Saturday, September 7, 2013

உலகமயமாக்கலிலிருந்து உள்ளூர்மயமாக்கல்


சற்று நாட்களுக்கு முன்பு Isle of Wight டூர் போயிருந்தோம் . அங்கு போனபிறகு, சாப்பாட்டிற்கு என்ன வழி என்று திணறியபொழுது கண்ணில் McDee பட்டபிறகுதான் அனைவருக்கும் நிம்மதி. எப்படியும் ரெண்டு நாட்களை McDee யை வைத்து ஓட்டிவிடலாம் என்று தோன்றியது. அப்புறம் சுற்றிப் பார்த்தால் எங்கும் Costa, StarBucks, McDee, Dominoz என்று எங்கும் தெரிந்த உணவுக் கடைகள். உலகமயமாக்களின் (Globalization) னின் ஆகச் சிறந்த மாற்றம் இதுதான். இன்று இந்த உலகின் எந்த மூலைக்குச் சென்றாலும் நிச்சயம் உங்கள் ஊரில் இருக்கும் அதே கடைகளை, பொருட்களை, உணவுகளை அங்கே நீங்கள் பார்க்க முடியும். அதனால் உங்களை பெரிதாக மாற்றிக்கொள்ளாமல் அல்லது மாற்றுவதற்கு அதிக கஷ்டப்படாமல் அங்கு நீங்கள் வாழ முடியும். ஆனால் எனக்கோ இதுதான் globalization னின் மிகப் மோசமான மாற்றமாகத் தோன்றுகிறது.

முன்பெல்லாம் நம்ம ஊரில் , நம்ம அம்மா அப்பா வெளியூருக்குப் போய் வந்தால் அந்த ஊரில் என்ன ஸ்பெசலோ அது நிச்சயம் வாங்கி வருவார்கள். திருநெல்வேலி அல்வா , மதுரை கலர் பூந்தி இப்படி பல. ஆனால் இப்பொழுது நீங்கள் திருநெல்வேலி போகாமலையே உங்க ஊரிலேயே திருநெல்வேலி அல்வா வாங்கிவிட முடியும். இதுதான் உலகமயமாக்கலின் மாற்றம்.

அன்னைக்கு என் friend கிட்ட பேசிகிட்டு இருக்கும்போது , நீ எனக்கு என்ன வாங்கிட்டு வருவன்னு கேட்டா, அதுக்கு நான் , 'என்ன வேணும்னு சொல்லுனு' சொன்னேன். அதுக்கு அவ 'அங்க என்ன special லோ அத வாங்கிட்டு வா' னு சொன்னா. எனக்கு என்ன வாங்கணும்னே தோணல . லண்டன்ல என்ன ஸ்பெசல்னு யோசிச்சுப் பாத்தா எனக்கு எதுவுமே தோணல . இங்க கிடைக்குற எல்லாமே அங்க கிடைக்குது . அப்புறம் என்ன ஸ்பெசல். உலகம் முழுசா கிடைக்குற திருநெல்வேலி அல்வால என்ன ஸ்பெசல் இருக்கப் போகுது.

இந்த உலகமயமாக்கலினால் அனைத்து ஊர்களும்  தங்களோட அடையாளத்தை இழந்துவிட்டதாகவே எனக்குத் தோன்றுகிறது. இப்படி திருநெல்வேலி போன்ற ஊர்கள் தங்களுடைய அடையாளங்களை ஏற்றுமதி செய்து அடையாளங்களை இழக்கும் பொழுது உலகமயமாக்கலால் இறக்குமதி செய்யப்பட்ட வெளியூர் அடையாளங்களினால் தங்களின் உள்ளூர் அடையாளங்களை தொலைத்துவிட்டு இருக்கும் ஊர்கள் ஏராளம். இந்த கலாச்சார மறத்தல் உலக அளவில் நடக்கிறது ஆனால் அது உள்ளூர் அளவில்தான் தொடங்குகிறது. என் பாட்டி காலத்தில் இருந்த பருத்திப்பாலும், பதனியும் எங்க அம்மா காலத்தில் வந்த காப்பியால் மறக்கடிக்கப்பட்டது. அந்த காப்பி இப்பொழுது என் காலத்தில் உள்ள coke ஆல் மறக்கடிக்கப்படுகிறது.

இந்த உலகில் இருந்த நூற்றுக்கணக்கான மொழிகள் ஆங்கிலம், பிரஞ்சு , ஸ்பானிஷ் , ஹிந்தி போன்ற மிக பிரபலமான மொழிகளாலும் பிரதியீடப்படுகின்றன(replace). அந்தந்த வட்டார மொழிகள் மாநில மொழிகளாலும் , மாநில மொழிகள் தேசிய மொழிகளாலும் , தேசிய மொழிகள் சர்வதேச மொழிகளாலும் பிரதியீடப்படுகின்றன. ஒரு மொழி என்பது வெறுமனே மொழி மட்டுமே அல்ல அது ஒரு இனத்தின் கலாச்சராம் , பண்பாடு , பாரம்பரியம் இப்படி பன்முகத்தன்மை கொண்ட ஒரு தகவல் களஞ்சியம் . ஒரு மொழி அழியும் போது நூற்றுக்கணக்கான வருடங்களால் ஒரு இனத்தால் அரும்பாடுபாடு சேர்க்கப்பட்ட தகவல்களும் சேர்ந்து அழிகிறது.

உடை என்று வரும்பொழுது அது உலகமயமாக்கலின் உச்சம். இன்று ஆண்களுக்கு சட்டை , பேன்ட் என்பதை தவிர வேறு உடையே உலகில் இல்லை என்று ஆகிவிட்டது. என்ன ஒரு கொடுமை. நம்ம ஊரில் ஆண்களுக்கு வேட்டி என்று இருப்பது/இருந்தது  போல உலகில் அனைத்து நாகரீகங்களும் அவர்களுக்கு என்று தனித்த பாரம்பரியம் கொண்ட உடைகளை கொண்டிருக்கின்றன . ஆனால் அவை எல்லாம் என்ன ஆனது என்றே தெரியவில்லை.

சிறிய வட்டங்கள் பெரிய வட்டங்களால் விழுங்கப்பட்டு அந்த பெரிய வட்டம் அதை விட பெரிய வட்டத்தால் விழுங்கப்பட்டு கடைசியில் ஒரே ஒரு வட்டம் மட்டுமே எஞ்சி இருப்பது போன்ற நிலைதான் உண்டாகிவிடுமோ என்று பயமாக இருக்கிறது . Atlast only one choice would be leftover for human :( . 

நான் இங்கு வணிகப் போட்டியைப் பற்றி கூறவரவில்லை. எனக்கு மக்களின் ரசனைகள் அனைத்தும் ஒரே மாதிரி ஆகிவிட்டன என்றே பயம். சிறிது நினைத்துப் பாருங்கள் உலகின் அனைத்து மக்களும் Dominoz பீசாவையோ, Indian Curry யோ மட்டுமே சாப்பிட்டுக் கொண்டு,Costa காபியையோ அல்லது Coke யோ மட்டுமே குடித்துக்கொண்டு , ஏதோ Rock இசையை மட்டுமே கேட்டுக் கொண்டு Cricket அல்லது football யோ மட்டுமே விளையாடிக் கொண்டு, ஹாலிவுட் அல்லது பாலிவுட் படங்களை மட்டுமே பார்த்துக் கொண்டு, ஐயையோ நினைத்துப் பார்க்கவே படுபயங்கரமாக இருக்கிறது . இப்படி அனைவரின் ரசனையும் ஒரே மாதிரி ஆகிவிட்டால் அவர்களின் சிந்தனைகளும் ஒரே மாதிரி ஆகிவிடும் என்றே பயமாக இருக்கிறது. சிறிது நினைத்துப் பார்த்தால் மூன்றாம் கண்ணோட்டம் (third party view) என்பதே இல்லாமல் போகிவிடுமோ என்று தோன்றுகிறது. நான் சொல்லுவது கொஞ்சம் அதிகப்படியாகவே தோன்றலாம். ஆனால் நான் சொல்லுவதற்கு கொஞ்சம் குறைந்தோ அல்லது குறைந்த வேகத்திலோ ஆனால் நான் பயப்படும் திசையில் இந்த உலகம் செல்லுவதாகவே தோன்றுகிறது. இதில் இந்த நாடு அந்த நாடு , இவர் அவர் என்றில்லை. பிறரின் எதோ ஒரு அடையாளம் நம்முடைய அடையாளத்தை அழிக்கும்போது நம்முடைய எதோ ஒரு அடையாளம் பிறரின் அடையாளத்தை அழிக்கிறது .

உலகமயமாக்கல் என்பதற்கு ஒரு காலம் உண்டானபொழுது உள்ளூர்மயமாக்கல் (localization) என்பதற்கு ஒரு காலம் வரவேண்டும். குறைந்தபட்சம் உலகமயமாக்களுக்குள் உள்ளூர்மயமாக்கல் என்பதாவது  உருவாகவேண்டும் (localization within globalization).நான், மற்ற பகுதி மக்கள் சார்ந்த விசயங்களை ஒருவர் பின்பற்றக் கூடாது என்று சொல்லவில்லை, ஆனால் நமக்கு சவுகரியமான மற்றவர்களின் விசயங்களைப் பின்பற்றும்போது நாம் சார்ந்த விசயங்களை மறந்துவிடக்கூடாது என்றே தோன்றுகிறது .

எனக்குத் தெரிந்து மற்ற உயிரினங்களைக் காட்டிலும் மனிதர்களிடையே தான் பன்முகத்தன்மை (diversity) அதிகம் என்று தோன்றுகிறது. உணவு , உடை , உறைவிடம் , பொழுதுபோக்கு , ரசனை, கலாச்சாரம், மொழி, கடவுள்(!) இப்படி தான் சார்ந்த அனைத்து விசயங்களிலும் இத்தனை வித்தியாசங்கள் கொண்ட உயிரினம் எனக்குத் தெரிந்து உலகில் இல்லை. மனித வாழ்க்கையில் சுவாரசியத்திற்கு மிக முக்கிய அடிப்படையே  இந்த பன்முகத்தன்மை தான் . மனிதன் தங்களுக்குள்ளே உள்ள வேறுபாடுகளை மறந்து வாழ வேண்டும் ஆனால் அதே சமயம் தான் கொண்ட பன்முகத்தன்மை மறைந்து விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.இல்லையென்றால் வாழ்க்கை சுவாரசியமற்றுப் போவதோடு இல்லாமல் அனைவரின் சிந்தனைகளும் ஒன்றாகி உலகில் ஒரே ஒரு கண்ணோட்டம் என்பதே உருவாகிவிடும் :( .

பின்குறிப்பு :
இங்கு கலாச்சாரம் என்று நான் கூறுவது உணவு , உடை , உறைவிடம் , பொழுதுபோக்கு இப்படி மனிதன் சார்ந்த அனைத்து விசயங்களையும் குறிக்கும் .

Image Courtesy: shutterstock.com

2 comments:

Vidhya said...

oru manishanala ela natleyum survive pana mudiyudhu na aduku mukiya karanam gobalisation dan. Inda food elam namma oorla palakalana apuram rombavae kastam dan.

There are so many pros and cons in Globalisation. But it is everyone's duty to make sure not to give up their culture and society because of globalisation.

Really a good post. Keep going

Bharathi said...

மிகவும் சரியான கருத்து. இப் ப்ளாக் கிணை ஆமோதிக்கிறேன்.