Showing posts with label கோபம். Show all posts
Showing posts with label கோபம். Show all posts

Monday, September 30, 2013

உயிரினங்களுக்கான உலகம் - 2

அன்று பத்திரிகை படித்துக் கொண்டு இருந்தேன். அப்பொழுது அதில் பிரிட்டிஷ் தேனீக்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்து விட்டது. கிட்டத்தட்ட அவை அழிவின் விளிம்பில் உள்ளன என்று எழுதி இருந்தார்கள். மேலும் அதில் தேனீக்களின் எண்ணிக்கை குறைந்தால் அவற்றால் நடக்கும் மகரந்த சேர்க்கை குறைந்துவிடும், பின் விவசாயிகள் மகரந்த சேர்க்கைக்கு இதை விட அதிக செலவாகும் மாற்று முறைகளை நாட வேண்டி வரும், அதற்கு இத்தனை கோடி செலவாகும் என்று எழுதி இருந்தனர். இந்த உலகம் எதிர்கொள்ளும் பல இயற்கை பேரழிவுக்களுக்கு என்ன காரணம் என்று பல நேரங்களில் யோசிப்பேன். தேனீக்கள் அழிந்தால், தான் உண்ணும் உணவு உற்பத்திக்குத் தேவையான மகரந்த சேர்க்கை பாதிக்கப்பட்டுவிடும், அதனால் அதை ஈடு செய்ய செய்யப்படும் மற்ற மகரந்த சேர்க்கை முறைகளுக்கு அதிகம் செலவாகும் என்று தன்னை மட்டுமே எண்ணி வாழ்கிறான் மனிதன். இப்படி அனைத்தையுமே பணம் மற்றும் மனிதன் என்று தன்னை மட்டுமே எண்ணி இருப்பதுதான் இந்த பூமியின் இந்த நிலைக்குக் காரணம் என்று தோன்றுகிறது. எப்படி இவர்களால் இந்த உலகில் அனைத்தையும் அளவிட்டுவிட/மதிப்பிட்டுவிட முடியும் என்று எண்ணுகிறார்கள் என்று தெரியவில்லை. மனிதன் அறிந்ததே மிகக் குறைவுதான். அதை வைத்துக் கொண்டு அவன் அனைத்தையும் அளவிட, மதிப்பிட முயல்கிறான்.

தேனீ, வண்ணத்துப் பூச்சி போன்ற பூச்சி இனங்கள் அழிந்தால் உண்மையில் மனிதன் நினைத்துப் பார்க்கவே முடியாத பேரழிவு ஏற்படும். இந்த உலகில் நடக்கும் மகரந்த சேர்க்கையில் கிட்டத்தட்ட 35 விழுக்காடு தேனீ மற்றும் வண்ணத்துப் பூச்சி போன்ற உயிரினங்களால் நடக்கிறது. அதில் பெரும் பகுதி தேனீக்களால்தான் நடக்கிறது. இப்படிப்பட்ட தேனீக்கள் அழிந்தால் எப்படிப்பட்ட பேரழிவு ஏற்படும்  என்று நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. ஐன்ஸ்டீன் ஒரு தடவை , இந்த உலகில் தேனீக்கள் அழிந்த நான்காவது ஆண்டில் மனிதன் இந்த உலகிலிருந்து அழிந்து விடுவான் என்று கூறி இருந்தார். ஏற்கனவே சீனா தேனீக்களின் அழிவின் உக்கிரத்தை உணர ஆரம்பித்துவிட்டது. சீனாவின் சிச்சுவான் பகுதியிலிருந்து தேனீக்கள் அழிந்துவிட்டன. இப்பொழுது அங்கு விவசாயிகள் கைகளால் செய்யும் மகரந்த சேர்க்கை முறையைத் தான் நாடுகிறார்கள். ஓவ்வொரு செடியில், மரத்தில், கொடியில் இருக்கும் பூக்களை கைகளால் பிடித்து ஒன்றை ஒன்று உரசவைத்து மகரந்த சேர்க்கை செய்வதை நினைத்துப் பாருங்கள். கொடுமை .

சரி, இப்படி ஏதோ ஒரு வகையில் தன்னுடைய உணவு உற்பத்திக்கு மாற்று வழிகளை கண்டுபிடித்துவிட்டாலும் மற்ற உயிரினங்களின் வாழ்விற்கு என்ன செய்வது?. இந்த உலகம் இயங்குவதே இனவிருத்தியினால்தான். அதிலும் தாவரங்களே அனைத்து உயிரினங்களின் உணவிற்கும் அடிப்படை என்பதால் அவற்றின் இனவிருத்தியான மகரந்த சேர்க்கை இந்த உலகின் இயக்கத்திற்கு அடிப்படை. ஆனால் மனிதனோ தன்னுடைய உணவு உற்பத்திக்கு தேவையான மகரந்த சேர்க்கை மட்டும் நடந்துவிட்டால் போதும் என்று நினைக்கிறான். மனிதன் ஒன்றை முற்றிலும் மறந்துவிடுகிறான், உணவுச் சங்கிலியில் எந்த ஒரு இடத்திலும் ஒரு தொடர்பு அறுந்துவிட்டாலும் ஒட்டுமொத்த உணவுச் சங்கிலியின் சமநிலையும் பாதிக்கப்படும். மனிதன் தன்னுடைய உணவை தானே உற்பத்தி செய்துவிட்டாலும், அவனால் நிச்சயம் தனித்து வாழ முடியாது. அவனின் இயல்பான வாழ்விற்கு யார் யார், எந்த எந்த இயக்கம் வழி செய்கிறது என்பதே அவனுக்குத் தெரியாது.

உணவுச்சங்கிலியின் உச்சியில் இருக்கும் புலி முதல் உணவுச்சங்கிலியின் அடியில் இருக்கும் தாவரம் வரை அனைத்து உயிரினங்களுக்கும் இந்த உலகின் இயக்கத்தில் பங்கிருக்கு, மனிதன் உட்பட. உணவுச் சங்கிலி அறுபடாமல் இருக்க ஓவ்வொரு உயிரினமும் இந்த உலகில் தேவை. இந்த உலகம் மனிதனுக்கானது மட்டுமே அல்ல. இந்த உலகில் நமக்குத் தெரிந்து இருக்கும் 87 லட்சம் வகை உயரினங்களில் மனிதன் ஒரு வகை உயிரினம் தான். இந்த உலகில் இருக்கும் லட்சக்கணக்கான கோடி உயிரினங்களில் 700 கோடி மனிதர்கள் என்பது மிகச் சிறு எண்ணிக்கை. ஆனால் அந்த சிறு எண்ணிக்கைக்கு, ஏதோ இந்த பூமி தனக்கே தனக்காக மட்டுமே படைக்கப்பட்டதாக நினைப்பு.

இந்த தேனீக்கள் அழிவதற்கான காரணங்கள் தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் இதற்கு பூச்சிக் கொல்லி மருந்துகள் முக்கிய காரணமாக இருக்கக்கூடும் என்று என்று கருதப்படுகிறது. இதனாலையே பல ஐரோப்பிய நாடுகள் இன்று பல பூச்சிக் கொல்லி மருந்துகளைத் தடை செய்துவிட்டன. தேனீக்களின் உணவான தேனீ மற்றும் மகரந்தத்திற்காக பல காட்டுச் செடிகளை வளர்க்க ஊக்குவிக்க ஆரம்பித்துள்ளன. இந்தியா உட்பட மற்ற நாடுகளும் சீக்கிரமே விழித்துக் கொண்டால் நல்லது, இல்லையேல் இன்று சீனாவிற்கும், ஐரோப்பிய நாடுகளுக்கும் ஏற்ப்பட்ட நிலையே, நாளை அவர்களுக்கும் ஏற்படும்.

மனிதன் இந்த பூமிக்கு மாற்று தேடி அவ்வளவு சிரம்மப்பட்டு இந்த ஆண்ட சராசரம் முழுவதும் பிற கோள்களைத் தேடும் செய்திகளைப் படிக்கும் போது எனக்குப் சில நேரங்களில் சிரிப்பாகவும் பல நேரங்களில் எரிச்சலாகவும் கோவமாகவும் இருக்கும். இந்த பூமிக்கு மாற்று எதுவும் கிடையாது. பிற கோள்களில் இருக்க இடம் தேடி அலைவதில் இவர்கள் காட்டும் சிரமத்தில் சிறு அளவேனும் இந்த பூமியை காக்க காட்டினால் இந்த பூமியை விட சொர்க்கம் வேறு எதுவும் இருக்க முடியாது. ஆனால் அதை மனிதன் இந்த பூமியை அழித்துவிட்டுத்தான் உணருவான் என்று தோன்றுகிறது :(.

Image Courtesy : http://www.benzruizphotography.com/2013/05/07/flower-and-bee-in-dahilayan/flower-and-bee-in-dahilayan/

Sunday, April 22, 2012

தண்ணீர் இல்லா தேசம்


இந்த வெயில் காலத்துல வெளில போனா தண்ணி குடிக்க ஒவ்வொரு பஸ் ஸ்டாப்புளையும் கடை கடையா தண்ணி தேடி ஓட வேண்டியதா இருக்கு. அப்பலாம் தோணும் இப்ப முக்குக்கு முக்கு இருக்குற கடைல தண்ணி பாட்டில் வாங்கி தண்ணி குடிச்சுப்போம். ஆனா அந்த காலத்துல மக்கள் கால்நடையா இந்த உலக சுத்தி வந்தப்ப எங்க தண்ணிக்குப் போயிருப்பாங்கன்னு . ஆனா நிச்சயமா அந்த காலம் இன்று போல் இருந்ததில்ல. அப்பலாம் எந்த ஊருக்குப் போனாலும் எந்த வீட்டிலையும் தவிச்ச வாய்க்கு தண்ணி கிடைக்கும். இல்லனா ஊர் ஊர்ல இருக்கும் ஆறு, குளம்னு எங்கயும் தண்ணி மொண்டு குடிச்சு தாகத்த தீத்துக்குவாங்க . ஆனா இப்ப அப்படியா!. அப்பலாம் தண்ணிய பத்துன பயம் இல்லாம இருந்துச்சு . அய்யயோ தண்ணி நல்லா இல்லையே , இப்படி திறந்த ஏரி , குளத்துல இருக்குற தண்ணிய குடிக்கலாமாங்குற பயம் இல்ல.

இப்பலாம்  எங்கயும் திறந்த வெளியா இருக்குற ஆறு , குளத்துல யாரும் தண்ணி மொண்டு அப்படியே குடிக்கிற மாதிரி பாக்க முடியல. ஆனா அது எல்லாம் இந்த கொஞ்ச காலமாதாங்க. எனக்குத் தெரிஞ்சு பதினஞ்சு, இருபது வருசத்துக்கு முன்னாடி கூட இப்படி இல்ல .  ஒரு பதினஞ்சு வருசத்துக்கு முன்னாடி எங்க அப்பா எங்கள குடும்பத்தோட வட இந்தியா டூர் கூட்டிட்டுப் போனாங்க. 23 நாள் டூர் , அதுவும் ப்புல்லா பஸ்ல!. ஒரே பஸ்ல எங்களோட இன்னும் 45 பேர் வந்தாங்கா. திருநெல்வேலில  ஆரம்பிச்சு , சிம்லா வரைக்கும் போய் திரும்பி அதே பஸ்ல திருநெல்வேலி திரும்புனோம்!. அப்ப நாங்க குடிச்சதெல்லாம் வெறும் ஆத்துத் தண்ணி. போற வழி எல்லாம் இருக்குற ஆறுகள்ள இருந்த தண்ணி . அப்பலாம்  திறந்த தண்ணி , அசுத்தம் , புது தண்ணினு எந்த பயமும் கிடையாது. ஆனா இப்ப நம்ம வீட்டுக் குழாய்ல வர்ற தண்ணியையே குடிக்க பயப்படுறோம். ரெண்டு வருசத்துக்கு முன்னாடி நான் திருப்பியும் வட இந்தியா  போயிருந்தேன். அப்ப நான் குடிச்சதெல்லாம் 1 லிட்டர்  ரூபி 15 , 20 ங்குற பாட்டில் தண்ணிதான். 90 கள்ள நாங்க போன அந்த டூர்ல ஒரு விஷயம் எனக்கு ரொம்ப ஆச்சரியமா இருக்கும். நோர்த் இந்தியா ரொம்ப hot ங்குறதால குளிர்ச்சியான தண்ணிக்காக  தோல்ல செஞ்ச ஒரு பையில தண்ணி ரொப்பி அத பஸ்ல ஜன்னலுக்கு வெளில தொங்கப் போட்டுருப்பாங்க. பஸ் போறப்ப வீசுற காத்துல அந்த பை குளுந்து ஜில்லுனு ஆயிரும் . அந்த தண்ணிய எடுத்துக் குடிப்பாங்க. ஆனா அந்த மாதிரி ஒரு அடையாளத்தையே இந்த தடவை அங்க பாக்க முடியல . எங்கயும் பாட்டில் தண்ணிதான். 

நாங்க முத முதலா எப்ப காசு குடுத்து குடிக்க தண்ணி வாங்குநோம்னு எனக்கு இப்பயும் நல்லா ஞாபகம் இருக்கு. அதுவும் பதினஞ்சு வருசத்துக்கு முன்னாடிதான். அப்ப நாங்க இருந்த புதுக்கோட்டை மாவட்டத்துல இருந்து , ராமநாதபுரம் மாவட்டுதுல இருக்குற முதுகுளத்தூருக்கு வந்தோம். அப்ப நாங்க முதுகுளத்தூருக்கு கிளம்புனப்ப எங்க பக்கத்து வீட்டுக்காரங்கலாம் கேட்டாங்க , ஏங்க புது ஊர்லலாம் குடிக்க தண்ணி எப்படிங்கனு? . அப்ப எங்க அம்மா  , குடிக்க ஒரு குடம் 50 காசுனு வாங்கனும்மாம்னு சொன்னாங்க. அங்க இருக்குறவங்கலாம் , அடி ஆத்தீ, என்னது  குடிக்கிற தண்ணிய காசு குடுத்து வாங்கனுமாம்லன்னு! அவ்ளோ ஆச்சரியப்பட்டாங்க. பாத்துக்குங்க அப்பா  நாங்க வாங்குனது ஒரு குடம் 50 பைசா, இப்ப நாங்க குடிக்கிற தண்ணி 20 ltr 80 ரூபா !. நிச்சயமா சொல்றேன், குடி தண்ணிக்கு காசானு கேட்ட அதே ஊர் இன்னைக்கு காசு கொடுத்து கேன் தண்ணி வாங்கித்தான் குடிப்பாங்க.

இப்ப நாம குடிச்சிட்டு போடுற 1 ltr தண்ணி பாட்டிலலாம், அப்ப பழைய பேப்பர் வண்டிக்காரங்கலாம் கொண்டு வருவாங்க . அந்த ஒரு காலி பாட்டில் 2 ரூபா. அப்ப உங்களுக்கு எப்படிங்க இந்த பாட்டிலலாம் கிடைக்குதுன்னு கேட்டா அவங்க , இதலாம் பணக்காரங்க 15 ரூபா , 20 ரூபான்னு வாங்கி குடிக்கிறது . அவங்கட்ட இருந்து இதை நாங்க வாங்கிட்டு வரும்வோம்னு சொல்லும்போது என்னது ஒரு லிட்டர் தண்ணி இருபது ரூபையானு  ஆச்சரியமா இருக்கும் .

ஒரு காலத்துல இந்த பாட்டில் தண்ணி , கேன் தண்ணிலாம் Status symbols.  ஆனா இப்ப அது அத்தியாவசியமா(க்கப்பட்டு)கிவிட்டது.

இந்த தண்ணி business ஒரு பணம் காச்சி மரம். கோடிக்கணக்கா பணம் கொழிக்குது. அதனாலதான் உள்ளூர் குடிசைத் தொழிலுல இருந்து உலகில இருக்குற பெரிய MNC வரைக்கும் இதுல ஈடுபடுறாங்க. இதுல பெரிய தொழில் சூச்சுமமே இருக்கு. எப்பயுமே வருசத்துக்கு ஒரு தடவ விக்கிற ஒரு பொருளுல இருந்து கிடைக்கிற பெரிய லாபத்தவிட , தினமும் யூஸ் பண்ற ஒரு  பொருள விக்கிறதுல கிடைக்குற சின்ன லாபம் பெரிசு. ஏன்னா இந்த சின்ன லாபம் நிலையானது, அதோட volume உம் பெரிசு. அதுல செம லாபம் கிடைக்கும். அதுதான் இந்த குடிக்கிற தண்ணி விசயத்துலயும் நடக்குது.

இப்ப இருக்குற business tactics லாம் ரொம்ப தெளிவானது. இப்பலாம் business ல Status ங்குறத விட அதிகமா முன் வைக்கப்படுவதுனா அது மூனு விஷயம்தான்.
  1. Safety
  2. Security
  3. Health Conscious .
ரொம்ப அழகான ஆனா வலிமையான tactics. கொஞ்ச நாளைக்கு முன்னாடி ஆள் அரவமற்ற  ஒரு மலைப்பாங்கான ஒரு இடத்துக்கு என் friends ஓட போயிருந்தோம். அப்ப அங்க சின்னதா ஒரு ஓடை தெளிவான நீரோட  ஓடிக்கிட்டு இருந்துச்சு. அத பாத்ததும் ஆசையாகி நான் போயி கொஞ்சம் தண்ணி அள்ளிக் குடிச்சேன். அப்ப என் மனைவி, ஏங்க அந்த தண்ணிலாம் குடிக்காதீங்க , அது என்ன தண்ணியோனு சொன்னப்ப நான் அதிர்ந்து போயிட்டேன்.  ஆள் அரவமற்ற இடத்துல இருக்குற  இந்த ஓடத் தண்ணி தெளிவானது, சுத்தமானது ஏன் சொல்லப் போனா கடைல கிடைக்குற பல பாட்டில் தண்ணிலாம் விட ரொம்ப ஆரோக்கியமனதுன்குறது ரொம்ப நல்லாவேத் தெரியும் . ஆனா அதையும் தாண்டி எழுற இந்த Health Conscious இருக்குல, அதுதான் business tactics, இப்படி மக்கள பயப்பட வச்ச அந்த விளைவுதான் அதோட மாபெரும் வெற்றி.


ஆனா இப்படி தயாரிக்குற தண்ணியும் ஆரோக்கியமானதாங்குறதும் விவாததிற்குரியது .


சின்ன வயசுல்லாம்  நினைச்சுக்குவேன், நாமும்  பெரிய பணக்காரனா ஆகி இப்படி தண்ணி பாட்டில்ல தண்ணி வாங்கி குடிக்கனும்னு. ஆனா இப்படி  நாம தினமும் குடிக்கிற அந்த தண்ணியையே காசு குடுத்து வாங்குற இந்த நிலைமை உருவாக்கப்பட்டத நினச்சு வெக்கப்படுறேன்.

லட்சக்கணக்கான வருடங்களா இந்த பூமியில் ஜீவராசிகள் குடிச்சுகிட்டு இருந்த தண்ணிய  நம்மால குடிக்க முடியாம செஞ்ச, அந்த குடி தண்ணியையே காசு குடுத்து வாங்குற மாதிரி செஞ்ச இந்த அதி பயங்கர மாற்றத்த நான் வெறுக்குறேன். இப்படி லட்சக்கணக்கான வருடமா நல்லா இருந்த தண்ணி கேட்டுப் போனது வெறும் 15 , 20 வருசத்துலதான். என்ன கொடும இது .


என்னடா இவன் அந்த காலத்துல (அந்த காலம்னா ரொம்ப காலம் இல்லங்க வெறும் 15,20 வருசம்தான்!), ஆத்துல தண்ணி மொண்டு குடிச்சேன் இப்ப  வேறு வழி இல்லாம பாட்டில்  தண்ணி குடிக்கிறேன்னு புலம்புறான் . சுத்தமான பாட்டில் தண்ணிய வளர்ச்சியோட அடையாளமா ஏத்துக்காத பழம் பிற்போக்குவாதியா இருக்குனான்னு நினைக்காதீங்க. நான் எந்த கவலையும் இல்லாம குடிச்ச அந்த சுத்தமான ஆத்துத் தண்ணிய அசுத்தமாக்குனது, அந்த அசுத்தத சரி பண்ணாம அந்த அசுத்தத்த மூலதனமா வச்சு பணம் பண்ணுறத எதோட அடையாளம்னு முதலில் புரிஞ்சுக்கோங்க .

இப்படி ஒரு மனுஷனுக்கு அடிப்படைத் தேவைகளில் ஒன்னான தண்ணியையே காசு கொடுத்து வாங்க வச்சதுக்கு நம்ம அரசாங்கம்தான் வெக்கப்படனும். இன்னும் கொஞ்ச நாள் ஆனா உயிர் வாழ அத்தியாவசியத் தேவையான ஆக்சிசனையே காசு கொடுத்து வாங்க வச்சாலும் நாமும் அதையும் எதிர்க்காமல்,  இதலாம் வளர்ச்சியின் கூறுகள்னு சொல்லி ஏத்துகத்தான் போறோம். அந்த காலம் ரொம்ப தூரம் இல்ல. 
Photo Courtesy : http://naturalsociety.com/the-bottled-water-deception/


Thursday, August 11, 2011

என்று தெளியும் இந்த நாடு ?

ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது அந்த நாட்டின் வளங்களைப் பொறுத்தது. இந்த வளங்கள் பெரும்பாலும் இயற்கை வளங்களையும் மனித வளங்களையும் குறிக்கும். சில நாடுகள் ( எ.கா தென் அமெரிக்க மற்றும் மத்திய கிழக்கு நாடுகள்) மிகுந்த இயற்கை வளங்களையும் குறைந்த மனித வளத்தையும் கொண்டும், சில நாடுகள் (எ.கா ஜப்பான்) அதிக மனித வளத்தையும் குறைந்த இயற்கை வளங்களையும் கொண்டும் வளர்கின்றன. மிகக் குறைந்த நாடுகளே சமச்சீரான இயற்கை வளங்களையும் , மனித வளத்தையும் கொண்டுள்ளன. அவற்றில் ஒன்று இந்தியா.

இந்தியா அளவிற்கு மனித வளத்தையும் , இயற்கை வளங்களையும் கொண்டுள்ள நாடுகள் மிகச் சிலவே. எ.கா அமெரிக்கா, சீனா போன்றவை மற்ற சில.
ஆனால் அந்த வளங்களை ஒரு நாடு எந்த அளவிற்கு முறையாக பயன்படுத்துகிறது என்பதைப் பொறுத்தே அதன் தலைமுறை முன்னேற்றம் உள்ளது. அதுவே அதனுடைய முதிர் தன்மையைக் ( Maturity) காட்டும்.

இந்தியாவில் இருக்கும் இயற்கை வளங்களில் கனிம வளங்களும் அடக்கம். ஒரு நாட்டிற்கு கனிம வளங்கள் மிக முக்கியமானது. உலக அளவில் இந்திய நிலக்கரி மற்றும் லிக்னைட் உற்பத்தியில் 3 வது இடமும் , பாரைட் உற்பத்தியில் 2 வது இடமும் , இரும்புத்தாது உற்பத்தியில் 4 வது இடமும், பாக்சைட் மற்றும் crude steel உற்பத்தியில் 5 வது இடமும் , மாங்கனீசு தாது மற்றும் அலுமினியம் உற்பத்தியில் முறையே 7 மற்றும் 8 வது இடமும் வகிக்கிறது.
இவ்வளவு வளங்கள் இந்தியாவில் உள்ளன.

ஆனால் இவ்வளவு வளங்களால் இந்தியாவிற்கு பயனா என்று பார்த்தால் இல்லை என்றே சொல்லலாம் . ஏனெனில் இவ்வளங்களில் மிகப் பெரும்பான்மை வெளி நாடுகளுக்கே ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

எடுத்துக்காட்டாக இரும்புத் தாதை எடுத்துக்கொள்வோம். உலக அளவில் இரும்புத்தாது அதிக அளவு இருக்கும் நாடுகளிலும் அவற்றை உற்பத்தி செய்யும் நாடுகளிலும் இந்தியா மிக முக்கியமானது . உலக அளவில் இரும்புத்தாது உற்பத்தியில் இந்தியா 4 வது இடம் வகிக்கிறது. ஆனால் இவற்றில் மிகப் பெரும்பான்மை வெளிநாடுகளுக்கே ஏற்றுமதி செய்யப்படுகிறது. அதுவும் முக்கியமாக சீனாவிற்கே ஏற்றுமதி செய்யப்படுகிறது. உலக அளவில் steel உற்பத்தியில் சீனா முதலிடம் வகிக்கிறது. அங்கு இருக்கும் ஆயிரக்கணக்கான steel ஆலைகளுக்கு தீனி போட இந்திய இரும்புத்தாது மிக அவசியம்.

சீனாவிற்கு , ஆஸ்திரேலியா மற்றும் பிரேசிலுக்கு அடுத்து அதிகமாக இரும்புத்தாது ஏற்றுமதி செய்யும் நாடு இந்தியாதான். இத்தனைக்கும் சீனாதான் இரும்புத்தாது உற்பத்தியில் உலக அளவில் முதலிடம் வகிக்கிறது. அது ஒரு ஆண்டுக்கு 800 million metric ton தயாரிக்கிறது. அதுவும் பத்தாமல் வருடத்திற்கு 245 mmt தயாரிக்கும் இந்தியாவிடமிருந்து இறக்குமதி செய்கிறது. இந்தியா உற்பத்தி செய்யும் இரும்புத்தாதில் 50% மேல் சீனாவிற்கே செல்கிறது.

உலக மார்கெட்டில் ஜூனில் 1 Ton இரும்புத் தாதின் (Iron ore) விலை Rs 7,500. இந்தியாவில் வெட்டி எடுக்கப்படும் இரும்புத் தாதில் மிகப் பெரும்பான்மை வெளிநாடுகளுக்கே ஏற்றுமதி செய்யப்படுகிறது. அதாவது 1 ton இரும்பு தாதிற்கு தனியார் சுரங்கங்களுக்கு கிடைக்கும் விலை Rs 7,500 . அதற்கு அவை அரசிற்கு செலுத்தும் royalty 1 டன்னிற்கு வெறும் Rs 125 (2009 முன் அது வெறும் Rs 29 :( . மேலும் இந்தியாவில் இருக்கும் இரும்புத்தாது சுரங்கங்கள் உட்பட அனைத்து சுரங்கங்களின் எண்ணிக்கை 2854 .அவற்றில் 755 யே அரசின் வசம் உள்ளது மீதி 2099 சுரங்கங்கள் தனியார் வசம் உள்ளன. ).

பொறுக்கவும் இப்பொழுது ஒன்றை நினைத்து பாருங்கள் ஒரு சாதாரண மனிதன் அவன் நிலத்தில் மண்ணிற்கு கீழே இருந்து இருந்து புதையல் எதுவும் எடுத்தால் அவை அனைத்தும் அரசிற்கே சொந்தம். அதில் அவனுக்கு பங்கு எதுவும் கிடையாது. ஆனால் அதே மண்ணிற்கு கீழே புதையலாக இருக்கும் கனிமங்களை வெட்டி எடுத்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் தனியார் நிறுவனங்கள் அரசிற்கு செலுத்தும் royalty வெறும் 1.6% தான் :( .

சரி at least ஏற்றுமதி செய்யும் இரும்புத்தாதை பதப்படுத்தி இரும்பாகவாவது (ஸ்டீல்) ஏற்றுமதி செய்கிறார்களா? அதுவும் கிடையாது. இரும்புத்தாதை இரும்பாக மாற்றினால் அதனால் பல பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். மேலும் அதில் லாபமும் அதிகம். அதிக வரி மற்றும் அந்நிய செலாவணி கிடைக்கும். அதுவும் நாம் செய்வதில்லை . அனைத்தையும் தாதுகளாகவே ஏற்றுமதி செய்கிறோம்.

பொதுவாக ஒரு நாட்டில் ஒரு கனிம வளம் அதிகமாக கிடைத்தால் பொதுவாக அந்த நாட்டில் அந்த நாட்டு மக்களுக்கு அதன் விலை குறைவாக இருக்கும். எடுத்துக்காட்டாக பெட்ரோலியம் அதிகமாக கிடைக்கும் அரபு நாடுகளிலும் , வெனிசுலா போன்ற நாடுகளிலும் பெட்ரோலின் விலை மிக குறைவு. வெனிசுலாவில் 1ltr பெட்ரோலின் விலை Re 1 தான்! . ஆனால் இந்தியாவில் Rs 70. இந்தியாவில் பெட்ரோலின் விலை மிக அதிகமாக இருக்கக் காரணம் இந்தியாவில் பெட்ரோலியம் அதிகமாக கிடைப்பதில்லை , இந்தியா பெட்ரோலியத்தை மிக அதிகமாக வெளிநாடுகளில் இருந்தே இறக்குமதி செய்கிறது. அதனால்தான் உலக மார்கெட்டிற்கு ஏற்றவாறு பெட்ரோலின் விலை மாறுகிறது என்பது இந்திய அரசின் கூற்று.

ஆனால் இரும்பைப் பொறுத்தவரை என்ன நடக்கிறது ? இந்தியா உலகிலேயே இரும்புத்தாது உற்பத்தியில் 4 வதாக இருந்த போதிலும் இந்தியாவில் மக்கள் வாங்கும் இரும்பின் விலை உலக மார்கெட்டில் என்ன விலையோ அதே விலைதான். அதாவது உலக மார்கெட்டில் இருக்கும் ஒரு டன் இரும்பின்( Steel) விலையான அதே Rs 32,000 (May மாதம்)கொடுத்துதான் இந்திய மக்களும் வாங்குகிறார்கள்( இந்த மாதம் இரும்பு விலை டன்னுக்கு Rs 40,000 தாண்டிருச்சு).

இது எப்படி இருக்கிறதென்றால் ஒரு தாய் தன் குழந்தையிடம், "வெளி மார்க்கெட்டில் ஒரு லிட்டர் பசும்பாலே 30 ரூபாய் ... நான் உனக்கோ அதைவிட சத்தான தாய்ப்பால் தருகிறேன் .. அதனால் நீ எனக்கு குறைந்தபட்சம் 30 ரூபாயாவது தரவேண்டும்" என்பது போல் உள்ளது. கேட்டால் இதற்குப் பெயர்தான் பொருளாதாரம். இதன் மூலம் வருவதுதான் பொருளாதார முன்னேற்றம் . எவ்வளவு மோசமான செயல் இது ?


கனிம வளங்கள் ஒரு நாட்டிற்கு இன்றியமையாதவை. அதுவும் இரும்பு போன்று தீர்ந்து போகும் கனிம வளங்கள் மிக இன்றியமையாதவை. பிரேசில் மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் இரும்பை ஏற்றுமதி செய்யலாம். ஏனெனில் அங்கு கனிம வளங்கள் மிக அதிகம் மேலும் அவற்றின் மக்கள் தொகை மற்றும் மக்கள் அடர்த்தி மிக குறைவு ( ஆஸ்திரேலியாவின் மொத்த மக்கள் தொகையே 2.2 கோடி தான். அதாவது இந்தியாவில் ஒரு வருடத்திற்கு அதிகரிக்கும் மக்கள்தொகையின் அளவு . ஆனால் அது இந்தியாவைப் போல 2.5 மடங்கு பெரியது). ஆனால் இந்தியா போன்ற மிக அதிக மக்கள்தொகை கொண்ட , இப்பொழுதான் வளர ஆரம்பித்திருக்கும் நாடுகளுக்கு இரும்பின் அவசியம் மிக அதிகம்.

ஒரு அறிக்கையின் படி உலக இரும்புத்தாதின் தேவை வருடத்திற்கு 2% என்று அதிகரித்தால் உலக இரும்பின் இருப்பு இன்னும் 64 வருடங்களில் தீர்ந்து விடும். ஆனால் இன்று இரும்பின் தேவை வருடத்திற்கு 10% அதிகரிக்கிறது. அதாவது அதிகபட்சம் இன்னும் 40 - 50 வருடங்களில் உலக இரும்பு எல்லாம் தீர்ந்து விடும் . அதற்கு அப்புறம் ஈயம் பித்தளைக்கு போட்ட பழைய இரும்பையே திரும்பி புதுபித்து உபயோகப்படுத்த வேண்டும். அதுவும் அப்ப அந்த பழைய இரும்பையும் வெளிநாடுகளிலிருந்துதான் இறக்குமதி செய்ய வேண்டும். ஏன்னா நாம்தான் அப்பொழுது எல்லாத்தையும் ஏற்றுமதி செய்திருப்போமே!. இப்படிப்பட்ட நிலையில் நாம் நம் இயற்கை வளங்களை கணக்கு வழக்கில்லாமல் ஏற்றுமதி செய்கிறோம்.

இது மட்டுமல்ல சட்ட விரோதமான சுரங்கங்களின் மதிப்பு இங்கு மிக அதிகம். கர்நாடகா மாநிலத்தில் மட்டும் இதன் மதிப்பு Rs 16,000 கோடி . இந்தியா முழுவதும் என்றால் இதன் மதிப்பு கிட்டத்தட்ட Rs 50,000 கோடி - Rs 60,000 கோடி. மேலும் இந்த சட்ட விரோத சுரங்கங்கள் ஊழலையும், தீவிரவாதத்தையும் ஊக்குவிக்கின்றன. மேலும் இவை சுற்று சூழல் மாசு கேட்டிற்கும் காரணமாகின்றன. மேலும் சுரங்கங்கள் அமையும் இடம் பெரும்பாலும் காடுகளாகவே உள்ளன. இதனால் அவை காடுகள் அழிப்பிற்கும், விலங்குகள், தாவரங்கள் அழிவதற்கும் காரணமாகின்றன. மேலும் அந்த இடங்களில் வாழும் பழங்குடி இன மக்களையும் வெளியேற்றி அவர்களின் வாழ்வாதாரங்களை பாதிக்கின்றன.

இப்பொழுது சுரங்கங்கள் அமைச்சகத்திற்கும், சுற்றுச் சூழல் அமைச்சகத்திற்கும் இடையே லடாய். அதாவது சுரங்கங்கள் அமைய சுற்றுச் சூழல் அமைச்சகத்தின் அனுமதி பெறவேண்டும் .ஆனால் காடுகள் இருக்கும் இடத்தில் அவற்றை அழித்து விட்டு சுரங்கங்கள் அமைக்க சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி தரமாட்டேன் என்கிறது. அதாவது கனிம வளத்தை அழித்து அவற்றை ஏற்றுமதி செய்வதோடு அல்லாமல் காடுகளையும் அழிக்க வேண்டுமாம் :( .

Wednesday, August 10, 2011

அதிதி தேவோ பவ :(

அன்று அந்த ஹோட்டலில் மதியம் சாப்டுட்டு பிரெண்ட் கூட அந்த ஹோட்டலின் வாசலில் நின்று பேசிக்கிட்டுருந்தேன். அப்ப அங்க ஒரு சில அழுக்கு மூட்டையுடன் வந்த ஒரு வயதான பிச்சைக்காரர் தன் கையில் இருந்த காலி தண்ணி பாட்டிலை ஹோட்டலை நோக்கி ஏதோ ஆட்டி ஆட்டி காட்டிக் கொண்டிருந்தார். அவரால் பேசக் கூட முடியவில்லை. கொஞ்ச நேரம் கழித்துதான் புரிந்தது அவர் தண்ணி வேணும்னு கேட்கிறார்னு. கொஞ்ச நேரத்தில் அந்த ஹோட்டலிலிருந்து வெளியே வந்த ஒருவர் அந்த பிச்சைக்காரரை அடிக்காத குறையாக விரட்டி அடித்தார். எனக்குப் பாவமாக இருந்தது. பொது குடிநீர் குழாய்களையும், பொதுக் கழிப்பிடங்களையும் காட்டிலும் அதிக சாராயக் கடைகளைக் கொண்டிருக்கும் நாட்டில் நாம் இந்தக் காட்சிகளைத்தான் காண முடியும்.

நான் அருகில் இருந்த ஒரு பெட்டிக் கடையில் தண்ணீர் பாக்கெட் வாங்கி விட்டு திரும்பிப் பார்த்தால் அந்த வயதானவர் வெகு தூரம் விலகி சென்றிருந்தார். அவரை நோக்கி தண்ணிப் பாக்கெட்டுடன் ஓடினேன். நான் அவரை நோக்கி ஓடி வருவதைப் பார்த்ததும் அவர் பயந்து விலகினார். நான் வாங்கிய அந்த தண்ணிப் பாக்கெட்டை நீட்டிய போது கூட , அவர் பயந்து கொண்டுதான் அதை வாங்கினார்.

திரும்பி வரும்போதுதான் அந்த ஹோட்டலின் பெயருக்குக் கீழே எழுதியிருந்த அந்த வாக்கியம் கண்ணில்பட்டது.

"அதிதி தேவோ பவ " :(

Photo Courtesy:

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhhrb9ENPW1evUS934vbsD75RWmuWYf_kr3flwIv__SppSptGTTmr0qoskrbME5xe_5ZQolhSBT9SYpCi-DoWslu7PMKtu-7PIlHNcrVhHdD7nDvGCAtTRonxChC0w-RF8oAGhcbQeGgtUg/

Thursday, August 4, 2011

தர்மம் Vs தொழில் தர்மம்

எந்த ஒரு தொழிலிலும் அந்த தொழிலுக்கான தர்மம் என்று ஒன்று உண்டாம். அதை தொழில் தர்மம் என்று சொல்வார்கள். ஒரு டிவியில் அயன் பட விமர்சனத்தின் போது இப்படி கூறினார்கள் "கடத்தல் தொழிலை நேர்மையாக செய்து வரும் பிரபு "( அது என்ன கடத்தல் தொழிலில் நேர்மை என்று புரியவில்லை :( ) . இப்படி ஒவ்வொரு தொழிலுக்கும் அந்த தொழிலுக்கான தர்மம் என்று ஒன்று உண்டாம்.
இப்படி ஒவ்வொரு தொழிலுக்கும் அதன் தொழில் தர்மம் என்று ஒன்றை கூறினாலும் அது தர்மத்துடன் ஒத்துப் போகிறதா என்று பார்க்க வேண்டும். சமீபத்தில் "கோ" படம் பார்த்தேன் . அது பத்திரிகை உலகை பற்றி கூறுவதாக இருக்கும். அந்த படத்தில் நக்சலைட்டாக வரும் போஸ் வெங்கட் , ஜீவாவை பார்த்து கூறுவதாக வரும் ஒரு வசனம் அழுத்தமாக இருக்கும். அவர் இப்படி கூறுவார் , "நீ பத்திரிகைகாரன்தானடா, செத்த பொணத்த எழுப்பி கூட நீ செய்தி வாங்கிருவ " என்பார். ஆனால் அந்த படத்தின் கிளைமாக்ஸ் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. அந்த படத்தில் ஜீவாவும், கார்த்திகாவும் தாங்கள் பத்திரிகை தர்மத்தின்படி நடக்கவில்லை என்பதால் தாங்கள் தங்கள் வேலையை ராசினாமா செய்கிறோம் என்பார்கள் . ஆனால் அதை ஏற்க மறுக்கும் அந்த பத்திரிகை ஆசிரியர் நீங்கள் பத்திரிகை தர்மத்தை மீறினாலும் நீங்கள் நாட்டிற்கு நல்லதுதான் செய்துள்ளீர்கள் அதனால் தங்கள் ராசினாமை ஏற்க மாட்டேன் என்பார். அந்த இடம் எனக்கு பிடித்திருந்தது. உண்மையான தர்மத்திற்கு முன் தொழில் தர்மங்கள் என்று கூறப்படும் மற்ற தர்மங்கள் முக்கியமில்லை.

என்னைப் பொறுத்தவரை தர்மம் ஒன்றுதான். இப்படி பத்திரிகை தர்மம் , போர் தர்மம் என்று தனியாக எதுவும் இல்லை. உண்மையான தர்மத்திற்கு முன் மற்ற எதுவுமே முக்கியமில்லை.
சிறிது காலத்திற்கு முன் என்னுடன் வேலை பார்த்த அலுவலர் ஒருவர் சென்னையில் பைக்கில் சென்று கொண்டிருந்திருக்கிறார். அவருக்கு முன் சென்ற பைக்கில் ஒரு கணவனும், மனைவியும் அமர்ந்திருக்க்கிறார்கள். அப்பொழுது திடீரென அந்த பைக் விபத்துக்குள்ளாகி அந்த கணவர் தூக்கி வீசப்பட்டு ஒரு பெரிய குழியில் வீசப்பட்டிருக்கிறார். யாருமே அந்த நபரை இறங்கி தூக்கவில்லை. உடனே இந்த நண்பர் அந்த குழிக்குள் இறங்கி அவரை தூக்கி இருக்கிறார். பார்த்தால் தலையில் மிகப் பெரிய அடிபட்டு ரத்தம் கொட்டுகிறது. அவர் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார். சுற்றி கூட்டம் . ஒருவரும் உதவிக்கு வரவில்லை. அப்பொழுது அங்கு வந்த தமிழ்நாட்டின் மிகப் பிரபலமான ஆங்கில பத்திரிக்கையின் நிருபர் ஒருவர் இந்த நண்பரை பார்த்து, "சார், தலையை கொஞ்சம் இப்படி திருப்பி பிடிங்க சார்" என்றிருக்கிறார். அவருக்கு பத்திரிக்கைக்கு புகைப்படம் எடுக்க வேண்டுமாம். அடிபட்டவரின் முகம் தெரியவில்லையாம். என்ன கொடுமை ? . இப்படியும் மனித ஜென்மங்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் . கேட்டால் அது அவர்களின் தொழில், கேட்டால் தொழில் தர்மம். எவ்வளவு கேவலம். இப்படித்தான் அந்த தொழில் தர்மத்தை காப்பாற்ற வேண்டுமா? .
இதே போன்றவர்கலாள்தானே இங்கிலாந்து இளவரசி டயானா உயிரிழந்தார். அப்படிதான் பணம் சம்பாதிக்கவும், தொழில் தர்மத்தை காப்பாற்றவும் வேண்டுமா? .

உலகப் புகைப்படங்களில் ஒரு புகைப்படத்திற்கு முக்கிய இடம் உண்டு. அது ஆப்பிரிக்காவில் ஒரு சிறுவன் பசிக்கொடுமையால் போராடிக்கொண்டிருப்பான். அவனுக்கு அருகில் ஒரு பிணம் தின்னிக் கழுகு அவனை சாப்பிடுவதற்காக அவன் இறப்பதற்காக காத்திருக்கும். பிணம் தின்னி கழுகுக்கு ஒரு பழக்கம் உண்டு. அது உயிரோடு இருக்கும் தன் இரையை சாப்பிடாது. தன் இரை இறக்கும் வரை அதன் அருகிலேயே காத்திருக்கும். தன் இரையின் இறப்பு நெருங்க நெருங்க அதை நெருங்கி வரும். இந்த புகைப்படம் உலகில் மிகப் பெரிய அதிர்வை ஏற்படுத்தியது. ஒரு பக்கம் அது ஆப்பிரிக்க கண்டத்தின் வறுமையை எடுத்துரைத்தாலும், ஒரு மனிதனுக்கான தர்மத்தையும் எடுத்துரைத்தது. அப்புகைப்படத்திற்கு உலகின் மிக பெரிய விருதான புலிட்சர் விருது கிடைத்தது. அதே சமயத்தில் அந்த புகைப்பட நிருபர் பற்றி மிகப் பெரிய கண்டனம் உலகெங்கும் எழுப்பியது. அந்த புகைப்பட நிருபர் அந்த பிணம் தின்னி கழுகைப் போல் அந்த சிறுவனுக்கு அருகில் அந்த புகைப்படத்திற்காக காத்திருந்தார் என்று உலகெங்கும் கண்டனம் எழும்பியது. அந்த புகைப்படம் எடுத்த பின் அந்த புகைப்பட நிருபர் அந்த இடத்தை விட்டு நகர்ந்துவிட்டார். அதற்கு பிறகு அந்த சிறுவனுக்கு என்ன ஆனது என்று யாருக்கும் தெரியாது. அந்த புலிட்சர் பரிசு கிடைத்த சிறிது நாட்களில் அந்த நிருபர் மன உளைச்சல் தாங்காமல் தற்கொலை செய்து கொண்டார்.
பிறர் துன்பத்தில் பொருளும் புகழும் பெறுவது எவ்வளவு மோசமானது.
சில காலங்களுக்கு முன் ஒரு தமிழக புகைப்படக்காரரின் பேட்டி ஒன்றைப் படித்தேன் . அவர் உலக அளவில் மிகப் புகழ் வாய்ந்தவர். உலகம் முழுவதும் சுற்றி அரிய புகைப்படங்களை எடுப்பவர். அப்படி ஒரு சமயம் அவர் உள்நாட்டு கலவரத்தால் பாதிக்கப்பட்ட ஒரு நாட்டிற்கு சென்ற போது , ஒரு சிறுமி நிர்வாணமாக வந்துள்ளாள். அவள் தன்னை பலர் சேர்ந்து கற்பழித்ததாகவும் , தன்னை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று கூறியிருக்கிறாள். அவளுக்கு வேண்டிய உதவியை அந்த நிருபர் செய்துள்ளார். ஏனோ அந்த சிறுமியை அந்த நிலையில் புகைப்படம் எடுக்க அவருக்கு தோன்றவில்லை. இதை பற்றி அவருடைய நண்பரிடம் கூறியபோது அவர் நண்பர் நீ பத்திரிகை தர்மத்தை மீறிவிட்டாய். அவளை அந்த நிலையில் புகைப்படம் எடுத்திருக்கவேண்டும், நீ உலகப் புகழ் பெற்றிருப்பாய் என்றிருக்கிறார். ஆனால் அதற்கு அந்த புகைப்பட நிருபர் அந்த சிறுமியின் நிலையை எனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள விரும்பவில்லை என்றிருக்கிறார்.

மேற்கூறியவற்றில் எது தர்மம் என்பது உங்களுக்கே புரியும்.

Friday, June 24, 2011

You too Sachin?


கொஞ்ச நாளுக்கு முன்னாடி சச்சின் டெண்டுல்கர் வருமான வரித்துறையிடம் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் தனக்கு வருமான வரி சட்டத்தின் Section 80RR இன் கீழ் வருமான வரி விலக்கு தரவேண்டும் என்று கேட்டிருந்தார். அந்த அதிகாரி சச்சினை பற்றியும் அவருடைய தொழிலைப் (Profession) பற்றியும் விளக்குமாறு கேட்டிருந்தார். அதற்கு நம் சச்சின் தன்னுடைய தொழில் நடிப்பு என்றும் தான் ஒரு விளம்பர மாடல் என்று குறிப்பிட்டு இருந்தார் . மேலும் நடிப்பு மூலம் வரும் வருமானத்தை "business and profession" மூலம் வரும் வருமானம் என்றும் , கிரிக்கெட் மூலம் வரும் வருமானம் "income from other sources" என்றும் குறிப்பிட்டு இருந்தார். இதன் மூலம் தான் ஒரு non-professional கிரிக்கெட்டர் என்றும் அதனால் தனக்கு வரி விலக்கு அளிக்க வேண்டும் என்று கூறி இருந்தார்.அதற்கு அந்த அதிகாரி Sachin Tendulkar யே Professional Cricketer இல்லையென்றால் பின் யார்தான் இந்த உலகத்தில் Professional Cricketer ஆக இருக்க முடியும் என்று திரும்பி கேட்டு இருக்கிறார்.

உடனடியாக சச்சினின் வாதத்தை ஏற்க மறுத்த அந்த அதிகாரி இந்த விளம்பர கம்பனிகள் சச்சின் டெண்டுல்கர் ஒரு Professional Cricketer என்பதாலையே அவரை தங்கள் விளம்பரங்களில் நடிக்க அழைக்கின்றன. மேலும் இவர் நடிக்கும் விளம்பரங்கள் அனைத்தும் சச்சின் டெண்டுல்கர் ஒரு கிரிக்கெட்டர் என்பதையே பிரதிபலிக்கின்றன. இந்த விளம்பர கம்பனிகள் அனைத்தும் சச்சின் டெண்டுல்கர் ஒரு Cricket Legend என்பதாலையே ஒப்பந்தம் செய்கின்றன (It is important to note that the company that wants Tendulkar to endorse its brand uses him because he is Sachin Tendulkar, the cricketing legend) என்றார். இதை சச்சின் ஏற்கவில்லை.

எனக்கு ஒன்று புரியவில்லை. கிரிக்கெட்டில் 70 உக்கும் மேற்பட்ட உலக சாதனைகள் பண்ணி இருக்கும் சச்சின் டெண்டுல்கரே ஒரு Professional Cricketer இல்லைனா வேறு யாருதான் இந்த அகில அண்ட சராசரத்துல Professional Cricketer ? . இதை சச்சின் தான் விளக்க வேண்டும். At least Professional Cricketer னா அதற்கு அர்த்தம் என்னனாவது விளக்க வேண்டும்.

இப்படி, தான் ஒரு non-professional cricketer என்றும் தன்னுடைய தொழில் நடிப்பு என்றும் கூறியதன் மூலம் சச்சின் பெறப்போகும் ஆதாயம் Rs 5,92,31,211 ல Rs 2,08,59,707 . இந்த ரெண்டு கோடி ரூபாய்க்காக சச்சின் தன்னை ஒரு நடிகர் என்றும் , நடிப்புதான் தன்னுடைய தொழில் என்றும் , தான் ஒரு non-professional cricketer தான் என்றும் கூறுவது யாரால் ஏற்றுக்கொள்ள முடியும் என்று தெரியவில்லை.

ஏன் சச்சின் சில கோடி ரூபாய்களுக்காக தான் இத்தனை நாள் கட்டி வளர்த்த பெயரையும், இந்த நாட்டு மக்கள் அவர் மேல் வைத்திருக்கும் பாசத்தையும் , மரியாதையையும் , ஏன் இந்த உலகம் முழுவதுமே சச்சினைதான் கிரிக்கெட்டின் வழிகாட்டியாக எண்ணும் அவருடைய கோடானுகோடி ரசிகர்களை இப்படி ஏமாற்றுகிறார்?. காசுக்காக அலையும் , பல பித்தலாட்டங்களை செய்யும் அரசியல்வாதிகளைப் பார்த்து ஏமாற்றமடைந்திருக்கும் இந்த நாட்டு மக்களுக்கு சச்சினின் இந்த செயல் நிச்சயம் மிகப் பெரிய அதிர்ச்சிதான்.

இந்த உலகின் இதுவரை இருந்த கிரிக்கெட்டர்களில் மிகச் சிறந்தவர் யார் பிராட்மேனா? ரிச்சர்ட்சா ? சோபர்ஸா? சச்சினா? என்று உலகம் முழுதும் விவாதித்துக்கொண்டிருக்கும் இந்த வேளையில் சச்சின் நான் criketer இல்லை தான் ஒரு நடிகர்தான் என்று தானே கூறுவது என்னைப் போன்ற அவருடைய கோடானு கோடி ரசிகர்களுக்கு மிகுந்த அதிர்ச்சி தருகிறது . இப்படிதான் சச்சின் சில கோடிகளுக்காக தன்னை வளர்த்த கிரிக்கெட்டையும், தன்னை மிகச் சிறந்த கிரிக்கெட்டர் என்றும் போற்றும் கோடானு கோடி ரசிகர்களையும் ஏமாற்றுவதா? . இது " If Cricket is religion , Sachin is god" ங்குர ரசிகர்களின் முகத்தில் கரியைப் பூசுவது போல் இல்லையா ?


26/11 மும்பை தாக்குதலுக்கு பின் இங்கிலாந்துக்கு எதிராக நடந்த டெஸ்டில் தான் சதம் எடுத்த பின், இந்த சதத்தால் புண்பட்டிருக்கும் என் நாட்டு மக்கள் சிறிது சந்தோசப்பட்டாலே அதை என் வாழ்வின் மிகப் பெரிய பாக்கியமாக கருதுவேன் என்று கூறிய அந்த சச்சின் எங்கே? இல்லை சில கோடி பணத்திற்காக தான் கிரிக்கெட்டரே அல்ல தான் ஒரு நடிகர் என்று கூறும் சச்சின் எங்கே?

சச்சின் இதே போன்ற ஒரு தவறை முன்பும் செய்தார். Fiat கார் நிறுவனத்தால் பரிசாக கொடுக்கப்பட்ட Ferrari காருக்கு வரி விலக்கு கேட்டு மிகுந்த சர்ச்சையில் சிக்கினார். அப்பொழுதும் இதே போன்ற கண்டனத்திற்கு உள்ளானார். ஆனால் தற்பொழுது வரி விலக்கிற்காக தன்னை ஒரு நடிகர்தான் என்று கூறிக்கொள்வது அதை விட மோசம்.

சச்சின் டெண்டுல்கர் எப்பொழுது விளையாடும் போது இந்தியாவைத்தான் முன்னிருத்துவார். அப்படிப்பட்ட சச்சின் இந்த மாதிரி செய்தது எந்த விதத்தில் நியாயம் என்று புரியவில்லை. At least சச்சின் இப்படி வரி விலக்கு மூலம் பெற்ற பணத்தை ஏதாவது ஒரு ஆதரவற்றோர் இல்லத்திற்கு அளிப்பதுதான் அவருடைய புகழுக்கு வளம் சேர்க்கும். இல்லையேல் Sachin மக்களால் வெறுக்கப்படும் அரசியல்வாதிகளுக்கு இணையாகதான் பார்க்கப்படுவார். வேண்டாம் சச்சின்.

P.S:
1: தன்னுடைய முயற்சியில் சற்றும் தளராத விக்கிரமாதித்தன், வருமான வரித்துறை tribunal ஐ அணுகி வரி விலக்கு பெற்றார் :( .
2: சச்சினின் மிகத் தீவிரமான ரசிகனான என்னையே இப்படி எழுத வைத்தது கொடுமை. Shame on Sachin

Main article ஐ இங்கே படிக்கவும்

http://indiatoday.intoday.in/site/story/actor-sachin-tendulkar-gets-tax-break/1/139537

இவை சச்சினின் சாதனைகள்
http://readerszone.com/people/sachin-tendulkar.html
http://en.wikipedia.org/wiki/ESPN_Legends_of_Cricket
http://www.sachinandcritics.com/sachin_rec.php

Photo Courtesy :
http://www.instablogsimages.com/images/2010/05/07/sachin-tendulkar-poster-in-allahabad_WNGzj_17022.jpg

Thursday, August 26, 2010

இந்த நாடும் இந்த நாட்டு மக்களும் நாசமாய்ப் போகட்டும் ...


எனக்கு மிகவும் பிடித்த விளையாட்டு வீரர்கள் விஸ்வநாதன் ஆனந்த் மற்றும் சச்சின் டெண்டுல்கர். இருவருமே இந்தியாவை பல வகையிலும் பெருமைப்பட வைத்தவர்கள். இருவருடைய சாதனைகளுமே பிரமிக்கப்பட வைப்பவை. எனக்கு ஒருவரை பிடிக்க வேண்டும் என்றால் அவர் இந்தியராக இருக்க வேண்டும் . அவர்கள் இந்தியாவை முற்றிலும் முழுதாக நேசிக்க வேண்டும். ஆனந்த் மற்றும் டெண்டுல்கர் இருவருமே அப்படிப்பட்டவர்கள் தான் . இருவருமே தங்களை இந்தியன் என்று சொல்லிக் கொள்வதில் மிகவும் பெருமைப்படுபவர்கள்.

இதில் விஸ்வநாதன் ஆனந்த் நான்கு முறை உலக சாம்பியன் ஆனவர். இந்திய அரசு அவருக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதும், பத்ம விருதும் அளித்து தன்னை பெருமைபடுத்திக் கொண்டது.

இப்பொழுது பிரச்சினை என்னவென்றால் சில நாட்களுக்கு முன் ஹைதராபாத் பல்கலைகழகம் ஆனந்திற்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி கவுரவிக்க எண்ணியது. அதற்க்கு இந்திய மனித வளத்துறை அமைச்சகத்தின் ஒப்புதல் பெற வேண்டும். அதற்காக விண்ணப்பத்தை அனுப்பிய போது தான் பிரச்சினை ஆரம்பித்தது. இந்திய மனிதவளத்துறை அமைச்சகத்தின் இயக்குனரான சஹாய் , ஆனந்த் இந்திய குடிமகன் அல்ல என்று பிரச்சினையை ஆரம்பித்தார்.

ஆனந்த் கடந்த சில ஆண்டுகளாக ஸ்பெயினில் குடியிருந்து வருகிறார். அவர் அதிக அளவு ஐரோப்பியன் நாடுகளில் நடந்து வரும் செஸ் போட்டிகளில் கலந்து கொள்ள வேண்டி இருப்பதால் ஸ்பெயினில் குடி இருப்பது அவருக்கு சவுகரியமாக உள்ளது. அதானலயே அவர் அங்கு குடி இருக்கிறார். இருந்தபோதிலும் அவர் இந்திய குடிமகனாகவே உள்ளார். இந்திய பாஸ்போர்ட்டை வைத்திருக்கிறார். எல்லாவற்றிர்க்கும் மேலாக அவர் பங்கு பெரும் எல்லா போட்டிகளில் இந்திய மூவர்ணக்கொடியைத் தாங்கி இந்தியாவின் சார்பாகவே விளையாடுகிறார்.

இந்த நிலையில் சஹாய்க்கு , ஆனந்த் இந்தியரா இல்லையா என்ற சந்தேகம் இப்பொழுது வந்திருக்கிறது. இது வெறும் சந்தேகமா இல்லை இதற்க்கு பின்னணியில் வேறு ஏதானும் உள் நோக்கம் இருக்கிறதா என்று தெரியவில்லை . எனக்கு தமிழன், தெலுங்கன், வட இந்தியன் என்று பேதம் பிரித்துப் பார்ப்பது என்னை அதிகம் கோபமூட்டும் செயல் . நான் எப்பொழுதும் அனைவரையும் இந்தியன் என்றே எண்ணி வந்திருக்கிறேன். ஆனால் இப்பொழுது நடைபெறும் நிகழ்ச்சிகளை கண்டால் ஆனந்த் தமிழன் என்பதால் தான் இத்தனை வேறுபாடா, துவேசமா என்று எண்ணத் தோன்றுகிறது.

ஆனந்த் எப்பொழுதும் தன்னை இந்தியன் அல்லாதவனாக காட்டிக்கொண்டதே இல்லை. அவரை தாங்கி வரவேற்று தங்கள் நாட்டுக் குடியுரிமையைத் தர எவ்வளவோ பணக்கார நாடுகள் தயாராய் உள்ளன . இருந்தாலும் ஆனந்த் இந்தியாவே கதி என்றிருக்கிறார். அவரின் தேசப் பற்று குறித்து எள்ளளவும் சந்தேகம் இல்லை. ஆனந்த் போன்றவர்களுக்கே இத்தகைய கதி என்றால் சாதாரணமானவர்களை என்ன சொல்லுவது.

இவ்வளவும் நடந்த பிறகு இந்திய மனித வளத்துறை அமைச்சர் கபில் சிபல் இப்பொழுது வந்து மன்னிப்பு கேட்கிறார். ஆனால் ஆனந்த் அந்த கவுரவ டாக்டர் பட்டத்தை ஏற்க மறுத்துவிட்டார். எனக்குத் தெரிந்து ஆனந்த் செய்தது மிகச் சரி. கபில் சிபல் இந்திய சிவப்பு நாடாத்தன்மையை இதற்க்கு குற்றம் சாட்டுகிறார்.

இந்தியாவில் பிறந்த போதும் அமெரிக்காவில் குடியேறி அமெரிக்கராகவே மாறி விட்ட கல்பனா சாவ்லா இறந்த போது இந்த நாடே துக்கம் கொண்டாடியது , அவர் பெயரில் விருது எல்லாம் அறிவித்தது. அதே போன்று அமெரிக்கராக மாறி விட்ட சுனித வில்லியம்ஸ் குறித்து இந்த நாடே பெருமைப்படுகிறது. இதே போன்று சிறிது காலத்திற்கு முன் நோபெல் பரிசு வென்ற வெங்கி ராமகிருஷ்ணன் குறித்து அதிகம் பேசினார்கள் . இத்தனைக்கும் வெங்கி, நம் மக்களெல்லாம் அவருக்கு பாராட்டு மெயில்களா அனுப்பியபோது , இவர்கள் என் இன்பாக்ஸ் ஐ தேவை இல்லாமல் ரொப்புகிறார்கள் என்று கவலைப்பட்டார். நாம் ஒன்றை மறந்து விடுகிறோம் இவர்கள் இந்தியா வேண்டாம் என்று சென்று வேறு நாட்டு குடியுரிமை பெற்றவர்கள். அவர்களுக்கு கொடுக்கும் மரியாதை, வரவேற்ப்பில் ஒரு சிறு பகுதியாவது இந்தியாவே கதி என்று இந்தியாவிற்காக பங்கேற்ப்பவர்களுக்கு நாம் கொடுக்கிறோமா என்று கேட்டால் அது இல்லை .

இதிலும் பெரும் கேடு என்னவென்றால் இதுவரை இந்த பிரச்சினையில் தமிழக தலைவர்கள் எவரும் வாய் திறக்காததுதான். நம் முதல்வர் இன்னும் வாய் திறக்கவில்லை . இது போன்ற பிரச்சினை இந்நேரம் ஏதேனும் மராட்டியருக்கு ஏற்ப்பட்டிருந்தால் இந்நேரம் பாராளுமன்றமே கதி கலங்கி இருக்கும். கருணாநிதிக்கு ஜாதி பாத்து ஆதரவு கொடுத்து ஒட்டு வாங்குவதுதான் குறி. அவர் சூத்திரர் , சூத்திரர் அல்லாதோர் என்று எப்போதும் பிரித்து பார்த்து தான் ஆதரவு கொடுப்பர் . என்ன பண்ணுவது ஆனந்த் மேட்டுக் குடி இளைஞராய் போய் விட்டாரே பின் எப்படி ஆதரவு கிடைக்கும் . இன்னமும் நாம் எத்தனை காலத்திற்குதான் இந்த ஜாதி, இன,வர்க்க வேறுபாடுகள் பார்க்கப் போகிறோமோ தெரியவில்லை.


இந்தியாவைப் பற்றிப் பெருமிதமும் , இந்திய ஒற்றுமையில் அதிக ஈடுபாடும் கொண்ட என்னைப் போன்றவர்களையே இப்படி பாகுபாடு குறித்து சிந்திக்கவைத்தால் இந்த நாடு உருப்படாது. ஆனந்த் போன்ற உண்மையான இந்திய குடிமகனுக்கு இந்த கதி என்றால் , பின் இந்த நாடும் இந்த நாட்டு மக்களும் நாசமாய்ப் போகட்டும்.

photo courtesy : The Hindu
http://www.thehindu.com/news/national/article591737.ece
http://www.thehindu.com/news/article593969.ece
http://www.thehindu.com/news/national/article591764.ece

http://www.thehindu.com/news/national/article592239.ece

http://www.thehindu.com/news/national/article590162.ece

Monday, April 12, 2010

நெஞ்சு பொறுக்குதில்லையே ...

"நெஞ்சு பொறுக்குதில்லையே
இந்த நிலை கெட்ட மனிதரை நினைத்து விட்டால் "

என்று தான் சென்ற வாரம் மனம் கொதித்தது. சென்ற வாரம் 75 CRPF காவலர்கள் மாவோயிஸ்ட் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டதை நினைத்தால் நெஞ்சு பொறுக்கவில்லை. இந்தியா எப்பொழுதும் தீவிரவாதிகள் விசயத்தில் அமெரிக்கா மற்றும் பிற நாடுகளைப் போன்று தீவிரமாக நடந்து கொள்வதில்லை. அதுவும் உள்நாட்டு பாதுகாப்பில் காட்டும் மெத்தனம் சொல்லி மாளாது. அந்த மெத்தனம் தான் CRPF காவலர்களின் மீது நடந்த தாக்குதல். மாவோயிஸ்ட்டுகள் எந்த அளவு துணிவு பெற்றிருந்தால் CRPF காவலர்களை தாக்கும் அளவிற்கு அவர்கள் மனம் சென்றிருக்கும். மாவோயிஸ்ட் தீவிரவாதிகளை நாம் ரொம்ப தூரம் வளர விட்டு விட்டோம். இந்த அளவிற்கு அவர்களை துணிய விட்டிருக்ககூடாது. இதுவே அமெரிக்க காவலர்களின் மீது தாக்குதல் நடந்திருந்தால் அதன் பிறகு நடக்கும் கதையே வேற. அப்பொழுது அவர்கள் மனிதநேயம் , மண்ணாங்கட்டி நேயம் எல்லாம் பார்த்திருக்க மாட்டார்கள். தீவிரவாதிகளை அழித்து ஒழித்துருப்பார்கள்.

இந்தியா இன்னமும் தீவிரவாதத்திற்கு பாகிஸ்தானையே மட்டும் குறை கூறிக்கொண்டிருக்கக் கூடாது. சொல்லப் போனால் பாகிஸ்தான் தீவிரவாதிகளை ஒடுக்கும் விசயத்தில் நமக்கும் மேலே. அவர்கள் நிசமாகவே தீவிரவாதிகளை ஒழிக்கவேண்டும் என்ற எண்ணத்தில் ஒழிக்கிறார்களா இல்லை அமெரிக்க நிர்பந்த்தத்தின் காரணமாக ஒழிக்கிறார்களா என்பது வேறு விஷயம். அவர்கள் தீவிரவாதிகளை ஒழிக்கிறார்கள். தினமும் DAWN செய்தித்தாளில் வடக்கு வஜிரிஸ்தானில் இத்தனை தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர், தெற்கு வஜிரிஸ்தானில் இத்தனை தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர், ஓரகசையில் இத்தனை தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர், NWFP தீவிரவாதிகளுக்கும் , ராணுவத்திற்கும் சண்டை என்று ஏதேனும் சேதி வந்து கொண்டிருக்கும். உண்மையில் சொல்லப் போனால் தீவிரவாதிகளை ஒழிக்கவேண்டும் என்பதில் பாகிஸ்தானிற்கு இருக்கும் உறுதி கூட நமக்கு கிடையாது.

சொல்லப்போனால் காஷ்மீரில் தீவிரவாதம் குறைந்துவிட்டது. பீகார், சட்டிஷ்கர், மேற்கு வங்காளம், போன்ற வடக்கு, மேற்கு மற்றும் வட கிழக்கு மாநிலங்களில்தான் தீவிரவாதம் அதிகரித்துவிட்டது. முதலில் நாம் நம் காலுக்கு கீழே விஷச்செடி முளைத்து விட்டது என்பதை உணர வேண்டும். அப்பொழுதான் அதனை களைய முடியும். உலகில் மூன்றாவது மிகப் பெரிய ராணுவம் வைத்துக் கொண்டு என்ன பிரயோசனம், நம்மால் உள்நாட்டு தீவிரவாதிகளை ஒழிக்க முடியவில்லையே.

மாவோயிஸ்ட்கள் பற்றிய ஒரு அறிக்கை 2050 இல் மாவோயிஸ்ட்டுகள் இந்தியாவைக் கைபற்றிவிடுவார்கள் என்கிறது. அப்படியென்றால் நிலைமை எவ்வளவு மோசமாயிருக்கிறது என்பதை எண்ணுங்கள். நம்மிடம் தீவிரவாதிகளை ஒழிக்க திறமை இல்லாமல் இல்லை. நமக்கு இப்பொழுது உடனடி தேவை தீவிரவாதிகளை ஒழிக்க வேண்டும் என்ற உறுதியான நெஞ்சம் கொண்ட ஒரு தலைமை. இல்லையேல் இந்தியாவை அந்த ஆண்டவனும் காப்பாற்ற முடியாது.

Wednesday, March 3, 2010

கல்யாணமும் ஜோசியமும்

நம் ஊரில் பெரும்பாலும் ஜாதகம் பார்க்காமல் அநேக திருமணங்கள் நிச்சயிக்கப்படுவதில்லை. இதற்க்கு விதி விலக்கு காதல் திருமணங்களே. பெற்றோர் பார்த்து நிச்சயிக்கப்படும் திருமணங்கள் மணப்பெண் , மணமகன் -ஐ பார்பதைக் காட்டிலும் 14 ஜோசியக் கட்டங்களைப் பார்த்தே நிச்சயிக்கப்படுகின்றன. ஜோசியம் பார்ப்பவர் சொல்லுவதே வேத வாக்கு. இதுலயும் எல்லா ஜோசியக்காரர்களும் ஒரே மாதிரி சொல்லுவார்களா என்றால், மாட்டார்கள். ஒருவர் கணப் பொருத்தம் முக்கியமில்லை என்பார் மற்றொருவர் கணப் பொருத்தம் இல்லையென்றால் திருமணமே செய்யாதீர்கள் என்பார். ஒருவர் ஜாதகத்தில் மாங்கல்ய தோஷம் உள்ளது என்பார் இன்னொருவர் இல்லையென்பார். இப்படி முரண்பட்டவர்களின் வாக்கை வேத வாக்காகக் கொண்டு முரணான திருமணங்கள் நிச்சயிக்கப்படுகின்றன.

இதில் பெரிய கொடுமை என்னவென்றால், பெண் வீட்டில் பையனையும், பையன் வீட்டில் பெண்ணையும் ரொம்ப பிடித்திருக்கும். குணம், வேலை, நல்ல குடும்பம், அழகு என அனைத்துமே இரு வீட்டிலும் பொருந்தி வரும். கட்டக் கடைசியாக ஜாதகம் என்ற ஒன்றைப் பார்ப்பார்கள். அங்கு ஜோசியர் பொருத்தம் 5/10 என்று பாஸ் மார்க் தான் வாங்கியிருக்கு, distinction லாம் இல்ல என்று கூறி அந்த சம்பந்தத்தையே நிறுத்தி விடுவார்கள். (ஜாதகத்தில் 10 பொருத்தம் சரியாக பொருந்துகின்றனவா என்று பார்ப்பார்கள், அது பொருந்துவதைப் பொறுத்து 5/10, 8/10 என்று மார்க் போடுவார்கள்.) ஆக made for each other ஆகிய ஒரு பொருத்தம் ஜாதகம் சரியில்லை என்று நிறுத்தப்பட்டுவிடும்.

சரி ஜாதகம் சரியாக அமைந்து, செய்துவைத்த திருமணங்கள் அனைத்தும் வெற்றிக்கொடி நாட்டுகின்றனவா என்றால் அதுவும் கிடையாது. ஜாதகம் பார்த்து 9/10 என distinction வாங்கிய பல திருமணங்கள் ஆரம்பத்திலயே முறிவு பெறுகின்றன. சரி இப்பொழுது இதற்க்கு என்ன சொல்லப் போறீர்கள் என்று கேட்டால் அங்கு விதி என்ற ஒன்றைச் சொல்லுவார்கள். ஆக இங்கு ஜாதகம் செல்லாது.

அமைந்தால் ஜாதகம், முறிந்தால் விதி இப்படி எதற்கும் ஒரு காரணம் வைக்கிறார்கள்.

சரி ஜாதகத்தை நம்பலாமா கூடாதா ? என்று கேள்வி எழுப்பினால், விடை கிடைப்பதற்குப் பதிலாக அது அதற்க்கு ஆதி கேள்வியான, விதி இருக்கா இல்லையா ? என்ற கேள்வியையும், அது அதற்க்கு ஆதி கேள்வியான, கடவுள் இருப்பது உண்மையா இல்லையா ? என்பதையும் எழுப்புகிறது. இப்படி முரண்பட்ட கேள்விகளைக் கொண்டு முச்சந்தியில் நிற்கின்றன திருமணங்கள்.

ஜாதகம் இருப்பது உண்மையென்றால் எப்படி 9/10 வாங்கிய திருமணங்கள் முறிகின்றன, 4/10 வாங்கிய வரன்கள் (இவை பெரும்பாலும் காதல் திருமணங்கள்) made for each other ஆக உள்ளன. இதற்காக நான் காதல் திருமணங்கள் அனைத்தும் வெற்றி பெறுகின்றன என்று கூறவில்லை. அவைகள் முறிந்தால் ஜாதகம் காரணமாக இருக்காது, கல்யாணத்திற்கு முன் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளாமல் ஒருவரைப் பற்றி மற்றொருவர் கொண்டிருந்த மாய பிம்பங்களே காரணமாக இருக்கும்.

திருமணங்களை மனதைப் பார்த்து நிச்சயுங்கள் கட்டத்தைப் பார்த்து நிச்சயிக்காதீர்கள்.

Monday, March 1, 2010

காட்டுமிராண்டிகள்

கடந்த வாரம் என் நண்பரின் நண்பராகிய ஜெர்மனி நாட்டைச் சார்ந்த ஒரு பெண் சென்னை வந்திருந்தார். அவரை அந்த நண்பர் சென்னையைச் சுற்றியுள்ள சில முக்கியமான சுற்றுலா தளங்களுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். அங்கெல்லாம் அப்பெண்ணுக்கு கசப்பான அனுபவங்களே நேர்ந்துள்ளன.

நம் ஊரில் சுற்றுலா தளங்களில் இருக்கும் மிக முக்கியமான பிரச்சினை, பிச்சைக்காரர்கள். இப்பிச்சைக்காரர்கள் எவரையும் விடுவதில்லை, குறிப்பாக வெளிநாட்டுக்காரர்களை. இப்பிச்சைக்காரர்கள் எவரேனும் வெளிநாட்டுக்காரர்களைப் பார்த்தால் அவ்வளவுதான், அவர்களைச் சுற்றிக் கூடி, எவ்வளவு முடியுமோ அவ்வளவு காசு பறிக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். இதனால் வெளிநாட்டுகாரர்கள் நம் சுற்றுலா தளங்களை நிம்மதியாக பார்க்க முடிவதில்லை. இதே அனுபவம் இப்பெண்ணிற்க்கும் நேர்ந்துள்ளது.

ஒரு நாள் இந்த ஜெர்மானியப் பெண் ஒரு டீக் கடையில் ஒரு டீயும் இரண்டு பஜ்ஜியும் சாப்பிட்டு விட்டு நூறு ரூபாய் கொடுத்துள்ளார். அந்த டீக் கடைக்காரன் ஒரு டீ, இரண்டு பஜ்ஜிக்கு நூறு ரூபாய் சரியாகிவிட்டது என்று கூறி மீதி சில்லறை கொடுக்க மறுத்துள்ளான். அதற்க்கு இந்த ஜெர்மானியப் பெண் "i know value of money.This is not worth for 100 Rs" என்று கூறி சண்டை போட்டுள்ளார். பிறகு அந்த சென்னை நண்பர் வந்தபிறகே இந்த டீக் கடைக்காரன் சில்லறை கொடுத்துள்ளான். நம் ஊரைப் பொறுத்தவரையில் வெளி நாட்டுக்காரர்கள் அனைவரும் பணக்காரர்கள். அவர்களிடம் இருந்து எவ்வளவு பணம் பறிக்க முடியுமோ அவ்வளவு பறிக்க வேண்டும் என்று நினைப்பு. இதற்க்கு ம(மா)க்களை மட்டுமே குறை சொல்லிப் பயனில்லை. இந்த புத்தி அரசாங்கத்துக்கே உண்டு, அதனால் தான் சுற்றுலாத் தளங்களில் இந்திய மக்களுக்கு நுழைவுக் கட்டணம் 5 ரூபாய் என்றால் வெளிநாட்டுக்காரர்களுக்கு 50 ரூபாய் என்றிருக்கும். இத்தனைக்கும் இந்தியா வரும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் பெரும்பாலும் மாணவர்களாகவோ அல்லது வெளிநாட்டில் மத்திய தர மக்களாக இருப்பவர்கள்தான், பணக்காரர்கள் அல்ல. பணக்காரர்கள் எவரும் இந்தியா வருவதில்லை. அவர்கள் வெனிஸ், சுவிஸ் என்றுதான் செல்வார்கள். நாம் பணம் பறிப்பது இந்த மாணவர்களிடம் இருந்துதான். இந்த ஜெர்மானியப் பெண்ணும் ஒரு மாணவர்தான் மேலும் அவர் ஜெர்மானிய மத்திய தர வகுப்பைச் சார்ந்தவர்தான். சென்னையில் ஒரு காலச்சார நிகழ்ச்சியில் பங்கேற்ப்பதர்க்காக ஒரு வருடம் ஜெர்மனியில் பகுதி நேர வேலை செய்து, பணம் சேர்த்து சென்னை வந்துருக்கிறார்.

ஒரு நாள் நானும் மதுவும் பைக்கில் சென்று கொண்டிருந்தோம். அப்பொழுது ஒரு பைக்கில் இரண்டு வெளிநாட்டுக்காரர்கள் வந்தார்கள். அவர்கள் ஒரு ஆட்டோகாரனிடம் ஒரு இடத்திற்குச் செல்ல வழி கேட்டார்கள். அதற்க்கு அந்த ஆட்டோகாரன் நான் உங்களை கொண்டு போய்விடுகிறேன் , ஆட்டோவில் ஏறுங்கள் என்றான். அதற்க்கு அந்த வெளிநாட்டுக்காரர்கள் "No no,we have bike. you just say the route" என்றார்கள். அதற்க்கு அந்த ஆட்டோகாரன் வழி எல்லாம் சொல்ல முடியாது, போ என்று கூறினான். நான் இத்தகைய சம்பவங்கள் நேருவது வெளிநாட்டுகாரர்களுக்கு மட்டுமே என்று கருதவில்லை. மொழி தெரியாத , ஊர் தெரியாத யார் மாட்டினாலும் நம் ம(மா)க்கள் பணம் கறக்க நினைக்கிறார்கள்.

சென்ற வருடம் நான், மது மற்றும் என் நண்பன் ஆனந்தபாபு மூவரும் குலு மணாலி சென்றுவிட்டு ஒரு தனியார் பேருந்தில் டில்லி திரும்பிக்கொண்டிருந்தோம். பேருந்தை விட்டு இறங்கிய பிறகுதான் தெரிந்தது, மது பேருந்திலேயே தன்னுடைய பர்ஸ் - ஐ தொலைத்துவிட்டான் என்று. பிறகு வந்த பேருந்தின் register number ஐ கஷ்டப்பட்டு கண்டு பிடித்து அந்த பேருந்து இருக்கும் இடத்தையும் கண்டு பிடித்தோம். இந்த மூவரில் ஆனந்தபாபுவிற்கு மட்டும்தான் ஹிந்தி தெரியும். அவனும் அலுவலகம் செல்ல வேண்டி இருந்ததால் அவன் எங்களுடன் வர முடியாத நிலை. அதனால் நானும் மதுவும் மட்டும் பர்ஸ் - ஐ தேடி சென்றோம். கடைசியாக பேருந்தைக் கண்டு பிடித்து அதனுள் பர்ஸ் - ஐ தேடிப் பார்த்தால், பர்ஸ் - ஐ காணவில்லை. பிறகு அங்கு இருந்த கிளீனரிடம் ஒரு வழியாக சைகை பாசையில் பேசினோம். பிறகு அவன் எங்களை அந்த பேருந்தின் ஓட்டுனரிடம் அழைத்துச் சென்றான். அந்த ஓட்டுனன் ஹிந்தியில் பேசினான். ஹிந்தியில் எனக்கும் மதுவிற்கும் தெரிந்த ஒரே வாக்கியம் "ஹிந்தி நகி மாலும்". இதையே அவனிடமும் கூறினோம். அவன் மேலும் ஹிந்தியில் நிறைய பேசிவிட்டு பர்ஸ் - ஐ கொடுத்தான். பர்ஸ் - ஐ திறந்து பார்த்தால் பர்சில் பணம் எதையும் காணவில்லை . PAN card, ATM card மட்டும் தான் இருந்தது. அவனிடம் எப்படி ஹிந்தியில் பேசுவது என்று தெரியவில்லை. பொதுவாக இந்த மாதிரி சமையங்களில் நாங்கள் ஆனந்தபாபுவிடம் போன் போட்டு , ஹிந்தி பேசுவரிடம் கொடுத்துவிடுவோம். அவன் அவர்களிடம் பேசி புரியவைப்பான். இப்படித்தான் எங்களுடைய தகவல் பரிமாற்றம் டில்லியில் நடந்தது. அன்றும் அதையேதான் செய்தோம். அந்த ஓட்டுனன் ஆனந்தபாபுவிடம் பேசி விட்டு எங்களிடம் போனைக் கொடுத்தான். ஆனந்தபாபு என்னிடம் "அந்த டிரைவர் பர்சுல இருந்த பணம்லாம் தரமாட்டானாம், வேணும்னா பார்ச வாங்கிட்டு போங்கங்கிறான். at least நமக்கு PAN Card,ATM card னாவது கிடச்சதுள்ள. அதனால பர்சனாவது வாங்கிட்டு வந்துரு " என்றான் . ஆக நம் ம(மா)க்கள் வெளி நாட்டுக்காரர்கள் என்று மட்டும் இல்லை, மொழி தெரியாத எவராக இருந்தாலும் அவர்கள் தலையில் மிளகாய் அரைப்பார்கள்.

வெளிநாட்டுப் பெண்கள் இங்கு வரும்போது அவர்களுக்கு நடக்கும் பெருங்கொடுமை பாலியல் வன்முறைகள். நம் ம(மா)க்களுக்கு வெளிநாட்டுப் பெண்கள் என்றாலே கலவியில் அதிக ஈடுபாடு கொண்டவர்கள், அவர்கள் யார் கூப்பிட்டாலும் எளிதில் கலவிக்கு ஒத்துக் கொள்வார்கள் என்று நினைப்பு. அதனாலையே எந்த வெளிநாட்டுப் பெண்களை பார்த்தாலே பாலியல் வன்முறையில் ஈடுபடுகிறார்கள். நான் மேலே கூறிய அந்த ஜெர்மானியப் பெண்ணிற்கும் இதே கொடுமைதான் நேர்ந்தது. அவர் பேருந்தில் சென்ற போது இடிப்பது, கிள்ளுவது போன்ற பாலியல் கொடுமையில் ஈடுபட்டுள்ளார்கள். இதில் படித்தவர்கள் படிக்காதவர்கள் என்றில்லை. கல்லூரி மாணவர்கள் கூட இது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளனர். இதைவிடப் பெருங்கொடுமை இந்த ஜெர்மானியப் பெண்ணிற்கு உதவுவதற்கென்று சென்னையைச் சேர்ந்த ஒருவனை நியமித்திருக்கிறார்கள். அவனும் அவரிடம் இதே போன்ற பாலியல் கொடுமைகளில் ஈடுபட்டுள்ளான். அவனிடமே அவர் "Already i am sweating, you also make me sweat more" என்று கூறியும் அவன் திருந்தவில்லை.

இப்படிப்பட்டவர்களை காட்டுமிராண்டிகள் என்று கூறுவதைத் தவிர்த்து பிறகு எப்படி கூறுவது.

இவ்வளவு நடந்தாலும் வெளிநாட்டுக்காரர்கள் இந்தியாவையும்,அதன் பழமையையும்,அதன் கலாச்சாரத்தையும்(!) நேசிக்கத்தான் செய்கிறார்கள். இந்த ஜெர்மானியப் பெண் மகாபல்லிபுரச் சிற்ப்பங்களையும் , மயிலை கோயில் அழகையும் வியந்து வியந்து புகழ்ந்திருக்கிறார். அவர்களுக்கு நம்முடைய பழமை மிகவும் பிடித்திருக்கிறது. சென்ற வருடம் டில்லிக்கு நான் சென்ற பொழுது நடந்த சம்பவம் எனக்கு ஞாபகம் வருகிறது. அப்பொழுது நானும், மதுவும் சென்ற பேருந்து சிக்னலில் காத்துக்கொண்டிருந்தது. அப்பேருந்திற்க்கு அருகிலேயே ஒரு ஆட்டோவும் காத்துக்கொண்டிருந்தது. அதில் ஒரு வெளிநாட்டுப் பெண் அமர்ந்திருந்தார். அப்பொழுது 6 அல்லது 7 வயதுள்ள ஒரு பெண் குழந்தை கையில் வைத்து எதையோ விற்றுக் கொண்டிருந்தது. அப் பெண் குழந்தை அந்த வெளிநாட்டுப் பெண்ணிடம் விற்க முயன்ற போது அப்பெண் அதை வாங்க மறுத்து தன் பையிலிருந்து ஒரு பிஸ்கட் பாக்கெட்டை எடுத்து அப்பெண் குழந்தையிடம் கொடுத்து போகச் சொன்னார். எனக்கு உடனே அப்பேருந்தை விட்டு இறங்கிச் சென்று அப்பெண்ணின் கையைப் பிடித்துக் குலுக்கிப் பாராட்ட வேண்டும் என்று தோன்றியது. உலகில் நல்லவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

Monday, November 9, 2009

ஆப்ரிக்காவில் புலி


நேற்று Animal Planet Channel ல், ஒரு பரந்த savanna இல் புலியைப் பார்த்தேன். என்னடா இது ஒரு வித்யாசமான காட்சியாக உள்ளது என்று ஆச்சரியமாக இருந்தது. ஏனெனில் புலிகளின் வசிப்பிடம் பெரும்பாலும் அடர்ந்த காடாக இருக்கும். புலிகளின் வசிப்பிடம் ஆசியா மற்றும் ஐரோப்பாவாகவே இருந்திருக்கிறது. புலிகள் ஆப்ரிக்காவைச் சேர்ந்தவை அல்ல. என்னுடைய முந்தையப் பதிவுகளில் சிங்கமும் புலியும் இருக்கும் ஒரே நாடு இந்தியா என்று கூறியிருப்பேன். அதனால்தான் புலியை ஆப்ரிக்கா savanna புல் வெளிகளில் கண்டபோது மிக ஆச்சரியமாக இருந்தது.

சமீபத்திய ஆராச்சிகளின்படி புலிகள் ஆப்ரிக்காவிலிருந்து 10 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே மறைந்துவிட்டன.

சிங்கத்தையும் புலியையும் ஒப்பிடும்போது, புலியே திட்டமிடுதல், ஆற்றல், திறமை என்று பல விதங்களிலும் மேம்பட்டது. ஆனால் சிங்கத்தின் வேட்டையாடுதல் பற்றிய ஒளிப் பதிவுகள் அளவிற்கு புலியின் வேட்டையாடுதல் பற்றிய ஒளிப் பதிவுகள் கிடையாது. அதற்க்குக் காரணம் சிங்கத்தின் இருப்பிடம் ஆப்ரிக்காவின் பரந்த புல் வெளியாகவும், புலிகளின் இருப்பிடம் அடர்ந்த ஆசியக் காடுகளாகவும் இருப்பதே.

நேற்றுப் பார்த்த நிகழ்ச்சி "Living with Tigers" எனும் ஆப்ரிக்கா காடுகளில் புலிகளை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியாகும். இந்த நடவடிக்கையில் இரண்டு வங்காளப் புலிகள் ஆப்ரிக்காவில் அறிமுகப் படுத்தப்பட்டன. ஒன்று
ரான் எனும் ஆண் புலி மற்றொன்று ஜூலி எனும் பெண் புலி. இரண்டும் அமெரிக்காவில் captivity இல் பிறந்த சகோதர சகோதரிகள்.


இப்புலிகள் அறிமுகப் படுத்தப்பட்ட பகுதி, தென்ஆப்ரிக்காவில் உள்ள சுற்றிலும் மின்சார வேலி அமைக்கப்பட்ட இப்புலிகளுக்கென்றே உருவாக்கப்பட்ட ஒரு சரணாலயம். இது ஒரு தனியார் முயற்சி.

இந்நிகழ்ச்சியில் இப்புலிகளுக்கு காடுகளில் வாழ்வதற்கு படிப்படியாக பயிற்சி கொடுக்கப்பட்டது. முதலில் இப்புலிகளுக்கு simulated prey அறிமுகப்படுத்தப்பட்டது. அதாவது ஒரு இறந்து போன மானின் உடலில் கறியைத் திணித்து அதனை ஒரு ஜீப்பில் கட்டி ஓட்டிச் சென்றார்கள். அதனை இப்புலிகள் வேட்டையாடின. இப்புலிகளின் முதல் உண்மையான வேட்டை ஒரு முள்ளம்பன்றி. இதனை அந்த நிகழ்ச்சியின் வர்ணனையாளரின் வார்த்தையில் கூறுவதென்றால் "Perfect hunt but wrong choice". ஏனெனில் முள்ளம்பன்றி வேட்டை மிக ஆபத்தான ஒன்று. முள்ளம் பன்றிகள் பல புலிகளையும் சிங்கங்களையும் நிரந்தர ஊனமாக்கிவிடும். இந்நிகழ்ச்சியிலும் ரானை முள்ளம் பன்றியின் முட்கள் நன்றாக குத்திவிடும். இருந்தாலும் கடைசியில் அது ஒரு மிகச் சிறந்த வேட்டையாகவே இருந்தது.


அடுத்த வேட்டை ஒரு வான்கோழி. அந்த வேட்டை மிகச் சிறப்பாக இருந்தது. வான்கோழி பறக்கும்போது இரண்டு புலிகளும் எதிர் எதிர் திசைகளிலிருந்து தாவி, வானத்திலேயே பிடிக்கும். மிக அருமையாக இருந்தது அக்காட்சி. அதற்க்கடுத்த வேட்டைக்கான தேர்ந்தெடுத்த மிருகம், அப்புலிகளின் அனுபவமின்மையை நன்றாக காட்டியது. அவற்றின் தேர்ந்த்தெடுப்பு 1400 kg எடை உள்ள காண்டாமிருகம்!. நல்லவேளையாக அக்காண்டாமிருகம் திருப்பித் தாக்கி சட்னி ஆக்காமல்விட்டது.

அதற்கடுத்த வேட்டை ஒரு காட்டுப் பன்றி. காட்டுப் பன்றியின் தோலானது சற்றுக் கடினமானது. அதனால் அப்பன்றியைக் கொல்வதற்கு இரண்டு புலிகளுக்கும் சற்று நேரமானது.

அதற்கடுத்து இப்புலிகளுக்கென்று அந்த மூடிய மின்சார வேலி அமைக்கப்பட்ட சரணாலயத்தில் மான்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இதற்க்கடுத்துதான் உண்மையான வேட்டை ஆரம்பமானது. நான் ஏற்கனவே சொன்ன மாதிரி புலி வேட்டையைப் பார்ப்பது அபூர்வம். நேற்றைய நிகழ்ச்சியில் புலிகளின் மான் வேட்டை மிகச் சிறப்பாக அமைந்தது. ஆரம்பத்தில் இப்புலிகளின் மான் வேட்டை அவற்றின் அனுபமின்மையைக் காட்டியது. புலி வேட்டையாடும் பொழுது இரையின் குரல் வளையை முதலில் பிடித்து அதன் மூச்சை நிறுத்தும். நேற்றைய நிகழ்ச்சியில் இப்புலிகள் குரல் வளையைப் பிடிக்காமல் கழுத்தின் மேற்ப்பகுதியையே பிடித்தன. ஆனால் காலம் செல்லச் செல்ல இரண்டு புலிகளும் வியூகம் அமைத்து மிகச் சிறப்பாக வேட்டையாடின. ஒரு கட்டத்தில் இரண்டு புலிகளும் சேர்ந்து ஒரே வேட்டையில் ஏழு மான்களை வேட்டையாடின!. ஒரு மானை இரண்டு புலிகளும் எதிர் எதிர் திசைகளிலிருந்து தாவி வானத்திலேயே பிடிக்கும். wow, that was a great hunt.

அதற்கடுத்து அச்சரணாலயத்தில் Wildebeest அறிமுகப்படுத்தப்பட்டன. Wildebeest என்பது 160- 290kg எடையுள்ள காட்டெருமை போன்ற ஒரு மிருகம். பொதுவாகப் புலிகள் இந்தியாவில் உலகிலேயே மிகப் பெரிய எருமை இனமான Gaur(1,000–1,500kg) ஐ தனியாகவே வேட்டையாடிவிடும். ஆனால் captivity இல் இருந்த இப்புலிகளுக்கு wildebeest சற்றுக் கடினம்தான். இருந்தாலும் ரானும், ஜூலியும் மிகச் சிறப்பாகவே வேட்டையாடிவிடும்.

அடுத்து நெருப்புக்கோழிகள் அறிமுகப்படுத்தப்பட்டன. நெருப்புக்கோழிகள் புலிகளின் வேகத்தை அளவிடக் கூடியவையாக இருந்தன. ஏனெனில் நெருப்புக்கோழிகள் மணிக்கு 72km வேகத்தில் ஓடும். அதையும் இரண்டு புலிகளும் சிறப்பாகவே வேட்டையாடின.

இவ்வாறாக இரண்டு புலிகளுக்கும், இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக பயிற்ச்சி கொடுக்கப்பட்டன. மேற்க்கூறிய காட்ச்சிகள் அனைத்தும் மனித இனம் இதுவரை பார்த்திராத ஒன்று!. ஏனெனில் Wildebeest ம்,Thomson Gazelle ம், நெருப்புக் கோழியும் புலிகள் இருக்கும் இடத்தில்(ஆசியா) கிடையவே கிடையாது. புலிகளின் வேட்டையை பரந்த புல் வெளியில் காண்பது என்பது மிக அருமையாக இருந்தது.

தற்பொழுது ரான் மற்றும் ஜூலிக்கு 10 வயதாகிறது. செயற்கை கருவூட்டல் முறையில் ஜூலி 5 குட்டிகளை ஈன்றிருக்கிறது.

ஆப்ரிக்கா காடுகளில் புலிகளை இனப்பெருக்கம் செய்யவைப்பது கண்டனங்களை எழுப்பாமல் இல்லை. ஏனெனில் ஆப்ரிக்கா புலிகளின் உண்மையான இருப்பிடம் இல்லை. மேலும் இப்புலிகளின் "genetic purity" பற்றிய சந்தேகங்கள் எழுந்துள்ளன. பெரும்பாலும் உலகில் காடுகளைத் தவிர்த்து மிருகக்காட்சி சாலைகளிலும் மற்ற இடங்களிலும் உள்ள புலிகள் பெரும்பாலும் "genetically impure" ஆகவே உள்ளன. அதாவது அவைகள் ஏதேனும் இரண்டு அல்லது அதற்க்கு மேற்ப்பட்ட இனப் புலிகளின் கலப்பாகவே உள்ளன. மேலும் இந்த முயற்சி ஒரு தனியார் பண்ணுவது. அதனால் இது பணம் பண்ணுவதற்க்கான முயற்சியே என்ற குற்றச்சாட்டும் உள்ளது .

இந்த நிகழ்ச்சியைப் பார்த்த பொழுது எனக்கு கோவமும் ஆத்திரமுமே மேலோங்கியது. ஏனெனில் இவ்வளவு முயற்சி செய்து ஆப்ரிக்காவில் இல்லாத புலியை உருவாக்க முயற்சி நடக்கும் பொழுது, புலிகளின் தாயகமாக விளங்கும் இந்தியாவில் புலிகள் பாதுகாக்கப்படவில்லை என்று எண்ணும்போது கோபம்தான் மேலோங்குகிறது.

மேலும் அறிய கீழே உள்ள பதிவுகளைக் காண்க,

http://www.jvbigcats.co.za/
http://www.lairweb.org.nz/tiger/release10.html
Photos Courtesy : http://www.jvbigcats.co.za/

பள்ளிக்கரணை சதுப்பு நிலம்

பள்ளி நாட்களில் சமூக அறிவியல் பாடத்தில் சதுப்பு நிலங்களை பற்றி படித்த போது, அது சற்று வித்யாசமான பெயராகவும், கற்பனையில் ஒரு வித்யாசமான நிலமாகவும் தோற்றம் அளித்தது. ஏனெனில் தமிழ் நாட்டில் பெரிதாக சதுப்பு நிலப் பகுதிகள் கிடையாது. அதனால் அதனைப் பார்த்தது கிடையாது. மேற்கு வங்கத்தில் உள்ள சுந்தரவனக் காடுகளின் சில பகுதிகள் சதுப்பு நிலத்தால் ஆனவை.

பிற்காலத்தில் பறவைகள் மற்றும் விலங்குகளின் மீது மேலும் அதிக ஆர்வம் ஏற்ப்பட்டபோது, சதுப்பு நிலங்களின் முக்கியத்துவம் தெரிந்தது. சதுப்பு நிலமானது எப்பொழுதும் அல்லது பெரும்பாலான நாட்களில் குறைந்த அளவு நீர் மட்டம் இருக்கும் பகுதிகளாகும். இச்சதுப்பு நிலங்களில் நீர்ப்பறவைகள் கூடு கட்டி இனப்பெருக்கம் செய்கின்றன. மேலும் இந்நிலங்களில் எப்பொழுதும் நீர் தேங்கி இருப்பதால், சுற்றுப்புறப் பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் உயர்வதில் பெரும் பங்கு வகிக்கின்றன.

நான் சென்னைக்கு வந்த புதிதில் தாம்பரத்திலிருந்து வேளச்சேரிக்கு பேருந்தில் வரும் பொழுது ஜெருசலேம் கல்லூரி அடுத்த பகுதிகளில் நீர் தேங்கி இருப்பதைப் பார்த்திருக்கிறேன். அப்பொழுதெல்லாம் அது சாதாரணமாக நீர் தேங்கி இருக்கும் பகுதி என்று தோன்றும். பின்னாட்களில்தான் அது சென்னையில் கடைசியாக எஞ்சி இருக்கும் வனப்பகுதிகளில் ஒன்று என்று தெரிந்தது. கடந்த 2007 ஆம் ஆண்டு பள்ளிகரணை சதுப்பு நிலங்களில் சில பகுதிகள் பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியாக அறிவிக்கப்பட்டதிலிருந்து இப்பகுதியின் முக்கியத்துவத்தை அறியலாம்.


பள்ளிக்கரணை சதுப்பு நிலமானது 61 வகைத் தாவர இனங்களுக்கும், 46 வகை மீன் இனங்களுக்கும்,106 வகை பறவை இனங்களுக்கும், 7 வகை வண்ணத்து பூச்சி இனங்களுக்கும், 21 வகை ஊர்வனங்களுக்கும் இருப்பிடமாக உள்ளது என்பதிலிருந்து உயிரியலில் இப்பகுதி எந்த அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை அறியலாம்.




பத்து, பதினைந்து வருடங்களுக்கு முன்பு இங்கு பறவைகள் அதிக அளவில் இருந்து இருக்கின்றன, ஆனால் இப்பொழுது ரொம்ப பெரிய அளவில் பறவைகளைக் காண முடிவதில்லை. மேலும் ஆக்கிரமிப்புகளாலும் மாநகராட்சிக் குப்பைகளை இங்கு கொட்டுவதாலும் பள்ளிக்கரணை சதுப்பு நிலம் அழிந்து வருகிறது. பள்ளிக்கரணை சதுப்பு நிலப் பகுதியின் எல்லைகள் இன்னும் முழுமையாக வரையறுக்கப்படாததால், இப்பகுதி முழுவதையும் பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியாக அறிவிப்பதில் தடங்கல்கள் உள்ளன.




இந்தியா வேற்றுமையில் ஒற்றுமை காணும் நாடு என்பது அதன் மக்கள் மற்றும் கலாச்சாரத்தைப் மட்டுமே குறிப்பது அல்ல, அதன் நிலப் பரப்பையும் குறிக்கும். உலகிலேயே மிக உயர்ந்த மலைத்தொடரையும், பாலைவனத்தையும், பீடபூமிகளையும்,சதுப்பு நிலங்களையும், மிகப் பெரிய வளமை வாய்ந்த சமவெளிகளையும், மிக வயது முதிர்ந்த மலைகளையும் ஒரே நாட்டில் காண்பது என்பது மிக அரிது. அதே போன்று மாறுபட்ட விலங்குகளையும், பறவைகளையும் ஒரே நாட்டில் காண்பது என்பது மிக மிக அரிது. இவ்வாறாக மாறுபட்ட விலங்குகளும் பறவைகளும் இருப்பதற்குக் காரணம் இத்தகைய மாறுபட்ட நிலப்பரப்புகளே. இந்தியாவின் இத்தகையப் பெருமையை நாம் அனைவரும் பாதுகாக்கவேண்டும். அதனால் அரசு மிக விரைவில் நடவடிக்கை எடுத்து பள்ளிகரணை சதுப்பு நிலப் பகுதியின் எல்லைகளை வரையறுத்து, இப்பகுதி முழுவதையும் பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியாக அறிவிக்க வேண்டும்.

பின் குறிப்பு :
பள்ளிக்கரணை சதுப்பு நிலம் முழுவதுமாக தொலைந்து போவதற்கு முன்பாக என்னுடைய புகைப் படக் கருவியில் பதிந்து கொள்ள வேண்டும் என்று எண்ணினேன். அதுவே நீங்கள் மேலே பார்த்த புகைப் படங்கள்.

Wednesday, October 14, 2009

அளவுக்கு அதிகமான அங்கீகாரங்களும்,புறக்கணிப்புகளும் !

எனக்கு ஒரு விஷயம் புரியவே இல்லை. ஒரு வெளிநாடு வாழ் இந்தியர் (1*) ஏதேனும் ஒரு விருதைப் பெற்றால் இந்தியர்களும் இந்திய ஊடகங்களும் அவர்களுக்கு அளவுக்கு மீறி முக்கியத்துவம் கொடுப்பது. அதில் ஒரு latest entry Mr. வெங்கி ராமகிருஷ்ணன். நாம் ஒன்றைப் புரிந்துகொள்ள மறுக்கிறோம் அல்லது மறந்து விடுகிறோம். அவர்கள் இந்தியக் குடியுரிமை வேண்டாம் என்று சென்று விட்டவர்கள். அவர்களை போன்ற பெரும்பாலோனோர் தாங்கள் இந்தியர்கள் என்று சொல்லிக்கொள்வதைக் கூட விரும்பாதவர்கள் போன்றேத் தோன்றுகிறார்கள்.

“All sorts of people from India have been writing to me, clogging up my email box. It takes me an hour or two to just remove their mails,”
என்கிறார் வெங்கி. இருந்தாலும் நம் மக்கள் விடுவதாக இல்லை, அவரைப் பாராட்டி மெயிலா அனுப்பித் தள்ளுகிறார்கள். இதே போன்று மெயில்களை அவருடன் சேர்ந்து நோபெல் விருது பெற்ற மற்ற இருவருக்கும் அனுப்பினார்களா என்று எனக்குத் தெரியவில்லை !. எனக்குத் தெரிந்த வரையில் அவர் இந்தியாவில் பிறந்தவர். அதைத் தவிர எனக்குத் தெரிந்து அவருக்கும் நமக்கும் வேறு எந்தத் தொடர்பும் இல்லை, அவர் கூறியதை போல நாம் அனைவரும் மனிதர்கள் என்பதைத் தவிர!

இதே போன்று கல்பனாச் சாவ்லா இறந்த போது இந்தியா முழுவதும் துக்கம் கொண்டாடியது. அவருடைய இறப்பு மனிதர்கள் என்ற அளவில் அனைவருக்கும் வருத்தம் அளிக்கக் கூடியதே. நாம் நிச்சயம் துக்கம் அனுஷ்டிக்க வேண்டியதுதான், அவரும் ஒரு மனிதர் என்ற அளவில்!. ஆனால் நாம் அதற்க்கும் மேலாகச் சென்று. பல மாநிலங்கள் அவருக்கு இழப்பீடுகளையும், ஏன் தமிழக அரசு அவர் பெயரில் ஒரு விருதே அறிவித்தது!. இறந்து போனவர்களை பற்றிப் பேசக்கூடாதுதான், இருந்தாலும் எனக்கு இவ்விசயங்கள் சற்று அதிகமாகவேப்பட்டது.

இவ்வளவு செய்யும் நாம் ஒன்றை மறந்து விடுகிறோம், இன்னமும் எத்தனையோ நூற்றுக்கணக்கான இந்திய விஞ்ஞானிகள், பல வெளிநாட்டு வாய்ப்புகளை மறுத்துவிட்டு ISRO விலும், DRDO விலும் இன்னும் பல ஆராய்ச்சி நிறுவனங்களிலும், இந்தியாவிற்காக உழைத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

இத்தகைய விஞ்ஞானிகள் வெங்கி ராமகிருஷ்ணனோ அல்லது கல்பனா சாவ்லாவோ பெற்ற அங்கீகாரத்தில் நூற்றில் ஒரு பங்காவது பெற்றிருப்பார்களா என்பது சந்தேகமே!

புறக்கணிப்புகள் மட்டுமல்ல, அளவுக்கு அதிகமான அங்கீகாரங்களும் புறக்கணிப்புகள் ஏற்ப்படுத்தும் அதே விளைவுகளை ஏற்ப்படுத்திவிடும்!

P.S:

1.வெளிநாடு வாழ் இந்தியர் என்ற வார்த்தையிலேயே எனக்கு மாற்றுக் கருத்து உண்டு. அவர்கள் இந்தியர்களே அல்ல. அவர்களோ அல்லது அவர்களின் முன்னோர்களோ இந்தியாவில் பிறந்தவர்கள், அவ்வளவே!. இந்தியா வேண்டாம் என்று வேற்று நாட்டுக் குடியுரிமைப் பெற்ற பின் எப்படி , அவர்கள் இந்தியர்கள் ஆவார்கள்?

Friday, October 9, 2009

நக்சலிசம்,அழிக்கப்படவேண்டிய ஒன்று

நக்சலிசம், இந்தியாவை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் மிக படு பயங்கர நோய். நக்சலைட்டுகள் மேற்குவங்க மாநிலத்தில், டார்ஜிலிங் மாவட்டத்தில் உள்ள நக்சல் என்னும் ஊரில் முதன் முதலில் பயிற்ச்சி மேற்க்கொன்டார்கள். அதனாலயே அவர்கள் நக்சலைட்டுகள் என்று அழைக்கப்பட்டார்கள். நக்சலிசம் முதலில் சிறிய அளவில் தான் இருந்தது. ஆனால் இன்றோ அது மிகப் பெரிய அளவில் வளர்ந்து நிற்கிறது. இந்திய விமானப் படையின் விமானத்தையே குறி பார்க்கும அளவிற்கு வளர்ந்து நிற்கிறது.

என்னைப் பொறுத்தவரை தீவிரவாதம் அழிக்கப்படவேண்டிய ஒன்று. அதிலும் உள்நாட்டுத் தீவிரவாதம் என்பது வெளியிலிருந்து வரும் தீவிரவாதத்தைவிட மோசமான ஒன்று. நக்சலைட்டுகளை இந்திய அரசு இந்த அளவிற்கு வளர விட்டிருக்கக்கூடாது. முளையிலேயே கிள்ளி எறிந்த்திருக்கவேண்டும். நக்சலைட்டுகளை அழிப்பதற்கு ராணுவம் அழைக்கபடவேண்டும். ராணுவத்தை அழைப்பதில் கௌரவக் குறைச்சல் ஏதும் இருப்பதாக நான் கருதவில்லை. நம் மண்ணும், நம் மக்களும் ரொம்ப முக்கியம். அதனால் நம் உள்நாட்டில் தீவிரவாதம் உள்ளது என்பதை ஒத்துக்கொண்டு, அதை அழிக்க ராணுவத்தை உடனடியாக அழைக்க வேண்டும்.

நக்சலிசம் என்பது வெறுமனே தீவிரவாதம் மட்டும் அல்ல. அது ஒரு சமூக, பொருளாதாரப் பிரச்சினை. நக்சலிசம் இந்த அளவிற்கு வளர்ந்ததிற்கு, அது வளர்ந்துள்ள பகுதிகளின் சமூக, பொருளாதாரப் பிரச்சினைகளும் ஒரு முக்கிய காரணம். பொதுவாக நக்சலிசம் வளர்ந்துள்ள பகுதிகளைப் பார்த்தீர்களானால், அவை பெரும்பாலும் சமூக, பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கியவைகளாகவே உள்ளன. ஆகையால் நக்சலைட்டுகள் அழிக்கப்பட்ட பிறகு, அது வளர்வதற்கு ஆணி வேரான சமூக, பொருளாதாரப் பிரச்சினைகளையும் களையவேண்டும். அப்பகுதிகளின் முன்னேற்றத்திற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்க்கொள்ளப்படவேண்டும். அப்பகுதிகளில் மேலும் பல வேலைவாய்ப்புகளை ஏற்ப்படுத்தவேண்டும். அப்பொழுதுதான் அப்பகுதி இளைஞர்கள் நக்சலிசம் பக்கம் செல்லாமல் இருப்பார்கள்.

நாம் இன்னும் பல காலத்திற்கு தீவிரவாதத்திக்கு, பாகிஸ்தானையே மட்டும் குறை சொல்ல முடியாது. நம் மண்ணிலும் களைகள் உள்ளன. அவையும் களையப்படவேண்டியவையே.

நமது ஊடகங்களும் நக்சலிசம் சார்ந்த பிரச்சினைகளுக்கு மேலும் அதிக முக்கியத்துவம் வேண்டும். பாகிஸ்தானிலிருந்து வரும் தீவிரவாதத்திற்கு கொடுக்கும் அதே அளவு முக்கியத்துவம், நக்சலைட்டுகள், ஒரு காவல் நிலையத்தை எரிப்பதையும் , பீகாரில் புகுந்து இருபது அப்பாவி பொதுமக்களை அழிக்கும் செயலைக்் கண்டிப்பதற்கும் அவற்றை மக்கள் முன் எடுத்துச் செல்வதற்கும் முக்கியத்துவம் தரவேண்டும்.

நக்சலிசம் மாவோஸ்ட்டுகள், உல்பா உள்ளிட்ட அனைத்துத் தீவிரவாத இயக்கங்களும் வேருடனும் வேரடி மண்ணுடனும் ஒழிக்கப்படவேண்டும்். வட கிழக்கு மாநிலங்கள் மற்றும் மத்திய மாநிலங்களின் முன்னேற்றத்திற்கு முக்கியத்துவம் தரவேண்டும். அப்படி செய்தால்தான் நக்சலைட்டுகளை ஆணி வேருடன் அழிக்க முடியும்.