Monday, January 10, 2011

புத்தகங்களைத் தேடி ஓர் பயணம் ...



கடந்த இரண்டு வருடங்களாக நானும் , மதுவும் சென்னையின் புத்தக கண்காட்சிக்குச் செல்கிறோம் . அதே போல் இந்த வருடமும் செல்வதாக முடிவெடுத்தோம் . ஆனால் அதற்கு முன் ஒரு உறுத்தல் இருந்தது. என்னவென்றால் கடந்த இரண்டு வருடங்களில் வாங்கிய புத்தகங்களிலேயே நிறைய நான் படிக்கவில்லை. சில புத்தகங்கள் பாதி படித்து விட்ட நிலையில் இருக்கின்றன . சில புத்தகங்கள் முழுவதும் படிக்காமலே இருக்கின்றன . அதையெல்லாம் படிக்கவில்லையே அப்படி இருக்கையில் இந்த வருட புத்தக கண்காட்சிக்குச் செல்ல வேண்டுமா என்று தோன்றியது. சரி இருந்தாலும் பரவாயில்லை செல்லலாம் என்று முடிவெடுத்து நான், மது மற்றும் கார்த்தி மூன்று பேரும் சென்றோம்.

இந்த வருட புத்தக கண்காட்சிக்கு செல்வதற்கு முன்பே கிழக்குப் பதிப்பக வலைத்தளம் சென்று சில புத்தகங்களை தேர்ந்தெடுத்திருந்தேன். அதனால் பட்ஜெட் எகிரப்போகுது என்பதும் முன்பே தெரிந்திருந்ததால் நானும் மதுவும் சற்று அதிகமாகவே பணம் கொண்டு போய் இருந்தோம். நாங்கள் இரண்டு கட்டைப் பை எடுத்ததைப் பார்த்த வீட்டில் உள்ளோர் என்னடா இது என்றனர். எல்லாம் முன் அனுபவம் என்றோம் :) .

சரி என்று பசிக்குது என்று போகிற வழியில் ஒரு சைனீஸ் உணவகத்தில் சாப்பாடு சாப்பிட்டு விட்டு (இங்கும் பட்ஜெட் எகிறுச்சு :) ) புத்தக கண்காட்சி சென்றோம். முதலில் சென்றதும் கிழக்கு பதிப்பகத்திற்கே சென்றோம். முதலில் நான் எடுத்தது "அகம், புறம் அந்தபுரம் ". இது இந்திய மன்னர்களைப் பற்றியது , இதுதான் இன்றைய வருட புத்தக கண்காட்சியில் என்னுடைய top pick . விலையை பார்த்ததும் சற்று அதிர்ச்சிதான். வலைதளத்தில் 750 என்றுதான் போட்டிருந்தது ஆனால் இங்கோ 950 ரூபாய் என்றிருந்தது. ஏங்க இப்படி இருக்கு என்று கேட்டால், "சார் , காகித விலை கூடிப் போயிருச்சு , அதான். நீங்க வலைதளத்தில் 750 ரூபாய்க்கு ஆடர் பண்ணாலும் திருப்பி உங்களுக்கு போன் பண்ணி விலை கூடிருச்சும்பாங்க" என்றார். சரி என்று அந்த புத்தகத்தை எடுத்துக்கொண்டேன். அடுத்து நான் எடுத்த புத்தகங்கள் அனைத்தும் வரலாறு சார்ந்தவையே . கிழக்கு பதிப்பக புத்தகங்கள் அனைத்தும் நான் விரும்புபவை. அவை பெரும்பாலும் வரலாறு சார்ந்து இருப்பதே காரணம். இந்த வருட புத்தக கண்காட்சியின் செலவில் பாதி செலவு இங்கு புத்தகங்கள் வாங்கவே செலவிட்டேன். இதில் மது ஒரு புத்தகம் கூட வாங்கவில்லை .

இந்த புத்தக கண்காட்சிக்குச் செல்லும் முன்பே ஒரு உறுதி எடுத்துக் கொண்டேன். இலக்கியம் சார்ந்த புத்தகங்கள் (நான்) வாங்குவதில்லை என்று . ஏனெனில் சென்ற வருடம் மது வாங்கிய இலக்கியம் சார்ந்த புத்தகங்களையே நான் படிக்கவில்லை . மேலும் அவை என்னை ஈர்க்கவும் இல்லை . என்னுடைய விருப்பம் எல்லாம் வரலாறு சார்ந்ததே. எனக்கு உண்மை வேண்டும் புனைவில் விருப்பம் இல்லை . அடுத்து வரலாற்று நாவல்களிலும் இந்த வருடம் ஆர்வம் செலுத்தவில்லை . ஏற்கனவே சென்ற வருடத்திற்கு முந்திய வருடம் பொன்னியின் செல்வனும் , சென்ற வருடம் கடல் புறாவும் வாங்கி இருந்தோம் . ஆனால் இந்த வருடம் ஏனோ அவற்றின் மீது கவனம் செல்லவில்லை. மேலும் இந்த வருடம் சிவகாமியின் சபதம் மூலை முடுக்கெல்லாம் இருந்தது . இருந்தும் அதை வாங்கவில்லை . அதே போல் தனி மனித புத்தகங்களையும் வாங்குவதில்லை என்றும் முடிவெடுத்தேன். சென்ற வருடம் பிரபாகரன் பற்றிய புத்தகங்களும் , விடுதலைப் புலிகள் பற்றிய புத்தகங்களும் , விடுதலைப் புலிகளின் இறுதி யுத்தத்தை பற்றிய புத்தகங்களும் அதிகம் இருந்தன. அவற்றை சென்ற வருடம் எப்படி கவனமாக தவிர்த்தேனோ அதேபோல் இந்த வருடமும் தவிர்த்தேன். வரலாறு என்பது வெற்றி பெற்றவர்களாலே எழுதப்படுவது என்பார்கள் என்பதால் இந்த புத்தகங்களின் நம்பகத்தன்மையின் மீது எனக்கு ஐயப்பாடு இருந்தது. மேலும் அவை உண்மையையே கூறுவதாக இருந்தாலும் எம் இனம் அழிந்த வரலாற்றை படிக்க என் மனம் இன்னும் கடினப்படவில்லை :( .

எனக்கு எப்பொழுதும் சீனா பற்றி பெரிய மதிப்பு உண்டும் . அது மிகப் பெரிய நாடு என்றோ மிகப்பெரிய வல்லரசு என்பதால் அல்ல . அது இந்தியாவைப் போலே சிறந்த வரலாறும் , கலாச்சாரமும் கொண்டது. நான் சீனா மேல் என் கல்லூரி நாட்களிலிருந்தே மிக அதிக கவனமும் , ஆர்வமும் செலுத்த ஆரம்பித்தேன். என்னைப் பொறுத்தவரை பாகிஸ்தானை விட சீனா மீதே நாம் அதிக கவனமும் , உன்னிப்பும் கொள்ள வேண்டும். நாம் ஏற்கனவே அவர்களிடம் ஒரு முறை போரில் தோற்றுவிட்டோம் இனிமேலும் அது நடக்ககூடாது. இன்னும் கொஞ்ச நாட்களில் உலகில் பொருளாதாரப் போட்டியும் அதன் மூலம் பொருளாதாரப் போரும் உருவாகும் . உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் மிகப் பெரிய பொருளாதாரங்களை கொண்ட இரண்டு மிகப் பெரிய நாடுகள் என்ற முறையில் நாமும் சீனாவும் ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொள்ளவேண்டும். மேலும் இவ்விரு நாடுகளும் ஒன்றுடன் ஒன்று போட்டி இடும் சூழ்நிலையில் இந்த புரிதல் அவசியம் . உலகில் அதிக சச்சரவுகள் கொண்ட பெரிய நாடுகளும் இந்தியாவும் சீனாவும்தான். ரஷ்யாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையேயான சச்சரவுகள் கூட முடிந்துவிட்டன. நமக்குதான் முடியவில்லை. அது நீருபூத்த நெருப்பாக உள்ளது . இவ்வளவு ஆராய்ச்சிகளும் , ஆர்வமும் கொண்டதால் இந்த வருட புத்தக கண்காட்சியில் சீனா பற்றிய புத்தகங்களை அதி தீவிரமாக தேடினேன். இந்த வருட கண்காட்சியில் என் ஆர்வமும் இவைதான் . அப்படியாக 3 புத்தகங்கள் சீனாவைப் பற்றி வாங்கினேன். நான் முதலில் படிக்க ஆசைப்படுவதும் அவைதான். இதில் என்னை அதிகம் கவர்ந்தது "நீயா நானா? இந்திய - சீன வல்லரசுப் போட்டி ". இது நிச்சயம் சீனா மற்றும் இந்தியா பற்றி மிக அதிக அளவில் அலசப் போகிறது என்று பெரிதும் நம்புகிறேன். இதுவே நான் முதல் படிக்கப் போகும் புத்தகமாக இருக்கும் என்றும் நம்புகிறேன். இதில் குறிப்பிடத்தக்க மற்றொரு புத்தகம் சீன மக்களின் குடும்ப வாழ்க்கையைப் பற்றியும் அவர்களின் கலாச்சாரத்தை பற்றியதும் ஆகும் . வல்லரசு சீனாவின் மற்றொரு பக்கத்தை அறிய இது உதவும் .

அடுத்து நான் காஷ்மீரைப் பற்றி அதிகம் பேசினாலும் அதன் அடிநாதம் அதிகம் அறியவில்லை என்பது எனக்கு சிறிது நாட்களுக்கு முன்தான் தெரிந்தது . காஷ்மீர் வெறுமனே இந்திய பாகிஸ்தானிய நாடுகள் தாங்களே முழுவதும் பெற ஆசைப்படும் மாநிலம் மட்டுமல்ல. அது அங்கு வாழும் முஸ்லீம், அங்கு வாழ்ந்த இந்து பண்டிட்டுகள் பற்றியதும் கூட. மேலும் இந்திய , பாகிஸ்தானிய நாடுகள் காஷ்மீரில் மக்களிடையே ஓட்டெடுப்பு நடத்தி அதன் மூலம் அவர்கள் எங்கே சேர வேண்டும் என்பதை தீர்மானிக்க வேண்டும் என்று ஐநா கூறியதும் , அதற்காக இரு நாடுகளும் தங்கள் படைகளை வெளியேற்ற வேண்டும் என்று ஐநா கூறியதும் எனக்கு சில மாதங்களுக்கு முன் தான் தெரிய வந்தது. அதனால் காஷ்மீரைப் பற்றி மேலும் அறிய அதைப் பற்றி ஒரு புத்தகம் வாங்கினேன் .

பர்மா இந்தியாவின் மிக அருகில் அதுவும் இந்தியாவில் கிளர்ச்சிகள் அதிகம் நடக்கும் வட கிழக்கு மாநிலங்களுக்கு மிக அருகில் உள்ள நாடு. அங்கு இப்பொழுது ராணுவ ஆட்சி நடைபெறுகிறது. உலகில் ஜனநாயகம் செழிக்க வேண்டும் என்று அதிகம் விரும்பும் இந்தியாவின் மிக அருகிலேயே இருக்கும் ராணுவ கொடுங்கோல் ஆட்சி நடக்கும் நாடு . அதனால் ஆரம்ப காலத்தில் இந்தியா பர்மாவில் ஜனநாயகம் செழிக்க அங்கு இருந்த போராளிகளுக்கு பயிற்சி அளித்தது. அதன் பின் சீனாவின் ஆதிக்கம் பர்மாவின் மேல் அதிகம் ஏற்படாமல் தடுக்கவும், வட கிழக்கு மாநிலங்களில் இருக்கும் தீவிரவாதிகள் பர்மாவில் மறைவிடம் தேடாமல் இருக்கவும், பர்மாவில் இருக்கும் இயற்கை எரி வாயுவைப் பெறவும் இந்தியா பர்மாவின் மேல் இருக்கும் தன்னுடைய பார்வையை மாற்றத் தொடங்கியது . பர்மிய ஜூண்டாக்களின் மீது இந்தியா மென்மையாக நடக்கத்தொடங்கியது. அதனால் இந்தியா பர்மிய ஜனநாயக போராளிகளுக்கு ஆதரவை வாபஸ் வாங்கத் தொடங்கியது . சென்ற மாதம் இந்தியா வந்த அமெரிக்க அதிபர் ஒபாமா இந்தியா தன்னுடைய பொருளாதார , புவியியல் சார்ந்த காரணங்களுக்காக பர்மாவில் நடக்கும் ஜனநாயகப் படுகொலைகளை கண்டும் காணாமல் இருக்கக் கூடாது என்றார். அதே போல் சில மாதங்களுக்கு முன் விடுதலையான ஆங்க் சான் சூகி இந்தியா தன்னுடைய நலனுக்காக பர்மிய ஜுண்டா அரசை ஆதரிக்கக் கூடாது என்றார். இத்தகைய பின்னணியிலேயே நான் பர்மிய போராளிகளை இந்தியா ஏமாற்றிய கதையைப் பற்றிய புத்தகம் வாங்கினேன். நான் இந்திய நலனிற்கு எதிரானதும் , இந்திய இறையாண்மைக்கு எதிரானதுமான எதையும் விரும்பமாட்டேன். அப்படி இருக்கும் நான் இந்த புத்தகத்தை தேர்ந்தெடுத்தது எனக்கே ஆச்சரியம்தான் !.

சில நாட்களுக்கு முன் அலுவலகத்தில் இரண்டாம் உலகப் போர் பற்றிய புத்தகம் வாங்கினேன். அதை முடித்துவிட்டதால் இன்று முதல் உலகப் போர் பற்றிய புத்தகம் வாங்கினேன். இரண்டாம் உலகப் போரில் மிகக் கொடூரமானதே ஆனாலும் ஹிட்லர் என்னும் கவர்ச்சி இருந்தது . ஆனால் முதல் உலகப் போரில் அப்படி யாரும் இல்லை . இருந்தாலும் வாங்கினேன். அடுத்து கிளியோப்பட்ரா மற்றும் மாவோயிஸ்டுகள் பற்றிய புத்தகங்களை மது வாங்கினான் .

எனக்கு இந்து மதத்தின் மேல் இருக்கும் அதே அளவு ஈடுபாடும் , ஆர்வமும் புத்தம் மற்றும் யூத மதங்களின் மீதும் உண்டு . அதிலும் யூத மதம் இந்து மதம் போன்று தொன்மையானது . அதனால் அதைப் பற்றிய சிறிய புத்தகம் ஒன்றை வாங்கினேன் .

நான்தான் இலக்கியம் சார்ந்த புத்தகம் வாங்கமாட்டேன் என்று சொன்னேன் . ஆனால் மது வாங்கியதெல்லாம் இலக்கியம் சார்ந்தவையே. பெரும்பாலும் ஜெயமோகன் , சாரு நிவேதிதா எழுதிய புத்தகங்களை அவனும் எனக்கு ஈடாக போட்டி போட்டு வாங்கினான். அவற்றைப் பற்றிய முன்னுரை வேண்டுமென்றால் அவனை பதிவு போடச் சொல்லுங்கள் . அப்படியாவது அவனை மீண்டும் பதிவிடவையுங்கள் :). இவை தவிர மேலும் நிறைய புத்தகங்கள் வாங்கினோம் .

சென்ற வருடம் புத்தக கண்காட்சியில் கமல் வந்திருந்தார். அது எனக்கு பிடித்தமான நடிகர்களில் ஒருவரான கமலின் ஒரு நல்ல பேச்சை கேட்க நல்ல வாய்ப்பாக இருந்தது . அதே போல் இந்த வருட கண்காட்சியில் ரா.பார்த்திபன் வந்திருந்தார். அவரிடம் ஒரு புத்தகத்தில் கையொப்பம் வாங்கினோம். அதே போல் மது அவன் வாங்கிய சாரு நிவேதிதா புத்தகத்தில் சாருவிடம் கையொப்பம் வாங்கினான் . அப்பொழுது அருகில் இருந்தவர் இவர் யார் என்று கேட்டார் . நான் சாரு நிவேதிதா என்றேன். உடனே அவரிடம் இருந்த ஒரு புத்ததகத்தை சாருவிடம் நீட்டினார். நம் ஆட்கள் அவங்களுக்கு யார் என்றே தெரியாவிட்டாலும் மற்றவர்கள் கையொப்பம் வாங்குகிறார்களா உடனே வாங்கு என்று அவர்களும் நீட்டுகிறார்கள் .

சென்ற அரையாண்டாகவே நான் என் வேலை சார்பாகவே அதிகம் படித்ததால் அதிகம் பதிவிடவில்லை. இனிமேல் அதிகம் படிக்கப் போவதால் (?) அதிகம் பதிவிடலாம். பொதுவாக நான் புத்தாண்டு சபதம் எடுப்பதில்லை . அப்படியே எடுத்தாலும் அது டைரி எழுதவேண்டும் என்பதாக இருக்கும் . அதுவும் 15 நாட்களுக்கு மேல் தாங்காது . இந்த வருடம் எந்த புத்தாண்டு சபதமும் இதுவரை எடுக்கவில்லை, ஆனால் இப்பொழுது தோன்றுகிறது அந்தந்த வருடங்களில் வாங்கிய புத்தகங்களை அந்தந்த வருடங்களிலேயே படித்து விட வேண்டும் என்ற சபதம் எடுக்கவேண்டும் என்று . இந்த ஆண்டு சற்று கூடிய சுமை . சென்ற வருட புத்தகங்களையும் இந்த வருடமே முடித்து விட வேண்டும். ஆனால் இப்படி தொழில் சாராத புத்தகங்களையே அதிகம் படித்தால் எப்பொழுது தொழில் சார்ந்த அறிவை வளர்த்து நாம் தொழிலில் முன்னேறப் போகிறோம் என்று ஒரு உறுத்தலும் ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை . இரண்டுக்கும் கடவுள்தான் அருள் புரிய வேண்டும்.

முன்பெல்லாம் படித்த புத்தகங்களை பற்றி அதிகம் blog post போட்டேன். ஆனால் இப்பொழுது blog post கு எழுதுவதற்காகவே அதிகம் படிக்கிறேன். இதுதான் இந்த வருட புத்தக கண்காட்சி செலவை மாத சம்பளத்தில் 10% வரை எகிற வைத்துவிட்டது . ஏம்பா மருந்து செலவிற்கெல்லாம் வருமான வரி தள்ளுபடி கொடுப்பது போல புத்தகங்களுக்கு எல்லாம் கொடுக்கக் கூடாதா :( .

Monday, January 3, 2011

2005 - வாழ்வின் மறக்க முடியாத ஆண்டு

நிறைய பேர் புது வருட முதல் பதிவு அல்லது சென்ற வருடத்தின் கடைசி பதிவாக 2010 ஆம் வருடம் தங்களுக்கோ நாட்டுக்கோ அல்லது எல்லாருக்குமோ எப்படி இருந்தது என்று பதிவு போட்டிருந்தனர். ஒரு பெண் பதிவர் சென்ற வருடம் மிக மோசமான வருடம் என்றும் அது ஏன் என்றால் அந்த வருடத்தில்தான் அவருடைய தம்பி இறந்தார் என்றும் கூறி இருந்தார். எனக்கு அப்பொழுது என் அப்பாவின் ஞாபகம் வந்தது. அப்படிதான் என் அப்பா இறந்த வருடமும் மேலும் என் வாழ்க்கையில் முக்கியமான திருப்பங்களை கொண்ட வருடமுமான 2005 ஐப் பற்றி எழுதலாம் என்று தோன்றியது.

2005 ஆம் ஆண்டு புத்தாண்டு எல்லாருக்கும் எல்லா ஆண்டுகளை போலவே எங்களுக்கும் நன்றாகவே ஆரம்பித்தது. ஏனென்றால் அதற்கு முன் எந்த ஆண்டும் எனக்குத் தெரிந்து எங்களுக்கு மோசமாக அமையவில்லை . எல்லா ஆண்டும் எங்க அம்மா அவ்வளவு ஆசையோட புத்தாண்டு வாழ்த்துக்கள் சொல்லுவாங்க. அதேபோல் தமிழ் புத்தாண்டின் பொழுதும் சாமிக்கு முன்னாடி முக்கனிகளையும் , துணிமணிகளையும் , கண்ணாடியையும் வச்சு என்னையும் மதுவையும் காலைல எழுந்தவிடனே கையாள கண்ண பொத்தி சாமியைப் பாக்க கூட்டிட்டுப் போவாங்க. அந்த மாதிரிதான் அந்த 2005 ஆண்டின் ஆரம்பமும் அமைந்தது.

நான் அப்பொழுது சென்னை சேலையூரில் அமைந்த ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தேன். மது காரப்பாக்கத்தில் அமைந்த ஒரு பொறியியல் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தான். நாங்கள் சேலையூருக்கு அருகில் கேம்ப் ரோடில் வீடு எடுத்து நான்கு வருடங்களாக தங்கி இருந்தோம். எங்கள் அப்பா அங்கிருந்து அண்ணா சாலையில் அவர் வேலை பார்த்த அலுவலக்கத்துக்கு செல்வார் (அப்பா அப்பொழுது IPS அதிகாரியாக இருந்தார்) . எங்கள் அப்பா அவருக்குப் பிடிக்காத சென்னைக்கு அலுவல் மாற்றி வந்ததும் , மதுவுக்கும், எங்கள் அப்பாவிற்கும் தூரமான சேலையூரில் வீடு எடுத்ததும் எனக்காகத்தான். 2005 இல் நானும், மதுவும் கல்லூரி இறுதியாண்டு படித்துக் கொண்டிருந்தோம். அதற்கு முந்திய ஆண்டே எங்கள் அப்பா பணியிலிருந்து ஓய்வு பெற்றிருந்தார். இருந்தாலும் ராமநாதபுரத்தில் தனியாக வேலை பார்த்துக் கொண்டிருந்த எங்கள் அம்மாவுடன் தங்காமல் எங்களுக்காக சென்னையிலேயே இருந்து எங்களுக்கு சமையல் செய்து போட்டுக்கொண்டிருந்தார். அந்த 2005 ஆம் ஆண்டு எனக்கும் மதுவுக்கும் இறுதியாண்டு (கடைசி செமஸ்டர்) என்பதால் சிறிது பொறுப்பு கூடியிருந்தது. நாங்கள் இருவரும் கேம்பஸில் எல்லாம் செலக்ட் ஆகவில்லை. அதனால் இறுதியாண்டு முடித்து வேலை தேட வேண்டிய நிர்பந்தம். ஒரு வழியாக நானும் மதுவும் கல்லூரி முடித்தோம்.

கல்லூரி முடித்து வேலை தேடி பல இடங்களில் ஏறினோம். மற்ற ஆண்டுகளைப் போல் இல்லாமல் அந்தாண்டு நிறைய ஓபனிங் இருந்தது . HCL, Infosys போன்ற பெரிய கம்பனிகளில் ஓபனிங் இருந்தது. நாங்கள் என் நண்பர்கள் அனைவரும் இந்த கம்பனிகளில் எல்லாம் எழுத்துத் தேர்வு எழுதினோம். எல்லாத்தையும் விட எங்களுக்கு நம்பிக்கை கொடுத்தது TCS. ஏனென்றால் எங்கள் நண்பர்களில் பெரும்பான்மையோர் அதில் எழுத்துத் தேர்வில் தேறினோம். எல்லாருக்கும் வடபழனி TCS இல் நேர்முகத்தேர்வு. நான் இதை பெரிதாகக் கூறுவதற்குக் காரணம் TCS interview நான் மிகவும் எதிர்பார்த்த ஒன்று. ஏனெனில் எனக்கு TATA மிகப் பிடித்த கம்பனி. என் அண்ணன் குமார் TCS இல் 5 வருடங்களுக்கு முன் சேர்ந்ததிலிருந்து எனக்கு TCS பைத்தியமே பிடித்திருந்தது எனலாம். என்னையும், இன்னொரு நண்பனையும் தவிர technical round இல் மது உட்பட மற்றவர்கள் வெளியேறிவிட்டனர். நானும் அந்த நண்பனும் மட்டும் TCS கடைசி round இற்கு சென்றோம். அதன் result அடுத்து ஒரு வாரம் கழித்து வெளியிடுவதாக இருந்தது. அதற்குள் நான் சென்னையில் இருந்த அனைத்து கோயில்களுக்கும் சென்றேன். கடைசியில் result எனக்கு -ve. ரொம்பவே உடைந்து போய்விட்டேன். எங்கள் அப்பாவிற்கு நான் உடைந்து போய்விட்டால் தாங்கமாட்டார். என்னைத் தேற்ற எங்கள் அப்பாவும் அம்மாவும் ரொம்பவே போராடினர்.

அதற்கடுத்து எனக்கும் மதுவுக்கும் AdventNet இல் எழுத்துத் தேர்வு இருந்தது. அன்று காலையில் எங்கள் அப்பா என்னிடம் "சிவா, நீ கவலைப்படாத. உன்னை எப்படியும் நேர்முகத் தேர்வுக்கு தயார் பண்ணிவிடலாம். நீ சென்று வா" என்றார். அன்று AdventNet இல் எழுத்துத் தேர்வு எழுதி விட்டு நானும் மதுவும் எங்கள் அண்ணன் கார்த்தியுடன் பேசிக் கொண்டிருந்தோம். அப்பொழுது எங்கள் அம்மாவிடமிருந்து எங்கள் கார்த்தி அண்ணனுக்கு call வந்தது. இப்படி அப்பாவிற்கு வீட்டு அருகில் accident ஆயிடுச்சு. நீங்கள் கிளம்பி சீக்கிரம் போங்கள் என்றார். பின்னர் நான், மது மற்றும் கார்த்தி அண்ணன் மூவரும் அண்ணனுடைய காரில் சென்றோம் . அங்கு எங்கள் அப்பா அடிபட்டு இருந்த நிலையை நான் என்றும் நினைவு கூற விரும்பவில்லை . பார்க்க முடியாத காட்சியைப் பார்த்தேன். அப்புறம் எங்கள் அப்பாவை சென்னையில் உள்ள மிகப் பெரிய மருத்துவமனையில் சேர்த்தோம். எங்கள் அப்பா மருத்துவமனையில் இருந்த அந்த காலங்களில் எங்களுக்கு உதவியாக இருந்த எவரையும் நான் என் வாழ்க்கையில் மறக்கமாட்டேன். என் உறவினர்கள் , என் நண்பர்கள், எங்கள் அப்பாவிற்கு ரத்தம் கொடுத்த அந்த முகம் தெரியாத ஜீவன்கள், அனைவரையும் என்னால் மறக்க முடியாது . எனக்கு அதற்கு முன் ஒரு குணம் உண்டு , அதாவது எனக்கு பிடிக்காத ஒருவர் , நல்ல குணம் இல்லாத ஒருவருடன் நான் எப்பொழுதும் தோழமை வைக்க மாட்டேன். அதை மாற்றியது அந்த incident தான். அதற்கடுத்து 9 நாட்களில் எங்கள் அப்பா இறந்துவிட்டார் .

எங்களின் அப்பாவின் இறப்பு நாங்கள் அனைவரும் எதிர்பாராத ஒன்று. எங்கள் அப்பாவின் இறந்த நாளை விட அதை பின்பற்றி வந்த நாட்கள் தான் கொடுமை. எங்கள் அப்பா இறந்த வீட்டில் நிறைய பேர் இருந்ததால், எங்களுக்கு ஆறுதலாக இருந்தது . அதற்கடுத்து அனைவரும் அவரவர் வீட்டுக்குப் போய் விட்டனர். அதற்கடுத்துதான் எங்களுக்கு உண்மையான வலி தெரிந்தது . இந்த விசயத்தில் எங்கள் அமாவின் துயரம் சொல்லில் அடக்க முடியாதது. ஏனெனில் எங்கள் அம்மா அந்த 9 நாட்கள் மருத்துவமனையில் இருந்தாலும் எங்கள் அப்பா இறக்கவே மாட்டார் என்றே முழுமையாக நம்பினார். ஆனால் எங்கள் அப்பா இறந்தது அவரால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. எங்கே நாங்கள் எங்கள் அம்மாவை பற்றி பயந்து விடுவோமோ என்று பயந்ததால் அவர் அவரின் துயரத்தை என்னிடமும், மதுவிடமும் எங்கள் அம்மா சொல்லி அழ முடியவில்லை. மேலும் அவர் அவரது அலுவலக பணியைத் தொடர ராமநாதபுரம் சென்று விட்டார். அங்கு அவரின் தனிமை அவரை நித்தம் நித்தம் கொன்றது.என்னையும் மதுவையும் தேற்றவாவது என் உறவினர்கள் அருகில் இருந்தனர். ஆனால் எங்கள் அம்மாவைத் தேற்ற எவரும் இல்லை. எங்கள் அப்பா இறந்து இந்த வருடத்துடன் 5 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. மன்மதன் அம்பு படத்தில் வரும் வசனத்தைப் போல் "இந்த ஐந்து வருடங்களில் எங்கள் அப்பாவின் இறப்பின் வலி குறைந்துவிட்டது , ஆனால் அதன் சோகம் மட்டும் பாம்பை போல வயித்துக்குள் சுருண்டு எப்பொழுதும் இருக்கிறது".

எங்கள் அப்பா இறந்த வீட்டில் இருக்கும் போது எங்கள் இருவருக்கும் AdventNet இல் இருந்து நேர்முகத்தேர்வுக்கு அழைப்பு வந்தது. நாங்கள் எங்கள் இருவரின் நிலையையும் சொல்லி நேர்முகத்தேர்வை தள்ளிவைக்கச் சொன்னோம். அவர்களும் பெரிய மனது பண்ணி அதனை தள்ளி வைத்தார்கள். இந்த விசயத்தில் AdventNet மிகச் சிறந்த கம்பனி. அவர்கள் அதிகம் மனிதாபிமானம் கொண்டவர்கள். எங்கள் அப்பா இறந்தது ஆகஸ்டு 13 . எனக்கும் மதுவுக்கும் Sep 1 அன்று நேர்முகத் தேர்வு . அதில் நாங்கள் இருவரும் தேறி Sep 5 இல் AdventNet இல் சேர்ந்தோம். எங்களுக்கு இந்த வேலை அந்த நேரத்தில் மிக அவசியமாகத் தேவைப்பட்டது. அந்த வேலை எங்கள் இருவரின் கவனத்தை திருப்ப மிக அவசியமாகப்பட்டது . அந்த வேலைக்காக , நாங்கள் எப்படியும் அந்த வேலையில் சேர , தாங்கள் கூட வேலையில் இல்லாதபோதும் , எங்களுக்கு உதவிய என் நண்பர்கள் மற்றும் என் உறவினர்கள் அனைவரையும் என்னால் மறக்க முடியாது.

எங்களுக்கு வேலை கிடைத்த சந்தோசத்தைக் கூட எங்களால் கொண்டாட முடியவில்லை. அதற்கு முன் நான் எனக்கு வேலை கிடைத்த தருணத்தை என் வீட்டு காம்பௌண்டில் ஏறி ஊருக்கே கேட்கும் அளவிற்கு கத்த வேண்டும் , எங்கள் அம்மாவிற்கும் , அப்பாவிற்கும் புது துணி மணிகள் எடுத்துக் கொடுக்க வேண்டும் , என் முதல் மாத சம்பளத்தில் ஆதரவற்றோர் இல்லத்திற்கு உதவ வேண்டும் இப்படி எல்லாம் கொண்டாட வேண்டும் என்று கருதி இருந்தேன். கடைசியில் எங்களுக்கு வேலை கிடைத்தது எங்களுக்கு சந்தோசத்தை கொடுப்பதை விட எங்கள் துயரத்தை மறக்கவே பெரிதும் தேவைப்பட்டது .

ஒரு குடும்பத்தின் தலைவர் இறந்தால் அதுவும் எதிர்பாரதவிதமாக இறந்தால் அது அந்த குடும்பத்தின் எதிர்காலத்தை பெரிதும் பாதிக்கும் . 2005 இல் கல்லூரி இறுதி ஆண்டு முடித்த பிறகு நானும் மதுவும் இந்திய ராணுவத்தில் சேர Common Defence Service exam இல் தேறி அலகாபாத்தில் நேர்முகத்தேர்வுக்கு செல்வதாக இருந்தோம் . ஆனால் எங்கள் அப்பா இறந்தபடியால் அங்கு செல்ல முடியாமல் போய் விட்டது . அப்படி அங்கு சென்று தேர்வாகி இருந்தால் எங்களின் வாழ்க்கைப் பாதையே மாறி இருக்கும் . அடுத்து அந்த நேரத்தில் நாங்கள் வீடு வாங்க பெரிதும் அலைந்து கொண்டிருந்தோம். எங்கள் அப்பா அத்தகைய தருணத்திலேயே இறந்தார் . அதற்கடுத்து எங்கள் அப்பாவின் இழப்பிலிருந்து மீண்டு வீடு வாங்க வேண்டிய வேலைகளை செய்யவே 2 வருடம் ஆகிவிட்டது. அதற்குள் real estate boom ஆகி நிலம் , வீடு விலைகள் கிட்டத்தட்ட 4, 5 மடங்காகிவிட்டன . அது பொருளாதார நிலையில் மிகப் பெரிய இழப்பு .

அதற்கடுத்து எங்கள் அப்பா இறந்தது எங்கள் குடும்பத்தின் முக்கியமான முடிவுகள் எடுக்க வேண்டி இருந்த தருணம் . அத்தகைய தருணத்தில் அவர் இறந்ததால் நாங்கள் முடிவு எடுக்க முடியாமல் திணறினோம்/திணறுகிறோம். அவர் இருந்திருந்தால் எங்கள் வாழ்கை ஓட்டமே மாறி இருக்கும்.
இப்படி 2005 ஆம் ஆண்டு தெரிந்தோ தெரியாமலோ எங்கள் வாழ்க்கையில் முக்கியமான ஆண்டாக அமைந்தது.

Sunday, January 2, 2011

மன்மதன் அம்பு


மது இன்னைக்கு மாயாஜால்ல மன்மதன் அம்புக்கு டிக்கெட் புக் பண்ணி இருந்தான் . ஆனா நேத்தே அவன், அவன் நண்பர்களுடன் போய் பார்த்துட்டு வந்துட்டான். அவனோட review படம் பாக்கலாம், கடைசி 20 நிமிஷம் கொஞ்சம் கடி. பொதுவா படத்த பத்திய review ரெண்டு extreme ஆ இருந்தது. சில பேர் படம் ரொம்ப நல்லா இருக்குனாங்க . சில பேர் நல்லாவே இல்லைனாங்க. கமலோட தீவிர விசிறியான நண்பன் jdk வே ஒரு தடவ பாக்கலாம் அதுவும் கமல் fan ஆ இருக்கணும்னு சொன்னது ஆச்சரியமா இருந்தது. சரி எப்படி இருந்தாலும் படத்துக்கு போறதுன்னு முடிவெடுத்தாச்சு. எப்பயும் போல நான் , மது மற்றும் கார்த்திக் போணோம்.

படம் ஆரம்பத்திலேயே கமல் வரல. படம் ஆரம்பத்தின் சில நிமிடங்கள் மாதவன் மற்றும் த்ரிஷாவை சுற்றியே இருந்தது. அதாவது த்ரிஷா ஒரு தமிழ் நடிகையா இருக்காங்க. அவங்களை காதலிக்கிற மாதவனுக்கு அவங்க மேல ரொம்ப சந்தேகம். த்ரிஷா ஒரு holiday trip புக்காக பாரிஸ் போறாங்க. அவங்கள வேவு பாக்க மாதவன் கமலை நியமிக்கிறாரு. கமலுக்கு கான்செர் நோயாளியா இருக்கிற தன் நண்பன் ரமேஷ் அரவிந்த காப்பாற்ற பணம் தேவைப்படுரதால அவர் இந்த வேலைக்கு ஒத்துக்கிறார். வேவின் ஆரம்பத்திலேயே த்ரிஷா மேல எந்த குற்றமும் இல்லைங்கிறது தெரிகிறது. அத கமல் மாதவன் கிட்ட சொன்னதும் மாதவன் கமலை வேவு பாக்க வேண்டாம் என்றும் திரும்பி சென்னை வந்து விடுமாறும் சொல்கிறார். த்ரிஷாவை வேவு பாக்க வேண்டாம் என்று சொல்லி விட்டதால் மாதவன் பேசிய பணத்தை கமலுக்கு கொடுக்க மறுக்கிறார். இதனால் கமலின் நண்பன் ரமேஷ் அரவிந்தின் மருத்துவ செலவிற்கு பணம் கொடுக்க முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. இதனால் கமல் மாதவனிடம் த்ரிஷாவை பார்க்க ஒரு ஆள் வருகிறான். அவன் மேல் சந்தேகம் என்று பொய் சொல்லி வேவை தொடர்கிறார். இதற்கிடையில் சில வருடங்களுக்கு முன் கமலின் மனைவி ஒரு விபத்தில் இறப்பதற்கு த்ரிஷா காரணமாக இருந்ததை த்ரிஷா அறிகிறார். இதற்கடுத்து கமல் , த்ரிஷா , மாதவன் மற்றும் த்ரிஷா தோழி சங்கீதா வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்பதே கதை.

படம் முழுவதும் வெளிநாட்டில் நடக்கிறது. அதன் பெரும்பகுதி ஒரு உல்லாச கப்பலில் நடக்கிறது. படத்தின் ஒலி live recording கில் பண்ணியது . அது அருமையாகவே வந்திருக்கிறது. கமல், சங்கீதா ,மாதவன் மற்றும் த்ரிஷா அனைவரும் அருமையாகவே தமிழ் பேசுகின்றனர். மிகச் சிறந்த தமிழ் ஆர்வலரான கமல் தன் படங்களிலெல்லாம் மிகச் சிறந்த தமிழை வைப்பதோடு ஏன் ஆங்கிலத்தையும் அதிகம் உபயோகிக்கிறார் என்பது எனக்கு புரியாத விஷயம். வெகு நாட்களுக்குப் பிறகு எனக்கு இந்த படத்தில் நடித்த அனைவரையும் பிடித்திருந்தது. முக்கியமாகா கமல் , த்ரிஷா , மாதவன் மற்றும் சங்கீதா. எனக்கு மாதவன் குடிச்சிட்டு உளறதும், சங்கீதாவோட நடிப்பும் ரொம்ப பிடிச்சிருந்தது. கமல் மாதவன் தனக்கு பணம் தர முடியாது என்ற சொல்லியபோது மாதவனின் அப்பாவிடம் இன்னும் கொஞ்சம் அழுத்தி கேட்டிருந்தாலோ , அல்லது விஷயத்தை த்ரிஷாவிடம் சொல்லி விடுவேன் என்று மிரட்டி இருந்தாலோ பிரச்சினை அப்பொழுதே முடிந்திருக்கும். அதனை தவிர்த்து எனக்கு படம் எந்த தொய்வும், தேக்கமும் இல்லாமல் சென்றதாகவே தோன்றியது.

வசனம் கமல் புண்ணியம் . எப்பொழுதும் போல் வார்த்தை விளையாட்டு . ஆனால் மும்பை எக்ஸ்பிரஸ் போல் கடியாக இல்லை . சொல்லப் போனால் எனக்கு நிறைய வசனங்கள் பிடித்தே இருந்தன. முக்கியமாக குடித்துவிட்டு மாதவனும், சங்கீதாவும் உளரும் வசனங்கள் ரொம்பவே பிடித்திருந்தன . eg நான் பொன்னதெல்லாம் சொய் (நான் சொன்னதெல்லாம் பொய்). அதேபோல் அந்த மலையாளி தயாரிப்பாளரைப் பற்றி பேசும் போது " நான் பொ
றுத்துக்குவேன் . தமிழ் பொறுக்குமா ? ஆமாம் தமிழ் கொஞ்சம் தெருப் பொறுக்கும் " என்பதும் class. மேலும் சில வசனங்கள் கூர்மையாகவே இருந்தன. வீரத்தின் மறுபக்கம் மன்னிப்பு என்பதும் வீரத்தின் உச்சம் அகிம்சை என்பதும் காந்தியின் காதலரான கமலின் உச்சகட்ட வசனங்கள்.
நான் உணர்வுப் பூர்வமாக உணர்ந்தது "வலி குறைஞ்சுருச்சு . ஆனா சோகம் மட்டும் பாம்பு மாதிரி வயித்துக்குள்ள இருக்கு" என்று தன் மனைவி இறந்ததைப் பற்றி கூறுவது. என் அப்பாவின் இறப்பின் வலி இந்த ஐந்து ஆண்டுகளில் குறைந்து விட்டது . ஆனால் அந்த சோகம் மட்டும் எனக்குள் பாம்பு மாதிரி வயித்துக்குள் சுருண்டு எப்பொழுதும் இருக்கு என்பதை உணர்த்தியது.

நான் நிச்சயம் படத்தை இன்னொரு தடவை பார்ப்பேன்.

Saturday, January 1, 2011

உலகில் என்னை அதிகம் பரவசப்படுத்தும் மனிதர்கள் - 3

சச்சின் டெண்டுல்கர் :


சச்சின் டெண்டுல்கருக்கு அறிமுகமே தேவை இல்லை. இந்தியா உருவாக்கிய மிகச் சிறந்த விளையாட்டு வீரர்களில் ஒருவர். உலகம் உருவாக்கிய மிகச் சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவர் . ஒரு காலத்தில் சச்சின் அவுட் ஆகிவிட்டால் அனைவரும் டிவியை அணைத்துவிட்டு சென்றுவிடுவார்கள். அந்த அளவிற்கு விரும்பப்படுகிறவர். சச்சின் விளையாடும்போதெல்லாம் எங்கே அவுட் ஆகிவிடுவானோ என்று ஒரே பயமாக இருக்கும். இது மற்ற யாரும் விளையாடும் போது ஏற்படுவதில்லை . இதுவே சச்சினின் மீது இருக்கும் ஈடுபாட்டிற்கு சான்றாகும். எனக்கு சச்சினை பிடிக்க காரணம் அவர் வெறுமனே நன்றாக விளையாடுபவர் என்று மட்டுமே அல்ல, சச்சினின் நாட்டுப்பற்றே என்னை சச்சினின் பால் ஈர்ததாகும். சச்சின் தன்னை எப்பொழுதும் ஒரு இந்தியனாகவே முன்னிறுத்தி இருக்கிறார். தான் கிரிக்கெட் விளையாடுவதை விட தன் தாய் நாடாம் இந்தியாவிற்காக விளையாடுவதையே பெருமையாக கருதுவார். தன்னை உத்தவ்தாக்கரே போன்றோர் மராட்டியர் என்று முன்னிறுத்திய போதிலும் தான் இந்தியன் என்றே கூறுபவர். சச்சினுக்கு இணை யாரும் இல்லை. சச்சின் தான் எந்த அளவிற்கு இந்தியாவை நேசிக்கிறார் என்பது அவர் பின் கூறிய விதத்திலிருந்து அறியலாம். மும்பை 26/11 அப்புறம் சென்னையில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சென்சுரி அடித்தார். அப்பொழுது அவரிடம் நீங்கள் எப்படி உணர்கிறீர்கள் என்று கேட்ட போது நாட்டு மக்கள் மன வேதனையில் இருக்கும் இந்த நேரத்தில் அவர்கள் மனதில் சிறு அளவேனும் இந்த சென்சுரி மகிழ்ச்சியை கொடுத்தால் அதுவே எனக்குப் போதும் என்றார் . அதுதான் சச்சின். சச்சினுக்கு இந்தியாவின் மிக உயரிய civilian விருதான பாரத் ரத்னா விருது வழங்க வேண்டும் என்று கோரிக்கை பல இடங்களிலிருந்தும் எழுகிறது. அதற்க்கு எல்லா விதத்திலும் சச்சின் தகுதியானவர்.

தயான்சந்த் :


உலகின் மிகச் சிறந்த ஹாக்கி வீரர். இந்தியா உருவாக்கிய விளையாட்டு வீரர்களில் மிகச் சிறந்தவர். இவருடைய காலத்தில் இவராலையே இந்தியா ஹாக்கியில் அசைக்க முடியாத அணியாக இருந்தது . இவருடைய விளையாட்டு எப்படி இருக்குமென்றால் இவருடைய விளையாட்டை பார்த்த ஒரு முதியவர் நீ ஹாக்கி மட்டை வைத்திருப்பதால்தான் இப்படி விளையாடுகிறாய் முடிந்தால் என்னுடைய கைத்தடியை வைத்து விளையாட முடியுமா என்று கேட்டாராம் , அப்பொழுது தயான் சந்த் அவருடைய கைத்தடியை வைத்து மிகச் சிறப்பாக விளையாடினாராம். தயான்சந்த் அப்பொழுது இந்திய பிரிட்டிஷ் ராணுவத்தில் இருந்தார். இவருடைய திறமையை பார்த்த ஹிட்லர் தயான்சந்தை ஜெர்மனி வந்துவிடும்படியும் அவரை ஜெர்மானிய ராணுவத்தில் மிக உயர்ந்த பதவி அளிப்பதாகவும் கூறினார். ஆனால் தயான் சந்த் தான் இந்தியாவிற்காகவே விளையாடுவேன் என்று கூறிவிட்டார். தயான் சந்தின் திறமையை பாராட்டி ஆஸ்திரிய தலைநகரமான வியன்னாவில் தயான்சந்த்தின் நான்கு கைகளில் நான்கு ஹாக்கி மட்டைகள் இருப்பது போன்று சிலை வைக்கப்பட்டுள்ளது. இவருக்கு இந்தியா அரசு ஸ்டாம்ப் வெளியிட்டு சிறப்பித்துள்ளது.

கபில் தேவ் :


இந்தியா உருவாக்கிய மிகச் சிறந்த ஆல் ரவுண்டர். அரியானாவிலிருந்து வந்து இந்திய கிரிக்கெட்டின் முகத்தையே மாற்றியவர். இவருடைய தலைமையின் கீழயே இந்தியா 1983 இல் கிரிக்கெட் உலக கோப்பையை கைபற்றியது. அன்றைய கிரிக்கெட் உலகின் அசைக்க முடியாத அணியாக இருந்த மேற்கிந்திய தீவுகள் அணியை உலக கோப்பை இறுதிப் போட்டியில் வென்று கோப்பையை கைப்பற்ற காரணமானவர். மேற்கிந்திய தீவுகளுக்கு அடுத்து உலக கோப்பையை கைபற்றிய அணி என்ற பெருமையை ஏற்படுத்தியவர். டெஸ்ட் கிரிக்கெட் உலகில் மிக அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்று பெருமையுடன் ஓய்வு பெற்றவர். இன்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் 400 விக்கெட்டுகளுக்கு மேலாகவும் , 5000 ரன்களுக்கு மேலாகவும் சேர்த்த ஒரே கிரிக்கெட் வீரர் . விஸ்டன் பத்திரிக்கையால் 2002 ஆம் ஆண்டு Indian Cricketer of the Century என்று அறிவிக்கப்பட்டவர். எனக்கு பிடித்த விளையாட்டு வீரர்களில் ஒருவர்.

விஸ்வநாதன் ஆனந்த்:


இந்திய மூளையை உலகறியச் செய்தவர். இந்திய விளையாட்டு உலகம் உருவாக்கிய மிகச் சிறந்த விளையாட்டு வீரர்களில் ஒருவர் . இந்தியாவின் முதல் கிராண்ட் மாஸ்டர் . 2000 -2002 FIDE உலக செஸ் சாம்பியன், 2007 முதல் இன்று வரை undisputed World Champion. Knockout, Tournament, Match, Rapid and Blitz என்று பல வகைகளில் உலக சாம்பியன் ஆன ஒரே வீரர். உலக வரலாற்றில் FIDE rating இல் 2800 புள்ளிகளுக்கு மேல் பெற்ற 6 வீரர்களில் ஒருவர். கடந்த நவம்பர் மாதம் FIDE rating இல் உலகின் முதல் நிலை வீரர் என்ற பெருமையை பெற்றார். இந்தியாவில் விளையாட்டுத்துறைக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதை பெற்ற முதல் வீரர், இந்தியாவின் civilian துறையில் வழங்கப்படும் இரண்டாவது மிக உயரிய விருதான பத்மா விபூசன் விருதை பெற்ற முதல் விளையாட்டு வீரர். எந்த ஒரு ஆர்ப்பாட்டமும் இல்லாத பெரிய மனிதர். இத்தனை தகுதி இருந்தாலும் எனக்கு இவரிடம் மிகவும் பிடித்தது இவருடைய நாட்டுப்பற்று. இவரின் திறமையை பார்த்து எத்தனையோ பணக்கார நாடுகள் இவரை தங்கள் நாட்டுக் குடியுரிமையைப் பெற்று தங்கள் நாட்டுக்காக விளையாட அழைக்கின்றன. இருந்தபோதிலும் தான் இந்தியாவிற்காகவே விளையாடுவேன் என்று விளையாடுபவர். HatsOff விஸ்வநாதன் ஆனந்த்.

ஜெய் சங்கர்:


தென்னகத்து ஜேம்ஸ் பான்ட். மக்கள் கலைஞன். எனக்கு மிக பிடித்த தமிழ் நடிகர். இவருடைய நடிப்பு இயல்பாக இருக்கும் என்பதைவிட இவர் மேற்கொண்ட மக்கள் பணிகளே என்னை இவர்பால் ஈர்த்தது. திரைத்துறையிலிருந்து மக்கள் பணிகளை எந்த ஒரு ஆர்ப்பாட்டமும் இல்லாமல் மேற்கொண்டவர். இவருடைய அனைத்து சொந்த விசேசங்களையும் ஆதரவற்றோர் இல்லங்களிலும், முதியோர் இல்லங்களிலும் நடத்தியவர். டூப் நடிகர்களின் உயிரும் விலைமதிப்பற்றதுதானே என்று கூறி டூப் இல்லாமல் நடித்த முதல் கதாநாயகன். எந்த ஒரு இமேசிலும் தன்னை பொருத்திக் கொள்ளாதவர். மிகப் பெரிய கதாநாயகனாக நடித்த பிறகு எந்த ஒரு இமேஜை பற்றி கவலைப்படாமல் முரட்டுக்காளையில் வில்லனாக நடித்தார். அதற்கப்புறம் கிட்டத்தட்ட 180 படங்களில் வில்லனாகவும், குணச்சித்திர நடிகனாகவும் நடித்தார். இவருக்கு அப்புறமே மற்ற பெரிய கதாநாயகர்கள் தங்கள் கடைசி காலத்தில் குணச்சித்திர நடிகர்களாக நடித்தவர். எனக்குப் பிடித்த மக்கள் கலைஞன். என்னைப் பொறுத்தவரையில் இவருக்கும் இந்தியா அரசு ஸ்டாம்ப் வெளியிட வேண்டும்.

சாய்னா நேவால் :


என்னைப் பரவசபடுத்தும் மனிதர்களில் சமீபத்தில் சேர்ந்தவர். இன்றைய இளைய இந்தியாவின் விளையாட்டு முகமாக இருப்பவர். எந்த ஒரு ஆர்ப்பாட்டமும் இல்லாமல் முன்னேறியவர். இறகு பந்து போட்டியில் இந்தியர் எவரும் எட்டாத சிகரத்தை எட்டியவர். இறகு பந்து போட்டியின் Grand Slam ஆன நான்கு super serious வென்றவர். அவை Indonesia Super Series 2009, Singapore Super Series 2010, Indonesia Super Series 2010, Hong Kong Super Series 2010 ஆகும். 2010 ஆம் ஆண்டு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது பெற்றார். தற்போது தரவரிசையில் உலக அளவில் 2 வது இடம் வகிக்கிறார். 2010 ஆம் ஆண்டு commonwealth games இல் தங்கம் வென்று கடைசி நிமிடத்தில் இந்தியா பதக்கப் பட்டியலில் இரண்டாம் இடம் பெறக்காரணம் ஆனார். ஒலிம்பிக்கில் காலிறுதி சென்ற ஒரே இந்திய வீரர். நான் தற்போது அதிகம் விரும்பும் மனிதர்களில் ஒருவர்.

P.S :

We do the things at new year day which we like to do through out the year (as far as me through out my life). For that I have spared this blog post to post esp on this new year day. I can proudly say that I get immense pleasure in blogging. I want that to continue in this new year and thorough out my life also :-)...

Wednesday, December 22, 2010

உலகில் என்னை அதிகம் பரவசப்படுத்தும் மனிதர்கள் - 2

பேரரசர் ராஜராஜ சோழன் :

இன்றும் தமிழகத்தை உலக அளவில் பெருமைபடுத்தக்கூடிய பேரரசன் ராஜராஜ சோழனே ஆவான். இவனுடைய ஆட்சி காலத்தில் தமிழகம் பல சிறப்புகளை பெற்றது. ராஜராஜ சோழன் பல படையெடுப்புகளை மேற்கொண்டு சோழப் பேரரசை விஸ்தீகரித்தாலும் என்னை அதிகம் கவர்ந்தது அவனுடைய நிர்வாகத் திறமையே ஆகும். அவன் தன் நாட்டில் நடைபெற்ற சிறு சிறு நடவடிக்கைகளையும் நேரடியாக கண்காணித்தான். உலகிலயே மிகப் பெரிய இந்து சாம்ராஜ்யத்தை இவன் மகன் ராஜேந்திர சோழன் காலத்தில் அமைக்க அடிகோலினான். இவனுடைய ஆட்சி காலத்திலேயே கப்பற் படையின் முக்கியத்துவம் உணரப்பட்டது. ஆசியாவிலேயே மிகச் சிறந்த கப்பற்படையை நிர்மாணித்தான். பொதுவாக மௌரிய,மகத, முகலாயப் பேரரசுகள் இந்தியப் பேரரசை மேற்கே ஆப்கானிஸ்தானிலிருந்து கிழக்கே பர்மாவின் எல்லைவரையே விஸ்தீகரித்தனர் . ஆனால் இவனுடைய ஆட்சி காலத்தில்தான் கடல் கடந்து கிழக்கே இன்றைய மலேயா, இந்தோனேசியா வரை இந்தியப் பேரரசு விரிந்தது. தமிழக கட்டிடக் கலைக்கு சிறந்த சான்றாக விளங்கும் தஞ்சை பெரிய கோயிலை கட்டினான். மேலும் நாடு முழுவதும் பல சிவாலயங்களை கட்டினான் . மேலும் இவனைப் பற்றி அறிய என் ராஜராஜ பெருவேந்தன் என்னும் பதிவைக் காணவும்.

பேரரசர் அக்பர் :


பேரரசர் ஜலாலுதீன் முகம்மது அக்பர். முகலாயப் பேரரசின் மிகச் சிறந்த பேரரசர். நான் இங்கு அக்பரின் படை எடுப்புகளைப் பற்றியோ அல்லது அவரது வெற்றிகளைப் பற்றியோ பேசப் போவதில்லை . எனக்கு அக்பரைப் பிடிக்கக் காரணம் அவருடைய முன்னோர்களான மற்ற இஸ்லாமிய அரசர்களும் , சுல்தான்களும் இஸ்லாம் தவிர்த்த மற்ற மதங்களின் மீது முக்கியமாக இந்து மதத்தின் மீது வெறுப்பும் , அவற்றை அழிக்க வேண்டும் என்றும் , அவற்றின் வழிபாட்டுத்தலங்களை அழித்துக் கொண்டும் இருந்த போது அக்பர் ஒருவர்தான் மற்ற மதங்களின் மீது சகிப்புத்தன்மையை கொண்டிருந்தார். அக்பரும் ஆரம்ப காலத்தில் சில இந்து கோயில்களை அழித்தார், பின் முஸ்லிம் அல்லாதவர்களின் மீது விதிக்கப்பட்டிருந்த ஜிஸ்யா வரியை நீக்கினார். பின் சிறிது காலம் கழித்து மீண்டும் ஜிஸ்யா வரியை கொண்டு வந்தார் . பின் கடைசியாக அந்த வரியை நீக்கினார். இப்படி இந்துக்களுக்கு எதிராக சில நடவடிக்கைகளை எடுத்திருந்தாலும் அவர் பொதுவாக மற்ற சமயங்களின் மீது சகிப்புத்தன்மை கொண்டிரிருந்தார். இந்துக்களுடன் இணைந்து வாழ வேண்டிய அவசியத்தை உணர்ந்தார். அவருடைய அரசவையில் மற்ற முஸ்லிம் மன்னர்களைப் போல் அல்லாமல் நிறைய ராஜபுத்திரர்களுக்கு முக்கியத்துவம் அளித்தார். மற்ற கொடுங்கோல் முஸ்லிம் பேரரசர்களைப் போல் அல்லாமல் அக்பரின் ஆட்சியில் இந்துக்களும் , முஸ்லிம் அல்லாத மற்ற சமயத்தினரும் அமைதியாகவே வாழ்ந்தனர். இந்துகளில் இருந்த பல மூடத்தனங்களுக்கு தடை விதித்தார். அதில் ஒன்று சதி என்னும் உடன்கட்டை ஏறுதல். அவர் ஒருகட்டத்தில் இந்துவாக மாறி விடுவாரோ என்று மத்த முஸ்லீம்கள் என்னும் வகையில் அவருடைய சகிப்புத்தன்மை இருந்தது. அவர் இந்துக்களும் முஸ்லீம்களும் இணைந்து வாழ தீன்-இலாகி என்னும் புது மதத்தை உருவாக்கினார். ஒரு தடவை மராட்டிய சக்ரவர்த்தி சிவாஜி முகலாயப் பேரரசர் அவ்ரங்கசீப்புக்கு எழுதிய கடிதத்தில் அவ்ரங்கசீப் தன் தாத்தா அக்பர் போன்று சமய சகிப்புத்தன்மையுடன் இருக்க வேண்டும் என்று எழுதி இருந்தார். அந்த அளவிற்கு அக்பர் சமய சகிப்புத்தன்மையுடன் இருந்தார்.

நரசிம்ம ராவ் :

இவர் என்னுடைய பட்டியலில் அமைந்திருப்பது உங்களுக்கு ஆச்சரியம் அளிக்கலாம். நான் இவரை என்னை பரவசப்படுத்தும் மனிதர் என்று கூறுவது சற்று மிகையாக இருக்கலாம். ஆனால் இந்தியாவின் வரலாற்றில் மிக முக்கிய இடம் அளிக்கப்படவேண்டியவர். இவருக்கான உரிய இடத்தை நாம் அளிக்கவில்லை என்பது என்னுடைய எண்ணமாகும். 14 மொழிகள் தெரிந்த வித்தகர். சிரிக்காத பிரதமர் என்று பெயர் எடுத்தவர். இருந்தபோதிலும் இன்று இந்தியா உலகிலேயே இரண்டாவது வேகமாக வளரக்கூடிய நாடாகவும், உலகில் வளர்ந்து வரும் பேரரசாக இருப்பதிற்கு அடிகோலியவர். 1990 களில் இவருடைய அரசு பெரும்பான்மை பெறாத அரசாகவே இருந்தது. அப்படி இருந்தும் கம்யூனிஸ்டுகளின் எதிர்ப்பையும் மீறி இந்திய சந்தையை திறந்து விட்டார். சீனா 1970 களின் ஆரம்பத்திலேயே செய்த நடவடிக்கைள் இவராலயே நமக்கு 1990 களில் சாத்தியமானது. இவருடைய பொருளாதார சீர்திருத்தங்களின் பயனையே நாம் இன்று அனுபவிக்கிறோம்.

A.P.J. அப்துல் கலாம் :

மக்களின் ஜனாதிபதி என்று பெயர் எடுத்தவர். ஜனாதிபதிக்கான இலக்கணத்தையே மாற்றியவர். அதுவரை மக்களைப் பார்த்து வெறுமனே கை ஆட்டிச் செல்லும் முந்தய ஜனாதிபதிகளின் வழக்கத்தை மாற்றி மக்களுடன் மக்களாக கலந்தவர். இந்தியாவின் அக்னி ஏவுகணையின் தந்தை. போக்ரான் அணுகுண்டு சோதனைக்கு மூளையாக இருந்தவர். இவர் ஜனாதிபதியாக ஆவதற்கு முன்பே மக்களின் மனதில் இடம் பிடித்தவர். அதனாலையே வாஜ்பாய் தலைமையிலான அரசு இவரை ஜனாதிபதியாக ஆக்கியது. தான் செல்லும் இடங்களிலெல்லாம் மாணவர்களை சந்தித்து அவர்களை ஊக்கம் ஊட்டியவர். 2020 இல் இந்தியா வல்லரசாக வேண்டும் என்று கனவு காண்பவர். ஜனாதிபதி பதவியை கொண்டு நாட்டை முன்னேற்ற தன்னால் ஆன அனைத்து காரியங்களை செய்த ஒரே ஜனாதிபதி. அப்பழுக்கற்றவர். இவருடைய நாட்டுப்பற்று குற்றம் குறை கூற முடியாத ஒன்று. ஒரு இந்தியன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்குபவர். இந்தியாவின் civilian துறையில் வழங்கப்படும் மிக உயரிய விருதான பாரத் ரத்னா விருதை பெற்றவர் . வெளிநாட்டவர்கள் இந்திய பிரதமராகக் கூடாது என்று இவர் கூறியதாலையே சோனியா காந்தி பிரதமராக முடியவில்லை என்று கூறுவோரும் உண்டு.

டாடா
குடும்பம்:


எனக்கு டாடா குடும்பமே ரொம்ப பிடிக்கும். டாடா குடும்பம் நேர்மைக்கு பெயர் பெற்றது. அவர்கள் என்றைக்குமே இந்தியாவையே முன்னிறுத்தியவர்கள். இந்தியாவின் தொழில் வளர்ச்சிக்கு முன்னோடிகள். அவர்கள் என்றுமே குறுக்கு வழியில் செல்லாதவர்கள் என்று பெயர் பெற்றவர்கள். சிறிது நாட்களுக்கு முன் கூட ரத்தன் டாடா தாங்கள் மீண்டும் விமான சேவை தொடங்க எண்ணியபோது அப்போது விமானத்துறை அமைச்சராக இருந்தவர் எங்களிடம் 15 கோடி லஞ்சம் கேட்டார். லஞ்சம் கொடுக்க விரும்பாததாலையே நாங்கள் விமான சேவை தொடங்குவதை கைவிட்டோம் என்றார். இவ்வாறு டாடா என்றுமே நேர்மைக்கு பெயர் பெற்றவர்கள். அவர்களின் இந்திய நாட்டுப்பற்று குற்றம் குறை கூற முடியாதது.

மகாகவி
பாரதி :



பாட்டுகொரு பாரதி . தன் தீக்கங்கும் பாடல்களின் மூலம் விடுதலை உணர்வை மூட்டிய மகாகவி. பாரத மாதாவின் மேல் மிகப் பெரிய பற்று கொண்டவர். அவர் தன்னுடைய சொந்த வாழ்க்கையில் பல இன்னல்களையும் சந்தித்தாலும் தன் சுதந்திர உணர்வில் எந்த ஒரு compromise உம் செய்து கொள்ளாதவர். தன் தாய் மொழியாம் தமிழின் மேல் மிகப் பெரிய பற்று கொண்டவர். தன் தமிழ் மொழி மிகச் சிறந்த மொழி என்று ஆழமாக கருதியவர். தெலுகு, பெங்காலி, ஹிந்தி, சமஸ்கிரதம், கட்சி, பிரெஞ்சு மற்றும் ஆங்கில மொழி தெரிந்தவர். பல மொழிகளிலிருந்து தமிழுக்கு பல நூல்களை மொழி பெயர்த்தவர். அவர் நாட்டுப்பற்றை மட்டும் ஊட்டியதோடல்லாமல் சமுதாயத்தில் விளங்கிய சீக்குகளையும் சாடினார். மிகச் சிறந்த நாட்டுபற்று பாடல்களையும், சமுதாயப் பாடல்களையும், குழந்தைகளுக்கான பாடல்களையும், கர்நாடக சங்கீதத்திற்கான பாடல்களையும் பாடினார். மக்கள் கவிஞராக இருந்த பாரதியின் இறுதி யாத்திரையில் 14 பேரே கலந்துகொண்டது துரதிஷ்டவசமானது.

பாண்டிய
பேரரசர்கள் :


நான் மதுரைக்காரன் என்பதால் எனக்கு இயல்பாகவே பாண்டியர்கள் மீதும் , மதுரை மண்ணின் மீதும் ஈர்ப்பு உண்டு. தமிழ்நாட்டை ஆண்ட முப்பெரும் வேந்தர்களில் ஒருவர். சங்கம் வைத்து தமிழ் வளர்க்க பாடுபட்டவர்கள். இவர்களின் ஆட்சியில் தமிழ் நன்கு வளர்ந்தது.

Sunday, December 19, 2010

அணு - நான் இன்றி எதுவும் இல்லை



நேற்று எங்கள் அலுவலகத்தில் கிழக்கு பதிப்பகம் தன்னுடைய புத்தக ஸ்டால் அமைத்திருந்தது. சென்ற தடவையே நான் அதிக புத்தகங்களை வாங்கி இருந்தேன். அதனால் இந்த தடவை புத்தக ஸ்டால் செல்ல வேண்டாம் என்று எண்ணி இருந்தேன். சரி என்று கடைசி நிமிடத்தில் ஒரு உந்துதலில் புத்தக ஸ்டால் சென்றேன். பெரும்பான்மையான புத்தகங்கள் தனி மனிதர்களைப் பற்றி இருந்தது. அவற்றை எல்லாம் wikipedia விலேயே படித்துக் கொள்ளலாம் என்பதால் அவற்றில் ஈடுபாடு ஏற்படவில்லை. பிறகு நோட்டம் விட்டுக்கொண்டிருந்த போது இரண்டு புத்தகங்கள் கண்ணில்பட்டன. ஒன்று "அணு" மற்றொன்று இரண்டாம் உலகப் போர். இரண்டுமே நாம் பள்ளி நாட்களில் படித்ததுதான். முக்கியமாக இரண்டாம் உலகப் போரை விக்கிபீடியாவிலேயே எளிதாக படித்துக்கொள்ளலாம்தான். ஆனால் இரவில் படுத்துக்கொண்டு படிப்பதற்கு புத்தகமே எளிது என்பதால் வாங்கலாம் என்று முடிவு பண்ணினேன்.

நேற்று இரவு "அணு" புத்தகத்தை படிக்க ஆரம்பித்தேன். என்னுடைய அனுமானம் சரியாகவே இருந்தது. பெரும்பாலும் இந்த புத்தகத்தில் இருந்தது நாம் பள்ளி நாட்களில் முக்கியமாக 11 மற்றும் 12 ஆம் வகுப்புக் காலத்தில் இயற்பியலில் படித்ததே அதிகம் இருந்தது. இருந்தாலும் கிட்டத்தட்ட refresh செய்து கொள்வது போன்றே இருந்தது.

ஆரம்பகால நூற்றாண்டுகள் ஆசிய நூற்றாண்டுகளாகவே இருந்தன. முக்கியமாக இந்தியா மற்றும் சீனாவின் நூற்றாண்டுகளாகவே இருந்தன. இவ்விரு நாடுகளும் பல வழிகளில் முன்னேறி மேற்கத்திய நாடுகளுக்கு ஓர் எடுத்துக்காட்டாக இருந்தன. மேற்கத்திய நாடுகள் உலோகங்களின் பயனை பற்றி அறிவதற்கு முன்பே இவ்விரு நாடுகளிலும் உலோகங்கள் பயன்பாட்டில் இருந்தன. இப்படியாக இருந்த காலத்தில் ஐரோப்பாவில் 18,19 ஆம் நூற்றாண்டுகளில் அறிவியல் முன்னேற்றம் ஏற்பட்டது. அவர்கள் அறிவியலின் பாதையில் செல்ல ஆரம்பித்தனர். அதிலிருந்தே ஆசியாவிற்கும் ஐரோப்பாவிற்கும் வேறுபாடு ஆரம்பித்தது. ஐரோப்பா பல துறைகளில் முன்னேறிக்கொண்டிருந்தது. அவற்றில் முக்கியமானது அணு ஆராய்ச்சி. ஆரம்ப காலத்திலேயே இந்தியா மற்றும் ஐரோப்பாவில் அணு என்ற ஒன்று இருப்பதாக ஓர் அனுமானம் இருந்தது. ஆனால் அதன் உண்மையான கட்டமைப்பு எதுவும் அறிவியல் முன்னேறாத அந்த காலத்தில் தெரிந்துருக்கவில்லை .

அணு பற்றிய ஆராய்ச்சிகள் 19 ஆம் நூற்றாண்டின் இறுதியிலேயே ஆரம்பித்தன. கதிரியக்கம் கண்டுபிடிக்கப்பட்டதே அணு ஆராய்ச்சிக்கு ஆரம்பம் எனலாம். அதற்கு யுரேனியம் தன்னியல்பாக கதிர்களை உமிழ்கிறது என்று கண்டறியப்பட்டது ஆரம்பம் எனலாம். பெக்வாரல் என்பவர் யுரேனியம் தன்னியல்பாக கதிர்களை உமிழ்கிறது என்று கண்டறிந்தார். இதற்கடுத்து மேரி க்யூரி யுரேனியத்தில் மேலும் பல ஆராய்சிகள் நடத்தினார். அவர் கதிரியக்கம் உமிழும் மேலும் ஒரு தனிமத்தை கண்டறிந்தார். அது தோரியம் ஆகும். இவரே கதிர்களை தன்னியல்பாக உமிழும் இவ்வியல்புக்கு கதிரியக்கம் (Radio Activity) என்று பெயர் வைத்தார். மேரி க்யூரி மேலும் பல ஆராய்ச்சிகள் நடத்தி யுரேனியத்தை விட 10 லட்சம் மடங்கு கதிரியக்கத்தை வெளியிடும் ரேடியம் என்னும்தனிமத்தை 1902 ஆம் ஆண்டு கண்டறிந்தார். பெக்வாரல், மேரி க்யூரி மற்றும் அவருடைய கணவர் பியர் க்யூரிக்கு 1903 ஆம் ஆண்டு நோபல் பரிசு அளிக்கப்பட்டது.

ரூதர்போர்ட் அணுவைப் பற்றி மேலும் பல ஆராய்ச்சிகள் நடத்தினார். அவரே அணுவுக்குள் அணுக்கரு (nucleus) என்று ஒன்று உண்டு என்றும் அந்த அணுக்கருவிற்குள் புரோட்டான்கள் உள்ளன என்றும் கண்டுபிடித்தார். மேலும் அணுக்கருவிற்குள் புரோட்டான்கள் மட்டுமே இருப்பதில்லை என்றும் அதையும் தாண்டிய ஒரு பொருள் இருக்கவேண்டும் என்று கருதினார். அதற்கு அவர்நியூட்ரான் என்று பெயரிட்டார். கவனிக்கவும் நியூட்ரான்கள் அப்பொழுது கண்டுபிடிகப்படவில்லை. இது நடந்தது 1911 ஆம் ஆண்டு. அதற்கு பல ஆண்டுகளுக்குப் பிறகே அதாவது 1932 ஆம் ஆண்டில்தான் ரூதர்போர்டின் மாணவரான ஜேம்ஸ் சாட்விக் நியூட்ரானை கண்டுபிடித்தார். நியூட்ரான் என்ற ஒன்று கண்டுபிடிக்கப்பட்ட பின்தான் அணுவின் கட்டமைப்பு பற்றி தெரிய வந்தது. அணு என்ற ஒன்றின் நடுவில் அணுக்கரு என்ற ஒன்று இருப்பதாகவும் அந்த அணுக்கருவில் புரோட்டான்களும், நியூட்ரான்களும் இணைந்து இருப்பதாகவும் அவற்றை சுற்றி எலக்ட்ரான்கள் வலம் வருவதாகவும் கண்டறியப்பட்டது. ரூதர்போர்ட் அணுவிற்குள் நிறைய காலி இடம் இருப்பதை கண்டறிந்தார். ஒரு அணுவை ஒரு கிமீ விட்டம் கொண்டதாக விரிவுபடுத்தமுடியும் என்று கொள்வோம். அப்படி செய்தாலும் அணுவின் கரு ஒரு கோலி குண்டு அளவிலேயே இருக்கும். கிட்டத்தட்ட எலெக்ட்ரான்கள் அணுக்கருவிலிருந்து அரை கிமீ தள்ளி உள்ளன . அந்த அளவிற்கு அணுவில் காலி இடம் உண்டு.

அணுவானது புரோட்டான்களையும், நியூட்ரான்களையும் இழந்து வேறொரு அணுவாக மாறுகிறது. இந்த நிகழ்ச்சிக்கு அணுச்சிதைவு என்று பெயர். இதனையும் கண்டறிந்தவர் ரூதர்போர்டே. இவர் இதனை பிரடரிக் சோடி என்பவருடன் சேர்ந்து இதனை கண்டறிந்தார். இத்தகைய நிகழ்வு எல்லா அணுக்களிலும் இயல்பாக நிகழ்வதில்லை. ரேடியம், யுரேனியம் போன்ற கதிரியக்க தனிமங்களில்தான் நடைபெறுகிறது. இந்த அணுச் சிதைவின்போது ஆல்பா, பீட்டா, காமா ஆகிய மூன்று கதிர்கள் வெளிப்படுகின்றன. ஆல்பா கதிர் இரண்டு புரோட்டான்களையும் , நியூட்ரான்களையும் கொண்டது. ஆக யுரேனியம் ஒரு ஆல்பா கதிரை இழந்து தோரியமாக மாறுகிறது. பீட்டா கதிர் வெறும் எலெக்ட்ரானை மட்டுமே கொண்டுள்ளது. யுரேனியமானது இவ்வாறு ஆல்பா, பீட்டா கதிர்களை உமிழ்ந்து தோரியமாகவும், பின் மேலும் சில மாற்றங்களுக்குப் பிறகு அது ரேடியமாகவும் , பின் அது ரேடானாகவும், பின் அது பொலேனியமாகவும் மாறுகிறது. பின் கடைசியில் அது காரியமாகவும் மாறுகிறது. பின் அதில் மாற்றம் நிகழ்வதில்லை.

அணு இயற்பியலில் முக்கிய இடத்தை வகிப்பவர் ரூதர்போர்ட். 1908 ஆம் ஆண்டு இவர் நோபல் பரிசு பெற்றார். இவருடைய மாணவர்கள் 11 பேர் நோபல் பரிசு பெற்றனர் என்பதிலிருந்து ரூதர்போர்டை பற்றி அறியலாம். ரூதர்போர்ட் அணுவை ஆல்பா கதிர்களை வைத்து தாக்கினார். இதே போன்ற ஆராய்ச்சியில் மேரி க்யூரியின் மகள் ஐரீன் க்யூரியும் அவருடைய கணவர் பிரடெரிக் ஜோலியேவும் பல அணுக்களை ஆல்பா துகள்களை கொண்டு தாக்கினார். இதன் மூலம் பல தனிமங்களின் ஐசோடோப்புகள் உருவாக்கப்பட்டன. இவ்வாறு செயற்கையாக ஐசோடோப்புகளை உருவாக்கியதால் இருவருக்கும் 1935 இல் நோபல் பரிசு வழங்கப்பட்டது. ரூதர்போர்டும், ஐரீன் க்யூரியும் அணுக்களை ஆல்பா துகள்களை கொண்டு தாக்கியபோது இத்தாலிய விக்ய்ஞானி என்ரிகோ பெர்மி அணுவைத் தாக்க நியூட்ரான்களை தேர்ந்தெடுத்தார். இது அணு இயலில் முக்கியமான நிகழ்ச்சியாகும். பெர்மி அணுவை குறைந்த வேகம் கொண்ட நியூட்ரான்களை கொண்டு தாக்கியபோது மிகப் பெரிய விளைவு ஏற்பட்டது. ஆனால் பெர்மிக்கு என்ன நடந்தது என்றே தெரியவில்லை. இவருக்கு அடுத்து ஆட்டோ ஹான் என்பவரும் நியூட்ரான்களை கொண்டு அணுக்களை தாக்கினார். அவருக்கும் நடந்தது என்ன என்று தெரிந்திருக்கவில்லை. நடந்தது என்ன என்பதை முழுமையாக தெரிந்து கொண்டவர் லிசே மைட்னர் என்னும் யூதப் பெண் ஆவார். அவரே இவ்விளைவு அணு பிளப்பு என்று கூறினார். அணுப் பிளப்புக்காக ஆட்டோ ஹானுக்கு 1945 இல் நோபல் பரிசு வழங்கப்பட்டது.

இரண்டாம் உலகப் போரின்போது பல யூத விக்ய்ஞானிகள் ஹிடலருக்குப் பயந்து அமெரிக்காவில் குடி ஏறினர். அப்பொழுதுதான் அணுவை பிளக்க முடியும் என்றும் , அப்படி பிளப்பின் போது பேராற்றல் வெளிப்படும் என்னும் செய்தி அமெரிக்காவை அடைந்தது. அப்பொழுது இரண்டாம் உலகப் போர் உச்சகட்டம் அடைந்திருந்தது. ஆக அணுவைப் பிளப்பதன் மூலம் அணு குண்டு என்ற பேரழிவு ஆயுதத்தை தயாரிக்கலாம் என்ற எண்ணம் உலக அளவில் எழுந்தது. ஆக அமெரிக்காவில் இருந்த விக்ய்ஞானிகள் அணு ஆயுத தயாரிப்பு என்ற நோக்கத்தில் ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். அமெரிக்க விய்ஞானிகளுக்கு ஹிட்லர் அணு குண்டு தயாரிப்பதற்கு முன் அணு குண்டை தயாரித்து விட வேண்டும் என்ற வெறி . அதனால் அவர்கள் அப்பொழுது அமெரிக்க ஜனாதிபதியான ரூஸ்வெல்ட்டிடம் இதற்கான ஒப்புதல் பெற்றனர் . அதே நேரத்தில் ஜெர்மனியும் அணு குண்டு தயாரிப்பில் ஈடுபட்டது. நார்வேயில் இருந்த ஒரு கன நீர் ஆலையை எப்படியும் கை பற்றிவிட வேண்டும் என்று ஜெர்மனி மிகப் பிரயத்தனப்பட்டது . ஏனெனில் அணு ஆராய்ச்சியில் நியூட்ரான்களின் வேகத்தை குறைப்பதற்கும், மேலும் குளிர்விப்பானாகவும் கன நீர் பயன்பட்டது. அதற்காகவே அப்பொழுது உலகில் இருந்த அந்த ஒரே கன நீர் தயாரிப்பு ஆலையை கைபற்ற ஜெர்மன் பிரயத்தனப்பட்டது. அதனை முறியடிக்க அமெரிக்காவும் , பிரிட்டனும் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டன.

யுரேனியத்தில் ஒரு ஐசொடோப்பான யுரேனியம் - 235 தான் அணுகுண்டு தயாரிப்பதற்கு ஏற்றது. ஆனால் யுரேனியத்தில் யுரேனியம்-235 0.7% இருக்கும். ஆகவே யுரேனியம்-235 ஐ பிரித்தெடுக்க அமெரிக்காவில் ஒரு ஆலை அமைக்கப்பட்டது. உலகின் முதல் அணுகுண்டு அமெரிக்காவால் தயாரிக்கப்பட்டு 16 ஜூலை 1945 இல் பரிசோதிக்கப்பட்டது. இதே நேரத்தில் இரண்டாம் உலகப்போரில் திருப்பமாக ஜெர்மனி அடி மேல் அடி வாங்கியது. பின் மே 8, 1945 அன்று ஜெர்மனி சரண் அடைந்தது. ஆனால் ஜப்பான் மட்டும் சரணடையாமல் தொடர்ந்து போரிட்டு வந்தது. அதனால் அதன் மீது அணு குண்டு வீசுவதென அமெரிக்க அதிபராக ரூஸ்வெல்ட்டுக்குப் பின் வந்த ட்ரூமன் முடிவெடுத்தார். ஆனால் அதனை எதிர்த்து பல விக்ய்ஞானிகள் அவருக்கு கடிதம் எழுதினர். இருந்த போதிலும் முதல் முதலாக 1945 ஆகஸ்டு 6 ஆம் தேதி ஹிரோஷிமாவின் மீது அன்று அணு குண்டு வீசப்பட்டது. அது யுரேனியம் -235 வகையைச் சார்ந்தது . அதற்கடுத்து மூன்று நாள் கழித்து ஆகஸ்டு 9 ஆம் தேதி நாகசாகியின் மீது அணு குண்டு வீசப்பட்டது. அது புளூட்டோனியம் வகையைச் சார்ந்தது.

நாம் இது வரை பார்த்தது அணுக்கரு பிளவு. ஓர் அணுவை நியூட்ரான் கொண்டு தாக்கும்போது அது இரண்டு அணுக்களாகப் பிரிகிறது . அப்பொழுது ஆற்றல் வெளிப்படுகிறது. இதுவே தத்துவம். இதற்குப் பின் அணுக்கரு இணைவின் மூலமும் ஆற்றல் வெளிப்படும் என்று கண்டறியப்பட்டது. இரண்டு ஹைட்ரஜென் அணுக்கள் இணைந்து ஹீலியம் அணுவாக மாறும்போது மிகப் பெரிய ஆற்றல் வெளிப்படும் என்று கண்டறியப்பட்டது. அதாவது 2 gm எடை கொண்ட இரண்டு ஹைட்ரஜன் அணுக்கள் இணைந்து ஒரு ஹீலியம் அணு உருவாவதாக கொள்வோம். இப்படி உருவாகும் ஹீலியம் அணுவின் எடை 4gm ஆக இருப்பதில்லை. அதன் எடை 3.97gm ஆகவே இருக்கிறது. மீதி 0.03 gm ஆற்றலாக வெளிப்படுகிறது. இதுவே அணுக்கரு இணைவின் அடிப்படை. அணுக்கரு இணைவின் மூலம் வெளிப்படும் ஆற்றலானது அணுக்கரு பிளவின் மூலம் வெளிப்படும் ஆற்றலை விட பல மடங்கு அதிகம். சூரியனில் நடைபெறுவது இந்த நிகழ்வே. இதன் மூலமே சூரியனில் ஆற்றல் வெளிப்படுகிறது. இவ்வாறு இரண்டு ஹைட்ரஜென் அணுக்கள் இணைந்து ஹீலியம் அணுவாக மாறுவதன் மூலம் ஆற்றல் வெளிப்படும் இந்த நிகழ்வை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்படும் அணு குண்டு ஹைட்ரஜென் குண்டு எனப்பட்டது . ஹைட்ரஜென் குண்டை முதன் முதலில் பரிசோதித்த நாடு சோவியத் ரஷ்யா . 1961 இல் ரஷ்யாவால் சோதிக்கப்பட்ட ஹைட்ரஜென் குண்டு ஹிரோசிமாவில் வீசப்பட்ட குண்டைப் போல் 6000 மடங்கு சக்தி வாய்ந்தது. இதுவரை உலகில் 500 க்கும் மேற்பட்ட தடவை அணுகுண்டு சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.

இதன் பின் அணுவை ஆக்க வேலைக்குப் பயன்படுத்த முதல் அணு மின்நிலையம் 1956 ஆம் ஆண்டு பிரிட்டனில் அமைக்கப்பட்டது. இன்றைய அணு உலைகளின் அடிப்படை அணுகரு பிளவு ஆகும். யுரேனியம் அணுவை நியூட்ரான் கொண்டு தாக்கும் போது அது இரண்டு அணுவாகப் பிளந்து அதன் மூலம் ஆற்றல் வெளிப்படுகிறது. இப்படி பிளவின் மூலம் மேலும் பல நியூட்ரான்கள் வெளிப்படுகின்றன. இவை மற்ற யுரேனியம் அணுக்களை தாக்கி மேலும் ஆற்றலை வெளிப்படுத்துகிறது. இப்படி கட்டுபடுதப்படாத நிலையில் யுரேனியம் அணு பிளக்கும் செயலே அணு குண்டு ஆகும். ஆனால் அணு உலைகளில் இந்த யுரேனியத்தை கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் பிளக்கும் போது வெளிப்படும் ஆற்றலைக் கொண்டு நாம் மின்சாரம் தயாரிக்கலாம். இதுவே இன்றைய அணு உலைகளில் நடைபெறுகிறது.

இன்றைய நிலையில் கட்டுப்படுத்தப்பட்ட வகையில் அணுக்கருவை இணைக்க முடியவில்லை. ஆனால் அதனை கட்டுப்படுத்தப்பட்ட வகையில் இணைத்தால் நாம் மின்சாரம் பெறலாம். அணுக்கரு இணைவின் மூலம் வெளிப்படும் ஆற்றலே மிக நல்லது. ஏனெனில் அணுக்கரு பிளவின் மிக முக்கிய அம்சம் கதிரியக்கமாகும். இது மிக ஆபத்தானது. இதற்க்கு அணு உலைகளில் மிக அதிக பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டியுள்ளது. மேலும் எரிந்து முடிந்த யுரேனியமும் மிக ஆபத்தானது. அதனால் அதனை பாதுகாக்கவும் வேண்டி உள்ளது. ஆனால் இத்தகைய ஆபத்துகள் அணுக்கரு இணைவில் கிடையாது. மேலும் அணுக்கரு பிளவிற்கான எரிபொருள் யுரேனியம், புளுட்டோனியம் போன்றவை ஆகும். இவை மிக குறைந்த அளவே உள்ளன. அணுக்கரு இணைவிற்கு தேவையான எரிபொருள் மிக சாதாரணமான ஹைட்ரஜன். இது நீர் வடிவில் மிக அதிக அளவு உள்ளது. ஆக கட்டுப்படுத்தப்பட்ட வகையில் அணுக்கருவை இணைத்தால் நாம் எவ்வளவு வேண்டுமென்றாலும் மின்சாரம் தயாரிக்க முடியும். இதற்கான ஆராய்ச்சிகள் நடைபெறுகின்றன. உலகின் முதல் அணுக்கரு இணைவு உலை தெற்கு பிரான்சில் அமைக்கப்பட்டு வருகிறது. இது ITER (International Thermonuclear Experimental Reactor)எனப்படுகிறது. இதில் சீனா, ஐரோப்பிய யூனியன், அமெரிக்கா , ரஷ்யா, தென் கொரியா, ஜப்பான் மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் இணைந்து மேற்கொள்கின்றன.

அணு உலைகள் பல வழிகளில் பயன்படுகின்றன. ஆரம்ப காலத்தில் நீர் மூழ்கி கப்பல்கள் டீசல் என்ஜின் கொண்டு இயங்கின. இன்று பல நாடுகள் டீசல் என்ஜின் கொண்டு இயங்கும் நீர் மூழ்கி கப்பல்களையே கொண்டிருக்கின்றன. டீசல் என்ஜின் கொண்டு இயங்கும் நீர் மூழ்கி கப்பல்களில் பல இடர்பாடுகள் உண்டு. அதாவது டீசல் எஞ்சின்கள் அதிக சத்தம் எழுப்பக் கூடியவை. அந்த சத்தம் வெகு தூரம் நீரில் பரவும் . அந்த சத்தத்தைக் கொண்டு எதிரி நாட்டுக் கப்பல்கள் மிக எளிதாக இந்த நீர் மூழ்கி கப்பல்களை கண்டுபிடித்து அழித்து விட முடியும். அதனால் இந்த வகை நீர்மூழ்கி கப்பல்கள் ஆபத்தற்ற பாதுகாப்பு பகுதிகளில் இருக்கும்போது தங்களுடைய பாட்டரிகளை recharge செய்து கொண்டு அதை வைத்து நீந்தும். மேலும் டீசல் நிரப்ப அவை அடிக்கடி தாய் நாட்டுக்குச் செல்ல வேண்டும். இத்தகைய இடர்பாடுகள் அணு உலைகளை பயன்படுத்தும் nuclear submarine களில் கிடையாது. இந்த nuclear submarine களில் சிறிய அணு உலைகள் இருக்கும். அவற்றின் மூலம் மின்சாரம் பெற்று நீர் மூழ்கி கப்பல்கள் இயங்கும், மேலும் கடல் நீரிலிருந்து குடி நீரையும் , ஆக்ஜிசனையும் பெற்றுக் கொள்ளும். ஒரு nuclear submarine தனக்குத் தேவையான உணவையும், மருந்துகளையும் நிரப்பிக் கொண்டால் அவை பல ஆண்டுகள் நீரின் மேற்பரப்புக்கு வராமல் நீரில் மூழ்கியே இருக்க முடியும். 1950 களின் மத்தியில் அமெரிக்கா முதல் nuclear submarine ஐ கட்டுவித்தது. இந்தியாவும் தனது முதல் nuclear submarine ஐ உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இதே போன்று விமானம் தாங்கி கப்பல்களை இயக்கவும் அணு உலை பயன்படுகிறது.

இன்று விண்ணில் செலுத்தப்படும் செயற்கைகோள்கள் தங்களுக்குத் தேவையான மின்சாரத்தை சூரிய ஒளியிலிருந்து பெறுகின்றன. அதற்காக அவற்றின் இறக்கை போன்ற பகுதிகளில் சூரிய ஒளியை மின்சாரமாக மாற்ற ஒளித்தகடுகள் பொருத்தப்படுகின்றன. ஆனால் வெகு தொலைவில் வியாழன், செவ்வாய் போன்ற கோள்களை ஆராய அனுப்பப்படும் விண் ஓடங்களில் மேற்கூறிய முறையை செயல்படுத்த முடியாது. ஏனெனில் அவ்வளவு தொலைவில் சூரிய ஒளி மிகக் குறைவாகவே இருக்கும் . அதன் மூலம் மின்சாரம் தயாரிக்க முடியாது. ஆக அத்தகைய ஓடங்களிலும் அணு உலைகளே பயன்படுத்தப்படுகின்றன. அமெரிக்கா செலுத்திய ஒரு விண்வெளி ஓடத்தில் அதிக பட்சமாக 30 கிலோ புளூட்டோனியம் வைத்து அனுப்பப்பட்டது.

இந்த பிரபஞ்சத்தில் ஒவ்வொரு பொருளுக்கும் எதிர் பொருள்கள் இருப்பதாக நம்பப்படுகிறது. இத்தகைய பொருளும் அதன் எதிர் பொருளும் சந்தித்துக் கொண்டால் அவை ஒன்றை ஒன்று அழித்துக் கொண்டு இறுதியில் வெறும் ஆற்றலே மிஞ்சும். இந்த பிரபஞ்சம் உருவானபோது அது பொருளையும், எதிர் பொருளையும் கொண்டிருந்தது. அத்தகைய பொருளும் எதிர் பொருளும் ஒன்றை ஒன்று அழித்துக் கொண்டிருந்தன. ஆனால் ஒரு கட்டத்தில் எதிர் பொருள் எல்லாம் மறைந்து இறுதியில் வெறும் பொருளே மிஞ்சியது. அதற்கான காரணம் தெரியவில்லை.

இந்த வகையில் ஆராய்ச்சி நடத்திய போது விக்ய்ஞானிகள் புரோட்டான்களுக்கு எதிர் பொருளான எதிர் புரோட்டான்களையும், எலக்ட்ரான்களுக்கு எதிர் பொருளான பாசிட்ரான்களையும் , நியூட்ரான்களுக்கு எதிர் பொருளான எதிர் நியூட்ரான்களையும் கண்டறிந்தனர். இந்த எதிர் புரோட்டான்கள் எதிர் மின்னோட்டத்தையும், பாசிட்ரான்கள் நேர் மின்னோட்டத்தையும் கொண்டிருந்தன. எதிர் நியூட்ரான்களும் மின்நூட்டமற்றவையே. விக்ய்ஞானிகள் இவற்றைக் கொண்டு முதன் முதலில் 9 எதிர் ஹைட்ரஜன்களை உருவாக்கினர். ஆனால் அவை அற்ப காலமே உயிர் வாழ்ந்தன. அதாவது ஒரு நொடியில் 4000 த்தில் ஒரு பங்கே உயிர் வாழ்ந்தன. அதற்கடுத்து மேலும் பல ஆராய்ச்சிகள் செய்து 50,000 எதிர் ஹைட்ரஜன்களை உருவாக்கினர். இப்பொழுது இத்துறையில் மேலும் பல ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

Friday, December 17, 2010

உலகில் என்னை அதிகம் பரவசப்படுத்தும் மனிதர்கள் - 1

நான் முன்பே கூறியது போல இந்த உலகில் சில மனிதர்களைப் பற்றி பேசும்போதே எனக்கு பரவசம் பொங்கும். அவர்களைப் பற்றி திரும்ப திரும்ப கேட்க வேண்டும் பார்க்க வேண்டும் என்று தோன்றும். அவர்களைப் பற்றிய சிறிய சிறிய செய்திகளும் பரவசம் தரும். எனக்கு முக்கியமாக ஒருவரைப் பிடித்திருக்க வேண்டுமென்றால் அதுக்கு முக்கிய criteria அவர்கள் இந்தியாவிற்காக நல்லது செய்திருக்க வேண்டும் , தாங்கள் இந்தியர் என்பதில் பெருமிதம் கொள்ள வேண்டும். அத்தகையவர்களே எனக்கு ரொம்ப பிடிக்கும். இந்தியாவில் இருந்துகொண்டே இந்தியாவிற்காக எதுவும் செய்யாமல் முக்கியமாக தங்களை இந்தியர் என்று சொல்வதில் பெருமிதம் கொள்ளாவிட்டால் அவர்கள் எப்படிப்பட்டவர்கள் ஆனாலும் எனக்குப் பிடிக்காது. அத்தகையோர் பட்டியலே கீழே . இதில் இந்தியர் தவிர வேறு வெளிநாட்டவர் இடம் பெறாததில் வியப்பில்லை. நான் இங்கும் இடும் பட்டியல் வரிசைகிரகமாக இல்லை .

சர்தார் வல்லபாய் படேல் :


இந்தியாவின் இரும்பு மனிதர். தனி மனிதராக இந்தியாவை ஒருங்கிணைத்த மாமனிதர். இவர் இல்லையேல் இந்தியா இன்று துண்டு துண்டாகத்தான் இருந்திருக்கும். இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சராகவும் , முதல் துணை பிரதமராகவும் இருந்தவர். இந்திய பிரிவினையின் போது கிட்டத்தட்ட 600 க்கும் மேற்பட்ட தனி ராஜ்ஜியங்கள் இருந்தன. அவற்றில் 565 ராஜ்ஜியங்கள் இந்தியாவில் இருந்தன. அவற்றை எல்லாம் இந்தியாவில் இணைக்க வழிகோலினார். இந்த 565 ராஜ்ஜியங்களில் ஜுனாகத், ஹைதராபாத் மற்றும் காஷ்மீர் மட்டும் இந்தியாவில் இணைய மறுத்தன. இவற்றில் ஜுனாகத் பாகிஸ்தானுடன் இணையவும், ஹைதராபாத் தனியாக இருக்கவோ அல்லது பாகிஸ்தானுடன் இணையவோ இருந்தன. காஷ்மீர் தனி சுதந்திரம் பெற்ற நாடாக இருக்க விரும்பியது. இவற்றில் ஜுனாகத் மற்றும் ஹைதராபாத்தில் சுல்தான்கள் முஸ்லீம்களாகவும் மக்களில் 80% க்கும் மேல் இந்துக்களாகவும் இருந்தனர். ஜுனாகத்தும் ஹைதராபாத்தும் பாகிஸ்தானிலிருந்து வெகு தொலைவில் வேற இருந்தன . இருந்தபோதும் அந்த சுல்தான்கள் பாகிஸ்தானுடன் இணைய விரும்பினர். பிரிட்டிஷ் ராஜ்ஜியம் இந்த தனி ராஜ்ஜியங்களை தங்கள் இஷ்டப்படி பாகிஸ்தானுடனோ , இந்தியாவுடனோ இணையவோ அல்லது தனி சுதந்திரம் பெற்ற நாடாகவோ இருக்க அனுமதித்திருந்தது. இப்படி சட்டம் இந்த சுல்தான்களுக்கு சாதகமாக இருந்தபோதிலும் மக்களின் நலனையும் அவர்களின் ஏகோபித்த ஆதரவையும் கருத்தில் கொண்டு சர்தார் இந்த சுல்தாகளை இந்தியாவுடன் இணைய கோரினார். அவர்கள் மறுத்தபோது ராணுவத்தை அனுப்பி அவர்களை வழிக்கு கொண்டு வந்தார். இத்தகைய தைரியம் நேருவிக்கே கிடையாது. நேரு இத்தகைய ராணுவ நடவடிக்கைக்கு ஒப்புதல் தரமாட்டார் என்பதாலையே நேரு ஐரோப்பிய பயணம் மேற்கொண்டிருந்தபோது acting prime minister ஆக இருந்து ஹைதராபாத்திற்கு ராணுவத்தை அனுப்பி அதனை இந்தியாவுடன் இணைத்தார்.

பாகிஸ்தான் காஷ்மீரில் அத்துமீறி நுழைந்தபோது அதனை தடுக்க உடனே ராணுவத்தை அனுப்பவேண்டும் என்று கூறினார். ஆனால் நேருவும் , மவுண்ட்பேட்டனும் காஷ்மீர் மன்னர் இந்தியாவுடன் இணைவதாக ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போடும்வரை காத்திருக்கச் சொன்னார்கள். இந்தியா காஷ்மீருக்கு ராணுவத்தை அனுப்பிய போது பாகிஸ்தானும் காஷ்மீரின் பாதி பகுதிகளை ஆக்கிரமித்திருந்தது. அப்பொழுது நேரு இவ்விசயத்தை ஐநாவிற்கு கொண்டு சென்ற போது படேல் அதனை கடுமையாக எதிர்த்தார். படேல் நம் ராணுவத்தை வைத்தே நாம் முழு காஷ்மீரை கைபற்றிவிடலாம் என்று கூறினார். ஆனால் படேலின் எதிர்ப்பையும் மீறி நேரு இவ்விசயத்தை ஐநாவிற்கு கொண்டு சென்றார். அப்பொழுது ஐநா யார் யார் எவ்வளவு இடத்தை ஆக்கிரமித்துல்லார்களோ அவ்விடங்கள் அவரவருக்கு என்று கூறி விட்டது. அதனால் பாதி காஷ்மீர் பாகிஸ்தானுக்குச் சென்று விட்டது. நேரு மட்டும் படேலின் பேச்சை கேட்டிருந்தால் இந்நேரம் முழு காஷ்மீரும் இந்தியாவுடன் இருந்திருக்கும். மேலும் சுதந்திரம் பெற்றபோது இந்திய அரசு பிரிவினைத்தொகையாக 55 கோடி ரூபாயை பாகிஸ்தானுக்கு கொடுக்க வேண்டி இருந்தது . அத்தொகையை பாகிஸ்தானுக்கு கொடுக்க கூடாது என்று படேல் கடுமையாக எதிர்த்தார் . ஏனென்றால் அப்பணத்தை பாகிஸ்தான் காஷ்மீரில் இந்தியாவிற்கு எதிராக பயன்படுத்தும் என்பதால். ஆனால் அப்பொழுது காந்தி அப்பணத்தை பாகிஸ்தானுக்கு கொடுக்க வேண்டும் என்று சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தார். அதனால் அப்பணத்தை பாகிஸ்தானுக்கு கொடுக்கவேண்டி வந்தது . படேல் சொன்னது போலவே பாகிஸ்தான் அப்பணத்தை இந்தியாவிற்கு எதிராக காஷ்மீரில் பயன்படுத்தியது. இப்படி பல விசயங்களில் படேலின் பேச்சை கேட்காததாலையே இந்தியா இன்றும் கஷ்டப்படுகிறது. படேல் மட்டும் நேருவிற்கு பதிலாக பிரதமராக ஆகி இருந்தால் இந்நேரம் இந்தியா எவ்வளவோ நன்றாக இருந்திருக்கும். இது நான் மட்டுமே கூறுவது அல்ல இந்தியாவின் முன்னால் ஜனாதிபதி ராஜேந்திர பிரசாத் மற்றும் J.R.D.டாட்டா போன்றோரும் இதே கருத்தை கொண்டிருந்தனர்.

பீல்ட் மார்ஷல் சாம் மானக்சா :

சாம் பகதூர் என்று அழைக்கப்படும் சாம் மானக்சா பஞ்சாப் அமிர்தசரசில் பார்சி பெற்றோருக்குப் பிறந்தார். தன்னுடைய 40 வருட ராணுவ சேவையில் இரண்டாம் உலகப் போர், 1947 இந்தியா பாகிஸ்தான் போர் , இந்திய சீனப் போர் , 1965 இந்திய பாகிஸ்தான் போர் , 1971 வங்கதேசப் போர் ஆகிய போர்களில் பங்கேற்றவர். இரண்டாம் உலகப் போரில் இவருடைய பணி மிகவும் பாராட்டப்பட்டது. மானக்சா இத்தனை போர்களில் பங்கேற்றாலும் அவர் மிகப் பெரிய புகழ் பெற்றது 1971 வங்கதேசப் போர் ஆகும். வங்கதேசப் போரின் போது மானக்சா இந்தியாவின் எட்டாவது ராணுவத் தளபதியாக இருந்தார். அவருடைய வழிகாட்டுதலின் பேரில் இப்போரில் இந்தியா மிகப் பெரிய வெற்றி பெற்றது. தற்காலங்களில் நடைபெற்ற போரில் இப்போரே மிக குறுகிய காலத்தில் முடிந்த போராகும். இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு மிக அதிக ராணுவ கைதிகள் சிறைபட்ட போராகும் . கிட்டத்தட்ட 90,000 பாகிஸ்தான் ராணுவத்தினர் சரணடைந்தனர். இவருடைய பணியைப் பாராட்டி இந்திய அரசு இவருக்கு மிக உயரிய பட்டமான பீல்ட் மார்ஷல் பட்டத்தை அளித்தது . இப்பட்டத்தைப் பெற்றவர்கள் இரண்டே இரண்டு பேர்தான். ஒருவர் பீல்ட் மார்ஷல் கரியப்பா. இன்னொருவர் மானக்சா. மானக்சா 1971 போரின் முடிவில் எந்த அளவிற்கு மக்களிடம் புகழ் பெற்றிருந்தார் என்றால் , அப்பொழுது பிரதமராக இருந்த இந்திரா காந்தி எங்கே மானக்சா ராணுவப் புரட்சியின் மூலம் ஆட்சியைப் பிடித்துவிடுவாரோ என்று பயப்படுமளவுக்கு மானக்சா மக்களிடம் புகழ் பெற்றிருந்தார்.

இந்திரா காந்தி :

இந்தியாவின் அசைக்க முடியாத பிரதமராக இருந்தவர். இந்தியாவின் உறுதியான பிரதமராக இருந்தவர். இந்திரா காந்தி அவருடைய தந்தையான நேருவை விட பல விதங்களில் மாறுபட்டவர். இந்திரா காந்தி நேருவைப் போல் அல்லாமல் பல விசயங்களில் உறுதியான முடிவெடுத்தவர். இந்திரா காந்தியின் பல நடவடிக்கைகள் இந்தியாவில் மட்டுமல்லாமல் இந்த துணைக்கண்டத்திலேயே மிக ஆழமான விளைவுகளை ஏற்படுத்தியது. அவர் பல நடவடிக்கைகளை துணிந்து எடுத்தவர். என்னைப் பொறுத்தவரையில் இந்திய சீனப் போரின் போது நேரு அல்லாமல் இந்திரா காந்தி பிரதமராக இருந்திருந்தால் நிச்சயம் அந்தப் போரின் முடிவு மாறி இருந்திருக்கும் அல்லது இத்தகைய படு தோல்வியை இந்தியா பெற்றிருக்காது. வங்கதேசப் போரில் இந்தியா பங்கெடுக்க வேண்டும் என்று அவர் எடுத்த முடிவு மிகத் துணிச்சலான ஒன்று. நிச்சயம் நேரு இத்தகைய முடிவெடுத்திருக்க மாட்டார். ஏனெனில் அதற்கு முன் நடைபெற்ற இந்திய பாகிஸ்தானியப் போரிற்கும் இப்போரிற்கும் மிக முக்கிய வித்யாசம் உண்டு. அது என்னவென்றால் இப்போரில் பாகிஸ்தான் முதலில் இந்தியாவுடன் நேரடியாக போர் தொடுக்கவில்லை . இப்போர் முதலில் பாகிஸ்தானின் உள்நாட்டுப் போராகவே இருந்தது. மேற்குப் பாகிஸ்தான் , கிழக்குப் பாகிஸ்தானின் மீது போர் தொடுத்தது. போர் என்பதைக்காட்டிலும் அட்டூழியம் பண்ணியது. பல பெண்கள் கற்பழிக்கப்பட்டனர். இதனால் லட்சக்கணக்கான மக்கள் கிழக்கு பாகிஷ்தானிலிருந்து இந்தியாவிற்குள் தஞ்சம் புகுந்தனர். பிற நாட்டின் பிரிவினை விரும்பாதது இந்தியாவின் கொள்கையாக இருந்த போதிலும் இந்தியா கிழக்குப் பாக்கிஸ்தானிற்கு ஆதரவாக போரில் இறங்கியது மிக முக்கிய நடவடிக்கையாகும். இப்போரில் நிச்சயம் பாகிஸ்தானிற்கு ஆதரவாக அமெரிக்க என்னும் மிகப் பெரிய பேரரசு போரில் இந்தியாவிற்கு எதிராக குதிக்கும் என்று தெரிந்த போதிலும் இந்தியா இப்போரில் குதித்தது. அமெரிக்காவிற்கு எதிராக அப்போதைய சோவியத் பேரரசின் ஆதரவை பெற்றது இந்திரா காந்தியின் அரசியல் ராஜதந்திரத்தை காட்டியது. இதன் மூலம் பாகிஸ்தான் என்னும் நம் எதிரியை இரண்டாகப் பிரித்தார். பங்களாதேஷ் மக்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்களை தடுத்து நிறுத்தினார். பங்களாதேஷ் என்னும் நாடு உருவாகியது.

அவர் பிரதமராக இருந்த காலத்தில் இலங்கையில் நடந்த தமிழர்களுக்கெதிரான படுகொலைகளை , இனப் படுகொலைகள் என்று வர்ணித்தார். இந்திரா காந்தி மட்டும் இறக்காமல் இருந்திருந்தால் நிச்சயம் இலங்கை தமிழர்களுக்கு தனி ஈழம் மலர்ந்திருக்கும். சோவியத் பேரரசுடன் 20 வருட ஒப்பந்தம் போட்டுக்கொண்டார். இதன் மூலம் இந்தியாவின் தொழில் வளர்ச்சிக்கு வித்திட்டார். இதன் மூலம் ராகேஷ் சர்மா விண் வெளிக்குச் சென்றார் . இந்தியா சுதந்திரம் பெற்ற போது இந்தியாவுடன் இணைய ஒப்புக் கொண்ட தனி ராஜ்ஜிய மன்னர்களுக்கு பென்ஷன் வழங்க ஒப்புக்கொண்டது. இந்திரா காந்தி பிரதமராக ஆன பிறகு வெள்ளை யானைக்கு தீனி போல அளிக்கப்பட்டுக் கொண்டிருந்த இந்த பென்சனை நிறுத்தினார்.

அதே போல் இந்திரா காந்தி தீவிரவாதத்திற்கெதிராக மிகத் தீவிர நடவடிக்கை எடுத்தார். அவர் காலத்தில் பஞ்சாப்பை இந்தியாவிலிருந்து தனியாகப் பிரிக்க வேண்டும் என்று காலிஸ்தான் தீவிரவாத இயக்கம் உருவாகியது. அவர்கள் அமிர்தசரஸ் பொற்கோயிலில் பதுங்கி இருந்தனர். அவர்களை அழிக்க ராணுவத்தை பொற் கோயிலிற்குள் செல்ல உத்தரவிட்டார். இதன் மூலம் காலிஸ்தான் இயக்கம் முற்றிலும் அழிக்கப்பட்டது. இந்த நடவடிக்கை அவரது உயிருக்கே உலை வைத்தது. என்னைப் பொறுத்தவரை இந்திரா காந்தி இன்று இருந்திருந்தால் காஷ்மீர் பிரச்சினை எல்லாம் எப்பொழுதே முடிந்திருக்கும்.

எல்லாவற்றிக்கும் மேலாக இந்திரா காந்தி 1974 இல் மேற்கொண்ட "புத்தர் சிரித்தார்" என்னும் அணு ஆயுத சோதனையே உலக அளவில் மிக அதிர்ச்சியான விளைவுகளை ஏற்படுத்தியது. அது உள்நாட்டு தொழில்நுட்பத்தைக் கொண்டு மேற்கொண்ட அணு ஆயுத சோதனை ஆகும். இத்தகைய சோதனையை செய்ய மிகத் துணிச்சல் வேண்டும். அந்த துணிச்சல் இந்திரா காந்திக்கு மட்டும்தான் இருந்தது . இது எந்த அளவிற்கு துணிச்சலான பெரிய செயல் என்றால் , அப்பொழுது ஐநாவின் பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பு நாடுகளாக இருந்த அமெரிக்கா, சோவியத் யூனியன், பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் சீனாவிற்கு அடுத்து அணு ஆயுத சோதனை செய்த ஒரே நாடு இந்தியாதான். இது எந்த அளவிற்கு உலகில் விளைவுகளை ஏற்படுத்தியது என்றால், இந்தியாவின் இந்த சோதனைக்கு அடுத்தே அணு தொழில்நுட்பம் வேறு நாடுகளுக்குச் செல்லமால் இருக்க Nuclear Suppliers Group ஆரம்பிக்கப்பட்டது.

இந்திரா காந்தியைப் பற்றி கடும் விமர்சனங்கள் எழாமல் இல்லை. அவரைப் பற்றி முக்கியமான கடும் விமர்சனம் அவருடைய emergency நடவடிக்கையாகும். அதேபோல் ரூபாயின் மதிப்பை குறைத்ததும் மிக தீவிரமான விளைவுகளை ஏற்படுத்தியது. ஆனால் என்னைப் பொறுத்தவரை அவருடைய emergency நடவடிக்கை சரியான ஒன்றுதான். அக்காலங்களில்தான் இந்தியாவில் அனைத்து நடவடிக்கைகளும் ஒழுங்காக நடந்தன. என்னைப் பொறுத்தவரை இந்தியா இதுவரை உருவாக்கிய பிரதமர்களிலே இந்திரா காந்திதான் மிகச் சிறந்தவர்.

பேரரசர் சாம்ராட் அசோகர்:

உலகிலேயே மிகப் பெரிய இந்தியப் பேரரசை அமைத்தவர் . இவருடைய பேரரசு மேற்கே பெர்சியா (இன்றைய ஈரான்) முதல் கிழக்கே அஸ்ஸாம் வரையிலும் , தெற்கே வட கேரளா , வட ஆந்த்ரா வரையிலும் பரவி இருந்தது. பேரரசர் அசோகரின் ஆரம்ப கால வாழ்க்கை முழுவதும் ரத்த சரித்திரமே. தான் ஆட்ச்சிக்கு வர தன் அண்ணன்கள் அனைவரையும் கொன்றார். அவருக்கு எதிரான அனைத்து நடவடிக்கைகளையும் இரும்புக் கரம் கொண்டு அடக்கினார். அவருடைய ராணுவம் தன் நாட்டின் எல்லையை விஸ்தீகரிக்க அண்டை நாடுகளின் மீது மிக பயங்கரமான போர்களைத் தொடுத்தது. அவருடைய வாழ்க்கையில் திருப்பத்தை ஏற்படுத்தியது கலிங்கப்போர் ஆகும். கலிங்கம் என்பது இன்றைய ஒரிசா ஆகும். அக்காலத்தில் அக்கலிங்கம் மௌரிய சாம்ராஜ்யத்தின் கீழ் வரவில்லை. பேரரசர் சந்திரகுப்த மௌரியராலயே அதை மௌரிய பேரரசின் கீழ் கொண்டு வரமுடியவில்லை . அந்நாட்டின் மீது அசோகர் மிகப் பெரிய போர் தொடுத்தார். அப்போரின் முடிவில் கலிங்கம் தோற்றது. ஆனால் அப்போரின் விளைவுகள் மிகப் பயங்கரமாக இருந்தது. அதனைப் பார்த்து பேரரசர் அசோகர் முற்றிலும் மனம் மாறினார். பௌத்த மதத்தை சார்ந்து அகிம்சாவாதியாக மாறினார். அதற்குப் பின் அவர் இவ்வுலகம் கண்டிராத மிகச் சிறந்த பேரரசராக விளங்கினார். அதற்கடுத்து அவர் எந்த நாட்டின் மீதும் போர் தொடுக்கவில்லை. தன் அண்டை நாடுகளுடன் மிகச் சிறந்த நல்லுறவை பேணினார்.

அகிம்சாவாதியாக மாறிய அவர் உலக வரலாற்றிலேயே முதல் முறையாக அடிமைத்தனம்,வேட்டையாடுதல், மீன் பிடித்தல், காடு அழித்தலை தடை செய்தார். அவர் மக்களின் மீது மட்டுமல்லாமல் மற்ற உயிரினங்களின் மீதும் அன்பு செலுத்தினார். நாடு முழுவதும் மரங்களை நட்டார். உலக வரலாற்றிலேயே முதல் முறையாக தன் நாட்டு மக்களுக்கு மிகச் சிறந்த மருத்துவ வசதிகளை அளித்தார். அவர் பௌத்த மதத்துக்கு மதம் மாறினாலும் பின் வந்த முஸ்லிம் மன்னர்களை போல் அல்லாமல் யாரையும் கட்டாயமாக மதம் மாற்றவில்லை. அனைத்து மதங்களையும் தன் மதத்தைப் போலவே எண்ணினார். பிற மதங்களுக்கு செய்யும் தீங்கு தன் மதத்திற்கே செய்யும் தீங்கு என்று கருதினார். பிற உயிரினங்களுக்கு செய்யும் தீங்கு தனக்கே செய்யும் தீங்கைப் போன்றது என்று எண்ணினார். தன் மக்களை ஒற்றுமையுடனும், அன்புடனும் பிற மத சகிப்புத்தன்மையுடனும் வாழுமாறு அறிவுறுத்தினார் . மனித வரலாற்றிலேயே முதல் முறையாக தன் அண்டை நாடுகளுக்கு மனிதாபிமான முறையிலான உதவிகளை செய்தார். அவை மருத்துவம், பொறியியல், கிணறு வெட்டுதல், மரம் நடுதல் போன்றவையாகும். கல்விக்கு மிக அதிக முக்கியத்துவம் அளித்தார். உலக வரலாற்றிலேயே முதலில் அமைந்த நாலந்தா, தக்சசீல பல்கலைக்கழகங்களை அமைத்தார் . இததகைய பேரரசரை இவ்வுலகம் கண்டதில்லை என்பது போல் இருந்தது அவருடைய ஆட்சி . உலகம் இன்று ஏங்கும் மிகச் சிறந்த பேரரசர் அசோகர் ஆவார்.