Monday, January 7, 2019

என் திரையுலக தேவதைகள்கால வரிசைப்படி  பாத்தா எனக்கு பிடிச்ச ஹீரோயின்ல முதல்ல நியாபகம் வர்றது தேவிகா. அவருடைய அந்த அழகிய பெரிய கண்கள்தான் அவருடைய பிளஸ்சே . எனக்கு என்னமோ காதல் பாடல்களைவிட சோகப்பாடல்களில்தான் அவர் மிகவும் அழகாக இருப்பதாக தோன்றும். 'எந்தன் பார்வையின் கேள்விக்கு பொருள் என்ன சொல்லடி, ராதா' வைவிட 'சொன்னது நீதானாவில்தான்' அவர் மிகவும் அழகாக இருப்பார். பனியில்லாத மார்கழியாம்  வைவிட 'நினைக்கத் தெரிந்த மனமே' வில்தான் அழகு. எனக்கு என்னமோ அவருடைய கண்களில் எப்பொழுதும் ஒரு சோகம் இழையோடுவதாகத் தோன்றும்

எனக்கு பிடித்த இன்னவொருவர்னா அது , ஜமுனா . இவரைப் பிடிக்க, ஒரே ஒரு பாடலைப் பார்த்தால் போதும். 'குழந்தையும் தெய்வமும்' படத்தில் இருந்து 'அன்புள்ள மான்விழியே' பார்த்தாலே போதும். நிச்சயம் அவருடைய விழிகள், மான் விழிகள்தான். அந்த அழகிய பெரிய கண்களைக்  கொண்டு அந்த ஒரு பாடலில் அத்தனை காதல் உணர்வுகளை  காட்டி இருப்பார்.  நான் பார்த்த மிகச் சிறந்த காதல் பாடல்களில் இதுவும் ஒன்று. அந்த பாடல்  வரிகளும் அவ்வளவு மிகச் சிறப்பாக ஜமுனாக்காகவே எழுதியது போலவே இருக்கும். எனக்குத் தெரிந்து அவர் தமிழில் அதிகப் படங்களில் நடித்திருக்கவில்லை. குழந்தையும் தெய்வமும் படம் பல களங்களில் பயணித்திருக்கும் . அது முழுதாக காதல் படமாகவே இருந்திருந்தால் நல்லா இருந்திருக்கும் .  எனக்கு அவருடைய நடிப்பில் ஒரு முழு நீள காதல் படத்தைக் பாக்கணும்னு ரொம்ப ஆசை. 

சில பேர் Short Bust ஆக வந்து மிக அதிக தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பார்கள் . அப்படி ஒருத்தர்தான் நதியா. மற்ற பெரிய நடிகைகளுடன் ஒப்பிடும் போது , அவர் நடித்த திரைப்படங்கள் மிகச் சிலதான். ஆனால் இன்றைய காலகட்டம் வரை நதியா என்றாலேயே தமிழ் ரசிகர்களுக்கு ஒரு ஈர்ப்புதான். நதியாவும்  அமலாவும் கிட்டத்தட்ட ஒரே கால கட்டங்களில்தான் அறிமுகம் ஆனார்கள். அமலாவும் சிறந்த அழகிதான். சொல்லப் போனால் நதியாவை விட அழகிதான். ஆனால் நதியாவிடம் ஒரு ஈர்ப்பு இருந்தது. அந்த தெத்துப் பல்லுக்கு ஒரு அழகா கொடுத்ததே நதியாதான் . அதே மாதிரி அவருடைய ட்ரெஸ்ஸிங் சென்சும் ரொம்ப நல்லா இருக்கும். கொஞ்சம் கூட உறுத்தாத மாதிரி மாடர்ன் டிரஸ் போடுறதுல நதியாவ அடிச்சிக்க முடியாது. அவர் அளவுக்கு மாடர்ன் ட்ரெஸ்சும், ட்ரடிஷனல் ட்ரெஸ்ஸும் செட் ஆகுறது ரொம்ப குறைச்ச பேருக்குதான். எனக்கு அவருடைய பாடல்களில் மிகப் பிடித்தது , 'கண்ணா, உனைத் தேடுகிறேன் வா' . இந்தப் பாட்டுல , ஒரு சோகம் இழையோடிய காதல் இருக்கும் . அதுவும் அந்த சுடிதாரில் ரொம்ப அழகா இருப்பார் . நதியாவின் மிகச் சிறந்த காதல் பாடல்னா அது, 'சின்னத் தம்பி பெரிய தம்பி'ல வரும் , 'ஒரு காதல் என்பது'. சான்சே இல்ல , செம அழகா இருப்பார். 

அடுத்து ஜெயஸ்ரீ . எங்க அம்மா , திருப்பி திருப்பி கேட்பாங்க , இவள எப்படிடா உனக்கு பிடிச்சதுனு . எதோ பிடிச்சுருச்சுனு சொல்லுவேன். ஜமுனா, தேவிகா அளவுக்கு இல்லனாலும், பிடிக்கும். ஜெயஸ்ரீ கொஞ்சம் துடுக்கா  திமிரா நடிக்கிறது ரொம்ப பிடிக்கும். ஜெயஸ்ரீ நடிச்ச மத்த படங்கள் இருந்தாலும், எனக்கு என்னவோ ரொம்ப நினைவில் இருப்பது 'திருமதி ஒரு வெகுமதி'. அதுல அவருக்கு ரொம்ப பெரிய கேரக்டர் கிடையாது, இருந்தாலும் அந்த திமிரா நடிக்கிறதுனால பிடிச்சுருக்கோ என்னவோ. இதே அளவு பிடிச்ச மத்த நடிகைகள்னா அது காஞ்சனா, வாணிஸ்ரீ, ஜீவிதா. ஜீவிதா, ரொம்ப அழகிலாம் கிடையாது . சொல்லப் போனா ரொம்ப சாதாரணமா இருப்பார் . பக்கத்து வீட்டுப் பொண்ணு மாதிரி . ஆனா ஏதோ ஒரு ஈர்ப்பு இருக்கும். பொதுவா , பக்கத்து வீட்டுப் பொண்ணு மாதிரி இருக்கப் நடிகைகளோடு எப்பயும் சட்டுனு ஒரு connection உருவாகிடும். பொதுவா பசங்களுக்கு , ரொம்ப அழகா இருக்கப் பொண்ணுங்களாம் ரொம்ப தூரம்தான் . நம்மளுக்குலாம் செட் ஆகாதுனு (கிடைக்காதுனு ;) ) . ஜீவிதா அழகா இருக்கப் பாட்டுல ஒண்ணுன்னா அது , 'நான் தேடும் செவ்வந்திப் பூவிது' . 

ஜெயப்ரதா  - இவர பிடிக்காதவங்க யாரும் இருக்க முடியுமான்னு எனக்குத் தெரியல . அவர் தமிழ்ல நடிச்சதே மொத்தமே ஏழே ஏழு படங்கள்தான் . அதுவும் அவரோட peak time ல வந்தது 4 படம்தான். அந்த நாளுல ரெண்டு டப்பிங் படங்க :( . தமிழ் சினிமாக்கு ஏன் இந்த சோதனை :( . அவரோட ,  நினைத்தாலே இனிக்கும் ,சலங்கை ஒலியலாம் யாரால மறக்க முடியும். ஜெயப்ரதா , ஜெயப்ரதா , ஜோடியா தமிழ்ல நடிச்சது ஒருத்தர் கமல், இன்னொருத்தர் விஜயகாந்த் (படம் - ஏழை ஜாதி) :) .

குஷ்பூவோட ஆரம்ப கால படங்களிலாம் ரொம்ப அழகா இருப்பார் . அதுலயும் , வருஷம் 16 ல, சான்சே இல்ல , செமயா இருப்பார் . அந்த படம் முழுசும் ரொம்ப அழகா இருப்பார். அந்த க்ளைமாக்ஸ மட்டும் பாசில் மாத்தி இருந்தாருன்னா, என்றும் மனச விட்டு நீங்காத படமா இருந்திருக்கும் :( . இளமைத் துள்ளலோட இருக்குறதுனா, குஷ்பூவ வருஷம் 16 ல பாத்தா தெரியும். 

அர்ச்சனா - பாலு மகேந்திரா ஒரு பேட்டில சொல்லி இருப்பார் , என்னுடைய ஹீரோயின்ட்ட மண்ணின் மணம் இருக்கணும் . எங்கயோ இருந்து வெள்ளையா ஒரு பொண்ண கூட்டிட்டு வந்து என்னால நடிக்க வைக்க முடியாது. அவர் சொன்ன மாதிரி  அவரோட எல்லா ஹீரோயின்ட்டயும் மண்ணின் மனம் இருக்கும், அர்ச்சனாவும் அதில் ஒருத்தர் . அர்ச்சனாவை எனக்கு எப்ப பிடிச்சதுனு தெரியாது , ஆனா , ரொம்ப லேட்டாதான் பிடிச்சது , அந்த மண்ணின் மணத்திற்காக பிடிச்சது .  வீடு படத்துலலாம் அவ்வளவு இயல்பா இருப்பார். அர்ச்சனாவோட அமைதிதான் அழகு . எனக்கு , இன்னும் இருக்க டவுட் , ரெட்டை வால் குருவில பேசுறதுதான் அவரோட உண்மையான குரலா ? .
  
அர்ச்சனா மாதிரி எனக்கு ரொம்ப லேட்டா பிடிச்ச இன்னொரு ஹீரோயினா அது, கஸ்தூரி. சொல்லப்போனா ரொம்பவே லேட்டாதான். கஸ்தூரி அளவுக்கு களையான முகமும் , வடிவமும் கொண்ட நடிகைகள் குறைச்சுதான் . அவருக்கு  இணையா ,அழகான பல்வரிசை கொண்டவங்கனா அது பானுப்ரியாவும் ,K.R. விஜயாவும் தான் . கஸ்தூரியும் , பக்கத்து வீட்டுப் பொண்ணு அழகுதான் . சிட்டி பக்கத்து வீடு ;) .  கட்டுமரக்காரன்லலாம் ரொம்ப அழகா இருப்பார்.  இன்னும் அவர் நிறைய நடிச்சுருக்க வேண்டியது .  ஆனா நம்ம தமிழ் சினிமாக்குத்தான் தமிழ் பொண்ணுங்களே பிடிக்காதே . அதே மாதிரி ஒருத்தவங்க மேல இருக்க மதிப்பு , அவங்களோட அழகையும் தாண்டி அறிவும் ,தைரியமும்தான் கொடுக்கும். அதுக்கு மிகச் சிறந்த உதாரணம் கஸ்தூரி . எத்தனை ஹீரோயின் , Master Mind India லலாம் கலந்துக்கிட்டு மிளிர்ந்தாங்க?.

இப்படி வெவ்வெறு காலகட்டத்துல இந்த லிஸ்ட்ல இருந்தவங்களோட லிஸ்டு ரொம்ப பெரிசு . 

2 comments:

البيت المثالى said...
This comment has been removed by a blog administrator.
Unknown said...
This comment has been removed by a blog administrator.