Wednesday, October 14, 2009

அளவுக்கு அதிகமான அங்கீகாரங்களும்,புறக்கணிப்புகளும் !

எனக்கு ஒரு விஷயம் புரியவே இல்லை. ஒரு வெளிநாடு வாழ் இந்தியர் (1*) ஏதேனும் ஒரு விருதைப் பெற்றால் இந்தியர்களும் இந்திய ஊடகங்களும் அவர்களுக்கு அளவுக்கு மீறி முக்கியத்துவம் கொடுப்பது. அதில் ஒரு latest entry Mr. வெங்கி ராமகிருஷ்ணன். நாம் ஒன்றைப் புரிந்துகொள்ள மறுக்கிறோம் அல்லது மறந்து விடுகிறோம். அவர்கள் இந்தியக் குடியுரிமை வேண்டாம் என்று சென்று விட்டவர்கள். அவர்களை போன்ற பெரும்பாலோனோர் தாங்கள் இந்தியர்கள் என்று சொல்லிக்கொள்வதைக் கூட விரும்பாதவர்கள் போன்றேத் தோன்றுகிறார்கள்.

“All sorts of people from India have been writing to me, clogging up my email box. It takes me an hour or two to just remove their mails,”
என்கிறார் வெங்கி. இருந்தாலும் நம் மக்கள் விடுவதாக இல்லை, அவரைப் பாராட்டி மெயிலா அனுப்பித் தள்ளுகிறார்கள். இதே போன்று மெயில்களை அவருடன் சேர்ந்து நோபெல் விருது பெற்ற மற்ற இருவருக்கும் அனுப்பினார்களா என்று எனக்குத் தெரியவில்லை !. எனக்குத் தெரிந்த வரையில் அவர் இந்தியாவில் பிறந்தவர். அதைத் தவிர எனக்குத் தெரிந்து அவருக்கும் நமக்கும் வேறு எந்தத் தொடர்பும் இல்லை, அவர் கூறியதை போல நாம் அனைவரும் மனிதர்கள் என்பதைத் தவிர!

இதே போன்று கல்பனாச் சாவ்லா இறந்த போது இந்தியா முழுவதும் துக்கம் கொண்டாடியது. அவருடைய இறப்பு மனிதர்கள் என்ற அளவில் அனைவருக்கும் வருத்தம் அளிக்கக் கூடியதே. நாம் நிச்சயம் துக்கம் அனுஷ்டிக்க வேண்டியதுதான், அவரும் ஒரு மனிதர் என்ற அளவில்!. ஆனால் நாம் அதற்க்கும் மேலாகச் சென்று. பல மாநிலங்கள் அவருக்கு இழப்பீடுகளையும், ஏன் தமிழக அரசு அவர் பெயரில் ஒரு விருதே அறிவித்தது!. இறந்து போனவர்களை பற்றிப் பேசக்கூடாதுதான், இருந்தாலும் எனக்கு இவ்விசயங்கள் சற்று அதிகமாகவேப்பட்டது.

இவ்வளவு செய்யும் நாம் ஒன்றை மறந்து விடுகிறோம், இன்னமும் எத்தனையோ நூற்றுக்கணக்கான இந்திய விஞ்ஞானிகள், பல வெளிநாட்டு வாய்ப்புகளை மறுத்துவிட்டு ISRO விலும், DRDO விலும் இன்னும் பல ஆராய்ச்சி நிறுவனங்களிலும், இந்தியாவிற்காக உழைத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

இத்தகைய விஞ்ஞானிகள் வெங்கி ராமகிருஷ்ணனோ அல்லது கல்பனா சாவ்லாவோ பெற்ற அங்கீகாரத்தில் நூற்றில் ஒரு பங்காவது பெற்றிருப்பார்களா என்பது சந்தேகமே!

புறக்கணிப்புகள் மட்டுமல்ல, அளவுக்கு அதிகமான அங்கீகாரங்களும் புறக்கணிப்புகள் ஏற்ப்படுத்தும் அதே விளைவுகளை ஏற்ப்படுத்திவிடும்!

P.S:

1.வெளிநாடு வாழ் இந்தியர் என்ற வார்த்தையிலேயே எனக்கு மாற்றுக் கருத்து உண்டு. அவர்கள் இந்தியர்களே அல்ல. அவர்களோ அல்லது அவர்களின் முன்னோர்களோ இந்தியாவில் பிறந்தவர்கள், அவ்வளவே!. இந்தியா வேண்டாம் என்று வேற்று நாட்டுக் குடியுரிமைப் பெற்ற பின் எப்படி , அவர்கள் இந்தியர்கள் ஆவார்கள்?

No comments: