Saturday, October 24, 2009

ஜென் கதைகள்

ஜென் கதைகள் - எனக்குப் பிடித்தமான ஒன்று. அது உணர்த்தும் தத்துவங்கள் அருமையாக இருக்கும். கல்லூரி நாட்களில், கவிஞர் புவியரசு எழுதிய "மீண்டும் ஜென் கதைகள் " என்ற புத்தகம் வாங்கி இருந்தோம். வாங்கிய அன்றே பல பக்கங்கள் படித்து முடித்திருந்தேன். பிறகுதான் தோன்றியது, ஜென் கதைகளை நாவல்களைப் போன்று ஒரே மூச்சில் படித்து முடிக்கக் கூடாதென்று. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கதையாகப் படித்து உணரவேண்டும் என்று தோன்றியது. அதனால் அப்புத்தகத்தை அத்துடன் விட்டு விட்டேன். பிறகு அப்புத்தகம் இருப்பதே மறந்துவிட்டது. பல ஆண்டுகள் கழித்து சென்ற வாரம் அப்புத்தகத்தைக் கண்டெடுத்தேன். மீண்டும் முதலிலுருந்து படிக்க ஆரம்பித்தேன். ஜென் கதைகள் மீதான ஈர்ப்பு இன்னமும் அப்படியேதான் இருக்கிறது.

சரி புத்தகத்திற்குள் செல்வோம்.

புவியரசு அப்புத்தகத்தை ஆரம்பித்திருப்பதே அருமையாக இருக்கும்.

கடலில் வாழும் ஒருசிறிய மீனுக்கு ஒரு சந்தேகம் வரும். கடல்னா என்ன? அது எப்படி இருக்கும்? என்று. அதனால் அது ஒரு பெரிய மீனிடம் சென்று கேட்க்கும், கடல் என்றால் என்ன? அது எங்கே இருக்கும்? என்று. அதற்க்கு அந்தப் பெரிய மீன் அதுதான் உன்னைச் சூழ்ந்த்திருக்கிர்றது, அதற்குள் தான் நீ இருக்கிறாய், என்று சொல்லும் . அதற்க்கு அந்தச் சிறிய மீன், ஆனால் அது எனக்கு தெரியவில்லையே என்று கேட்கும். அதற்க்கு அந்தப் பெரிய மீன், நீ அதற்குள் இருப்பதால்தான் உனக்குத் தெரியவில்லை, நீ பிறந்ததும் இக்கடலில்தான், வாழ்ந்துகொண்டிருப்பதும் இக்கடலில்தான் , உன்னைச் சுற்றி இருப்பதும் கடல், உன்னுள் இருப்பதும் கடல் என்று சொல்லும்.

அதேபோல்தான் ஜென்னும், அது நம்மைச் சுற்றி இருப்பதாலே அது நமக்குத் தெரிவதில்லை. நாம் இயல்பாகவே ஜென்னில்தான் இருக்கிறோம். அதாவது நம் இயற்கைதான் ஜென் என்று அருமையாக ஆரம்பித்திருப்பார் .

இந்தப் புத்தகத்தில் எனக்குப் பிடித்த பிற இரண்டு விஷயங்கள், ஒவ்வொரு கதைக்கும், அக்கதைக்கு ஈடான, தமிழ் மொழியில் உள்ள தத்துவங்களை கொடுத்திருப்பார். மேலே கூறிய கதைக்கு அருமையான அருளையர் தத்துவம்.

" உள்ளும் புறம்பும் உலாவிய ஒரு பொருள் ".

மற்றொரு முக்கிய அம்சம் ஒவ்வொரு கதைக்கும் அம்சமான ஓவியங்கள். மிக அருமையாக இருக்கும் அந்த ஜப்பானிய ஓவியங்கள்.

இப்புத்தகத்தில் புவியரசு , ஜென் மிகவும் எளிமையானது. மிகவும் எளியதாக இயல்பானதாக இருப்பதாலே அது நமக்கு அரியதாக புதிரானதாகத் தோன்றுகிறது என்பார்.

ஒரு கதையில் ஒரு குருவும் சீடனும் பயணம் மேற்க்கொண்டிருப்பார்கள். அப்பொழுது அவர்கள் வழியில் ஒரு ஆறு குறுக்கிடும். ஆற்றின் கரையில் ஒரு அழகான இளம்பெண் கவலையோடு நின்று கொண்டிருப்பாள். குரு அவளை நெருங்கி ஏனம்மா கவலையோடு நின்று கொண்டுருக்கிறாய் என்பார்? அதற்க்கு அப்பெண், நான் இந்த ஆற்றைக் கடக்க வேண்டும். ஆனால் பயமாக இருக்கிறது என்பாள். உடனே குரு நான் உனக்கு உதவுகிறேன் என்று அவளைத் தூக்கிக் கொண்டு ஆற்றில் இறங்கி நடக்க ஆரம்பிப்பார். சீடனுக்கு ஒரே திகைப்பாகிவிடும். என்னடா நாம் துறவிகள் ஆயிற்றே, நாம் பெண்களை தொடக்கூடாதே, ஆனால் நம் குரு ஒரு பெண்ணைத் தொட்டு தூக்கி கொண்டு செல்கிறாரே? என்று. இருந்தாலும் பேசாமல் குருவுடன் ஆற்றைக் கடப்பான். ஆற்றின் மறு கரையில் குரு அப்பெண்ணை இறக்கி விட்டு நடந்து செல்வார். சீடனும் பேசாமல் ஆனால் இதைப் பற்றி எண்ணிக் கொண்டே பின் தொடர்வான். இருந்தாலும் பொறுக்கமாட்டாமல் அன்று சாயங்காலம் குருவிடம் கேட்டுவிடுவான், குருவே துறவிகளாகிய நாம் பெண்களைத் தொடக்கூடாதே. ஆனால் நீங்கள் இன்று ஒரு பெண்ணைத் தூக்கி கொண்டு சென்றீர்களே? அது எப்படி? என்று கேட்பான்.

அதற்க்கு அந்த குரு "நான் அவளை அப்பொழுதே இறக்கிவிட்டுவிட்டேனே!. நீ இன்னுமா சுமந்து திரிகிறாய் " என்பார்.

இக்கதைக்கு ஒரு அருமையான பாரதி பாடல்

"புறத்தே சுமக்கிறேன்; அகத்தி னுள்ளே இன்னதொரு பழங்குப்பை சுமக்கி றாய்நீ " .

மற்றொரு கதையில் ஒரு பெரிய போர் வீரர் இருப்பார். போர்களில் அவருடைய சாகசத்தைப் பாராட்டி ஒரு அழகிய கோப்பையை பரிசளித்திருப்பார்கள். அக்கோப்பையை கையில் வைத்துப் பார்த்துக் கொண்டிருப்பார். அப்பொழுது அது கை தவறி கீழே விழப் பார்க்கும். கண நேரத்தில் திகைத்து அதனைப் பிடித்து மேசை மீது வைப்பார். பார்த்தால் அதற்குள் அவருக்கு குப்பென்று வேர்த்திருக்கும். அதைப் பார்க்கையில் அவருக்கே வியப்பாக இருக்கும். என்னடா எவ்வளவு பெரிய போர்களில் எல்லாம் பயம் என்பதே அறியாமல் பல சாகசங்களைப் புரிந்திருக்கிறோம் , ஆனால் இக்கோப்பை சட்டென்று நம்மை பயம் கொள்ள வைத்துவிட்டதே என்று வியப்பார். சிறிது யோசித்த பிறகே புரியும் அந்தக் கோப்பையின் மீது வைத்தே பற்றே தன்னைப் பயம் கொள்ளச் செய்தது என்று. உடனே அக்கோப்பையை தூக்கிப் போட்டு உடைத்து அமைதி கொள்வார்.

இதற்க்கு ஒரு குறள்,

அஞ்சுவ தோறும் அறனே ஒருவனை
வஞ்சிப்ப தோறும் அவா.

மற்றொரு கதையில் ஒரு செல்வந்தர், ஒரு ஜென் ஞானியைச் சந்தித்து நல் மொழி கேட்பார். அதற்க்கு அஞ்ஞானி

"தந்தை இறப்பார்
மகன் இறப்பான்
அப்புறம்
பேரன் இறப்பான் " என்பார்.

செல்வந்தர் திடுக்கிட்டு, என்ன ஞானி அவர்களே இவ்வளவு அமங்கலமாக கூறுகிறீர்கள் என்பார்.

ஞானி சிரித்துக் கொண்டு, தந்தை, மகன், பேரன் என்ற வரிசைக்கிரகமாக முதுமை அடைந்த பின் மரணம் நிகழ்வது புனிதமான மகிழ்ச்சியானது அல்லவா? என்பார்.

எவ்வளவு அருமையான மொழிகள்.

5 comments:

JDK said...

ரொம்ப நல்லா கீது பா :))

Haripandi Rengasamy said...

நன்றி நண்பரே

nanban said...

i am chellapandi
i like too

nanban said...

thank u nanba

nanban said...

thank u nanba