Saturday, March 20, 2010

வீடு

ஒவ்வொருவருடன் ஒன்றாய்க் கலந்த விசயங்களில் வீடும் நிச்சயம் இடம்பெறும். வீடு என்பது வெறுமனே தூங்கி எழுந்திருப்பதற்க்கான ஒன்று அல்ல. அதையும் தாண்டி ஒரு விஷயம் நம்மை வீட்டுடன் கட்டிப்போடுகிறது . வீடு என்பது பெரியவர்களுக்கு மட்டுமே உணர்வுப் பூர்வமானது மட்டும் அல்ல, சிறியவர்களுக்கும் கூட அது உணர்வுப் பூர்வமானது. ஒரு வீட்டிலிருந்து மற்றொரு வீட்டிற்கு குடி ஏறும்போது , பழைய வீட்டை நீங்கிச் செல்லும் வேதனை பெரியவர்களை மட்டுமே அடைவதில்லை அது சிறுவர்களையும் விட்டுவைப்பதில்லை . ஏன் அந்த அனுபவத்தை நானே நிறைய சமயங்களில் உணர்ந்திருக்கிறேன். என் அப்பா அம்மா அரசாங்க ஊழியர்களாக இருந்ததால் நாங்கள் பல ஊருகளுக்கு மாற்றுதல் பெற்றுச் சென்றோம். ஒவ்வொருதடவையும் இவ்வாறு ஒரு வீட்டை நீங்கிச் செல்லும்போது உள்ளூர ஒரு வேதனை உண்டாகும். சிறு வயதிலிருந்தே வீட்டின் மீது ஆர்வம் ஏற்ப்பட்டுவிடுகிறது. அதுதான் மணல் வீடு கட்டும் வகையில் வெளிவருகிறது.

சொந்த வீட்டை தவிர்க்க முடியாத காரணங்களால் விற்றுவிட்டு அதனை நிரந்தரமாக நீங்கிச் செல்லும் போது உண்டாகும் வேதனை சொல்லில் அடங்காது. ஏனெனில் அந்த வீடு அவர்களின் உணர்வோடு ஒன்றுடன் ஒன்றாய் கலந்ததாக இருக்கும். ஒரு வீட்டை கட்டுவதென்பது அவ்வளவு எளிதானது அல்ல. ஒரு வீடு கட்டுவது என்பது வெறும் செங்கலும் சுண்ணாம்பும் சேர்ந்து கட்டுவது மாத்திரம் அல்ல. ஒவ்வொரு வீட்டின் செங்கலுக்குப் பின்னாலும் உழைப்பு, தியாகம், ஆசைகள் என்று பலவற்றைக் கொண்டு கட்டுவது. ஒரு வீடு கட்டுவதற்குப் பின்னாலிருக்கும் உழைப்பு தியாகம் போன்றவற்றை தமிழில் வெளிவந்த "வீடு" என்ற திரைப்படம் அருமையாகக் காட்டும்.

ஒரு வீடு என்பது வீடாகவே மட்டும் இருப்பதில்லை. அது அவ்வீட்டில் குடியிருப்போரின் சந்தோசம், துக்கம், வேதனை , ஏமாற்றம், ஏக்கம், ஆசை, அன்பு போன்றவற்றின் மௌன சாட்சியாக இருக்கிறது. ஒவ்வொரு வீடும் தனக்குள் ஆயிரம் ஆயிரம் கதைகளை கொண்டிருக்கும். எனக்கு என்னவோ ஒவ்வொரு வீடும் அதில் குடியேருவோரின் குணாதிசயங்களுக்கு ஏற்ப தன்னையும் அடிக்கடி மாற்றிக் கொள்கிறது என்றே தோன்றுகிறது. ஒவ்வொரு வீடும் அதில் குடியிருப்போரின் தன்மைக்கு ஏற்ப அறியப்படுகிறது. நாங்கள் சிறு வயதில் கிரிக்கெட் விளையாடும் போது பந்தானது அடிக்கடி ஒரு வீட்டிற்குள் சென்று விடும். அந்த வீட்டுக்காரரைப் பார்த்தாலே எங்களுக்குப் பயம். அவர் சத்தம் போட்டுவிட்டு பந்தை தர மறுப்பார். அதனாலையே அந்த வீட்டைப் பார்த்தாலேயே எங்களுக்குப் பயம். சிறிது காலங்களுக்குப் பிறகு அவர் அந்த வீட்டை காலி செய்து விட்டு வேறொருவர் குடியேறினார். அவர்களுக்கு குழந்தை இல்லாததால் , சிறுவர்களான எங்களுடன் பாசமாக பழகினார்கள். அடிக்கடி எங்களை அவர்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்று பிஸ்கட், குளிர்பானகள் எல்லாம் கொடுப்பார்கள். சிறிது காலத்திற்கு முன்பு வரை அந்த வீட்டைப் பார்த்தாலே எங்களுக்குப் பயம் . அதே வீடு இப்பொழுது முற்றிலும் மாறான பரிமாணம் பெற்றுள்ளது. இப்படியாக வீடானது தண்ணீர் எப்படி தான் இருக்கும் பாத்திரதிற்க்கேற்ப வடிவம் கொள்ளுதோ அதே போல் வீடும் அதில் குடியிருப்போரின் குணாதிசயங்களைப் பெறுகிறது. வெறும் வீடு என்பது வெறும் காலிப் பத்திரம் போலவே தான், அதற்கென்று எந்த குணாதிசயமும் கிடையாது.

நாங்கள் இது வரை பதினோரு வீடுகளில் குடியிருந்திருக்கிறோம். ஓவ்வொரு வீடும் என்னுடைய மற்றும் மதுவின் குணாதிசயங்களை வளர்ப்பதில் பெரும் பங்கு வகித்திருக்கின்றன. இந்த பதினோரு வீடுகளைத் தவிர எங்கள் மாமா வீட்டையும் , பெரியம்மா வீட்டையும் தவிர்க்க முடியாது. நாங்கள் சிறு பிராயத்தில் குடியிருந்த வீட்டை என்னால் இன்னும் மறக்க முடியாது. அந்த வீடானது செட்டிநாட்டுப் பாணியில் கட்டப்பட்டிருக்கும். அந்த வீடு ஒரே நீளமாக இருக்கும். அந்த வீட்டின் நீளம் அளவிற்கு வீட்டின் வெளியே ஒரு பெரிய கல் திண்ணை இருக்கும். அந்த கல் திண்ணையில் அமர்ந்து தான் எங்கள் உயிருக்கு உயிரான அப்பாவிடம் கதை கேட்போம். அந்த வீட்டில் தான் நாங்கள் எங்கள் அப்பாவின் உதவியுடன் முதல் முதலாக தோட்டம் வளர்த்தோம். இப்படியாக எங்களுடை அறிவையும் பிற உயிர்களிடத்தில் அன்பு காட்டுவதையும் அந்த வீடு தான் வளர்த்தது.

எங்கள் சிறு பிராயத்தின் விடுமுறை நாட்களை நாங்கள் எங்கள் மாமா வீட்டிலும், எங்கள் பெரியம்மா வீட்டிலும்தான் கழித்தோம். எங்கள் மாமா வீடு மிகச் சிறியதாக இருந்தது. ஆனால் அந்த வீட்டில் குடியிருந்த வரை எங்களுக்கு அது சிறியதாகத் தெரியவில்லை. இன்று சென்று அவ்வீட்டைப் பார்த்தால் நாங்கள் இத்தனை பேர் எப்படி அந்த வீட்டில் குடியிருந்தோம் என்று நினைக்கும் போது மலைப்பாக உள்ளது . இவ்வாறாக அந்த வீடு ஒவ்வொருவர் வரும் போதும் மறுப்பேதும் சொல்லாமல் தன்னை அகட்டிக் கொண்டு கருப்பையைப் போல் அனைவரையும் ஏற்றுக் கொண்டது.

எங்கள் பெரியம்மா வீடு சற்றுப் பெரியது. அந்த வீட்டிற்கு என்றே தனி மணம் உண்டு. அவர்கள் சிறிது காலத்திற்கு முன் அந்த வீட்டை விற்றுவிட்டார்கள். அதைக் கேட்டபோது எதோ பால்ய கால நினைவலைகளை முற்றிலும் இழந்து விட்டது போன்ற வலி ஏற்ப்பட்டது. இப்படியாக வீடானது பல பேருடன் இரண்டறக் கலந்ததாக உள்ளது.

4 comments:

Suppa S said...
This comment has been removed by the author.
Suppa S said...

ஒரு வீடு என்பது வீடாகவே மட்டும் இருப்பதில்லை. அது அவ்வீட்டில் குடியிருப்போரின் சந்தோசம், துக்கம், வேதனை , ஏமாற்றம், ஏக்கம், ஆசை, அன்பு போன்றவற்றின் மௌன சாட்சியாக இருக்கிறது. ஒவ்வொரு வீடும் தனக்குள் ஆயிரம் ஆயிரம் கதைகளை கொண்டிருக்கும்.
_______________________________________
அழகான பதிவு - இதயத்தில் இருந்து கசியும் அழகிய வாக்கியம்.

Haripandi Rengasamy said...

மிக்க நன்றி சுபாஷ்

Kannan said...

மிகவும் அருமை