Chozhas இன் காலம் ஆரம்பம் ஆகிறது. Later Chozhas இன் காலம் 1279 இல் மூன்றாம் ராஜேந்திரச் சோழனின் மறைவில் முற்றுப் பெறுகிறது.

இப்படியாகச் சோழர்களின் காலம் கிட்டத்தட்ட 16 நூற்றாண்டுகள் பரந்து விரிந்தது.

பின் குறிப்பு:

இப்பொழுதுதான் இப்புத்தகத்தை ஆரம்பித்துள்ளேன். மேலும் படிக்க படிக்க சோழர்களைப் பற்றி அதிகம் எழுதுகிறேன்.

5 comments:

JDK said...

book stall - புத்தகக் கிடங்கு / புத்தகக் கடை ! ;-)

Haripandi said...

book stall என்பதற்கு புத்தகக் கடை அல்லது புத்தகக் கிடங்கு சரியான அர்த்தமாகாது நண்பா. நிலையாக ஒரு இடத்தில் இருக்கும் ஒன்றிற்குத்தான் புத்தகக் கடை என்பது பொருளாக அமையும். புத்தகக் கிடங்கு ஒரு இடத்தில் புத்தகங்களை சேமித்து வைக்கும் இடம் என்று கொள்ளலாம். book stall என்பது தற்காலிகமாக இருக்கும் ஒன்று. அதற்குச் சரியான வார்த்தை எனக்குத் தெரியவில்லை நண்பா. அதனால் தான் நான் book stall என்ற ஆங்கில வார்த்தையைப் பயன்படுத்தினேன்.

Shankar.Nash said...

oh.. ur patronage to pandian is mindblowing. btw, is there any relation for u being named hariPANDI??

Haripandi said...

@ Shankar

As i told na, i am a citizen of the great Pandian Kingdom. so i got name hariPANDI ;-)

parithi said...

தமிழக வரலாறு என்றாலே அது சோழர்களின் வரலாறு என்பது மறுக்க முடியாத உண்மை ...இருப்பினும் விஜயாலய சோழனிற்கு முன்பு தஞ்சையை ஆட்சி செய்த களபிறர்கள் ஆட்சியை ...வரலாற்று ஆய்வாளர்கள் இருண்ட காலம் என்கிறர்கள்...ஒரு ஆட்சியை இருண்ட காலம் என்பதற்கு காரணம் ..
... ஒரு கொடுங்கோல் ஆட்சி ஆக இருக்க வேண்டும்...
....அல்லது மன்னன் வீரம் இல்லாதவன் ஆக இருக்க வேண்டும்..அனால் அப்படி இல்லை..
களபிறர்கள் ஆட்சி காலத்தில் ஜைன மதம் பின்பற்ற பட்டுள்ளது..வேள்விக்குடி கல்வெட்டு மூலம் நாம் அறிவது...களபிறர்கள் ஆட்சி காலத்தில் பிரமதேய(gift to brahmins) முற்றிலும் ஒழிக்க பட்டது..இன்னும் தஞ்சாவூர்,புதுகோட்டை பகுதிகளில் உள்ள.மங்களம் என்று முடியும் கிராமங்கள் எல்லாம் ராஜ ராஜ சோழன் காலத்தில் பிராமணருக்கு இலவசமாக கொடுத்த கிராமங்கள் ஆகும்.....
இவற்றில் இருந்து களபிறர்கள் ஆட்சி காலம் யாருக்கு இருண்ட காலம் என்பது விளங்கும்.
மேலும் ,ஆர்யர்கள் க்ய்பர் கால்வாய் வழியாக வருகை தந்தார்கள் என்றும் (நம் வரலாறு பாட புத்தகத்தில் உள்ளாது) ....அனால் முகலாயர்கள் இந்தியாவின் மீது படை எடுத்தார்கள் என்றும் உள்ளது....ஏன் இந்த முரண்பாடு..