இன்று இணையத்தில் குறிப்பாக facebook இல் இத்தகையவர்களை அதிகம் காண முடிகிறது. இப்பொழுது நாம் இணையத்தில் அன்னா கசாரே குறித்த பல status message களை காண முடியும் .
"அன்னா கசாரேயை ஆதரிக்கலனா என்னையும் ஊழல்வாதின்னு சொல்லிருவாங்கன்னு பயமா இருக்கு .."
"இவ்வளவு பேசும் அன்னா கசாரே இவ்வளவு நாள் எங்கே போயிருந்தார் .."
"நானும் கொஞ்சம் காசு கொடுத்தா , ராம்லீலா மைதானத்துல எனக்கு முதவரிசை இடம் கிடைக்குமா ..."
இன்னும் பல ...
அன்னா கசாரேயை எதிர்க்கும் மத்திய அரசும் , காங்கிரசும் எனக்கு பெரிதாக தெரியவில்லை . ஏனென்றால் அவர் போராட்டம் நடத்துவதே அவர்களை எதிர்த்துதான். அதனால் அவர்கள் அவரை எதிர்ப்பதில் ஆச்சரியம் இல்லை. ஆனால் அன்னா கசாரேயின் போராட்டத்தைப் பற்றி மாற்றிப் பேசும் இந்த இணைய இளைஞர்களைத்தான் பெரிதாக எனக்குத் தெரிகிறது. ஏனென்றால் இவர்கள் நம்மிடையே இருப்பவர்கள். இவர்களின் கருத்து மற்ற எல்லாரையும் விட எளிதாக , விரைவாக மக்களிடையே சென்று அவர்களிடையே ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும்.
எனக்கு இந்த இளைஞர்களைப் பற்றி பொதுவாக ஒன்று புரியவில்லை, இவர்கள் நிஜமாகவே அன்னா கசாரே போராட்டத்தின் மீது வெறுப்பு கொண்டுள்ளார்களா இல்லை அனைவரும் அவரை ஆதரிக்கின்றனர் நாம் அவரை எதிர்த்தால் நாம் தனியாகத் தெரிவோம் என்று எண்ணுகிறார்களா என்று தெரியவில்லை.
பேச்சு சுதந்திரம், கருத்து சுதந்திரம் என்பது அனைவருக்கும் உண்டு. ஆனால் அந்த கருத்து ஒரு சமூகத்தில் எந்த அளவு , எந்த விதமான தாக்கத்தையும் ஏற்படுத்தும் என்பதையும் அனைவரும் புரிந்து கொள்ளவேண்டும் .
இவர்கள் கேட்கும் சில கேள்விகளில் நியாயம் இருக்கிறது . ஜன்லோக்பால் வந்துவிட்டால் அனைத்தும் மாறிவிடுமா ? என்று கேட்கிறார்கள். நியாயம்தான். அனைத்தும் மாறிவிடும் என்று யாராலும் உறுதி கொடுக்க முடியாது. ஆனால் மக்கள் இன்று எதைத் தின்றாலாவது பித்தம் தெளியாதா என்பதைப் போல எப்படியாவது இந்த ஊழல் ஒழியாதா என்று எண்ணுகின்றனர். அதற்கான ஒரு முன் முயற்சி , முதல் முயற்சியாக இதைக் கொள்ளலாம்.
அதைப் போல ஜெயப்ரகாஷ் நாராயணனால் முடியாததையா இவர் செய்து விடப் போகிறார் என்கின்றனர். சரி ஜெய்பிரகாஷ் நாராயணனால் முடியாததால் மற்றவர்கள் முயற்சி செய்யக் கூடாதா? . மேலும் ஜெயப்ரகாஷ் நாராயணன் இருந்த காலகட்டத்தை விட இன்று இந்த ஊழல் எதிர்ப்பு மிக அவசியம். ஜெய் பிரகாஷ் நாராயணன் இருந்த காலகட்டத்தில் இந்தியா ஒன்றும் பெரிய பொருளாதார வளர்ச்சி கொண்ட நாடு அல்ல. நாம் அன்று சோத்துக்கே பலரை எதிர்பார்த்திருந்தோம். ஆனால் இன்று இந்தியா உலகிலேயே இரண்டாவதாக வேகமாக வளரும் நாடு. இன்னும் 30, 40 வருடங்களில் உலகின் மூன்றாவது மிகப் பெரிய பொருளாதாரம் கொண்ட நாடாக ஆகப் போகிற நாடு. இத்தகைய காலகட்டத்தில் தான் உலகிலேயே மிகப் பெரிய ஊழலான 1.75 லட்சம் கோடி ஊழல் இந்தியாவில் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தானியங்கள் அதிகம் இருக்கும் இடத்தில்தான் பெருச்சாளிகள் அதிகம் வரும் , அதைப் போல அதிக பணம் புழங்கும் இடத்தில்தான் அதிக ஊழல் பெரிச்சாளிகள் வரும். அதற்கு கடிவாளம் போடத்தான் இந்த ஜன்லோக்பால்.
ஜனநாயகத்தை ஆதரிப்பவர்கள் ஒன்று கூறுவார்கள். ஜனநாயகம் தான் best என்று நாங்கள் கூறவில்லை. இன்று இருக்கும் மற்ற முறைகளில் இது better . Thats all. அதே போன்று தான் ஜன் லோக்பால் மட்டுமே தீர்வு அல்ல அல்லது அதுதான் best என்று இல்லை. இது ஒரு தீர்வு . இருப்பதில் ஓரளவுக்கு நல்ல தீர்வு .
அதைப் போல அன்னா கசாரேயை ஆதரிப்பவர்களை தனி மனித துதிபாடிகள் என்கின்றனர். எப்பொழுதுமே எந்த ஒரு பெரும் செயலுக்கும் leader என்று ஒருவர் தேவைப்படுகிறார். எதற்கும் முன்னெடுத்து செல்ல ஒரு முதல் காலடி தேவைப்படுகிறது. அந்த காலடியாகத்தான் அன்னா கசாரேயை மக்கள் பார்கிறார்கள். இங்கு மக்கள் யாரும் அன்னா காசரேயை ஊழலை ஒழிக்க வந்த அனாதரட்சகராக பார்கவில்லை. எதற்கும் ஒரு முன்னெடுப்பு எதற்கும் ஒரு lead. அவ்வளவுதான்.
இங்கு பூனைக்கு யார் மணி கட்டுவார்கள் என்று எதிர் பார்க்கும்போது ஒருவர் கிடைத்திருக்கிறார். அவரை மக்கள் ஆதரிக்கிறார்கள். இன்னும் கொஞ்சம் கொச்சையாக சொல்லப் போனால் நமக்கு ஒரு அடிமை சிக்கிட்டான்டா :( .அவ்வளவுதான் .
அடுத்து ஒரு கேள்வி இவர் என்ன பெரிய ஒழுங்கா?. இதே கேள்விதான் பாபா ராம்தேவ் விசயத்திலும் கேட்டார்கள். பாபா ராம்தேவ் முயற்சி வெற்றி பெறவில்லை . இப்பொழுது மக்கள் அன்னா கசாரேயை ஆதரிக்கும்போதும் அதே கேள்வி கேட்கிறார்கள். ஒன்று புரிந்து கொள்ள வேண்டும் மக்கள் இங்கு அன்னா கசாரயையோ அல்லது பாபா ராம்தேவையோ ஆதரிக்கவில்லை. மக்கள் இங்கு ஊழல் எதிர்ப்பை ஆதரிக்கிறார்கள். இப்பொழுதும் அன்னா கசாரே நல்லவர் இல்லை , அவரும் ஊழல்வாதி என்று கூறப்படலாம் அல்லது அது நிஜமாகவே இருக்கலாம். இவர்களால் பாபா ராம்தேவையும் , அன்னா கசாரேயையும் தான் தோற்கடிக்க முடியுமே தவிர மக்களை அல்ல. இன்னும் சிறிது காலத்தில் இன்னொருவர் வருவார். மக்கள் ஆதரவு ஆவருக்கு கிடைக்கும். இப்படி ஏதோ ஒரு காலகட்டத்தில் மக்கள் வெற்றி பெறுவார்கள்.
நம்முடைய சுதந்திரப் போராட்டத்திற்கும் இதே வரலாறுதான் உண்டு . மக்கள் பல ஆண்டுகளாக சுதந்திரத்திற்கு போராடினார்கள். பல காலகட்டங்களில் பல தலைவர்கள் உருவானார்கள். பல தலைவர்களும் எதிர்கப்பட்டார்கள், பழி தூற்றப்பட்டார்கள். பல தலைவர்களும் தோற்கடிக்கப்பாட்டார்கள். ஆனாலும் பிற்பாடும் பல தலைவர்கள் தோன்றினார்கள். அவர்களையும் மக்கள் ஆதரித்தார்கள். கடைசியில் காந்தி என்று ஒருவர் வந்தார். மற்றவர்களைப் போல் மக்கள் ஆதரவைப் பெற்றார். சுதந்திரம் கிடைத்தது. இங்கு மக்கள் காந்தியை ஆதரிக்கவில்லை. அவர்கள் சுதந்திரப் போராட்டத்தைத்தான் ஆதரித்தார்கள். காந்தி ஒரு leader . அவ்வளவுதான். இதுதான் உலக வரலாறும் கூட.
இங்கு காந்தி , அன்னா கசாரே எல்லாம் ஒரு வினை ஊக்கி(Catalyst). அவ்வளவுதான். என்ன காந்தியும் அன்னா கசாரேயும் ஒன்றா என்கிறீர்களா? என்ன இருந்தாலும் காந்தியும் ஒரு மனிதர்தானே.
P.S:
1. நான் இங்கு அன்னா கசாரே போராட்டத்தை கேலி செய்பவர்களைப் பற்றி எழுத வேண்டும் என்று எண்ணி கடைசியில் ஊழல் எதிர்ப்பை எதிர்ப்பவர்களை பற்றி முடித்திருக்கின்றேன். அது எப்படியோ எழுத எண்ணி மன ஓட்டத்தில் வேறு எங்கோ சென்று முடிந்திருக்கின்றது. ஆகவே அன்னா கசாரேயின் போராட்டத்தை கேலி மட்டும் செய்வதே தங்கள் நோக்கம் என்று எண்ணுபவர்களை எல்லாம் நான் ஊழல் எதிர்ப்பை எதிர்ப்பவர்கள் என்று கூறவில்லை என்பதை தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள்.