Wednesday, December 22, 2010

உலகில் என்னை அதிகம் பரவசப்படுத்தும் மனிதர்கள் - 2

பேரரசர் ராஜராஜ சோழன் :

இன்றும் தமிழகத்தை உலக அளவில் பெருமைபடுத்தக்கூடிய பேரரசன் ராஜராஜ சோழனே ஆவான். இவனுடைய ஆட்சி காலத்தில் தமிழகம் பல சிறப்புகளை பெற்றது. ராஜராஜ சோழன் பல படையெடுப்புகளை மேற்கொண்டு சோழப் பேரரசை விஸ்தீகரித்தாலும் என்னை அதிகம் கவர்ந்தது அவனுடைய நிர்வாகத் திறமையே ஆகும். அவன் தன் நாட்டில் நடைபெற்ற சிறு சிறு நடவடிக்கைகளையும் நேரடியாக கண்காணித்தான். உலகிலயே மிகப் பெரிய இந்து சாம்ராஜ்யத்தை இவன் மகன் ராஜேந்திர சோழன் காலத்தில் அமைக்க அடிகோலினான். இவனுடைய ஆட்சி காலத்திலேயே கப்பற் படையின் முக்கியத்துவம் உணரப்பட்டது. ஆசியாவிலேயே மிகச் சிறந்த கப்பற்படையை நிர்மாணித்தான். பொதுவாக மௌரிய,மகத, முகலாயப் பேரரசுகள் இந்தியப் பேரரசை மேற்கே ஆப்கானிஸ்தானிலிருந்து கிழக்கே பர்மாவின் எல்லைவரையே விஸ்தீகரித்தனர் . ஆனால் இவனுடைய ஆட்சி காலத்தில்தான் கடல் கடந்து கிழக்கே இன்றைய மலேயா, இந்தோனேசியா வரை இந்தியப் பேரரசு விரிந்தது. தமிழக கட்டிடக் கலைக்கு சிறந்த சான்றாக விளங்கும் தஞ்சை பெரிய கோயிலை கட்டினான். மேலும் நாடு முழுவதும் பல சிவாலயங்களை கட்டினான் . மேலும் இவனைப் பற்றி அறிய என் ராஜராஜ பெருவேந்தன் என்னும் பதிவைக் காணவும்.

பேரரசர் அக்பர் :


பேரரசர் ஜலாலுதீன் முகம்மது அக்பர். முகலாயப் பேரரசின் மிகச் சிறந்த பேரரசர். நான் இங்கு அக்பரின் படை எடுப்புகளைப் பற்றியோ அல்லது அவரது வெற்றிகளைப் பற்றியோ பேசப் போவதில்லை . எனக்கு அக்பரைப் பிடிக்கக் காரணம் அவருடைய முன்னோர்களான மற்ற இஸ்லாமிய அரசர்களும் , சுல்தான்களும் இஸ்லாம் தவிர்த்த மற்ற மதங்களின் மீது முக்கியமாக இந்து மதத்தின் மீது வெறுப்பும் , அவற்றை அழிக்க வேண்டும் என்றும் , அவற்றின் வழிபாட்டுத்தலங்களை அழித்துக் கொண்டும் இருந்த போது அக்பர் ஒருவர்தான் மற்ற மதங்களின் மீது சகிப்புத்தன்மையை கொண்டிருந்தார். அக்பரும் ஆரம்ப காலத்தில் சில இந்து கோயில்களை அழித்தார், பின் முஸ்லிம் அல்லாதவர்களின் மீது விதிக்கப்பட்டிருந்த ஜிஸ்யா வரியை நீக்கினார். பின் சிறிது காலம் கழித்து மீண்டும் ஜிஸ்யா வரியை கொண்டு வந்தார் . பின் கடைசியாக அந்த வரியை நீக்கினார். இப்படி இந்துக்களுக்கு எதிராக சில நடவடிக்கைகளை எடுத்திருந்தாலும் அவர் பொதுவாக மற்ற சமயங்களின் மீது சகிப்புத்தன்மை கொண்டிரிருந்தார். இந்துக்களுடன் இணைந்து வாழ வேண்டிய அவசியத்தை உணர்ந்தார். அவருடைய அரசவையில் மற்ற முஸ்லிம் மன்னர்களைப் போல் அல்லாமல் நிறைய ராஜபுத்திரர்களுக்கு முக்கியத்துவம் அளித்தார். மற்ற கொடுங்கோல் முஸ்லிம் பேரரசர்களைப் போல் அல்லாமல் அக்பரின் ஆட்சியில் இந்துக்களும் , முஸ்லிம் அல்லாத மற்ற சமயத்தினரும் அமைதியாகவே வாழ்ந்தனர். இந்துகளில் இருந்த பல மூடத்தனங்களுக்கு தடை விதித்தார். அதில் ஒன்று சதி என்னும் உடன்கட்டை ஏறுதல். அவர் ஒருகட்டத்தில் இந்துவாக மாறி விடுவாரோ என்று மத்த முஸ்லீம்கள் என்னும் வகையில் அவருடைய சகிப்புத்தன்மை இருந்தது. அவர் இந்துக்களும் முஸ்லீம்களும் இணைந்து வாழ தீன்-இலாகி என்னும் புது மதத்தை உருவாக்கினார். ஒரு தடவை மராட்டிய சக்ரவர்த்தி சிவாஜி முகலாயப் பேரரசர் அவ்ரங்கசீப்புக்கு எழுதிய கடிதத்தில் அவ்ரங்கசீப் தன் தாத்தா அக்பர் போன்று சமய சகிப்புத்தன்மையுடன் இருக்க வேண்டும் என்று எழுதி இருந்தார். அந்த அளவிற்கு அக்பர் சமய சகிப்புத்தன்மையுடன் இருந்தார்.

நரசிம்ம ராவ் :

இவர் என்னுடைய பட்டியலில் அமைந்திருப்பது உங்களுக்கு ஆச்சரியம் அளிக்கலாம். நான் இவரை என்னை பரவசப்படுத்தும் மனிதர் என்று கூறுவது சற்று மிகையாக இருக்கலாம். ஆனால் இந்தியாவின் வரலாற்றில் மிக முக்கிய இடம் அளிக்கப்படவேண்டியவர். இவருக்கான உரிய இடத்தை நாம் அளிக்கவில்லை என்பது என்னுடைய எண்ணமாகும். 14 மொழிகள் தெரிந்த வித்தகர். சிரிக்காத பிரதமர் என்று பெயர் எடுத்தவர். இருந்தபோதிலும் இன்று இந்தியா உலகிலேயே இரண்டாவது வேகமாக வளரக்கூடிய நாடாகவும், உலகில் வளர்ந்து வரும் பேரரசாக இருப்பதிற்கு அடிகோலியவர். 1990 களில் இவருடைய அரசு பெரும்பான்மை பெறாத அரசாகவே இருந்தது. அப்படி இருந்தும் கம்யூனிஸ்டுகளின் எதிர்ப்பையும் மீறி இந்திய சந்தையை திறந்து விட்டார். சீனா 1970 களின் ஆரம்பத்திலேயே செய்த நடவடிக்கைள் இவராலயே நமக்கு 1990 களில் சாத்தியமானது. இவருடைய பொருளாதார சீர்திருத்தங்களின் பயனையே நாம் இன்று அனுபவிக்கிறோம்.

A.P.J. அப்துல் கலாம் :

மக்களின் ஜனாதிபதி என்று பெயர் எடுத்தவர். ஜனாதிபதிக்கான இலக்கணத்தையே மாற்றியவர். அதுவரை மக்களைப் பார்த்து வெறுமனே கை ஆட்டிச் செல்லும் முந்தய ஜனாதிபதிகளின் வழக்கத்தை மாற்றி மக்களுடன் மக்களாக கலந்தவர். இந்தியாவின் அக்னி ஏவுகணையின் தந்தை. போக்ரான் அணுகுண்டு சோதனைக்கு மூளையாக இருந்தவர். இவர் ஜனாதிபதியாக ஆவதற்கு முன்பே மக்களின் மனதில் இடம் பிடித்தவர். அதனாலையே வாஜ்பாய் தலைமையிலான அரசு இவரை ஜனாதிபதியாக ஆக்கியது. தான் செல்லும் இடங்களிலெல்லாம் மாணவர்களை சந்தித்து அவர்களை ஊக்கம் ஊட்டியவர். 2020 இல் இந்தியா வல்லரசாக வேண்டும் என்று கனவு காண்பவர். ஜனாதிபதி பதவியை கொண்டு நாட்டை முன்னேற்ற தன்னால் ஆன அனைத்து காரியங்களை செய்த ஒரே ஜனாதிபதி. அப்பழுக்கற்றவர். இவருடைய நாட்டுப்பற்று குற்றம் குறை கூற முடியாத ஒன்று. ஒரு இந்தியன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்குபவர். இந்தியாவின் civilian துறையில் வழங்கப்படும் மிக உயரிய விருதான பாரத் ரத்னா விருதை பெற்றவர் . வெளிநாட்டவர்கள் இந்திய பிரதமராகக் கூடாது என்று இவர் கூறியதாலையே சோனியா காந்தி பிரதமராக முடியவில்லை என்று கூறுவோரும் உண்டு.

டாடா
குடும்பம்:


எனக்கு டாடா குடும்பமே ரொம்ப பிடிக்கும். டாடா குடும்பம் நேர்மைக்கு பெயர் பெற்றது. அவர்கள் என்றைக்குமே இந்தியாவையே முன்னிறுத்தியவர்கள். இந்தியாவின் தொழில் வளர்ச்சிக்கு முன்னோடிகள். அவர்கள் என்றுமே குறுக்கு வழியில் செல்லாதவர்கள் என்று பெயர் பெற்றவர்கள். சிறிது நாட்களுக்கு முன் கூட ரத்தன் டாடா தாங்கள் மீண்டும் விமான சேவை தொடங்க எண்ணியபோது அப்போது விமானத்துறை அமைச்சராக இருந்தவர் எங்களிடம் 15 கோடி லஞ்சம் கேட்டார். லஞ்சம் கொடுக்க விரும்பாததாலையே நாங்கள் விமான சேவை தொடங்குவதை கைவிட்டோம் என்றார். இவ்வாறு டாடா என்றுமே நேர்மைக்கு பெயர் பெற்றவர்கள். அவர்களின் இந்திய நாட்டுப்பற்று குற்றம் குறை கூற முடியாதது.

மகாகவி
பாரதி :பாட்டுகொரு பாரதி . தன் தீக்கங்கும் பாடல்களின் மூலம் விடுதலை உணர்வை மூட்டிய மகாகவி. பாரத மாதாவின் மேல் மிகப் பெரிய பற்று கொண்டவர். அவர் தன்னுடைய சொந்த வாழ்க்கையில் பல இன்னல்களையும் சந்தித்தாலும் தன் சுதந்திர உணர்வில் எந்த ஒரு compromise உம் செய்து கொள்ளாதவர். தன் தாய் மொழியாம் தமிழின் மேல் மிகப் பெரிய பற்று கொண்டவர். தன் தமிழ் மொழி மிகச் சிறந்த மொழி என்று ஆழமாக கருதியவர். தெலுகு, பெங்காலி, ஹிந்தி, சமஸ்கிரதம், கட்சி, பிரெஞ்சு மற்றும் ஆங்கில மொழி தெரிந்தவர். பல மொழிகளிலிருந்து தமிழுக்கு பல நூல்களை மொழி பெயர்த்தவர். அவர் நாட்டுப்பற்றை மட்டும் ஊட்டியதோடல்லாமல் சமுதாயத்தில் விளங்கிய சீக்குகளையும் சாடினார். மிகச் சிறந்த நாட்டுபற்று பாடல்களையும், சமுதாயப் பாடல்களையும், குழந்தைகளுக்கான பாடல்களையும், கர்நாடக சங்கீதத்திற்கான பாடல்களையும் பாடினார். மக்கள் கவிஞராக இருந்த பாரதியின் இறுதி யாத்திரையில் 14 பேரே கலந்துகொண்டது துரதிஷ்டவசமானது.

பாண்டிய
பேரரசர்கள் :


நான் மதுரைக்காரன் என்பதால் எனக்கு இயல்பாகவே பாண்டியர்கள் மீதும் , மதுரை மண்ணின் மீதும் ஈர்ப்பு உண்டு. தமிழ்நாட்டை ஆண்ட முப்பெரும் வேந்தர்களில் ஒருவர். சங்கம் வைத்து தமிழ் வளர்க்க பாடுபட்டவர்கள். இவர்களின் ஆட்சியில் தமிழ் நன்கு வளர்ந்தது.

No comments: