Wednesday, December 15, 2010

உலகில் என்னை அதிகம் பரவசப்படுத்தும் இடங்கள்

எனக்கு சில விசயங்களை , சில இடங்களை , சில மனிதர்களைப் பற்றி கேட்கும் போது , பார்க்கும் போது மிக பரவசமான நிலை ஏற்படும். அவற்றைப் பற்றி மீண்டும் மீண்டும் கேட்க வேண்டும் , பார்க்க வேண்டும் என்று தோன்றும் . அவை, அவர்கள் இந்த உலகில் மிக உன்னதமான நிலை வகிப்பவர்கள் கூட. நான் இங்கு என்னை பரவசப்படுத்தும் இடங்களைப் பற்றி மட்டுமே கூறுகிறேன். என்னைப் பரவசப்படுத்தும் மனிதர்களையும் சம்பவங்களையும் தனிப் பதிவுகளில் கூறுகிறேன். நான் இங்கு கூறும் இடங்கள் வரிசைகிரமாக இல்லை . இப்பகுதியில் உள்ள வெளிநாட்டில் அமைந்த பகுதிகள் இந்தியாவில் அமையாமல் வேறுநாட்டில் அமைந்துள்ளனவே என்று நான் அதிகம் வருத்தப்படும் இடங்கள் ஆகும் .

அமேசான் மழைக் காடுகள் :


அமேசான் மழைக்காடுகள் தென் அமெரிக்காவின் மிக அதிக பரப்பளவை ஆக்கிரமித்த உலகின் மிகப் பெரிய மழைக் காடுகள் ஆகும். நான் அமேசான் மழைக்காடுகள் என்று கூறும் போது அது அமேசான் ஆற்றையும் சேர்த்துதான் . நம்மால் அமேசான் காடுகளையும் , அமேசான் ஆற்றையும் தனித்தனியாக பிரித்துப் பார்க்க முடியாது. இரண்டையும் பிரிக்க முடியாத அளவிற்கு இரண்டும் ஒன்றுடன் ஒன்று கலந்ததுதான். அமேசான் பேசின் எனப்படும் பகுதியானது மொத்தம் 70 லட்சம் சதுர கிலோமீட்டர் பரப்பளவை ஆக்கிரமித்த பகுதி . இவற்றில் 55 லட்சம் சதுர கிலோமீட்டர் அமேசான் மழைக்காடுகளாகும். இந்தப் பகுதியானது மொத்தம் ஏழு நாடுகளில் பரவியுள்ளது. அவற்றில் 60% மழைக் காடுகள் பிரேசில் நாட்டில் மட்டும் பரவியுள்ளது. உலகில் உள்ள மழைக்காடுகளில் அமேசான் மழைக்காடுகள் மட்டும் பாதி அளவை ஆக்கிரமித்துள்ளன. உலகில் உள்ள உயிரினங்களில் பத்தில் ஒன்று அமேசான் மழைக்காடுகளில் வசிக்கின்றன. உலகில் உள்ள மொத்த பறவை இனங்களில் ஐந்தில் ஒன்று இந்தக் காடுகளில் வசிக்கின்றன. உலகில் உள்ள பூச்சி இனங்களில் மொத்தம் 25 லட்சம் பூச்சி இனங்கள் இங்குதான் வசிக்கின்றன. அமேசான் மழைக் காடுகள் ஆப்ரிக்கா போன்று மிகப் பெரிய பாலூட்டிகளை கொண்டிருப்பதில்லை. ஏனெனில் யானை போன்ற மிகப் பெரிய பாலூட்டிகள் உலாவ மிகப் பரந்த , அதிக நெருக்கமான மரங்கள் அற்ற பகுதி தேவை . மேலும் சிங்கம், புலி, சிறுத்தை போன்ற விலகினங்கள் பாய்ந்து வேட்டையாட மிகப் பெரிய நெருக்கமான மரங்கள் அற்ற பகுதி தேவை . அமேசான் மழைக் காடுகள் அப்படிபட்டவை அல்ல. அவை மிக நெருக்கமான மரங்கள் அடர்ந்த பகுதியாகும். அமேசான் மழைக் காடுகளில் மிகச் சிறிய உயிரினங்களே அதிகம் வசிக்கின்றன. அமேசான் மழைக் காடுகளில் வசிக்கும் மிகப் பெரிய உயிரினங்கள் கருப்பு கைமேன் எனும் முதலை, ஜாகுவார் என்னும் சிறுத்தை போன்ற விலங்கு, கவ்கர் என்னும் சிங்கம் போன்ற விலங்கு , அமேசான் காடுகளுக்கே உரித்தான அனகோண்டா பாம்பு ஆகும். அமேசான் காடுகள் அவற்றிற்கே உரித்தான விஷ தவளைகளையும், பிரான்கா என்னும் பற்களை கொண்ட மீன் இனத்தையும் கொண்டிருக்கின்றன . பிரான்கா பற்றி நிறைய கதைகள் கூறப்படுகின்றன . அதில் ஒன்று அமெரிக்க ஜனாதிபதி தியோடர் ரூஸ்வெல்ட் பிரேசிலுக்கு பயணம் செய்த போது அவரைக் கவர வேண்டி பிரேசில் மீனவர்கள் ஒரு மாட்டை பிரான்கா நிறைந்த ஆற்றில் தூக்கிப் போட்டார்களாம். கண நேரத்தில் அந்த மாட்டின் எலும்புக் கூடே மிஞ்சியதாம்.

அமேசான் ஆற்றைப் பற்றிக் கூறுவதென்றால் அதுவே உலகின் மிகப் பெரிய ஆறாகும் . உலகின் இரண்டாவது நீளமான ஆறும் கூட. அமேசான் ஆறு வெளியேற்றும் நீரானது , உலகில் அதனை அடுத்துப் பெரிய ஆறு ஆறுகள் வெளியேற்றும் நீரை விட அதிகம். கோடை காலங்களில் அமேசான் ஆற்றின் அகலம் 1.6 km முதல் 10km வரையாகும். மழைக்காலத்தில் இதுவே 48km வரை நீளும் . அமேசான் ஆற்றின் முகத்துவாரம் 240km அகலம் கொண்டதாகும். அதனாலேயே இது ஆற்று கடல் என்று கூறப்படுகிறது. அமேசான் ஆற்றின் எந்தப் பகுதியும் பாலங்களால் கடக்கப்படுவதில்லை. கோடை காலங்களில் 1,10,000 sqkm நிலமானது நீரால் சூழப்படுகிறது. மழைக்காலத்தில் 3,50,000 sqkm நீரால் சூழப்படுகிறது. அட்லாண்டிக் கடலில் அமேசான் வெளியேற்றும் நீரானது மிக அதிக அளவாகும் . ஒரு வினாடிக்கு சராசரியாக 3,00,000 கன மீட்டர் நீரை மழைக்காலங்களில் வெளியேற்றுகிறது . உலகில் உள்ள ஆறுகள் கடலில் கொண்டு சேர்க்கும் நீரில் 20% அமேசான் கொண்டு சேர்க்கிறது.

கோனார்க் சூரிய கோயில் :


கோனார்க் சூரிய கோயில் ஒரிசாவில் அமைந்துள்ள சூரியனுக்காக அமைக்கப்பட்ட கோயிலாகும் . இது 13 நூற்றாண்டை சேர்ந்தது. இது கங்கா அரச பரம்பரையை சேர்ந்த முதலாம் நரஷிம்ஹவர்மனால் சூரிய தேவனுக்கு கட்டப்பட்டது. இக்கோயில் ஒரு தேர் வடிவத்தில் அமைக்கப்பட்டது. இது சூரிய கதிரில் உள்ள ஏழு வண்ணங்களை குறிக்கும் வகையில் ஏழு குதிரைகளால் இழுக்கப்படுவதாகவும் , மிக அழகிய 12 சக்கரங்களை கொண்டதாகவும் அமைக்கப்பட்டுள்ளது. கோனார்க் சூரிய கோயிலின் மிக அதிக பகுதிகள் வங்காள சுல்தானாக இருந்த சுலைமான் கான் கர்ரானியால் அழிக்கப்பட்டது. அப்படி இருந்தும் இக்கோயில் மிக அழகாக உள்ளது. இது UNESCO ஆல் உலகின் பண்பாட்டுச் சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நான் கோனார்க் கோயிலை நேரில் பார்த்துள்ளேன் என்பதில் மிகப் பெருமிதம் அடைகிறேன்.

தஞ்சை பெரிய கோயில் :


தஞ்சை பெரிய கோயில் ராஜராஜனால் 1000 (கிபி 1010) ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. இது சோழர்களின் கட்டிடக்கலையை காட்டுவதோடு இந்தியாவின் கட்டிடக்கலைக்கும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். இது இதன் வகையில் உள்ள கோயில்களில் உலகிலேயே உயர்ந்த கோயிலாகும். இது UNESCO ஆல் உலகின் பண்பாட்டுச் சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது . இன்றும் தமிழ்நாட்டின் கட்டிடக்கலைக்கு ஒரு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது. இக்கோயிலுக்கும் நான் சென்றுள்ளேன்.

மதுரை மீனாக்ஷி அம்மன் கோயில் :


மதுரை எனக்கு சொந்த ஊர் என்பதாலேயே எனக்கு அந்த ஊரின் மீதும் , அதைப் பற்றிய அனைத்துச் செய்திகளும் எனக்கு பரவசம் தரும் . மதுரை மாநகரம் 2500 ஆண்டுகள் பழமையானது. முப்பெரும் வேந்தர்களான பாண்டியர்களின் தலை நகரமாக காலம் காலமாக இருந்த நகரமாகும். இக்கோயில் அந்த ஊரில் அமைந்த மிக அழகிய கோயிலாகும். இக்கோயில் மிகப் பழமையானது என்ற போதிலும் இதனுடைய தற்போதைய வடிவம் 1600 இல் கட்டப்பட்டது. உலகில் உள்ள இந்துக்களின் மிக முக்கிய கோயிலாகும் . இதனுடைய மற்றொரு சிறப்புக்குக் காரணம் இங்கு அம்மன் ஆட்சி நடப்பதாகும். இக்கோயிலில் அம்மனுக்கே அதிக முக்கியத்துவம். உலகில் புதிய ஏழு அதிசயங்களில் தேர்ந்தெடுக்கும் போட்டி நடைபெற்றபோது அதில் முதல் 21 இடங்களுக்குள் வந்த கோயிலாகும். NDTV நடத்திய இந்தியாவின் ஏழு அதிசயங்களில் ஒன்றாக தேர்ந்தெடுக்கப்பட்ட கோயிலாகும். உலகில் அதிக சிலைகள் கொண்ட கோயிலாகும். இக்கோயில் பதினான்கு கோபுரங்களை கொண்டுள்ளது. இக்கோயில் உலகின் பண்பாட்டுச் சின்னமாக UNESCO ஆல் அறிவிக்கப்படப்போகும் நாளை மிக ஆவலாக எதிர்நோக்கி இருக்கிறேன்.

அங்கோர்வாட் :


அங்கோர்வாட் கோயில் கம்போடியாவில் அமைந்துள்ளது. இது இரண்டாம் சூர்யவர்மனால் விஷ்ணுவிற்காக கட்டப்பட்ட கோயிலாகும். இது உலகில் உள்ள சமயம் சார்ந்த மிகப் பெரிய கட்டிடமாகும். இது 12 ஆம் நூற்றாண்டை சேர்ந்ததாகும். முதலில் இந்துக் கோயிலாக இருந்த இது பின் புத்த விஹாராக மாற்றப்பட்டது. இது UNESCO வின் உலக பண்பாட்டுச் சின்னமாக 1992 இல் அறிவிக்கப்பட்டது. கம்போடிய நாட்டுக் கொடியில் இக்கோயில் இடம்பெற்றுள்ளது. மிக சிதிலமடைந்த நிலையுள்ள இக்கோயிலில் இந்திய அகழ்வாராய்ச்சி துறையானது 1986 முதல் 1992 வரை மேம்படுத்தும் பணிகளை மேற்கொண்டது. இக்கோயிலுக்குச் செல்லவேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் கனவாகும்.

காஸிரங்கா தேசியப் பூங்கா :


காஸிரங்கா தேசியப் பூங்கா இந்தியாவின் அமேசான் என்று கூறலாம் . இது அமேசான் போன்று அதிக அடர்த்தியான காடுகளைக் கொண்டிருக்கவில்லை . நான் ஏன் இதை இந்தியாவின் அமேசான் என்று கூறுகின்றேன் என்றால் இது அமேசான் போன்று இந்தியாவிலேயே அதிக வன உயிரினங்களை கொண்டிருக்கிறது. உலகிலே இருக்கும் ஒற்றைக் கொம்பு காண்டா மிருகங்களில் மூன்றில் இரண்டு இங்குதான் உள்ளது. கிட்டத்தட்ட 1800 க்கும் மேற்பட்ட ஒற்றைக்கொம்பு காண்டாமிருகங்கள் இங்கு உள்ளன. இதுவே உலகில் மிக அதிக புலிகளை கொண்டுள்ள பகுதியாகும் . கிட்டத்தட்ட 86 புலிகள் இங்கு உள்ளன. கிட்டத்தட்ட 2000 யானைகளும், 1600 க்கு மேற்பட்ட ஆசிய காட்டு நீர் எருமைமாடுகளையும் கொண்டுள்ளது. இப்பூங்கா 1905 ஆம் ஆண்டு வன உயிரியல் சரகமாக அறிவிக்கப்பட்டது. அப்பொழுது இந்தியாவின் வைஸ்ராயாக இருந்த கர்சன் பிரபுவின் மனைவியான மேரி விக்டோரியா உலகின் ஒற்றைக் கொம்பு காண்டாமிருகங்களுக்கு பெயர் பெற்ற காஸிரங்காவிற்கு பயணம் செய்த போது அவரால் ஒரு காண்டாமிருகத்தையும் காண முடியவில்லையாம். அவரின் வற்புறுத்தலின் பேரில் கர்சன் பிரபு இப்பூங்காவை பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியாக அறிவித்தாராம். அப்பொழுது 12 காண்டாமிருகங்களுடன் ஆரம்பிக்கப்பட்ட இப்பூங்காவில் இப்பொழுது 1800 க்கும் மேற்பட்ட ஒற்றைக்கொம்பு காண்டாமிருகங்கள் உள்ளன . இந்தியாவின் பல தேசியப் பூங்காக்கள் தங்கள் வன உயிரினங்களை காப்பாற்ற போராடும் போது இந்தப் பூங்காவே இந்தியாவில் வன உயிரினங்களை அதிகரித்த பூங்காவாகும் . இது ஒற்றைக் கொம்பு காண்டா மிருகங்கள் ,புலி , யானைகளையும் குறிப்பிடும். இத்தனைக்கும் இப்பூங்கா காண்டாமிருகங்கள் மற்றும் புலிகளின் உறுப்புகள் அதிகம் தேவைப்படும் சீனாவிற்கு மிக அருகில் உள்ளது. இப்பூங்கா UNESCO ஆல் உயிரியல் பண்பாட்டுச் சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பூங்காவிற்குச் செல்ல வேண்டும் என்பது என் நீண்ட நாள் கனவுகளில் ஒன்று.

கைலாயம்:


இந்துக்கள் ஒவ்வொருவருக்கும் கைலாயம் செல்ல வேண்டும் என்பதே மிகப் புனித கடமையாகும். உலகின் மிக மூத்த மதமான ஹிந்து மதத்தைச் சார்ந்த எனக்கும் மிக அதிக பரவசமூட்டக் கூடிய இடமாகும். கைலாய மலை நான்கு சமயங்களில் மிக முக்கியமாக கருதப்படுகிறது. அவை இந்து, புத்தம், ஜைனம் மற்றும் போன் ஆகும். இம்மலையிலிருந்து உலகின் நான்கு முக்கிய ஆறுகள் புறப்பட்டு உலகை நான்கு பகுதிகளாக பிரிக்கின்றது என்பது ஐதீகம். இம்மலை திபெத்தில் உள்ளது . இம்மலையை வலம் வருவது இந்நான்கு சமயங்களிலும் மிக முக்கியமான கடமையாகும். இந்துக்களும் , புத்தர்களும் இம்மலையை clockwise ஆகவும், ஜைனர்களும், போன் மதத்தைச் சார்ந்தவர்களும் counter clockwise ஆகவும் வலம் வருவார்கள். இந்து சமயத்தில் இம்மலை சிவபெருமான் தன் மனைவி பார்வதியுடன் குடி இருக்கும் இடமாகும்.

3 comments:

Shankar.Nash said...

As usual another good post from you. Very useful info.

Haripandi said...

@ Shankar, Thank you ji

ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி said...

ரசித்தேன் சகோ. அற்புதமான பகிர்வுகள்.