Sunday, December 20, 2009

சங்க காலச் சோழர்கள்

இப்பதிவு நான் முன்னர் எழுதிய சோழர்கள் பதிவின் தொடர்ச்சியே ஆகும்

சங்ககாலச் சோழர்களின் காலம், கிறிஸ்து ஆண்டின் முதற்ச் சில நூற்றாண்டுகள். சங்ககாலச் சோழர்களைப் பற்றி அறிய சங்ககால நூல்கள் தான் வழி கோல்கின்றன. இக்காலச் சோழர்களைப் பற்றி அறிய வரலாற்றுச் சான்றுகள் இல்லை என்று சொல்லும் அளவிற்கு மிகக் குறைவே. சங்ககாலச் சோழர்களில் கரிகார்ச் சோழன் அளவிற்கு ஒப்பாரும் மிக்காரும் இலர். கரிகார்ச் சோழனின் காலத்தில் சோழர்களின் நிலப்பரப்பு தற்போதைய திருச்சி,தஞ்சை மாவட்டங்களையும் புதுக்கோட்டையின் சில பகுதிகளையும் உள்ளடக்கியது. சோழர்கள் ராஜேந்திர சோழன் காலத்தில் உச்சத்தில் இருந்த போது இருந்த நிலப்பரப்பை விட இது மிகவும் சிறியதே. ராஜேந்திர சோழன் காலத்தில் தென்னகம் முழுவதும் சோழர்களின் ஆட்சியில் இருந்தது. மேலும் ஒரிசா, வங்காளம், பர்மா, மலேசியா,தாய்லாந்து, இந்தோனேசியா வரை சோழர்களின் ஆதிக்கத்தில் இருந்தது.

சங்க காலத்தில் மிகப் புகழ் பெற்றிருந்த சோழர்கள் கரிகார்ச் சோழன் மற்றும் கோச்செங்கணன். கரிகார்ச் சோழன் என்பதற்கு கரிய காலை உடையவன் என்று பொருள். பிற்காலத்தில் வட மொழி ஆதிக்கம் ஏற்ப்பட்ட பிறகு இதற்க்கு கரி - யானை, காலன் - எமன் என்று யானைகளுக்கு எமனானவன் என்று பொருள் ஏற்ப்பட்டது. சங்ககாலத்தில் ஒரே நேரத்தில் பல சோழ அரசுகள் இருந்தன மேலும் அவற்றிற்கிடையே பகையும் இருந்தது.

சோழர்கள் தங்களை சூரியனின் வழி வந்தோர் என்று கூறிக் கொண்டனர். அதேபோல் கன்றை இழந்த தாய்ப் பசுவின் துயர் தீர்க்க தன் மகனை தேர் ஏற்றிக் கொன்ற மனு நீதிச் சோழன் மற்றும் புறாவுக்கு தன் கறி கொடுத்த சிபிச் சக்ரவர்த்தியின் வம்சத்தவர்கள் தாங்கள் என்று கூறிக் கொள்வதிலும் பெருமை கொண்டனர். இதில் மனு நீதிச் சோழன் தமிழகத்தில் வாழ்ந்த மன்னன் அல்லன். அவன் இலங்கையை ஆட்சி செய்தவன் என்பது ஒரு ஆச்சரியமான தகவல்.

கரிகார்ச் சோழன் மிகப் புகழ் பெற்றவன். அவன் வெண்ணி என்னும் இடத்தில் வைத்து சேரன், பாண்டியன் மற்றும் பதினோரு குறுநில மன்னர்களையும் தோற்கடித்தான். அதன் பிறகுதான் நிலையான ஆட்சி அமைந்தது.இவனுடைய காலத்திலேயே காவிரிப் பூம்பட்டினம் சிறப்புற்றது. கரிகார்ச் சோழனுக்கு வெற்றி மேல் வெற்றி கிடைத்தது. கரிகார்ச் சோழன் நாட்டிலும் பல மாற்றங்களை ஏற்ப்படுத்தினான். அவன் காலத்தில் வாணிகம், தொழிர்த் துறை, விவசாயம் போன்றவை செழித்து விளங்கின.

ஒரே நேரத்தில் பல சோழ மன்னர்கள் இருந்தார்கள். புகார் எனும் காவிரிப் பூம்பட்டினத்தை தலைநகராகக் கொண்டு நலங்கிள்ளியும் உறையூரிலிருந்து நெடுங்கிள்ளியும் அரசாண்டனர். அவர்களுக்கிடையே பகையும் இருந்தது. இவர்களுக்கிடையே காரியாற்றில் நடந்த போரில் நெடுங்கிள்ளி கொல்லப்பட்டதிலிருந்து சோழர்களுக்கிடையேயான போர் முடிவிற்கு வந்தது எனலாம். நாம் கூட பள்ளி பருவத்தில் நலங்கிள்ளி நெடுங்கிள்ளிக்கிடையேயான போரைப் பற்றி படித்திருக்கிறோம்.

நலங்கிள்ளி, நெடுங்கிள்ளி காலத்தில் வாழ்ந்த மற்றொரு முக்கியமான் மன்னன் கிள்ளிவளவன். இவன் சேரர்களின் தலைநகரான கரூரைக் கைப்பற்றினான்.
இந்தக் கரூரும் தற்பொழுது இருக்கும் கரூரும் ஒன்றா என்று எனக்குத் தெரியவில்லை .

இதே போல் நாம் பள்ளிப் பருவத்தில் படித்த மற்ற சில முக்கியமானவர்கள் கோப்பெருன்சோழரும் பிசிராந்தையாரும். பிசிராந்தையார் பாண்டிய நாட்டைச் சார்ந்தவர். அவர் பாண்டிய மன்னனுக்கு அறிவுரை கூறும் அளவிற்கு நெருக்கம் கொண்டவர். கோப்பெருன்சோழன் தன் பிள்ளைகளுக்கிடையே ஏற்ப்பட்ட வேறுபாடுகளைக் களைய முடியாமல் வடக்கிருந்து உயிர் துறக்க எண்ணினான். இதைப் பாண்டிய நாட்டில் கேள்விப்பட்ட பிசிராந்தையார் மன்னனுக்குத் துணையாக தானும் வடக்கிருந்து உயிர் நீத்தார்.


பின் குறிப்பு:
1. சங்க காலச் சோழர்களை பற்றி எழுதவே அதிகம் உள்ளது. இவர்களைப் பற்றி பின் வரும் பதிவுகளில் மேலும் அதிகம் எழுதுகிறேன்.
2. நாளை சோழர்கள் ஆண்ட நிலப் பகுதிகளின் வரை படத்தை அளிக்கிறேன்.
3. இப்புத்தகத்தில் சங்க காலச் சோழர்களைப் பற்றிய காலக் குறிப்புகள் தெளிவாக இல்லை. அதனால் யார் முன்னர் ஆண்டனர், யார் பின்னர் ஆண்டனர் போன்ற குறிப்புகள் அளிக்க முடியவில்லை.

5 comments:

parithi said...

தமிழக வரலாறு என்றாலே அது சோழர்களின் வரலாறு என்பது மறுக்க முடியாத உண்மை ...இருப்பினும் விஜயாலய சோழனிற்கு முன்பு தஞ்சையை ஆட்சி செய்த களபிறர்கள் ஆட்சியை ...வரலாற்று ஆய்வாளர்கள் இருண்ட காலம் என்கிறர்கள்...ஒரு ஆட்சியை இருண்ட காலம் என்பதற்கு காரணம் ..
... ஒரு கொடுங்கோல் ஆட்சி ஆக இருக்க வேண்டும்...
....அல்லது மன்னன் வீரம் இல்லாதவன் ஆக இருக்க வேண்டும்..அனால் அப்படி இல்லை..
களபிறர்கள் ஆட்சி காலத்தில் ஜைன மதம் பின்பற்ற பட்டுள்ளது..வேள்விக்குடி கல்வெட்டு மூலம் நாம் அறிவது...களபிறர்கள் ஆட்சி காலத்தில் பிரமதேய(gift to brahmins) முற்றிலும் ஒழிக்க பட்டது..இன்னும் தஞ்சாவூர்,புதுகோட்டை பகுதிகளில் உள்ள.மங்களம் என்று முடியும் கிராமங்கள் எல்லாம் ராஜ ராஜ சோழன் காலத்தில் பிராமணருக்கு இலவசமாக கொடுத்த கிராமங்கள் ஆகும்.....
இவற்றில் இருந்து களபிறர்கள் ஆட்சி காலம் யாருக்கு இருண்ட காலம் என்பது விளங்கும்.
மேலும் ,ஆர்யர்கள் க்ய்பர் கால்வாய் வழியாக வருகை தந்தார்கள் என்றும் (நம் வரலாறு பாட புத்தகத்தில் உள்ளாது) ....அனால் முகலாயர்கள் இந்தியாவின் மீது படை எடுத்தார்கள் என்றும் உள்ளது....ஏன் இந்த முரண்பாடு..

Haripandi said...

தமிழகத்தின் வரலாறு என்பது சோழர்களின் வரலாறே என்று கூறமுடியாது. ஆனால் நம்மை, உங்களை இவ்வாறு எண்ண வைத்ததே சோழர்களின் வெற்றிதான். விஜயாலயச் சோழருக்கும் சங்க காலச் சோழர்களுக்கும் இடைப்பட்ட காலத்தில் பாண்டியர்களும் பல்லவர்களும் புகழ் பெற்றிருந்த்தனர் என்பதை நாம் மறக்க முடியாது. ஆனால் நிச்சயம் தமிழக வரலாற்றின் பெரும் பகுதியை சோழர்களே ஆக்கிரமிக்கிறார்கள் என்பது உண்மைதான்.

பின் குறிப்பு:
தங்கள் யார் என்பதை நான் தெரிந்து கொள்ளலாமா? நீங்கள் என் நண்பர் இளம்பரிதி என்ற ஐயப்பாடு எனக்கு உள்ளது. நான் நினைத்தது சரியா?

parithi said...

ஏன் இந்த முரண்பாடு:
எனக்கு பொதுவா ஒரு பழக்கம் இருக்கு.எந்த ஊருக்கு போனாலும் அந்த ஊரில் உள்ள பழமையான கோவிலிற்கு செல்வேன்.அந்த கோவில் எந்த நூற்றாண்டில் கட்ட பட்டது என்றும்.அப்பொழுது அந்த பகுதி எப்படி இருந்து இருக்கும் என்றும் கற்பனை செய்து பார்பேன்.ஒரு நாள் திருச்சியில் நடந்து செல்லும் பொழுது,ஒரு ராஜ ஒருத்தர் கையில் வாழுடன் வெயிலில் நின்று கொண்டு இருந்தார்.யார் அவர் என்று பார்த்தால்,பேரரசர் பெரும்பிடிகு முத்தரையர் என்று பொரிக்க பட்டு இருந்தது.பேர் தெரியாத ராசாவ இருக்காரே என்று அவர் சம்பந்தம் ஆக படிக்க ஆரம்பிதேன்.வரலாற்றில் இவர்களது ஆட்சி காலம், இருண்ட காலம் என்று இருந்தது.முரண்பாடுகளை அதிகம் நேசிப்பவன் நான்.ஆதலால் அவர் சம்பந்தம் ஆன கல்வெட்டு குறிப்புகளையும் மற்றும் கிடைத்த ஒரு சில தமிழ் பாடல்களையும் வைத்து பார்த்த பொழுது.இவர்கள் சொல்லும் காரணம்,
௧.ஜைன மதத்தை பரப்பினார்கள்.
௨.ஹிந்து மதத்திற்கும்,சமஸ்கிருதத்திற்கும் எதிராக இருந்தனர் பண்டிகைகளையும்,விழாக்களையும் தவிர்த்தனர் என்று சொல்ல பட்டு உள்ளது.
மேலே குறிப்பிட்ட காரணங்களிற்காக ஒருவரது ஆட்சி காலம் இருண்ட காலம் என்று கூறுவது அநியாயம்.
மற்றும் ஆரியர்கள் "கைபர் கால்வாய் வழியாக வருகை தந்தார்கள்", அனால் "முகலாயர்கள் இந்தியா மீது படை எடுத்தார்கள் ", என்றும் உள்ளது.இவற்றை போன்று தமிழக வரலாற்றிலும்,உலக வரலாற்றிலும் நிறைய முரண்பாடுகள் உள்ளன.
பின் குறிப்பு:
ஆமாம் மாப்ள இளம்பரிதி தான்.சோழர்கள் சம்பந்தம் ஆன உனது குறிப்புக்கள் அருமை,மற்றும் உனது எழுத்து நடை நன்கு மேம்பட்டு உள்ளது.

Haripandi said...

களப்பிரர்கள் தமிழகத்தை கி.பி 3 ஆம் நூற்றாண்டு முதல் 6 ஆம் நூற்றாண்டு வரை ஆண்டனர். அவர்கள் ஆண்ட காலத்தை interregnum period என்பார்கள். அதாவது இரண்டு era களுக்களுக்கு இடைப்பட்ட காலம் என்று பொருள் கொள்ளலாம். அதாவது சங்க கால சேர, சோழ, பாண்டியர்கள் ஆண்ட காலத்திற்கும் பிற்பாடு 6 ஆம் நூற்றாண்டு முதல் திரும்பவும் மூவேந்தர்களின் ஆட்சிக்கும் இடைப்பட்ட காலம் ஆகும். இதிலிருந்து களப்பிரர்கள் ஆண்ட காலத்திற்கு ஒரு தனிப்பட்ட அங்கீகாரம் கொடுக்காமல், அவர்கள் காலம் மூவேந்தர்களின் வீழ்ச்சிக்கும் எழுச்சிக்கும் இடைப்பட்ட காலப் பகுதி என்றே குறிக்கப்படுகிறது. இக்காலகட்டத்தைப் பற்றி குறிப்புகள் எதுவும் இல்லை. அதனாலயே களப்பிரர்களைப் பற்றி குறிப்புகள் கிடையாது. களப்பிரர்கள் ஆரம்ப காலத்தில் பௌத்த, ஜைன மதங்களை பின்பற்றினார்கள். அதனாலயே பிற்கால சைவ வைணவ மூவேந்தர்களால் அக்காலம் இருண்ட காலம் எனப்பட்டது. ஆனால் களப்பிரர்கள் பிற்பாடு சைவ, வைணவ மதங்களையே பின்பற்றினார்கள். கடவுள் முருகன் அவர்களின் முக்கிய கடவுளாக இருந்தார்.

எனக்கு என்ன ஆச்சரியம் என்றால் சிலப்பதிகாரம், திருக்குறள் போன்ற காவிய நூல்கள் எழுதப்பட்ட காலம் இவர்களுடையது. பல நாயன்மார்களும் , ஆழ்வார்களும் இவர்களுடைய காலத்திலேயே வாழ்ந்ததனர். ஆனாலும் களப்பிரர்கள் பற்றியக் குறிப்புகள் இல்லை.

இக்கலாத்தைப் பற்றிக் குறிப்புகள் இல்லாததலயே இதனை இருண்ட காலம் எனலாம். களப்பிரர்கள் தமிழகத்தை இருண்ட காலத்தில் ஆண்டார்களா அல்லது அவர்கள் ஆண்டதால் அது தமிழகத்தின் இருண்ட காலம் ஆனாதா என்பது விவாததத்திற்கு உரியது.

யாராலும் கி.பி 3 ஆம் நூற்றாண்டு முதல் 6 ஆம் நூற்றாண்டு வரை ஏன் தமிழகத்தைப் பற்றி பெரியக் குறிப்புகள் இல்லை என்பதற்கு விளக்கம் தர இயலவில்லை.
களப்பிரர்களைப் பற்றி பெரிதாக குறிப்புகள் இல்லாதபோதிலும், களப்பிரர்களைப் பற்றி எண்ணும்போது ஒரு கசப்பான உணர்வேர்த் தோன்றுவதை மறுக்க முடியவில்லை . அதற்குக் காரணமும் தெரியவில்லை.

முகலாயர்கள் கணவாய் வழியே வந்தார்கள் வெள்ளையர்கள் கடல் வழி வந்தார்கள். இதில் முரண்பாடு எதுவும் எனக்குத் தோன்றவில்லை நண்பா.
பின் குறிப்பு :
உன்னுடைய பாராட்டுதலுக்கு மிக்க நன்றி நண்பா. நீ என் பதிவுகளைப் படிப்பது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது நண்பா.

நாடோடிப் பையன் said...

Nice post.
I am always interested in the history of Chola, Pandiya, and Chera dynasties. Thanks for your post.