Monday, July 26, 2010

கதை கேளு கதை கேளு




இன்று தான் s.ராமகிருஷ்ணனின் 'தினம் ஒரு கதை' என்ற கட்டுரையை படித்தேன். அதில் அவர் இன்று எப்படி கதை சொல்லும் பழக்கம் காணாமல் போய்விட்டது என்று அங்கலாய்த்திருப்பார். ஆம் இன்று கதை சொல்லும் பழக்கமே காணாமல் போய்விட்டது. அவர் கூறிய படி பள்ளிகளில் கதை சொல்லுவதற்க்கென்றே வகுப்புகள் இருந்ததாக ஞாபகம். அதில் ஒவ்வொரு மாணவனும் கதை சொல்லுவான். அந்த வகுப்புகள் ஒழுங்காக நடந்ததா என்ற ஆச்சரியம் உண்டு.

கதை சொல்லுவது என்பது மிகச் சிறந்த கலை . அது எல்லாருக்கும் வாய்க்காது . எங்கள் அப்பா ஒரு மிகச் சிறந்த கதை சொல்லி. மின்சாரம் போன இரவுகள் எல்லாம் எங்களுக்கு மிகச் சிறந்த இரவுகள் . ஏனெனில் நிச்சயம் அந்த இரவுகளில் எங்கள் அப்பா கதை சொல்லுவார்கள். கதை கேட்பது நானும், மதுவும் மட்டுமல்லாமல் எங்கள் அக்கம் பக்கம் குடியிருக்கும் அத்தனை சிறுவர் சிறுமிகளும் கூடி விடுவர். இதனால் எனக்கும் மதுவுக்கும் பெருமையே உண்டு.

அவருடைய கதைகளில் தென்னாலி ராமன், மரியாதை ராமன், ஆயிரத்தோர் இரவுகள் , விக்கிரமாதித்தன் கதைகள், ராமாயணம், மகாபாரதக் கதைகள் என்று பல கதைகள் இருக்கும் . எங்கள் அப்பாவின் கதைக்கு சிறுவர்கள் மட்டுமல்ல பெரியவர்களும் அடிமைகள். எங்கள் மாமா அடிக்கடி சொல்வார்கள், "அத்தான் அவ்வளவு அற்புதமாக கதை சொல்லுவார்கள் . அவர் கதை சொல்லும் இரவுகளில் நாங்கள் அனைவரும் கூடி விடுவோம்" என்பார்.

கதை சொல்லுவதற்கு மிகச் சிறப்பான கற்பனா சக்தி இருக்க வேண்டும். அது எங்கள் அப்பாவிற்கு நிறையவே வாய்த்திருந்தது. அவர் கதையை எப்படியோ ஆரம்பித்து எங்கயோ சென்று முடிப்பார்கள். அது கடைசியில் மூலக் கதையிலிருந்து மிகவும் மாறுபட்டதாக இருக்கும். அதுவும் அற்புதமாகவே இருக்கும். இப்படி மாறிச் செல்லும் கதையின் ஓட்டம் முன்பே தீர்மானிக்கப்பட்டதாக இருக்காது. அந்த நேரத்திற்கு ஏற்ப அவ்வப்பொழுது எங்கள் அப்பா கதையின் ஓட்டத்தை மாற்றுவார்கள். கதையின் முடிவில் கதை கூறும் நீதி என்ன என்றொரு கேள்வி இருக்கும் . ஒவ்வொருவரும் அவரவருக்கு தெரிந்த நீதியைச் சொல்லுவோம்.

எங்கள் அப்பாவின் கைகளில் எப்பொழுதும் ஒரு ஆங்கில நாவல் இருக்கும். அவர் எப்பொழுதும் படித்துக் கொண்டே இருப்பார்கள். காலை அலுவலகத்திர்க்குச் செல்லும் வழியில் பேருந்தில், பின் அலுவலகம் விட்டு வரும் வழியில் பேருந்தில் , பின் இரவு படுக்கைக்குச் செல்லும் முன், இப்படி எங்கும் புத்தகமும் கையுமாக இருப்பார்கள். நாங்கள் கொஞ்சம் வயது வந்த பிறகு ஆங்கில நாவல்களை மொழி பெயர்த்து கூற ஆரம்பித்தார்கள். இப்படியாக நானும் மதுவும் அந்த ஆங்கில நாவல்களின் பெயர் கூட அறியாமல் அவற்றிக்கு அறிமுகம் ஆனோம். இப்படியாக சிட்னி செல்டன்லாம் அறிமுகம் ஆனார்கள்.

கதை கேட்பது என்பது ஒரு மிகச் சிறந்த அனுபவம். அந்த அனுபவம் அனைவருக்கும் வாய்ப்பதில்லை. சிறுவர்கள் என்றும் கதை கேட்பதற்கு தயாராகவே உள்ளார்கள். ஆனால் இக்காலங்களில் கதை சொல்லத்தான் ஆளில்லை. பெரியவர்கள் தொலைக்காட்சிக்கு அடிமையாகிவிட்ட இந்நாளில் சிறுவர்கள் என்ன செய்வார்கள்?.

கதை கேட்பது கேள்வி ஞானத்தை வளர்க்கிறது. அது இப்பொழுது யாருக்கும் தெரிவதில்லை. தெரிந்தாலும் யாரும் கதை சொல்லத் தயாரில்லை.

நான் சிறுவனாக இருந்த காலத்தில் வாரந்தோறும் வரும் சிறுவர் மலருக்கு நானும் மதுவும் அடித்துக் கொள்வோம். எங்கள் அப்பா எங்களுக்கு அறிமுகப்படுத்திய ஆயிரத்தோர் இரவுகள், ராமாயணம் , மகாபாரதம் ஆகியவற்றை தனியாக படித்திருக்கிறேன். வாசிப்பு அனுபவத்திலும் , கேள்வி ஞானத்திலும் வந்த ஈடுபாடே எனக்கு வரலாற்றிலும் இதிகாசங்களிலும் ஈடுபாடை ஏற்ப்படுத்தியது.
அதுவே தூர்தர்ஷனில் ஒளிபரப்பாகிய இதிகாச வரலாற்று தொடர்களின் மீது ஆர்வத்தை ஏற்படுத்தியது. எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது. அப்பொழுது நானும் மதுவும் பள்ளிவாசல் மேல்நிலைப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தோம். அது ஒரு முஸ்லிம் பள்ளியானதால் அங்கு வியாழன், வெள்ளி அன்றுதான் விடுமுறை. சனி , ஞாயிற்றுக் கிழமைகளில் பள்ளிக்கூடம் . அப்பொழுது சன் டிவியில் மகாபாரதத்தை ஞாயிற்றுக் கிழமைகளில் திரும்பவும் ஒளிபரப்பினார்கள். நான் வார வாரம் மகாபாரதம் பார்பதற்கு ஞாயிற்றுக் கிழமை காலை வேளையில் விடுமுறை போட்டால் என்ன என்று வீட்டில் சண்டை எல்லாம் போட்டிருக்கிறேன்.

சிறு வயதில் நானாக கதை எழுத முனைந்த்திருக்கிறேன் . அது பெரும்பாலும் எங்கள் அப்பா கூறிய கதையின் மறு வடிவமாக இருக்கும். அதிலும் நான் தோற்றே இருக்கிறேன். அது போல் நான் படித்த கதைகளை என்னைச் சுற்றி உள்ள பசங்களுக்கு சொல்ல முற்பட்டிருக்கிறேன். கதை எவ்வளவு நீளமாக இருந்தாலும் என்னால் ஒரு 15 நிமிடத்திற்கு மேல் கதையை நீட்டிக்க முடிந்ததில்லை . அப்பொழுதுதான் தெரிந்தது கதை சொல்லுதல் என்பது எவ்வளவு சிறந்த கலை. அது அனைவருக்கும் வாய்ப்பதில்லை என்று.

இப்பொழுதுதான் என் பிள்ளைகளும் இன்றைய நாகரிக உலகத்துடன் சேர்ந்து கதை கேட்காமல் போய்விடுவார்களோ என்ற பயம் ஏற்ப்படுகிறது. என்னாலும் சிறப்பாக கதை சொல்லத் தெரியாது. என் பிள்ளைகளுக்கு என்னால் கதை சொல்ல முடியாமல் போகப் போகிறதே என்ற எண்ணம் என்னை வாட்டுகிறது . இந்த நேரத்தில்தான் எங்கள் அப்பா எங்களுடன் இந்த உலகத்தில் இல்லாத வேதனை எனக்குப் புரிகிறது. நானும் மதுவும் எங்கள் அப்பாவை இழந்து வாடும் வேதனையை விட என் பிள்ளைகள் ஒரு மிகச் சிறந்த தாத்தாவை இழந்துவிட்டார்களே என்ற வேதனையே என்னை அதிகம் வாட்டுகிறது . எங்கள் அப்பா இந்நேரம் இந்த உலகில் இருந்தால் அவர் மிகச் சிறந்த மகனாகவும், மிகச் சிறந்த கணவனாகவும், மிகச் சிறந்த தகப்பனாகவும் இருப்பதோடல்லாமல் ஒரு மிகச் சிறந்த தாத்தாவாகவும் இருந்திருப்பார். எங்கள் பிள்ளைகள் அதற்க்கு குடுத்து வைக்காமல் போய்விட்டார்கள் .

We miss you dad. May rest your soul in peace.

photo courtesy : http://www.shannonthunderbird.com/nativepic.gif

4 comments:

அமைதி அப்பா said...

ஆமாம், இன்று கதை சொல்வதற்கு ஆளில்லை என்பது உண்மையே!

சசிகுமார் said...

பாட்டி சொன்ன கதைகள் ஞாபகத்திற்கு வருகிறது நண்பா. கூடவே பாட்டியும் தான்.

சசிகுமார் said...

தங்களுக்கு ஏதேனும் பிலாக்கர் டிப்ஸ் தேவைப்பட்டால் காணுங்கள்
http://vandhemadharam.blogspot.com/

கிருஷ்ண மூர்த்தி S said...

என்ன,கதை சொல்ல ஆளில்லையா?
அப்படிச் சொல்கிற நாமெல்லாம் எங்கே போனோம்?

முந்தின காலங்களில் சொன்ன மாதிரி, தாத்தா, பாட்டி, அத்தை, அம்மா, அப்பாக்களிடம் கதை கேட்கும் காலம் இல்லை இது. பொருளாதாரம் நேரத்தை மிகவும் நெருக்கிக் குடும்ப உறவுகளில், ஒரு சாதாரணமான புன்னகை, அமைதியாக சேர்ந்து உட்காருதல், ஒன்றாக உணவு அருந்துதல் இப்படி நிறைய விஷயங்களைக் காணாமல் போக்கியிருக்கிறது.

ஆனால், கதைகேட்கிற, கதை சொல்கிற ஆவல் மனிதனிடம் எப்போதுமே உண்டு.

சொல்கிற, கேர்த்கிற விதங்கள் தான் மாறியிருக்கின்றன!