Monday, July 26, 2010

கடல் புறா - 3

இப்பதிவு இதற்க்கு முந்திய பதிவான கடல் புறா -2 இன் தொடர்ச்சியே ஆகும்.

கடல் புறாவின் இரண்டாம் பாகத்தை இளைய பல்லவனும், மஞ்சளழகியும், அக்ஷய முனையும், பல வர்மனுமே ஆக்கிரமிக்கிறார்கள். மஞ்சளழகி அசாதாரண அழகியாக இருக்கிறாள். இளைய பல்லவன் அக்ஷய முனையில் சித்திரா பௌர்ணமி அன்று நடக்கும் ஆடல் விழாவில் வம்படியாக கலந்து கொள்கிறான் . அவன் அந்த விழாவில் கலந்து கொள்வதை நினைத்து மஞ்சளழகியும், பலவர்மனும் அச்சம் கொள்கிறார்கள். ஏனெனில் ஒவ்வொரு வருட சித்திரா பௌர்ணமி விழாவில் எப்படியும் சில கொலைகள் நடக்கும். அந்த விழாவில் காட்டுமிராண்டிகளாக விளங்கும் அந்த ஊர் பழங்குடிகளான சூளு இன மக்களின் தலைவர்களும் , பதக் சாதியினரின் தலைவர்களும் கலந்து கொள்வார்கள் . அத்தகைய விழாவில் புதியவனான இளைய பல்லவனும் கலந்து கொண்டால் அவன் உயிருக்கு பங்கம் ஏற்படுமே என்று எண்ணி மஞ்சளழகியும், பலவர்மனும் கவலை கொள்வார்கள். இருவரின் கவலைக்கும் வெவ்வேறு காரணங்கள் உண்டு. நம் இளைய பல்லவன் பலவர்மனுக்கும் மஞ்சளழகிக்கும் அறிமுகமாகும்போது தன் உயிருக்கு ஏதேனும் பங்கம் நேர்ந்தால் அதற்கு அகுதா பழி வாங்குவார் என்றே அறிமுகம் ஆவான். ஆக இளைய பல்லவனின் உயிருக்கு பங்கம் நேர்ந்தால் அகுதாவால் தீங்கு ஏற்படும் என்று பலவர்மனும், மஞ்சளழகியும் பயந்தாலும் மஞ்சளழகிக்கு கூடுதல் காரணமும் உண்டு, அது இளைய பல்லவன் மீது கண்டதும் ஏற்பட்ட காதல்.


அந்த ஆடல் விழாவில் மஞ்சழகி சிறப்பாக நடனம் புரிகிறாள். அவள் நடனம் முடிந்ததும் அவர்கள் பயந்த படியே அன்று இரவு ஒரு மரணம் நிகழ்கிறது. அதிலும் அந்த கொலைக்கு இளைய பல்லவனே காரணம் ஆகிறான். இறந்தவன் பதக் இனத்தின் தலைவன். இப்படியாக கொலை நடந்ததும் பலவர்மன், பதக் மற்றும் சூளு இன மக்களால் ஏற்படப் போகும் தீங்கை எண்ணி பயப்படுகிறான்.
ஆக இந்த கொலைக்கு பரிகாரமாக அக்ஷய முனையை சூளு மற்றும் பதக் இனத்தவரிடம் இருந்து காப்பதாக இளைய பல்லவன் உறுதி ஏற்கிறான்.

அக்ஷயமுனைக் கோட்டையில் கொள்ளைகாரர்களும்
, அவ்வூர் மக்களும் வாழ்கிறார்கள். கோட்டைக்கு பின்புறம் உள்ள காட்டுப் பகுதியில் காட்டுமிராண்டிகளான சூளு இன மக்களும் பதக் சாதியினரும் வாழ்கிறார்கள். பலவர்மன் தன் மகள் மஞ்சளழகி , இளைய பல்லவன் மீது காதல் வயப்பட்டதும் அவளை எப்படியாவது இளைய பல்லவனுக்கு மணமுடித்து விட வேண்டும் அல்லது அகுதாவால் தீங்கு ஏற்ப்படாவண்ணம் அவனை தீர்த்து விட வேண்டும் என்று எண்ணுகிறான். இப்படி செய்யும் இரண்டு செயகளிலும் அவனுக்கு லாபமே. இளைய பல்லவனை மஞ்சளழகிக்கு மணம் முடித்து விட்டால் சோழர் படைத்தலைவனை சோழர்களுக்கு எதிராகவே திருப்பி விடமுடியும். மேலும் அக்ஷய முனைக்கு ஒரு மிகச் சிறந்த கோட்டைக் காவலன் கிடைப்பான்.

இளைய பல்லவனை கட்டாயம் மஞ்சளழகிக்கு திருமணம் முடித்து வைப்பதற்கு ஏதுவாக அவர்கள் தனிமையில் காதலில் ஆழ்ந்திருக்கும்போது, அவர்கள் தனிமையில் இருந்ததற்கு சாட்ச்சியைத் தயாரிப்பான். இதன் மூலம் இளைய பல்லவன் மஞ்சளழகியை கட்டாயம் திருமணம் செய்து கொள்ளவேண்டும் இல்லையேல் உயிரிழக்க வேண்டும் . ஏனெனில் அக்ஷய முனை வழக்கப் படி ஒரு ஆணும் பெண்ணும் தனிமையில் சந்தித்து கொண்டால் அந்த ஆண் கட்டாயம் அந்தப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் அல்லது உயிரிழக்க வேண்டும். இந்த வழக்கத்திற்கு அகுதாவும் கட்டுப்படுவான். ஆக நம் படைத்தலைவன் மஞ்சளழகியை கட்டாயம் திருமணம் செய்துகொள்ளவேண்டும் அல்லது உயிரிழக்க வேண்டும் . இளைய பல்லவன் இறந்தால் சூளுக்களின் ஆதரவை திரும்ப பெற முடியும் . இப்படியாக இரண்டு வழியிலும் பலவர்மனுக்கு லாபம் தான் .

நம் படைத் தலைவன் அக்ஷய முனை இறங்கிய நாளன்றே தன் பெரும் பொருள்களில் பலவற்றை கொள்ளைக்காரர்களுக்கு வாரி இறைத்து அவர்களை தன் பக்கம் இழுத்து விடுவான். பிறகு கோட்டைக் காவலை தானே ஏற்று சூளுக்கள் மற்றும் பதக் சாதியினரின் அனைத்து தாக்குதல்களையும் முறியடிக்க ஏற்பாடு செய்வான். பலவர்மன் தன் பங்குக்கு சூளுக்களையும் பதக் சாதியினரையும் தூண்டி விட்டு இளைய பல்லவன் பக்கம் சேர்ந்த தன் மக்களை பழி வாங்க நினைப்பான். இப்படியாக நடக்கும் நிகழ்ச்சிகளில் இளைய பல்லவன் அனைத்து சதி திட்டங்களையும் முறியடித்து அக்ஷய முனையைக் காப்பான். அக்ஷய முனையைக் காக்கும் கடைசி கட்டத்தில் பலவர்மனை கைது செய்து தன்னுடன் கொண்டு செல்வான் . அக்ஷய முனையின் ஆட்ச்சியை மஞ்சளழகியிடம் ஒப்படைப்பான்.

பொதுவாக இந்த நூலில் சாண்டில்யன் ஒவ்வொரு அத்தியாயத்திற்கு வைக்கும் தலைப்பின் அர்த்தத்தை அந்த அத்தியாயத்தின் கடைசி வரிகளில்தான் வைத்திருப்பார். மேலும் நம் படைத்தலைவன் எப்படியும் ஜெயித்து விடுவான் என்ற நம்பிக்கை ஏற்ப்பட்டுவிடுவதால் எந்த ஒரு சூழ்நிலையிலும் எந்த ஒரு அபாய நிலையும் நமக்கு அச்சத்தை ஏற்ப்படுத்துவதில்லை. மேலும் சில நேரங்களில் நாமே பின் நடக்கப் போவதை ஊகிக்க முடிவதால் சிறிது அயர்ச்சியை ஏற்படுத்துகிறது.

மேலும் இதில் புரிபடாத அம்சங்களும் உண்டு. ஏன் நம் படைத்தலைவன் இரண்டாம் பாகத்தின் முடிவில் அக்ஷய முனையை விட்டுச் செல்கிறான் என்பதே புரியாத ஒன்று. அவன் அக்ஷய முனையை நாடி வந்த எந்த ஒரு செயல்களுமே நிறைவடையவில்லை. அப்படி இருக்கையில் அவன் ஏன் அக்ஷய முனையை விட்டுச் செல்கிறான். அவன் தான் காஞ்சனா தேவியின் மீது கொண்ட காதலினால் மஞ்சளழகியை நீங்கிச் செல்கிறான் என்று கூட நம்மால் காரணம் கற்பிக்க முடிவதில்லை. ஏனெனில் அக்ஷய முனையை நீங்கும் வரை இளைய பல்லவன் தான் மஞ்சளழகியை காதலிப்பதாகவே எண்ணுவான். மேலும் அக்ஷய முனை மக்களின் எதிரில் தான் மஞ்சளழகியை திருமணம் செய்வதாக உறுதி அளித்தானே , அது என்ன ஆனது. அம்மக்கள் எப்படி அவன் மஞ்சளழகியை கல்யாணம் செய்யாமல் போவதை அனுமதித்தார்கள். மேலும் ஸ்ரீவிஜய பேரரசிற்க்குட்பட்ட அக்ஷய முனை காவல் தலைவனை கைது செய்து போவதற்கு, ஸ்ரீவிஜயம் எந்த ஒரு எதிர் செயலும் நிகழ்த்தவில்லையே ,அது ஏன் ? இப்படி பல கேள்விகள் எழுகின்றன.

மீதி கதை பற்றிய விமர்சனம் அடுத்து.

photo courtesy : http://www.3jokes.com/gallery/d/13889-2/Old_Ships_05.jpg

No comments: