Monday, May 24, 2010

அப்பா


என்னுடைய
கல்லூரி தோழர்கள் தங்களுடைய அப்பாவை பிடிக்காது என்று கூறும் போது எனக்கு ஆச்சரியமாக இருக்கும் . எப்படி இவர்கள் அப்பாவைப் பிடிக்காது என்று கூறுகிறார்கள் என்று வியப்பேன். ஏனெனில் எனக்கும் மதுவுக்கும் அமைந்த அப்பா அப்படிப்பட்டவர். அவர் அதிர்ந்து கூட எங்களிடம் பேசியதில்லை. எங்கள் தோழர்கள் அப்பாவை எல்லாம் பிடிக்காது என்று கூறியதில் ஆச்சரியம் இல்லை என்பது எங்களுக்கு வெகு நாட்களுக்குப் பிறகே தெரிந்தது. பெரும்பாலான அப்பாக்கள் தங்கள் பிள்ளைகளுக்கு பிடிக்காத மாதிரிதான் நடந்து கொண்டார்கள் என்பது வெகு நாட்களுக்குப் பிறகே நாங்கள் உணர்ந்தோம். ஏனெனில் நாங்கள் இருவரும் உலகில் உள்ள அப்பாக்கள் அனைவரும் எங்கள் அப்பாவைப் போன்றவர்கள் என்றே எண்ணி இருந்தோம். உலகில் உள்ள அப்பாக்கள் அனைவரும் எங்கள் அப்பாவைப் போன்று இல்லை என்பதை உணரவே எனக்கும் மதுவுக்கும் வெகு நாட்கள் ஆனது. இத்தனைக்கும் எங்கள் அப்பா சாதாரண வேலையில் இருந்தவர் இல்லை. அவர் தபால் துறையில் IPS அதிகாரியாக இருந்து ஒய்வு பெற்றவர். ஆனால் அவருடைய நடத்தையில் அப்படி காட்டிக்கொள்ளவே மாட்டார்.

எங்கள் அப்பாவைப் போன்ற அப்பாக்களைக் காண்பது அரிது என்ற உண்மையை அறியவே எங்களுக்கு வெகு நாட்கள் ஆனது. எங்கள் அம்மாவும் அப்பாவும் அரசாங்க வேலையில் இருந்தததால் இருவருக்கும் பணி மாற்றம் நிகழ்ந்து கொண்டே இருக்கும். இருவரும் வெவ்வேறு இடத்தில் பணி புரிவது சாதாரண நிகழ்வானது. இதானாலையே நாங்கள் எங்கள் அப்பாவுடன் கழித்த நாட்கள் வெகு குறைவே. நானும் மதுவும் எங்கள் அம்மாவுடனே கழித்ததால், எங்கள் வாழ் நாளில் பாதி நாட்களை நாங்கள் எங்கள் அப்பாவுடன் கழித்ததே இல்லை.

எங்கள் அப்பா எங்களிடம் காட்டிய அன்பிற்கு, அவர் எங்களைப் பிரிந்திருந்ததே காரணம் என்றால் அதனை நான் ஏற்றுக் கொள்ளவே மாட்டேன். அவருக்கு இயல்பாகவே எங்களிடம் அன்பு இருந்தது. அவர் எங்களை ஒரு நாள் கூட திட்டியதில்லை. அவர் எங்களை எங்கள் போக்குகே விட்டார். எங்கள் வீட்டில் எனக்கும் மதுவுக்கும் முழு சுதந்திரம் இருந்தது. நாங்கள் கல்லூரி பயின்ற நாட்களில் எங்களுக்குத் தேவையான பணத்தை நாங்களே எங்கள் லாக்கரிலிருந்து எடுத்துக் கொள்வோம் . யாரிடமும் கணக்கு சொல்ல வேண்டியதில்லை. அவ்வளவு சுதந்திரம் கொடுத்திருந்தார்கள் எங்கள் அப்பாவும் அம்மாவும். நானும் மதுவும் கஞ்சத்தனமாய் இல்லாமல் இருப்பத்தர்க்கும், பணத்தின் பின்னால் ஓடாமல் இருப்பத்தர்க்கும் இதுவே காரணம். நான் இன்றளவும் எங்களுக்கு இருக்கும் நல்ல குணங்களில் ஒன்றாக கருதுவது இதைதான்.

எனக்கும் மதுவிற்கும் எங்கள் வாழ்நாளில் சிறந்த நாட்கள் என்றால் அது நாங்கள் எங்கள் அப்பாவுடன் விவரம் தெரிந்து பழகிய நாட்களே. அப்பொழுது நாங்கள் ராமநாதபுரத்தில் குடி இருந்தோம். அப்பொழுது தான் வெகு காலத்திற்குப் பிறகு எங்கள் அப்பாவும் அம்மாவும் ஒரே இடத்தில் பணி புரிந்த்தனர். நான்,மது ,அப்பா,அம்மா அனைவரும் வெகு நாட்களுக்குப் பிறகு ஒன்றாக குடி இருந்தோம். அப்பொழுதுதான் நாங்கள் எங்கள் அப்பாவை உண்மையாக புரிந்து கொண்டோம். அப்பொழுது அவர் ராமநாதபுர மாவட்டத்திற்கு தலைமை தபால் அதிகாரியாக இருந்தார். வேலையில் மிக கண்டிப்பானவர் , ரொம்ப நேர்மையானவர், ரொம்ப சின்சியர் வோர்கர். காலையில் 9 மணிக்கு அலுவலகம் திறந்தால், 9 மணிக்கு அலுவலகத்தில் இருப்பார். அதேபோல் இரவு அலுவலகத்திலிருந்து அனைவரும் சென்றபிறகு வெகு நேரத்திற்குப் பிறகே வீடு வருவார். எங்கள் அப்பாவைப் பார்த்து நான் admire ஆன விசயங்களில் பணியில் அவருடைய நேர்மை, sincerity யும் சில. பொதுவாக பெண் பிள்ளைகளுக்கு அப்பாவையும் ,ஆண் பிள்ளைகளுக்கு அம்மாவையும்தான் ரொம்ப பிடிக்கும் என்பது வழக்கு. ஆனால் இங்கு எங்களுக்கு இருவரையுமே ரொம்ப பிடிக்கும் அதிலும் அப்பாவைதான் ரொம்ப பிடிக்கும் .

எங்களுடைய தேர்வு நாட்களில் எங்கள் அப்பாவும் அம்மாவும் மாறி மாறி இரவில் கண் விழித்து தேர்விற்கு படித்துக்கொண்டிருக்கும் எங்கள் இருவருக்கும் துணை இருப்பார்கள்.

எங்கள் அப்பா, வீட்டில் தான் ஆண் என்றோ, அலுவலகத்தில் பெரிய அதிகாரி என்றோ கர்வம் கொள்ளாதவர். எந்த ஒரு கெட்ட பழக்கமும் இல்லாதவர். நான் பல தடவை நினைப்பதுன்டு, நான் எங்கள் அப்பாவுடன் சேர்ந்து இன்னும் பல காலங்களைக் கழித்திருந்தால் நானும் மதுவும் இன்னும் நன்றாக இருந்திருப்போம் என்று. அவர் மிகச் சிறந்த அறிவாளியும் கூட. ஆங்கிலத்திலும் கணக்கிலும் அவ்வளவு ஞானம் கொண்டவர். எனககு இன்றும் நல்ல ஞாபகம் இருக்கிறது. நான் ஒரு தடவை மதுவிடம் உனக்கு ஒத்தப்படை எண் பிடிக்குமா இல்லை இரட்டைப்படை எண் பிடிக்குமா என்று கேட்டேன். அதற்க்கு அவன் நான் இதே கேள்விய அப்பாவிடம் கேட்டேன், அதற்க்கு அப்பா என்ன பதில் சொன்னாங்க தெரியுமா?. நானும் என்ன பதில் சொன்னாங்க என்று கேட்டேன். அப்பா, ஒத்தப் படை எண் தான் பிடிக்கும்னாங்கடா. அதற்க்கு ஏன் ஒத்தப் படை எண் பிடிக்கும்னு கேட்டேன். அதற்க்கு அப்பா, ஏன்னா அதுலதான் நம்பர் 1 இருக்குனாங்கடா என்றான் . இப்படி எங்க அப்பா எப்பொழுதும் நம்பர் 1 ஆக இருக்க விரும்பினாங்க.

எங்கள் அப்பாவிற்கும் மதுவை விட என்மேல் பாசம் அதிகம். அதில் எனக்கு கர்வமே உண்டு. தங்கள் பிள்ளைகளுக்காக எதையும் செய்தார். அவ்வளவு பாசக்காரர்.நானும் மதுவும் கல்லூரியில் படித்த காலத்தில் எங்கள் அப்பா எங்களுடனே சென்னையில் குடி இருந்தார். அப்பொழுது எங்களுக்கு அவரே சமைத்துப் போட்டார் .. எங்களுடைய கல்லூரித் தோழர்களில் பலருடைய அப்பாக்கள் மற்ற கல்லூரித் தோழர்களை தங்கள் வீட்டிர்க்குள்ளவே அனுமதிக்காத போது, எங்கள் அப்பா , எங்களுக்கு மட்டுமல்ல எங்கள் வீட்டிற்கு வரும் நண்பர்களுக்கும் சேர்த்தே சமைப்பார்.

நானும் மதுவும் கல்லூரி முடித்த பிறகு பல கம்பெனிகளில் முயன்று கொண்டிருந்தோம். அப்பொழுது TCS இல் நான் HR interview வரை சென்று இறுதியில் பணி கிடைக்காமல் போனேன். அதனால் நான் ரொம்ப உடைந்து போயிருந்தேன். இது எங்கள் அப்பாவை ரொம்ப வருத்தத்திற்கு உண்டாக்கியது. என் மேல் ரொம்ப பாசம் அதிகம் என்பதால், அவர் ரொம்ப வருத்தப்பட்டார். எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது அன்று ஆகஸ்ட் 4 ஆம் தேதி. எனக்கும் மதுவிற்கும் AdventNet இல் தேர்வு இருந்த்தது. நாங்கள் கிளம்பும்போது எங்கள் அப்பா என்னிடம் "சிவா, வருத்தப்படாதடா , இன்னைக்கு test எழுதிட்டு வந்திரு. உன்னை நான் எப்படியும் HR interview க்கு தயார் படித்திர்ரேன். கவலைப்படாம போயிட்டு வா." என்றார்.

அன்று நானும் மதுவும் AdventNet இல் தேர்வு எழுதிவிட்டு காண்டீனில் எங்கள் அண்ணாவுடன் பேசிக்கொண்டிருந்தோம். அப்பொழு எங்கள் அம்மா எங்கள் அண்ணனிற்கு போன் பண்ணி, எங்கள் அப்பா accident ஆகி விட்டார் என்று கூறி எங்களை சீக்கிரம் அந்த இடத்திற்குப் போகச் சொன்னார். அங்கு போய் பார்த்தால், எங்கள் அப்பா மீது இருசக்கர வாகனம் மோதி, பற்கள் எல்லாம் உடைந்து, இரண்டு முழங்கால்களும் உடைந்து போய் ambulance இல் இருந்தார். பிறகு எங்கள் அப்பாவை குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு accident formalities முடிக்க கொண்டு சென்றார்கள். அங்கு எங்கள் அப்பா கூறியது இன்னும் ஞாபகம் இருக்கிறது "என்னை சீக்கிரம் ஆஸ்பத்திரிக்கு கொண்டு போங்கடா" என்றார் . அங்கிருந்து அவரை அப்போல்லோ ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றோம். அங்கு அவர் என் கண் முன்னே ரத்த வாந்தி எடுத்தது எனக்கு இன்னம் ஞாபகம் இருக்கிறது. அங்கு அவர் ஆகஸ்டு 13 ஆம் தேதி மரணமடைந்தார்.

இன்று எங்கள் அப்பாவுடைய 65 ஆவது பிறந்தநாள். We miss you dad. we love you so much. உங்களுக்கு நாங்கள் செய்வது என்ன செய்வது கைமாறாக இருக்குமென்றால், உங்களைப் போல் எங்கள் அம்மாவிற்கு நல்ல பிள்ளையாய், மனைவிக்கு நல்ல கணவனாய் பிள்ளைகளுக்கு நல்ல தகப்பனாய் இருப்பதே ஆகும் .

We love you . We need you so much . Your soul may rest in peace.

Photo courtesy : http://ecx.images-amazon.com/images/I/515AdWWSVYL.jpg

8 comments:

அமைதி அப்பா said...

நல்ல பகிர்வு.

உங்கள் அப்பா, உங்கள் நினைவுகள் வழியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
நானும் ஒரு நல்ல அப்பாவாக வழ முயற்சித்துக் கொண்டிருக்கிறேன்.

உங்களுடைய இந்த பதிவை படித்தப் பின்பு என்னைப்போல் பலர், நல்ல அப்பாவாக முயற்ச்சி செய்வார்கள்.
தொடர்ந்து இதுபோன்று, உங்கள் அப்பாவைப் பற்றிய நினைவுகளை எங்களிடம் பகிர்ந்து கொள்ளவும்.

நன்றி.

Devaraj Rajagopalan said...

ஒரே நேரத்தில் பல இன்னல்கள். அப்பொழுதுதான் கல்லூரி வாழ்கை முடிந்து இருந்தது, நண்பர்கள் அனைவரும் ஆளுக்கு ஒரு புறம் என்று பிறிந்து சென்றோம். கலோரி வாழ்கை முடிந்து வேலை தேட வேண்டும் நிஜ வாழ்கைக்கு வரவேண்டும். அதே TCS நேர்முக தேர்வில் இல் நானும் செலக்ட் ஆகாமல் மனம் நொந்து கொண்டு இருந்த நேரம். இப்படி பல இக்கட்டான நேரத்தில், சிறிதும் எதிர் பாராத ஒரு பெரும் இழப்பை மனதில் ஏற்றுகொண்டு வாழ்கையை தொடர்வது மிகவும் கடினமான ஒன்று. இதை நினைத்து பார்த்தல் நான் இப்பொழுதே இந்தியாவிருக்கு சென்று என்னுடைய பெற்றோர்களை பார்க்க வேண்டும் போல் இருக்கிறது. தினமும் தவறாமல் நான் வீட்டிற்கு தொலை பேசியில் அழைத்து அம்மாவுடன் பேசுவேன். எனக்கு என்னுடைய அம்மா அப்பாவை இங்கு அழைத்து வர வேண்டும் என்று தீராத ஆசை. அவர்கள் இந்த நாட்டை சுற்றி பார்க்கவேண்டும் என்று எனக்கு ஆசை. நான் சிறு பிள்ளையாக இருக்கும் போது எங்க அப்பா என்னுடைய அம்மாவையும் என்னையும் நிறைய இடங்களுக்கு அழைத்து செல்வார். நான் ஒன்றாம் வகுப்பு படிக்கும் போதே என்னை வட இந்தியாவில் ஆக்ரா, ஹரித்வார், ரிஷிகேஷ், ராமர் ஜென்ம பூமி, மதுரா, புத்த கைய்-யா ( Bodh Gaya ), தென் இந்தியாவில் ராமேஸ்வரம், கன்னியாகுமரி என்ன்று பல இடங்களுக்கு அழைத்து சென்றார். அப்பொழுது அவர் என்னக்கு சொன்னது நீ பெரியவனாகி எங்கள இது மாறி கூட்டிட்டு போவிய என்ன்று தான். அதை கண்டிப்பாக நான் நிறவேற்ற வேண்டும். இது தான் என்னுடைய வாழ்கையின் முதல் இலட்சியம், நான் செய்யும் அனைத்து வேலைகளும் இதனை சார்ந்தே அமையும். உங்கள் அப்பாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.

Haripandi Rengasamy said...

@ அமைதி அப்பா

உங்களுடைய பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி . நிச்சயம் எங்கள் அப்பாவைப் பற்றி இன்னும் வரும் பதிவுகளில் எழுதுவேன்.

@ தேவராஜ்

உன்னைப் போல் நானும் பல கனவுகள் கொண்டிருந்தேன் தேவா ..அவற்றை நிறைவேற்ற முடியாமல் போய்விட்டது ... உன்னுடைய லட்ச்சியம் நிறைவேற என்னுடைய வாழ்த்துக்கள் ...

Devaraj Rajagopalan said...

உன்னுடைய வாழ்த்துக்களுக்கு நன்றி. உன்னுடைய தந்தையின் இழப்பை ஈடு செய முடியாது தான். நண்பர்களாகிய நாங்கள் தான் உன்னுடன் இந்த பதிவுகளின் மூலமும் ஈமெயில் போன் மூலமாகவும் உன்னுடைய இலட்சியங்கள், ஆசைகள், ஆதங்கங்களை பகிருந்து கொள்ளுவோம். உன்னுடைய தந்தை இபோழுது இருந்து இருந்தால் உன்னுடன் இன்னமும் குறைந்தது முப்பது ஆண்டுகள் இருந்து இருப்பார். இந்த முப்பது ஆண்டுகள் நீ உண் தந்தை உன்னுடன் இருபது போல் நினைத்து கொண்டு நீ செய்ய நினைத்ததை செய்ய வேண்டும். நீ செய்வது உன்னுடைய அம்மா, மது பிற்காலத்தில் உன்னுடைய மனைவி மற்றும் மக்கள் அவர்களுக்கு வெளிப்படையாக தெரியும். உன்னுடைய தந்தைக்கு மறைமுகமாக தெரியும், அந்த திருப்தி உனக்கு சிறிது சந்தோஷத்தை அளிக்கும்.

நறுமுகை said...

ஹாய் நண்பரே..

தங்களின் வலைப்பூவை எங்களுடன் பகிர்ந்து கொண்டு உங்களின் படைப்புகள் மேலும் பலருக்கு செல்ல வாய்ப்பளியுங்கள்.


www.narumugai.com

Shankar.Nash said...

Tats a very touching post da... didnt expect the tragic end... Its a great guidance for many people as to how they have to behave to their children. Believe you two grow up to be like him.

virutcham said...

இந்த முடிவை எதிர்பார்க்க வில்லை. உங்கள் நினைவுகளில் அப்பாவின் காலம் பசுமையாக இருப்பதே அவர் வாழ்வதை உணர்த்துகிறது.

http://www.virutcham.com

Anandkrishnamurthy said...

பாண்டி,

எப்பொழுதும் அப்பா சொல்வது எல்லாருக்கும் கசக்கும், ஆனால் அவர் இல்லாமல் போனால் அவர் சொன்ன விடயங்கள் நினைவில் வரும்பொழுது கண்ணீர் துளி மட்டுமே மிஞ்சும்...
என் தந்தை இப்பொழுது கூறும் பல நல்ல விடயங்கள் கசப்பாக இருப்பிணும் உங்கள் பதிவை பார்த்த பின் இன்னும் என் தந்தையை நான் புரிந்து கொள்ள வில்லை என்றே நினைக்கிறேன்.

-நன்றி.
ஆனந்த கிருஷ்ணமூர்த்தி.