Monday, January 10, 2011

புத்தகங்களைத் தேடி ஓர் பயணம் ...



கடந்த இரண்டு வருடங்களாக நானும் , மதுவும் சென்னையின் புத்தக கண்காட்சிக்குச் செல்கிறோம் . அதே போல் இந்த வருடமும் செல்வதாக முடிவெடுத்தோம் . ஆனால் அதற்கு முன் ஒரு உறுத்தல் இருந்தது. என்னவென்றால் கடந்த இரண்டு வருடங்களில் வாங்கிய புத்தகங்களிலேயே நிறைய நான் படிக்கவில்லை. சில புத்தகங்கள் பாதி படித்து விட்ட நிலையில் இருக்கின்றன . சில புத்தகங்கள் முழுவதும் படிக்காமலே இருக்கின்றன . அதையெல்லாம் படிக்கவில்லையே அப்படி இருக்கையில் இந்த வருட புத்தக கண்காட்சிக்குச் செல்ல வேண்டுமா என்று தோன்றியது. சரி இருந்தாலும் பரவாயில்லை செல்லலாம் என்று முடிவெடுத்து நான், மது மற்றும் கார்த்தி மூன்று பேரும் சென்றோம்.

இந்த வருட புத்தக கண்காட்சிக்கு செல்வதற்கு முன்பே கிழக்குப் பதிப்பக வலைத்தளம் சென்று சில புத்தகங்களை தேர்ந்தெடுத்திருந்தேன். அதனால் பட்ஜெட் எகிரப்போகுது என்பதும் முன்பே தெரிந்திருந்ததால் நானும் மதுவும் சற்று அதிகமாகவே பணம் கொண்டு போய் இருந்தோம். நாங்கள் இரண்டு கட்டைப் பை எடுத்ததைப் பார்த்த வீட்டில் உள்ளோர் என்னடா இது என்றனர். எல்லாம் முன் அனுபவம் என்றோம் :) .

சரி என்று பசிக்குது என்று போகிற வழியில் ஒரு சைனீஸ் உணவகத்தில் சாப்பாடு சாப்பிட்டு விட்டு (இங்கும் பட்ஜெட் எகிறுச்சு :) ) புத்தக கண்காட்சி சென்றோம். முதலில் சென்றதும் கிழக்கு பதிப்பகத்திற்கே சென்றோம். முதலில் நான் எடுத்தது "அகம், புறம் அந்தபுரம் ". இது இந்திய மன்னர்களைப் பற்றியது , இதுதான் இன்றைய வருட புத்தக கண்காட்சியில் என்னுடைய top pick . விலையை பார்த்ததும் சற்று அதிர்ச்சிதான். வலைதளத்தில் 750 என்றுதான் போட்டிருந்தது ஆனால் இங்கோ 950 ரூபாய் என்றிருந்தது. ஏங்க இப்படி இருக்கு என்று கேட்டால், "சார் , காகித விலை கூடிப் போயிருச்சு , அதான். நீங்க வலைதளத்தில் 750 ரூபாய்க்கு ஆடர் பண்ணாலும் திருப்பி உங்களுக்கு போன் பண்ணி விலை கூடிருச்சும்பாங்க" என்றார். சரி என்று அந்த புத்தகத்தை எடுத்துக்கொண்டேன். அடுத்து நான் எடுத்த புத்தகங்கள் அனைத்தும் வரலாறு சார்ந்தவையே . கிழக்கு பதிப்பக புத்தகங்கள் அனைத்தும் நான் விரும்புபவை. அவை பெரும்பாலும் வரலாறு சார்ந்து இருப்பதே காரணம். இந்த வருட புத்தக கண்காட்சியின் செலவில் பாதி செலவு இங்கு புத்தகங்கள் வாங்கவே செலவிட்டேன். இதில் மது ஒரு புத்தகம் கூட வாங்கவில்லை .

இந்த புத்தக கண்காட்சிக்குச் செல்லும் முன்பே ஒரு உறுதி எடுத்துக் கொண்டேன். இலக்கியம் சார்ந்த புத்தகங்கள் (நான்) வாங்குவதில்லை என்று . ஏனெனில் சென்ற வருடம் மது வாங்கிய இலக்கியம் சார்ந்த புத்தகங்களையே நான் படிக்கவில்லை . மேலும் அவை என்னை ஈர்க்கவும் இல்லை . என்னுடைய விருப்பம் எல்லாம் வரலாறு சார்ந்ததே. எனக்கு உண்மை வேண்டும் புனைவில் விருப்பம் இல்லை . அடுத்து வரலாற்று நாவல்களிலும் இந்த வருடம் ஆர்வம் செலுத்தவில்லை . ஏற்கனவே சென்ற வருடத்திற்கு முந்திய வருடம் பொன்னியின் செல்வனும் , சென்ற வருடம் கடல் புறாவும் வாங்கி இருந்தோம் . ஆனால் இந்த வருடம் ஏனோ அவற்றின் மீது கவனம் செல்லவில்லை. மேலும் இந்த வருடம் சிவகாமியின் சபதம் மூலை முடுக்கெல்லாம் இருந்தது . இருந்தும் அதை வாங்கவில்லை . அதே போல் தனி மனித புத்தகங்களையும் வாங்குவதில்லை என்றும் முடிவெடுத்தேன். சென்ற வருடம் பிரபாகரன் பற்றிய புத்தகங்களும் , விடுதலைப் புலிகள் பற்றிய புத்தகங்களும் , விடுதலைப் புலிகளின் இறுதி யுத்தத்தை பற்றிய புத்தகங்களும் அதிகம் இருந்தன. அவற்றை சென்ற வருடம் எப்படி கவனமாக தவிர்த்தேனோ அதேபோல் இந்த வருடமும் தவிர்த்தேன். வரலாறு என்பது வெற்றி பெற்றவர்களாலே எழுதப்படுவது என்பார்கள் என்பதால் இந்த புத்தகங்களின் நம்பகத்தன்மையின் மீது எனக்கு ஐயப்பாடு இருந்தது. மேலும் அவை உண்மையையே கூறுவதாக இருந்தாலும் எம் இனம் அழிந்த வரலாற்றை படிக்க என் மனம் இன்னும் கடினப்படவில்லை :( .

எனக்கு எப்பொழுதும் சீனா பற்றி பெரிய மதிப்பு உண்டும் . அது மிகப் பெரிய நாடு என்றோ மிகப்பெரிய வல்லரசு என்பதால் அல்ல . அது இந்தியாவைப் போலே சிறந்த வரலாறும் , கலாச்சாரமும் கொண்டது. நான் சீனா மேல் என் கல்லூரி நாட்களிலிருந்தே மிக அதிக கவனமும் , ஆர்வமும் செலுத்த ஆரம்பித்தேன். என்னைப் பொறுத்தவரை பாகிஸ்தானை விட சீனா மீதே நாம் அதிக கவனமும் , உன்னிப்பும் கொள்ள வேண்டும். நாம் ஏற்கனவே அவர்களிடம் ஒரு முறை போரில் தோற்றுவிட்டோம் இனிமேலும் அது நடக்ககூடாது. இன்னும் கொஞ்ச நாட்களில் உலகில் பொருளாதாரப் போட்டியும் அதன் மூலம் பொருளாதாரப் போரும் உருவாகும் . உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் மிகப் பெரிய பொருளாதாரங்களை கொண்ட இரண்டு மிகப் பெரிய நாடுகள் என்ற முறையில் நாமும் சீனாவும் ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொள்ளவேண்டும். மேலும் இவ்விரு நாடுகளும் ஒன்றுடன் ஒன்று போட்டி இடும் சூழ்நிலையில் இந்த புரிதல் அவசியம் . உலகில் அதிக சச்சரவுகள் கொண்ட பெரிய நாடுகளும் இந்தியாவும் சீனாவும்தான். ரஷ்யாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையேயான சச்சரவுகள் கூட முடிந்துவிட்டன. நமக்குதான் முடியவில்லை. அது நீருபூத்த நெருப்பாக உள்ளது . இவ்வளவு ஆராய்ச்சிகளும் , ஆர்வமும் கொண்டதால் இந்த வருட புத்தக கண்காட்சியில் சீனா பற்றிய புத்தகங்களை அதி தீவிரமாக தேடினேன். இந்த வருட கண்காட்சியில் என் ஆர்வமும் இவைதான் . அப்படியாக 3 புத்தகங்கள் சீனாவைப் பற்றி வாங்கினேன். நான் முதலில் படிக்க ஆசைப்படுவதும் அவைதான். இதில் என்னை அதிகம் கவர்ந்தது "நீயா நானா? இந்திய - சீன வல்லரசுப் போட்டி ". இது நிச்சயம் சீனா மற்றும் இந்தியா பற்றி மிக அதிக அளவில் அலசப் போகிறது என்று பெரிதும் நம்புகிறேன். இதுவே நான் முதல் படிக்கப் போகும் புத்தகமாக இருக்கும் என்றும் நம்புகிறேன். இதில் குறிப்பிடத்தக்க மற்றொரு புத்தகம் சீன மக்களின் குடும்ப வாழ்க்கையைப் பற்றியும் அவர்களின் கலாச்சாரத்தை பற்றியதும் ஆகும் . வல்லரசு சீனாவின் மற்றொரு பக்கத்தை அறிய இது உதவும் .

அடுத்து நான் காஷ்மீரைப் பற்றி அதிகம் பேசினாலும் அதன் அடிநாதம் அதிகம் அறியவில்லை என்பது எனக்கு சிறிது நாட்களுக்கு முன்தான் தெரிந்தது . காஷ்மீர் வெறுமனே இந்திய பாகிஸ்தானிய நாடுகள் தாங்களே முழுவதும் பெற ஆசைப்படும் மாநிலம் மட்டுமல்ல. அது அங்கு வாழும் முஸ்லீம், அங்கு வாழ்ந்த இந்து பண்டிட்டுகள் பற்றியதும் கூட. மேலும் இந்திய , பாகிஸ்தானிய நாடுகள் காஷ்மீரில் மக்களிடையே ஓட்டெடுப்பு நடத்தி அதன் மூலம் அவர்கள் எங்கே சேர வேண்டும் என்பதை தீர்மானிக்க வேண்டும் என்று ஐநா கூறியதும் , அதற்காக இரு நாடுகளும் தங்கள் படைகளை வெளியேற்ற வேண்டும் என்று ஐநா கூறியதும் எனக்கு சில மாதங்களுக்கு முன் தான் தெரிய வந்தது. அதனால் காஷ்மீரைப் பற்றி மேலும் அறிய அதைப் பற்றி ஒரு புத்தகம் வாங்கினேன் .

பர்மா இந்தியாவின் மிக அருகில் அதுவும் இந்தியாவில் கிளர்ச்சிகள் அதிகம் நடக்கும் வட கிழக்கு மாநிலங்களுக்கு மிக அருகில் உள்ள நாடு. அங்கு இப்பொழுது ராணுவ ஆட்சி நடைபெறுகிறது. உலகில் ஜனநாயகம் செழிக்க வேண்டும் என்று அதிகம் விரும்பும் இந்தியாவின் மிக அருகிலேயே இருக்கும் ராணுவ கொடுங்கோல் ஆட்சி நடக்கும் நாடு . அதனால் ஆரம்ப காலத்தில் இந்தியா பர்மாவில் ஜனநாயகம் செழிக்க அங்கு இருந்த போராளிகளுக்கு பயிற்சி அளித்தது. அதன் பின் சீனாவின் ஆதிக்கம் பர்மாவின் மேல் அதிகம் ஏற்படாமல் தடுக்கவும், வட கிழக்கு மாநிலங்களில் இருக்கும் தீவிரவாதிகள் பர்மாவில் மறைவிடம் தேடாமல் இருக்கவும், பர்மாவில் இருக்கும் இயற்கை எரி வாயுவைப் பெறவும் இந்தியா பர்மாவின் மேல் இருக்கும் தன்னுடைய பார்வையை மாற்றத் தொடங்கியது . பர்மிய ஜூண்டாக்களின் மீது இந்தியா மென்மையாக நடக்கத்தொடங்கியது. அதனால் இந்தியா பர்மிய ஜனநாயக போராளிகளுக்கு ஆதரவை வாபஸ் வாங்கத் தொடங்கியது . சென்ற மாதம் இந்தியா வந்த அமெரிக்க அதிபர் ஒபாமா இந்தியா தன்னுடைய பொருளாதார , புவியியல் சார்ந்த காரணங்களுக்காக பர்மாவில் நடக்கும் ஜனநாயகப் படுகொலைகளை கண்டும் காணாமல் இருக்கக் கூடாது என்றார். அதே போல் சில மாதங்களுக்கு முன் விடுதலையான ஆங்க் சான் சூகி இந்தியா தன்னுடைய நலனுக்காக பர்மிய ஜுண்டா அரசை ஆதரிக்கக் கூடாது என்றார். இத்தகைய பின்னணியிலேயே நான் பர்மிய போராளிகளை இந்தியா ஏமாற்றிய கதையைப் பற்றிய புத்தகம் வாங்கினேன். நான் இந்திய நலனிற்கு எதிரானதும் , இந்திய இறையாண்மைக்கு எதிரானதுமான எதையும் விரும்பமாட்டேன். அப்படி இருக்கும் நான் இந்த புத்தகத்தை தேர்ந்தெடுத்தது எனக்கே ஆச்சரியம்தான் !.

சில நாட்களுக்கு முன் அலுவலகத்தில் இரண்டாம் உலகப் போர் பற்றிய புத்தகம் வாங்கினேன். அதை முடித்துவிட்டதால் இன்று முதல் உலகப் போர் பற்றிய புத்தகம் வாங்கினேன். இரண்டாம் உலகப் போரில் மிகக் கொடூரமானதே ஆனாலும் ஹிட்லர் என்னும் கவர்ச்சி இருந்தது . ஆனால் முதல் உலகப் போரில் அப்படி யாரும் இல்லை . இருந்தாலும் வாங்கினேன். அடுத்து கிளியோப்பட்ரா மற்றும் மாவோயிஸ்டுகள் பற்றிய புத்தகங்களை மது வாங்கினான் .

எனக்கு இந்து மதத்தின் மேல் இருக்கும் அதே அளவு ஈடுபாடும் , ஆர்வமும் புத்தம் மற்றும் யூத மதங்களின் மீதும் உண்டு . அதிலும் யூத மதம் இந்து மதம் போன்று தொன்மையானது . அதனால் அதைப் பற்றிய சிறிய புத்தகம் ஒன்றை வாங்கினேன் .

நான்தான் இலக்கியம் சார்ந்த புத்தகம் வாங்கமாட்டேன் என்று சொன்னேன் . ஆனால் மது வாங்கியதெல்லாம் இலக்கியம் சார்ந்தவையே. பெரும்பாலும் ஜெயமோகன் , சாரு நிவேதிதா எழுதிய புத்தகங்களை அவனும் எனக்கு ஈடாக போட்டி போட்டு வாங்கினான். அவற்றைப் பற்றிய முன்னுரை வேண்டுமென்றால் அவனை பதிவு போடச் சொல்லுங்கள் . அப்படியாவது அவனை மீண்டும் பதிவிடவையுங்கள் :). இவை தவிர மேலும் நிறைய புத்தகங்கள் வாங்கினோம் .

சென்ற வருடம் புத்தக கண்காட்சியில் கமல் வந்திருந்தார். அது எனக்கு பிடித்தமான நடிகர்களில் ஒருவரான கமலின் ஒரு நல்ல பேச்சை கேட்க நல்ல வாய்ப்பாக இருந்தது . அதே போல் இந்த வருட கண்காட்சியில் ரா.பார்த்திபன் வந்திருந்தார். அவரிடம் ஒரு புத்தகத்தில் கையொப்பம் வாங்கினோம். அதே போல் மது அவன் வாங்கிய சாரு நிவேதிதா புத்தகத்தில் சாருவிடம் கையொப்பம் வாங்கினான் . அப்பொழுது அருகில் இருந்தவர் இவர் யார் என்று கேட்டார் . நான் சாரு நிவேதிதா என்றேன். உடனே அவரிடம் இருந்த ஒரு புத்ததகத்தை சாருவிடம் நீட்டினார். நம் ஆட்கள் அவங்களுக்கு யார் என்றே தெரியாவிட்டாலும் மற்றவர்கள் கையொப்பம் வாங்குகிறார்களா உடனே வாங்கு என்று அவர்களும் நீட்டுகிறார்கள் .

சென்ற அரையாண்டாகவே நான் என் வேலை சார்பாகவே அதிகம் படித்ததால் அதிகம் பதிவிடவில்லை. இனிமேல் அதிகம் படிக்கப் போவதால் (?) அதிகம் பதிவிடலாம். பொதுவாக நான் புத்தாண்டு சபதம் எடுப்பதில்லை . அப்படியே எடுத்தாலும் அது டைரி எழுதவேண்டும் என்பதாக இருக்கும் . அதுவும் 15 நாட்களுக்கு மேல் தாங்காது . இந்த வருடம் எந்த புத்தாண்டு சபதமும் இதுவரை எடுக்கவில்லை, ஆனால் இப்பொழுது தோன்றுகிறது அந்தந்த வருடங்களில் வாங்கிய புத்தகங்களை அந்தந்த வருடங்களிலேயே படித்து விட வேண்டும் என்ற சபதம் எடுக்கவேண்டும் என்று . இந்த ஆண்டு சற்று கூடிய சுமை . சென்ற வருட புத்தகங்களையும் இந்த வருடமே முடித்து விட வேண்டும். ஆனால் இப்படி தொழில் சாராத புத்தகங்களையே அதிகம் படித்தால் எப்பொழுது தொழில் சார்ந்த அறிவை வளர்த்து நாம் தொழிலில் முன்னேறப் போகிறோம் என்று ஒரு உறுத்தலும் ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை . இரண்டுக்கும் கடவுள்தான் அருள் புரிய வேண்டும்.

முன்பெல்லாம் படித்த புத்தகங்களை பற்றி அதிகம் blog post போட்டேன். ஆனால் இப்பொழுது blog post கு எழுதுவதற்காகவே அதிகம் படிக்கிறேன். இதுதான் இந்த வருட புத்தக கண்காட்சி செலவை மாத சம்பளத்தில் 10% வரை எகிற வைத்துவிட்டது . ஏம்பா மருந்து செலவிற்கெல்லாம் வருமான வரி தள்ளுபடி கொடுப்பது போல புத்தகங்களுக்கு எல்லாம் கொடுக்கக் கூடாதா :( .

4 comments:

Devaraj Rajagopalan said...

'எனக்கு உண்மை வேண்டும் புனைவில் விருப்பம் இல்லை.'
என்னாகும் அப்டிதான்.

'இப்படி தொழில் சாராத புத்தகங்களையே அதிகம் படித்தால் எப்பொழுது தொழில் சார்ந்த அறிவை வளர்த்து நாம் தொழிலில் முன்னேறப் போகிறோம் என்று ஒரு உறுத்தலும் ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை.'
இரண்டு தொழில் சாராத புத்தகங்களுகிடையே ஒரு தொழில் சார்ந்த புத்தகத்தை படிக்கவேண்டும் என்று வைத்து கொள்.

Haripandi Rengasamy said...

@ தேவராஜ்

நீ சொல்வதும் நல்லாத்தான் இருக்கு . செயல்படுத்த முடியுமா என்று பார்போம்

JDK said...

நானும் புத்தக வேட்டைக்கு ஒருத்தன் வீட்டுக்கு போனேன் செம collection பா ..சும்மா சொல்ல கூடாது அவன் ரொம்ம்மம்ம்ம்ப நல்லவன் :-)

Haripandi Rengasamy said...

என்னையையும் மதுவையும் நல்லவன் சொன்னதுக்கு ரொம்ப நன்றி நண்பா :)