Thursday, August 11, 2011

என்று தெளியும் இந்த நாடு ?

ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது அந்த நாட்டின் வளங்களைப் பொறுத்தது. இந்த வளங்கள் பெரும்பாலும் இயற்கை வளங்களையும் மனித வளங்களையும் குறிக்கும். சில நாடுகள் ( எ.கா தென் அமெரிக்க மற்றும் மத்திய கிழக்கு நாடுகள்) மிகுந்த இயற்கை வளங்களையும் குறைந்த மனித வளத்தையும் கொண்டும், சில நாடுகள் (எ.கா ஜப்பான்) அதிக மனித வளத்தையும் குறைந்த இயற்கை வளங்களையும் கொண்டும் வளர்கின்றன. மிகக் குறைந்த நாடுகளே சமச்சீரான இயற்கை வளங்களையும் , மனித வளத்தையும் கொண்டுள்ளன. அவற்றில் ஒன்று இந்தியா.

இந்தியா அளவிற்கு மனித வளத்தையும் , இயற்கை வளங்களையும் கொண்டுள்ள நாடுகள் மிகச் சிலவே. எ.கா அமெரிக்கா, சீனா போன்றவை மற்ற சில.
ஆனால் அந்த வளங்களை ஒரு நாடு எந்த அளவிற்கு முறையாக பயன்படுத்துகிறது என்பதைப் பொறுத்தே அதன் தலைமுறை முன்னேற்றம் உள்ளது. அதுவே அதனுடைய முதிர் தன்மையைக் ( Maturity) காட்டும்.

இந்தியாவில் இருக்கும் இயற்கை வளங்களில் கனிம வளங்களும் அடக்கம். ஒரு நாட்டிற்கு கனிம வளங்கள் மிக முக்கியமானது. உலக அளவில் இந்திய நிலக்கரி மற்றும் லிக்னைட் உற்பத்தியில் 3 வது இடமும் , பாரைட் உற்பத்தியில் 2 வது இடமும் , இரும்புத்தாது உற்பத்தியில் 4 வது இடமும், பாக்சைட் மற்றும் crude steel உற்பத்தியில் 5 வது இடமும் , மாங்கனீசு தாது மற்றும் அலுமினியம் உற்பத்தியில் முறையே 7 மற்றும் 8 வது இடமும் வகிக்கிறது.
இவ்வளவு வளங்கள் இந்தியாவில் உள்ளன.

ஆனால் இவ்வளவு வளங்களால் இந்தியாவிற்கு பயனா என்று பார்த்தால் இல்லை என்றே சொல்லலாம் . ஏனெனில் இவ்வளங்களில் மிகப் பெரும்பான்மை வெளி நாடுகளுக்கே ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

எடுத்துக்காட்டாக இரும்புத் தாதை எடுத்துக்கொள்வோம். உலக அளவில் இரும்புத்தாது அதிக அளவு இருக்கும் நாடுகளிலும் அவற்றை உற்பத்தி செய்யும் நாடுகளிலும் இந்தியா மிக முக்கியமானது . உலக அளவில் இரும்புத்தாது உற்பத்தியில் இந்தியா 4 வது இடம் வகிக்கிறது. ஆனால் இவற்றில் மிகப் பெரும்பான்மை வெளிநாடுகளுக்கே ஏற்றுமதி செய்யப்படுகிறது. அதுவும் முக்கியமாக சீனாவிற்கே ஏற்றுமதி செய்யப்படுகிறது. உலக அளவில் steel உற்பத்தியில் சீனா முதலிடம் வகிக்கிறது. அங்கு இருக்கும் ஆயிரக்கணக்கான steel ஆலைகளுக்கு தீனி போட இந்திய இரும்புத்தாது மிக அவசியம்.

சீனாவிற்கு , ஆஸ்திரேலியா மற்றும் பிரேசிலுக்கு அடுத்து அதிகமாக இரும்புத்தாது ஏற்றுமதி செய்யும் நாடு இந்தியாதான். இத்தனைக்கும் சீனாதான் இரும்புத்தாது உற்பத்தியில் உலக அளவில் முதலிடம் வகிக்கிறது. அது ஒரு ஆண்டுக்கு 800 million metric ton தயாரிக்கிறது. அதுவும் பத்தாமல் வருடத்திற்கு 245 mmt தயாரிக்கும் இந்தியாவிடமிருந்து இறக்குமதி செய்கிறது. இந்தியா உற்பத்தி செய்யும் இரும்புத்தாதில் 50% மேல் சீனாவிற்கே செல்கிறது.

உலக மார்கெட்டில் ஜூனில் 1 Ton இரும்புத் தாதின் (Iron ore) விலை Rs 7,500. இந்தியாவில் வெட்டி எடுக்கப்படும் இரும்புத் தாதில் மிகப் பெரும்பான்மை வெளிநாடுகளுக்கே ஏற்றுமதி செய்யப்படுகிறது. அதாவது 1 ton இரும்பு தாதிற்கு தனியார் சுரங்கங்களுக்கு கிடைக்கும் விலை Rs 7,500 . அதற்கு அவை அரசிற்கு செலுத்தும் royalty 1 டன்னிற்கு வெறும் Rs 125 (2009 முன் அது வெறும் Rs 29 :( . மேலும் இந்தியாவில் இருக்கும் இரும்புத்தாது சுரங்கங்கள் உட்பட அனைத்து சுரங்கங்களின் எண்ணிக்கை 2854 .அவற்றில் 755 யே அரசின் வசம் உள்ளது மீதி 2099 சுரங்கங்கள் தனியார் வசம் உள்ளன. ).

பொறுக்கவும் இப்பொழுது ஒன்றை நினைத்து பாருங்கள் ஒரு சாதாரண மனிதன் அவன் நிலத்தில் மண்ணிற்கு கீழே இருந்து இருந்து புதையல் எதுவும் எடுத்தால் அவை அனைத்தும் அரசிற்கே சொந்தம். அதில் அவனுக்கு பங்கு எதுவும் கிடையாது. ஆனால் அதே மண்ணிற்கு கீழே புதையலாக இருக்கும் கனிமங்களை வெட்டி எடுத்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் தனியார் நிறுவனங்கள் அரசிற்கு செலுத்தும் royalty வெறும் 1.6% தான் :( .

சரி at least ஏற்றுமதி செய்யும் இரும்புத்தாதை பதப்படுத்தி இரும்பாகவாவது (ஸ்டீல்) ஏற்றுமதி செய்கிறார்களா? அதுவும் கிடையாது. இரும்புத்தாதை இரும்பாக மாற்றினால் அதனால் பல பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். மேலும் அதில் லாபமும் அதிகம். அதிக வரி மற்றும் அந்நிய செலாவணி கிடைக்கும். அதுவும் நாம் செய்வதில்லை . அனைத்தையும் தாதுகளாகவே ஏற்றுமதி செய்கிறோம்.

பொதுவாக ஒரு நாட்டில் ஒரு கனிம வளம் அதிகமாக கிடைத்தால் பொதுவாக அந்த நாட்டில் அந்த நாட்டு மக்களுக்கு அதன் விலை குறைவாக இருக்கும். எடுத்துக்காட்டாக பெட்ரோலியம் அதிகமாக கிடைக்கும் அரபு நாடுகளிலும் , வெனிசுலா போன்ற நாடுகளிலும் பெட்ரோலின் விலை மிக குறைவு. வெனிசுலாவில் 1ltr பெட்ரோலின் விலை Re 1 தான்! . ஆனால் இந்தியாவில் Rs 70. இந்தியாவில் பெட்ரோலின் விலை மிக அதிகமாக இருக்கக் காரணம் இந்தியாவில் பெட்ரோலியம் அதிகமாக கிடைப்பதில்லை , இந்தியா பெட்ரோலியத்தை மிக அதிகமாக வெளிநாடுகளில் இருந்தே இறக்குமதி செய்கிறது. அதனால்தான் உலக மார்கெட்டிற்கு ஏற்றவாறு பெட்ரோலின் விலை மாறுகிறது என்பது இந்திய அரசின் கூற்று.

ஆனால் இரும்பைப் பொறுத்தவரை என்ன நடக்கிறது ? இந்தியா உலகிலேயே இரும்புத்தாது உற்பத்தியில் 4 வதாக இருந்த போதிலும் இந்தியாவில் மக்கள் வாங்கும் இரும்பின் விலை உலக மார்கெட்டில் என்ன விலையோ அதே விலைதான். அதாவது உலக மார்கெட்டில் இருக்கும் ஒரு டன் இரும்பின்( Steel) விலையான அதே Rs 32,000 (May மாதம்)கொடுத்துதான் இந்திய மக்களும் வாங்குகிறார்கள்( இந்த மாதம் இரும்பு விலை டன்னுக்கு Rs 40,000 தாண்டிருச்சு).

இது எப்படி இருக்கிறதென்றால் ஒரு தாய் தன் குழந்தையிடம், "வெளி மார்க்கெட்டில் ஒரு லிட்டர் பசும்பாலே 30 ரூபாய் ... நான் உனக்கோ அதைவிட சத்தான தாய்ப்பால் தருகிறேன் .. அதனால் நீ எனக்கு குறைந்தபட்சம் 30 ரூபாயாவது தரவேண்டும்" என்பது போல் உள்ளது. கேட்டால் இதற்குப் பெயர்தான் பொருளாதாரம். இதன் மூலம் வருவதுதான் பொருளாதார முன்னேற்றம் . எவ்வளவு மோசமான செயல் இது ?


கனிம வளங்கள் ஒரு நாட்டிற்கு இன்றியமையாதவை. அதுவும் இரும்பு போன்று தீர்ந்து போகும் கனிம வளங்கள் மிக இன்றியமையாதவை. பிரேசில் மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் இரும்பை ஏற்றுமதி செய்யலாம். ஏனெனில் அங்கு கனிம வளங்கள் மிக அதிகம் மேலும் அவற்றின் மக்கள் தொகை மற்றும் மக்கள் அடர்த்தி மிக குறைவு ( ஆஸ்திரேலியாவின் மொத்த மக்கள் தொகையே 2.2 கோடி தான். அதாவது இந்தியாவில் ஒரு வருடத்திற்கு அதிகரிக்கும் மக்கள்தொகையின் அளவு . ஆனால் அது இந்தியாவைப் போல 2.5 மடங்கு பெரியது). ஆனால் இந்தியா போன்ற மிக அதிக மக்கள்தொகை கொண்ட , இப்பொழுதான் வளர ஆரம்பித்திருக்கும் நாடுகளுக்கு இரும்பின் அவசியம் மிக அதிகம்.

ஒரு அறிக்கையின் படி உலக இரும்புத்தாதின் தேவை வருடத்திற்கு 2% என்று அதிகரித்தால் உலக இரும்பின் இருப்பு இன்னும் 64 வருடங்களில் தீர்ந்து விடும். ஆனால் இன்று இரும்பின் தேவை வருடத்திற்கு 10% அதிகரிக்கிறது. அதாவது அதிகபட்சம் இன்னும் 40 - 50 வருடங்களில் உலக இரும்பு எல்லாம் தீர்ந்து விடும் . அதற்கு அப்புறம் ஈயம் பித்தளைக்கு போட்ட பழைய இரும்பையே திரும்பி புதுபித்து உபயோகப்படுத்த வேண்டும். அதுவும் அப்ப அந்த பழைய இரும்பையும் வெளிநாடுகளிலிருந்துதான் இறக்குமதி செய்ய வேண்டும். ஏன்னா நாம்தான் அப்பொழுது எல்லாத்தையும் ஏற்றுமதி செய்திருப்போமே!. இப்படிப்பட்ட நிலையில் நாம் நம் இயற்கை வளங்களை கணக்கு வழக்கில்லாமல் ஏற்றுமதி செய்கிறோம்.

இது மட்டுமல்ல சட்ட விரோதமான சுரங்கங்களின் மதிப்பு இங்கு மிக அதிகம். கர்நாடகா மாநிலத்தில் மட்டும் இதன் மதிப்பு Rs 16,000 கோடி . இந்தியா முழுவதும் என்றால் இதன் மதிப்பு கிட்டத்தட்ட Rs 50,000 கோடி - Rs 60,000 கோடி. மேலும் இந்த சட்ட விரோத சுரங்கங்கள் ஊழலையும், தீவிரவாதத்தையும் ஊக்குவிக்கின்றன. மேலும் இவை சுற்று சூழல் மாசு கேட்டிற்கும் காரணமாகின்றன. மேலும் சுரங்கங்கள் அமையும் இடம் பெரும்பாலும் காடுகளாகவே உள்ளன. இதனால் அவை காடுகள் அழிப்பிற்கும், விலங்குகள், தாவரங்கள் அழிவதற்கும் காரணமாகின்றன. மேலும் அந்த இடங்களில் வாழும் பழங்குடி இன மக்களையும் வெளியேற்றி அவர்களின் வாழ்வாதாரங்களை பாதிக்கின்றன.

இப்பொழுது சுரங்கங்கள் அமைச்சகத்திற்கும், சுற்றுச் சூழல் அமைச்சகத்திற்கும் இடையே லடாய். அதாவது சுரங்கங்கள் அமைய சுற்றுச் சூழல் அமைச்சகத்தின் அனுமதி பெறவேண்டும் .ஆனால் காடுகள் இருக்கும் இடத்தில் அவற்றை அழித்து விட்டு சுரங்கங்கள் அமைக்க சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி தரமாட்டேன் என்கிறது. அதாவது கனிம வளத்தை அழித்து அவற்றை ஏற்றுமதி செய்வதோடு அல்லாமல் காடுகளையும் அழிக்க வேண்டுமாம் :( .

1 comment:

bandhu said...

மிக நிறைவான பதிவு. யாரும் எளிதில் யோசிக்காத விஷயத்தை எடுத்து எழுதியிருக்கிறீர்கள். நீங்கள் சொன்னபடி, நாம் இவ்வளவு வளங்களையும் உபயோகிக்காமல், அப்படியே விற்று விடுகிறோம். இதையே தான் விடுதலை பெரும் முன், ஆங்கிலேயர் செய்தனர். பருத்தியை நம் ஊரிலிருந்து ஏற்றுமதி செய்துவிட்டு, துணியாக நம்மிடம் விற்றனர். நாம் என்ன செய்கிறோம்? நீ என்னடா செய்வது, நானே செய்கிறேன் என்கிறோம். கொள்ளி கட்டையை எடுத்து தலையை சொறிவது போல! என்ன சொல்ல..