Sunday, November 15, 2009

ஆப்கானிஸ்தான்,தலிபான்,அமெரிக்கா மற்றும் இந்தியா

ஆப்கானிஸ்தான், இன்று உலகின் கவனம் மையம் கொண்டிருக்கும் இடம்.

ஒரு காலத்தில் வணிகர்களுக்கு இன்றியமையாத தலமாக அமைந்த நாடு. ஏனெனில் silk route எனப்படும் ஆசியாவையும் ஐரோப்பாவையும் இணைத்த மிக முக்கியப் பாதை இந்நாடு வழியாகவேச் சென்றது. புத்த மதத்தைச் சார்ந்தவர்களுக்கு மிக முக்கிய இடமாக இருந்த நாடு.

இந்தியாவிற்கும் ஆப்கானிஸ்தானிற்கும் பன்னெடுங்காலமாகவே நெருங்கிய தொடர்பு உண்டு. மகாபாரதத்தில் வரும் நம்முடைய சகுனி மாமா ஆண்ட காந்தாரம், கிழக்கு ஆப்கானிஸ்தானும் வடக்கு பாகிஸ்தானும் சேர்ந்த பகுதியே. அசோகச் சக்ரவர்த்தியின் அப்பாவான பிந்துசாரரின் காலத்திற்க்கு (272 B.C) முற்ப்பட்ட காலம் முதல் நேற்றுவரை ஆண்ட முகலாயர்களின் காலம்(1700 A.D) வரை இந்தியாவின் ஒரு பகுதியாகவே ஆப்கானிஸ்தான் இருந்தது.

மலையும் மலை சார்ந்த பகுதிகளுமாக அமைந்த இந்நாட்டில் நீர் வளம் குறைவுதான். இருந்தாலும் இயற்கையில் சாகோதரன் போல் தனக்குக் கிழக்குப் பக்கத்தில் அமைந்த பாகிஸ்தான் போல் வளமாக(சிந்து சமவெளி நாகரீகம்!) இல்லாவிட்டாலும் தனக்கு மேற்க்கே அமைந்த அரபு நாடுகள் போல் பாலைவனமாக அல்லாமலாவது இருக்கிறோமே என்று 1940 கள் வரை ஓரளவு சந்தோசப்பட்டுக்கொண்டிருந்த நாடு! (1940 களில் தான் அரபு நாடுகளில் எண்ணெய் வளம் கண்டுபிடிக்கப்பட்டது ).

இப்படியாக வறண்டு இருந்தாலும் அமைதியாகவாவது இருந்த இந்நாட்டில் 1979 ஆம் ஆண்டு சோவியத் படையெடுத்ததிலிருந்து கஷ்ட காலம் ஆரம்பித்தது. அது சோவியத்திற்கும் அமெரிக்காவிற்கும் பனிப்போர் நடந்த காலம். அப்பொழுது உலகின் கவனம் முழுவதும் ஆப்கானிஸ்தான் மீது திரும்பியது. அமெரிக்காவின் உதவியுடன் உள்நாட்டு முஜாகிதீன்கள் சோவியத்தை தோற்கடித்தனர். ஒசாமா பின் லேடன் உட்பட இப்பொழுது இருக்கும் தலிபான் தலைவர்கள்் முக்கால்வாசிப் பேர் அமெரிக்காவால் அப்பொழுது ஆதரிக்கப்பட்டவர்களே. சோவியத்தைத் தோற்க்கடித்ததுடன் தங்கள் வேலை முடிந்தது என்று அமெரிக்காவும் மற்ற நாடுகளும் தங்கள் கவனத்தை ஆப்கானிஸ்தானிலிருந்து திருப்பிக்கொண்டன. அதற்கடுத்து ஆப்கானிஸ்தானில் உள்நாட்டுக் கலவரம் ஆரம்பித்தது.

1996 ஆம் ஆண்டு தலிபான்கள் ஆப்கானிஸ்தானைப் பிடித்தபொழுது உலகம் தன் புருவத்தை உயர்த்திப் பார்த்தது. இருந்தாலும் உள்நாட்டில் ஏதோ சண்டையிட்டுக்கொள்கிறார்கள் என்று விட்டுவிட்டார்கள். பாமியான் புத்தர் சிலையை உடைத்தபோதும், இந்தியன் ஏர்லைன்ஸ் கடத்தலின் போதும்தான் தலிபான்கள் உலகின் முழு கவனத்தைக் கவர்ந்தார்கள். அதற்கடுத்து 9/11 தாக்குதலும், அதையடுத்து தலிபான்கள் மீது அமெரிக்காவின் படையெடுப்பும் உலகம் அறிந்ததே.

1996 ஆம் ஆண்டு தலிபான்கள் ஆப்கானிஸ்தானைப் பிடித்தபோழுதே இந்தியாவிற்குத் தெரியும், தலிபான்கள் இந்தியாவிற்கு வேண்டியவர்கள் அல்ல என்று. அதற்க்கு முக்கியக் காரணம் தலிபான்களை பாகிஸ்தான் ஆதரித்ததும், தலிபான்களின் காட்டுமிராண்டித்தனமான ஆட்சியும், பாமியான் புத்தர் சிலை இடிப்பும். அதற்க்கு அப்புறம் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானக் கடத்தலிலிருந்து இந்தியா தலிபான்களை முழுவதுமாக வெறுக்கத்தொடங்கியது. அதிலிருந்து இந்தியா தலிபான்களின் எதிர்க் கூட்டணியான வடக்குக் கூட்டணியை முழுவதுமாக ஆதரிக்கத் தொடங்கியது. 2001 ஆம் ஆண்டு அமெரிக்கப் படையெடுப்பின் போது இந்தியா படைகளை அனுப்பாவிட்டாலும் தலிபான்களைப் பற்றிய ரகசியத் தகவல்களை அளித்து தலிபான் தோல்வியில் முக்கியப் பங்காற்றியது.

தலிபான் தோல்விக்குப் பிறகு ஆப்கானிஸ்தான் புனரமைப்பில் இந்தியா மிக கவனம் செலுத்துகிறது. ஆப்கானிஸ்தானில் தனக்குச் சாதகமான அரசை நிறுவுவதன் மூலம் பாகிஸ்தானை ஓரளவு அடக்கலாம் என்பது இந்தியாவின் எண்ணம். அதற்காக ஆப்கானிஸ்தானுக்கு பல உதவிகளைச் செய்ய ஆரம்பித்தது. தற்போது இந்தியா ஆப்கானிஸ்தானில் ஜனநாயக ஆட்சியை நிறுவததற்கு உதவுவதற்கு அடையாளமாக அங்கு பாராளுமன்ற கட்டிடத்தைக் கட்டி வருகிறது. ஆப்கானிஸ்தான் முற்றிலும் நிலத்தால் சூழப்பட்ட நாடு. அதனால் தன்னுடைய கடல் போக்குவரத்திற்கு பாகிஸ்தானையே நம்பி வருகிறது. ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானைச் சார்ந்திருக்கும் நிலையைக் குறைப்பதற்காக இந்தியா, ஆப்கானிஸ்தானிலிருந்து ஈரானின் Chahbahar துறைமுகத்திற்கு 135 மைல் நீள பாதை அமைத்துக் கொடுத்திருக்கிறது. மேலும் ஆப்கானிஸ்தானின் மின் பிரச்சனையைச் சமாளிப்பதற்காக ஒரு மின் உற்பத்தி ஆலை அமைத்து வருகிறது. தினமும் கிட்டத்தட்ட 20 லட்சம் பள்ளிக் குழந்தைகளுக்கு செறிவூட்டப்பட்ட பிஸ்கட்டுகளை வழங்கி வருகிறது. இப்படிப் பல வகையிலும் இந்தியா ஆப்கனுக்கு உதவி வருகிறது.

ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா வழங்கி வரும் உதவிகளைக் கவனித்தீர்களேயானால், அவை் பெரும்பாலும் மக்களின் அன்றாடப் பிரச்சினைகளைத் களைவதர்க்கான நடவடிக்கைகளே. ஒரு நாட்டை நமக்குச் சாதகமாக மாற்றுவதற்கு முதலில் அந்நாட்டு மக்களைக் கவர வேண்டும் . அந்த வகையில் இந்தியா மிகச் சிறப்பாகச் செயலாற்றிவருகிறது.

2001 ஆம் ஆண்டிற்குப் பிறகு முதன் முதாலாக (2004 ஆம் ஆண்டு) ஆப்கன் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கர்சாய், பல நிலைகளில் தான் இந்தியாவிற்கு ஆதரவானாவன் என்றுக் காட்டியுள்ளார் (கர்சாய் தன்னுடையக் கல்லூரிப் படிப்பை தில்லியில்தான் முடித்துள்ளார்). அந்த வகையில் கர்சாய், தற்பொழுது நடந்த ஆப்கன் ஜனாதிபதித் தேர்தலில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டது இந்தியாவிற்கு நலம் தான்.

ஆனால் தலிபான் ஆப்கனில் மீண்டும் தலையெடுக்கத் தொடங்கியுள்ளது இந்தியாவிற்கு கவலை அளிக்கும் விஷயம்். "War on Terror" இன் மையப் புள்ளி ஆப்கனாகத்தான் இருந்திருக்க வேண்டும், ஆனால் ஈராக்காக அமைந்தது துரதிஷ்டவசமானது். அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா தற்பொழுது ஈராக்கில் படைகளைக் குறைத்து, ஆப்கனில் படைகளை அதிகரிக்க முடிவெடுத்துள்ளது இந்தியாவிற்கு சற்று நம்பிக்கை அளித்துள்ளது.

தலிபான்கள் முற்றிலுமாக அழிக்கப்படவேண்டியது உலகிற்கும் இந்தியாவிற்கும் நல்லது.

No comments: