Sunday, October 14, 2012

அகம்,புறம்,அந்தப்புரம் - விமர்சனம் - 3



லக்ஷ்மி  விலாஸ் அரண்மனை
அரண்மனை:
ஒவ்வொரு ராஜாவும் தங்கள் மனப்போக்குப் படி அரண்மனை அமைத்துக்கொண்டனர் . கொல்கட்டா போன்ற நகரங்களில் இருந்த அலங்காரக் கடைகள் இந்த மகாராஜாக்களை நம்பியே இருந்தன. பரோடாவின் அரண்மனை லக்ஷ்மி விலாசின் மதிப்பு இன்றைய நிலையில் 4000 கோடி ரூபாய். அது பங்கின்காம் அரண்மனையைப் போல மூன்று மடங்கு பெரியது !.

ராஜாக்கள் என்றாலே ஊதாரித்தனமாகத்தான் இருக்கவேண்டுமா என்ன?. கஞ்சத் திலகங்களும் இருக்கத்தான் செய்தனர். ஹைதராபாத் நிஜாம் ஒஸ்மான் அலிகான். மகா கஞ்சத் திலகம். தான் நிஜாம் ஆனதும் தன்னுடைய அப்பாவின் ஆசை நாயகிகளை , எதற்கு செலவு என்று விற்றுவிட்டார் . சில பேரை சில மூட்டை மாங்காய்க்களுக்கு !. நம் நிஜாம் எந்தப் பொருளையும் வீணாக்கமாட்டார்.ஒரு தடவை அவருடைய கைத்தடி உடைந்துவிட்டது. அதை ஒட்டுப்  போட்டுப் பயன்படுத்தினார். ஒரு முறை வைசிராய் ஹைதராபாத் வந்திருந்தபோது அதைப் பார்த்து விட்டு புது கைத்தடி ஒன்றை நிஜாமுக்கு பரிசாகத் தந்தார் . அதையும் நம் நிஜாம் மறுக்காமல் வாங்கிக் கொண்டார். ஒரு முறை இந்தியாவின் உள்துறைச் செயலாளராக இருந்த V.P. மேனன் அவரைச் சந்தித்தார். அப்பொழுது இருவரும் புகைப் பிடிக்கத் தொடங்கினர். நம் நிஜாம் ஊரிலேயே மிக மலிவான சார்மினார் சிகரட்டை பிடித்துக் கொண்டிருந்தார். மேனனோ காஸ்ட்லியான சிகரெட். மேனன் ஒரு courtesy க்காக  நிஜாமிடம் தன்னுடைய சிகரெட் பெட்டியை நீட்டினார். நம் நிஜாமும் மறுக்காமல் அதிலிருந்து நான்கைந்து சிகரெட் எடுத்து தன்னுடைய சிகரெட் பெட்டியில் வைத்துக் கொண்டார் . அடுத்து இரண்டு நாள் கழித்து மேனன் நிஜாமை திரும்ப சந்தித்த போது நிஜாமின்  சிகரெட் பெட்டியில் மேனன் கொடுத்த அதே சிகரெட்கள் அப்படியே இருந்தன !.

இதுதான் வழி என்று இல்லை நம் நிஜாம் பல வழிகளில் சொத்து சேர்த்தார். ஊரில் ஏதாவது புது காரைப் பார்த்துவிட்டால் மறுநாள் அந்தக் கார் நிஜாம் வீட்டில் இருக்கும் . தள்ளிக்கொண்டுவந்துவிடுவார் !. அவரிடம் இப்படி 50 க்கும் மேற்பட்ட விலை உயர்ந்த கார்கள் இருந்தன . ஆனால் அவர் தன் வாழ்நாள் முழுவதும் பயன்படுத்தியது ஒரு ஓட்டை உடைசலான காரைத்தான் !. ஊரில் இருக்கும் யாராவது அவர்கள் வீட்டில் நடக்கும் கல்யாணத்திற்கு கூப்பிட்டால் மறுக்காமல் கலந்து கொள்வார் . வரும்பொழுது கல்யாணப் பெண் அணிந்திருக்கும் விலை உயர்ந்த நகையைக் கொண்டுவந்துவிடுவார். ஏதேனும் விசேசங்களில் நிஜாம் அனைவருக்கும் முன்  சிலருக்கு தன் கையாலேயே மது நிரப்பிக்கொடுப்பார். அவர்களுக்கு பெருமை பிடிபடாது .ஆனால் நிஜாம் அதற்கு முன்பே அவர்களிடம் இதற்கு இவ்வளவு ரேட் என்று பேசி வாங்கிவிடுவார்.  இப்படி எல்லாவற்றிர்க்கும் ஒரு ரேட். இப்படிப்பட்ட நிஜாமின் புகைப்படத்தை ஒரு தடவை TIME பத்திரிகை தன் அட்டைப்படமாக வெளியிட்டது. ஏனென்றால் அன்றைய நிலையில் அவர்தான் உலகின் முதல் பெரும் பணக்காரர் !.

நம் மகாராஜாக்கள் பொழுதுபோக்கிற்கு அதிகம் விரும்பியது போலோ மற்றும் கிரிக்கெட். நம் பாட்டியாலா மகாராஜா பூபிந்தர் சிங் BCCI உருவாக முக்கிய காரணகர்த்தாவாக இருந்தவர். அவர் ஆதரித்தவர்களில் முக்கியமானவர் லாலா அமநாத்.

மகாராஜா பெண்ணு(களு)டன் அந்தப்புரத்தில் அந்தரங்கமாக இருக்கும்போது திரைக்குப் பின் ஒருவர் சத்தமாக கதை சொல்லிக் கொண்டிருப்பார் . காமக் கதை!. ராஜாவுக்கு mood வரணும்ல அதுக்குத்தான் !. ஒவ்வொரு மகாராஜாவும் அந்தப்புரம் வைத்திருந்தனர் . மகாராஜா என்றில்லை . ஊரின் பெரிய பணக்காரர்கள் , அமைச்சர்கள் தங்கள் அந்தஸ்திற்கேற்ப அந்தப்புரம் வைத்திருந்தனர். ஒரு அந்தப்புரத்தில் 300 பெண்கள் வரை கூட இருந்தனர், மகாராணி , ராணி முதல் ஆசைநாயகிகள் வரை !. ஓவ்வொரு பெண்ணிற்கும் அந்தப் பெண்ணின் அந்தஸ்திற்கேற்ப அவர்கள் அந்தப்புரத்தில் நடத்தப்பட்டனர். மகாராணிக்கு பெரிய ரூம், தங்கத்தட்டில்  30 , 40 வகை பதார்த்த உணவுகள். அடுத்து ராணிகளுக்கு சிறிய ரூம் , வெள்ளித்தட்டில் 15 , 20 பதார்த்த உணவுகள். ஆசை நாயகிகளுக்கு சாதாரணத் தட்டில் 10 பதார்த்த உணவுகள் , இப்படி. அந்தப்புரத்தில் மகாராணிதான் தலைவி. அவர் சொல்படிதான் அனைவரும் கேட்கவேண்டும்.  அந்தப்புரத்தில் ஆண்களுக்கு அனுமதி இல்லை. காவலுக்குக் கூட திருநங்கைகள்தான். மருத்துவர்கள் கூட அந்தப்புரப் பெண்களை பார்க்கக்கூடாது. அந்தப்புரப் பெண்களுக்கு முடியவில்லை என்றால் திரைக்கு பின்னால் உள்ள அவர்களின் கையில் ஒரு நூல் கட்டப்படும் . அந்த நூலைப் பிடித்து நாடி பார்த்து மருத்துவர் மருந்து கொடுப்பார்!. இப்படி முன்னூறு வரைக்கும் அந்தப்புரத்தில் பெண்கள் இருந்ததால் , மகாராஜாவால் பல பெண்களுடன் வருடத்திற்கு ஒரு முறை கூட அவர்களுடன் இருக்க முடியாது . ஏன் பல பெண்களுடன் மகாராஜா வாழ்நாளில் ஒரு முறைதான் கூட இருந்திருப்பார் . இப்படி இருக்கும் பெண்களுக்கு ஒரு குறிப்பிட்ட வயது வந்தவுடன் அவர்கள் அந்தப்புரத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்கள். அது மட்டுமல்ல பழைய ராஜா போய் அவர் மகன் புதிய ராஜாவாக வந்தவுடன் பழைய ஆசை நாயகிகள் வெளியேற்றப்பட்டார்கள். ராணிகளுக்கு மட்டும் பென்ஷன் வழங்கப்பட்டது.

மேலே சொன்ன அனைத்து விசயங்களும் அனைத்து சமஸ்தான ராஜாக்களுக்கும் பொருந்துவதில்லை. இந்தியாவில் அன்று 565 சமஸ்தானங்கள் இருந்தன. அவற்றில் இந்தியாவை ஆண்ட UK க்கு  இணையான நிலப்பரப்பு கொண்ட ஜம்மு காஷ்மீர் முதல் சில கிராமங்களையே உள்ளடக்கிய சமஸ்தானம் வரை இருந்தன.அதனால் மேற்கூறிய அனைத்து விசயங்களும் சமஸ்தானத்தின்  சமூக பொருளாதார நிலையையும் தனிப்பட்ட ராஜாக்களின் மனநிலையையும் பொறுத்து அமைந்தன.

இந்த புத்தகத்தில் இந்தியாவில் இருந்த முக்கியமான சமஸ்தானங்கள் பற்றி தனித்தனி அத்தியாயங்களில் இருக்கும். இந்த அத்தியாயங்கள் அந்த சமஸ்தானத்தில், முக்கியமாக அங்கிருந்த மகாராஜாவின் தனிப்பட்ட வாழ்க்கையில் நடந்த சுவாரசியமான நிகழ்ச்சிகள் பற்றி ஆரம்பிப்பதாக இருக்கும். அடுத்து அந்த சமஸ்தானம் எப்படி உருவானது , அதைத் தோற்றுவித்தவர் யார் என்ற சிறு அறிமுகத்துடன் அதை ஆண்ட மகாராஜாக்களின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி இருக்கும். அடுத்து அந்த சமஸ்தானத்தைப் பற்றிய சமூக , பொருளாதார நிலை , ராஜாக்கள் செய்த நல்ல , கெட்ட காரியங்கள் பற்றி இருக்கும். கடைசியில் அந்த சமஸ்தானம் இந்திய சுதந்திரத்துடன் இந்தியாவில் இணைவதுடன் முடியும். இந்த புத்தகத்தின் நோக்கமே ராஜாக்களின் தனிப்பட்ட வாழ்க்கைப் பற்றி விவரிப்பதுதான். இருந்தாலும் அந்த காலத்தில் நடந்த முக்கிய செய்திகளைப் பற்றியும் இருக்கும். எ. கா : ரோல்ஸ் ராய்ஸ் கார்கள். அந்த கார் எப்படி உருவானது , அது எந்த அளவிருக்கு சமூக அந்தஸ்தாக  விளங்கியது என்று முக்கியமான, நமக்கு அதிகம் தெரியாத விசயங்கள் இருக்கிறது. எனக்கு ராஜாக்களின் சமையலறை நடவடிக்கைகளையும் , அந்தப்புர hierarchy பற்றிச் சொல்லியதும் ரொம்ப பிடித்திருந்தது. இவை நாம் அறியாத விசயங்கள். அதோடு அந்தந்த காலகட்டத்தில் இருந்த பிரிட்டிஷ் கிங் மற்றும் ராணிகளை பற்றியும் வைசிராயகளைப் பற்றியும் நாம் தெரியாத விசயங்கள் உள்ளன . 

எனக்குத் தெரிந்து பிரிட்டிஷ் காலத்தில் வாழ்ந்த இந்த மகாராஜாக்கள் வாழ்க்கையை அதற்கு முன் வாழ்ந்த மற்ற மகாராஜாக்கள் அனுபவித்திருப்பார்களா என்பது  சந்தேகமே. இவர்களுக்கு தங்களின் மீது பிற ராஜாக்கள் படையெடுத்து வருவார்கள் இல்லை  தங்களுக்கு எதிரான புரட்சி பற்றியோ அல்லது ஆட்சிக்கவிழ்ப்பு நடக்கும் என்ற கவலையோ இல்லை. பிரிட்டிஷ் அரசிற்கு விசுவாசமாக நடந்துகொண்டால் போதும் அவர்கள் எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வார்கள், என்ன கொஞ்சம் செலவாகும் என்ற நம்பிக்கை இருந்ததால் அவர்களுக்கு எந்த கவலையும் இல்லை. அதனால் ஒரே ஜாலி ஜிம்கானாதான் :).

ஆனால் மகாராஜாக்களின் வாழ்க்கையும் அவர்களின் நடவடிக்கையும் அவர்களின் தனிப்பட்ட குணாதிசயங்களைப் பொறுத்தே அமைந்திருக்கின்றன. ராஜாக்களுக்கே உரிய உல்லாசம், டாம்பீகம் போன்ற குணங்கள் பெரும்பாலும்  common ஆக இருந்தாலும் அது ஒவ்வொரு ராஜாவைப் பொறுத்து மாறியது. சமஸ்தான வருமானத்தில் தன்னுடைய அழகான குதிரைப்படைக்கே 40% செலவழித்த ராஜாக்கள் மத்தியில்தான் மக்களின் நலனே முக்கியம் என்று வாழ்ந்த ராஜாக்களும் இருந்தனர். அந்தப்புரத்தில் 300 ஆசைநாயகிகள்  வைத்துக்கொண்ட மகாராஜாக்கள் இருந்த காலத்தில்தான் ஏகபத்தினி விரதனாக இருந்த ராஜாக்களும் இருந்தனர். வேட்டையில் ஆயிரம் புலிகளைக் கொன்ற ராஜாக்கள்  இருந்தபோது வைசிராயே வந்து தன் சமஸ்தானத்தில் இருந்த சிங்கங்களை வேட்டை ஆட அனுமதி கேட்டபோதும்  அதை மறுத்த மன்னர்களும் இருந்தனர். இப்படி அனைத்திலும் அனைவரும் தனிப்பட்டு விளங்கினர்.

இப்படி இவர்கள் எவ்வளவு உல்லாசமாக இருந்தாலும் அவர்களால் முழு சுதந்திரத்தோடு இருக்க முடிந்ததில்லை.  ராஜாக்கள் தான் விரும்பியபடி எல்லாம்  இருக்க முடிந்திருக்கவில்லை. எல்லாவற்றிக்கும் அவர்கள் பிரிட்டிஷின் அனுமதி அல்லது அங்கீகாரம் பெறவேண்டி இருந்தது . ஓவ்வொரு சமஸ்தானமும் அப்பகுதிக்கு என நியமிக்கப்பட்ட பிரிட்டிஷ் அதிகாரி ரெசிடென்ட் என்பவரால் கண்காணிக்கப்பட்டது . அவர் சமஸ்தானத்தில் நடந்த அனைத்து விசயங்களையும் வைசிராய்க்கு செய்திகளாக அனுப்பிக்கொண்டிருந்தார். இவர்கள் உல்லாசப்பயணமாக ஐரோப்பா போவதென்றாலும், தான் விரும்பிய பெண்ணை ராணி என்ற அந்தஸ்துடன் கட்டிகொள்வதற்கும், தன் மகனை அதிகாரப்பூர்வ வாரிசாக அறிவிப்பதற்கும் ரெசிட்டென்ட்டின் அனுமதி வேண்டும். அவர்கள் என்னதான் தலைகீழாக இருந்து தண்ணி குடித்தாலும் தான் விரும்பிய ஐரோப்பிய பெண்ணை ராணியாக அறிவிக்க முடியவில்லை. அந்த ஐரோப்பிய ராணிகளுக்கு பிறந்த பிள்ளைகளுக்கும் அங்கீகாரம் இல்லை.
ஐரோப்பிய பெண்களை  ஆசைநாயகிகளாக மட்டுமே வைத்துக்கொள்ளமுடியும். இப்படி எல்லா இடத்திலும் அவர்களுக்கு ஒரு செக் இருந்தது.

இருந்தாலும் மகாராஜாக்கள் உல்லாச வாழ்க்கைதான் வாழ்ந்திருக்கின்றனர். அதனால்தான் Air India , தன் பயணிகளைத் தான் மகராஜாக்களைப் போல் கவனித்துக் கொள்வேன் என்று காட்ட  தன் நிறுவனத்திற்கு 'Maharaja' symbol வைத்தது.

நிச்சயம் இந்த புத்தகம் நாம் அறியாத மகாராஜாக்களின் தனிப்பட்ட வாழ்க்கையையும் , சமஸ்தானத்தில் நடந்த முக்கிய நிகழ்சிகளையும் பற்றி அருமையாக கூறுகிறது . வரலாற்றைப் பற்றி அறிந்து கொள்வதில் ஆர்வம் உள்ளவர்களுக்கு மட்டுமல்லாது அனைவருக்கும் நல்ல புத்தகம்.

எனக்கு பிரிட்டிஷ் கால மகாராஜாக்களை விட அதற்கும் முந்தய காலகட்டத்து ராஜாக்களின் தனிப்பட்ட வாழக்கை, அப்பொழுது இருந்த சமூக , பொருளாதார நிலையைப் பற்றி தெரிந்து கொள்ள ஆசை. அது சற்றுக் கடினம் என்றாலும் குறைந்த பட்சம் medival காலத்து  ராஜாக்களைப்  பற்றியாவது  தெரிந்து கொள்ள ஆசை .

முற்றும்.

Friday, October 5, 2012

அகம்,புறம்,அந்தப்புரம் - விமர்சனம் - 2



சில ராஜாக்களின் உல்லாசம் அளவுக்கு மீறி சென்றது. சில சிறுபிள்ளைத்தனமானது. அப்படித்தான் பரத்பூர் மகாராஜா கிஷன்சிங். ஒரு நாள் அவர் தன்னுடைய கட்டிட எஞ்சினியர்களை கூப்பிட்டார். ஒரு புது நீச்சல் குளம் கட்ட வேண்டும் என்பது கட்டளை. நீச்சல் குளம் பற்றிய design எல்லாம் அவரே போட்டார். நீச்சல் குளத்தின் ஆழம் ரெண்டு அடி இருக்கவேண்டும் என்று கட்டளை இடப்பட்டது. கட்டி முடித்ததும் அதைச் சுற்றி மின் விளக்குகள் பொருத்தப்பட்டன. அதற்கு சந்தன படிக்கட்டுகள். பின்னர்  நாற்பது அழகான பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். படிக்கு இரு பதுமையாக நின்ற அவர்களின் கையில் விளக்குகள் கொடுக்கப்பட்டன. ராஜா குளத்தில் இறங்கியவுடன் பெண்களும் இறங்கினர். ராஜா ஒவ்வொருவரின் மேல் தண்ணீர் ஊற்றி விளையாடத் தொடங்கினார். எந்தப்  பெண் கடைசியாக தன் கையில் ஏந்திய விளக்கு அணையாமல் பாதுகாக்கிறாளோ அவளே வெற்றி பெற்றவள் . அவளுக்கு வெகுமதி அளிக்கப்பட்டது அத்துடன் அன்று ராஜாவின் படுக்கையறையை அலங்கரிப்பதும் அவளே !.

அன்று ராஜாக்கள் , என்றும் உற்சாகம் எங்கும் உல்லாசம் என்று இருந்துருக்கிறார்கள். உற்சாகத்துக்கு அவர்கள் தேர்ந்தெடுத்த மற்றொரு வழி  வேட்டை . ஆனா ஊனாவென்றால் வேட்டைதான். அவர்களின் சமஸ்தானத்தில் இருக்கும் மிருகங்களுக்கு ஏற்ப அவர்களின் வேட்டை விலங்குகள் வேறுபடும். புலி, மான், காண்டாமிருகம், காட்டுப் பன்றி இப்படிப் பல. புலிதான் பிரதானம். அதுவே அவர்களுக்குக் கவுரவம். இவர்கள் தாங்கள் வேட்டை ஆடுவதோடு அல்லாமல் வேட்டைத் திருவிழாவையும் நடத்துவார்கள். அதில் அருகிலிருக்கும் சமஸ்தான அரசர்கள் , பிரிட்டிஷ் அதிகாரிகள் அனைவருக்கும் அழைப்பு உண்டு.

பிரிட்டிஷ் அதிகாரிகளை குஷிப்படுத்த அவர்கள் அவ்வப்போது வேட்டைத் திருவிழா நடத்துவார்கள். தங்கள் நாட்டில் வெறும் ஓநாயையும், காட்டுப் பன்றியையும் வேட்டையாடியவர்களுக்கு புலி வேட்டையாட கசக்குமா என்ன?. வைசிராயிலிருந்து உள்ளூர் பிரிட்டிஷ் அதிகாரி வரை, பெரிய மகராஜா முதல் சிறிய ராஜா வரை அனைவரும் புலி  வேட்டையாடினார்கள். ஒரு புலியையாவது தங்கள் அரண்மனையில் பாடம் செய்து வைப்பது அவர்களுக்குப் பெருமை. புலி வேட்டை முடிந்ததும் தன் துணைவியுடன் புலி மேல் காலை வைத்து மறக்காமல் போட்டோ எடுத்துக் கொண்டார்கள். கூச் பிகார் மகாராஜா நிருபேந்திர நாராயணன் தன் வாழ்நாளில் 365 புலிகள், 438 காட்டெருமைகள் , 207 காண்டாமிருகங்கள் , 311 சிறுத்தைகளை வேட்டையாடினார். சர்குஜா மகாராஜா ஆயிரம் புலிகளுக்கு மேல் வேட்டையாடினார்.

புலி போன்ற பெரிய விலங்குகள் மட்டும் அல்ல . மற்றொரு முக்கியமான வேட்டை வாத்து. ஒரு குளத்தில் ஆயிரக்கணக்கான வாத்துகள் விடப்படும். வந்திருக்கும் விருந்தினர்கள் எல்லாம் டுமீல், டுமீல் என்று சுடுவார்கள். எத்தனை வாத்துகள் என்பது போட்டி.

Hunting in India - Tiger hunt with elephants
 இப்படி புலி வேட்டை ஆடியவர்களின் வாழ்நாள் கனவு ஒன்று இருந்தது அது சிங்க வேட்டை . ஆசியாவிலேயே ஒரே ஒரு இடத்தில்தான் சிங்கம் இருந்தது. அது ஜுனாகத்(கிர் காடுகள்). நாம் பத்தாம் வகுப்பு பாடப் புத்தகத்தில் படித்திருப்போமே, இந்தியாவுடன் சேர மறுத்து பாகிஸ்தானுடன் சேர கையொப்பமிட்ட சமஸ்தானம் ஜுனாகத் என்று. அதே சமஸ்தானம்தான். பிரிட்டிஷ் அதிகாரிகள் , மகாராஜாக்கள் என்று அனைவரும் சிங்க வேட்டை என்றால் ஜுனாகத்துக்கு கிளம்பி விடுவார்கள். ஒரு கட்டத்தில் ஜுனாகத்தில் இருந்த சிங்கங்களின் எண்ணிக்கை 12 ஆக குறைந்துவிட்டது . அதற்கடுத்து ஜுனாகத்தின் மகாராஜாக்கள் சிங்க வேட்டைக்குத் தடை விதித்தார்கள். வைசிராயக்குக் கூட அனுமதி இல்லை. இன்று அவர்களால்தான் ஆசியாவிலேயே கிர் காட்டில் மட்டும் இருக்கும் சிங்கங்களின் எண்ணிக்கை  300 .

ஒரு ராஜாவின் சமயலறையில் உள்ளூர் சமையல் முதல் உலக சமையல் வரை சமைக்கப்பட்டது. குறிப்பாக இந்திய முகலாய சமையல் . ஐரோப்பியர்களின் வருகைக்குப் பின் ஐரோப்பிய பாணி சமையலும் செய்யப்பட்டது. இதற்கென்று தனி chef கள் இந்தியாவெங்கும் இருந்தும் ஐரோப்பாவிலிருந்தும் வரவழைக்கப்பட்டனர். காலை, மதியம், இரவு உணவு தயாரிக்க என்று தனித் தனிக் குழுக்கள். அதேபோல் சிறப்பு உணவுக்கு என்று தனிக்குழு. சிறப்பு விருந்துகளில் 100 வகை பதார்த்தங்கள் வரை செய்யப்பட்டன .

 ராம்பூர் நவாப் ஹமித் அலிகான் சாப்பாட்டு பிரியர். அவருடைய சமயலறையில் முன்னூறு சமயல்காரர்கள் இருந்தனர். அவர் அனைத்து உணவுகளையும் சாப்பிட்டு விட்டு ஆற அமர நிறை குறைகளை கூறுவார்.

ஹமித் அலிகான் சாப்பாட்டுப் பிரியர் என்றால் செயலானா சமஸ்தான மகாராஜா துலிப் சிங் , நளபாகன். அவர் இந்தியாவில் எங்கும் சமைக்கப்பட்ட அனைத்து உணவுகளின் செய்முறையையும் தெரிந்து கொள்ள ஆசைப்பட்டார். அவரை மற்ற ராஜாக்கள் தங்களின் சமையல்கட்டு வரை சென்று வர அனுமதித்தனர். அவர் மற்ற சமஸ்தான சமயல்காரர்களிடம் பக்குவம் பற்றி விசாரிப்பார். கேட்பது ராஜாவாகவே இருந்தாலும் தொழில் ரகசியத்தை சொல்லி விடுவார்களா என்ன?. எதையாவது சொல்லி ஒப்பேற்றுவார்கள். ஆனா நம்ம மகாராஜா தில்லாலங்கடி. அவர் கையோடு கொண்டு சென்ற அஞ்சறைப் பெட்டி போன்ற ஒரு மசாலாப் பெட்டியில் இருக்கும் மசாலாப் பொருள்களைக் கொண்டு சமையல் செய்யச் சொல்லிவிட்டு வெளியே போய் விடுவார். அந்த மசாலாப் பெட்டியில் உள்ள பொருட்கள் எல்லாம் முன்னரே துல்லியமாக எடை போடப்பட்டவை. அதில் குறைவதை வைத்து அவர் உண்மையான பக்குவம் கண்டுபிடித்துவிடுவார் !.

அடுத்து ராஜபுத்திர இளவரசிகள் சமையலறைக்குள் நுழைய அனுமதி கிடையாது. ஏனென்றால் அவர்கள் பிறந்த வீட்டின் சமையலைத் தெரிந்து கொண்டாள் புகுந்த வீட்டின் சமையல் பக்குவத்தை மாற்றிவிடுவார்கள் என்பதால் !.



மகாராஜாக்களின் உல்லாசத்திற்கு அளவே இல்லாமல் இருந்திருக்கிறது. தங்களுடைய செல்வாக்கையும் டாம்பீகத்தையும் காட்ட அவர்கள் எவ்வளவு வேண்டுமென்றாலும் செலவழித்தார்கள் . அதில் முக்கியமான ஒன்று ரோல்ஸ் ராய்ஸ் கார்கள். அந்தகாலத்தில் அவை மிகப் பெரிய தகுதிச் சின்னங்கள். ஒவ்வொரு ராஜாவும் போட்டிப் போட்டுக்கொண்டு ரோல்ஸ் ராய்ஸ் காரை வாங்கினார்கள். அதிலும் அந்தகார்கள் அவர்களுக்கென்று தனித்துவமாக வடிவமைக்கப்பட்டன. உள்வடிவமைப்பு முதல் அந்த கார்களின் நிறம் வரை மகாராஜாக்களுக்காக  பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டன. ஒரு மகாராஜா தன் ராணியின் பிங்க் நிற செருப்பை அனுப்பி அந்த நிறத்தில் கார் வேண்டுமென்றார். சிலர் கார் முழுவதும் வெள்ளியால் செய்து வாங்கிக்கொண்டனர். மற்றவர்கள் எல்லாம் கார்களில் தங்கள் அந்தஸ்தைக் காட்ட நம் பாட்டியாலா மகாராஜா பூபிந்தர் சிங் சொந்த விமானம் வாங்கி தன் அந்தஸ்தை உயர்த்திக்காட்டினார். ஆசியாவிலேயே முதல் விமானம் வாங்கியவர் அவர்தான்!.இந்த பூபிந்தர் சிங்கைப் பற்றி கதை கதையா உள்ளது. அதை புத்தகத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் . ஒரு கொசுறு : இந்த பூபிந்தரின் பேரன்தான் அமரிந்தர் சிங் . பஞ்சாப்பின் முன்னாள் முதல்வர் !.

தொடரும் ...

Photo Courtesy :

www.columbia.edu
ebay
http://www.logoi.com
http://desibbrg.com
bbc.com

Sunday, September 30, 2012

அகம்,புறம்,அந்தப்புரம் - விமர்சனம் - 1


அகம், புறம், அந்தப்புரம்

நான் அன்னைக்கு ஊரிலிருந்து வந்துகிட்டு இருந்தேன். எப்பயும் போல கைல ஒரு புக் வச்சு படிச்சுகிட்டு இருந்தேன். பக்கத்திலிருந்தவர் , சார் என்ன புக்கு சார் படிக்கிறீங்கன்னு கேட்டாரு. புத்தகத்தின் அட்டைய திருப்பிக் காட்டினேன்.  அட்டையில் கருப்பு வெள்ளை புகைப்படத்தில் ஒரு பெண் நிறைய நகைகளுடனும், அலங்காரத்துடனும் ஒரு ராஜா காலத்து கட்டிலில் ஒய்யாரமாக ஒருக்களித்துப் படுத்திருந்தாள். அட்டையில் 'அகம், புறம் , அந்தப்புரம்' என்றிருந்தது. படித்தவர் சிரித்துவிட்டு, நல்லாத்தான் இருக்கும் சார் என்றார். நான் சிரித்துவிட்டு சார், நீங்க நினைக்குற மாதிரிலாம் இருக்காது என்றேன்.

நம்மவர்க்கு எப்பொழுதுமே அந்தப்புரம் என்ற வார்த்தையில் ஒரு சிலிர்ப்பு இருக்கத்தான் செய்கிறது :) .  எப்பொழுதுமே பிரபலங்களின் தனிப்பட்ட வாழ்க்கையை தெரிந்து கொள்வதில் அனைவருக்கும் ஆர்வம் இருக்கத்தான் செய்கிறது. அவர்களும் எப்படித்தான் வாழ்ந்திருப்பார்கள் , வாழ்கிறார்கள் என்று தெரிந்துகொள்வதில் ஆர்வம்.


'அகம்,புறம், அந்தப்புரம்'  - குமுதம் ரிப்போட்டரில் இரண்டு வருடங்கள் தொடராக வந்தது. எழுதியவர் முகில் . நானும் இந்த புத்தகத்தை வாங்கி கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகிவிட்டாலும் இப்பொழுதான் படிக்க நேரம் கிடைத்தது. நமக்கு எப்பொழுதுமே ராஜா கதைகள் என்றாலே ஒரு ஈர்ப்பு உண்டு. பாட்டி சொல்லும் ராஜா கதைகள் வீரதீர சாகச கதைகளாகவோ அல்லது நீதிக் கதைகளாகவோ இருக்கும். பத்தாம் வகுப்பு பாடத்தில் statistics ஆகவும், அசோகர்  மரம் நட்டார் , குளம் வெட்டினார் என்றும்  இருக்கும். அதையும் தாண்டி ராஜாக்களை பற்றி நாம் அறிய முடிந்ததில்லை. அவர்களுக்கும் ஒரு தனிப்பட்ட வாழ்க்கை இருந்தது அதில் அவர்கள் எப்படி இருந்தார்கள் என்று பெரும்பாலும் நாம் அறிய முடிந்ததில்லை. அதை இந்த புத்தகம் தீர்த்து வைக்கிறது. இந்த புத்தகம் ஒரு ராஜாவின் அரண்மனையின்  அடுப்படியிலிருந்து அனுமதி மறுக்கப்பட்ட அந்தப்புரம் வரை அனைத்துப் பகுதிகளுக்கும் நம்மை அழைத்துச் செல்கிறது.

இந்த புத்தகத்துக்கான தலைப்பை நான் நிச்சயம் பாராட்டுவேன். ஆயிரம் பக்கத்து புத்தகத்தின் உள்ளடக்கத்தை மூன்றே வார்த்தைகளில் சொல்லிவிடுகிறது 'அகம்,புறம்,அந்தப்புரம்'. அகத்துக்கும் அந்தப்புரத்துக்கும் 66% மும் புறத்துக்கு 33% மும் கச்சிதமாகக் கொண்டிருக்கிறது. புத்தகத்தின் நடை - எதார்த்தமான நடை. எளிய புரிதல் உண்டு. ரொம்பவே ஜனரஞ்சகமானது. ஆனால் சில நேரங்களில் அந்த ஜனரஞ்சகமே இது எந்த அளவிற்கு உண்மை, எவ்வளவு கற்பனை என்பதை புரிந்து கொள்வதற்கு கஷ்டமாகிறது. எனக்கு எந்த ஒரு வரலாற்றுத் தகவலும் உண்மைக்கு மிக அருகில் இருக்க வேண்டும். ஜனரஞ்சகம் என்பதற்காகக் கூட நான் அதை சமரசத்திற்கு உள்ளாக்கமாட்டேன். இந்த புத்தகத்தில் வரும் வசனங்கள் எந்த அளவிற்கு உண்மையாக இருக்க முடியும் என்று தெரியவில்லை. இருந்தாலும் வரலாற்றின் மீது சாமானியர்க்கும் ஈர்ப்பை ஏற்ப்படுத்த  இது எல்லாம் தேவைப்படுகிறது.

இந்த புத்தக்கத்தைப் பற்றிப் பார்பதற்கு முன் அது நடந்த காலகட்டத்தைப் பற்றி தெரிந்து கொள்வது அவசியம். இந்த புத்தகம் சமஸ்தானத்து மகாராஜாக்களைப் பற்றியது. அதாவது பிரிட்டாஷிரின் ஆட்சியின் கீழ் சுமார் 1800 முதல் 1950 வரை இருந்த மகாராஜாக்களைப் பற்றியது. இந்தியாவில் அப்பொழுது மொத்தம் 536 சமஸ்தானங்கள்  இருந்தன. அவை அனைத்தும் பிரிட்டிசாருக்கு கட்டுப்பட்டே இருந்தன.

இனி புத்தகத்திலிருந்து -

நம்முடைய மகாராஜாக்களை காலையில் பள்ளி அறையிலிந்து எழுப்பி விட, அவர்களை குளிப்பாட்டி விட அவர்களுக்கு டிரஸ் மாட்டி விட இப்படி எல்லாத்திற்கும் பெண்கள். போனால் போகட்டும் என்று கால் கழுவிட மட்டும் ஆண்கள். அடுத்து சாப்பாடு, போரடித்தால் வேட்டை. இன்னும் போரடித்தால் போலோ, கிரிக்கெட்போன்ற விளையாட்டுக்கள். பிறகு மது. மாதுவிற்கு சொல்லவே வேண்டாம். சில மகாராஜாக்கள் பெண்களை கூட்டி வருவதற்கு என்றே தனி 'அமைச்சர்கள்' வைத்திருந்தார்களாம். பிறகு தூங்கச் செல்லுபோது ராகம் பாடி தூங்க வைக்க தனி ஆட்கள். நடுவில் என்றோ ஒருநாள் ஏதோ கொஞ்சம் மனசாட்சி இருந்து உறுத்தினால் மக்கள் பணி !.

இப்படித்தான் எல்லாம் மகாராஜாக்களும் வாழ்ந்திருக்கவில்லை. எல்லாரும் தனிப்பட்ட முறையில் அவர்களுடைய பழக்க வழக்கத்திற்கேற்ப வாழ்க்கை வாழ்ந்தார்கள் . மேற்சொன்ன பழக்க வழக்கத்தில் சில பேரின் பழக்க வழக்கங்கள் சில கூடும் குறையும் அல்லது அவை இல்லாமலேயே இருக்கும். ஆனால் மகாராஜாக்கள் என்றால் என்றால் மக்கள் நலன் கருதாத உல்லாச ஊதாரிகள் என்ற பொதுப் பிம்பம் மட்டும் உருவாகிவிட்டது. இந்த புத்தகத்தை படிக்கும்போது அந்த பிம்பம் ஒன்றும் தவறில்லை என்றே தோன்ற வைக்கிறது.
File:Baroda king on great sowari*.jpg
எல்லா மகாராஜாக்களுக்கும் முதல் திருமணம் நாடு போற்ற பெற்றோரின் ஆசீர்வாதத்துடன் நடக்கும். அடுத்த ராஜாவைப் பெற்றெடுக்கப் போகும் பெண்ணல்லவா அதனால் குலம் கோத்திரம் பார்த்தே பெண் பார்த்தார்கள். அதற்கடுத்து ராஜாவின் விருப்பதிற்கேற்ப பல பெண்கள். பெரும்பாலும் ஒரே மதத்தில் ஒரே குலத்தில்தான் எடுப்பார்கள். இவர்கள் அனைவரும் ராணி அந்தஸ்துப் பெரும் பெண்கள். ஆசைநாயகிகள் தனி. இதைத் தவிர ஐரோப்பிய பெண்கள். ஆம் அன்றைய நாளில் பல ராஜாக்கள் ஐரோப்பிய பித்து பிடித்து அலைந்தார்கள்.

பல இளவரசர்கள் படித்தது ஐரோப்பாவில், அதோட பலரும் மறக்காமல் வருடத்திற்கு ஒருமுறையாவது ஐரோப்பிய டூர் போனார்கள். அங்கு அழகான பெண்களைக் கண்டதும் காதல்தான். அடுத்து திருமணம். இவர்களை எந்த ஒரு ஐரோப்பிய இளவரசிகளும் கட்டிக் கொள்ளவில்லை. இவர்கள் கட்டிக் கொண்டதெல்லாம் சாதாரண பெண்கள் . பெரும்பாலும் பாரில் பார்த்த பெண்கள் , பாரில் நடனமாடிய பெண்கள் , நாடகத்தில் நடித்த பெண்கள் இப்படி அனைத்து ஐரோப்பிய பெண்களும் சாதாரணமானவர்கள்.
பெரும்பாலான ஐரோப்பிய பெண்கள் மகாராஜாக்ககளை பணத்திற்காக மட்டுமே திருமணம் செய்திருப்பதாக தெரிகிறது. அந்தப் பெண்களுக்கு 18 ,20 வயசு இருக்கும் . நம் மகாராஜாக்களுக்கோ 40 , 50 வயது இருக்கும் . கபுர்தலா மகாராஜா ஜெகத்சிங் தன்னுடைய ஐரோப்பிய காதலி Eugine மணந்து கொண்ட  போது அவருக்கு வயது 60.  அப்புறம் எப்படி இருக்கும். கபூர்தலா மகாராஜா ஜெகத் சிங் கட்டிய இரண்டு ஐரோப்பிய பெண்களும் அவருக்கு துரோகம் இழைத்தனர். ஆனால் எல்லா ஐரோப்பிய பெண்களும் அப்படி இல்லை. உண்மையாகவே மகாராஜாக்களை காதலித்து அவர்களுக்கு விசுவாசமாக இருந்த பெண்களும் இருந்திருக்கத்தான் செய்கிறார்கள். இந்தூர் மகாராஜா துகொஜி ராவ் கோல்கரின் ஐரோப்பிய மனைவி நான்சி அப்படிப்பட்ட பெண்தான். அவள்தான் மற்ற மகாராணிகளையும்  அவர்களின் குழந்தைகளையும் பார்த்துக் கொண்டாள். துகொஜியின் மரணப்படுக்கையில் அவருக்கு செவிலித்தாயாக இருந்து பார்த்துக்கொண்டாள். தன்னுடைய இறுதிக்காலத்திலும் தன் சொந்த நாட்டுக்குச் செல்லாமல் இந்தியாவிலேயே இருந்து 1998 இல் இறந்தார். இப்படிப்பட்ட ஐரோப்பிய பெண்களும் இருந்திற்குக்கத்தான் செய்தனர்.

மகாராஜாக்களுக்கு காதல் வந்தால் இந்தியப் பெண்ணாக இருந்தால் பெரும்பாலும் தூக்கி வந்து திருமணம் செய்து கொள்வார்கள். ஆனால் சிலமகாராஜாக்கள் தான் விரும்பிய பெண்ணை அவள் சம்மதத்துடன் கல்யாணம் செய்து கொள்ளவேண்டும் என்று ஆசை. மாகாராஜாவாக இருந்தால் என்ன , அவர் காதலித்தால் உடனே அந்தப் பெண்ணும் காதலிக்க வேண்டுமா என்ன ? .  மகாராஜாக்களின் காதலை நிராகரித்த பெண்களும் உண்டு. நம்ம நபா சமஸ்தானத்தின் மகாராஜா ரிபுதாமன் சிங் அப்படிப்பட்டவர்தான். அவருக்கு ஒரு பெண்ணைப் பார்த்ததும் காதல் பீரிட்டு வந்துவிட்டது. ஆனால் அந்தப் பெண் மறுத்துவிட்டாள். நம் மகாராஜா எவ்வளவோ தூது விட்டப் பார்த்தார். அந்தப் பெண் மசியவில்லை. இவர் தொல்லை தாங்காமல் அந்தப் பெண் ஊரை விட்டு குடும்பத்துடன் ஓடப் பார்த்தபோது அவளைக் கைது செய்து சிறை வைத்துவிட்டார். பிறகு அந்த சிறைக்கு ஒரு அன்பான சிறை அதிகாரி வந்தார். அந்தப் பெண்ணை cover செய்து காதல் செய்து கல்யாணம் செய்து கொண்டார். பார்த்தால் அவர்தான் நம் நபா மகாராஜா. பெண்ணிற்கு ஆனந்த கண்ணீர். தன்னை ஒரு மகாராஜா இந்த அளவிற்கு காதலிக்கிறாரே என்று ஆனந்தம். ஆனால் மோகம் முப்பது நாள் ஆசை அறுபது நாள் என்பது போல இது கொஞ்ச காலம்தான்.  ஆனால்  இந்த காதல் எல்லாம் சில காலம்தான். அடுத்து வேறு பெண். வேறு வேடம். வேறு நடிப்பு.

பொதுவாக இளவரசர்களின் முதல் திருமணத்திற்கு முன்பு 'அந்த' விசயத்தில் அவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படும். ஆமாம் வருகிற பெண் காறித் துப்பிவிட்டாள் அவமானம் அல்லவா :). இதற்கு என்று அதற்கான சிறப்புப் பெண்கள் நியமிக்கப்பட்டார்கள். கபுர்தலா பட்டத்து இளவரசர் ஜெகத்சிங். ஜெகத்சிங் படு குண்டு. அவருடைய எடையைக் குறைக்க பலரும் படாதபாடுபட்டார்கள். கல்யாணத்திற்குப் பிறகு அந்த விசயத்தில் அவர் சிரமப்படுவார் என்று பல பெண்களை வைத்து சிறப்பு பயிற்சி கொடுக்கப்பட்டது :).

தொடரும் ...

Thursday, July 19, 2012

Start ... Action .. Cut



குறும் படங்கள் பல பேரோட திறமைக்கும், ஆசைக்கும் தீனி போடுது. ஒரு கலைஞரா தன்னுடைய திறமைய காட்டுறதுக்கும், தனக்கான ஒரு identity card காகவும்  பல பேரு குறும்படங்களில் ஈடுபடுறாங்க. இன்னும் சொல்லப் போனா ரொம்ப பெரிய அளவுல திரைத்துறைல  ஈடுபடுறத்துக்கு விருப்பமோ அல்லது நேரமோ இல்லாதவங்க  தங்களுடைய கலை ஆசைய நிறைவேத்துறதுக்கு குறும்படம் மிகச் சிறந்த களம்.

சில குறும்படங்கள பாக்கும்போது ரொம்ப ஆசையா இருக்கு.  ஏன் இவ்ளோ அழகா  பெரிய திரைல படம் எடுக்க மாட்றாங்கனு தோணுது. அவ்ளோ அருமையா இருக்கு. ரசிகர்களோட ஆர்வம்  இல்ல கவனத்த சில நிமிடத் துளிகளே தக்கவைக்க வேண்டிய தேவைதான்  குறும்படங்களுக்கு , ஆனா அதே ஆர்வத்த ரெண்டர மணி நேரம் தக்க வைக்குறதுங்குறது கொஞ்சம் கஷ்டம்தான். குறும் படங்குறது பாயாசம் மாதிரி , கொஞ்சமா சாப்பிடலாம் . ஆனா அதையே சாப்பாடா சாப்பிட முடியாது. அது தான் சினிமா.

சில நிமிசங்கள்ள முடிஞ்சுரதுதான் குறும்படங்களோட பலமும் பலவீனமும். பலம் , அந்த சில நிமிசங்கள் மட்டும் ரசிகர்களின் கவனத்த தக்க வச்சா போதும் . பலவீனம் அதே சில நிமிசங்களுக்குள்ள ரசிகர்களோட  கவனத்த கவர்ந்திடணும். இங்க test match மாதிரி batsman field ல இறங்கி நாலஞ்சு ஓவரு மொக்க போட்டு form க்கு வர்றதுக்குலாம் time இல்ல , Twenty-20 மாதிரி சில பால்லயே form உக்கு வந்து six அடிக்கணும்.

குறைந்த விலையில் கிடைக்கும் தொழில்நுட்பங்களும் , Youtube மற்றும் Facebook போன்ற தளங்களும் இவர்கள் ரசிகர்களை அடைய ரொம்பவே உதவுது.

பல குறும்படங்கள பாக்கும்போது அது வெறுமனே சும்மா பொழுத கழிக்க ஏனோ தானோன்னு எடுத்தது மாதிரி தெரியல. அதுல அவ்ளோ மெனக்கெடல் இருக்கு. Music, Editing,Cinematography னு பல தளங்கள் கன்னா பின்னான்னு அட்டகாசமா இருக்கு. பெரும்பாலும் இந்த குறும்படங்கள் கதைக்குனு பெரிசா மெனக்கெடுறது இல்ல .பெரும்பாலும் அன்றாட நிகழ்ச்சிகள் தான் அவற்றின் கரு. ரசிகர்களை கவரனும், சிரிக்க வைக்கணும்,சந்தோசப்பட வைக்கணும்  . அவ்ளோதான் goal.

இந்த குறும்படங்களின் ஆகப் பெரிய கரு காதல், காமெடி. Youtube ல search பண்ணா , காதல் குறும்படங்கள கொட்டுது. அதுல பெரும்பாலும் பொண்ண கரெக்ட் பண்ணுறது, அதுல சொதப்புறது. அதுல வர்ற பிரச்சினைகள சுவாரசியமா சொல்லுறதுன்னு அழகா இருக்கு. இந்த காதல் குரும்படங்கல்லாம் லட்சம் hit லாம் அடிக்குது. குறும்புக் குறும்படங்களுக்கும் குறைவில்லை. அவங்களுக்கு நல்லா தெரியுது, தங்களுடைய audience , நெட்டு பக்கம் வர்ற  யூத்துதானு. சலிக்காம ரசிகர்களின் விருப்பத்த நிறைவேத்துறாங்க. இதத் தவிர Horror, Humanity முயற்சிகளும் இருக்கு.


வெறுமனே காமெடி மட்டும் இல்ல. சில படங்கள் ரொம்ப அழுத்தமா இருக்கு. police encounter பத்தி எடுத்த 'தோட்டா விலை என்ன ' ங்குற  படம் ரொம்ப அழுத்தமா இருக்கும். அதே மாதிரி 'புதியவன்' படமும் அழகா இருக்கும்.

இந்த குறும்படங்களுக்கு மிகப் பெரிய அங்கீகாரம் கொடுத்தது கலைஞர் டிவியின் நாளைய இயக்குனர் நிகழ்ச்சி. Great.

இந்த குரும்படங்கள்ள நடிகர்கள் தேர்வும் அருமையா இருக்கு. எனக்கு, காதலில் சொதப்புவது எப்படி?, கானல் நீர் போன்ற குறும்படங்களின் நாயகன் ஆதித்தும், நடந்தது என்னனா மற்றும் ஜீரோ கிலோமீட்டர் ஹீரோ கருணாவும்(கலகலப்பு படத்துல செல்போன தொலைக்குற அந்த மச்சான் கேரக்ட்டர்ல நடிச்சுருப்பார்ல அவர்தான்)  ரொம்ப பிடிக்கும். செமையா நடிக்குறாங்க. சான்சே இல்ல . அதே மாதிரி பிடிச்ச இயக்குனர் நளன். மேற்சொன்ன கடைசி ரெண்டு படங்களோட இயக்குனர். இவரோட படங்கள nalanish னு Youtube ல  search பண்ணி  நீங்க பாக்கலாம். எல்லாமே செம காமெடி மூவீஸ்.

ஹீரோயின் செலேக்சனும் அருமை. ரெஜினா கசண்ட்ரா, நிகழ்காலம் , திமிருக்கு மறுபெயர் நீதானே ?ஹீரோயின் பவித்ரா நாயர் அழகு. ரெஜினா அழகா நடிக்குறாங்க. பவித்ராக்கு நல்ல expressive கண்கள். துருதுருனு இருக்கு :)

இந்த குறும்படங்களை பாக்கும் போது ஒரு  கேள்வி  எழத்தான் செய்யுது. இந்த குறும்படங்கள  எடுக்குறதால அவங்க அடையுற லாபம் என்ன? . இதலாம் எடுக்குறதுக்கு  செலவுக்கு என்ன பண்றாங்க? . ஏன்னா இதனுடைய audience யாரும் இந்த குரும்படங்கள பாக்குறதுக்கு செலவு எதுவும் பண்றதில்ல. பின்ன எப்படித்தான் அவங்களுக்கு வருமானம் வருது?. தெரிஞ்சவங்க சொல்லுங்க.

நான் ரசித்த சில குறும்படங்கள்

நிகழ்காலம்
பொண்ணோட expression சூப்பரா இருக்கும் . கடைசில அந்த பய்யன் சொல்ற 'அடி ஆத்தி ஒரு பொண்ணு பின்னாடி எத்தன பேரு' செம :)

ஜீரோ கிலோமீட்டர்
நம்ம ஆளு கருணா நடிச்சது . வித்தியாசமான concept.

நடந்தது என்னனா?
இது கருணா & நளனோட peak :)

காதலில் சொதப்புவது எப்படி?

 துரு
செம சூப்பர் :) எதிர்பார்க்காதது

மாலை நேரம்
எனக்கு அந்த பையனோட வசனம்லா ரொம்ப பிடிக்கும் . வயசுக்கு வந்துட்டியா, போடி வாத்து, ஒரு ஈ காக்கா கூட இல்ல, நீ குட்டியா இருக்க இல்ல நான் குள்ளமா இருக்கேன். இப்படி பல

DSP

Engineering படிச்ச பசங்க எல்லாருக்கும் ரொம்ப நல்லா தெரிஞ்ச subject. இந்த படத்துல அதுக்கு அழகான twist வேற. என் personal life லயே இந்த DSP ய வச்சு ஒரு செம காமெடி நடந்துருக்கு. நான் காலேஜ் படிச்சப்ப என் friend கூட எங்க வீட்டு வாசல் முன்னாடி நின்னு பேசிகிட்டு இருந்தேன். அப்ப அவன்ட்ட மச்சி , இந்த DSP ரொம்ப கஷ்டமா இருக்குடா. என்ன பண்றதுனே தெரியல அப்படி இப்படின்னு பேசிகிட்டு இருந்தேன் . அப்ப எங்க வீட்டு வாசல்ல எங்க அம்மாச்சி உட்கார்ந்துருந்தாங்க. என் friend ட்டுட்ட பேசிட்டு வீட்டுக்குள்ள போனேன். அப்ப எங்க அம்மாச்சி என்னடா எதுவும் பிரச்சினையா, DSP அது இது பேசிக்குறீங்கனு கேட்டாங்க. நான் சிரிச்சுகிட்டே அம்மாச்சி DSP னா இந்த semester ல எங்களுக்கு இருக்க Digital Signal Processing ங்குற ஒரு subject னு சொல்லி சிரிச்சேன். அந்த DSP paper க்கு இன்னொரு பேரும் இருக்கு . அதுதான் இந்த படத்தோட title. Degree Stopping Paper :).

நண்பா
நல்ல கான்செப்ட்

புதியவன்
நல்ல +ve story

திமிருக்கு மறுபெயர் நீதானே !

குவியம்

Monday, July 16, 2012

Lift please ...

 
ஒருத்தர்கிட்ட  lift கேட்டு போற பழக்கம் எனக்கு எப்ப வந்துச்சுன்னு யோசிச்சுப் பார்த்தா , அது எனக்கு college படிக்கிறப்ப வந்துச்சு. அதுவும் தாம்பரம் ரயில்வே ஸ்டேசன்ல இருந்து camproad போயிருக்கேன். முக்கியமா அங்கலாம் அப்ப ஒரு பத்து மணிக்கு மேல எந்த பஸ்சும் இருக்காது. ஒன்னு பெரும்பாலும் நடந்து போகணும் , இல்ல ஆட்டோ இல்லனா யாருட்டயாவது lift தான்.  அப்ப ஈஸ்ட் தாம்பரம் ரயில்வே ஸ்டேசன் வாசல்ல நிறைய பேரு lift கேட்டு வெயிட் பண்ணுவாங்க. பெரும்பாலும் bike lift தான். யாரும் கார்ல்ல lift கொடுத்து நான் பாத்ததில்ல. ஆனா என் பிரண்ட்ஸ்  சில பேரு கார்ல lift கேட்டு போனதா சொல்லி இருக்காங்க.

அதுக்கப்புறம் நான் காலேஜ் முடிச்சு office சேர்ந்து bike வாங்குனப்புறம் முடிஞ்ச அளவுக்கு lift கேட்குறவங்களுக்கு lift கொடுத்துருக்கேன். நானும் மதுவும் பெரும்பாலும் ஒரே பைக்ல ஒன்னாவே எல்லா எடத்துக்கும் போனதால lift கொடுக்க  பெரும்பாலும் வாய்ப்பு அமஞ்சதில்ல. அதுக்கப்புறம் இப்ப office மாறுனப்புறம் அதிகமா lift கொடுக்குறேன். அதுவும் அந்த ரோட்டுல இருந்து office போற  அந்த 3 k.m க்கு பெரும்பாலும்  நிறைய பேருக்கு லிப்ட்தான். அதே மாதிரி உள்ள இருந்து , வெளிய வர. சில நேரங்கள்ல office ல இருந்து வெளிய வரும்போது சில பேருக்கு வீட்டுகிட்ட வரைக்கும் கூட  lift கொடுத்துருக்கேன்.

இந்த மாதிரி lift பயணங்களில் போது பல சுவாரசியமான ஆட்கள்ல பாக்கலாம். பொதுவா நான் யார்ட்டயாவது lift கேட்டு வந்தா, பெரும்பாலும் அவங்களோட பேச மாட்டேன். ஆனா நான் மத்தவங்களுக்கு lift கொடுத்தா , அதுவும் ரொம்பவும் புதிய மனிதர்கள்னா , ஏதாவது பேசிகிட்டே வருவேன் குறைஞ்சபட்சம் நீங்க எந்த ஊருனாவதுன்னு?. எனக்கு அறிமுகமில்லாத புதிய மனுஷங்களோட புதுசா பேசுறது ரொம்ப பிடிக்கும்.  அதுவும் தமிழ்நாட்டுக்குப் புதுசுனா, என் முத கேள்வி 'What do you feel about Chennai ?' . பெரும்பாலும் ஒரே மாதிரி பதில்தான் வரும் . Chennai ரொம்ப Hot. Humidity ஜாஸ்தி. ஆட்டோ சார்ஜ் ரொம்ப அதிகம் அப்படின்னு. இப்ப புதுசா எல்லாரோட complaint , bus ரேட் ரொம்ப ஜாஸ்தி ஆக்கிட்டாங்கங்குறதுதான்.   அன்னைக்கு ஒரு North Indian பையன் அப்படிதான் வந்தான். அவன்ட்ட பேசுனப்ப இதேதான் சொன்னான் . அதுவும் ஆட்டோவாலாக்கள் மேல அவனுக்கு ரொம்ப கோபம். நாம shoe போட்டு, Id card மாட்டிருக்குறத பாத்ததாலே எல்லா ஆட்டோக்காரங்களும் அநியாய ரேட் சொல்றாங்க. இவ்ளோ பெரிய building எ பாத்தாலே என்னமோ நாமலாம் லட்ச லட்சமா சம்பாதிக்குற மாதிரி நினைக்குறாங்க. இப்படி பல.

வெறும் உள்நாட்டுக்காரங்கனு மட்டும் இல்ல. அன்னைக்கு ஒரு நாள் ஒரு பையன் lift கேட்டான். பாக்க north indian மாதிரி இருந்தான். நானும் அவனுக்கு lift கொடுத்துட்டு எப்பயும் போல பேசிகிட்டே வந்தேன். அவன் பாட்டுக்கு  IPL சூப்பர் மச்சி. I Love CSK , அப்படி இப்படின்னு பேசிகிட்டே வந்தான். அப்புறம்தான் தெரிஞ்சது அவன் கொலம்பியா நாட்டுக்காரனாம்.  இப்பயும் அதே கேள்வி ஆனா வேற மாதிரி , How do you feel about India? . பையன் பொருமி தள்ளிட்டான். Very Spicy, Dirty, No Social Life. முக்கியமா பாரலாம் 10 மணிக்கே மூடிறாங்க. இப்படி பல. எல்லாத்துக்கும் மேல பையன், இந்திய பொண்ணுங்கள பத்தி புலம்பி தள்ளிட்டான். உங்க பொண்ணுங்களுக்கு maturity யே இல்ல, சின்னபிள்ளத்தனமா நடந்துக்குறாங்க. போயி பேசுனாகூட யாரும் பேச மாட்டுறாங்க. எங்க ஊருல வந்து பாரு, பொண்ணுங்கலாம் அவ்ளோ நல்லா பேசுவாங்க  அதோட உங்க பொண்ணுங்களுக்கு beauty consciousness ஏ இல்ல.  இப்படி ஒரே புலம்பல். நான் நினைச்சுகிட்டேன், பையன் யாரோ நம்ம ஊரு பொண்ணுகிட்ட செமையா வாங்கி கட்டி இருக்கானு. அவன் என்கிட்ட கொலம்பியாவ பத்தி அறிமுகப்படுத்துனதே, மச்சி அங்க பொண்ணுங்க சூப்பர் மச்சினுதான் ஆரம்பிச்சான். ஆனா பையனுக்கு பல தமிழ் வார்த்தைகள் தெரிஞ்சுருந்தது. புது ஊர் புது மொழி கத்துக்கணும்னு ஆர்வம் இருந்தது. என்னோட பேசுனவரைக்கும் முடிஞ்ச அளவு தமிழ்லயேதான் பேசுனான்.

வண்டில போகும்போது  இப்படினா, இறங்கும்போது ஒவ்வொருத்தவங்க behavior ஒவ்வொரு மாதிரி இருக்கும். சில பேருலாம் , நாம ஏதோ அவங்க வீட்டு driver மாதிரியும் அவங்க வண்டி ஓனர் மாதிரியும் இறங்கும்போது, ஒரு thanks கூட இருக்காது , இறங்கி விறுவிறுன்னு நம்ம முகம் கூட பாக்காம போயிருவாங்க. சில பேரு சொல்ற thanks ல ஏதோ ஒரு வார்த்தைய சொல்ற அளவுக்குத்தான் அதுல உயிர் இருக்கும். ஆனா எல்லாரும் இப்படி இல்ல. சில பசங்கலாம் , lift கேட்டுட்டு இறங்கும்போது , please wait பண்ணுங்கனு சொல்லி, ரெண்டு பக்கமும் வந்து foot rest லாம் மடக்கிவிட்டுட்டு அவ்ளோ உயிர்ப்பா thanks சொல்லுவாங்க. நம்ம கொலம்பியா பையன் இதுல best. இறங்கும்போது கைலாம் கொடுத்து உன்னுடைய இந்த நாள் நல்லா இருக்கட்டும் , கடவுள் உன் பக்கம் துணை இருப்பாருன்னு அவ்ளோ சொல்லிட்டுப் போனான்.

நான் lift கொடுத்தது மாதிரி எனக்கு lift கொடுத்ததுலையும் நிறைய நல்ல பசங்க இருந்தாங்க. அப்படிதான் ஒரு பையன் அவன் போக வேண்டிய இடம் தாண்டியும் என்னைய கொண்டு வந்து நான் சேர வேண்டிய இடத்துலவிட்டான். இப்படியும் மனிதர்கள் இருக்கத்தான் செய்யுறாங்க.

இப்படி லிப்ட் கேட்டு போகும்போது பெரும்பாலும் லிப்ட் கேட்குறவர் , லிப்ட் கொடுக்குறவர் போக்குலதான் போகவேண்டி இருக்கும். அன்னைக்கு ஒருநாள் அப்படிதான் , ஒரு பையன்ட்ட லிப்ட் கேட்டு வந்தேன். வர்ற வழில சோன்னு ஒரே மழை. நானும் பையன் , மழைக்கு இங்க நிப்பாட்டுவான் அங்க நிப்பாட்டுவான்னு நினச்சுகிட்டு பின்னாடி நனஞ்சுகிட்டே வர்ரேன், பையன் நிப்பாட்டுற வழிய காணோம். நானும் ஒரு கட்டத்துக்கு மேல முழுசா நனச்சதுக்கப்புரம் இனிமே நிப்பாட்டுனாலும் வேஸ்ட்டுன்னு விட்டுட்டேன். அந்த பையனும் ஹெல்மெட் தவிர வேற rain coat எதுவும் போடாததால அவனும் முழுசாதான் நனஞ்சுட்டான். இப்படி நாங்க ரெண்டு பேரும் நனைஞ்சுகிட்டு வந்த தூரம் 15 km.

ஜெரிமி மரி(Jeremy Marie)  - உலகம் முழுசும் சுத்திகிட்டு இருக்க மனுஷன் . அவரோட Mode of Transport - Hitchhiking . அதாங்க நம்ம பாசைல சொல்லப் போனா Lift கேட்டுப் போறது. மனுஷன் உலகம் முழுசும் சுத்துறான் ,lift கேட்டு மட்டும்தான் :). படகு, பைக்கு, காரு, பஸ்சு, கழுதைன்னு , இப்படி உலகம் முழுக்க lift கேட்டே போறான். அவரோட intention ஒண்ணுதான், இந்த உலகம் இன்னமும் நல்லவர்களால நிரஞ்சுருக்குனு காட்டுறதுதான்.

இப்படி முகம் தெரியாத யாருக்கோ , தன் முகத்தகூட காட்டாம லிப்ட் கொடுக்குறவங்களும் இருக்கும்போதுதான் இந்த உலகில் எப்பொழுதும் ஏதோ ஒரு மூலையில் ஆதாயம் எதிர்பார்க்காமல் உதவுவதற்கு ஜீவன்கள் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கை அழியாமல் இருக்கிறது. வாழ்க்கையும் பல விதங்கள்ல சுவாரசியமா இருக்கு :)
 
Lift கொடுங்க boss வாழ்க்கை நல்லா இருக்கும் :)

photo courtesy : http://flickrhivemind.net

நான் ஈ - விமர்சனம்

இன்னைக்கு படத்துக்கு போறதுன்னு முடிவானதும் , இருந்தது ரெண்டு சாய்ஸ்.1. பில்லா 2 . நான் ஈ. என் மனைவியுடனான சில பல சமாதான உடன்படிக்கைகளை முன்னிட்டு 'நான் ஈ' போவதுன்னு தீர்மானமானது :) .



படம் ஆரம்பிச்சதுல இருந்து விறு விறுன்னு போகுது. எந்த ஒரு இடத்துலயும் துளி bore இல்ல. கதை எல்லா காலத்துலயும் இருக்க கதைதான். வில்லன், ஹீரோயினுக்கு ஆசைப்பட்டு ஹீரோவ கொன்றுறாரு , பின்னர் நம்ம ஹீரோ அடுத்த ஜென்மம் எடுத்து வில்லன பழி வாங்குறாரு. இதுவரைக்கும் வந்த இது மாதிரி படங்கள்ல பெரும்பாலும்  ஹீரோ அடுத்த ஜென்மத்துல பலசாலியா ஜென்மம் எடுப்பாரு. என்ன இங்க நம்ம ஹீரோ 'ஈ' ஆ ஜென்மம் எடுக்குறாரு. எந்த ஒரு பலமும்  இல்லாத 'ஈ' ஆ இருக்குறதால நம்ம ஹீரோ புத்திசாலியா இருக்காரு . அதுதான் இந்த கதையோட பலம்.


ஈயோட கண்கள் பெரிதாக இருந்தாலும் அதன் கண்கள்ல பெரிசா expression கொண்டு வரமுடியாதால , அதோட body language வச்சு அத express பண்ண வச்சது அருமை .
'ஈ' க்கான என்ட்ரி, அதோட ஹீரோயிசம், அதுக்கான மியூசிக் . இப்படி எந்த ஒரு ரீல்ல இருக்க ரியல் ஹீரோக்கும் சலச்சதில்ல இந்த 'நான்  ஈ'
 படத்துக்கு உண்மையான ஹீரோ 'ஈ' யும் அந்த வில்லன்னும்தான்.  படத்தின் ஆரம்பத்தில் வில்லத்தனம் காட்டும் அதே சுதீப் படத்தின் நடுவில் 'ஈ' இடம் மாட்டி அவஸ்தைப்படும் இடங்கள் அருமை. ஈயோட சாகசங்களும் அதனால் சுதீப் படுற அவஸ்தைகளும் அனைவரையும் வாய் விட்டு சிரிக்க வைக்குது.

திரைக்கதை, வசனம், இசை, கலை , ஒளிப்பதிவு, டைரக்சன் இப்படி எல்லா ஏரியாக்களும் வெளுத்து வாங்கி இருக்காங்க. படத்தோட மிகப் பெரிய பலம் அனிமேசன். இதுவரை நமக்கு நம்ம நாட்டு அனிமேசன்னா அது நம்ம ராமநாராயண் வகையராவோட அனிமேசன் மட்டும்கிறதால , நமக்கு அனிமேசன் படமுனாலே அது ஹாலிவுட் படம்தான். அப்படிப்பட்ட மனநிலையில் மக்கள் இருக்கும்போது  ஒரு அனிமேசன் கதாப்பாத்திரத்த நம்பி ஒரு படம் எடுக்குறதுனா அதுல எந்த அளவுக்கு அனிமேசன் நல்லா இருக்கணும். நிச்சயமா இந்த படம் ஏமாத்தலா . அனிமேசன் 'ஈ' சூப்பர். 'ஈ' யபத்தி அருவருப்பான எண்ணம் இருக்குற நாட்டுல ஒரு 'ஈ' ய ஹீரோவா வச்சு படம் எடுக்க தைரியம் வேணும். ஆனா அந்த தைரியம், தன்னுடைய ஒவ்வொரு படத்துலயும் ரிஸ்க்  எடுத்து வெரைட்டி காட்டிட்டு வர்ற ராஜ மௌலிக்கு இருக்குறதுல ஆச்சர்யம் இல்லை . படத்தோட title la கதையின் கருன்னு ஒருத்தர் பேரு போடுறாங்க. அவருதான் ரொம்ப காலத்துக்கு முன்னாடி ராஜமௌலிக்கு இந்த மாதிரி ஒரு கான்செப்ட் சொன்னாராம். good.



சமந்தா - அழகு. எல்லா படத்தையும் போல இந்த படத்துலயும் அழகோ அழகு சமந்தா. என்னா expression , என்னா நடிப்பு, என்னா அழகு . காணக் கண் கோடி வேண்டும் :)

காதல், காமெடி, ஆக்சன் , த்ரில்லர், செண்டிமெண்ட் இப்படி அனைத்து ஏரியாக்களும் கொண்டது 'நான் ஈ'
படம் சூப்பர் , என்ன ஒரே ஒரு வருத்தம், அழகு சமந்தாவ 'ஈ' க்கலாம் ஜோடி ஆக்குனத நினைச்சுதான் மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு ;) .

கொஞ்ச காலத்துக்கு முன்னாடி , நான் எங்க பெரியம்மா வீட்டுக்கு வடபழனி போகும்போது அங்க எனக்கு ஒரு 'உதவி இயக்குனர்' அறிமுகம் ஆனாரு. ஒரு நாள் அவர்ட்ட பேசிகிட்டு இருக்கும்போது அவர், சார் , நான் 'Spider Man' கான்செப்ட்ல ஒரு படம் எடுக்கலாம்னு இருக்கேன். அதுக்கு சிலந்தி மாதிரி ஏதாவது உயிரினம் இருந்தா சொல்லுங்க சார்னு, சொன்னாரு. நானும் பல ஆராச்சிகல்லாம் பண்ணி , சார் , ஆப்ரிக்காவுல ஒரு வண்டு இருக்கு சார் . அது 'mood' வந்துருச்சுனா  வேகமா தரைல கொட்டும் , அதோட அதிர்வு ரொம்ப தூரத்துல இருக்க  இணைக்கு கூட கேட்கும். அந்த வண்ட வச்சு நீங்க ஒரு படம் எடுங்க சார்னு சொன்னேன். இப்ப அவர் மட்டும் டைரக்டர் ஆகி அந்த படம் எடுத்துருந்தார்னா , ஈயலாம் வச்சு படம் எடுக்குற இந்த காலத்துல அந்த படம் முன்னூறு நாள் ஓடிருக்கும். இந்நேரம் படத்தோட title ல  கதையின் கரு 'ஹரிபாண்டி' னு வந்துருக்கும். தமிழ்கூறும் நல்லுலகம் அந்த பொன்னான வாய்ப்ப இழந்துருச்சு ;).

சரி விமர்சனத்த முடிக்கலாம், ஹாலிவுட்டுக்கு ஒரு spider man னா இந்தியாவுக்கு ஒரு 'நான் ஈ' . அவ்ளோதான்பா :).

Sunday, May 13, 2012

லீலை



நான் ரொம்ப நாளா பாக்கணும்னு நினைச்ச படம் . சும்மா இல்ல 4 வருசமா பாக்கணும்னு நினச்சது. 2008 ல இருந்து அப்பப்ப படத்தோட stills மட்டும் வரும். ஆனா படம் வந்தது 2012 தான் :(.

 நான் ஒரு படம் பாக்கணும்னு தேர்ந்தெடுத்தா அதுக்கு முக்கிய காரணமாகவும், பல நேரங்கள்ல ஒரே காரணமாகவும் இருப்பது என்னனா , ஹி ஹி ஹி  ஹீரோயின்தாங்க :).  நாலு வருசத்துக்கு முன்னாடியே ஸ்டில்ல பாத்தப்பயே  பச்சக்குன்னு இருந்துச்சு. பேருதான் கொஞ்சம் வாயில நுழைய மாட்டேங்குது , அது என்னங்க , ஆம் மானசி பரேக். பொண்ணு அவ்ளோ கியூட்டா , துறு துறுன்னு அவ்ளோ அருமையா இருக்கு. படத்துல Software Engg ஆம். கேக்க நல்லாத்தான் இருக்கு :) . சும்மா சொல்லக் கூடாதுங்க ஹீரோவும் நல்லாத்தான் இருக்கான். பேரு ஷிவ் பண்டிட். ஹீரோ, ஹீரோயின் ரெண்டு பேருமே North Indian models. இந்த பொண்ணு ஹிந்தி சீரியல்ல கொஞ்சம் நடிச்சுருக்கு. ஷிவ் பண்டிட்ட நான் ஏற்கனவே Airtel விளம்பரத்துல பாத்துருக்கேன்.

2008 ல இந்தப் படம் எடுக்கும்போதுதான் அதே தயாரிப்பாளர் மாஸ்கோவின் காவிரி( அட நம்ம சமந்தாவோட முத படம்ங்க. Gore Gore song அ மறக்க முடியுமா!  ) படத்தையும் எடுத்தாரு. அந்த படம் ஒழுங்க்கா போகலைங்குறதால 2010 லயே முடிஞ்சுட்ட இந்த படம் release ஆக இந்த delay. அதோட படத்துப் பேரு மேல வேற case.

லீலை, பேரு நல்லாத்தான் இருக்கு. லீலைங்குற வார்த்தைக்கு  soft ஆன romantic meaning உம் எடுத்துக்கலாம், கொஞ்சம் hard ஆன sexy meaning உம் எடுத்துக்கலாம். ஆனா இப்பலாம் அந்த வார்த்தைக்கு sexy meaning தான் அதிகமா கொடுக்கப்படுது. நம்ம ஹீரோ கார்த்திக் அந்த மாதிரிலாம் லீலைகள் புரியிறவர் இல்லைங்குறதால , just லீலைங்குற அந்த படத்தலைப்புக்காக இவ்ளோ மெனக்கெட்டுருக்க வேணாம்.
சரி ரொம்ப நேரமா முன்னுரையே  கொடுத்துகிட்டு இருக்கோம் . படத்துக்குள்ள போவோம்.

படத்துல நாலே பேருதான் கார்த்திக்(ஷிவ் பண்டிட்), மலர் (மானசி) அப்புறம் அவங்க friends சந்தானமும், சுஜியும்.

 நம்ம ஹீரோ கார்த்திக் ஒரு காதல் மன்னன். பாக்குற பொண்ணுங்கள்ட்ட எல்லாம் 143 சொல்றவரு. காதல் எல்லாம் ஒரு வாரம்தான். அதுக்கப்புறம் டமால். பெரிய காரணம்லாம் இல்ல. 3 paper ல அரியர் வச்சுட்ட. நீ இவ்ளோ மக்குப் பொண்ணா இருப்பனு நான் நினைக்கல, நாம பிரிஞ்சுரலாம். இப்படி ஏதாவது ஒரு காரணம் சொல்லி கார்த்திக்  காதல டுமீல் பண்ணிருராறு. இந்த காதலிகள் லிஸ்ட்ல நம்ம ஹீரோயின் மலரோட friends உம் இருக்காங்க. அதனால நம்ம மலருக்கு , கார்த்திக்னாலே பிடிக்காது. ரெண்டு பேரும் ஒருத்தர ஒருத்தர் பாத்துக்காமலேயே phone ல சண்டை போட்டுக்குறாங்க.



அதுக்கப்புறம் படிப்பு முடிஞ்சு ஒருத்தருக்கு ஒருத்தர் தெரியாமலேயே ரெண்டு பேரும் HCL join பண்ணுறாங்க . ஒரு நாள் நம்ம கார்த்திக் , office la இருந்து தன் friend க்கு phone பண்ணும்போது அது தப்பா மலரோட extn க்கு போறதுல இருந்து ரெண்டாவது innings start ஆகுது. ரெண்டு பேரும் விட்ட இடத்துல இருந்து திரும்பவும் சண்டைய start பண்ணிக்குறாங்க. ஒரு நாள் கார்த்திக்கு மலர் எவ்ளோ அழகுன்னு தெரிய வரும்போதுதான் , தான் பண்ணது (வேற என்ன , அழகான பொண்ணோட போட்ட சண்டைதான் :) ) எவ்ளோ பெரிய தப்புன்னு தெரியுது. கார்த்திக்குங்குற பேர கேட்டாலே கொல வெறியாகுற மலரோட எப்படி பழகுறதுங்குறத யோசிக்கும்போதுதான், நம்ம ஆளு sundar ங்குற புதுப் பேருல மலர்ட்ட அறிமுகமாகி காதலிக்கிறார்.

கார்த்திக், மலர சந்திக்கிறதுக்கு புதுப் புது  சந்தர்ப்பங்கள ஏற்படுத்துறதும் , சுந்தருங்குற பேருல இருக்குற தன்ன காதலிக்கிறதுக்காக மலர கார்த்திக் போன்ல , 'பசங்கல்லாம் ரொம்ப கெட்டவங்க , சுந்தர நம்பாத, அவன் உன்ன ஏமாத்திருவானு' சொல்றதும் . பின்ன நேர்ல சுந்தரா , போன்ல சொன்னதுக்கு நேர்மாறா ரொம்ப நல்லவனா நடந்து  மலர காதலிக்க வைக்குறதும் செம அருமை.  மலர்ட்ட ரொம்ப நெருக்கமாகி காதலிக்கும் போது , தான் கார்த்திக்தான் தெரிஞ்சா, மலர் தன்ன விட்டு நிரந்தரமா விலகிறுவா, அத தன்னால தாங்க முடியாதுன்னு தானே மலர்ட்ட , நான் உன்கிட்ட இருந்து ஒரு விசயத்த மறச்சுட்டேன் அது தெரிஞ்சா நீ என்ன ஏத்துக்க மாட்ட  அதனால நான் உன்ன விட்டு விலகுறேங்குறதுலையும் நல்லா பண்ணி இருக்காரு. பின்னர் திரும்பவும் போன்ல மலர்ட்ட கார்த்திக்கா , சுந்தரோட நிலைய எடுத்துச் சொல்லி திரும்பவும் சேருறது அருமை .

இந்தப் படத்துல ஒரு logic மீறல்னா , அது மலர் , குரலை வச்சுகூட கார்திக்க அடையாளம் கண்டுபிடிக்க முடியலையாங்குறதுதான். but அதுலாம் படம் பாக்கும்போது பெரிசா தெரியல.



இந்த படம் அவ்ளோ அழகா மனசுல பதியக்காரணம் அந்த சினிமாடோகிராபி. பளிங்கி மாதிரி அவ்ளோ க்ளீனா color full ஆ இருக்கு. என்ன கார்த்திக்கும்,மலரும் HCL ல வேலை பாக்குறாங்கங்குறத்துக்காக ஒரே blue மயமா இருந்துருக்க வேணாம் . டிரெஸ்சிங்க்சும் அவ்ளோ நல்லா இருக்கு. ஒரு சாப்ட்வேர் background அப்படியே சினிமாடோகிராபில கொண்டு வந்துருக்குறது அவ்ளோ அழகு.

ஒரு கிளி , ஒரு கிளி பாட்டும் ஜில்லென்று ஒரு கலவரம் பாட்டும் அருமை.

நிச்சயமா எந்த ஒரு negative பாதிப்பும்( '3' பாத்த கலவரம் இன்னம் அடங்கல :(  )  இல்லாம அழகா நிம்மதியா படம் பாத்துட்டு சந்தோசமா வெளிய வரலாம்.

இந்த படம் பாத்ததுல ஒன்னு தெரிஞ்சது , Girls like cheating but that should be sweet cheating :) .

பி.கு:

தியேட்டர்ல என் பக்கத்துல வந்து உட்காந்தவன் ரெண்டே நிமிசத்துல என்னடா படம்னு எந்துருச்சுப் போய்ட்டான். போயிட்டு அர மணி நேரம் கழிச்சு வந்து உட்காந்தவன்,கொஞ்ச நேரத்துலையே படத்துல இருக்குற ஹீரோ , ஹீரோயின் , Software பொண்ணுங்க, பசங்கன்னு ஒரே கிழியா கிழிச்சான். பாவம் அவனுக்கு என்ன கொடும நடந்துச்சோ :(.