Wednesday, December 9, 2009

விருப்பு வெறுப்புகள், ரசிப்புத் திறன் மூலம் ஒருவரை அடையாளப்படுத்துவது சரியா?

பொதுவாக ஒவ்வொருவருக்கும் அவர்களுக்குப் பிடித்தவர்கள் என்று பல பேர் இருப்பார்கள். அவர்கள் அவர்களுக்கு நெருக்கமானவர்களாகவோ அல்லது தூரத்தில் இருக்கும் நட்சத்திரமாகவோ இருக்கலாம். தனிமனிதருக்கும், அவருக்கு பிடித்தமானவர்களுக்கும் இடையே உள்ள தொடர்பை என்னவென்று சொல்வது, அரசியல் என்றால் தலைவர் - தொண்டர், கலைத்துறை என்றால் கலைஞன் - ரசிகன். சில நேரங்களில் பொதுவான வார்த்தையாக விசிறி. தொண்டன், ரசிகன் போன்ற வார்த்தைகள் அவற்றிற்க்கான இயல்பான அர்த்தத்தை இழந்துவிட்டதாகவே எனக்குத் தோன்றுகிறது. தற்காலங்களில் ஒரு தலைவருக்குத் தொண்டன் என்றோ அல்லாத ஒரு கலைஞனுக்குத் ரசிகன் என்று கூறினாலே அவன் ஏதோ, தவறான செயலை செய்பவனாகவோ அல்லது இன்னும் கூடுதலாகச் சொல்லப்போனால் ஒரு படிக்காத காட்டுமிராண்டி என்றோ எண்ணத் தோன்றும். தன்னை முகம் தெரியாத, தனக்குப் பழக்கமே இல்லாத மூன்றாம் மனிதரிடம் முழுவதுமாக ஒப்படைப்பதை பிறகு என்னவென்று சொல்லுவது?. எனக்கும் ஒருவருக்கு கண்மூடித்தனமான ரசிகனாகவோ அல்லது ஒரு தொண்டனாகவோ இருப்பதில் விருப்பம் இல்லை. ரசிகன் என்ற சொல்லை விட தொண்டன் என்ற சொல் எனக்கு மிகவும் அருவருப்பான சொல்லாகத் தோன்றுகிறது. அதற்க்கு இக்கால அரசியல் தலைவர்கள் காரணமாக இருக்கலாம்.

நான் ஒருதடவை அலுவலகத்தில் என் குழுவில் இருந்தவருடன் பேசிக்கொண்டிருந்தபோது ஒரு சுவாரசியமான விவாதம் நடந்தது. அப்பொழுது அவர் சொன்னார், ஒருவனின் ரசிக்கும் தன்மையை வைத்தோ அல்லது அவன் யாரை ரசிக்கிறான் என்பதை வைத்தோ அவனையோ அல்லது அவன் நடத்தையையோ தீர்மானிக்கக்கூடாது. அப்படிச் செய்தால் அதுவும் ஒரு வகைத் தீண்டாமைதான் என்றார். அப்படிப் பார்த்தால் பீட்சா சாப்பிடுபவன் உயர்ந்தவனாகவும் இட்லி சாப்பிடுபவன் தாழ்ந்தவனாகவும் ஆகும், அதை நீங்கள் ஒப்புக்கொள்வீர்களா? என்றார். அவருக்கு நிச்சயமாக என்ன பதில் சொல்லுவது என்று எனக்குத் தெரிந்துருக்கவில்லை. ஒரு நாகரீக சமூகத்தில் ஒருவன், தான் ஒசாமா பின் லேடனுக்கு ரசிகன் என்று கூறினால் அவன் எப்படி பார்க்கப்படுவான் என்று எனக்குத் தெரியவில்லை.

ஒரே ஆளைப் பற்றி இருவரிடம், உங்களுக்கு ஏன் அவரைப் பிடித்திருக்கிறது என்று கேட்டால், நிச்சயமாக இருவரும் வெவ்வேறு காரணங்களைச் சொல்வார்கள். ஒருவரை, ஒவ்வொருவரும் பார்க்கும் கோணங்களும் மற்றும் அவரைப் பற்றி ஒவ்வொருவருக்கும் கிடைக்கும் தகவல்களும் வேறுபடும். மேலும் பார்க்கும் ஒவ்வொருவரின் குணாதீசியங்களும் அவரின் ரசிக்கும் திறனை மாற்றியமைக்கும் இயல்பு கொண்டவை. இத்தகைய காரணங்களாலே ஒருத்தருக்கு ஒருவர் மிகப் பிடித்தவராகவும் மற்றொருவருக்கு பிடிக்காதவராகவும் ஆகிவிடுவார்.


மற்றொரு முக்கியமான அம்சம் ஒரு தனிமனிதர் அல்லது ஒரு குழுமம் எந்த வகையில் முன்னிறுத்தப்படுகிறார்/கிறது என்பதைப் பொருத்தும் அமையும். எடுத்துக்காட்டாக வால்மீகி ராமாயணத்தில், ராவணன் மிகக் கொடூரவனாகவும், மிகக் கொடியவனாகவும் சித்தரிக்கப்பட்டிருப்பான். ஆனால் கம்ப ராமாயணத்தில், ராவணன் மிகச் சிறந்த சிவ பக்தனாகவும், கலைத்தாயின் தலைமகனாகவும், மிகச் சிறந்த ஆட்சியாளனாகவும் சித்தரிக்கப்பட்டிருப்பான். அவன் செய்த ஒரே பாவச் செயல் பிறன் மனை நோக்கியதுதான் என்று கம்ப ராமாயணம் வாதிடும். கம்ப ராமாயணத்தைப் படித்தவர்களுக்கு ராவணன் கொடூரமானவனாகத் தெரியமாட்டான். ஏன், தமிழிலே ராவண காவியம் என்று ராவணனைப் பற்றி ஒரு காவியமே உள்ளது .

ஒரு சிலருக்கு ஒருவரைப் ஏதோ ஒரு சில காரணத்திற்க்காகப் பிடித்துவிட்டால், பின் அவருடைய எந்த செயலும், ஏன் தவறான செயல்கள் கூட கண்ணுக்குத் தெரியாது, காதலில் இருப்பதைப் போல! அதனால்தான் வரலாற்றில் கொடியவர்களாக இருந்தவர்களுக்கு கூட உண்மையான காதலிகள் இருந்தார்கள்.

எனக்குத் தெரிந்து பல நேரங்களில் தீமையே நன்மையை விட பராக்கிரமசாலியாகவும, தந்திரம் மிகுந்ததாகவும் இருக்கும். தீமையே பெரும்பாலும் ரசிக்கும்படியாகவும் கவர்ச்சியாகவும் இருக்கும். வில்லன்களே அதிக சக்தி உடையவர்களாக இருப்பார்கள். அதனாலேயே வில்லன்களுக்கும் ரசிகர்கள் அதிகம் உண்டு. ஹிட்லர் எனக்குத் தெரிந்து இதற்க்கு மிகச் சிறந்த உதாரணம். இரண்டாம் உலகப் போரின்போது சுற்றி இருக்கும் அனைத்து நாடுகளின் மீதும் போர் தொடுக்கும் தைரியமும் திறமையும் ஜெர்மனி கொண்டிருந்ததது. அக்காலங்களில் பொறியியல் உள்ளிட்ட பல துறைகளில் ஜெர்மனி மிகச் சிறந்து விளங்கியது. அதற்க்கு மிக முக்கியக் காரணம், ஹிட்லர்.

ஹிட்லர் மிகத் திறமைசாலி. அவர் ஒரு மிகச் சிறந்த தலைவராகவும் , தன் பேச்சால் ஜெர்மனி மக்களை கட்டிப் போடும் திறமையைக் கொண்டிருந்தார். ஆனால் இரண்டாம் உலகப் போரின் சமயத்தில் ஹிட்லரைப் பற்றி பேசுவது என்பதே மிகக் கொடிய குற்றம் செய்ததாகக் கருதப்பட்டது . முதலாம் உலகப் போரின்போது ஜெர்மன் ஷெப்பர்ட் நாயின் பெயரே மாற்றப்பட்டு அல்சேசன் என்று அழைக்கப்பட்டது. அந்த அளவிற்கு ஜெர்மனியின் மீதான வெறுப்பு இருந்தது. 1977 ஆம் ஆண்டுதான் திரும்பவும் ஜெர்மன் ஷெப்பர்ட் என்று பெயர் மாற்றப்பட்டது.

விருப்பு வெறுப்புகள் காலத்திற்கு காலம் , ஆளுக்கு ஆள் வேறுபடும். மேற்க்கூறிய ஜெர்மன் ஷெப்பர்ட் நாயே அதற்க்கு ஒரு உதாரணம். உலகப் போரின் தாக்கம் வரை அந்நாய் அல்சேசன் என்று அழைக்கப்பட்டது. அதே நாய் உலகப் போர்களின் தாக்கம் முடிந்த பிறகு திரும்பவும் ஜெர்மன் ஷெப்பர்ட் என்று மாற்றப்பட்டு, உலகம் முழுவதும்
அதிகமாக விரும்பப்படும் நாயாக உள்ளது.

ஆக ஒருவர் மற்றொருவரின் மீது கொண்ட விருப்பு வெறுப்புகள் ,ரசிக்கும் தன்மை ஆகியவற்றை கொண்டு ஒருவரை அடையாளப்படுத்துவது
சரியா?

No comments: