Saturday, September 21, 2013

London Titbits - 2

  • புதிதாக லண்டன் வருபவர்களுக்கு லண்டன் நிச்சயம் ஆச்சரியம் கொடுக்கும். சில பேருக்கு அதிர்ச்சியே கொடுக்கும் . NewYork போன்ற நகரத்தை எதிபார்த்து வந்தால் லண்டன்  நிச்சயம் அதிர்ச்சிதான். ஏனெனில் இங்கு நீங்கள் மிக உயர்ந்த கட்டிடங்களை அதிகம் காண முடியாது. சிறிது காலத்திற்கு முன்பிருந்துதான் உயரமான கட்டிடங்கள் வர ஆரம்பித்துள்ளன. அதேபோல பல முக்கிய சாலைகள் கூட two lane சாலைகள்தான். இரண்டு பஸ்கள் எதிரெதிரே வரும்போது மிக நெருக்கமாகச் செல்லும். நம்ம ஊரில் கூட நீங்கள் இங்கு இருப்பதை விட பெரிய சாலைகளைக் காண முடியும். அதே போல பல வீடுகளில் கார் பார்க்கிங் இருக்காது. அவர்களின் கார்களை சாலையின் இருபுறங்களில்தான் நிறுத்தியிருப்பார்கள். அது அவர்களுக்கு என அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்ட இடம் தான் . அவற்றிற்கிடையே இருக்கும் அந்த ஒரு லேனில் பஸ்ஸு செல்வதே ஆச்சரியமாக இருக்கும். 
  • இங்கிலாந்துகாரர்கள் பழமையை போற்றுபவர்கள் . பாரில் கூட ரொம்ப பழமையான பாரில்தான் அதிக கூட்டம் இருக்கும் . எங்க அலுவலகத்துக்கு முன்னாடி இருக்கும் ஒரு பார் 1615 இல் கட்டப்பட்டது. அந்த பாரில் அவ்வளவு கூட்டம் இருக்கும் . அதே போல் பல வீடுகளில் பெருமையாக 1600, 1700 ,1800 களில் கட்டப்பட்டது என்று குறிப்பிட்டுருப்பார்கள். இங்கு கவுன்சில் அலுவலகங்களில் நீங்கள் குடி இருக்கும் வீட்டில் இதுவரை யார், யார்  குடி இருந்தார்கள் என்று தெரிந்துகொள்ளலாம்.   இங்கிலாந்துகாரர்கள் எந்த அளவிற்கு பழமை விரும்பிகள் என்றால் , அந்த காலங்களில் பஸ்ஸில் போகும்போது ஒரு இடத்தில் இறங்க வேண்டும் என்றால் , அந்த பஸ்ஸில் கட்டி இருக்கும் ஒரு மணியைப் பிடித்து இழுப்பார்கள் , டிரைவர் பஸ்ஸை நிறுத்துவார். அதே போல் இப்பொழுதும் பஸ்ஸை நிறுத்த அழுத்தும் சுவிட்ச்சில் இருந்து மணியோசைதான் வரும் :).  இங்கிலாந்தின் பழமையைப் பாதுகாக்க அதிக முனைப்பு காட்டுவார்கள் . அதனால் ஒரு வீடு கட்டும்போது அந்த வீட்டின் செங்கலின் நிறத்தைக்கூட அந்தந்த பகுதி கவுன்சில்கள்தான் தீர்மானிக்கும். எனவே ஒரு வீடு மற்றொரு வீட்டிலிருந்து வெளிப்புற தோற்றத்தில் பெரிதாக மாறுபடாது.
  • எனக்கு இவர்களின் உணவுப் பழக்க வழக்கங்கள் ரொம்ப பிடிக்கும் . நிச்சயம் சரிவிகித உணவுகளை உண்ணுகிறார்கள். காலையில் காய்கறி அல்லது பழ சாலடையும் , சூப்பும் அதிகம் சாப்பிடுகிறார்கள். உணவிற்குப் பின் நிச்சயம் ஒரு பழம் எடுக்கிறார்கள். அதேபோல் உடற்பயிற்சியில் இவர்களின் ஈடுபாடும் ஆச்சரியம்  அளிக்கிறது.   காலையும் மாலையும் ஜாக்கிங் செல்பவர்களை அதிகம் பார்க்க முடியும் . முடிந்த அளவு சைக்கிளில் அதிகம் செல்ல நினைக்கிறார்கள் . வெயில் காலம் ஆரம்பித்துவிட்டாலே நீங்கள் அதிகம் சைக்கிளைப் பார்க்கலாம். இத்தகைய பழக்க வழக்கங்கள் நிச்சயம் மற்ற மேற்கு உலக நாடுகளிலும் இருக்கலாம் ஆனால் நேரில் பார்க்கும்போது நன்றாக இருக்கிறது. இங்கு உடற்பயிற்சி எடுக்க அரசாங்கம் அதிகம் ஊக்குவிக்கிறது. ஊரின்  ஒவ்வொரு மூலையிலும் பூங்காவை நீங்கள் அதிகம் காண முடியும். அது சிட்டியின் மிக மத்தியப் பகுதிகளாக இருந்தாலும் அவ்வளவு பெரிய பூங்காவை நீங்கள் காண முடியும். இப்படி  மூலைக்கு மூலை பூங்கா இருந்தால் ஏன்தான் எந்த நாடும் ஒலிம்பிக்கில் தங்க பதக்கம் பெறாது. இதைப் பார்க்கும்போது சைக்கிள் கற்றுக் கொள்வதற்குக் கூட பூங்கா இல்லாமல் தெருவில் ஓட்டி மற்றவர்களின் மீது மோதி திட்டு வாங்கும் நம் ஊர் சிறுவர்களை நினைத்தால் பாவமாக இருக்கிறது.
  • இங்கிலாந்தின் மீது இவர்கள் காட்டும் ஈடுபாடு நிச்சயம் ஆச்சரியம் . இந்த வருட ஆ ஷஸ் போட்டியின் போது எங்கும் எப்படி இங்கிலாந்து கிரிக்கெட் fever இருந்ததோ அதேபோன்று விம்பிள்டனில் ஆன்டி முர்ரே ஜெயித்த போது எங்கும் முர்ரே fever தான் . இந்த தடவை final இல் ஆண்டி முர்ரே விளையாடியாதால் , டிக்கெட்டின் விலை 83,000 GBP. அதாவது நம்ம ஊர் மதிப்பில் 83 லட்சம் ரூபாய்!.  இது அதன் முகமதிப்பான 260 GBP ஐ விட 322 மடங்கு அதிகம் . அதேபோன்று supermarket லாம் போனால் British meat, British Milk , British Potato என்று பிரிட்டிஷ் பொருட்களுக்கு என்று தனி விளம்பரமும் மதிப்பும் கொடுப்பார்கள். அதே போன்று பிரிட்டிஷ் கார்களுக்கு என்று எப்பொழுதுமே தனி மதிப்பு கொடுப்பார்கள். இந்த உணர்வு அனைத்து நாடுகளுக்குமே பொருந்தும் என்றாலும் இதை மற்றொரு நாட்டில் நேரில் பார்க்கும் போது ஏதோ இனம் புரியாத ஆச்சரியம் ஏற்படுகிறது .
  • அதே போன்று இங்கிலாந்து அரச குடும்பத்தின் மீது இவர்களின் பற்றும் இவர்கள் காட்டும் மதிப்பும் ஆச்சரியம் . இங்கிலாந்து அரச குடும்பம் பற்றி ஒரு செய்தி அல்லது புகைப்படமாவது இல்லாமல் ஒரு நாளும் இங்கு உள்ள பத்திரிகைகள் வராது . வில்லியமிற்கு அரச வாரிசு ஜார்ஜ் பிறந்தபோது பத்திரிகைகள் எங்கும் அதே செய்தி. ஊரே குதூகலமாக இருந்தது.
  • பல நாட்டவர்கள் அதிகம் இருக்கும் நாடுகளில் இங்கிலாந்து முக்கிய இடம் வகிக்கிறது. அமெரிக்காவிற்கும் இதில் முக்கிய இடம் இருந்தாலும் சதவிகித அடிப்படையில் பார்த்தால் நிச்சயம் இங்கிலாந்து அமெரிக்காவை விட முன்னில் இருக்கும் என்று தோன்றுகிறது. நான் மற்றயதொரு பதிவில் சொன்னமாதிரி லண்டனில் இருக்கும் 33 borough க்களில், 30 borough க்களில் குறைந்தது 100 மொழி பேசுகிறார்கள் . இத்தகைய காரணங்களினால்தான் ICC எப்பொழுதும் இங்கிலாந்திலேயே உலக கோப்பை கிரிக்கெட் நடத்த விரும்பும் . அப்போழுதுதான் அனைத்து நாடுகளின் போட்டிகளுக்கும்  கூட்டம் வரும் என்பதற்காக. ICC இத்தகைய காரணத்தை விரும்பும்போது அதை வெறுப்பவர்களும் இருக்கிறார்கள். இங்கிலாந்து இந்தியாவிற்கு இடையே நடைபெற்ற Champions Trophy கிரிக்கெட் போட்டியின் போது இங்கிலாந்து அணியைவிட இந்திய அணிக்கே அதிக கூட்டம் சேர்ந்தது. பல நேரங்களில் போட்டி மும்பையில் நடக்கிறதா இல்லை லண்டனில் நடக்கிறதா என்றே தெரியாதது மாதிரி இருந்தது . இதனாலையே அதை வெறுத்து , மற்ற நாடுகளில் இருந்து குடியேறிய முதல் தலைமுறையினர், தான் பிறந்த நாட்டின் அணியை ஆதரிக்கட்டும் ஆனால் அவர்களின் தலைமுறையினர் இங்கிலாந்து அணியையே ஆதரிக்க வேண்டும் என்று எழுதியவர்களும் உண்டு. 
  • நம்ம நாட்டை விட இங்கு அதிகம் இரட்டைக் குழந்தைகளைக் காணுவதாக எனக்குத் தோன்றுகிறது. அதிலும் ஒரே trolly யில் இரண்டு அடுக்கு வைத்துக் கொண்டு இரட்டைக் குழந்தைகளை அழைத்துச் செல்பவர்களை அதிகம் காண முடியும்.
Photo Courtesy : http://www.coachcalorie.com/benefits-of-outdoor-exercise/

2 comments:

JDK said...

// எங்க அலுவலகத்துக்கு முன்னாடி இருக்கும் ஒரு பார் 1615 இல் கட்டப்பட்டது. அந்த பாரில் அவ்வளவு கூட்டம் இருக்கும் // Good observation machi..by the way...cheap'aa costly'aa...?

Haripandi Rengasamy said...

Costly thaan machi .. pazhamaiyaanathunaalae athu costly thaan inka :)