Monday, October 3, 2022

பொன்னியின் செல்வன் - 1 - எனது பார்வை

ரொம்ப வருஷம் கழிச்சு ஒரு படத்தை எதிர்பார்த்து ரொம்ப ஆவலா இருந்தது "பொன்னியின் செல்வன்" படத்துக்குத்தான். இந்த படத்த ரொம்ப எதிர்பார்த்தததுக்கு   காரணம் கல்கியின் பொன்னியின் செல்வனை ஏற்கனவே படிச்சததுலாம் இல்ல . சொல்லப்போனா நான் ரொம்ப காலத்துக்கு முன்ன   என்னோட  முன்னொரு பதிவுல சொன்ன மாதிரி கல்கியின் "பொன்னியின் செல்வனை (PS)" விட எனக்கு ரொம்ப பிடிச்சது சாண்டில்யனின் "யவன ராணி" தான். சொல்லப்போனா என்னப் பொறுத்தவரை  PS நாவல் சில இடங்களுல சலிப்பாதான் இருக்கும். என்னோட அண்ணன் ஆனந்த் சொன்ன மாதிரி இந்த நாவல (அப்படியே ) படமா பாத்தா , அது கொஞ்சம் அசதியாதான்  இருக்கும். ஒரு சரித்திர படத்துக்குத் தேவையான போர் , போர் தந்திரம் மாதிரியான சமாச்சாரம்லாம் ரொம்ப இருக்காது. போரப் பத்தி நாவல்ல சொல்லி இருந்தாலும் கல்கி, சாண்டில்யன் மாதிரி  அத ரொம்ப விவரிச்சுருக்க மாட்டார். என் தம்பி மது சொன்ன மாதிரி , வந்தியத்தேவன் PS ன் முக்கிய கதாபாத்திரங்களை எல்லாம் எதேச்சயாத்தான் சந்திப்பான் அல்லது அந்த சந்தர்ப்பங்கள் ரொம்ப எதேச்சயாத்தான் நடக்கும் . அது அவன் கடம்பூர் சம்புவரையர்  மாளிகைக்கு போகணும்னு தீர்மானிக்கிறதுலருந்து ,  நந்தினி, சேந்தன் அமுதனை சந்திக்கிறத்துலருந்து கடைசிவரைக்கும் பெரும்பாலான சம்பவங்கள் எதேச்சயாதான் நடக்கும். ஒரு மிகச் சிறந்த சரித்திர நாவல்ல இதெல்லாம் கொஞ்சம் அயர்ச்சியா இருக்கும்.


நல்ல பொருட்செலவில் எடுத்தால் PS ஒரு நல்ல webseries  ஆ இருக்குங்கிறதுதான் என்னோட எண்ணமா இருந்துச்சு . So , இந்த அளவுக்கு முன் எண்ணங்கள் இருந்ததால , அந்த சவால்களை எப்படி சரி செஞ்சுருப்பாங்கங்குறத தெரிஞ்சுக்கணும்னு  இந்தப் படத்து மேல எதிர்பார்ப்பு கொஞ்சம் அதிகமாகவே இருந்துச்சு. 

எல்லாத்துக்கும் மேல தமிழ்ல ரொம்ப வருசத்துக்கு அப்புறம் ஒரு உண்மையான வரலாற்றுப் படம் . அந்தப் படத்துல அந்த காலத்து தமிழகத்தை எப்படி காட்டி இருப்பாங்கங்குறத பாக்கணும்னு ரொம்ப ஆசை ( பாகுபலிலாம் எல்லாம் ரொம்ப மிகைப்படுத்தப்பட்டதா இருக்கும் . இந்த விஷயத்துல மணிரத்னம் மேல எனக்கு ரொம்ப நம்பிக்கை அதிகம் . மணிரத்னம் எடுத்தா அது நிச்சயமா எதார்த்தத்துக்குப் பக்கத்துலதான் இருக்கும்னு எனக்கு நம்பிக்கை இருந்துச்சு ) . 

சரி ரொம்ப பெரிய முன்னுரை சொல்லிட்டேன்  . போதும். 

படத்துக்குப் போறதுக்கு வித்யாதான் எனக்கு டிக்கெட் புக் பண்ணது. நண்பர்கள் ரெண்டு பேரோட படம் வெளியான முதல் நாளே படத்துக்குப் போய்ட்டேன் . படம் ஆரம்பம் சிறப்பாவே இருந்துச்சு . விக்ரம் ரகளையா  அறிமுகம் ஆவாரு .  நேரடியாவே போர்க்களத்துல அறிமுகம் இருக்கும் . அதுல இருந்தே  படம் நன்றாகவே செல்லும்.  இந்தப் படத்த நான் பாக்கணும்னு நெனச்சதுக்கு இன்னொரு முக்கிய காரணம் நடிகர்கள் தேர்வு. எனக்குத் தெரிஞ்சு இந்த நடிகர்களை விட வேற யாரும் சிறப்பா இருந்துருப்பாங்கங்குனு நான் நினைக்கல . படம் பாக்குறதுக்கு முன்னயே எனக்கு கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, த்ரிஷா , ஜெயராம் தேர்வில் ரொம்ப நம்பிக்கை இருந்துச்சு . அது கொஞ்சம் கூட பொய்க்கல .  மூர்க்கத்தனத்துடனும் , அமைதியற்றும் காணப்படும்  ஆதித்ய கரிகாலனா விக்ரம் மிகச்சிறப்பா நடிச்சிருப்பார்.

நாவலோட  ஒப்பிடும்போது , விக்ரமின் ( ஆதித்ய கரிகாலனின்) கதாப்பாத்திரத்தின் விகிதாச்சாரம் படத்துல அதிகமாகவே இருக்கும். ஒரு நாவல அதுவும் ஒரு வரலாற்று நாவலை படமா எடுக்கும் போது , முக்கியமா பாகுபலி மாதிரி action தூக்கலா இருக்குற படத்துக்கு பின்னாடி வரும்போது போர்க்களத்த காட்டாம இருக்க முடியாது. நாவல்ல போர் அல்லது போர் பற்றிய குறிப்புகள்  இருக்கும் , ஆனா போர்க்களம் இருக்காது. படத்துல போர்க்களம் இருக்கும். நாவல்ல , ஒவ்வொரு கதாப்பாத்திரமும் , மற்ற கதாப்பாத்திரங்கள புகழ்ந்தோ, இகழ்ந்தோ சொல்லிக்கிட்டே இருப்பாங்க . அதேமாதிரி படத்துல காட்டமுடியாது. அது ரொம்ப போர் ஆயிடும். அதனால ஆதித்ய கரிகாலனின் வீரத்தை(மூர்க்கத்தனத்தையும்) காட்ட, நாவலில் விவரிக்காத  இந்தப் போர்க்களங்கள் அவசியம். மணிரத்னம் அத சிறப்பா செய்திருப்பார். 

வந்தியத்தேவனா கார்த்தியின் தேர்வு இயற்கையானது . அவரோட பல பேட்டில பாத்தாலே அவரோட அந்த துள்ளல் தெரியும். ( நான் விரும்பிப் பாக்குறவங்களோட பேட்டில கார்த்தியோட பேட்டிகளும் உண்டு. அவ்வளவு இயல்பா , எதார்த்தமா, பந்தா இல்லாம இருக்கும் ). வம்புல இலகுவா மாட்டிக்கிற, பொண்ணுங்கள பாத்தா வழியுற, பயமறியாத வந்தியத்தேவனுக்கு கார்த்திய விட்டா வேற யாரும் இல்ல . chance ஏ இல்ல செமயா நடிச்சிருப்பார். 

அடுத்து த்ரிஷா , ஐஸ்வர்யா ராய் . நான் முன்னயே சொன்ன மாதிரி த்ரிஷாவைத் தவிர்த்து வேற யாரையும் குந்தவை கதாப்பாத்திரத்துல யோசிக்க முடியல. அவ்வளவு மிடுக்கா , கம்பீரமா பழுவேட்டரையர்களையும் (இளவரசியா மரியாதை கலந்த கம்பீரத்துடன் ) , ஆதித்ய கரிகாலனையும் (தங்கையா பாசம் கலந்த உரிமையுடனும் ), வந்தியத்தேவனையும் ( மிடுக்கும் அதே நேரத்துல காதலும் கலந்த இளவரசியா ) , சுந்தர சோழரையும் ( பட்டத்து இளவரசனான அண்ணனும், பிள்ளை போன்று வளர்த்த தம்பியும் தொலை தூரத்துல இருக்கும்போது , சுற்றிலும் சதி வேலைகள் நடக்கும்போது உடல்நலம் சரியில்லாத தன்  தந்தையான சுந்தர சோழருக்கு பக்கபலமா இருக்கும் மகளா , இளவரசியா) சிறப்பா நடிச்சுருப்பார் . ஒரு இளவரசியா செம அழகா இருப்பாங்க .

படம் பாக்குறதுக்கு முன்னாடி , ஏண்டா இதுக்கு இவரப் போட்டாங்கங்குனு நினைச்சது ஐஸ்வர்யா ராய். அம்பது வயதான ஒருத்தர் நந்தினி கதாப்பாத்திரத்தை பண்ண முடியுமான்னு தோணுச்சு. நந்தினியா அவ்வளவு இளமையும் அழகும் வேண்டியிருக்கும் . ஆனா ஐஸ்வர்யா ராய் , அவ்வளவு அழகா , மிடுக்கா , தன்னுடைய உண்மையான எண்ணங்களை மறைத்து , மற்றவர்களை தன் கைக்குள் போட்டு காரியங்களை நிறைவேற்றுவரா சிறப்பா நடிச்சிருப்பார் . என்னுடைய கணிப்பு இவர் விசயத்துல தப்பானதுல எனக்கு மகிழ்ச்சியே. குந்தவை, நந்தினி கதாப்பாத்திரங்களின் அழுத்தத்தை இவர்கள் இருவரைத் தவிர வேறு யாரும் செய்துருக்க முடியுமான்னு தெரியல. 

ஜெயம் ரவி - எனக்குத் தெரிஞ்சு தமிழ் சினிமால ரொம்ப குறைத்து மதிப்பிடப்படுற நடிகர்கள்ல ரவியும் ஒருத்தர். அவரது நடிப்பும் , பொன்னியின் செல்வனா கம்பீரமா அதே நேரத்துல மக்களுடன் நெருங்கிப் பழகும் அடக்கம் பொருந்தியவராவும் நல்லா நடிச்சிருப்பார். 

வந்தியதேவன் மாதிரி நம்பிக்கு இயற்கையான தேர்வு ஜெயராம். நம்பிக்கு வேண்டிய அத்தனை பொருத்தங்களும் கொண்டவரா இருப்பார் . நான் குறைத்து நினைத்து , அதை தவறு என்று மாற்றிய மற்றொரு கதாப்பாத்திரத் தேர்வு சரத்குமார். பூங்குழலிக்கு , இளமையும் , பெரிதும் அறியாத முகமாத்தான் இருக்கணும்னு நான் நினைச்சேன். அதனால கீர்த்தி சுரேஷைவிட பூங்குழலிக்கு பொருத்தமான தேர்வு ஐஸ்வர்யா லக்ஷ்மிதான். ஜெயமோகன் ஒரு பேட்டில , மணிரத்தினத்துக்குப் பூங்குழலி கதாப்பாத்திரத்துல மேல ஒரு obsession னு சொல்லி இருந்தார் . சொல்லப்போனா , PS ஐ இரண்டு பாகங்களா எடுக்குறத்துக்கு பூங்குழலிதான் காரணம்னு சொன்னார் ( ஓரே படமா எடுக்க இருந்தபோது அந்தப்படத்துல பூங்குழலி கிடையாது). அப்படிப்பட்டவர்க்கான அந்த அருமையான பாட்ட editing ல தூக்கி இருக்க வேண்டாம் :(. 


படத்துல நான் ரொம்ப ரசிச்சது இசையும் , நடனமும் . background music superb . சான்ஸே இல்ல . ஏ .ஆர் . ரஹ்மான் , ஏ .ஆர் . ரஹ்மான் தான். அதேமாதிரி நடனம் . அதுவும் அந்த தேவராள ஆட்டமும், குந்தவையும் வந்தியத்தேவனும் சந்திக்கிற போது வர்ற அந்த பாட்டு நடனமும் , செம. பிருந்தா , superb .  

இந்த மாதிரி சரித்திர படத்துக்கு , அதுவும் மணிரத்னம் எதிர்பார்க்கிற மாதிரி உண்மைக்கு நெருக்கமா இருக்குறதுக்கு, மணிரத்தினத்தின்  இயல்பான தேர்வா அமையுறது தோட்டாதரணியா மட்டும்தான் இருக்கும். ஒரு படத்தோட பிரம்மாண்டம் கண்ண  உறுத்தாததா இருக்கணும் , அதே நேரத்துல இயல்பாவும்  இருக்கணும் . settings லாம் அருமையா இருக்கு. நான் எதிர்பார்த்த அதே தமிழக்கத்த கண்ணு முன்னாடி கொண்டு வந்துச்சு. 

இந்த படத்துல எனக்கு பிடிச்ச காட்சிகள்னா , அவை  - ஓடுற யானைல பொன்னியின் செல்வனும் , பூங்குழலியும் போறது ( யானைப்பாகனா இல்லாத யாருக்கும் இது ரொம்ப கஷ்டமும் பயமும் தரக்கூடியது. அதுவும் இது கொஞ்சம் long shot -ஆ வேற இருக்கும்),  நந்தினி மற்றும் குந்தவை சந்திப்பு , வந்தியத்தேவன் பெண்களிடம் வழியிறது ,  

இப்படிப்பட்ட அருமையான படத்துக்கு கலவையான விமர்சனம் வர்றதுக்கு  காரணமா நான் நினைக்கிறது என்னனா , இந்தப் படத்த பாக்க வர்றவங்க ஒன்னு நாவல படிச்சவங்க ,இல்ல நாவல படிக்காதவங்க. படிச்சவங்கள்ல நிறைய பேருக்கு நாவல அப்படியே எடுக்கணும் , இப்படிப்பட்டவங்களுக்கு படம் நாவலுல இருந்து கொஞ்சம் மாறி இருந்தாலோ அல்லது  தங்களுக்கு பிடிச்ச கதாப்பாத்திரம் இல்லனாலோ அல்லது அதுக்கான முக்கியத்துவம் கொஞ்சம் குறஞ்சாலும் ரொம்ப ஏமாற்றமா இருக்கு .  

நாவல்ல படிக்காதவங்கள்ல  நிறைய பேருக்கு, பாகுபலி மாதிரி படம் இருக்கணும்னு எதிர்பார்ப்பு. 

பொன்னியின் செல்வன் மாதிரி ஒரு பெரிய நாவல்ல 5 - 6 மணிநேர படமா எடுக்குறது ரொம்ப கஷ்டம். நாவல்ல மொத்தம் 55 கதாபாத்திரம் அதுலயும் 28 முக்கியமானது, அதுலயும் 18 ரொம்ப ரொம்ப முக்கியமான கதாப்பாத்திரங்கள் . அத்தன கதாப்பாத்திரங்களையுமோ அல்லது அவர்களுக்கான அத்தனை முக்கியத்துவங்களையுமோ அப்படியே படத்துல கொண்டு வர்றது ரொம்ப கஷ்டம் . அப்படி கொண்டுவந்தா அது படமா இருக்காது . அங்கதான் இந்த திரைக்கதை வேளை வருது. நாவல்ல ஒவ்வொரு சம்பவங்களையும் ரொம்ப விளக்கிச் சொல்ல முடியும். ஆனா படத்துல ஒவ்வொரு சம்பவமும் ஒரு dot dot -ஆ தான் இருக்கும் . அதே நேரத்துல படத்தின் நீளம் கருதி பல சம்பவங்களையும் , கதாபாத்திரங்களையும் நீக்கும்போது , இந்த dots ஐ இணைக்கிறது இன்னும் கஷ்டம் .  அதையும் தாண்டி இந்த dots ஐ இணைக்குறதுலதான்  திரைக்கதையாசிரியரின் (யர்களின்) திறமை தெரியும், அதுலதான் ஒரு படத்தின் வெற்றியே இருக்கு . இங்கதான் அவர்களோட improvisation வருது. improvisation -குறது ஒரு கலைஞரின் உரிமை. அந்த உரிமையைப் பயன்படுத்தி இந்தப் படத்தின்  இயக்குனரும்(மணிரத்னம்)  , திரைக்கதாசிரியர்களும்(மணிரத்னம், ஜெயமோகன் , குமரவேல் ) சிறப்பா செஞ்சுருதுக்குறதாவே நான் நினைக்கிறேன் . இந்த improvisation ல நான் ரொம்ப முக்கியமா பாக்குறது , ஒரு சிறிய விஷயம் தான். நாவல்ல நான் ஏற்கனவே சொன்ன மாதிரி , வந்தியத்தேவனுக்கு நடக்குறதுலாம் எதேச்சயாத்தான் நடக்கும். ஆனா படத்துல ஆரம்பத்துலயே, ஆதித்ய கரிகாலன் சம்புவரையர் மாளிகையில் என்ன நடக்கபோதுன்னு அறிந்தேதான் வந்தியத்தேவனை கடம்பூருக்கு அனுப்புவார். இது ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் அடித்தது மாதிரி. படத்தில் நடக்கும் அனைத்து சம்பவங்களும் எதேச்சை அல்ல , அதே நேரம் தங்களை சுற்றி என்ன நடக்கிறது என்பதை அறியாத அளவிற்கு அரசன்(இளவரசன்) முட்டாள் அல்ல . 

 எனக்கு ரொம்ப நாளா ஒரு கதை எப்படி திரைக்கதையா உருவெடுக்குதுனு தெரிஞ்சுக்கணும்னு ஆசை. அத இந்தப் படத்துலதான் முழுமையா தெரிஞ்சுக்க முடிஞ்சது (நாவல் படிக்காதவங்க , படம் பாத்ததுக்கு அப்புறமாகூட நாவல் படிங்க, நிச்சயமா அது ஒரு வேறு பரிமாணத்தைக் கொடுக்கும் ) . 

அதேமாதிரி , பாகுபலி முற்றிலும் கற்பனையான கதை. அதனால பாகுபலிய  எப்படிப்பட்டதாவும் எடுக்கலாம். படைப்பாளிக்கு இங்கு முழு சுதந்திரம் இருக்கு.  அதனாலதான் அத மிகைப்படுத்தப்பட்ட பிரம்மாண்டமாவும்  எடுக்க வழி கொடுத்தது. ஆனா PS க்கு கல்கி எழுதிய மூலம் இருக்கு, கல்கிக்கு சோழர் வரலாறே மூலமா இருக்கு . அதனால கல்கியோ அல்லது இந்தப் படத்தின் இயக்குனரோ அந்த மூலத்தை விட்டு ரொம்ப விலக முடியாது. இயக்குனரும் விலகல. 

அதனால நாவலைப் படித்தவர்கள் , படத்துல என்ன இல்லனு பாக்காம, படத்துல என்ன இருக்குன்னு பாருங்க . நாவலைப் படிக்காதவங்க உண்மைக்கு நெருக்கமான ஒரு வரலாற்றுப் படம் எப்படி இருக்கும்னு பாருங்க. 

ஒரு சிறந்த வரலாற்றுப் திரைப்படத்தை கொடுத்ததற்காக மணிரத்தினத்திற்கு மிக்க நன்றி. 

P.S : படத்தோட முக்கிய குறையா இருக்குறது . ஒளிப்பதிவு . ஒரு போரின் நடுவுக்குள்ள கேமராவ கொண்டு போய் காட்டணும்னு நினைச்சதுலாம் சரிதான்.ஆனா கேமரா jerk-வோட இருக்குறதுலாம் ஏத்துக்கொள்ளவே முடியாது.  நிறைய நேரங்கள்ல சண்டை/போர்/நகரும் காட்சிகள்லாம் எப்படா முடியும்னு இருந்துச்சு. Sorry ரவி வர்மன் .