Saturday, July 17, 2010

கடல் புறா - 2


இப்பதிவு இதற்க்கு முந்திய பதிவான கடல் புறா -1 இன் தொடர்ச்சியே ஆகும்.

காஞ்சனா தேவி, அநபாயச் சோழன், குண வர்மன் மற்றும் இளைய பல்லவன் ஆகிய நால்வரும் பாலூரிலிருந்து தப்புவதற்கு அரபி மாலுமி ஒருவன் உதவுவான் . அவன் பெயர் அமீர். இந்த அமீரின் குருவே அகுதா. அமீர் அந்த நால்வரிடம் , நாம் தப்பிச் செல்வதற்கு என்னுடைய குரு உதவுவார் என்று கூறி அகுதாவின் பெயரைக் கூறுவான். அகுதாவின் பெயரை கேட்டதும் அனைவரும் அதிர்ச்சி அடைவார்கள். ஏனெனில் அகுதா ஒரு மிகப் பயங்கரமான கடற்கொள்ளையன்.
அகுதாவிற்கு ஒரு இருபத்தியைந்து வயது இருக்கும் , அமீருக்கோ நாற்பது வயதிருக்கும். எப்படி இவன் அகுதாவை தன் குருநாதர் என்கிறான் என்று அனைவரும் ஆச்சரியப்படுவார்கள் . அதற்க்கு அமீர் , அகுதாவைப் போல் ஒரு சிறந்த மாலுமியைப் பார்க்க முடியாது. சீனாவில் சிறுவனாயிருக்கும் பொழுதே மாலுமிப் பயிற்சி எடுப்பார்கள் . அப்படி வந்தவர்தான் என்னுடைய குரு என்பான். இந்த அகுதாவே பிற்காலத்தில் இளைய பல்லவனுக்கு குருவாக இருந்து அவனுக்கு மாலுமிப் பயிற்சி உட்பட நிதானம், மனிதர்களை எடை போடுவது வரை அனைத்து பயிற்சிகளையும் அளிப்பான்.

இந்த புத்தகத்தில் என்னால் ஏற்க முடியாத காரணங்கள் இரண்டு இருக்கின்றன. ஒன்று, கலிங்க துறைமுகங்களின் மீது சோழர்களின் ஆதிக்கத்தை கலிங்கம் ஏற்கவேண்டும் என்ற கோரிக்கை. இது அமைதி விரும்பும் கோரிக்கை என்று இளைய பல்லவன் முதல் அனைவரும் காரணம் கூறினாலும் இது ஒரு அப்பட்டமான அத்து மீறல். அடுத்த நாட்டின் மீது கோரும் அப்பட்டமான ஏகாதிபத்தியம். அக்காலத்தில் நேரடியாக போர் புரிந்து துறைமுகங்களைக் கைப்பற்றாமல் அமைதி வழியில் ஆதிக்கம் செலுத்த கோருவது பெரிய விஷயம் என்றாலும் இதனை இக்காலத்தில் ஒரு நியாயமான கோரிக்கையாக ஏற்க முடியவில்லை. இரண்டு, அகுதா தான் கடற் கொள்ளையன் அல்ல என்று கூறும் காரணங்கள். அவன் அப்பட்டமான ஒரு கடற் கொள்ளையன் தான் .அதில் சந்தேகமே அல்ல. ஆனால் அதனை பூசி மொழுகுவதுதான் ஏற்க முடியாமல் இருக்கும். அதுவும் அவனிடம் நம்முடைய கதாநாயகன் பயிற்ச்சிப் பெற்று பிற் காலத்தில் அவனும் ஒரு கடற்கொள்ளையனாக மாறுவது ஏற்க முடியவில்லை.

நம்முடைய கதாநாயகன் குறித்த இத்தகைய அறிமுகம் போதும். நாம் இப்பொழுது உண்மையான வரலாற்று கதாநாயகனான குலோத்துங்கச் சோழனைப் பற்றி அறிவோம் . அது இக்கதை படிப்பதற்கும் உதவும். அக்காலத்தில் இடைக்காலச் சோழர்கள் என்னும் விஜயாலயச் சோழன் முதல் ஆதி ராஜேந்திர சோழன் வரைப்பட்ட சோழர்களுக்கும் கிழக்கு சாளுக்கியர்களுக்கும் இடையே திருமணங்கள் நடைபெற்று வந்துள்ளன. அப்படி நடை பெற்ற திருமணங்களில் முதலாம் ராஜராஜ சோழனின் பேரனான வேங்கி நாட்டை ஆண்ட ராஜராஜ நரேந்திரனுக்கும் முதலாம் ராஜேந்திர சோழனின் மகளுக்கும் பிறந்தவன்தான் இந்த அநபாயச் சோழன். இவன் ஆரம்பத்தில் ராஜேந்திர சாளுக்கியா என்று அழைக்கப்பட்டான். பிற்காலத்தில் ஆதி ராஜேந்திர சோழன் இறப்பிற்குப் பின் சோழ அரியணையில் ஏற்ப்பட்ட வெற்றிடத்தைப் போக்க இந்த அநபாயச் சோழன் , முதாலம் குலோத்துங்கச் சோழனாக அரியணை ஏறினான். இவன் அநபாயச் சோழனாக இருந்த காலகட்டத்தில் வீர ராஜேந்திரச் சோழன், சோழ அரியணையில் இருந்தான். இக்கதைப்படி அப்பொழுது வேங்கி நாடு அநபாயச் சோழன் தலைமையில் இல்லை. அவன் நாடற்ற இளவரசனாக இருந்தான். அவனும் தான் வேங்கி அரியணையில் ஏற, தன் தாய் மற்றும் தந்தை வழி சொந்தமான சோழர்களை எதிர்பார்த்திருந்தான். இந்த வேங்கி நாடு கலிங்கத்துக்கும் சோழத்திற்க்கும் இடையே இருந்த்தது. ஆகவே வேங்கி நாட்டில் சோழர்களுக்கு ஆதரவு இல்லாத நாடு இருப்பது கலிங்கத்து நல்லது. அப்படி இருந்ததால் வேங்கி நாடு கலிங்கத்துக்கும் சோழத்திற்க்கும் இடையே ஒரு buffer zone ஆக அமையும். இதுவே கலிங்க மன்னன் பீமனின் எண்ணம்.

அநபாயச் சோழன் உட்பட நால்வரும் தாங்கள் பாலூரிலிருந்து தப்ப அமீரின் கையை எதிபார்த்திருப்பார்கள். அப்படி தப்பும் வேளையில் இளைய பல்லவன் மட்டும் கலிங்க வீரர்களுடன் சண்டையிட வேண்டியிருக்கும். இந்த இடத்தில் இளைய பல்லவனின் வீரமும், தன் உயிர்த்தோழன்
அநபாயச் சோழன் மற்றும் தன் காதலி காஞ்சனா தேவி தப்ப வேண்டும் என்ற அவன் நோக்கமும் அவன் மேல் மிகப் பெரிய மரியாதையை ஏற்ப்படுத்தும். அப்படி சண்டையிடும் வேளையில் அவன் சாவை நெருங்கிக் கொண்டிருப்பான் . அத்தகைய தருணத்திலேயே அகுதாவால் காப்பாற்றப்பட்டு அவனுடன் மரக்கலத்தில் செல்வான். இங்கிருந்து கதை இளைய பல்லவன் அகுதாவால் , உப தளபதியாக்கப் பட்டு அவனால் அனைத்து பயிற்ச்சிகளும் கொடுக்கப்படுவான் . இங்கிருந்து தான் நம் கதாநாயகன் எந்நேரத்திலும் நிதானம் தவறாதவனாக , மரக்கலப் போரில் மிகத் தேர்ச்சி பெற்றவனாக உருமாருவான்.

இங்கிருந்து கதை மரக்கலத்தைச் சார்ந்து நகர ஆரம்பிக்கும். ஏன் சற்று பாதை மாறிச் செல்வதாகத் கூடத் தோன்றும். அகுதாவால் காப்பாற்றப்பட்டதிலிருந்து அடுத்து ஒரு வருடம் இளைய பல்லவன் அகுதாவுடனயே இருப்பான். இளைய பல்லவன் அடுத்து ஒரு வருடம் அகுதாவுடன் இருப்பதற்கு , தான் மரக்கலப் போரில் தேர்ச்சிப் பெறவேண்டும் என்ற ஆசையும், பாரதத்தின் கிழக்கு கடற்க்கரையிலிருந்து சொர்ண பூமி வரையிலான கடற்பரப்பு முழுவதும் கலிங்கத்தின் ஆதிக்கத்தை அழித்து மீண்டும் சோழர்களின் ஆதிக்கத்தை ஏற்ப்படுத்த வேண்டும் என்பதும் காரணமாகவும் கூறப் பட்டாலும் , இளைய பல்லவன் சோழர்களின் உபதளபதி என்பதிலிருந்து மாறி அகுதா எனும் கடற்கொள்ளையனின் உபதளபதியாக கடற்கொள்ளையிலும் ஈடுபடுவது ஏற்க முடியாததாக இருக்கும் . இந்த இடத்தில் கதை சற்று தடம் மாறுவதாகவும் ஏன் சற்று தடம் புரள்வதாகவும் தோன்றும். ஏன் இளையபல்லவன் சோழர் உபதளபதி என்பதைத் துறந்தான், தன் உயிருக்கு உயிரான காதலியான காஞ்சனா தேவிக்கூட தான் உயிரோடு இருக்கிறோமா இல்லையா என்பதைக்கூட அறிவிக்காமல் அகுதாவுடன் ஒரு வருடம் தனியாக இருக்கிறான் என்பது புரியாத புதிராக இருக்கும்.

இதிலிருந்து கதையானது பாரத கண்டத்திலிருந்து சொர்ண பூமி சென்றுவிடும்.

கல்கியின் எழுத்து நடையும் சாண்டில்யனின் எழுத்து நடையும் மிகவும் மாறுபட்டிருக்கும். சாண்டில்யன் பொதுவாக கற்பனைக் கதாப்பாத்திரங்களைச் சார்ந்திருப்பார். கல்கி அப்படி கிடையாது. கல்கியின் பொன்னியின் செல்வனில் மிகப் பெரும்பான்மையோர் உண்மைக் கதாப் பாத்திரங்களே. சாண்டில்யனிடம் வர்ணனை அதிகமாக இருக்கும். கல்கியின் கதைகளில் , அடுத்தடுத்த அத்தியாயங்களில் கதையானது தொடர்ச்சியாக இருக்காது. அவர் இணையாகச் (parallel) செல்லும் கதையின் இரண்டு ஓட்டங்களை அடுத்தடுத்த அத்தியாயங்களில் கூறுவார். ஆனால் சாண்டில்யனின் கதை தொடர்ச்சியாக இருக்கும். மேலும் சாண்டியனின் கதையில் இரண்டு கதாநாயகிகள் இருப்பர். சாண்டில்யனின் யவன ராணியில் , யவன ராணியும் பூவழகியும் கதாநாயகிகளாக இருப்பர். அதே போல் கடற்புறாவில் காஞ்சனா தேவியும் மஞ்சழகியும் கதாநாயகிகளாக இருக்கின்றனர்.

இப்படியாக நம் இளைய பல்லவன் கடற்க்கொள்ளையன் அகுதாவிடம் ஒரு வருடமாக பயிற்ச்சிப்
பெற்று ஸ்ரீவிஜய பேரரசின் கீழ் இருக்கும் அக்ஷய முனையை அடைவான். அக்ஷ முனை, கடற்ப்பரப்பில் பாரதத்திற்கும் சொர்ண பூமிக்கும் இடையில் இருக்கும் சொர்ண பூமியின் ஒரு பகுதியாகும். இங்கே நன்றாகக் காலூன்றுவத்தின் மூலம் கலிங்கத்திலிருந்து வரும் மரக்கலங்களை வழி மறிக்கலாம் என்பது இளைய பல்லவனின் எண்ணம். இதன் மூலம் கடற்ப்பரப்பில் கலிங்கத்தின் ஆதிக்கத்தை ஒழிக்கலாம். அக்ஷ முனையானது குண வர்மனின் ஒன்று விட்ட சகோதரன், பல வர்மானால் ஆளப்படும். இப்பகுதி முழுவதும் கடற் கொள்ளையர்களால் நிரம்பியது. இங்கு அரசாங்கமே கடற்க் கொள்ளையை ஆதரித்தது. மேலும் பல வர்மன் ஒரு வஞ்சகன் . கடற் கொள்ளையை தூண்டி விட்டு அதன் மூலம் பிழைப்பவன். அத்தகைய ஒருவனின் மகளாகவே நம்முடைய மற்றொரு கதாநாயகி மஞ்சழகி அறிமுகமாவாள் .

காஞ்சனா தேவி மற்றும் மஞ்சழகி பற்றிய வர்ணனைகள் அவர்கள் மிகச் சிறந்த அழகிகள் என்று காட்டும். இதில் காஞ்சனா தேவி விற் பயிற்சி, வாள் பயிற்சி பெற்று சிறந்த வீராங்கனையாகத் திகளுவாள். மஞ்சழகி அரசாங்க காரியத்தில் அதிகம் ஈடுபாடு காட்டி சிறந்த ராஜ தந்திரியாகவும் மனிதர்களை எளிதில் எடை போடக் கூடியவளாகவும் இருப்பாள். மேலும் அவள் ஆடல் கலையிலும் சிறந்தவள். இந்நாவலைப் படிக்கும் பொழுது ஏனோ மனம் மஞ்சழகி பின் செல்லுவதை தவிர்க்க முடியாது.

அக்ஷமுனைக்கு இளைய பல்லவன் அகுதாவின் உப தளபதியாகவே அறிமுகமாவான் . இதனால் இவனைக் கண்டு எதற்கும் கலங்காத பலவர்மனே அரளுவான். ஏனெனில் ஆகுதா அத்தகைய பயங்கர கடற் கொள்ளையன் . முதலில் இளைய பல்லவனைப் பார்த்து பயந்த மஞ்சழகியும் பின் அவன் மேல் காதல் வசப்படுவாள் . இங்கு எதிபாரதவிதமாக பூர்வ குடியைச் சார்ந்த நர மாமிசம் சாப்பிடும் ஒரு பூர்வ குடி இனத் தலைவன் ஒருவனின் கொலைக்கு இளைய பல்லவன் காரணமாகிவிடுவான். இப்படி தேவை இல்லாத காரியங்களில் எல்லாம் இளைய பல்லவன் ஈடுபடும் பொழுது மனம் ஏன் இப்படி இவன் தேவை இல்லாதவற்றில் எல்லாம் ஈடுபடுகிறான் என்று தோன்றும் . இப்படி கதை பல மாறுதல்களைக் கொண்டிருந்தாலும் நன்றாகவேச் செல்கிறது.

மீதி கதை பற்றிய விமர்சனம் அடுத்து.


photo courtesy :http://www.flickr.com/photos/10781010@N00/203949926/lightbox/

1 comment:

JDK said...

Interesting !!! Thanks for the introduction.