Tuesday, November 13, 2012

பயணம்

explore a man walking on a road in tan 235 1024x576 10 Kilimanjaro Trip Tips

இந்த உலகத்துல பயணம் செய்யாத மனிதர்களே இல்லை. ஆதி காலம் தொட்டு இன்று வரை மனிதர்கள் பயணம் பண்ணிகிட்டேதான் இருக்காங்க. பல பயணங்கள் இந்த உலகையே மாத்திருக்கு . சே குவேராவின் 9 மாத காலத்தில் அவர் பயணம் செய்த 8000 km மோட்டார் சைக்கிள் பயணம் இந்த உலகில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. மாவோவின் நெடும் பயணம்தான் இன்றைய சீனாவின் வல்லரசிற்கு காரணம். இந்த உலகில் மனிதன் தோன்றியதிலிருந்து பயணப்பட்டுகிட்டேதான் இருக்கேன். இப்ப இருக்க எல்லாரும் கூட  எப்படியும் பயணம் பண்ணத்தான் செய்றாங்க, அந்த பயணங்களில் ஒவ்வொருத்தவங்களும் எந்த அளவிற்கு தாக்கத்தை உணருராங்கங்கறத  பொறுத்து அவர்களில் மாற்றம் நிகழும்.

பெரும்பாலும் பயணம்கிறத எல்லாரும் வெறும் இலக்கை அடையறுத்துக்கான வழியாதான் நினைக்கிறோம். ஆனா எல்லாப் பயணமும் இலக்கையும்  தாண்டி நமக்கு பலதையும்  சொல்லிக்கிட்டுதான் இருக்கு. ஆனா நாமதான் அத காது கொடுத்து கேக்குறதில்ல.

நான் அன்னைக்கு ஒருநாள் ஒரு சிறுகதை படிச்சேன். அதுல நம்ம கதாநாயகன் சென்னைல இருந்து மதுரைக்கு போகணும். திடீர்னு அவனுக்கு ஒரு நினைப்பு வரும். நாம ஏன் டவுன் பஸ்லயே மதுரைக்கு போகக்கூடாதுன்னு. உடனே தாம்பரத்துக்கு டவுன் பஸ் ஏறுவான். அங்க இருந்து கூடுவாஞ்சேரி . பின்ன அங்க இருந்து அடுத்த ஊருக்குன்னு இப்படியே போவான். வழில ஒரு 5 மணிநேரம் டவுன் பஸ்ஸே இருக்காது. அப்ப பஸ் ஸ்டாண்டுலையே  படுத்து தூங்கிருவான். மறுநாள் முத டவுன் பஸ்ஸ பிடிச்சு பயணம் தொடரும். இப்படியே அவன் ஊர் போய்ச் சேர 30 மணி நேரம் ஆகிரும். அப்ப அவன் நினைச்சுப்பாப்பான், எவ்ளோ ஊரு , என்னனென்ன பேரு, எத்தனை விதமான மனிதர்கள், அவர்களுக்குள்ளே  எவ்வளவு உணர்ச்சிகள், எவ்ளோ வட்டார மொழி இப்படி பல விசயங்கள் அவன் இதுவரைக்கும் வாழ்க்கைல கேட்டே இல்லாததெல்லாம் தெரிய வரும். அந்த பயண முடிவுல அவனுக்கு ஏற்பட்ட பயணக் களைப்பை  விட அவனுக்கு ஏற்பட்ட மன திருப்தி அதிகம் . அந்த ஒரு பயணத்துல அவன் வாழ்க்கை முழுவதற்குமான ஒரு பெரிய பாடத்தையும் கற்றிருப்பான்.

சென்னைல இருந்து இங்க இருக்க மதுரைக்கு உள்ளயே இவ்ளோ விஷயம் இருக்குதுனா , இந்த உலகம் முழுவதும் எவ்ளோ இருக்கும். இந்த ஆர்வம்தான் இன்னமும் இந்த உலக சுத்தி பலரை ஓடவிட்டுகிட்டு இருக்கு.

உலகம் முழுக்க தனியா படகுல, பைக்லனு சுத்தி வர்றவங்க நிறைய. அலஸ்டயர் (Alastair Humphreys) ங்குற பைய்யன்  உலகம் முழுக்க சைக்கிளலையே  சுத்தி வர்றான். இவங்கல்லாம் வருஷ கணக்கா பயணம் செய்றாங்க.  அன்று  மெகஸ்தனிசின் உலகப் பயணம் 30 ஆண்டுகள் நீடித்தது. அவரோட நூல்கள் ஒரே காலகட்டத்தைய  உலக நாடுகள் முழுவதையும் ஒப்பிட்டு பார்க்க உதவுது. அதுவரை அந்தந்த பகுதி மக்களின் பழக்க வழக்கங்கள் அந்தந்த பகுதி மக்களாலையே ஒரே கண்ணோட்டத்தில் பார்த்தது போய் இவர்களால் மூன்றாவது கண்ணோட்டம் கிடைத்தது .இவங்க அளவிற்கு மக்களுடன் யாரும் நெருங்கி இருக்க முடியாது. இவங்கதான் உலகின் உண்மையான தூதுவர்கள்.

என் சிறுவயதில் எங்கள் குடும்பத்துடன் நாங்கள் சென்ற வட இந்தியப் பயணம் என்னுடைய என் தம்பியுடைய கண்ணோட்டத்தில் மிகப்  பெரிய மாற்றத்தை ஏற்ப்படுத்தியது . திருநெல்வேலி தொடங்கி சிம்லா சென்று திரும்பவும் பஸ்சிலேயே வந்த அந்த 23 நாள் பயணத்தில் நான் அதுவரை அறியாத இந்தியாவைப் பார்த்தேன். நினைத்த இடத்தில் தூங்கி, நினைத்த இடத்தில் சாப்பிட்டு, நினைத்த ஆற்றில் குளித்து, நிச்சயம் வாழ்க்கையில் மறக்கமுடியாத பயணம். ஏன் இந்த இடத்தில் இந்த நேரத்தில் நிற்கிறீர்கள் இன்னும் கொஞ்ச நேரத்தில் சம்பல் கொள்ளைக்காரர்கள் வந்துவிடுவார்கள், கிளம்புங்கள் என்று எங்களைப் பற்றிக் கவலைப்பட்டு விரட்டியவரையும் , எதோ ஒரு ஊரைச் சார்ந்த 10 வயதுச் சிறுவனான என்னைக் கூப்பிட்டு தாங்கள் சாப்பிட்ட சப்பாத்தியை என்னுடன் பகிர்ந்துகொண்ட பஞ்சாப் லாரி டிரைவர்களையும் , போகிற வழியெல்லாம் தண்ணீர் கொடுத்து உதவிய மக்களையும், நாங்கள் அவரிடம் வாங்கிய தயிரையே அவர் வீட்டின் அருகிலிருந்து சாப்பிட அனுமதிக்காத அந்த பிராமணரையும், அந்த அலகாபாத்தில் எங்களுக்காக படகு ஒட்டிய அந்த கிழவனாருக்கு நாங்கள் மறைத்து கொடுத்த பணத்தை அந்த முதலாளி வந்து பறித்துக் கொண்டபோது அந்த கிழவனார் பார்த்த அந்த பரிதாப பார்வையையும் என்னால் எப்படி மறக்கமுடியும் . நிச்சயம் அந்தப் பயணம் எனக்கு இந்தியாவைப் பற்றி மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது .

என்னை பொறுத்தவரை பயணம்னா அது மனிதர்களுடன் கலந்ததா இருக்கணும்.  வெறுமனே விமானத்தில் பயணப்பட்டு இலக்கை அடைந்து திரும்பி விமானத்திலேயே திரும்புவதில் எனக்கு பெரிய ஆர்வம் இல்லை. பயணம்குறது வெறும் இடங்களை சுத்தி பார்பதற்கு அல்ல . அது மனிதர்களைப்  பார்க்க . எனக்கும் உலகம் பூரா இப்படி பயணம் செய்யணும்னு  ஆசை. மக்களுடன் அவ்ளோ நெருங்கணும். நம்ம சிறுகதையின் ஹீரோ மாதிரி சென்னைல இருந்து மதுரை வரைக்கும் டவுன் பஸ்லயே பயணம் பண்ணனும் ஆசை.

உலகிலேயே மிகப் பெரிய படிப்பு மனிதர்களை படிக்குறதுதான். மனிதர்களைப் படித்தவர்கள்தான் உலகை வெற்றி கொண்டிருந்திருக்கிறார்கள். அதை இந்த பயணங்கள் தராமல் வேறு எதுவும் தராது.
பின் குறிப்பு : அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள் :)
Photo Courtesy :
http://www.travelinggreener.com/active/10-kilimanjaro-trip-tips/
http://explore.org

1 comment:

Vidhya said...

Good Topic. "Learn life through experience and learn experience through Travel"