Friday, August 20, 2010

மீண்டும் ஜீனோ - ஒரு பார்வை


மது சில நாட்களுக்கு முன் சுஜாதாவின் "மீண்டும் ஜீனோ" புத்தகத்த வாங்கி வந்திருந்தான் . எனக்கு பெரிய ஆசிரியர்கள் எழுதிய புத்தகத்தைபடிக்க வேண்டும் என்று பெரிதாக ஆர்வம் கிடையாது. கிடைக்குற புத்தகத்த எடுத்துப் படிப்பேன். பெரும்பாலும் வரலாற்று புத்தகங்களை அதிக ஈடுபாட்டுடன் படிப்பேன். அதனாலையே வரலாற்று நாவல்களும் ரொம்ப பிடிக்கும். பெரும்பாலும் நவீனத்துவ நாவல்களை அதிகம் விரும்புவதில்லை. என் நண்பர்கள் கூட என்னை, "இவன் இன்னைக்கு பேப்பர கூட இருபது வருஷம் கழித்துதான் எடுத்து படிப்பான்டா" என்று கேலி பண்ணுவார்கள்.

கொஞ்ச நாட்களுக்கு முன்னாள் எடுத்து படித்த "கடல் புறா" முடிந்துவிட்டபடியால் சில நாட்கள் வெறுமையாக இருந்தது. அப்பொழுதுதான் "மீண்டும் ஜீனோ" என் கண்ணில் பட்டது. அந்த புத்ததகத்தை எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் எடுத்து படிக்க ஆரம்பித்தேன். இது சுஜாதா எழுதி விகடனில் பிரசுரமான "என் இனிய எந்திரா"வின் அடுத்த பகுதி. இது என் இனிய எந்திராவின் அடுத்த பகுதி என்று தெரிந்த உடன் என் நினைவுகள் பின்னோக்கிச் சென்றன. நான் ஐந்தாவதோ, ஆறாவதோ படிக்கும்போது என்று நினைக்கிறேன், அப்பொழுது தூர்தர்சனில் சிவரஞ்சனி நடித்து என் இனிய எந்திரா தொடராக வந்தது. அப்பொழுது அந்த இயந்திர நாயைப் பார்க்க ஆச்சரியமாக இருக்கும். அது மிகச் சின்ன வயதில் பார்த்ததால் அதன் கதை எதுவும் ஞாபகம் இல்லை.


இக்கதை 2020 இல் நடைபெறுகிறது. என்னால் அவ்வளவு சீக்கிரம் இந்த கதையில் வருகிறபடி நடந்துவிடுமா என்று சந்தேகம் உள்ளது. ஏனென்றால் அந்த அளவு முன்னேறிய தொழில்நுட்பங்கள் இக்கதையில் இடம்பெறும். 2020 க்கு இன்னும் பத்து வருடங்களே உள்ளன அதற்குள் ரோபோட்கள் இத்தனை சீக்கிரம் மனித வாழ்வில் பிரிக்க முடியாத அங்கமாக மாறிவிடுமா என்று தோன்றவில்லை. இக்கதையில் கூறியுள்ள அளவிற்கு முன்னேற்றம் சாத்தியமா என்பது சந்தேகமே. ஆனாலும் ஆசிரியரைப் பாராட்டனும். இந்த அளவிற்கு சிந்தித்து கண் முன் இல்லாத ஒன்றை உருவாக்கி இருக்கிறார்.

இக்கதை என் இனிய இந்திராவின் முன்னோட்டத்துடன் தொடங்கும். என் இனிய இந்திராவில் ஜீவாவின் ஆட்சியை முறியடித்து புரட்சி செய்து நிலா, ரவி, மனோ இவர்கள் மூவரும் ஆட்சி அமைப்பார்கள். கடைசியில் இப்புரட்சியே ஒரு நாடகம் என்றும் மனோவும் , ரவியும் திட்டமிட்டே சதிச் செயல் புரிந்து நிலாவை ஒரு பொம்மை மாதிரி பாவித்து ஆட்சியைப் பிடிப்பார்கள் என்று கூறப்படும் . என் இனிய எந்திராவின் இறுதியில் ரவி, ஜீனோ என்னும் இயந்திர நாய் சிந்திக்கத் தொடங்கிவிட்டது என்று கூறி அதை அக்கக்காக பிரித்து அழித்து விடுவதுடன் முடிவடையும் .

மீண்டும் ஜீனோவில் ஜீனோ , தான் சாகவில்லை என்றும் தன்னை அழித்துவிடுவார்கள் என்று தான் முன்னமே யூகித்ததால் தான், தன்னைப் போல் ஒரு இயந்திர நாயை கொண்டு கடைசி நிமிடத்தில் தப்பித்ததாகவும் கூறுவதிலிருந்து தொடங்கும் . ஜீனோ, அரசியாகிய நிலாவிற்கு மட்டும், தான் ஜீனோ என்றும் , ரவிக்கும் மனோவிற்கும் ஒரு சாதாரண இயந்திர நாயாகவும் காட்டிக்கொள்ளும். நிலாவை ஒரு பொம்மை அரசியாக வைத்து ரவியும் , மனோவும் நாட்டை ஆளுவார்கள். அரசியாக இருந்த போதிலும் நிலாவிற்கு எந்த ஒரு சுதந்திரமும் இருக்காது. ஜீனோ, நிலாவிற்கு நாட்டை ஆளுவதற்கு பல வகையிலும் யோசனை சொல்லும். இதனால் ரவிக்கும் ,மனோவிற்கும் சந்தேகம் வந்துவிடும். அவர்கள் ஜீனோவை கண்டு பிடித்து அழித்து விடுவார்கள் . இருந்த போதிலும் ஜீனோ ஒரு விஞ்ஞானியின் உதவி கொண்டு திரும்பவும் பிழைத்து வேறு ஒரு உருவம் கொண்டு நிலாவை வந்தடையும்.

இதில் மனோவும் ரவியும் நிலாவிற்கும், தாங்கள் ஏற்ப்பாடு பண்ணிய லேபில் உருவாக்கப்பட்ட ஒரு இளைஞனுக்கும் estrogen, androgen நும் கொடுத்து நிலாவை ஒரு காமப் பெண்ணாக மாற்றிவிடுவார்கள். இதன் மூலம் அவர்கள் இருவரும் நெருக்கமாக இருந்த வீடியோவை விவியில் ஒளிபரப்பி நிலாவின் செல்வாக்கை மக்களிடையே குறைப்பது அவர்கள் திட்டமாக இருக்கும் . கடைசியில் அவர்கள் தங்கள் நோக்கத்தில் வெற்றி பெற்றார்களா , ஜீனோ , ரவியையும் மனோவையும் அழித்து நாட்டில் மாறுதலைக் கொண்டுவந்ததா , கதையின் முடிவில் ஜீனோ என்ன ஆகும் என்பதே மீதி கதையாக இருக்கும் .

இக்கதையானது ஜீனோவைச் சுற்றியே நடைபெறும் . நமக்கும் ஜீனோ என்னவோ ஒரு ஹீரோ போன்றே எண்ணத்தோன்றும், கதையின் முடிவில் ஜீனோவிற்கு எதுவும் ஆகிவிடுமோ என்று நமக்கும் பயமாக இருக்கும் . இதுவே ஆசிரியரின் வெற்றி. இக்கதை ஒரு விறுவிறுப்பான திரில்லர் கதைக்கு இணையாக இருக்கும். வெளி உலகிற்கு அனைத்து அதிகாரங்களையும் கொண்டிருப்பதாக தோன்றும் , மேலும் மக்களிடையே பெரும் ஆதரவு கொண்ட நிலாவினால் ரவியையும், மனோவையும் அழிக்கவோ அல்லது கைது செய்யவோ முடியவில்லை என்பது கொஞ்சம் நம்ப முடியாததாக உள்ளது. ஏனெனில் நிலாவிற்கு அந்த அளவிற்கு மக்களிடம் செல்வாக்கு இருக்கும். மேலும் ஆசிரியர் கதையில் இன்னும் நிறைய அறிவியல் அற்புதங்களை கூறி இருக்கலாமோ என்று தோன்றுவதை மறுக்க முடியவில்லை. கடைசிவரை விவியையும், லேசர் துப்பாக்கிகளையும், காந்த கார்களையும் கொண்டு கதையை ஓட்டி இருப்பார்.

கதையின் இறுதியில் ரவி மற்றும் மனோவின் மறைமுக ஆட்சியிலிருந்து விடுதலை பெற்ற இளைஞர்கள் குடித்து விட்டு அனைத்தையும் போட்டு உடைப்பதாகவும், எரிப்பதாகவும் கூறும் போது சுஜாதாவிற்கு இன்றைய இளைஞர்கள் மீது உள்ள கோபம் புரிகிறது. மேலும் மக்களாட்சியில் கோர்ட்டில் சண்டையும், நிறைய கட்சிகள் இருப்பதாகவும் இன்னும் பலவற்றையும் கூறும்பொழுது சுஜாதாவிற்கு மக்களாட்சியின் மீது உள்ள கோவமும் தெரிகிறது . கதையின் முடிவு எனக்கு என்னவோ மேலும் மீண்டும் மற்றொரு ஜீனோ கதை எழுதுவதற்கு அடி போடுவதாகத் தோன்றியது . என்ன அப்படி மீண்டும் இன்னொரு ஜீனோ கதையை எழுதுவதற்கு சுஜாதாதான் நம்மிடம் இல்லை .

மீண்டும் ஜீனோவைப் பற்றி google இல் தேடிய பொழுது இந்த ebook கிடைத்தது. அது உங்கள் பார்வைக்கு

www.thiruvarunai.com/eBooks/Sujatha/Meendum%20Jeeno.pdf

photo courtesy : http://crazy-frankenstein.com/free-wallpapers-files/dog-wallpaper-files/cute-puppy-dog-wallpapers.jpg

2 comments:

Unknown said...

அந்த ஜீனோவின் படங்கள் கிடைத்தால் அனுப்புங்கள்

Unknown said...

படங்கள் அன்றைய விகடனிலிருந்து கிடைத்தால் நல்லது