Sunday, November 29, 2009

நிலா

நான் உறங்கும் போது சில நேரங்களில் உலகம் என்னுடைய காலடிகளிலிருந்து நழுவி என்னைத் தனியே விட்டு விட்டு நிலவையும், நட்சத்திரங்களையும் களவாடிக் கொண்டு செல்வது போல் தோன்றும். அந்த நேரங்களில் எல்லாம் உறக்கத்திலிர்ந்து சடாரென்று எழுந்து, என்னுடைய காலடிகளை நிலத்தில் அழுத்தமாக ஊன்றிக் கொண்டு என் நிலவும் நட்சத்திரங்களும் பத்திரமாக இருக்கிறதா என்று ஜன்னலின் வழியே எட்டிப் பார்ப்பேன், பின் அவற்றை என் வீட்டின் ஜன்னல் கம்பிகளுக்கிடையே சிறைவைப்பேன். பின்னும் உறக்கம் வரப் பிடிக்காமல் நிலவை ரசித்துக் கொண்டே அதற்க்குக் காவலிருப்பேன் .

பௌர்ணமி நிலவைப் பார்ப்பதென்பதே மிக அழகா இருக்கும். அந்த முழு நிலவில் இருக்கும் பாட்டி சுட்ட வடையையும் (மலைகளையும் , மேடுகளையும் ), அந்த முழு நிலவைச் சுற்றி அமைந்திருக்கும் அழகிய ஆரோவிலும், அந்த நிலவு தரும் குளுர்ச்சியும் மிக அற்புதமாக இருக்கும் .

ஒரு முழு நிலவு நாளன்று, யாருமற்ற கடற்கரையில் தனியாகப் படுத்துக்கொண்டு, நிலவையும் அதைச் சுற்றியுள்ள ஒளி வட்டத்தையும் இரவு முழுவதும் பார்ப்பதென்பது மிக அற்புதமாக இருக்கும். நிலவு அற்ற அமாவாசை இரவு கூட இனிமையாகத்தான் இருக்கும். அன்று வானம் முழுவதும் நட்ச்சத்திரங்களைக் கட்டி தொங்கவிட்டது போன்று மிக அழகாக இருக்கும்.

நீங்கள் கவனித்திருப்பீர்களேயானால், வானத்தில் சூரியனைக் கடக்கும் பறவைகளைக்காட்டிலும் நிலவைக் கடக்கும் பறவைகள் மிக அழகாக இருக்கும்.

எந்த ஒரு அழகிய இயற்கைகாட்சிப் புகைப்பபடங்களிலும் பத்தில் ஒரு புகைப்படமாவது, ஒரு மலைத்தொடரின் இடுக்கிலிருந்து முழு நிலவு வெளிவருவது போலவும் , அது வீசும் பால் போன்ற மென்மையான ஒளியும் ,அழகிய சிற்றோடையும் அதில் ஒரு சிறிய படகும் ,அந்த ஓடையின் இரு புறங்களிலும் ஓங்கி உயர்ந்த தென்னை மரங்களையும் , அப்பொழுது இரண்டு மூன்று பறவைகள் எட்ட முடியாத நிலவைக் கடக்க முயற்சித்துக் கொண்டிருப்பதைக் காணலாம் . அதுதான் இயற்க்கை அதுதான் நிலா.

பலபேர் நிலவை இட்லி , வடை என்று அபத்தமாக எதனெடனோ ஒப்பிடுவார்கள். என்னைப் பொறுத்தவரை நிலவை ஒரு அழகிய புதிய வெள்ளிக் கிண்ணத்தில் ஊற்றி வைத்த பசும் பாலுடன் தான் ஒப்பிட வேண்டும். நிலவின் ஒளியானது பூரணமாக வெண்மையாக இருக்காது. அது போலவே அப்பொழுதுதான் கறந்த பசும் பாலும் பூரண வெண்மையாக இருக்காது. அது ஒரு மஞ்சள் நிறம் கலந்ததாக இருக்கும். அது போல்தான் நிலவின் வெண்மையும். அது எதோ ஒரு மஞ்சள் நிறம் சிறிதளவு கலந்ததாகவோ அல்லது சிறிதளவு சாம்பல் நிறம் கலந்ததாகவோ அல்லது ஏன் சிறிதளவு நீலம் கலந்ததாகவோ இருக்கிறது என்று தோன்றும். என்னால் சரியாக அனுமானிக்க முடியவில்லை. எதுவாக இருந்த போதிலும் அந்த பூரண நிலா அமைதியைக் கொடுக்கும்.

நம் குழந்தைகள் பால்சோறு சாப்பிட்டு வளர்ந்ததைவிட நிலாச் சோறு சாப்பிட்டே வளர்ந்ததே அதிகம் .

சூரியனானது வீரத்தையும், பெருமையையும், வெற்றியையும் குறிக்க பெரியவர்களுக்கு என்று ஆனபோது, குழந்தைகளுக்கு எட்டிப் பிடித்து விளையாடுவதற்கும், மேகங்களில் ஒளிந்துகொண்டு கண்ணாம்பூச்சி விளையாடுவதற்கும் நிலா ஆனது.

நிலா குழந்தைகளுக்கானது என்று மட்டுமல்லாமல் பெரியவர்களுக்கான பரிமாணங்களையும் எடுக்கிறது. அக்காலங்களில் காந்தர்வத் திருமணங்கள் பெரும்பானவைகள் நிலவைச் சாட்சியாகக் கொண்டே நிகழ்ந்த்தன. ஏன் இன்றும் கூட பல காதல்களுக்கு தூதுவனாகவும், அந்த காதல்களுக்குச் சாட்ச்சியாகவும், சில நேரங்களின் அந்த காதல்களின் பிரிவிற்க்கும் சாட்ச்சியாகின்றது.

சங்ககாலக் கவிஞர்கள் முதல் இக்காலக் நிலா ரசிகன் வரை நிலவைப் பாடாதவர்கள் கிடையாது.

அவற்றில் ஒன்று கீழே:

நிலவு பாக்கலாம் வா!

நீ விண்ணில் பார்க்க ...
நான் உன்னில் பார்க்க ....
வெண்ணிலா என்று சொல்லாமல் .. உனக்கு
வேறு பெயர் வைத்தவர் யார் ?..நீ
விண்ணிலே இல்லாததால ?..உன்னிலே
களங்கமே இல்லாததாலா ?

ஒவ்வொரு இரவும்
வெண்ணிலா முழிப்பது
என் நிலா தூங்குவதாலா?!

பின் குறிப்பு:

இக்கவிதை என்னுடையதல்ல. பாடலுக்கு நன்றி தயா from forumhub.com . எழுத்துக்கள் என்னுடையவை :)

இக்கவிதை நிலவை பற்றியது அல்லது காதலியைப் பற்றியதா என்பதை உங்களின் அனுமானத்திற்கு விட்டு விட்டு விடுகிறேன் :).

Wednesday, November 25, 2009

டாட்டா குழுமம் மற்றும் ரத்தன் டாட்டா

டாட்டா, எனக்கு மிகப் பிடித்தமான ஒரு குழுமம். இந்தியாவில் உள்ள குழுமங்களில் மிகப் பெரியதும், அதிகமாக மதிக்கப்படும் குழுமங்களில் ஒன்று, டாட்டா. கிட்டத்தட்ட 140 ஆண்டுகால பழமையான குழுமம். ஜாம்ஜெட்ஜி நௌரோஜி டாட்டா அவர்களால் ஆரம்பிக்கப்பட்டது. இக்குழுமத்தில் 114 நிறுவனங்கள் உள்ளன. 6 கண்டங்களில் கிட்டத்தட்ட 80 க்கும் மேற்ப்பட்ட நாடுகளில் செயலாற்றி வருகிறது. 2009 ஆம் ஆண்டு Reputation Institute ஆல் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் உலகளவில் மதிக்கப்படும் குழுமங்களில் 11 ஆவது இடத்தைப் பெற்றுள்ளது.

எனக்கு டாட்டாவைப் பிடிக்க மிக முக்கியக் காரணம், இந்தியா மீதான அதன் பற்று. டாட்டா நிறுவனங்களின் ஊழியர்கள் வெளி நாட்டுக்குச் செல்லும் போது, அவர்களுக்குக் கூறப்படும் அறிவுரைகளில் முதலிடத்தைப் பெறுவது "நீங்கள், இந்தியாவின் தூதுவராகச் செல்லுகிறீர்கள். அதனால் இந்தியாவின் மதிப்புக் குறையாமல் காக்க வேண்டியது உங்கள் பொறுப்பு" . டாட்டா தன்னுடைய சாதனைகளைச் சொல்லும்போது இந்தியாவையே முன்னிறுத்தும். இக்காரணத்தாலையே எனக்கு டாட்டாவை ரொம்ப பிடித்துப் போனது.

டாட்டா குழுமங்களில் மக்களுக்கு மிக அதிகமாக பரிச்சயமானது டாட்டா மோட்டார்ஸும் அதன் பேருந்துகளும். சிறு வயதில் நானும் மதுவும் டாட்டா நிறுவனம் கிட்டத்தட்ட எங்களுடைய சொந்த நிறுவனம் போலவே நினைத்துக்கொண்டோம். அதனாலையே அப்பொழுது எங்களுக்கு அசோக் லேய்லான்ட் நிறுவனத்தை பிடிக்காது. தமிழ்நாட்டில் அசோக் லேய்லான்ட் பேருந்துகளே அதிகம். அப்பொழுதெல்லாம் அசோக் லேய்லான்ட் பேருந்துகளைப் பார்த்தாலே நானும் மதுவும், "தமிழ்நாட்டுல மட்டும்தான் அசோக் லேய்லான்ட் இருக்கு. வட இந்தியாலலாம் டாட்டா தான் " என்று எங்களுக்குள்ளேயே சொல்லிக்கொள்வோம்.

சின்ன வயதில் எங்கள் மாமா பையனுக்கு TCS இல் வேலை கிடைத்தபோது, அவருக்கு வேலை கிடைத்தது என்பதை விட டாட்டா குழுமத்தில் வேலை கிடைத்ததையே எண்ணிப் பெருமிதம் கொண்டோம். அந்த அளவுக்கு எங்களுக்கு டாட்டாவின் மோகம் பிடித்திருந்தது. கல்லூரி முடித்த பிறகு TCS இன் நேர்முகத்தேர்வுக்குப் பிறகு எனக்கு எப்படியாவது TCS இல் வேலை கிடைத்துவிட வேண்டும் என்று அடுத்த ஒரு வாரத்திற்கு நான் கோயில் கோயிலாக ஏறி இறங்கி, இறைவனை இரங்கினேன். அப்பொழுது வேலை கிடைக்க வேண்டும் என்பதை விட TCS இல் வேலை கிடைக்க வேண்டும் என்றே எனக்குத் தோன்றியது.

இந்த அளவுக்கு எனக்கு டாட்டாவைப் பிடிக்கக் காரணம் அதன் நேர்மை. ஒரு முறை ரத்தன் டாட்டாவிடம் நீங்கள் ஏன் அரசியல்வாதிகளுடன் அதிகம் பழகுவதில்லை என்று கேட்டபோது, அதற்க்கு அவர் "அவர்கள் அவர்களுடைய வேலையைப் பார்க்கிறார்கள், நான் என்னுடைய வேலையைப் பார்க்கிறேன்" என்றார். டாட்டா நானோவை அறிமுகப் படுத்தும் போது ரத்தன் டாட்டா "பத்து ஆண்டுகளுக்கு முன் ஒரு லட்ச ரூபாய் காரைப் பற்றி அறிமுகப்படுத்தும் போது இருந்த இரும்பின் விலையும், இப்பொழுது இருக்கும் இருக்கும் இரும்பின் விலையும் உங்களுக்குத் தெரியும். இருந்தாலும் நானோ ஒரு லட்ச ரூபாய்க்கே விற்கப்படும். ஏனென்றால் Promise is a promise " என்றார். இந்த நேர்மைதான் டாட்டா.

அந்த டாட்டா குழுமத்தின் தலைவரான ரத்தன் டாட்டா அவர்கள் போர்ப்ஸ் பத்திரிக்கையின் 2009 ஆம் ஆண்டு உலகின் மிக சக்தி வாய்ந்த மனிதர்களில் 59 ஆவது இடத்தைப் பெற்றுள்ளார். வாழும் மனிதர்களில் எனக்கு மிகவும் பிடித்தவர்களில் ஒருவர்.

ரத்தன் டாட்டா அவர்கள் டாட்டா குழுமத்தில் 1961 ஆம் ஆண்டு சேர்ந்தார். 1991 ஆம் ஆண்டு அதன் தலைவரானார். ரத்தன் டாட்டா, டாட்டா குழுமத்தின் தலைவரான பிறகு பல மாறுதல்களைச் செய்தார். எந்த ஒரு தனி டாட்டா நிறுவனத்தையும் விட டாட்டா குழுமமே முக்கியமானது என்ற கொள்கையைக் கொண்டுவந்தார். அனைத்து டாட்டா நிறுவனங்களுக்குமான தற்போதிருக்கும் பொதுவான டாட்டா logo வைக் கொண்டுவந்தார். நஷ்டமடைந்த பல டாட்டா நிறுவனங்களிளிருந்து தைரியமாக வெளியே வந்தார். ரத்தன் டாட்டா தலைவராகப் பதவியேற்ற பிறகு டாட்டா குழுமத்தின் வருமானம் பத்து மடங்கானது. கோரஸ் குழுமத்தையும், போர்ட் நிறுவனத்திடமிருந்து ஜாகுவார் மற்றும் லான்ட் ரோவர் நிறுவனங்களை வாங்கியதும் உலகில் மிகக் குறைந்த விலை கொண்ட நானோ காரை அறிமுகப்படுத்தியதும் இவருடைய சாதனைகளில் சில.

ரத்தன் டாட்டாவும் டாட்டா குழுமமும் மேலும் பல சாதனைகள் படைக்க எனது வாழ்த்துக்கள் .

என்பதே எனக்கு முக்கியமாகப்பட்டது.http://www.indianexpress.com/news/ratan-tata-keeps-his-promise-unveils-nano/438296/1
http://en.wikipedia.org/wiki/Ratan_Naval_Tata
http://en.wikipedia.org/wiki/Tata_Group
http://people.forbes.com/profile/ratan-n-tata/2766
http://www.forbes.com/2009/11/11/worlds-most-powerful-leadership-power-09-people_land.html

Saturday, November 21, 2009

மீள் ஆற்றல்

நான் சிறுவயதில் என் பாட்டி ஊருக்குச் செல்லும் போது அங்கு சூரிய ஒளியால் இயங்கும் தெரு விளக்கைப் பார்த்திருக்கிறேன். அப்பொழுது அது எனக்கு மிகப் புதுமையாகவும் வியப்பாகவும் இருக்கும். அப்பொழுதெல்லாம் தூர்தர்சனில் மீள் ஆற்றல் எனப்படும் renewable energy ஆகிய சூரிய ஒளி மற்றும் bio gas ஆல் இயங்கக்கூடிய அடுப்புகளைப் பயன்படுத்துமாறுக் கூறும் விளம்பரங்களை பார்த்திருக்கிறேன். இருந்தாலும் இந்தியா போன்ற சூரிய ஒளி அபரிமிதமாகக் கிடைக்கும் நாட்டில், சூரிய ஒளி அதிக அளவில் பயன்படுத்தப்படவில்லை என்றேக் கூறவேண்டும். நகரங்களை ஒப்பிடும் போது கிராமங்கள் பரவாயில்லை. கிராமங்களில் சூரிய ஒளியால் இயங்கக்கூடிய தண்ணீர்இறைக்கும் மோட்டர்களையும், மின் அடுப்புகளையும், மின்சார வேலிகளையும் காணலாம்.

இந்தியா போன்ற ஆண்டுக்கு 7% க்கும் மேல் பொருளாதார வளர்ச்சி கொண்டிருக்கும் நாடு தன்னுடைய ஆற்றல் தேவைக்காக, பெரும் பகுதி பணத்தை பிற நாடுகளுக்கு வாரி இறைக்க முடியாது. பிரேசில் நாடு தன்னுடைய ஆற்றல் தேவைக்காக எத்தனால் போன்ற bio fuel ஐ அதிக அளவில் பயன்படுத்துகிறது. அதற்காக தன்னுடைய நாட்டில் அதிக அளவில் விளையும் கரும்பைப் பயன்படுத்திக் கொள்கிறது.

அணு உலைகளிலிருந்து பெறப்படும் ஆற்றல் மிகப் பயனுள்ளதுதான். பிரான்ஸ் போன்ற நாடுகள் தன்னுடைய ஆற்றல் தேவையில் 70% ஐ அணு உலைகளின் மூலம் பூர்த்தி செய்துகொள்கிறது. இருந்தாலும் நம்முடைய அணு உலைகளின் தேவையான மூலப் பொருள்களுக்கு நாம் ஆஸ்திரேலியா, அமெரிக்கா, பிரான்ஸ் போன்ற நாடுகளையேச் சார்ந்துள்ளோம். இதற்க்கு அமெரிக்காவுடன் நாம் செய்து கொண்ட அணுஒப்பந்தம் பயனுள்ளது. இருந்தாலும் நாம் பிற நாடுகளை அதிக அளவில் சார்ந்திருக்க முடியாது. இதற்காக தோரியம் சார்ந்த அணு உலைகளைப் பற்றிய ஆராய்ச்சிக்கு நாம் அதிக அளவில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். உலகில் இருக்கும் தோரியத்தில் 40% இந்தியாவில் உள்ளது. அவற்றின் பெரும்பகுதி கேரளக் கடற்கரையில் உள்ளது.

எதிர்கால அணு உலைகளில் மூலப் பொருளாக இருக்கக்கூடியது ஹீலியம். சந்திரனில் அதிக அளவில் ஹீலியம் உள்ளது. இந்தியா மேற்கொண்ட சந்திராயன் ஆராய்ச்சியும் அதன் மூலம் நம் மூவர்ணக்கொடி கொண்ட ஆராய்ச்சிப் பொருளை சந்திரனில் விழச் செய்ததும், எதிர்காலத்தில் சந்திரனில் இருக்கும் ஹீலியத்தின் மீது நம்முடைய பங்கை உறுதி செய்யும் செயலே ஆகும்.

தற்போது இந்தியா தன்னுடைய ஆற்றலின் தேவைக்கு நிலக்கரி மற்றும் பெட்ரோலியத்தையே பெரும்பகுதி நம்பி உள்ளது. ஆனாலும் நாம் ரொம்ப காலத்திற்கு இந்த மீளா ஆற்றலை நம்ப முடியாது . அணு உலைகளின் மூலம் கிடைக்கும் ஆற்றலும் ரொம்ப காலத்திற்குக் கிடைக்காது. ஆக மிகச் சிறந்த ஆற்றல் மூலம் காற்றும், சூரிய ஒளியுமே ஆகும். ஆனாலும் இந்தியாவில் சூரிய ஒளியின் மூலம் தயாரிக்கப்படும் மின்சாரம் 6 megawatts தான். சூரிய ஒளி மின்சாரத்தை நாம் அதிக அளவில் அதிகரிக்க வேண்டும்.

சில நாட்களுக்கு முன்பு இந்தியா வரும் 2022 க்குள் சூரிய ஒளி மூலம் தயாரிக்கப்படும் மின்சாரத்தை 20 gigawatts ஆக உயர்த்த எண்ணியுள்ளதாக அறிவித்துள்ளது. மூன்று கட்டமாக நடத்த உள்ள இத்திட்டத்திற்கு , முதல் கட்டத்திற்கு மட்டும் 4300 கோடி ரூபாய் செலவிடவுள்ளதாகக் கூறியுள்ளது. இது ஒரு மிகச் சிறந்த நடவடிக்கை. உலகம் வெப்பமயமாகிக் கொண்டிருக்கும் இன்றைய காலகட்டத்தில் CO2 போன்ற green house வாயுக்களைக் குறைக்க இந்த நடவடிக்கை உதவும்.

ஆனால் சூரிய ஒளியிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் செயலில் நாம் இன்னும் அதிக தூரம் செல்ல வேண்டியுள்ளது. தற்பொழுது இந்தியாவில் சூரிய ஒளியிலிருந்து மின்சாரம் தயாரிக்க ஆகும் செலவானது நிலக்கரியிலிருந்து மின்சாரம் தயாரிக்க ஆகும் செலவைப் போல் இரண்டரை மடங்காகும். நாம் மேலும் பல ஆராய்ச்சிகள் செய்யவேண்டும் . இருந்த போதிலும் இந்தியா 2022 க்குள் 20 gigawatts சூரிய மின்சாரம் தயாரிக்க வேண்டும் என்று அறிவித்திருப்பது மிகச் சிறந்த நடவடிக்கையாகும்.

Sunday, November 15, 2009

சோழர்கள்

சென்ற மாதம் ஒரு நாள் வள்ளுவர் கோட்டத்திற்கு நானும் மதுவும் சென்றிருந்தோம். அங்க ஒரு book stall இருந்தது. சரி சும்மா பார்ப்போமே என்று அங்கு இருக்கும் புத்தகங்களை நோட்டம் விட்டோம். அப்பொழுது அங்கு, நீலகண்ட சாஸ்திரி அவர்கள் எழுதிய "சோழர்கள்" புத்தகம் இருந்தது.

நீலகண்ட சாஸ்திரி அவர்கள் தென்னிந்திய வரலாற்றை பற்றி மிகப் பெரிய ஆராய்ச்சி நடத்தியவர். கல்வெட்டுகள், செப்பேடுகள், சங்க காலப் இலக்கியங்களை எல்லாம் ஆராய்ந்து, தென்னிதிய வரலாற்றிற்கு உலகளவில் அங்கீகாரம் பெற்றுத் தந்தவர். அவர் சென்னை பல்கலைக்கழகம், மைசூர் பல்கலைக்கழகம், சிகாகோ பல்கலைக்கழகம், பானரஸ் இந்து பல்கலைக்கழகம் என்று பல பல்கலைக்கழகங்களில் பேராசிரியராகப் பணி புரிந்தவர். யுனேஸ்கோவின் Institute of Traditional Cultures of South East Asia வின் Director ஆக பணிபுரிந்தவர். இந்தியாவின் மூன்றாவது மிக உயரிய civilian விருதான பத்மபூசன் விருது பெற்றவர். அவர் எழுதி 1955 ஆம் ஆண்டு வெளிவந்த புத்தகமே "சோழர்கள்".

அந்த புத்தக் கடையில் ஒரே ஒரு பதிப்பு மட்டும் தான் இருந்தது. அந்த புத்தகத்தை வாங்கும்பொழுது அந்த கடைக்காரர், "சார், நீங்க ரொம்ப அதிர்ஷ்டசாலி சார். இந்த புத்தகம் எங்கும் கிடைப்பதில்லை. அனைத்தையும் நூலகங்களுக்கே கொடுத்துவிட்டார்கள். என்னிடம் இருந்ததுதான் கடைசி பிரதி. இனிமே இந்த புத்தகம் அச்சிட்டால்தான் உண்டு" என்றார். நானும் சிரித்துக் கொண்டு வாங்கி வந்தேன்.

நானும் மதுவும் மதுரைக்காரைய்ங்யதால (ய்ங்ய வை அழுத்தி உச்சரிக்கவும் :) ), எங்களுக்கு இயல்பாகவே பாண்டியர்கள் மீது ஒரு ஈர்ப்பும், அதனால் ஒரு பெருமை கலந்த கர்வமும் உண்டு. சின்ன வயதில் பாண்டியன் பேருந்தையும், அந்த பாண்டியன் என்ற பெயரில் "ண" க்கு மேல் புள்ளிக்குப் பதிலாக பாண்டியரின் சின்னமாகிய மீனைப் பார்ப்பதும் மிக ஆனந்தமாக இருக்கும். பாண்டியன் பேருந்து பிற பேருந்துகளை முந்திச் செல்லும்போது "ஹே, எங்க பாண்டியன் முந்திருச்சு" என்று பெரிதாக சத்தம் போடுவோம்.

பள்ளி நாட்களில் சமூக அறிவியல் பாடத்தில் இந்திய வரைபடம் கொடுக்கும்போது வைகையையும், மதுரையையும் தான் முதலில் தேடுவோம். நாங்கள் வட இந்தியச் சுற்றுலா சென்ற போது, எங்களுடன் சுற்றுலா வந்த நெல்லைகாரர்களுடன் "நீங்கலாம், எங்கப் பாண்டியப் பேரரசிற்குட்பட்டவர்கள்" என்று நானும் மதுவும் சண்டைலாம் போட்டோம். அப்பொழுதெல்லாம் பாண்டிய நாட்டையும், பாண்டியர்களையும் பிற நாட்டுடனும், மற்றவர்களுடனும் ஒப்பீடு செய்து குதூகலிப்பதே வழக்கமாக இருக்கும். இதே மாதிரி ஒரு தடவை எங்க அப்பாவிடம் நாங்கள், "அப்பா, காவிரி பெருசா, இல்ல வைகை பெருசா?" என்றுக் கேட்டோம். அதற்க்கு எங்க அப்பா, "வைகை எல்லாம் காவிரியுடன் ஒப்பிடவே முடியாது. காவிரி ரொம்பப் பெரியது" என்றார். அன்றுடன் பாண்டியரை பிறருடன் ஒப்பீடு செய்யும் கேள்விகளை எங்க அப்பாவிடம் கேட்பதையே விட்டு விட்டோம். ஒரு தடவை என்னிடம் ஒருவர், "ஏன் மதுரக்காரங்க எல்லாம் பாண்டி னு அதிகமா பெயர் வைக்குறாங்க" என்றார். சற்றும் தாமதிக்காமல் நான், "ஏன்னா, நாங்கல்லாம் பாண்டியப் பேரரசின் குடிமக்கள்" என்றேன்.

இப்படி பாண்டியர்கள் மீது மிகப் பெரிய பற்று கொண்ட எனக்கு, வயது ஆக ஆக, மேலும் அதிகம் படிக்க படிக்க சோழர்கள், பாண்டியர்களை விட மிகப் புகழ் வாய்ந்தவர்கள் என்றும் , மிகப் பெரிய பரப்பளவை ஆண்டவர்கள் என்றும் புரிய ஆரம்பித்தது. உடனே நானும் பாண்டியர்கள் என்பதிலிருந்து சற்று பெரிய மனது பண்ணி வெளியே வந்து, நாங்கல்லாம் தமிழர்கள் என்று கூறிக் கொண்டு சோழர்களின் பெருமையில் பங்கெடுத்துக்கொள்ள ஆரம்பித்தேன். இப்படி என்னை மாற்றியதில் கல்கியின் "பொன்னியின் செல்வன்" க்கு மிகப் பெரிய பங்கு உண்டு (பொன்னியின் செல்வன், ராஜராஜ சோழனைப் பற்றியது).

சோழர்கள் கிருஸ்துவிற்கு முந்திய சில நூற்றாண்டுகளிலிருந்து பதிமூன்றாம் நூற்றாண்டு இறுதி வரை தமிழகத்தை ஆண்டவர்கள். சேர, பாண்டிய அரசுகளைப் போலவே சோழப் பேரரசும் ஏற்ற, இறக்கங்களை கொண்டாதாகவே இருந்தது.

சோழர்கள் காலத்தை நான்காகப் பிரிக்கலாம்,

  1. Early Chozhas எனும் சங்க காலச் சோழர்கள் ஆண்ட கி.மு.300 - கிறிஸ்து பிறப்பிற்கு பிந்தைய சில நூற்றாண்டுகள்.
  2. Interregnum Chozhas எனும் சங்க காலச் சோழர்களுக்கும் விஜயாலச் சோழனின் தலைமுறைக்கும் இடைப்பட்டவர்கள் ஆண்ட கிறிஸ்து பிறப்பிற்கு பிந்தைய சில நூற்றாண்டுகள் - கி.பி 9 ஆம் நூற்றாண்டு .
  3. Medival Chozhas எனும் விஜயாலச் சோழனின் தலைமுறையினர் ஆண்ட கி.பி 9 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி 11 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி வரை.
  4. Later Chozhas எனும் சாளுக்கிய - சோழ குல மன்னனான குலோத்துங்கச் சோழனும் அவன் தலை முறையினரும் ஆண்ட கி.பி 11 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி முதல் கி.பி 13 ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதி வரை.
சோழா என்ற பெயரின் பொருள் என்னதென்று யாருக்கும் தெரியவில்லை. அதே போன்று சோழர்களின் சின்னமான புலி தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான சரியான காரணமும் தெரியவில்லை. ஆனால் இவையிரண்டும் ஆரம்ப காலத்திலிருந்தே புழக்கத்தில் இருந்திருக்கின்றன. சங்க காலச் சோழர்கள் கிள்ளி, வளவன், செம்பியன் என்ற பெயர்களாலும் குறிக்கப்பட்டனர். கிள்ளி என்பது "கிள்" சொல்லிலிருந்து தோண்டுபவன் என்ற பொருளில் வந்தது. வளவன் என்பதற்கு வளமையான நிலத்தை ஆள்பவன் என்று பொருள். செம்பியன் என்பது புறாவிற்கு பதிலாகத் தன் உடம்பிலிருந்து கறி கொடுத்த சிபிச் சக்ரவர்த்தியின் வழி வந்தவர்கள் என்றுக் குறிக்கும். ஆனால் இந்த பெயர்கள் எல்லாம் சங்ககாலச் சோழர்களுக்கு அடுத்து வழக்கில் இல்லாமல் போய்விட்டது. கரிகார்ச் சோழன், கிள்ளி வளவன்,
நலங் கிள்ளி, நெடுங் கிள்ளி ஆகியோரெல்லாம் சங்க காலச் சோழர்களே.

Interregnum Chozhas என்னும் சங்க காலச் சோழர்களுக்கும், விஜயாலச் சோழனின் தலைமுறைக்கும் இடைப்பட்ட சோழர்களைப் பற்றி பெரிதாக குறிப்பு எதுவும் இது வரைக் கிடைக்கவில்லை. அக்காலங்களில் சோழர்கள் பாண்டியருக்கும் பல்லவருக்கும் உட்பட்டவர்களாகவே இருந்தனர். இதனை சோழர்களின் இருண்ட காலம் எனலாம். இக்காலங்களில் சோழர்கள் தங்கள் பழம் பெருமையை் பற்றியும், எதிர்காலத்தைப் பற்றியும் எண்ணிக் கொண்டும் அமைதியாக இருந்தனர். இக்காலங்களில் ஆந்திராவின் சில மாவட்டங்களில் ஒரு தெலுங்கு அரசு ஒன்று இருந்தது. அவர்கள் தங்களை கரிகார்ச் சோழனின் வழி வந்தவர்கள் என்று கூறிக் கொண்டனர். இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.

விஜயாலச் சோழன் தலையெடுக்க ஆரம்பித்த கி.பி 9 ஆம் நூற்றாண்டின் இறுதியிலிருந்து சோழர்களின் பொற்காலம் ஆரம்பம் ஆகிறது. இக்காலகட்டத்தைச் சார்ந்தவர்களே உலகப் புகழ் பெற்ற ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன் ஆவார்கள். இக்காலகட்டத்தைப் பற்றிய நம்பத்தகுந்த ஏராளமான தகவல்கள் கிடைத்துள்ளன.

சோழர்களுக்கும் சாளுக்கியருக்கும் இடையே திருமணங்கள் நடைபெற்று வந்துள்ளன. 1070 இல் விஜயாலச் சோழன் மரபில் வந்த ஆதிராஜேந்திர சோழன் மறைவிற்குப் பின், சோழ - சாளுக்கிய மன்னனான குழோத்துங்கச் சோழன், சோழ மன்னனாக அரியணை ஏறினான். ஆதிராஜேந்திர சோழன் மறைவில் Medieval Chozhas இன் காலம் முற்றுப் பெற்று Later Chozhas இன் காலம் ஆரம்பம் ஆகிறது. Later Chozhas இன் காலம் 1279 இல் மூன்றாம் ராஜேந்திரச் சோழனின் மறைவில் முற்றுப் பெறுகிறது.

இப்படியாகச் சோழர்களின் காலம் கிட்டத்தட்ட 16 நூற்றாண்டுகள் பரந்து விரிந்தது.

பின் குறிப்பு:

இப்பொழுதுதான் இப்புத்தகத்தை ஆரம்பித்துள்ளேன். மேலும் படிக்க படிக்க சோழர்களைப் பற்றி அதிகம் எழுதுகிறேன்.

ஆப்கானிஸ்தான்,தலிபான்,அமெரிக்கா மற்றும் இந்தியா

ஆப்கானிஸ்தான், இன்று உலகின் கவனம் மையம் கொண்டிருக்கும் இடம்.

ஒரு காலத்தில் வணிகர்களுக்கு இன்றியமையாத தலமாக அமைந்த நாடு. ஏனெனில் silk route எனப்படும் ஆசியாவையும் ஐரோப்பாவையும் இணைத்த மிக முக்கியப் பாதை இந்நாடு வழியாகவேச் சென்றது. புத்த மதத்தைச் சார்ந்தவர்களுக்கு மிக முக்கிய இடமாக இருந்த நாடு.

இந்தியாவிற்கும் ஆப்கானிஸ்தானிற்கும் பன்னெடுங்காலமாகவே நெருங்கிய தொடர்பு உண்டு. மகாபாரதத்தில் வரும் நம்முடைய சகுனி மாமா ஆண்ட காந்தாரம், கிழக்கு ஆப்கானிஸ்தானும் வடக்கு பாகிஸ்தானும் சேர்ந்த பகுதியே. அசோகச் சக்ரவர்த்தியின் அப்பாவான பிந்துசாரரின் காலத்திற்க்கு (272 B.C) முற்ப்பட்ட காலம் முதல் நேற்றுவரை ஆண்ட முகலாயர்களின் காலம்(1700 A.D) வரை இந்தியாவின் ஒரு பகுதியாகவே ஆப்கானிஸ்தான் இருந்தது.

மலையும் மலை சார்ந்த பகுதிகளுமாக அமைந்த இந்நாட்டில் நீர் வளம் குறைவுதான். இருந்தாலும் இயற்கையில் சாகோதரன் போல் தனக்குக் கிழக்குப் பக்கத்தில் அமைந்த பாகிஸ்தான் போல் வளமாக(சிந்து சமவெளி நாகரீகம்!) இல்லாவிட்டாலும் தனக்கு மேற்க்கே அமைந்த அரபு நாடுகள் போல் பாலைவனமாக அல்லாமலாவது இருக்கிறோமே என்று 1940 கள் வரை ஓரளவு சந்தோசப்பட்டுக்கொண்டிருந்த நாடு! (1940 களில் தான் அரபு நாடுகளில் எண்ணெய் வளம் கண்டுபிடிக்கப்பட்டது ).

இப்படியாக வறண்டு இருந்தாலும் அமைதியாகவாவது இருந்த இந்நாட்டில் 1979 ஆம் ஆண்டு சோவியத் படையெடுத்ததிலிருந்து கஷ்ட காலம் ஆரம்பித்தது. அது சோவியத்திற்கும் அமெரிக்காவிற்கும் பனிப்போர் நடந்த காலம். அப்பொழுது உலகின் கவனம் முழுவதும் ஆப்கானிஸ்தான் மீது திரும்பியது. அமெரிக்காவின் உதவியுடன் உள்நாட்டு முஜாகிதீன்கள் சோவியத்தை தோற்கடித்தனர். ஒசாமா பின் லேடன் உட்பட இப்பொழுது இருக்கும் தலிபான் தலைவர்கள்் முக்கால்வாசிப் பேர் அமெரிக்காவால் அப்பொழுது ஆதரிக்கப்பட்டவர்களே. சோவியத்தைத் தோற்க்கடித்ததுடன் தங்கள் வேலை முடிந்தது என்று அமெரிக்காவும் மற்ற நாடுகளும் தங்கள் கவனத்தை ஆப்கானிஸ்தானிலிருந்து திருப்பிக்கொண்டன. அதற்கடுத்து ஆப்கானிஸ்தானில் உள்நாட்டுக் கலவரம் ஆரம்பித்தது.

1996 ஆம் ஆண்டு தலிபான்கள் ஆப்கானிஸ்தானைப் பிடித்தபொழுது உலகம் தன் புருவத்தை உயர்த்திப் பார்த்தது. இருந்தாலும் உள்நாட்டில் ஏதோ சண்டையிட்டுக்கொள்கிறார்கள் என்று விட்டுவிட்டார்கள். பாமியான் புத்தர் சிலையை உடைத்தபோதும், இந்தியன் ஏர்லைன்ஸ் கடத்தலின் போதும்தான் தலிபான்கள் உலகின் முழு கவனத்தைக் கவர்ந்தார்கள். அதற்கடுத்து 9/11 தாக்குதலும், அதையடுத்து தலிபான்கள் மீது அமெரிக்காவின் படையெடுப்பும் உலகம் அறிந்ததே.

1996 ஆம் ஆண்டு தலிபான்கள் ஆப்கானிஸ்தானைப் பிடித்தபோழுதே இந்தியாவிற்குத் தெரியும், தலிபான்கள் இந்தியாவிற்கு வேண்டியவர்கள் அல்ல என்று. அதற்க்கு முக்கியக் காரணம் தலிபான்களை பாகிஸ்தான் ஆதரித்ததும், தலிபான்களின் காட்டுமிராண்டித்தனமான ஆட்சியும், பாமியான் புத்தர் சிலை இடிப்பும். அதற்க்கு அப்புறம் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானக் கடத்தலிலிருந்து இந்தியா தலிபான்களை முழுவதுமாக வெறுக்கத்தொடங்கியது. அதிலிருந்து இந்தியா தலிபான்களின் எதிர்க் கூட்டணியான வடக்குக் கூட்டணியை முழுவதுமாக ஆதரிக்கத் தொடங்கியது. 2001 ஆம் ஆண்டு அமெரிக்கப் படையெடுப்பின் போது இந்தியா படைகளை அனுப்பாவிட்டாலும் தலிபான்களைப் பற்றிய ரகசியத் தகவல்களை அளித்து தலிபான் தோல்வியில் முக்கியப் பங்காற்றியது.

தலிபான் தோல்விக்குப் பிறகு ஆப்கானிஸ்தான் புனரமைப்பில் இந்தியா மிக கவனம் செலுத்துகிறது. ஆப்கானிஸ்தானில் தனக்குச் சாதகமான அரசை நிறுவுவதன் மூலம் பாகிஸ்தானை ஓரளவு அடக்கலாம் என்பது இந்தியாவின் எண்ணம். அதற்காக ஆப்கானிஸ்தானுக்கு பல உதவிகளைச் செய்ய ஆரம்பித்தது. தற்போது இந்தியா ஆப்கானிஸ்தானில் ஜனநாயக ஆட்சியை நிறுவததற்கு உதவுவதற்கு அடையாளமாக அங்கு பாராளுமன்ற கட்டிடத்தைக் கட்டி வருகிறது. ஆப்கானிஸ்தான் முற்றிலும் நிலத்தால் சூழப்பட்ட நாடு. அதனால் தன்னுடைய கடல் போக்குவரத்திற்கு பாகிஸ்தானையே நம்பி வருகிறது. ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானைச் சார்ந்திருக்கும் நிலையைக் குறைப்பதற்காக இந்தியா, ஆப்கானிஸ்தானிலிருந்து ஈரானின் Chahbahar துறைமுகத்திற்கு 135 மைல் நீள பாதை அமைத்துக் கொடுத்திருக்கிறது. மேலும் ஆப்கானிஸ்தானின் மின் பிரச்சனையைச் சமாளிப்பதற்காக ஒரு மின் உற்பத்தி ஆலை அமைத்து வருகிறது. தினமும் கிட்டத்தட்ட 20 லட்சம் பள்ளிக் குழந்தைகளுக்கு செறிவூட்டப்பட்ட பிஸ்கட்டுகளை வழங்கி வருகிறது. இப்படிப் பல வகையிலும் இந்தியா ஆப்கனுக்கு உதவி வருகிறது.

ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா வழங்கி வரும் உதவிகளைக் கவனித்தீர்களேயானால், அவை் பெரும்பாலும் மக்களின் அன்றாடப் பிரச்சினைகளைத் களைவதர்க்கான நடவடிக்கைகளே. ஒரு நாட்டை நமக்குச் சாதகமாக மாற்றுவதற்கு முதலில் அந்நாட்டு மக்களைக் கவர வேண்டும் . அந்த வகையில் இந்தியா மிகச் சிறப்பாகச் செயலாற்றிவருகிறது.

2001 ஆம் ஆண்டிற்குப் பிறகு முதன் முதாலாக (2004 ஆம் ஆண்டு) ஆப்கன் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கர்சாய், பல நிலைகளில் தான் இந்தியாவிற்கு ஆதரவானாவன் என்றுக் காட்டியுள்ளார் (கர்சாய் தன்னுடையக் கல்லூரிப் படிப்பை தில்லியில்தான் முடித்துள்ளார்). அந்த வகையில் கர்சாய், தற்பொழுது நடந்த ஆப்கன் ஜனாதிபதித் தேர்தலில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டது இந்தியாவிற்கு நலம் தான்.

ஆனால் தலிபான் ஆப்கனில் மீண்டும் தலையெடுக்கத் தொடங்கியுள்ளது இந்தியாவிற்கு கவலை அளிக்கும் விஷயம்். "War on Terror" இன் மையப் புள்ளி ஆப்கனாகத்தான் இருந்திருக்க வேண்டும், ஆனால் ஈராக்காக அமைந்தது துரதிஷ்டவசமானது். அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா தற்பொழுது ஈராக்கில் படைகளைக் குறைத்து, ஆப்கனில் படைகளை அதிகரிக்க முடிவெடுத்துள்ளது இந்தியாவிற்கு சற்று நம்பிக்கை அளித்துள்ளது.

தலிபான்கள் முற்றிலுமாக அழிக்கப்படவேண்டியது உலகிற்கும் இந்தியாவிற்கும் நல்லது.

Saturday, November 14, 2009

எண்ணம்

Twitter : பன்னெடுங்காலமாக பொண்ணுங்களை மட்டுமே follow பண்ணி பெருமை கொண்ட பசங்களை, பசங்களையும் follow பண்ண வச்ச பெருமை கொண்டது ;).

Monday, November 9, 2009

ஆப்ரிக்காவில் புலி


நேற்று Animal Planet Channel ல், ஒரு பரந்த savanna இல் புலியைப் பார்த்தேன். என்னடா இது ஒரு வித்யாசமான காட்சியாக உள்ளது என்று ஆச்சரியமாக இருந்தது. ஏனெனில் புலிகளின் வசிப்பிடம் பெரும்பாலும் அடர்ந்த காடாக இருக்கும். புலிகளின் வசிப்பிடம் ஆசியா மற்றும் ஐரோப்பாவாகவே இருந்திருக்கிறது. புலிகள் ஆப்ரிக்காவைச் சேர்ந்தவை அல்ல. என்னுடைய முந்தையப் பதிவுகளில் சிங்கமும் புலியும் இருக்கும் ஒரே நாடு இந்தியா என்று கூறியிருப்பேன். அதனால்தான் புலியை ஆப்ரிக்கா savanna புல் வெளிகளில் கண்டபோது மிக ஆச்சரியமாக இருந்தது.

சமீபத்திய ஆராச்சிகளின்படி புலிகள் ஆப்ரிக்காவிலிருந்து 10 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே மறைந்துவிட்டன.

சிங்கத்தையும் புலியையும் ஒப்பிடும்போது, புலியே திட்டமிடுதல், ஆற்றல், திறமை என்று பல விதங்களிலும் மேம்பட்டது. ஆனால் சிங்கத்தின் வேட்டையாடுதல் பற்றிய ஒளிப் பதிவுகள் அளவிற்கு புலியின் வேட்டையாடுதல் பற்றிய ஒளிப் பதிவுகள் கிடையாது. அதற்க்குக் காரணம் சிங்கத்தின் இருப்பிடம் ஆப்ரிக்காவின் பரந்த புல் வெளியாகவும், புலிகளின் இருப்பிடம் அடர்ந்த ஆசியக் காடுகளாகவும் இருப்பதே.

நேற்றுப் பார்த்த நிகழ்ச்சி "Living with Tigers" எனும் ஆப்ரிக்கா காடுகளில் புலிகளை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியாகும். இந்த நடவடிக்கையில் இரண்டு வங்காளப் புலிகள் ஆப்ரிக்காவில் அறிமுகப் படுத்தப்பட்டன. ஒன்று
ரான் எனும் ஆண் புலி மற்றொன்று ஜூலி எனும் பெண் புலி. இரண்டும் அமெரிக்காவில் captivity இல் பிறந்த சகோதர சகோதரிகள்.


இப்புலிகள் அறிமுகப் படுத்தப்பட்ட பகுதி, தென்ஆப்ரிக்காவில் உள்ள சுற்றிலும் மின்சார வேலி அமைக்கப்பட்ட இப்புலிகளுக்கென்றே உருவாக்கப்பட்ட ஒரு சரணாலயம். இது ஒரு தனியார் முயற்சி.

இந்நிகழ்ச்சியில் இப்புலிகளுக்கு காடுகளில் வாழ்வதற்கு படிப்படியாக பயிற்சி கொடுக்கப்பட்டது. முதலில் இப்புலிகளுக்கு simulated prey அறிமுகப்படுத்தப்பட்டது. அதாவது ஒரு இறந்து போன மானின் உடலில் கறியைத் திணித்து அதனை ஒரு ஜீப்பில் கட்டி ஓட்டிச் சென்றார்கள். அதனை இப்புலிகள் வேட்டையாடின. இப்புலிகளின் முதல் உண்மையான வேட்டை ஒரு முள்ளம்பன்றி. இதனை அந்த நிகழ்ச்சியின் வர்ணனையாளரின் வார்த்தையில் கூறுவதென்றால் "Perfect hunt but wrong choice". ஏனெனில் முள்ளம்பன்றி வேட்டை மிக ஆபத்தான ஒன்று. முள்ளம் பன்றிகள் பல புலிகளையும் சிங்கங்களையும் நிரந்தர ஊனமாக்கிவிடும். இந்நிகழ்ச்சியிலும் ரானை முள்ளம் பன்றியின் முட்கள் நன்றாக குத்திவிடும். இருந்தாலும் கடைசியில் அது ஒரு மிகச் சிறந்த வேட்டையாகவே இருந்தது.


அடுத்த வேட்டை ஒரு வான்கோழி. அந்த வேட்டை மிகச் சிறப்பாக இருந்தது. வான்கோழி பறக்கும்போது இரண்டு புலிகளும் எதிர் எதிர் திசைகளிலிருந்து தாவி, வானத்திலேயே பிடிக்கும். மிக அருமையாக இருந்தது அக்காட்சி. அதற்க்கடுத்த வேட்டைக்கான தேர்ந்தெடுத்த மிருகம், அப்புலிகளின் அனுபவமின்மையை நன்றாக காட்டியது. அவற்றின் தேர்ந்த்தெடுப்பு 1400 kg எடை உள்ள காண்டாமிருகம்!. நல்லவேளையாக அக்காண்டாமிருகம் திருப்பித் தாக்கி சட்னி ஆக்காமல்விட்டது.

அதற்கடுத்த வேட்டை ஒரு காட்டுப் பன்றி. காட்டுப் பன்றியின் தோலானது சற்றுக் கடினமானது. அதனால் அப்பன்றியைக் கொல்வதற்கு இரண்டு புலிகளுக்கும் சற்று நேரமானது.

அதற்கடுத்து இப்புலிகளுக்கென்று அந்த மூடிய மின்சார வேலி அமைக்கப்பட்ட சரணாலயத்தில் மான்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இதற்க்கடுத்துதான் உண்மையான வேட்டை ஆரம்பமானது. நான் ஏற்கனவே சொன்ன மாதிரி புலி வேட்டையைப் பார்ப்பது அபூர்வம். நேற்றைய நிகழ்ச்சியில் புலிகளின் மான் வேட்டை மிகச் சிறப்பாக அமைந்தது. ஆரம்பத்தில் இப்புலிகளின் மான் வேட்டை அவற்றின் அனுபமின்மையைக் காட்டியது. புலி வேட்டையாடும் பொழுது இரையின் குரல் வளையை முதலில் பிடித்து அதன் மூச்சை நிறுத்தும். நேற்றைய நிகழ்ச்சியில் இப்புலிகள் குரல் வளையைப் பிடிக்காமல் கழுத்தின் மேற்ப்பகுதியையே பிடித்தன. ஆனால் காலம் செல்லச் செல்ல இரண்டு புலிகளும் வியூகம் அமைத்து மிகச் சிறப்பாக வேட்டையாடின. ஒரு கட்டத்தில் இரண்டு புலிகளும் சேர்ந்து ஒரே வேட்டையில் ஏழு மான்களை வேட்டையாடின!. ஒரு மானை இரண்டு புலிகளும் எதிர் எதிர் திசைகளிலிருந்து தாவி வானத்திலேயே பிடிக்கும். wow, that was a great hunt.

அதற்கடுத்து அச்சரணாலயத்தில் Wildebeest அறிமுகப்படுத்தப்பட்டன. Wildebeest என்பது 160- 290kg எடையுள்ள காட்டெருமை போன்ற ஒரு மிருகம். பொதுவாகப் புலிகள் இந்தியாவில் உலகிலேயே மிகப் பெரிய எருமை இனமான Gaur(1,000–1,500kg) ஐ தனியாகவே வேட்டையாடிவிடும். ஆனால் captivity இல் இருந்த இப்புலிகளுக்கு wildebeest சற்றுக் கடினம்தான். இருந்தாலும் ரானும், ஜூலியும் மிகச் சிறப்பாகவே வேட்டையாடிவிடும்.

அடுத்து நெருப்புக்கோழிகள் அறிமுகப்படுத்தப்பட்டன. நெருப்புக்கோழிகள் புலிகளின் வேகத்தை அளவிடக் கூடியவையாக இருந்தன. ஏனெனில் நெருப்புக்கோழிகள் மணிக்கு 72km வேகத்தில் ஓடும். அதையும் இரண்டு புலிகளும் சிறப்பாகவே வேட்டையாடின.

இவ்வாறாக இரண்டு புலிகளுக்கும், இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக பயிற்ச்சி கொடுக்கப்பட்டன. மேற்க்கூறிய காட்ச்சிகள் அனைத்தும் மனித இனம் இதுவரை பார்த்திராத ஒன்று!. ஏனெனில் Wildebeest ம்,Thomson Gazelle ம், நெருப்புக் கோழியும் புலிகள் இருக்கும் இடத்தில்(ஆசியா) கிடையவே கிடையாது. புலிகளின் வேட்டையை பரந்த புல் வெளியில் காண்பது என்பது மிக அருமையாக இருந்தது.

தற்பொழுது ரான் மற்றும் ஜூலிக்கு 10 வயதாகிறது. செயற்கை கருவூட்டல் முறையில் ஜூலி 5 குட்டிகளை ஈன்றிருக்கிறது.

ஆப்ரிக்கா காடுகளில் புலிகளை இனப்பெருக்கம் செய்யவைப்பது கண்டனங்களை எழுப்பாமல் இல்லை. ஏனெனில் ஆப்ரிக்கா புலிகளின் உண்மையான இருப்பிடம் இல்லை. மேலும் இப்புலிகளின் "genetic purity" பற்றிய சந்தேகங்கள் எழுந்துள்ளன. பெரும்பாலும் உலகில் காடுகளைத் தவிர்த்து மிருகக்காட்சி சாலைகளிலும் மற்ற இடங்களிலும் உள்ள புலிகள் பெரும்பாலும் "genetically impure" ஆகவே உள்ளன. அதாவது அவைகள் ஏதேனும் இரண்டு அல்லது அதற்க்கு மேற்ப்பட்ட இனப் புலிகளின் கலப்பாகவே உள்ளன. மேலும் இந்த முயற்சி ஒரு தனியார் பண்ணுவது. அதனால் இது பணம் பண்ணுவதற்க்கான முயற்சியே என்ற குற்றச்சாட்டும் உள்ளது .

இந்த நிகழ்ச்சியைப் பார்த்த பொழுது எனக்கு கோவமும் ஆத்திரமுமே மேலோங்கியது. ஏனெனில் இவ்வளவு முயற்சி செய்து ஆப்ரிக்காவில் இல்லாத புலியை உருவாக்க முயற்சி நடக்கும் பொழுது, புலிகளின் தாயகமாக விளங்கும் இந்தியாவில் புலிகள் பாதுகாக்கப்படவில்லை என்று எண்ணும்போது கோபம்தான் மேலோங்குகிறது.

மேலும் அறிய கீழே உள்ள பதிவுகளைக் காண்க,

http://www.jvbigcats.co.za/
http://www.lairweb.org.nz/tiger/release10.html
Photos Courtesy : http://www.jvbigcats.co.za/

பள்ளிக்கரணை சதுப்பு நிலம்

பள்ளி நாட்களில் சமூக அறிவியல் பாடத்தில் சதுப்பு நிலங்களை பற்றி படித்த போது, அது சற்று வித்யாசமான பெயராகவும், கற்பனையில் ஒரு வித்யாசமான நிலமாகவும் தோற்றம் அளித்தது. ஏனெனில் தமிழ் நாட்டில் பெரிதாக சதுப்பு நிலப் பகுதிகள் கிடையாது. அதனால் அதனைப் பார்த்தது கிடையாது. மேற்கு வங்கத்தில் உள்ள சுந்தரவனக் காடுகளின் சில பகுதிகள் சதுப்பு நிலத்தால் ஆனவை.

பிற்காலத்தில் பறவைகள் மற்றும் விலங்குகளின் மீது மேலும் அதிக ஆர்வம் ஏற்ப்பட்டபோது, சதுப்பு நிலங்களின் முக்கியத்துவம் தெரிந்தது. சதுப்பு நிலமானது எப்பொழுதும் அல்லது பெரும்பாலான நாட்களில் குறைந்த அளவு நீர் மட்டம் இருக்கும் பகுதிகளாகும். இச்சதுப்பு நிலங்களில் நீர்ப்பறவைகள் கூடு கட்டி இனப்பெருக்கம் செய்கின்றன. மேலும் இந்நிலங்களில் எப்பொழுதும் நீர் தேங்கி இருப்பதால், சுற்றுப்புறப் பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் உயர்வதில் பெரும் பங்கு வகிக்கின்றன.

நான் சென்னைக்கு வந்த புதிதில் தாம்பரத்திலிருந்து வேளச்சேரிக்கு பேருந்தில் வரும் பொழுது ஜெருசலேம் கல்லூரி அடுத்த பகுதிகளில் நீர் தேங்கி இருப்பதைப் பார்த்திருக்கிறேன். அப்பொழுதெல்லாம் அது சாதாரணமாக நீர் தேங்கி இருக்கும் பகுதி என்று தோன்றும். பின்னாட்களில்தான் அது சென்னையில் கடைசியாக எஞ்சி இருக்கும் வனப்பகுதிகளில் ஒன்று என்று தெரிந்தது. கடந்த 2007 ஆம் ஆண்டு பள்ளிகரணை சதுப்பு நிலங்களில் சில பகுதிகள் பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியாக அறிவிக்கப்பட்டதிலிருந்து இப்பகுதியின் முக்கியத்துவத்தை அறியலாம்.


பள்ளிக்கரணை சதுப்பு நிலமானது 61 வகைத் தாவர இனங்களுக்கும், 46 வகை மீன் இனங்களுக்கும்,106 வகை பறவை இனங்களுக்கும், 7 வகை வண்ணத்து பூச்சி இனங்களுக்கும், 21 வகை ஊர்வனங்களுக்கும் இருப்பிடமாக உள்ளது என்பதிலிருந்து உயிரியலில் இப்பகுதி எந்த அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை அறியலாம்.
பத்து, பதினைந்து வருடங்களுக்கு முன்பு இங்கு பறவைகள் அதிக அளவில் இருந்து இருக்கின்றன, ஆனால் இப்பொழுது ரொம்ப பெரிய அளவில் பறவைகளைக் காண முடிவதில்லை. மேலும் ஆக்கிரமிப்புகளாலும் மாநகராட்சிக் குப்பைகளை இங்கு கொட்டுவதாலும் பள்ளிக்கரணை சதுப்பு நிலம் அழிந்து வருகிறது. பள்ளிக்கரணை சதுப்பு நிலப் பகுதியின் எல்லைகள் இன்னும் முழுமையாக வரையறுக்கப்படாததால், இப்பகுதி முழுவதையும் பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியாக அறிவிப்பதில் தடங்கல்கள் உள்ளன.
இந்தியா வேற்றுமையில் ஒற்றுமை காணும் நாடு என்பது அதன் மக்கள் மற்றும் கலாச்சாரத்தைப் மட்டுமே குறிப்பது அல்ல, அதன் நிலப் பரப்பையும் குறிக்கும். உலகிலேயே மிக உயர்ந்த மலைத்தொடரையும், பாலைவனத்தையும், பீடபூமிகளையும்,சதுப்பு நிலங்களையும், மிகப் பெரிய வளமை வாய்ந்த சமவெளிகளையும், மிக வயது முதிர்ந்த மலைகளையும் ஒரே நாட்டில் காண்பது என்பது மிக அரிது. அதே போன்று மாறுபட்ட விலங்குகளையும், பறவைகளையும் ஒரே நாட்டில் காண்பது என்பது மிக மிக அரிது. இவ்வாறாக மாறுபட்ட விலங்குகளும் பறவைகளும் இருப்பதற்குக் காரணம் இத்தகைய மாறுபட்ட நிலப்பரப்புகளே. இந்தியாவின் இத்தகையப் பெருமையை நாம் அனைவரும் பாதுகாக்கவேண்டும். அதனால் அரசு மிக விரைவில் நடவடிக்கை எடுத்து பள்ளிகரணை சதுப்பு நிலப் பகுதியின் எல்லைகளை வரையறுத்து, இப்பகுதி முழுவதையும் பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியாக அறிவிக்க வேண்டும்.

பின் குறிப்பு :
பள்ளிக்கரணை சதுப்பு நிலம் முழுவதுமாக தொலைந்து போவதற்கு முன்பாக என்னுடைய புகைப் படக் கருவியில் பதிந்து கொள்ள வேண்டும் என்று எண்ணினேன். அதுவே நீங்கள் மேலே பார்த்த புகைப் படங்கள்.

Friday, November 6, 2009

தெரிந்ததைச் சொல்கிறேன் - 2

NEWS - North, East, West, South என்று நான்கு திசைகளிலிருந்தும் செய்திகளைத் தருவதால் NEWS என்று பெயர் வந்தது. நாம வேணும்னா இன்னொரு explanation கொடுப்போம். பல புதியதுகளைத் (செய்திகளைத், NEWs) தர்ரதுனால, அத NEWS வேனா சொல்லுவோம் ;)

Thursday, November 5, 2009

கடவுளிடம் காலை நீட்டினேன் !

நான் அன்று வீட்டில் காலை நீட்டி உட்கார்ந்திருந்தேன். நான் காலை நீட்டி உட்கார்ந்திருந்த இடம் சாமி அறையை நோக்கியவாறு இருந்தது. அதைப் பார்த்த என் அம்மா "டேய், சாமிய நோக்கி காலை நீட்டாதடா" என்றார். ஏனென்றால் அது சாமியை அவமதிப்பதாக இருக்கிறதாம். அப்பொழுதுதான் நான் சாமி அறையை நோக்கியவாறு காலை நீட்டிக்கொண்டிருப்பதை உணர்ந்தேன். என்னுடைய நோக்கம் சாமியை அவமதிப்பதில்லை என்பதால் அது எனக்குப் பெரிதாக தோன்றவில்லை. இருந்தாலும் நான் காலை மடக்கிய பிறகுதான் என் அம்மா சமாதானமடைந்தார்.

அதேபோல் நம் சிறு வயதில் ஏதேனும் சிறு புத்தகத்தையோ அல்லது ஏன் ஒரு சிறு தாளையோ மிதித்துவிட்டால், அது சரஸ்வதி என்று சொல்லி அதனை தொட்டுக் கும்பிடச் சொல்லுவார்கள். இன்றும் கூட நான் அந்தப் பழக்கத்திற்கு அடிமையானவன்தான்.

என்னைப் பொறுத்தவரை கடவுள் மரியாதை, அவமரியாதை இவற்றிற்க்கெல்லாம் அப்பாற்ப்பட்டவர். அப்படி இருந்தால் மட்டுமே அவர் கடவுள்.

சிவபெருமான், தன்னைப் பற்றிக் கூறும்போது கூட "ஒருத்தன் என்னைக் காலால் எட்டி மிதித்தவன்" என்பார். அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான கண்ணப்ப நாயனார், சிவபெருமானின் கண்களிலிருந்து குருதி பெருகுவதைக் கண்டு தன் ஒரு கண்ணைத் தோண்டி சிவபெருமானின் கண்ணில் வைப்பார். அப்பொழுது சிவபெருமானின் மற்றொரு கண்ணிலிருந்தும் குருதி வருவதைக் கண்டு தன் மற்றொரு கண்ணையும் தோண்டி வைக்க முயல்வார். சிவபெருமானின் கண் இருக்கும் இடம் அறியத் தன் காலால் சிவபெருமானின் கண் இருக்கும் இடத்தை மிதித்துக்கொள்வார். அதனையே சிவபெருமான் "ஒருத்தன் என்னைக் காலால் எட்டி மிதித்தான்" என்று நெகிழ்ச்சியுடன் நயம்படக் கூறுவார்.

ஆக சிவபெருமானே தன்னைக் காலால் எட்டி மிதித்ததை அவமரியாதையாகக் கருதவில்லை.

ஏன் மற்றப் பெருமக்களும் அவமரியாதையாகக் கருதவில்லை. மாணிக்கவாசகப் பெருமான், கண்ணப்ப நாயனாரைப் பற்றிக் குறிப்பிடும் போது,

கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை கண்டபின்
என்னப்பன் என்னொப்பில் என்னையும்ஆட் கொண்டருள

கண்ணப்பனுக்கு ஈடான அன்பு என்னிடம் இல்லாவிட்டாலும் கூட இறைவர் என்னையும் ஆட்கொண்டருளியதாகத் திருகோத்தும்பியில் குறிப்பிடுகின்றார்.

நம் உடம்பில் இருக்கும் மற்ற உறுப்புகளைப் போலவே காலும், ஆனால் அதனை மட்டும் அவமரியாதையாகக் கருதுவது ஏனோ என்று தெரியவில்லை.

நான் காலைப் பற்றி இவ்வாறு கூறும்போது என்னிடம் கேட்கப்படும் ஒரு கேள்வி, உன்னை யாராவது காலால் மிதித்தால் ஏற்றுக்கொள்வாயா?.

அதற்க்கு என்னுடைய பதில் அவர் எந்த நோக்கத்தோடு மிதித்திருந்தார் என்பதைப் பொறுத்தது.

என்னை மிதிக்கும் ஒருவர் தெரியாமல் மிதித்திருந்தாலோ அல்லது மிதிக்கும் ஒரு செயல், அவமரியாதை என்ற எண்ணம் இல்லாமல் மிதித்திருந்தாலோ, நான் தவறாக எண்ணமாட்டேன் .

கடவுள் என்று வரும்போது மேற்க்கூறியக் கருத்து இன்னும் மாறுபடும்.

ஒருவன் கடவுளை அவமதிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு மிதித்தாலும், அவன் நல்லவனாக இருக்கும் பட்சத்தில் கடவுள் அதனைப் பெரிதாக எண்ணமாட்டார். எண்ணவும் கூடாது. அப்படி இருந்தால் மட்டுமே அவர் கடவுள்.

அக்பர், பீர்பால் கதைகளில் ஒரு கதை வரும். ஒரு நாள் அக்பர், தன்னுடைய அவையில் வந்து "நேற்று ஒருவன் என்னை நெஞ்சில் ஏறிக் காலால் எட்டி மிதித்தான். அவனை என்ன செய்யலாம்?" என்று கேட்பார். உடனே அவையில் உள்ளவர்கள் எல்லாம் வெகுண்டு எழுந்து, அவன் காலை வெட்ட வேண்டும், அவனைக் கழுவில் ஏற்றவேண்டும், அவன் தோலை உரிக்க வேண்டும் என்று மாறி மாறி சொல்வார்கள். அப்பொழுது பீர்பால் மட்டும் அவன் காலுக்கு பொன்னால் ஆபரணம் அணிவிக்க வேண்டும் என்பார். அப்பொழுது அவையில் உள்ளவர்கள் எல்லாம் திகைத்து என்ன இது என்பார்கள்?. அதற்க்கு பீர்பால், சக்ரவர்த்தியை நெஞ்சில் ஏறி மிதிக்கக் கூடியவர் அவருடைய சிறு குழந்தை அன்றி வேறு யாராக இருக்க முடியும் என்பார்.

ஆக மிதித்தல் என்பது பார்ப்பவரின் கண்களைப் பொருத்தும், அச்செயலைச் செய்பவரின் நோக்கத்தைப் பொறுத்துமே அமைகிறது.