Thursday, July 29, 2010

கடல் புறா - 5

கடல் மோகினியிலிருந்து கிளம்பும் நம் படைத்தலைவன் காஞ்சனா தேவியைப் பார்க்க கடாரம் செல்வான். கடந்த காலங்களில் இளைய பல்லவன் காஞ்சனா தேவியையும் குண வர்மனையும் கடாரத்தில் கொண்டு சென்று விட்டு விட்டு உடனே திரும்பி விடுவான். இப்படியாக ஆறு மாதங்கள் ஓடி விடும். அதற்கு அடுத்து அவன் காஞ்சனா தேவியைப் பார்க்க இப்பொழுதுதான் கடாரம் செல்கிறான் . அவன் கடாரம் செல்லும் வேளையில் அங்கு ஒரு சோழ படைத் தளபதி வந்திருப்பார் . அவர் யாரென்று இளைய பல்லவனுக்குத் தெரியாது. அவன் துறைமுகத்தை அடைந்த வேளையில் அவனை அழைத்து வரச் சொல்லி முத்திரை மோதிரம் ஒன்று வரும். உடனே அவரைக் காண இளைய பல்லவன் செல்வான் . சென்றால் அவனுக்கு அங்கு அதிர்ச்சி காத்திருக்கும் . ஏனென்றால் வந்திருப்பது அநபாயச் சோழன். அநபாயச் சோழனை இளைய பல்லவன் அங்கு எதிர் பார்த்திருக்கமாட்டான்.

உண்மையில் குலோத்துங்கச் சோழன் இக்காலகட்டத்தில் சீனா உட்பட தென்கிழக்கு நாடுகளுக்கு சென்றதாக கல்வெட்டுகள் கூறுகின்றன . ஆகையாலே சாண்டில்யன் அநபாயச் சோழனை இவ்விடத்திற்கு வரவழைத்திருப்பார்.

வந்த அநபாயச் சோழன், வீர ராஜேந்திரச் சோழத் தேவரிடமிருந்து ஓலையுடன் வந்திருப்பான். அவ்வோலையில் ஸ்ரீவிஜய பேரரசில் ஏற்பட்டிருக்கும் அரியணைப் பிரச்சினையை தீர்க்கவும், கலிங்க மரக்கலங்களை அழிக்கும் கொள்ளைக்காரனான இளைய பல்லவனை தகுந்த நேரத்தில் சிறை பிடிக்கவும் ஆணை இருக்கும். இன்று வரை கலிங்கத்துடனும், ஸ்ரீவிஜயத்துடனும் சோழத்திற்கு நேரடி பகை இல்லையென்றும் அதனால் தென் கலிங்க பீமனும் ஸ்ரீவிஜய ஜெயவர்மனும் வீர ராஜேந்திரச் சோழரிடம் முறை இட்டிருப்பார்கள் என்று சாண்டில்யன் கூறுவார்.

இங்கு ஒரு விஷயம் புரியவில்லை கலிங்கத்திற்கும் ஸ்ரீவிஜயத்திற்கும் சோழர்களுடன் நேரடி பகை இல்லை என்று கூறும்போது, பீமன் எப்படி அநபாயச் சோழனையும், சோழர்களிடமிருந்து ஓலையுடன் தூதுவனாக வந்த இளைய பல்லவனையும் சிறை பிடித்தான். கலிங்க கப்பல்கள் எப்படி சோழ மரக்கலங்களை சண்டையிட்டு அழித்தன . இவற்றை சோழம் எப்படி ஆட்சேபிக்காமல் போனது.இந்த நிலையில் எப்படி கலிங்கத்திற்கும் சோழத்திற்கும் பகை இல்லையென்று கூறமுடியும்.

இந்நிலையில் நம் படைத்தலைவனை, எதற்கு நீ இங்கு வந்தாய் அதனால் உன்னை கைது வேண்டிய நிர்பந்தத்திற்கு என்னை ஆளாக்கிவிட்டாய் என்று அநபாயச் சோழன் கடிந்து கொள்வார். பின் இளைய பல்லவனை கைது செய்து சோழர்களின் காவலில் வைப்பார் .

அன்று இரவு நம் படைத்தலைவனை அநபாயச்சோழனே தப்ப வைத்து அவனை கடல் புறாவிற்கு கொண்டு சென்று விடுவார். அவனுடன் கடாரத்தின் இளவரசி காஞ்சனா தேவியையும் அனுப்பிவிடுவார். அவர் அனுப்பிய இடம் நம் மஞ்சளழகி இருக்கும் இடமான அக்ஷய முனை. அக்ஷய முனைக்குச் செல்லும் முடிவால் நம் படைத்தலைவன் இருதலைக் கொள்ளி எறும்பாகத் துடிப்பான். காஞ்சனா தேவியையும் வைத்துக்கொண்டு எப்படி மஞ்சளழகியைச் சந்திப்பது என்று நம் படைத்தலைவன் துடிப்பான். ஆனால் அநபாயச் சோழர் இளைய பல்லவனை அக்ஷய முனைக்குக் கொண்டு செல்லவேண்டும் என்று கண்டிப்பாக உத்தரவிட்டிருப்பார். அக்ஷய முனை செல்வதைத் தவிர்ப்பதற்காக நம் படைத் தலைவன் திசைகாட்டியின் முள்ளை வளைத்துவிடுவான். பின் அமீரைக் கூப்பிட்டு நீங்கள் தவறான வழியில் செல்வதாகக் கூறி , கப்பலை ஸ்ரீவிஜயப் பேரரசின் கோட்டையான மலையூருக்குக் கொண்டு சென்றுவிடுவான். நம் படைத்தலைவன்அநபாயச் சோழனின் வாக்கை மீறி மலையூர் செல்லும்போதே நமக்கு எதோ விபரீதமாக நடக்கப் போகிறது என்று தோன்றும்.

மலையூரின் கடற்கரையில் நம் படைத்தலைவனுக்கும் விஜய பேரரசின் கடற்படைத்தளபதி ஜெய வர்மனுக்கும் இடையே மிகப் பயங்கரமான போர் நடக்கும் . இந்த இடத்தில் சாண்டில்யன் போரை மிக நன்றாக் விவரித்திருப்பார் . இப்போரில் இளைய பல்லவன் ஜெய வர்மனை வீழ்த்தி அவனுடைய இரண்டு மரக்கலங்களை சிறைபிடிப்பான். அவற்றுடன் மலையூர் நகரை அடைவான். இங்கு ஒரு தந்திரம் நிறைவேற்றப்படும். இளைய பல்லவன் போரில் ஜெய வர்மன் வென்றதாக ஒரு சூழ்நிலையை ஏற்படுத்துவான். அதனடிப்படையில் இளைய பல்லவன் மரக் கலங்கள் அனைத்தும் ஸ்ரீ விஜய பேரரசின் கொடியைத்தாங்கிச் செல்லும் . இதன் மூலம் கோட்டைத் தலைவனை கடல் புறாவிற்கு வரவழைத்து அவனைக் கைது செய்து மலையூர்க் கோட்டையைக் கைப்பற்றுவதுதான் இளைய பல்லவனின் நோக்கம். இதற்காக ஜெயவர்மனிடமிருந்து கடல் புறா வீழ்ந்த்ததாக ஓலை வாங்கிகொண்டு இளைய பல்லவனே கோட்டைக் காவலனை நாடி செல்லுவான் . அங்கு அவனுக்கு பேரதிர்ச்சி காத்திருக்கும் .

இளைய பல்லவன யாரைக் காணக் கூடாது என்று இவ்வளவு தூரம் அமீரையும் மற்றவர்களையும் ஏமாற்றி இங்கு கூட்டி வந்தானோ அந்த மஞ்சளழகியே அங்கு கோட்டைக் காவலனாக இருப்பாள். இதை சற்றும் இளைய பல்லவன் எதிர்பார்த்திருக்கமாட்டான். அவன் அதிரிச்சிக்கும் மேலாக மஞ்சளழகி அவனை வரவேற்பதற்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருப்பாள். அவன் வருவதை முன் கூட்டியே ஊகித்து மரக்கலங்களை அவனை எதிர்பதற்கு ஏற்ப நிறுத்தி இருப்பாள். மேலும் மலையூர் துறைமுகத்தில் நிற்கும் அவன் மரக்கலங்களை நோக்கி பாறை மற்றும் ஏறி அம்புகளை வீசும் கருவிகளை நிறுவி இருப்பாள்.

இளைய பல்லவன் அக்ஷய முனையை நீங்கிய காலத்தில் ஜெயவர்மன் அக்ஷய முனையை அடைந்து மஞ்சளழகியை தன் மகள் என அனைவர் முன்னும் அறிவிப்பான் . உண்மையில் மஞ்சளழகி ஜெயவர்மனின் மகள் தான் . மஞ்சளழகி ஜெயவர்மனுக்கும் அகுதாவின் தங்கைக்கும் பிறந்தவள் தான் . ஜெயவர்மன் அகுதாவின் தங்கையை கடத்தி வந்திருப்பான். அதனாலே இத்தனை நாட்களும் அவன் அதை மறைத்து வைத்திருப்பான். இப்பொழுதுதான் அதனை வெளியிடுவான். மஞ்சளழகியை தன் மகள் என அறிவித்து அவளை மலையூரைக் காக்க நியமித்திருப்பான். இருந்தபோதிலும் அவளைக் கண்காணிக்க ஒரு துணை கோட்டைத் தலைவனையும் நியமித்திருப்பான் .

இவ்வாறு இருந்த போதிலும் மஞ்சளழகி தன்னுடைய காதலால் தான் இளையபல்லவனை தப்ப வைப்பதாகவும் அதற்க்கு இளையபல்லவன் தன்னைக் கொன்று விட்டு தப்பிச் செல்லும்படியும் கூறுவாள் .

இங்கு ஏற்கனவே அக்ஷய முனையில் மஞ்சளழகி இளைய பல்லவனை தப்ப வைக்கு தன்னை விட்டுச் செல்லும்படி கூறுவதை நினைவு கூற வேண்டும். இத்தகைய காரணங்களால் பெண் ஜென்மமே காதலில் தியாகம் செய்யத்தான் பிறந்ததா என்று தோன்றும். இத்தகைய காரணங்களாலே நமக்கு காஞ்சனா தேவியை விட மஞ்சளழகி மேல் ஓர் ஈர்ப்பு ஏற்பட்டு விடும் . அவள் பாத்திரத்தின் மேல் ஒரு தீராத பிடிப்பு ஏற்பட்டுவிடும் .

இந்நிலையில் இளைய பல்லவன் அதனை மறுத்து தான் எப்படியும் மலையூர்க் கோட்டையைப் பிடிப்பதாகக் கூறி கோட்டைத் துணைத் தலைவனை தந்திரமாக கடல் புறாவிற்கு அனுப்பி அவனை கைது செய்வான். இப்படியாக மலையூர்க் கோட்டையைக் கைப்பற்றி தன் காவலில் வைப்பான். பின் மலையூரை நீங்கும் போது நம் படைத் தலைவன் அக்ஷய முனையில் மஞ்சளழகியை விட்டு விட்டுச் சென்றது போன்று இங்கும் விட்டு விட்டுச் சென்று விடுவானோ என்கிற பதற்றம் இருக்கும் . நல்ல வேலையாக நம் படைத் தலைவன் அவ்வாறு செய்யாமல் மஞ்சளழகியையும் தன்னுடன் கூட்டிச் செல்லுவான்.

மலையூரில் மஞ்சளழகியும் காஞ்சனா தேவியும் இருக்கும் போது அவர்களுக்கிடையே இளைய பல்லவனை முன்னிட்டு காதல் போர் நடக்கும் . அந்த இடங்கள் சிறப்பாகவும் சுவாரசியமாகவும் இருக்கும் . இந்த இடத்தில் இருவரும் இளைய பல்லவன் மேல் இருக்கும் காதலையும் அதன் காரணமாக அதை பங்கிட இன்னுமொருத்தி வந்துவிட்டதால் ஏற்ப்பட்ட கோவம் , வெறுப்பு , ஆற்றாமையையும் வெளிப்படுத்தும் இடங்கள் சிறப்பாக இருக்கும் . இந்த இடங்களில் நம் படைத் தலைவன் இருதலைக் கொள்ளி எறும்பாக தவிப்பதும் சுவாரசியமாகவும் சிரிப்பாகவும் இருக்கும் .

கடல் புறாவில் மஞ்சளழகியும் காஞ்சனா தேவியும் இருக்கும் போது அவர்களுக்கிடையே தேவையற்ற சண்டையைத் தவிர்க்க இளைய பல்லவன் அவர்கள் இருவரையும் தன்னுடைய இதர இரண்டு மரக்கலங்கலான மஞ்சளழகி, காஞ்சனாவில் சென்று இருக்கும் படிக் கூறுவான். அவன் கூற்றை ஒருத்தி குப்பையில் போடச் சொல்லுவாள் இன்னொருத்தி கடலில் போடச் சொல்லுவாள் . இப்படியாக இருவரும் செய்யும் சேட்டைகள் ரசிக்கும்படியாக இருக்கும் .

மீதி கதை அடுத்து.

Tuesday, July 27, 2010

கடல் புறா - 4


இப்பதிவு இதற்க்கு முந்திய பதிவான கடல் புறா -3 இன் தொடர்ச்சியே ஆகும்.

நம் தலைவன் இளைய பல்லவன் அக்ஷய முனையில் இருக்கும் காலத்தில் இணையற்ற மரக்கலமான கடல் புறாவை நிர்மாணிக்கிறான். இந்த இடத்தில் சாண்டில்யன் மரக்கலம் குறித்த பல அரிய தகவல்களை அளிக்கிறார். கடல் புறா வடிவத்தில் ஒரு புறாவின் வடிவத்தை ஒத்திருக்கிறது. இதனை இளைய பல்லவனின் உபதலைவனும் பாலூர்ப் பெருந்துறை சுங்க அதிகாரியுமான கண்டியத்தேவன் , இளைய பல்லவனின் அறிவுரைப்படி நிர்மாணிக்கிறான்.இப்படியாக கடல் புறா ஒரு இணையற்ற போர்கலமாக உதயமாகிறது. அதன் இரண்டு இறக்கைகளின் அடியில் பல போர்க்கருவிகள் மறைந்திருக்கின்றன. நம் இளைய பல்லவன் பாலூர்ப் பெருந்துறையில் சந்தித்த வீட்டுப் புறாவின் (காஞ்சனா தேவி) நினைவாக இதற்க்கு கடல் புறா என்று பெயரிடுகிறான்.

அக்ஷய முனையை நீங்கும் படைத்தலைவன், பல வர்மனுடன் கடல் மோகினி என்னும் மாநக்காவரத்தை நோக்கிச் செல்கிறான். இந்த மாநக்காவரம் இன்றைய greater Nicobar Island என்று நான் நினைக்கிறேன். அப்படிச் செல்லும் வழியில் இரண்டு கலிங்க போர்க்கலங்களுடன் போர் ஏற்படுகிறது. அப்போரில் நம் படைத்தலைவன் சிறப்பாகச் செயல்பட்டு அந்த இரண்டு மரக்கலங்களையும் சிறை பிடிக்கிறான். இங்கு எதிர்பாராத திருப்பமாக காஞ்சனா தேவியும் அவளுடைய தந்தை குணவர்மனும் அந்த மரக் காலங்களில் இருக்கிறார்கள். காஞ்சனா தேவியும் குணவர்மனும் வந்த சோழ மரக்கலங்களை இந்த கலிங்க மரக்கலங்கள் முறியடித்து காஞ்சனா தேவியையும் குண வர்மனையும் கைது செய்திருக்கும். இப்படியாக காஞ்சனா தேவியும் குண வர்மனும் இளைய பல்லவனால் மீட்கப்படுவார்கள். அவர்களுடன் சேர்ந்தே இளைய பல்லவன் மாநக்காவரத்தை நோக்கிச் செல்லுவான்.

மாநக்காவரத்தில் படைத் தலைவனுக்கு மிகப் பெரிய அதிர்ச்சி காத்திருக்கும். மாநக்காவரம் சோழர்கள் கையில் இருப்பதாகவே நினைத்து இளைய பல்லவன் செல்லுவான் . ஆனால் அதனை கலிங்க நாட்டைச் சேர்ந்த கலிங்க கடற் படைத் தளபதி ஒருவன் கைப்பற்றி இருப்பான். அவன் பெயர் கங்க தேவன். இந்த கலிங்க படைத் தளபதி ஒரு கயவன், அவனும் கொள்ளைகளில் ஈடுபட்டுக் கொண்டிருப்பான். ஆகவே நம் படைத்தலைவன் அவனிடம் தான் கடாரத்தை கொள்ளையடிக்க உதவுதாக ஆசை வார்த்தை கூறி அவனிடம் உறவு கொள்வான். அந்த கயவன் காஞ்சனா தேவி மீது காமம் கொள்வான். கடைசியில் நம் படைத்தலைவன் அவனைக் கொன்று மாநக்காவரத்தைக் கைப்பற்றுவான்.

இதில் சில புரியாத அம்சங்கள் உண்டு . கங்க தேவனிடம் சுமார் ஆயிரம் வீரர்கள் இருப்பார். ஆனால் இளைய பல்லவனிடம் ஐநூறு வீரகளே இருப்பர். ஆரம்பத்தில் இளைய பல்லவன் கங்க தேவனின் ஆட்களை கொன்று விடுவதாக மிரட்டுவான், பிறகு தன் நல்ல உள்ளத்தைக் காட்டி தான் அவர்கள் யாரையும் கொல்ல விரும்பவில்லை என்றும், வேண்டுவோர் அவனுடன் படையில் சேரலாம் என்றும் வேண்டாதோர் கலிங்கம் செல்லலாம் என்றும் கூறுவான். இப்படியாக சுமார் ஐநூறு கங்கதேவனின் ஆட்கள் இளைய பல்லவனுடன் சேருவார்கள் . இதுவரை சரி. இந்த ஆட்களில் பெரும் பகுதியினர் கலிங்க வீரர்கள் . இவர்களைக் கொண்டு கலிங்கத்தை எதிர்க்க இளைய பல்லவன் முடிவு செய்வதுதான் ஆச்சரியமாக இருக்கும் . இவர்கள் ஏன் இளைய பல்லவனுக்கு எதிராக புரட்சி செய்யவில்லை என்பது ஆச்சரியமாக இருக்கும்.

இந்த காலகட்டத்தில் இளைய பல்லவனுக்கு காஞ்சனா தேவியுடன் காதல் அதிகரிக்கும் . அத்தகைய சமயங்களில் நமக்கு மஞ்சளழகி மீது அனுதாபமே பிறக்கும்.

மீதி கதை அடுத்து .

photo courtesy : http://artzone.daz3d.com/azfiles/gallery/45/sd/jh7tp8kswlifz0br66tsdqqg2lagre-full.jpg

Monday, July 26, 2010

கதை கேளு கதை கேளு
இன்று தான் s.ராமகிருஷ்ணனின் 'தினம் ஒரு கதை' என்ற கட்டுரையை படித்தேன். அதில் அவர் இன்று எப்படி கதை சொல்லும் பழக்கம் காணாமல் போய்விட்டது என்று அங்கலாய்த்திருப்பார். ஆம் இன்று கதை சொல்லும் பழக்கமே காணாமல் போய்விட்டது. அவர் கூறிய படி பள்ளிகளில் கதை சொல்லுவதற்க்கென்றே வகுப்புகள் இருந்ததாக ஞாபகம். அதில் ஒவ்வொரு மாணவனும் கதை சொல்லுவான். அந்த வகுப்புகள் ஒழுங்காக நடந்ததா என்ற ஆச்சரியம் உண்டு.

கதை சொல்லுவது என்பது மிகச் சிறந்த கலை . அது எல்லாருக்கும் வாய்க்காது . எங்கள் அப்பா ஒரு மிகச் சிறந்த கதை சொல்லி. மின்சாரம் போன இரவுகள் எல்லாம் எங்களுக்கு மிகச் சிறந்த இரவுகள் . ஏனெனில் நிச்சயம் அந்த இரவுகளில் எங்கள் அப்பா கதை சொல்லுவார்கள். கதை கேட்பது நானும், மதுவும் மட்டுமல்லாமல் எங்கள் அக்கம் பக்கம் குடியிருக்கும் அத்தனை சிறுவர் சிறுமிகளும் கூடி விடுவர். இதனால் எனக்கும் மதுவுக்கும் பெருமையே உண்டு.

அவருடைய கதைகளில் தென்னாலி ராமன், மரியாதை ராமன், ஆயிரத்தோர் இரவுகள் , விக்கிரமாதித்தன் கதைகள், ராமாயணம், மகாபாரதக் கதைகள் என்று பல கதைகள் இருக்கும் . எங்கள் அப்பாவின் கதைக்கு சிறுவர்கள் மட்டுமல்ல பெரியவர்களும் அடிமைகள். எங்கள் மாமா அடிக்கடி சொல்வார்கள், "அத்தான் அவ்வளவு அற்புதமாக கதை சொல்லுவார்கள் . அவர் கதை சொல்லும் இரவுகளில் நாங்கள் அனைவரும் கூடி விடுவோம்" என்பார்.

கதை சொல்லுவதற்கு மிகச் சிறப்பான கற்பனா சக்தி இருக்க வேண்டும். அது எங்கள் அப்பாவிற்கு நிறையவே வாய்த்திருந்தது. அவர் கதையை எப்படியோ ஆரம்பித்து எங்கயோ சென்று முடிப்பார்கள். அது கடைசியில் மூலக் கதையிலிருந்து மிகவும் மாறுபட்டதாக இருக்கும். அதுவும் அற்புதமாகவே இருக்கும். இப்படி மாறிச் செல்லும் கதையின் ஓட்டம் முன்பே தீர்மானிக்கப்பட்டதாக இருக்காது. அந்த நேரத்திற்கு ஏற்ப அவ்வப்பொழுது எங்கள் அப்பா கதையின் ஓட்டத்தை மாற்றுவார்கள். கதையின் முடிவில் கதை கூறும் நீதி என்ன என்றொரு கேள்வி இருக்கும் . ஒவ்வொருவரும் அவரவருக்கு தெரிந்த நீதியைச் சொல்லுவோம்.

எங்கள் அப்பாவின் கைகளில் எப்பொழுதும் ஒரு ஆங்கில நாவல் இருக்கும். அவர் எப்பொழுதும் படித்துக் கொண்டே இருப்பார்கள். காலை அலுவலகத்திர்க்குச் செல்லும் வழியில் பேருந்தில், பின் அலுவலகம் விட்டு வரும் வழியில் பேருந்தில் , பின் இரவு படுக்கைக்குச் செல்லும் முன், இப்படி எங்கும் புத்தகமும் கையுமாக இருப்பார்கள். நாங்கள் கொஞ்சம் வயது வந்த பிறகு ஆங்கில நாவல்களை மொழி பெயர்த்து கூற ஆரம்பித்தார்கள். இப்படியாக நானும் மதுவும் அந்த ஆங்கில நாவல்களின் பெயர் கூட அறியாமல் அவற்றிக்கு அறிமுகம் ஆனோம். இப்படியாக சிட்னி செல்டன்லாம் அறிமுகம் ஆனார்கள்.

கதை கேட்பது என்பது ஒரு மிகச் சிறந்த அனுபவம். அந்த அனுபவம் அனைவருக்கும் வாய்ப்பதில்லை. சிறுவர்கள் என்றும் கதை கேட்பதற்கு தயாராகவே உள்ளார்கள். ஆனால் இக்காலங்களில் கதை சொல்லத்தான் ஆளில்லை. பெரியவர்கள் தொலைக்காட்சிக்கு அடிமையாகிவிட்ட இந்நாளில் சிறுவர்கள் என்ன செய்வார்கள்?.

கதை கேட்பது கேள்வி ஞானத்தை வளர்க்கிறது. அது இப்பொழுது யாருக்கும் தெரிவதில்லை. தெரிந்தாலும் யாரும் கதை சொல்லத் தயாரில்லை.

நான் சிறுவனாக இருந்த காலத்தில் வாரந்தோறும் வரும் சிறுவர் மலருக்கு நானும் மதுவும் அடித்துக் கொள்வோம். எங்கள் அப்பா எங்களுக்கு அறிமுகப்படுத்திய ஆயிரத்தோர் இரவுகள், ராமாயணம் , மகாபாரதம் ஆகியவற்றை தனியாக படித்திருக்கிறேன். வாசிப்பு அனுபவத்திலும் , கேள்வி ஞானத்திலும் வந்த ஈடுபாடே எனக்கு வரலாற்றிலும் இதிகாசங்களிலும் ஈடுபாடை ஏற்ப்படுத்தியது.
அதுவே தூர்தர்ஷனில் ஒளிபரப்பாகிய இதிகாச வரலாற்று தொடர்களின் மீது ஆர்வத்தை ஏற்படுத்தியது. எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது. அப்பொழுது நானும் மதுவும் பள்ளிவாசல் மேல்நிலைப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தோம். அது ஒரு முஸ்லிம் பள்ளியானதால் அங்கு வியாழன், வெள்ளி அன்றுதான் விடுமுறை. சனி , ஞாயிற்றுக் கிழமைகளில் பள்ளிக்கூடம் . அப்பொழுது சன் டிவியில் மகாபாரதத்தை ஞாயிற்றுக் கிழமைகளில் திரும்பவும் ஒளிபரப்பினார்கள். நான் வார வாரம் மகாபாரதம் பார்பதற்கு ஞாயிற்றுக் கிழமை காலை வேளையில் விடுமுறை போட்டால் என்ன என்று வீட்டில் சண்டை எல்லாம் போட்டிருக்கிறேன்.

சிறு வயதில் நானாக கதை எழுத முனைந்த்திருக்கிறேன் . அது பெரும்பாலும் எங்கள் அப்பா கூறிய கதையின் மறு வடிவமாக இருக்கும். அதிலும் நான் தோற்றே இருக்கிறேன். அது போல் நான் படித்த கதைகளை என்னைச் சுற்றி உள்ள பசங்களுக்கு சொல்ல முற்பட்டிருக்கிறேன். கதை எவ்வளவு நீளமாக இருந்தாலும் என்னால் ஒரு 15 நிமிடத்திற்கு மேல் கதையை நீட்டிக்க முடிந்ததில்லை . அப்பொழுதுதான் தெரிந்தது கதை சொல்லுதல் என்பது எவ்வளவு சிறந்த கலை. அது அனைவருக்கும் வாய்ப்பதில்லை என்று.

இப்பொழுதுதான் என் பிள்ளைகளும் இன்றைய நாகரிக உலகத்துடன் சேர்ந்து கதை கேட்காமல் போய்விடுவார்களோ என்ற பயம் ஏற்ப்படுகிறது. என்னாலும் சிறப்பாக கதை சொல்லத் தெரியாது. என் பிள்ளைகளுக்கு என்னால் கதை சொல்ல முடியாமல் போகப் போகிறதே என்ற எண்ணம் என்னை வாட்டுகிறது . இந்த நேரத்தில்தான் எங்கள் அப்பா எங்களுடன் இந்த உலகத்தில் இல்லாத வேதனை எனக்குப் புரிகிறது. நானும் மதுவும் எங்கள் அப்பாவை இழந்து வாடும் வேதனையை விட என் பிள்ளைகள் ஒரு மிகச் சிறந்த தாத்தாவை இழந்துவிட்டார்களே என்ற வேதனையே என்னை அதிகம் வாட்டுகிறது . எங்கள் அப்பா இந்நேரம் இந்த உலகில் இருந்தால் அவர் மிகச் சிறந்த மகனாகவும், மிகச் சிறந்த கணவனாகவும், மிகச் சிறந்த தகப்பனாகவும் இருப்பதோடல்லாமல் ஒரு மிகச் சிறந்த தாத்தாவாகவும் இருந்திருப்பார். எங்கள் பிள்ளைகள் அதற்க்கு குடுத்து வைக்காமல் போய்விட்டார்கள் .

We miss you dad. May rest your soul in peace.

photo courtesy : http://www.shannonthunderbird.com/nativepic.gif

கடல் புறா - 3

இப்பதிவு இதற்க்கு முந்திய பதிவான கடல் புறா -2 இன் தொடர்ச்சியே ஆகும்.

கடல் புறாவின் இரண்டாம் பாகத்தை இளைய பல்லவனும், மஞ்சளழகியும், அக்ஷய முனையும், பல வர்மனுமே ஆக்கிரமிக்கிறார்கள். மஞ்சளழகி அசாதாரண அழகியாக இருக்கிறாள். இளைய பல்லவன் அக்ஷய முனையில் சித்திரா பௌர்ணமி அன்று நடக்கும் ஆடல் விழாவில் வம்படியாக கலந்து கொள்கிறான் . அவன் அந்த விழாவில் கலந்து கொள்வதை நினைத்து மஞ்சளழகியும், பலவர்மனும் அச்சம் கொள்கிறார்கள். ஏனெனில் ஒவ்வொரு வருட சித்திரா பௌர்ணமி விழாவில் எப்படியும் சில கொலைகள் நடக்கும். அந்த விழாவில் காட்டுமிராண்டிகளாக விளங்கும் அந்த ஊர் பழங்குடிகளான சூளு இன மக்களின் தலைவர்களும் , பதக் சாதியினரின் தலைவர்களும் கலந்து கொள்வார்கள் . அத்தகைய விழாவில் புதியவனான இளைய பல்லவனும் கலந்து கொண்டால் அவன் உயிருக்கு பங்கம் ஏற்படுமே என்று எண்ணி மஞ்சளழகியும், பலவர்மனும் கவலை கொள்வார்கள். இருவரின் கவலைக்கும் வெவ்வேறு காரணங்கள் உண்டு. நம் இளைய பல்லவன் பலவர்மனுக்கும் மஞ்சளழகிக்கும் அறிமுகமாகும்போது தன் உயிருக்கு ஏதேனும் பங்கம் நேர்ந்தால் அதற்கு அகுதா பழி வாங்குவார் என்றே அறிமுகம் ஆவான். ஆக இளைய பல்லவனின் உயிருக்கு பங்கம் நேர்ந்தால் அகுதாவால் தீங்கு ஏற்படும் என்று பலவர்மனும், மஞ்சளழகியும் பயந்தாலும் மஞ்சளழகிக்கு கூடுதல் காரணமும் உண்டு, அது இளைய பல்லவன் மீது கண்டதும் ஏற்பட்ட காதல்.


அந்த ஆடல் விழாவில் மஞ்சழகி சிறப்பாக நடனம் புரிகிறாள். அவள் நடனம் முடிந்ததும் அவர்கள் பயந்த படியே அன்று இரவு ஒரு மரணம் நிகழ்கிறது. அதிலும் அந்த கொலைக்கு இளைய பல்லவனே காரணம் ஆகிறான். இறந்தவன் பதக் இனத்தின் தலைவன். இப்படியாக கொலை நடந்ததும் பலவர்மன், பதக் மற்றும் சூளு இன மக்களால் ஏற்படப் போகும் தீங்கை எண்ணி பயப்படுகிறான்.
ஆக இந்த கொலைக்கு பரிகாரமாக அக்ஷய முனையை சூளு மற்றும் பதக் இனத்தவரிடம் இருந்து காப்பதாக இளைய பல்லவன் உறுதி ஏற்கிறான்.

அக்ஷயமுனைக் கோட்டையில் கொள்ளைகாரர்களும்
, அவ்வூர் மக்களும் வாழ்கிறார்கள். கோட்டைக்கு பின்புறம் உள்ள காட்டுப் பகுதியில் காட்டுமிராண்டிகளான சூளு இன மக்களும் பதக் சாதியினரும் வாழ்கிறார்கள். பலவர்மன் தன் மகள் மஞ்சளழகி , இளைய பல்லவன் மீது காதல் வயப்பட்டதும் அவளை எப்படியாவது இளைய பல்லவனுக்கு மணமுடித்து விட வேண்டும் அல்லது அகுதாவால் தீங்கு ஏற்ப்படாவண்ணம் அவனை தீர்த்து விட வேண்டும் என்று எண்ணுகிறான். இப்படி செய்யும் இரண்டு செயகளிலும் அவனுக்கு லாபமே. இளைய பல்லவனை மஞ்சளழகிக்கு மணம் முடித்து விட்டால் சோழர் படைத்தலைவனை சோழர்களுக்கு எதிராகவே திருப்பி விடமுடியும். மேலும் அக்ஷய முனைக்கு ஒரு மிகச் சிறந்த கோட்டைக் காவலன் கிடைப்பான்.

இளைய பல்லவனை கட்டாயம் மஞ்சளழகிக்கு திருமணம் முடித்து வைப்பதற்கு ஏதுவாக அவர்கள் தனிமையில் காதலில் ஆழ்ந்திருக்கும்போது, அவர்கள் தனிமையில் இருந்ததற்கு சாட்ச்சியைத் தயாரிப்பான். இதன் மூலம் இளைய பல்லவன் மஞ்சளழகியை கட்டாயம் திருமணம் செய்து கொள்ளவேண்டும் இல்லையேல் உயிரிழக்க வேண்டும் . ஏனெனில் அக்ஷய முனை வழக்கப் படி ஒரு ஆணும் பெண்ணும் தனிமையில் சந்தித்து கொண்டால் அந்த ஆண் கட்டாயம் அந்தப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் அல்லது உயிரிழக்க வேண்டும். இந்த வழக்கத்திற்கு அகுதாவும் கட்டுப்படுவான். ஆக நம் படைத்தலைவன் மஞ்சளழகியை கட்டாயம் திருமணம் செய்துகொள்ளவேண்டும் அல்லது உயிரிழக்க வேண்டும் . இளைய பல்லவன் இறந்தால் சூளுக்களின் ஆதரவை திரும்ப பெற முடியும் . இப்படியாக இரண்டு வழியிலும் பலவர்மனுக்கு லாபம் தான் .

நம் படைத் தலைவன் அக்ஷய முனை இறங்கிய நாளன்றே தன் பெரும் பொருள்களில் பலவற்றை கொள்ளைக்காரர்களுக்கு வாரி இறைத்து அவர்களை தன் பக்கம் இழுத்து விடுவான். பிறகு கோட்டைக் காவலை தானே ஏற்று சூளுக்கள் மற்றும் பதக் சாதியினரின் அனைத்து தாக்குதல்களையும் முறியடிக்க ஏற்பாடு செய்வான். பலவர்மன் தன் பங்குக்கு சூளுக்களையும் பதக் சாதியினரையும் தூண்டி விட்டு இளைய பல்லவன் பக்கம் சேர்ந்த தன் மக்களை பழி வாங்க நினைப்பான். இப்படியாக நடக்கும் நிகழ்ச்சிகளில் இளைய பல்லவன் அனைத்து சதி திட்டங்களையும் முறியடித்து அக்ஷய முனையைக் காப்பான். அக்ஷய முனையைக் காக்கும் கடைசி கட்டத்தில் பலவர்மனை கைது செய்து தன்னுடன் கொண்டு செல்வான் . அக்ஷய முனையின் ஆட்ச்சியை மஞ்சளழகியிடம் ஒப்படைப்பான்.

பொதுவாக இந்த நூலில் சாண்டில்யன் ஒவ்வொரு அத்தியாயத்திற்கு வைக்கும் தலைப்பின் அர்த்தத்தை அந்த அத்தியாயத்தின் கடைசி வரிகளில்தான் வைத்திருப்பார். மேலும் நம் படைத்தலைவன் எப்படியும் ஜெயித்து விடுவான் என்ற நம்பிக்கை ஏற்ப்பட்டுவிடுவதால் எந்த ஒரு சூழ்நிலையிலும் எந்த ஒரு அபாய நிலையும் நமக்கு அச்சத்தை ஏற்ப்படுத்துவதில்லை. மேலும் சில நேரங்களில் நாமே பின் நடக்கப் போவதை ஊகிக்க முடிவதால் சிறிது அயர்ச்சியை ஏற்படுத்துகிறது.

மேலும் இதில் புரிபடாத அம்சங்களும் உண்டு. ஏன் நம் படைத்தலைவன் இரண்டாம் பாகத்தின் முடிவில் அக்ஷய முனையை விட்டுச் செல்கிறான் என்பதே புரியாத ஒன்று. அவன் அக்ஷய முனையை நாடி வந்த எந்த ஒரு செயல்களுமே நிறைவடையவில்லை. அப்படி இருக்கையில் அவன் ஏன் அக்ஷய முனையை விட்டுச் செல்கிறான். அவன் தான் காஞ்சனா தேவியின் மீது கொண்ட காதலினால் மஞ்சளழகியை நீங்கிச் செல்கிறான் என்று கூட நம்மால் காரணம் கற்பிக்க முடிவதில்லை. ஏனெனில் அக்ஷய முனையை நீங்கும் வரை இளைய பல்லவன் தான் மஞ்சளழகியை காதலிப்பதாகவே எண்ணுவான். மேலும் அக்ஷய முனை மக்களின் எதிரில் தான் மஞ்சளழகியை திருமணம் செய்வதாக உறுதி அளித்தானே , அது என்ன ஆனது. அம்மக்கள் எப்படி அவன் மஞ்சளழகியை கல்யாணம் செய்யாமல் போவதை அனுமதித்தார்கள். மேலும் ஸ்ரீவிஜய பேரரசிற்க்குட்பட்ட அக்ஷய முனை காவல் தலைவனை கைது செய்து போவதற்கு, ஸ்ரீவிஜயம் எந்த ஒரு எதிர் செயலும் நிகழ்த்தவில்லையே ,அது ஏன் ? இப்படி பல கேள்விகள் எழுகின்றன.

மீதி கதை பற்றிய விமர்சனம் அடுத்து.

photo courtesy : http://www.3jokes.com/gallery/d/13889-2/Old_Ships_05.jpg

Saturday, July 17, 2010

கடல் புறா - 2


இப்பதிவு இதற்க்கு முந்திய பதிவான கடல் புறா -1 இன் தொடர்ச்சியே ஆகும்.

காஞ்சனா தேவி, அநபாயச் சோழன், குண வர்மன் மற்றும் இளைய பல்லவன் ஆகிய நால்வரும் பாலூரிலிருந்து தப்புவதற்கு அரபி மாலுமி ஒருவன் உதவுவான் . அவன் பெயர் அமீர். இந்த அமீரின் குருவே அகுதா. அமீர் அந்த நால்வரிடம் , நாம் தப்பிச் செல்வதற்கு என்னுடைய குரு உதவுவார் என்று கூறி அகுதாவின் பெயரைக் கூறுவான். அகுதாவின் பெயரை கேட்டதும் அனைவரும் அதிர்ச்சி அடைவார்கள். ஏனெனில் அகுதா ஒரு மிகப் பயங்கரமான கடற்கொள்ளையன்.
அகுதாவிற்கு ஒரு இருபத்தியைந்து வயது இருக்கும் , அமீருக்கோ நாற்பது வயதிருக்கும். எப்படி இவன் அகுதாவை தன் குருநாதர் என்கிறான் என்று அனைவரும் ஆச்சரியப்படுவார்கள் . அதற்க்கு அமீர் , அகுதாவைப் போல் ஒரு சிறந்த மாலுமியைப் பார்க்க முடியாது. சீனாவில் சிறுவனாயிருக்கும் பொழுதே மாலுமிப் பயிற்சி எடுப்பார்கள் . அப்படி வந்தவர்தான் என்னுடைய குரு என்பான். இந்த அகுதாவே பிற்காலத்தில் இளைய பல்லவனுக்கு குருவாக இருந்து அவனுக்கு மாலுமிப் பயிற்சி உட்பட நிதானம், மனிதர்களை எடை போடுவது வரை அனைத்து பயிற்சிகளையும் அளிப்பான்.

இந்த புத்தகத்தில் என்னால் ஏற்க முடியாத காரணங்கள் இரண்டு இருக்கின்றன. ஒன்று, கலிங்க துறைமுகங்களின் மீது சோழர்களின் ஆதிக்கத்தை கலிங்கம் ஏற்கவேண்டும் என்ற கோரிக்கை. இது அமைதி விரும்பும் கோரிக்கை என்று இளைய பல்லவன் முதல் அனைவரும் காரணம் கூறினாலும் இது ஒரு அப்பட்டமான அத்து மீறல். அடுத்த நாட்டின் மீது கோரும் அப்பட்டமான ஏகாதிபத்தியம். அக்காலத்தில் நேரடியாக போர் புரிந்து துறைமுகங்களைக் கைப்பற்றாமல் அமைதி வழியில் ஆதிக்கம் செலுத்த கோருவது பெரிய விஷயம் என்றாலும் இதனை இக்காலத்தில் ஒரு நியாயமான கோரிக்கையாக ஏற்க முடியவில்லை. இரண்டு, அகுதா தான் கடற் கொள்ளையன் அல்ல என்று கூறும் காரணங்கள். அவன் அப்பட்டமான ஒரு கடற் கொள்ளையன் தான் .அதில் சந்தேகமே அல்ல. ஆனால் அதனை பூசி மொழுகுவதுதான் ஏற்க முடியாமல் இருக்கும். அதுவும் அவனிடம் நம்முடைய கதாநாயகன் பயிற்ச்சிப் பெற்று பிற் காலத்தில் அவனும் ஒரு கடற்கொள்ளையனாக மாறுவது ஏற்க முடியவில்லை.

நம்முடைய கதாநாயகன் குறித்த இத்தகைய அறிமுகம் போதும். நாம் இப்பொழுது உண்மையான வரலாற்று கதாநாயகனான குலோத்துங்கச் சோழனைப் பற்றி அறிவோம் . அது இக்கதை படிப்பதற்கும் உதவும். அக்காலத்தில் இடைக்காலச் சோழர்கள் என்னும் விஜயாலயச் சோழன் முதல் ஆதி ராஜேந்திர சோழன் வரைப்பட்ட சோழர்களுக்கும் கிழக்கு சாளுக்கியர்களுக்கும் இடையே திருமணங்கள் நடைபெற்று வந்துள்ளன. அப்படி நடை பெற்ற திருமணங்களில் முதலாம் ராஜராஜ சோழனின் பேரனான வேங்கி நாட்டை ஆண்ட ராஜராஜ நரேந்திரனுக்கும் முதலாம் ராஜேந்திர சோழனின் மகளுக்கும் பிறந்தவன்தான் இந்த அநபாயச் சோழன். இவன் ஆரம்பத்தில் ராஜேந்திர சாளுக்கியா என்று அழைக்கப்பட்டான். பிற்காலத்தில் ஆதி ராஜேந்திர சோழன் இறப்பிற்குப் பின் சோழ அரியணையில் ஏற்ப்பட்ட வெற்றிடத்தைப் போக்க இந்த அநபாயச் சோழன் , முதாலம் குலோத்துங்கச் சோழனாக அரியணை ஏறினான். இவன் அநபாயச் சோழனாக இருந்த காலகட்டத்தில் வீர ராஜேந்திரச் சோழன், சோழ அரியணையில் இருந்தான். இக்கதைப்படி அப்பொழுது வேங்கி நாடு அநபாயச் சோழன் தலைமையில் இல்லை. அவன் நாடற்ற இளவரசனாக இருந்தான். அவனும் தான் வேங்கி அரியணையில் ஏற, தன் தாய் மற்றும் தந்தை வழி சொந்தமான சோழர்களை எதிர்பார்த்திருந்தான். இந்த வேங்கி நாடு கலிங்கத்துக்கும் சோழத்திற்க்கும் இடையே இருந்த்தது. ஆகவே வேங்கி நாட்டில் சோழர்களுக்கு ஆதரவு இல்லாத நாடு இருப்பது கலிங்கத்து நல்லது. அப்படி இருந்ததால் வேங்கி நாடு கலிங்கத்துக்கும் சோழத்திற்க்கும் இடையே ஒரு buffer zone ஆக அமையும். இதுவே கலிங்க மன்னன் பீமனின் எண்ணம்.

அநபாயச் சோழன் உட்பட நால்வரும் தாங்கள் பாலூரிலிருந்து தப்ப அமீரின் கையை எதிபார்த்திருப்பார்கள். அப்படி தப்பும் வேளையில் இளைய பல்லவன் மட்டும் கலிங்க வீரர்களுடன் சண்டையிட வேண்டியிருக்கும். இந்த இடத்தில் இளைய பல்லவனின் வீரமும், தன் உயிர்த்தோழன்
அநபாயச் சோழன் மற்றும் தன் காதலி காஞ்சனா தேவி தப்ப வேண்டும் என்ற அவன் நோக்கமும் அவன் மேல் மிகப் பெரிய மரியாதையை ஏற்ப்படுத்தும். அப்படி சண்டையிடும் வேளையில் அவன் சாவை நெருங்கிக் கொண்டிருப்பான் . அத்தகைய தருணத்திலேயே அகுதாவால் காப்பாற்றப்பட்டு அவனுடன் மரக்கலத்தில் செல்வான். இங்கிருந்து கதை இளைய பல்லவன் அகுதாவால் , உப தளபதியாக்கப் பட்டு அவனால் அனைத்து பயிற்ச்சிகளும் கொடுக்கப்படுவான் . இங்கிருந்து தான் நம் கதாநாயகன் எந்நேரத்திலும் நிதானம் தவறாதவனாக , மரக்கலப் போரில் மிகத் தேர்ச்சி பெற்றவனாக உருமாருவான்.

இங்கிருந்து கதை மரக்கலத்தைச் சார்ந்து நகர ஆரம்பிக்கும். ஏன் சற்று பாதை மாறிச் செல்வதாகத் கூடத் தோன்றும். அகுதாவால் காப்பாற்றப்பட்டதிலிருந்து அடுத்து ஒரு வருடம் இளைய பல்லவன் அகுதாவுடனயே இருப்பான். இளைய பல்லவன் அடுத்து ஒரு வருடம் அகுதாவுடன் இருப்பதற்கு , தான் மரக்கலப் போரில் தேர்ச்சிப் பெறவேண்டும் என்ற ஆசையும், பாரதத்தின் கிழக்கு கடற்க்கரையிலிருந்து சொர்ண பூமி வரையிலான கடற்பரப்பு முழுவதும் கலிங்கத்தின் ஆதிக்கத்தை அழித்து மீண்டும் சோழர்களின் ஆதிக்கத்தை ஏற்ப்படுத்த வேண்டும் என்பதும் காரணமாகவும் கூறப் பட்டாலும் , இளைய பல்லவன் சோழர்களின் உபதளபதி என்பதிலிருந்து மாறி அகுதா எனும் கடற்கொள்ளையனின் உபதளபதியாக கடற்கொள்ளையிலும் ஈடுபடுவது ஏற்க முடியாததாக இருக்கும் . இந்த இடத்தில் கதை சற்று தடம் மாறுவதாகவும் ஏன் சற்று தடம் புரள்வதாகவும் தோன்றும். ஏன் இளையபல்லவன் சோழர் உபதளபதி என்பதைத் துறந்தான், தன் உயிருக்கு உயிரான காதலியான காஞ்சனா தேவிக்கூட தான் உயிரோடு இருக்கிறோமா இல்லையா என்பதைக்கூட அறிவிக்காமல் அகுதாவுடன் ஒரு வருடம் தனியாக இருக்கிறான் என்பது புரியாத புதிராக இருக்கும்.

இதிலிருந்து கதையானது பாரத கண்டத்திலிருந்து சொர்ண பூமி சென்றுவிடும்.

கல்கியின் எழுத்து நடையும் சாண்டில்யனின் எழுத்து நடையும் மிகவும் மாறுபட்டிருக்கும். சாண்டில்யன் பொதுவாக கற்பனைக் கதாப்பாத்திரங்களைச் சார்ந்திருப்பார். கல்கி அப்படி கிடையாது. கல்கியின் பொன்னியின் செல்வனில் மிகப் பெரும்பான்மையோர் உண்மைக் கதாப் பாத்திரங்களே. சாண்டில்யனிடம் வர்ணனை அதிகமாக இருக்கும். கல்கியின் கதைகளில் , அடுத்தடுத்த அத்தியாயங்களில் கதையானது தொடர்ச்சியாக இருக்காது. அவர் இணையாகச் (parallel) செல்லும் கதையின் இரண்டு ஓட்டங்களை அடுத்தடுத்த அத்தியாயங்களில் கூறுவார். ஆனால் சாண்டில்யனின் கதை தொடர்ச்சியாக இருக்கும். மேலும் சாண்டியனின் கதையில் இரண்டு கதாநாயகிகள் இருப்பர். சாண்டில்யனின் யவன ராணியில் , யவன ராணியும் பூவழகியும் கதாநாயகிகளாக இருப்பர். அதே போல் கடற்புறாவில் காஞ்சனா தேவியும் மஞ்சழகியும் கதாநாயகிகளாக இருக்கின்றனர்.

இப்படியாக நம் இளைய பல்லவன் கடற்க்கொள்ளையன் அகுதாவிடம் ஒரு வருடமாக பயிற்ச்சிப்
பெற்று ஸ்ரீவிஜய பேரரசின் கீழ் இருக்கும் அக்ஷய முனையை அடைவான். அக்ஷ முனை, கடற்ப்பரப்பில் பாரதத்திற்கும் சொர்ண பூமிக்கும் இடையில் இருக்கும் சொர்ண பூமியின் ஒரு பகுதியாகும். இங்கே நன்றாகக் காலூன்றுவத்தின் மூலம் கலிங்கத்திலிருந்து வரும் மரக்கலங்களை வழி மறிக்கலாம் என்பது இளைய பல்லவனின் எண்ணம். இதன் மூலம் கடற்ப்பரப்பில் கலிங்கத்தின் ஆதிக்கத்தை ஒழிக்கலாம். அக்ஷ முனையானது குண வர்மனின் ஒன்று விட்ட சகோதரன், பல வர்மானால் ஆளப்படும். இப்பகுதி முழுவதும் கடற் கொள்ளையர்களால் நிரம்பியது. இங்கு அரசாங்கமே கடற்க் கொள்ளையை ஆதரித்தது. மேலும் பல வர்மன் ஒரு வஞ்சகன் . கடற் கொள்ளையை தூண்டி விட்டு அதன் மூலம் பிழைப்பவன். அத்தகைய ஒருவனின் மகளாகவே நம்முடைய மற்றொரு கதாநாயகி மஞ்சழகி அறிமுகமாவாள் .

காஞ்சனா தேவி மற்றும் மஞ்சழகி பற்றிய வர்ணனைகள் அவர்கள் மிகச் சிறந்த அழகிகள் என்று காட்டும். இதில் காஞ்சனா தேவி விற் பயிற்சி, வாள் பயிற்சி பெற்று சிறந்த வீராங்கனையாகத் திகளுவாள். மஞ்சழகி அரசாங்க காரியத்தில் அதிகம் ஈடுபாடு காட்டி சிறந்த ராஜ தந்திரியாகவும் மனிதர்களை எளிதில் எடை போடக் கூடியவளாகவும் இருப்பாள். மேலும் அவள் ஆடல் கலையிலும் சிறந்தவள். இந்நாவலைப் படிக்கும் பொழுது ஏனோ மனம் மஞ்சழகி பின் செல்லுவதை தவிர்க்க முடியாது.

அக்ஷமுனைக்கு இளைய பல்லவன் அகுதாவின் உப தளபதியாகவே அறிமுகமாவான் . இதனால் இவனைக் கண்டு எதற்கும் கலங்காத பலவர்மனே அரளுவான். ஏனெனில் ஆகுதா அத்தகைய பயங்கர கடற் கொள்ளையன் . முதலில் இளைய பல்லவனைப் பார்த்து பயந்த மஞ்சழகியும் பின் அவன் மேல் காதல் வசப்படுவாள் . இங்கு எதிபாரதவிதமாக பூர்வ குடியைச் சார்ந்த நர மாமிசம் சாப்பிடும் ஒரு பூர்வ குடி இனத் தலைவன் ஒருவனின் கொலைக்கு இளைய பல்லவன் காரணமாகிவிடுவான். இப்படி தேவை இல்லாத காரியங்களில் எல்லாம் இளைய பல்லவன் ஈடுபடும் பொழுது மனம் ஏன் இப்படி இவன் தேவை இல்லாதவற்றில் எல்லாம் ஈடுபடுகிறான் என்று தோன்றும் . இப்படி கதை பல மாறுதல்களைக் கொண்டிருந்தாலும் நன்றாகவேச் செல்கிறது.

மீதி கதை பற்றிய விமர்சனம் அடுத்து.


photo courtesy :http://www.flickr.com/photos/10781010@N00/203949926/lightbox/

Friday, July 16, 2010

கடற் புறா - 1

பொழுது போகாத தருணங்களில் ஒவ்வொரு கால கட்டத்திலும் ஒவ்வொன்று செய்து கொண்டிருந்தேன் . பொழுது போக்க ஒரு விஷயத்தை கண்டுபிடித்தால் அதையே சில காலத்திற்கு தொடர்ந்து செய்து கொண்டிருப்பது என்னுடைய பாணி. சில காலங்கள் நண்பர்களுடன் தொடர்ந்தது அலைபேசியில் பேசுவது, சில காலத்திற்கு தொலைக்காட்ச்சி பார்ப்பது, இன்னும் சில காலம் புத்தகம் படிப்பது என்று தொடர்ந்ததது. இப்படித்தான் ஒரு காலத்தில் discovery channel , NGC, மற்றும் Animal Planet என்று தொடர்ந்து பார்த்துக்கொண்டிருந்தேன். அத்தகைய சமயங்களில் விலங்குகளைப் பற்றி அதிகம் எழுதினேன்.

இப்பொழுது புத்தகம் படிப்பது என்னுடைய வழக்கம் ஆகிவிட்டது. இந்த வருட புத்தக கண்காட்ச்சியில் நிறைய புத்தகங்கள் வாங்கினோம். அவற்றில் பெரும்பான்மை இதிகாசங்களாகவோ, சரித்திரம் பற்றிய புத்தகங்களாகவோ அல்லது சரித்திர நாவல்களாகவோ இருந்தன. அப்படி வாங்கிய புத்தகம்தான் சாண்டில்யனின் கடல் புறா. ஏற்க்கனவே நான் சாண்டில்யனின் யவன ராணியும், கல்கியின் பொன்னியின் செல்வனும் படித்திருந்ததால் சரித்திர நாவல்களின் மீது ஒரு ஈர்ப்பு ஏற்ப்பட்டிருந்த்தது. அத்தகைய நோக்கிலேயே இந்த கடல் புறாவையும் வாங்கினேன்.

சாண்டில்யனின் நாவல்களில் கற்பனை வளமும் கதாப்பாத்திரங்கள் குறித்த வர்ணனையும் அதிகம் இருக்கும். கடல் புறாவும் அதற்க்கு குறைந்தது அல்ல. இந்நாவல் குலோத்துங்கச் சோழன் காலத்தில் நடக்கிறது. அதாவது 1063 க்கும் 1070 க்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் நிகழ்ந்தது .சரித்திர நாவல்களில் ஏன் மிக முக்கியமான கதாப்பாத்திரங்கள் தவிர்த்து பிற கதாப்பாத்திரங்கள் கதாநாயகர்களாக வலம் வருகின்றன என்பது ஒரு புரியாத புதிராக உள்ளது. யவன ராணியில் முதலாம் கரிகார்ச்சோழன் இருந்தாலும் இளஞ்செழியனும், பொன்னியின் செல்வனில் ராஜராஜ சோழன் இருந்தாலும் வந்தியத்தேவனும் கதாநாயகர்களாக வலம் வந்தார்கள். அது போலவே கடல் புறாவில் முதலாம் குலோத்துங்கச் சோழன் இருந்தாலும் கதையின் நாயகன் இளைய பல்லவன் என்னும் கருணாகரப் பல்லவன்தான்.

ஒவ்வொரு காலகட்டத்திலும் சில அரசுகள் பேரரசுகளாகவும் மற்ற அரசுகள் அவற்றிக்குட்பட்ட சிற்றரசுகளாகவும் இருந்திருக்கின்றன. அப்படித்தான் பல்லவர்கள் பேரரசுகளாக இருந்த காலகட்டத்தில் சோழர்கள் அவற்றிக்குட்பட்ட சிற்றரசாகவும் , பிற்காலத்தில் விஜயாலச் சோழன் காலம் முதல் சோழர்கள் பேரரசாக ஆன பிறகு பல்லவர்கள் சோழர்களுக்குட்பட்ட சிற்றரசாகவும் இருந்தனர். அப்படித்தான் இந்த இளைய பல்லவன் சோழர்களின் கீழ் ஒரு உபதளபதியாக இருந்து சோழர்களின் சார்பாக கலிங்க நாட்டிற்கு ஒரு தூதுவனாகச் செல்வதிலிருந்து கதை ஆரம்பிக்கிறது.

கதை கலிங்க நாட்டின் (இன்றைய ஒரிசா) கோதாவரியின் முகத்துவாரத்தில் இருக்கும் பாலூர்ப் பெருந்துறை என்னும் துறைமுகத்திலிருந்து தொடங்குகிறது. அக்காலத்தில் சொர்ண பூமி என்னும் இன்றைய மலேயா, சுமத்தரா, பாலிக்கு கடல் மார்க்கமாக செல்ல பாலூர்ப்பெருந்துறையே மிகச் சிறந்த துறைமுகம். ஏனெனில் காற்றானது பாலூர்ப்பெருந்துறையிலிருந்து தென் கிழக்காக சொர்ண பூமியை நோக்கிச் சிறப்பாக வீசுகிறது. அக்காலத்தில் சொர்ண பூமியுடன் வர்த்தகம் புரிவதற்கு அனைத்து நாடுகளும் பெரும் ஆர்வம் காட்டின. ஏனெனில் சொர்ண பூமியில் தண்ணீரில் மண்ணைப் போட்டாலே தங்கம் பிரியும் அளவிற்கு தங்கம் அதிகமாகக் கிடைத்ததாம். அந்த தங்கத்திற்கு ஆசைப்பட்டே உலகில் அதிக நாடுகள் சொர்ண பூமியுடன் வர்த்தகம் வைத்துக்கொள்ள ஆசைப்பட்டன. அன்றைய சொர்ண பூமி, ஸ்ரீவிஜய பேரரசு என்றழைக்கப்பட்டது. அத்தகைய சொர்ண பூமியுடன் வர்த்தகம் செய்வதற்கு சோழப் பேரரசின் புகாரை விட பாலூர்ப்பெருந்துறையே சிறந்த இடமாக விளங்கியதால், வீர ராஜேந்திரச் சோழன் தலைமையிலான சோழப் பேரரசிற்கு பாலூர்ப் பெருந்துறையின் மீது ஒரு கண் இருந்த்தது. அத்தகைய பலூர்ப் பெருந்துறை துறைமுகத்துடன் மேலும் சில துறைமுகங்களின் மீது ஆதிக்கம் செலுத்துவதற்க்காக சோழப் பேரரசின் தூதுவனாக இளைய பல்லவன் வந்தான்.

இத்தகைய ஆதிக்கத்தை பீமன் அரசாண்ட தென் கலிங்கமும் மேலும் வட கலிங்கமும் விரும்பவில்லை. இத்தகைய ஆதிக்கத்தை அவர்கள் சோழப் பேரரசின் நாடு பிடிக்கும் ஆசையாகவே கருதினர். ஆக நம் இளைய பல்லவன் வந்து இறங்கிய தருணம் நலமாக இல்லை. அவன் பாலூர்ப் பெருந்துறை வந்து இறங்கிய தருணத்தில் பீமன் பாலூர்ப் பெருந்துறையில், தான் சோழ ஒற்றர்கள் என்று எண்ணிய அத்தனைத் தமிழர்களையும் சிறை பிடித்தான். அத்தகைய தருணத்திலயே பாலூர்ப் பெருந்துறையில் இருந்த அநபாயச் சோழன் எனவும் பிற் காலத்தில் முதலாம் குலோத்துங்கச் சோழன் எனப் பெரும் புகழ் பெற்ற கருணாகரப் பல்லவனின் உயிர்த்தோழனையே சிறைப் பிடித்தான். இத்தகைய தருணத்திலயே நம் கதாநாயகன் இளைய பல்லவன் பாலூர் பெருந்துறை வந்து இறங்குகிறான்.

அங்கு அவன் ஒரு தமிழனாகிய சுங்கச் சாவடி அதிகாரியைச் சந்திக்கிறான். அங்கே அவன் மூலம் அநபாயச் சோழன் கைது செய்யப்பட்டதை அறிந்து சினம் கொள்கிறான். அப்பொழுது அவனைச் சிறை பிடிக்க காவலர்கள் நெருங்குகிறார்கள். அவர்களிடமிருந்து தப்பி அவன் ஒரு மாட மாளிகையில் ஒளிகிறான். அங்குதான் கதையின் முக்கியமான கதாப் பத்திரமான காஞ்சனா தேவியைச் சந்திக்கிறான். அங்கு அவள் தந்தை குண வர்மனையும் சந்திக்கிறான். இந்த குண வர்மன் ஸ்ரீ விஜய பேரரசின் இளவரசன். அவனே ஸ்ரீ விஜய பேரரசை ஆள வேண்டியது . ஆனால் அவன் தம்பி ஸ்ரீ விஜய பேரரசை ஆண்டு கொண்டிருப்பான். இந்த குணவர்மன், தான் ஸ்ரீ விஜய பேரரசின் ஆட்சியைப் பெற சோழப் பேரரசின் உதவியை நாடி வந்திருப்பான். ஆக சோழப் பேரரசின் உதவியை நாடி வந்ததாலையே அவனையும் சிறை பிடிக்க பீமன் எண்ணுவான். இவ்வாறாக கதை ஆரம்பிக்கும்.

இந்த புத்தகத்தின் முதல் பாகத்தில் அநபாயச் சோழனுக்கும் இளைய பல்லவனுக்கும் சமமான பங்கிருக்கும். ஆரம்பத்தில் இளைய பல்லவனை சற்று முன் கோபியாகவும் சீக்கிரம் நிதானம் இழப்பவனாகச் சித்தரித்திருப்பார் சாண்டில்யன். முதாலம் பாகத்திலிருக்கும் இளைய பல்லவனுக்கும் இரண்டாம் பாகத்தில் சொர்ண பூமியில் இருக்கும் இளைய பல்லவனுக்கும் நிறைய வேறுபாடு இருக்கும் . சொர்ண பூமியில் இருக்கும் இளைய பல்லவன் நிதானம் உடையவனாகவும் எளிதில் உணர்ச்சி வசப்படாதவனாகவும் மனிதர்களை எளிதில் எடை காணக் கூடியவனாகவும் இருப்பான். இரண்டாம் பாதியில் இளைய பல்லவனிடம் ஒரு முதிர்ச்சி தெரியும். அதற்க்கு ஒரு முக்கிய காரணம் முதல் பாகத்தில் அறிமுகமாகிருக்கும் அகுதா என்னும் சீன மாலுமி.

இளைய பல்லவன் பாலூர் இறங்கிய அன்றே பீமனிடம் அகப்படுவான். அவனை ஏற்க்கனவே சிறையிலிருந்து மீண்ட அநபாயச் சோழன் மீட்க்கும் இடம் சிறப்பாக அமையும். அவனுக்கு உதவியாக காஞ்சனா தேவியும் வில் ஏற்கும் இடம் சிறப்பாக இருக்கும். இந்த இடமும் இளைய பல்லவனுடன் அறிமுகமாகிருக்கும் இடத்தில் காஞ்சனா தேவி வாள் ஏந்தும் இடமும் அவளின் வீரத்திற்கு சான்றாக அமையும். இவ்வாறு தப்பிய காஞ்ச்ச்சனா தேவியும் , அநபாயச் சோழனும் , குண வர்மனும் மேலும் இளைய பல்லவனும் பாலூரிளிருந்து தப்புவதே முதல் காரியமாக இருக்கும் .
முதல் பாகம் முழுவதும் இளைய பல்லவனுக்கும் காஞ்சனா தேவிக்கும் இடையே ஏற்ப்படும் காதலும்
, பாலூரிலிருந்து தப்புவதற்கு எடுக்கும் நடவடிக்கைகளுமே ஆக்கிரமிக்கும்.

தொடரும் ....