சங்ககாலச் சோழர்களின் காலம், கிறிஸ்து ஆண்டின் முதற்ச் சில நூற்றாண்டுகள். சங்ககாலச் சோழர்களைப் பற்றி அறிய சங்ககால நூல்கள் தான் வழி கோல்கின்றன. இக்காலச் சோழர்களைப் பற்றி அறிய வரலாற்றுச் சான்றுகள் இல்லை என்று சொல்லும் அளவிற்கு மிகக் குறைவே. சங்ககாலச் சோழர்களில் கரிகார்ச் சோழன் அளவிற்கு ஒப்பாரும் மிக்காரும் இலர். கரிகார்ச் சோழனின் காலத்தில் சோழர்களின் நிலப்பரப்பு தற்போதைய திருச்சி,தஞ்சை மாவட்டங்களையும் புதுக்கோட்டையின் சில பகுதிகளையும் உள்ளடக்கியது. சோழர்கள் ராஜேந்திர சோழன் காலத்தில் உச்சத்தில் இருந்த போது இருந்த நிலப்பரப்பை விட இது மிகவும் சிறியதே. ராஜேந்திர சோழன் காலத்தில் தென்னகம் முழுவதும் சோழர்களின் ஆட்சியில் இருந்தது. மேலும் ஒரிசா, வங்காளம், பர்மா, மலேசியா,தாய்லாந்து, இந்தோனேசியா வரை சோழர்களின் ஆதிக்கத்தில் இருந்தது.
சங்க காலத்தில் மிகப் புகழ் பெற்றிருந்த சோழர்கள் கரிகார்ச் சோழன் மற்றும் கோச்செங்கணன். கரிகார்ச் சோழன் என்பதற்கு கரிய காலை உடையவன் என்று பொருள். பிற்காலத்தில் வட மொழி ஆதிக்கம் ஏற்ப்பட்ட பிறகு இதற்க்கு கரி - யானை, காலன் - எமன் என்று யானைகளுக்கு எமனானவன் என்று பொருள் ஏற்ப்பட்டது. சங்ககாலத்தில் ஒரே நேரத்தில் பல சோழ அரசுகள் இருந்தன மேலும் அவற்றிற்கிடையே பகையும் இருந்தது.
சோழர்கள் தங்களை சூரியனின் வழி வந்தோர் என்று கூறிக் கொண்டனர். அதேபோல் கன்றை இழந்த தாய்ப் பசுவின் துயர் தீர்க்க தன் மகனை தேர் ஏற்றிக் கொன்ற மனு நீதிச் சோழன் மற்றும் புறாவுக்கு தன் கறி கொடுத்த சிபிச் சக்ரவர்த்தியின் வம்சத்தவர்கள் தாங்கள் என்று கூறிக் கொள்வதிலும் பெருமை கொண்டனர். இதில் மனு நீதிச் சோழன் தமிழகத்தில் வாழ்ந்த மன்னன் அல்லன். அவன் இலங்கையை ஆட்சி செய்தவன் என்பது ஒரு ஆச்சரியமான தகவல்.
கரிகார்ச் சோழன் மிகப் புகழ் பெற்றவன். அவன் வெண்ணி என்னும் இடத்தில் வைத்து சேரன், பாண்டியன் மற்றும் பதினோரு குறுநில மன்னர்களையும் தோற்கடித்தான். அதன் பிறகுதான் நிலையான ஆட்சி அமைந்தது.இவனுடைய காலத்திலேயே காவிரிப் பூம்பட்டினம் சிறப்புற்றது. கரிகார்ச் சோழனுக்கு வெற்றி மேல் வெற்றி கிடைத்தது. கரிகார்ச் சோழன் நாட்டிலும் பல மாற்றங்களை ஏற்ப்படுத்தினான். அவன் காலத்தில் வாணிகம், தொழிர்த் துறை, விவசாயம் போன்றவை செழித்து விளங்கின.
ஒரே நேரத்தில் பல சோழ மன்னர்கள் இருந்தார்கள். புகார் எனும் காவிரிப் பூம்பட்டினத்தை தலைநகராகக் கொண்டு நலங்கிள்ளியும் உறையூரிலிருந்து நெடுங்கிள்ளியும் அரசாண்டனர். அவர்களுக்கிடையே பகையும் இருந்தது. இவர்களுக்கிடையே காரியாற்றில் நடந்த போரில் நெடுங்கிள்ளி கொல்லப்பட்டதிலிருந்து சோழர்களுக்கிடையேயான போர் முடிவிற்கு வந்தது எனலாம். நாம் கூட பள்ளி பருவத்தில் நலங்கிள்ளி நெடுங்கிள்ளிக்கிடையேயான போரைப் பற்றி படித்திருக்கிறோம்.
நலங்கிள்ளி, நெடுங்கிள்ளி காலத்தில் வாழ்ந்த மற்றொரு முக்கியமான் மன்னன் கிள்ளிவளவன். இவன் சேரர்களின் தலைநகரான கரூரைக் கைப்பற்றினான்.
இந்தக் கரூரும் தற்பொழுது இருக்கும் கரூரும் ஒன்றா என்று எனக்குத் தெரியவில்லை .
இதே போல் நாம் பள்ளிப் பருவத்தில் படித்த மற்ற சில முக்கியமானவர்கள் கோப்பெருன்சோழரும் பிசிராந்தையாரும். பிசிராந்தையார் பாண்டிய நாட்டைச் சார்ந்தவர். அவர் பாண்டிய மன்னனுக்கு அறிவுரை கூறும் அளவிற்கு நெருக்கம் கொண்டவர். கோப்பெருன்சோழன் தன் பிள்ளைகளுக்கிடையே ஏற்ப்பட்ட வேறுபாடுகளைக் களைய முடியாமல் வடக்கிருந்து உயிர் துறக்க எண்ணினான். இதைப் பாண்டிய நாட்டில் கேள்விப்பட்ட பிசிராந்தையார் மன்னனுக்குத் துணையாக தானும் வடக்கிருந்து உயிர் நீத்தார்.
பின் குறிப்பு:
1. சங்க காலச் சோழர்களை பற்றி எழுதவே அதிகம் உள்ளது. இவர்களைப் பற்றி பின் வரும் பதிவுகளில் மேலும் அதிகம் எழுதுகிறேன்.
2. நாளை சோழர்கள் ஆண்ட நிலப் பகுதிகளின் வரை படத்தை அளிக்கிறேன்.