Wednesday, December 2, 2009

குடியேறிகள்

ஒரு நாள் பக்கத்து வீட்டுப் பையனை கபடி விளையாடக் கூப்பிட்டேன் . அவன் கபடினா என்ன? என்று கேட்டான். பிறகு அவனிடம் எப்படிச் சொல்லுவது இந்தியா கபடில தங்கப்பதக்கம்லாம் வாங்கிருக்குனு. சரி கிட்டினாவது என்னான்னு தெரியுமா என்றேன். அதற்க்கு அவன் கிரிக்கெட் பேட்டையும், பந்தையும் கொண்டு வந்தான். பரவாயில்ல கிட்டிக்கும் கிரிக்கெட்டுக்கும் சம்பந்தம் உண்டுன்னு ஓரளவுக்கு சமாதானம் அடைந்தேன். ஒரு நாள் தொலைக்காட்சி செய்தியில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டைப் பற்றிக் காட்டினார்கள். நான் பக்கத்து வீட்டுப் பையனிடம் எப்படி கொம்பு பிடித்து காளையை அடக்குகிறார்கள் பார் என்றேன். அதற்க்கு அவன் கொம்ப வச்சு பந்தல் தான் போடுவாங்க, மாடு எப்படி பிடிப்பாங்க என்றான் மாட்டுக் கொம்புக்கும், கழிக்கும் (கம்பு) வித்தியாசம் தெரியாத பையன் .

இது கூட பரவாயில்லை, எங்களின் கல்லூரிப் படிப்பின் மூன்றாம் ஆண்டு சுற்றுலா சென்றார்கள். சென்னை சென்ட்ரலிலிருந்து கோவா செல்வதாக ஏற்ப்பாடு. எங்கள் நண்பர்களில் ஒருவன் "சென்ட்ரல் ஸ்டேஷனுக்கு எப்படிடா போகணும்னு கேட்டான் ". நம்புங்கள் அவன் 22 வருடமாக கோடம்பாக்கத்தில் பிறந்து வளர்ந்தவன் !

பொதுவாக மாநகரங்களில் வசிக்கும் பிள்ளைகளின் தேவைகள் அனைத்தும் அம்மாநகரத்திலேயே நிறைவேற்றப்பட்டு விடுவதால் அவர்களுக்கு பிற இடங்களைத் தேடி அலையவேண்டிய தேவை இல்லை. அதனால் மாநகர வாழ்க்கையைத் தவிர வேறொன்றும் தெரிவதுமில்லை. சென்னையில் வாழும் பல பேர்கள், தமிழ்நாடு முழுவதும் ஓடும் அனைத்துப் பேருந்துகளின் பெயரும் "பல்லவன்" தான் என்று நினைத்து கொண்டிருந்தார்கள். ஓவ்வொரு ஊரிலும் அந்தந்த ஊர்களில் புகழ் வாய்ந்த அரசர்களின் (சேரன், சோழன்,பாண்டியன் ...) பெயரில் பேருந்துகள் இயங்கின என்பதோ , பின்னர் ஜாதிக் கலவரங்களின் பொழுது எதிர் ஜாதிக்கார மன்னரின் பெயரைத் தாங்கிய பேருந்துகள் தாக்கப்பட்டன என்பதால் அனைத்துப் பேருந்துகளின் பெயர்களும் மாற்றப்பட்டு, அந்தந்த பேருந்துகள் இயங்கிய கோட்டங்களின் பெயரில் அழைக்கப்பட்டன என்பதோ தெரிந்திருக்கவில்லை.

பெரிய மாநகரங்களிலிருந்து சிறிய ஊர்களுக்குச் செல்வோருக்கு ஏற்ப்படும் ஆச்சரியங்கள் போலவே , புதிதாக மாநகரங்களுக்குச் செல்பவர்களுக்கும் (பெரும்பாலும் ஏமாற்றமே) ஏற்ப்படும். எனக்குத் தெரிந்து சென்னையைத் தவிர்த்து மற்ற ஊர்களிலெல்லாம் பேருந்துகளில் பயணச்சீட்டு பயணிகளைத் தேடி வரும். நம்புங்கள், அதிக பேருந்து வசதி இல்லாத ஊர்களிலெல்லாம், சின்னப் பசங்களும், ஆண்களும் பேருந்தின் மேல் (Top) ஏறிக்கொள்வார்கள். இங்கு stage போடுவதைப் போல, அங்கும் stage போட்டு நடத்துனர் பேருந்தின் மீது ஏறி பயணச்சீட்டுத் தருவார். ஆனால் இங்கு சென்னையிலோ காலியாக இருக்கும் பேருந்தில் கூட நாம்தான் சென்று பயணச்சீட்டு வாங்க வேண்டும். என்னை ரொம்ப சங்கடப்படுத்தும் இன்னொன்று, எங்கள் ஊரில் "நீங்கள் " விளையாடும் இடங்களிலெல்லாம் இங்கு வயது வித்யாசமின்றி "நீ " விளையாடுகிறது.

பொதுவாக எல்லா ஊர்களும் அவற்றிற்கே உரிய திருவிழாக்களைக் கொண்டிருக்கும். அந்த திருவிழாக்களின் பின்னே சரித்திரங்களும், பல புனைக் கதைகளும் பின்னப் பட்டிருக்கும். அந்த புனைக் கதைகள் உண்மையோ அல்லது பொய்யோ, யாருக்கும் தெரியாது. இருந்தாலும் அவற்றை பாட்டிமார்கள் சொல்லச் சொல்ல ஆனந்தமாக இருக்கும் .மதுரையின் சித்திரைத் திருவிழா மிகச் சிறப்பாக ஒன்று. அத்திருவிழவுக்கான கதைகளும் அருமையாக இருக்கும். சித்திரைத் திருவிழாக் காலம் முடிந்த பிறகு ஒரு குருவி "அக்காாாா அக்காாாா" என்று கத்தும். அதன் பெயரே அக்கா குருவி. இதற்க்கு ஒரு கதை சொல்லுவார்கள். திருவிழாக் கூட்டத்தில் இந்தக் குருவி தன்னுடைய அக்காவைத் தொலைத்துவிடுமாம். அதை தேடிக் கொண்டு அக்கா அக்கா என்று அலையுமாம். அடுத்து வரும் ஒரு திருவிழாவில்தான் அவைகள் ஒன்று சேருமாம். அதுவரை இப்படியேதான் கூவிக் கொண்டு அலையும் என்று கதை சொல்லுவார்கள். அப்பொழுதெல்லாம் திருப்பி கேட்கத் தோன்றவில்லை, ஏன் தங்கச்சிக் குருவி மட்டும் தான் "அக்கா அக்கா " என்று தேடுமா? ஏன் அக்கா குருவி "தங்கச்சி தங்கச்சி " என்று தேடாதா? என்று. இருந்தாலும் அந்த புனைக் கதைகள் சுவாரசியமாகத்தான் இருந்தன. மாநகரங்களில் வசித்த பிள்ளைகள் இப்படிப்பட்ட கதைகளைக் கேட்டிருப்பார்களா என்று எனக்குத் தெரியவில்லை.

எனக்குத் தெரிந்து சென்னையில் நடக்கும் திருவிழாவில் முக்கியமானது, மயிலையில் அறுபத்து மூன்று நாயன்மார்களின் ஊர்வலம். ஆனால் அது மதுரை சித்திரைத் திருவிழாப் போல் ஊரே கூடி கொண்டாடும் திருவிழா என்று கூற முடியாது.

மார்கழி மாதக் குளிரில் அதிகாலையில் எழுந்து படிப்பதென்பது சற்றுக் கடினம் தான், இருந்தாலும் அதனையும் சுவாரசியமாக்கியவை, வெகு தூரத்தில் உள்ள சிறு கோயிலிருந்து ஒலிக்கும் L.R.ஈஸ்வரியின் அம்மன் பாடல்களும், ஐய்யப்பன் பாடல்களும்தான். கஷ்டப்பட்டு அதிகாலை 4 மணியிலிருந்து 5 மணிவரைப் படித்த பின் பார்த்தால், தெருவே களை கட்டத் தொடங்கிவிடும் . ஓவ்வொரு வீட்டிலிருந்தும் பெரிய பெரிய கோலங்கள் போட ஆரம்பிப்பார்கள். நாங்களும், அலுவலகப் பணி முடித்து அசதியாகத் தூங்கிகொண்டிருக்கும் எங்கள் அம்மாவை எழுப்பி பெரிய கோலம் போடச் சொல்லுவோம். எங்கள் அம்மா சில நேரம் சிறிய கோலமாகப் போட்டுவிடுவார்கள். அப்பொழுதெல்லாம் நாங்கள் எங்கள் மாடி வீட்டு அக்காவிடம் தஞ்சம் அடைந்துவிடுவோம், எங்கள் வீட்டு வாசலில் பெரிய கோலம் போடச் சொல்லி. பின்னர் அவற்றிற்கு வர்ணப் பொடி கொண்டு வண்ணம் தீட்டுவோம். விடிந்தவுடன் சிறுவர்களுக்கிடையே யார் வீட்டு கோலம் பெரிது என்று பெரிய போட்டியே நடக்கும். ஆனால் சென்னையிலோ மார்கழிக் கோலங்கள் இரவில் ஆரம்பித்து நடுச்சாம நாய்களின் குரைப்புடன் முடிந்துவிடுகின்றன.


எனக்கு எப்பொழுதும், சென்னைத் தவிர மற்ற சிறு நகரங்களிலும், ஊர்களிலும் இருக்கும் வீடுகள் பெரிதாகவேத் தோன்றுகின்றன. அதற்க்குக் காரணம் மனமா? அல்லது (வாடகைப்)பணமா? என்று தெரியவில்லை. எனக்கு என்னவோ சென்னைக் குடிமக்கள், குருவிகள் கூட கூடு கட்டத் தயங்கும் குறைந்த சதுர அடி வீட்டில்தான் குடியிருப்பதாகத் தோன்றுகிறது.

இப்படி குடியேறிய ஊரைப் பற்றி குறைகள் கூறக் கூடாதுதான், இருந்தாலும் மழைக்காலத்தில் தண்ணீர் தீவுகள் தேடும் காலடித் தடங்கள் போல மனமானது, குடியேறிய ஊரின் ஓவ்வொரு நடத்தையிலும் சொந்த ஊரின் சாயலைத் தேடுகிறது.

1 comment:

JDK said...

பின்னிட்ட பா !!!
//மயிலையில் அறுபத்து மூன்று நாயன்மார்களின் ஊர்வலம்.// அப்படியா ?
//எனக்கு என்னவோ சென்னைக் குடிமக்கள், குருவிகள் கூட கூடு கட்டத் தயங்கும்..// குருவி'யே சென்னையில காணாம போயிடிச்சு பா , நான் இங்க ஹைதை'இல தான் குருவிய பாத்தேன்.