Friday, January 29, 2010

நள்ளிரவில் சுதந்திரம், சூபி தத்துவம் மற்றும் சீனா

நான் ஒரே சமயத்தில் பல புத்தககங்களை படிக்கும் கேட்ட பழக்கம் கொண்டவன். ஆனால் அதில் ஒரு நன்மை இருக்கிறது. நாம் ஏதேனும் விருப்பமாக படிக்க வேண்டும் என்று எண்ணும் போது புத்தகங்களின் சில பகுதிகள் bore அடிக்கலாம்.அந்த சமயத்தில் வேறுப்பட்ட தளங்களில் அமைந்த மற்ற புத்தகங்களைப் படிப்பது சுவாரசியம் அளிக்கும். இந்த ஆண்டு புத்தக கண்காட்ச்சிக்குச் சென்றிருந்தபோது சில புத்தகங்களை வாங்கினோம். புத்தகக் கண்காட்ச்சியில் நாங்கள் போன நாளில் பத்மஸ்ரீ கமலஹாசன் சிறப்பு விருந்தினர். கமலின் பேச்சைக் கேட்பதற்காகவே சீக்கிரம் புத்தகங்களை வாங்கி முடித்தோம்.

இப்படியாக வாங்கிய புத்தகங்கள் பல தளங்களைச் சார்ந்தவை. இத்தனைப் புத்தகங்களில் எதை முதலில் ஆரம்பிப்பது என்ற குழப்பத்திலேயே சில நாட்கள் கழித்தேன். பிறகு நமக்குப் பிடித்த துறைகளில் ஒன்றான வரலாற்றைப் படிக்கலாமென்று Freedom at Midnight இன் தமிழ் பதிப்பான "நள்ளிரவில் சுதந்திரம்" என்ற நூலை ஆரம்பித்தேன். 600 பக்கங்களில் சுமார் 300 பக்கங்களைப் படித்து முடித்தேன். புத்தகம் சிறிது சுவாரசியம் குறைவதாகத் தோன்றியது. சரி வேறு ஏதாவது புத்தகம் மாற்றலாமா என்றால் எதைப் படிப்பது என்று புரியவில்லை. சரி இப்பத்தகத்திர்க்கு முற்றிலும் மாறுப்பட்ட களத்தைச் சார்ந்த நாகூர் ரூமி எழுதிய "சூபி வழி ஒரு எளிய அறிமுகம்" புத்தகத்தை ஆரம்பித்தேன். புத்தகம் நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்ததது. இதைப் படித்துக்கொண்டிருக்கும் போதே "சீனா விலகும் திரை" கண்ணில் பட்டது. உடனே எனக்கு உள்ளிருந்த வரலாறுப் பேய் வெளியே வந்து விட்டது. உடனே ஆன்மீகத்தேடலான சூபியிலிருந்து , அதற்க்கு முற்றிலும் மாறுபட்ட சொல்லப் போனால் எதிரான கம்யூனிச சீனாவிற்கு மனம் சென்று விட்டது.

"சீனா விலகும் திரை" நூலை எழுதியவர் பல்லவி அய்யர். பல்லவி பிரிட்டன், US போன்ற நாடுகளிலிருந்துவிட்டு சீனாவிற்குச் சென்று அங்கு 5 ஆண்டுகள் இருந்தவர். புத்தகத்தை வாங்கும் போது முன்னுரை, பின்னுரைகள் எதையும் பார்க்கவில்லை. மது புத்தகத்தை பார்த்தவுடனே வாங்கிவிட்டான். சரி புத்தகத்தைப் படிக்கும் போது content பார்த்தால் ஒலிம்பிக்ஸ், சார்ஸ் நோய், திபெத் ரயில் போன்ற தெரிந்த சம்பவங்களாகவே இருந்த்தது. ஒரு கணம் ஏமாந்துவிட்டோமோ என்று தோன்றியது. சரி எப்படியாக இருந்தாலும் படிக்கலாம் என்று தீர்மானித்து படிக்க ஆரம்பித்தேன். நல்லவேளையாக மேலே கூறிய சம்பவங்கள் எல்லாவற்றையும் வெறும் செய்தித்தாள் செய்திகளாகக் கூறாமல் தன் கண்ணெதிரே பார்த்தவற்றை ஒரு தனி மனித கண்ணோட்டத்தில் பதிவு செய்துள்ளார். அது மெச்சத்தக்க வகையில் இருந்த்தது.

சீனா - ஒரு அசுரப் பேய். அனைவரும் ஆச்சரியப்படத்தக்க சொல்லப் போனால் அச்சப்படத்தக்க வகையில் முன்னேறிக்கொண்டிருக்கும் ஒரு நாடு. பல்வேறு ஊடகங்களின் கருத்துகளின்படி 2050 இல் உலகப் பொருளாதாரத்தில் முதலிடம் வகிக்கப் போகின்ற நாடு. இன்னும் சொல்லப் போனால் முதலிடத்தை அதை விட வெகு சீக்கிரத்திலயே தொட்டாலும் தொட்டுவிடும். உலகப் பொருளாதாரங்கள், பொருளாதாரத் தேக்க நிலையில் மாட்டிக்கொண்டு விழி பிதுங்கும் போது தான் மட்டும் சென்ற ஆண்டு 8.7% வளர்ச்சியை எட்டிய நாடு. வரும் மார்ச்சு மாதம் தெரிந்துவிடும், உலகப் பொருளாதாரத்தில் சீனா இரண்டாம் இடம் வகிக்கிறதா அல்லது மூன்றாம் இடம் வகிக்கிறதா என்று. ஜப்பான் தான் தற்போது அமெரிக்காவிற்கு அடுத்த நிலையில் இரண்டாம் இடம் வகிக்கிறது. மார்ச்சு மாதம் ஜப்பான் தன்னுடைய பொருளாதார நிலையைப் பற்றி தெரிவித்துவிடும். அதிலிருந்து சீனா இரண்டாம் இடமா அல்லது மூன்றாம் இடமா என்று தெரிந்துவிடும்.

ஒரு காலத்தில் ரஷ்யாவை இரும்புத்திரை நாடு என்பார்கள். ஏனெனில் அங்கு நடக்கும் எந்த விசயங்களும் வெளியே தெரியாது. சீனாவும் கிட்டத்தட்ட அதே மாதிரித்தான். சீனாவில் நடக்கும் விசயங்களும் வெளியே தெரியாது. சீனா எவ்வளவு தன் ராணுவத்திற்கு செலவழிக்கிறது என்றோ அல்லது அங்கு நிறைவேற்றப்படும் மரண தண்டனைகளின் எண்ணிக்கையோ வெளியே தெரியாது. Amnesty International படி, சீனாதான் உலகிலேயே மரணதண்டனை அதிகமாக நிறைவேற்றும் நாடு. சென்ற ஆண்டு மட்டும் கிட்டத்தட்ட 3000 திற்கும் மேற்ப்பட்ட மரணதண்டனைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இது கூட சீனா கூறியதில்லை. இந்தியாவில் கடந்த பல ஆண்டுகளாக மரணதண்டனை நிறைவேற்றப்படவில்லை என்பதைக் கருத்தில் கொள்ளும்போது இது எவ்வளவு பெரிய எண்ணிக்கை என்று புலப்படும்.

இவ்வளவு குறைகள் இருந்தாலும் சீனாவின் வளர்ச்சி அபரிமிதமானது. கடந்த பல ஆண்டுகளாகவே நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறைந்த்தது 8% இருக்க வேண்டும் என்பதை குறிக்கோளாக கொண்டுள்ளது. உலகில் பயன்படுத்தப்படும் இரும்பில் மூன்றில் ஒரு பங்கு சீனாவில் பயன்படுத்தப்படுகிறது என்பதை அறிந்தால் அது எந்த அளவு அசுரப் பாய்ச்சல் பாய்கிறது என்பதை அறியலாம்.

ஆப்ரிக்கா வரை தன்னுடைய கிளைகளைப் பரப்பி தன் இருப்பை காட்டிக்கொண்டுள்ளது. இப்படிப்பட்ட சீனாவில் பிரச்சினைகள் இல்லாமல் இல்லை. பல பொருளாதார வல்லுனர்கள் சீனாவின் பொருளாதார வளர்ச்சி நீறு பூர்த்த நெருப்பாகவே உள்ளது என்று கணிக்கின்றனர். ஆனால் என்னைப் பொறுத்தவரையில் அதில் பெரிய அளவு உண்மைகள் இருக்கும் என்று தோன்றவில்லை. கடந்த சில ஆண்டுகளில் சீனாவில் உண்டாகிய பிரச்சினைகளில் முக்கியமானவை சார்ஸ் நோய் மற்றும் திபெத் உரிமைப் போராட்டம். சார்ஸ் நோய் மிகப் பெரிய பிரச்சினையாக அமைந்ததற்கு காரணம் சீனா, அந்நோயின் தொடக்கக் காலங்களில் அந்நோய் பரவவில்லை என்றே கூறிவந்தது. நோய் அதிகமாகப் பரவவும், சார்ஸ் நோய் இருப்பதை ஒத்துக்கொண்டது. தீடிரென்று ஒப்புக்கொண்டதாலும் நோயின் தாக்கம் அதிகமாக இருந்ததாலும் மக்கள் பயந்துவிட்டனர். இதேபோல் உலகின் கவனத்தை கவர்ந்த மற்றொரு பிரச்சினை திபெத் உரிமைப் போரின் 50 ஆம் ஆண்டு நிறைவு. இவை இரண்டும் சீனா சமீபத்தில் சந்தித்தப் பிரச்சினைகள். சீனா பல காலமாகவே பல விசயங்களை உலகிற்க்கோ அல்லது தன் மக்களுக்கோ தெரிவித்தது இல்லை. சீனாவில் இருக்கும் கல்லூரி மாணவர்களுக்குக் கூட தலாய் லாமா நோபெல் பரிசு பெற்றது தெரியாது.

ஆனால் பொருளாதாரத்தில் சீனாவின் வளர்ச்சியை எவராலும் நெருங்க முடியவில்லை. இருந்தாலும் இந்தியா சீனாவை தன்னுடைய இலக்காக நினைத்து துரத்திக்கொண்டுள்ளது. ஆனால் சீனா, இந்தியாவை ஒரு பொருட்டாகக் கூட நினைக்கவில்லை. அதனுடைய இலக்கு எல்லாம் அமெரிக்காதான். பார்ப்போம் யார் இந்த போட்டியில் ஜெயிக்கிறார்கள் என்று.

Saturday, January 2, 2010

வண்ணத்துப் பூச்சி

வண்ணத்துப் பூச்சி - சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கொள்ளை கொள்வது. எவ்வளவு சிறிய பூச்சிக்குள் இறைவன் எவ்வளவு அருமையான ஓவியங்களை வரைந்துள்ளான். நம்மில் பலருடைய பாலபருவமும், பல வண்ணங்களை உடைய வண்ணத்துப் பூச்சிகளைத் தொடர்வதிலே கழிந்தது.
வண்ணத்துப் பூச்சிகள் வசந்தத்தின் அறிகுறியாக கருதப்படுகின்றன. அதனாலையே அதனுடைய வருகை அனைவராலும் விரும்பப்படுகிறது. Butterflies are self propelled flowers. எவ்வளவு அருமையான வார்த்தைகள். நான் பல தடவை வியந்துள்ளேன், எல்லா நாட்டிற்கும் அதற்கென்று சின்னமாக தேசிய விலங்குகளும் , தேசிய பறவைகளும் உள்ளது போல ஏன் தேசிய வண்ணத்துப் பூச்சிகள் இல்லை? . அப்படி இருப்பதற்கு வண்ணத்துப் பூச்சிகளுக்கு எல்லா தகுதியும் உண்டு.

மெக்ஸிகோ நாட்டில் வண்ணத்துப் பூச்சிகளுக்கென்று 56,000 ஹெக்டேர் பரப்பளவில் ஒரு உயிரியல் பூங்கா உள்ளது. Monarch Butterfly Biosphere Reserve எனப்படும் அந்த உயிரியல் பூங்கா, UNESCO ஆல் உயிரியல் பண்பாட்டுச் சின்னமாக (Biosphere Reserve) அறிவிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 100 கோடி அளவிலான வண்ணத்துப் பூச்சிகள் வருடம் தோறும் கனடா மற்றும் அமெரிக்காவிலிருந்து இந்த உயிரியல் பூங்காவிற்கு வருகை தருகின்றன. அப்பொழுது எங்கு பார்த்தாலும் வண்ணத்துப் பூச்சிகளாக இருப்பதைப் பார்ப்பதே கண்கொள்ளக் காட்ச்சியாக இருக்கும்.

இவ்வாறு வரும் வண்ணத்துப் பூச்சிகள் தாங்கள் பிறந்த இடத்திற்க்கேத் திரும்பச் செல்கின்றன. அவ்வாறு செல்ல நான்கு தலைமுறை எடுக்கும். இப்படி அடுத்தடுத்தச் சந்ததியினர் எப்படி தங்கள் மூதாதையர் இடத்திற்க்கேச் செல்கின்றன என்பது எவராலும் விளக்க முடியாத மர்மமாக உள்ளது. Great Migration எனப்படும் ஆப்ரிக்காவில் நடைபெறும் 20 லட்சம் பாலூட்டிகளின் இடப்பெயர்ச்சிக்கு இணையானது வண்ணத்துப் பூச்சிகளின் இந்த இடப்பெயர்ச்சி.

If nothing ever changed, there'd be no butterflies. மாற்றங்கள் இல்லையேல் மகத்துவங்கள் இல்லை
. மாற்றங்களுக்கு மிகச் சிறந்த உதாரணம் வண்ணத்துப் பூச்சி .
புழுவாகப் பிறந்து பூச்சியாக மாறும் அதன் மாற்றம் அழகானது. எங்க அப்பா சேமித்து வைத்த தபால் தலைகளில் எனக்கு மிகவும் பிடித்தது வண்ணத்துப் பூச்சிகளைக் கொண்ட தபால் தலைகளே.

பல நாடுகளில் வண்ணத்துப் பூச்சிகளுக்கென்று தனியான அருங்காட்சியங்கள் உள்ளன. அந்த மூடிய அருங்காட்ச்சியங்களில் பல வண்ணப் பூக்கங்களும் வண்ணத்துப் பூச்சிகளும் இருக்கும். அந்த அருங்காட்ச்சியங்களில் நீங்கள் கைகளில் தேனைத் தடவிக் கொண்டு இருந்தால், அந்த வண்ணத்துப் பூச்சிகளே உங்கள் கைகளில் வந்து உட்காரும். அந்த அருங்காட்சியங்களில் இருக்கும் ஒரே நிபந்தனை நீங்கள் வண்ணத்துப் பூச்சிகளைத் தொடக்கூடாது. அதே போன்ற அருங்காட்சியகம் பெங்களூரில் அமைய இருப்பதாக கேள்விப்பட்டேன், அப்படி அமைந்தால் மிக ஆமையாக இருக்கும். ஆனால் எந்த ஒரு அருங்காட்சியங்களும் Monarch Butterfly Biosphere Reserve க்கு இணையாகாது.

Sunday, December 20, 2009

சங்க காலச் சோழர்கள்

இப்பதிவு நான் முன்னர் எழுதிய சோழர்கள் பதிவின் தொடர்ச்சியே ஆகும்

சங்ககாலச் சோழர்களின் காலம், கிறிஸ்து ஆண்டின் முதற்ச் சில நூற்றாண்டுகள். சங்ககாலச் சோழர்களைப் பற்றி அறிய சங்ககால நூல்கள் தான் வழி கோல்கின்றன. இக்காலச் சோழர்களைப் பற்றி அறிய வரலாற்றுச் சான்றுகள் இல்லை என்று சொல்லும் அளவிற்கு மிகக் குறைவே. சங்ககாலச் சோழர்களில் கரிகார்ச் சோழன் அளவிற்கு ஒப்பாரும் மிக்காரும் இலர். கரிகார்ச் சோழனின் காலத்தில் சோழர்களின் நிலப்பரப்பு தற்போதைய திருச்சி,தஞ்சை மாவட்டங்களையும் புதுக்கோட்டையின் சில பகுதிகளையும் உள்ளடக்கியது. சோழர்கள் ராஜேந்திர சோழன் காலத்தில் உச்சத்தில் இருந்த போது இருந்த நிலப்பரப்பை விட இது மிகவும் சிறியதே. ராஜேந்திர சோழன் காலத்தில் தென்னகம் முழுவதும் சோழர்களின் ஆட்சியில் இருந்தது. மேலும் ஒரிசா, வங்காளம், பர்மா, மலேசியா,தாய்லாந்து, இந்தோனேசியா வரை சோழர்களின் ஆதிக்கத்தில் இருந்தது.

சங்க காலத்தில் மிகப் புகழ் பெற்றிருந்த சோழர்கள் கரிகார்ச் சோழன் மற்றும் கோச்செங்கணன். கரிகார்ச் சோழன் என்பதற்கு கரிய காலை உடையவன் என்று பொருள். பிற்காலத்தில் வட மொழி ஆதிக்கம் ஏற்ப்பட்ட பிறகு இதற்க்கு கரி - யானை, காலன் - எமன் என்று யானைகளுக்கு எமனானவன் என்று பொருள் ஏற்ப்பட்டது. சங்ககாலத்தில் ஒரே நேரத்தில் பல சோழ அரசுகள் இருந்தன மேலும் அவற்றிற்கிடையே பகையும் இருந்தது.

சோழர்கள் தங்களை சூரியனின் வழி வந்தோர் என்று கூறிக் கொண்டனர். அதேபோல் கன்றை இழந்த தாய்ப் பசுவின் துயர் தீர்க்க தன் மகனை தேர் ஏற்றிக் கொன்ற மனு நீதிச் சோழன் மற்றும் புறாவுக்கு தன் கறி கொடுத்த சிபிச் சக்ரவர்த்தியின் வம்சத்தவர்கள் தாங்கள் என்று கூறிக் கொள்வதிலும் பெருமை கொண்டனர். இதில் மனு நீதிச் சோழன் தமிழகத்தில் வாழ்ந்த மன்னன் அல்லன். அவன் இலங்கையை ஆட்சி செய்தவன் என்பது ஒரு ஆச்சரியமான தகவல்.

கரிகார்ச் சோழன் மிகப் புகழ் பெற்றவன். அவன் வெண்ணி என்னும் இடத்தில் வைத்து சேரன், பாண்டியன் மற்றும் பதினோரு குறுநில மன்னர்களையும் தோற்கடித்தான். அதன் பிறகுதான் நிலையான ஆட்சி அமைந்தது.இவனுடைய காலத்திலேயே காவிரிப் பூம்பட்டினம் சிறப்புற்றது. கரிகார்ச் சோழனுக்கு வெற்றி மேல் வெற்றி கிடைத்தது. கரிகார்ச் சோழன் நாட்டிலும் பல மாற்றங்களை ஏற்ப்படுத்தினான். அவன் காலத்தில் வாணிகம், தொழிர்த் துறை, விவசாயம் போன்றவை செழித்து விளங்கின.

ஒரே நேரத்தில் பல சோழ மன்னர்கள் இருந்தார்கள். புகார் எனும் காவிரிப் பூம்பட்டினத்தை தலைநகராகக் கொண்டு நலங்கிள்ளியும் உறையூரிலிருந்து நெடுங்கிள்ளியும் அரசாண்டனர். அவர்களுக்கிடையே பகையும் இருந்தது. இவர்களுக்கிடையே காரியாற்றில் நடந்த போரில் நெடுங்கிள்ளி கொல்லப்பட்டதிலிருந்து சோழர்களுக்கிடையேயான போர் முடிவிற்கு வந்தது எனலாம். நாம் கூட பள்ளி பருவத்தில் நலங்கிள்ளி நெடுங்கிள்ளிக்கிடையேயான போரைப் பற்றி படித்திருக்கிறோம்.

நலங்கிள்ளி, நெடுங்கிள்ளி காலத்தில் வாழ்ந்த மற்றொரு முக்கியமான் மன்னன் கிள்ளிவளவன். இவன் சேரர்களின் தலைநகரான கரூரைக் கைப்பற்றினான்.
இந்தக் கரூரும் தற்பொழுது இருக்கும் கரூரும் ஒன்றா என்று எனக்குத் தெரியவில்லை .

இதே போல் நாம் பள்ளிப் பருவத்தில் படித்த மற்ற சில முக்கியமானவர்கள் கோப்பெருன்சோழரும் பிசிராந்தையாரும். பிசிராந்தையார் பாண்டிய நாட்டைச் சார்ந்தவர். அவர் பாண்டிய மன்னனுக்கு அறிவுரை கூறும் அளவிற்கு நெருக்கம் கொண்டவர். கோப்பெருன்சோழன் தன் பிள்ளைகளுக்கிடையே ஏற்ப்பட்ட வேறுபாடுகளைக் களைய முடியாமல் வடக்கிருந்து உயிர் துறக்க எண்ணினான். இதைப் பாண்டிய நாட்டில் கேள்விப்பட்ட பிசிராந்தையார் மன்னனுக்குத் துணையாக தானும் வடக்கிருந்து உயிர் நீத்தார்.


பின் குறிப்பு:
1. சங்க காலச் சோழர்களை பற்றி எழுதவே அதிகம் உள்ளது. இவர்களைப் பற்றி பின் வரும் பதிவுகளில் மேலும் அதிகம் எழுதுகிறேன்.
2. நாளை சோழர்கள் ஆண்ட நிலப் பகுதிகளின் வரை படத்தை அளிக்கிறேன்.
3. இப்புத்தகத்தில் சங்க காலச் சோழர்களைப் பற்றிய காலக் குறிப்புகள் தெளிவாக இல்லை. அதனால் யார் முன்னர் ஆண்டனர், யார் பின்னர் ஆண்டனர் போன்ற குறிப்புகள் அளிக்க முடியவில்லை.

Saturday, December 12, 2009

கனவு, மழை மற்றும் நான்

இன்று பகல் பொழுது ஒரு நல்ல தூக்கம். கனவில் முதலை வந்த ஒரு கெட்ட கனவு வந்தது. நாங்கள் ஒரு முதலைப் பண்ணைக்கு செல்வது போலவும் அவற்றுடன் போக்கு காட்டிக் கொண்டு விளையாடிக் கொண்டிருந்தபொழுது அம்முதலை எங்களுக்கு முன்னாடி சென்றவரைக் கடிப்பதாகவும் கனவு வந்தது. எனக்கு முதலை ஒரு பிடிக்காத உயிரினம். எனக்குத் தெரிந்து அதுதான் மனிதனுடன் பழகாத உயிரினம். அக்கனவின் முடிவில், அது ஒரு கனவு தான் என்ற புரிதல் ஏற்ப்படவுடன் ஏற்பட்ட மகிழ்ச்சி அருமையானது. கெட்ட கனவின் முடிவில் ஏற்ப்படும் மகிழ்ச்சி எத்தகையது? நல்லவேளை, இது வெறும் கனவு என்ற புரிதல் தரும் மகிழ்ச்சி மட்டும்தானா?. எனக்கு அதையும் தாண்டி ஏதோ ஒன்று இருப்பது போலேயே தோன்றுகிறது. ஒர் உண்மையான திகில் அனுபவத்தை எந்த ஒரு இழப்பும் இல்லாமல் அனுபவித்த உணர்வு தான் அது என்று தோன்றுகிறது.

கனவானது எத்தகையது? . சில நேரங்களில் கனவானது ஒரு நாளின் இயக்கத்தையே தீர்மானிக்கும் சக்தி வாய்ந்ததாக இருக்கிறது. ஒரு நல்ல கனவு அந்த நாளையே ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி உள்ளதாக்கும் அதேபோல் கெட்ட கனவிற்கும் ஒரு நாளைத் தீர்மானிக்கும் சக்தி உண்டு.

கனவானது வித்யாசமானது. கனவில் வரும் நிகழ்ச்சிகள் ஒன்றுக்கொன்று தொடர்புடையதாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. அதே நேரத்தில் அவை முரண்பட்டதாகவும் இருக்கும். இந்த கனவில் காசு கொடுக்காமல் கிரிக்கெட்டும் பார்த்தேன் ;-). இன்று உண்மையில் ஸ்ரீலங்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையே T20 ஆட்டம் இருந்தது. இந்த கனவில் சேவக் ஸ்ரீலங்காவிற்க்காக விளையாடினார். நேஹரா இந்தியாவிற்காக விளையாடி 30 ஓட்டங்கள் பெற்றிருந்தார் என்பதிலிருந்து கனவு எந்த அளவு முரண்பட்டது என்பதை அறியலாம் :-). கனவுகள் சில சமயம் நடக்கப் போவதை முன் கூட்டியே அறிவுக்கும் சக்தி கொண்டது என்று சொல்வார்கள். கனவின் பலன்களைக் கூற கனவு சாஸ்திரமெல்லாம் உண்டு. என்னுடைய கனவிற்கும் நடக்கப் போவதை முன்கூட்டியே அறிவிக்கும் ஆற்றல் உண்டா இல்லையா என்று தெரியவில்லை . ஆனால் தூங்கி எழுந்து பார்க்கும் பொழுது என் கனவில் கண்டபடி 4 விக்கெட்டுகள் உண்மையில் விழுந்திருந்தன. என்ன என் கனவில் இந்தியா 4 விக்கெட்டுகளை இழந்திருந்தது ஆனால் உண்மையில் ஸ்ரீலங்கா 4 விக்கெட்டுகளை இழந்திருந்தது ;-). சரி விக்கெட்டுகள் என்ற அளவில் என் கனவு பலித்திருந்தது என்று சந்தோசப்பட்டுக் கொண்டேன்.

கனவுகள் முன் கூட்டியே அறிவிக்கும் ஆற்றல் கொண்டிருக்கிறதா இல்லையா என்பதோடு மட்டுமல்லாமல், பல செயல்களுக்கும் கண்டுபிடிப்பிற்கும் காரணமாயிருக்கின்றன. தையல் இயந்திரத்தை கண்டுபிடித்தவர் கிட்டத்தட்ட அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டாராம். ஆனால் தைக்கும் ஊசிக்கு எங்கு துளை வைக்கவேன்றும் என்று தெரியவில்லையாம். ஒரு நாள் கனவில் அவரை ஆதிவாசிகள் சூழ்ந்து கொண்டு அவரை ஈட்டியால் குத்த வந்தார்களாம். அப்பொழுதுதான் அவர் கவனித்தாராம் அந்த ஈட்டிகளின் முனையில் துளை இருந்ததாம். அதிலிருந்துதான் தைய்யல் இயந்திரங்களின் ஊசியின் முனையில் துளை வைத்தாராம்.

சரி தூக்கம் முடிந்து எழுந்து வந்தால் சரியான மழை பிடித்துக் கொண்டது. அப்பொழுது ஏனோ s.ராமகிருஷ்ணன் எழுதிய "மழை என்ன செய்யும்" என்ற கட்டுரை நினைவிற்கு வந்தது. அவர் கட்டுரையில் இருந்தபடியே நல்ல மழை ஆனால் அது சிறிது நேரமே நீடித்தது. அவர் கூறியபடி நான் கதவைத் திறந்து மழையை வரவேற்க்கவில்லை. மழையில் நனையப் பிடிக்கும் தான் ஆனால் ஏனோ அன்று மனம் மழையை வரவேற்கவில்லை. குளிரவேற செய்தது.

twitter இல் சுருதி ஹாசனும் அஹமத்- ம் இந்த குளிரில் ஹாட் சாக்லேட் சாப்பிட்டால் நன்றாக இருக்கும் என்று கூறியது நினைவிற்கு வந்தது. எனக்கும் சாப்பிட்டால் நன்றாக இருக்கும் என்றுதான் தோன்றியது. அதனால் pizza corner ஐ அழைத்து ஹாட் சாக்லேட் தருவிக்கலாம் என்று நினைத்தால், ஹாட் சாக்லேட் இல்லையாம். சரி அன்று இரவு pizza உடன் முடிந்தது .

இவ்வாறாக கனவில் ஆரம்பித்து மழையில் நனைந்து pizza வில் முடித்த மனதின் கோர்வையை நினைத்தால் ஆச்சரியமாக உள்ளது.

Wednesday, December 9, 2009

விருப்பு வெறுப்புகள், ரசிப்புத் திறன் மூலம் ஒருவரை அடையாளப்படுத்துவது சரியா?

பொதுவாக ஒவ்வொருவருக்கும் அவர்களுக்குப் பிடித்தவர்கள் என்று பல பேர் இருப்பார்கள். அவர்கள் அவர்களுக்கு நெருக்கமானவர்களாகவோ அல்லது தூரத்தில் இருக்கும் நட்சத்திரமாகவோ இருக்கலாம். தனிமனிதருக்கும், அவருக்கு பிடித்தமானவர்களுக்கும் இடையே உள்ள தொடர்பை என்னவென்று சொல்வது, அரசியல் என்றால் தலைவர் - தொண்டர், கலைத்துறை என்றால் கலைஞன் - ரசிகன். சில நேரங்களில் பொதுவான வார்த்தையாக விசிறி. தொண்டன், ரசிகன் போன்ற வார்த்தைகள் அவற்றிற்க்கான இயல்பான அர்த்தத்தை இழந்துவிட்டதாகவே எனக்குத் தோன்றுகிறது. தற்காலங்களில் ஒரு தலைவருக்குத் தொண்டன் என்றோ அல்லாத ஒரு கலைஞனுக்குத் ரசிகன் என்று கூறினாலே அவன் ஏதோ, தவறான செயலை செய்பவனாகவோ அல்லது இன்னும் கூடுதலாகச் சொல்லப்போனால் ஒரு படிக்காத காட்டுமிராண்டி என்றோ எண்ணத் தோன்றும். தன்னை முகம் தெரியாத, தனக்குப் பழக்கமே இல்லாத மூன்றாம் மனிதரிடம் முழுவதுமாக ஒப்படைப்பதை பிறகு என்னவென்று சொல்லுவது?. எனக்கும் ஒருவருக்கு கண்மூடித்தனமான ரசிகனாகவோ அல்லது ஒரு தொண்டனாகவோ இருப்பதில் விருப்பம் இல்லை. ரசிகன் என்ற சொல்லை விட தொண்டன் என்ற சொல் எனக்கு மிகவும் அருவருப்பான சொல்லாகத் தோன்றுகிறது. அதற்க்கு இக்கால அரசியல் தலைவர்கள் காரணமாக இருக்கலாம்.

நான் ஒருதடவை அலுவலகத்தில் என் குழுவில் இருந்தவருடன் பேசிக்கொண்டிருந்தபோது ஒரு சுவாரசியமான விவாதம் நடந்தது. அப்பொழுது அவர் சொன்னார், ஒருவனின் ரசிக்கும் தன்மையை வைத்தோ அல்லது அவன் யாரை ரசிக்கிறான் என்பதை வைத்தோ அவனையோ அல்லது அவன் நடத்தையையோ தீர்மானிக்கக்கூடாது. அப்படிச் செய்தால் அதுவும் ஒரு வகைத் தீண்டாமைதான் என்றார். அப்படிப் பார்த்தால் பீட்சா சாப்பிடுபவன் உயர்ந்தவனாகவும் இட்லி சாப்பிடுபவன் தாழ்ந்தவனாகவும் ஆகும், அதை நீங்கள் ஒப்புக்கொள்வீர்களா? என்றார். அவருக்கு நிச்சயமாக என்ன பதில் சொல்லுவது என்று எனக்குத் தெரிந்துருக்கவில்லை. ஒரு நாகரீக சமூகத்தில் ஒருவன், தான் ஒசாமா பின் லேடனுக்கு ரசிகன் என்று கூறினால் அவன் எப்படி பார்க்கப்படுவான் என்று எனக்குத் தெரியவில்லை.

ஒரே ஆளைப் பற்றி இருவரிடம், உங்களுக்கு ஏன் அவரைப் பிடித்திருக்கிறது என்று கேட்டால், நிச்சயமாக இருவரும் வெவ்வேறு காரணங்களைச் சொல்வார்கள். ஒருவரை, ஒவ்வொருவரும் பார்க்கும் கோணங்களும் மற்றும் அவரைப் பற்றி ஒவ்வொருவருக்கும் கிடைக்கும் தகவல்களும் வேறுபடும். மேலும் பார்க்கும் ஒவ்வொருவரின் குணாதீசியங்களும் அவரின் ரசிக்கும் திறனை மாற்றியமைக்கும் இயல்பு கொண்டவை. இத்தகைய காரணங்களாலே ஒருத்தருக்கு ஒருவர் மிகப் பிடித்தவராகவும் மற்றொருவருக்கு பிடிக்காதவராகவும் ஆகிவிடுவார்.


மற்றொரு முக்கியமான அம்சம் ஒரு தனிமனிதர் அல்லது ஒரு குழுமம் எந்த வகையில் முன்னிறுத்தப்படுகிறார்/கிறது என்பதைப் பொருத்தும் அமையும். எடுத்துக்காட்டாக வால்மீகி ராமாயணத்தில், ராவணன் மிகக் கொடூரவனாகவும், மிகக் கொடியவனாகவும் சித்தரிக்கப்பட்டிருப்பான். ஆனால் கம்ப ராமாயணத்தில், ராவணன் மிகச் சிறந்த சிவ பக்தனாகவும், கலைத்தாயின் தலைமகனாகவும், மிகச் சிறந்த ஆட்சியாளனாகவும் சித்தரிக்கப்பட்டிருப்பான். அவன் செய்த ஒரே பாவச் செயல் பிறன் மனை நோக்கியதுதான் என்று கம்ப ராமாயணம் வாதிடும். கம்ப ராமாயணத்தைப் படித்தவர்களுக்கு ராவணன் கொடூரமானவனாகத் தெரியமாட்டான். ஏன், தமிழிலே ராவண காவியம் என்று ராவணனைப் பற்றி ஒரு காவியமே உள்ளது .

ஒரு சிலருக்கு ஒருவரைப் ஏதோ ஒரு சில காரணத்திற்க்காகப் பிடித்துவிட்டால், பின் அவருடைய எந்த செயலும், ஏன் தவறான செயல்கள் கூட கண்ணுக்குத் தெரியாது, காதலில் இருப்பதைப் போல! அதனால்தான் வரலாற்றில் கொடியவர்களாக இருந்தவர்களுக்கு கூட உண்மையான காதலிகள் இருந்தார்கள்.

எனக்குத் தெரிந்து பல நேரங்களில் தீமையே நன்மையை விட பராக்கிரமசாலியாகவும, தந்திரம் மிகுந்ததாகவும் இருக்கும். தீமையே பெரும்பாலும் ரசிக்கும்படியாகவும் கவர்ச்சியாகவும் இருக்கும். வில்லன்களே அதிக சக்தி உடையவர்களாக இருப்பார்கள். அதனாலேயே வில்லன்களுக்கும் ரசிகர்கள் அதிகம் உண்டு. ஹிட்லர் எனக்குத் தெரிந்து இதற்க்கு மிகச் சிறந்த உதாரணம். இரண்டாம் உலகப் போரின்போது சுற்றி இருக்கும் அனைத்து நாடுகளின் மீதும் போர் தொடுக்கும் தைரியமும் திறமையும் ஜெர்மனி கொண்டிருந்ததது. அக்காலங்களில் பொறியியல் உள்ளிட்ட பல துறைகளில் ஜெர்மனி மிகச் சிறந்து விளங்கியது. அதற்க்கு மிக முக்கியக் காரணம், ஹிட்லர்.

ஹிட்லர் மிகத் திறமைசாலி. அவர் ஒரு மிகச் சிறந்த தலைவராகவும் , தன் பேச்சால் ஜெர்மனி மக்களை கட்டிப் போடும் திறமையைக் கொண்டிருந்தார். ஆனால் இரண்டாம் உலகப் போரின் சமயத்தில் ஹிட்லரைப் பற்றி பேசுவது என்பதே மிகக் கொடிய குற்றம் செய்ததாகக் கருதப்பட்டது . முதலாம் உலகப் போரின்போது ஜெர்மன் ஷெப்பர்ட் நாயின் பெயரே மாற்றப்பட்டு அல்சேசன் என்று அழைக்கப்பட்டது. அந்த அளவிற்கு ஜெர்மனியின் மீதான வெறுப்பு இருந்தது. 1977 ஆம் ஆண்டுதான் திரும்பவும் ஜெர்மன் ஷெப்பர்ட் என்று பெயர் மாற்றப்பட்டது.

விருப்பு வெறுப்புகள் காலத்திற்கு காலம் , ஆளுக்கு ஆள் வேறுபடும். மேற்க்கூறிய ஜெர்மன் ஷெப்பர்ட் நாயே அதற்க்கு ஒரு உதாரணம். உலகப் போரின் தாக்கம் வரை அந்நாய் அல்சேசன் என்று அழைக்கப்பட்டது. அதே நாய் உலகப் போர்களின் தாக்கம் முடிந்த பிறகு திரும்பவும் ஜெர்மன் ஷெப்பர்ட் என்று மாற்றப்பட்டு, உலகம் முழுவதும்
அதிகமாக விரும்பப்படும் நாயாக உள்ளது.

ஆக ஒருவர் மற்றொருவரின் மீது கொண்ட விருப்பு வெறுப்புகள் ,ரசிக்கும் தன்மை ஆகியவற்றை கொண்டு ஒருவரை அடையாளப்படுத்துவது
சரியா?

Saturday, December 5, 2009

ஒரு வழியாக ஷேக் ஹசினாவிற்கு நீதி கிடைத்தது

பங்கபந்து என்று அழைக்கப்படுபவர் பங்களாதேஷின் தந்தை முஜிபுர் ரஹ்மான். பாகிஸ்தானிடமிருந்து பங்களாதேஷின் விடுதலைக்கு போராடி இந்தியாவின் உதவியுடன் விடுதலைப் பெற்றுத் தந்தவர். இதற்குப் பின் பங்களாதேஷின் முதல் குடியரசுத் தலைவரானார். 1975 ஆம் ஆண்டு ஆகஸ்டு 15 ஆம் நாள் முஜிபுர் ரஹ்மானும் அவருடைய குடும்பத்தாரும் பங்களாதேஷின் ராணுவத்தைச் சேர்ந்தவர்களால் குடியரசுத் தலைவர் இல்லத்தில் வைத்தே படுகொலை செய்யப்பட்டனர். இப்படுகொலையிலிருந்து வெளிநாட்டிலிருந்த அவருடைய இரு மகள்கள் மட்டுமே தப்பினர். அதற்குப் பின் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது மற்றும் முஜிபுர் ரஹ்மானின் படுகொலைக்கு காரணமானவர்களை தப்பிப்பதற்க்கும் வழிகோலியது . இதற்குப் பின் அவருடைய மகள்களில் ஒருவரான ஷேக் ஹசினா, வெளிநாட்டிலிருந்த படியே முஜிபுர் ரஹ்மானின் கட்சியான அவாமி லீகின் தலைவரானார். 1980 ஆம் ஆண்டு நாடு திரும்பி ராணுவத்துக்கு எதிராக பல போராட்டங்களை நடத்தினார். 1996 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் வெற்றி பெற்று பிரதம மந்திரி ஆனார். இதற்குப் பிறகே முஜிபுர் ரஹ்மானின் படுகொலைக்குக் காரணமானவர்களின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதற்கடுத்த தேர்தலில் எதிர்க் கட்சியைச் சேர்ந்த கலிதா ஜியா பிரதம மந்திரி ஆனார். முஜிபுர் ரஹ்மானின் படுகொலை வழக்கும் கிடப்பில் போடப்பட்டது. அதற்குப் பிறகு குடியரசுத் தலைவர் ஆட்சி வந்தது. பின் 2008 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் திரும்பவும் ஷேக் ஹசினா வெற்றி பெற்றார். அதற்குப் பிறகுதான் முஜிபுர் ரஹ்மானின் வழக்கு சூடு பிடித்தது. ஒரு வழியாக முஜிபுர் ரஹ்மான் படுகொலை மீதான வழக்கில் சென்ற நவம்பர் மாதம் தீர்ப்பு வழங்கப்பட்டது. இப்படுகொலைக்கு காரணமானவர்களில் 5 பேருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. முஜிபுர் ரஹ்மான் படுகொலைக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படும் வரை ரத்தக் கரை படிந்த தன் வீட்டிற்கு ஷேக் ஹசினா வெள்ளை அடிக்கமாட்டேன் என்று சபதம் ஏற்றிருந்ததாகக் கூட நான் கேள்விப்பட்டேன். ஒரு வழியாக கிட்டத்தட்ட 34 வருட வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது.

பின் குறிப்பு :
ஷேக் ஹசினா பல நிலைகளில் தான் இந்தியாவிற்கு ஆதரவானவர் என்று நிரூபித்துள்ளார். அதுவே இப்பதிவு எழுதுவதற்கு ஒரு முக்கியக் காரணம்.

Wednesday, December 2, 2009

குடியேறிகள்

ஒரு நாள் பக்கத்து வீட்டுப் பையனை கபடி விளையாடக் கூப்பிட்டேன் . அவன் கபடினா என்ன? என்று கேட்டான். பிறகு அவனிடம் எப்படிச் சொல்லுவது இந்தியா கபடில தங்கப்பதக்கம்லாம் வாங்கிருக்குனு. சரி கிட்டினாவது என்னான்னு தெரியுமா என்றேன். அதற்க்கு அவன் கிரிக்கெட் பேட்டையும், பந்தையும் கொண்டு வந்தான். பரவாயில்ல கிட்டிக்கும் கிரிக்கெட்டுக்கும் சம்பந்தம் உண்டுன்னு ஓரளவுக்கு சமாதானம் அடைந்தேன். ஒரு நாள் தொலைக்காட்சி செய்தியில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டைப் பற்றிக் காட்டினார்கள். நான் பக்கத்து வீட்டுப் பையனிடம் எப்படி கொம்பு பிடித்து காளையை அடக்குகிறார்கள் பார் என்றேன். அதற்க்கு அவன் கொம்ப வச்சு பந்தல் தான் போடுவாங்க, மாடு எப்படி பிடிப்பாங்க என்றான் மாட்டுக் கொம்புக்கும், கழிக்கும் (கம்பு) வித்தியாசம் தெரியாத பையன் .

இது கூட பரவாயில்லை, எங்களின் கல்லூரிப் படிப்பின் மூன்றாம் ஆண்டு சுற்றுலா சென்றார்கள். சென்னை சென்ட்ரலிலிருந்து கோவா செல்வதாக ஏற்ப்பாடு. எங்கள் நண்பர்களில் ஒருவன் "சென்ட்ரல் ஸ்டேஷனுக்கு எப்படிடா போகணும்னு கேட்டான் ". நம்புங்கள் அவன் 22 வருடமாக கோடம்பாக்கத்தில் பிறந்து வளர்ந்தவன் !

பொதுவாக மாநகரங்களில் வசிக்கும் பிள்ளைகளின் தேவைகள் அனைத்தும் அம்மாநகரத்திலேயே நிறைவேற்றப்பட்டு விடுவதால் அவர்களுக்கு பிற இடங்களைத் தேடி அலையவேண்டிய தேவை இல்லை. அதனால் மாநகர வாழ்க்கையைத் தவிர வேறொன்றும் தெரிவதுமில்லை. சென்னையில் வாழும் பல பேர்கள், தமிழ்நாடு முழுவதும் ஓடும் அனைத்துப் பேருந்துகளின் பெயரும் "பல்லவன்" தான் என்று நினைத்து கொண்டிருந்தார்கள். ஓவ்வொரு ஊரிலும் அந்தந்த ஊர்களில் புகழ் வாய்ந்த அரசர்களின் (சேரன், சோழன்,பாண்டியன் ...) பெயரில் பேருந்துகள் இயங்கின என்பதோ , பின்னர் ஜாதிக் கலவரங்களின் பொழுது எதிர் ஜாதிக்கார மன்னரின் பெயரைத் தாங்கிய பேருந்துகள் தாக்கப்பட்டன என்பதால் அனைத்துப் பேருந்துகளின் பெயர்களும் மாற்றப்பட்டு, அந்தந்த பேருந்துகள் இயங்கிய கோட்டங்களின் பெயரில் அழைக்கப்பட்டன என்பதோ தெரிந்திருக்கவில்லை.

பெரிய மாநகரங்களிலிருந்து சிறிய ஊர்களுக்குச் செல்வோருக்கு ஏற்ப்படும் ஆச்சரியங்கள் போலவே , புதிதாக மாநகரங்களுக்குச் செல்பவர்களுக்கும் (பெரும்பாலும் ஏமாற்றமே) ஏற்ப்படும். எனக்குத் தெரிந்து சென்னையைத் தவிர்த்து மற்ற ஊர்களிலெல்லாம் பேருந்துகளில் பயணச்சீட்டு பயணிகளைத் தேடி வரும். நம்புங்கள், அதிக பேருந்து வசதி இல்லாத ஊர்களிலெல்லாம், சின்னப் பசங்களும், ஆண்களும் பேருந்தின் மேல் (Top) ஏறிக்கொள்வார்கள். இங்கு stage போடுவதைப் போல, அங்கும் stage போட்டு நடத்துனர் பேருந்தின் மீது ஏறி பயணச்சீட்டுத் தருவார். ஆனால் இங்கு சென்னையிலோ காலியாக இருக்கும் பேருந்தில் கூட நாம்தான் சென்று பயணச்சீட்டு வாங்க வேண்டும். என்னை ரொம்ப சங்கடப்படுத்தும் இன்னொன்று, எங்கள் ஊரில் "நீங்கள் " விளையாடும் இடங்களிலெல்லாம் இங்கு வயது வித்யாசமின்றி "நீ " விளையாடுகிறது.

பொதுவாக எல்லா ஊர்களும் அவற்றிற்கே உரிய திருவிழாக்களைக் கொண்டிருக்கும். அந்த திருவிழாக்களின் பின்னே சரித்திரங்களும், பல புனைக் கதைகளும் பின்னப் பட்டிருக்கும். அந்த புனைக் கதைகள் உண்மையோ அல்லது பொய்யோ, யாருக்கும் தெரியாது. இருந்தாலும் அவற்றை பாட்டிமார்கள் சொல்லச் சொல்ல ஆனந்தமாக இருக்கும் .மதுரையின் சித்திரைத் திருவிழா மிகச் சிறப்பாக ஒன்று. அத்திருவிழவுக்கான கதைகளும் அருமையாக இருக்கும். சித்திரைத் திருவிழாக் காலம் முடிந்த பிறகு ஒரு குருவி "அக்காாாா அக்காாாா" என்று கத்தும். அதன் பெயரே அக்கா குருவி. இதற்க்கு ஒரு கதை சொல்லுவார்கள். திருவிழாக் கூட்டத்தில் இந்தக் குருவி தன்னுடைய அக்காவைத் தொலைத்துவிடுமாம். அதை தேடிக் கொண்டு அக்கா அக்கா என்று அலையுமாம். அடுத்து வரும் ஒரு திருவிழாவில்தான் அவைகள் ஒன்று சேருமாம். அதுவரை இப்படியேதான் கூவிக் கொண்டு அலையும் என்று கதை சொல்லுவார்கள். அப்பொழுதெல்லாம் திருப்பி கேட்கத் தோன்றவில்லை, ஏன் தங்கச்சிக் குருவி மட்டும் தான் "அக்கா அக்கா " என்று தேடுமா? ஏன் அக்கா குருவி "தங்கச்சி தங்கச்சி " என்று தேடாதா? என்று. இருந்தாலும் அந்த புனைக் கதைகள் சுவாரசியமாகத்தான் இருந்தன. மாநகரங்களில் வசித்த பிள்ளைகள் இப்படிப்பட்ட கதைகளைக் கேட்டிருப்பார்களா என்று எனக்குத் தெரியவில்லை.

எனக்குத் தெரிந்து சென்னையில் நடக்கும் திருவிழாவில் முக்கியமானது, மயிலையில் அறுபத்து மூன்று நாயன்மார்களின் ஊர்வலம். ஆனால் அது மதுரை சித்திரைத் திருவிழாப் போல் ஊரே கூடி கொண்டாடும் திருவிழா என்று கூற முடியாது.

மார்கழி மாதக் குளிரில் அதிகாலையில் எழுந்து படிப்பதென்பது சற்றுக் கடினம் தான், இருந்தாலும் அதனையும் சுவாரசியமாக்கியவை, வெகு தூரத்தில் உள்ள சிறு கோயிலிருந்து ஒலிக்கும் L.R.ஈஸ்வரியின் அம்மன் பாடல்களும், ஐய்யப்பன் பாடல்களும்தான். கஷ்டப்பட்டு அதிகாலை 4 மணியிலிருந்து 5 மணிவரைப் படித்த பின் பார்த்தால், தெருவே களை கட்டத் தொடங்கிவிடும் . ஓவ்வொரு வீட்டிலிருந்தும் பெரிய பெரிய கோலங்கள் போட ஆரம்பிப்பார்கள். நாங்களும், அலுவலகப் பணி முடித்து அசதியாகத் தூங்கிகொண்டிருக்கும் எங்கள் அம்மாவை எழுப்பி பெரிய கோலம் போடச் சொல்லுவோம். எங்கள் அம்மா சில நேரம் சிறிய கோலமாகப் போட்டுவிடுவார்கள். அப்பொழுதெல்லாம் நாங்கள் எங்கள் மாடி வீட்டு அக்காவிடம் தஞ்சம் அடைந்துவிடுவோம், எங்கள் வீட்டு வாசலில் பெரிய கோலம் போடச் சொல்லி. பின்னர் அவற்றிற்கு வர்ணப் பொடி கொண்டு வண்ணம் தீட்டுவோம். விடிந்தவுடன் சிறுவர்களுக்கிடையே யார் வீட்டு கோலம் பெரிது என்று பெரிய போட்டியே நடக்கும். ஆனால் சென்னையிலோ மார்கழிக் கோலங்கள் இரவில் ஆரம்பித்து நடுச்சாம நாய்களின் குரைப்புடன் முடிந்துவிடுகின்றன.


எனக்கு எப்பொழுதும், சென்னைத் தவிர மற்ற சிறு நகரங்களிலும், ஊர்களிலும் இருக்கும் வீடுகள் பெரிதாகவேத் தோன்றுகின்றன. அதற்க்குக் காரணம் மனமா? அல்லது (வாடகைப்)பணமா? என்று தெரியவில்லை. எனக்கு என்னவோ சென்னைக் குடிமக்கள், குருவிகள் கூட கூடு கட்டத் தயங்கும் குறைந்த சதுர அடி வீட்டில்தான் குடியிருப்பதாகத் தோன்றுகிறது.

இப்படி குடியேறிய ஊரைப் பற்றி குறைகள் கூறக் கூடாதுதான், இருந்தாலும் மழைக்காலத்தில் தண்ணீர் தீவுகள் தேடும் காலடித் தடங்கள் போல மனமானது, குடியேறிய ஊரின் ஓவ்வொரு நடத்தையிலும் சொந்த ஊரின் சாயலைத் தேடுகிறது.