Monday, May 3, 2010

அப்பா வந்திருந்தார்

அன்று வெகு நாட்களுக்குப் பிறகு அப்பா வந்திருந்தார். கணேஷ் இதனை எதிர்பார்கவில்லை.அவனுக்கு ஒரே சந்தோசம். அவனுக்கு அப்பாவிடம் பேச இத்தனை நாட்களில் எவ்வளவோ இருந்தது. அவனை கையால் பிடிக்க முடியவில்லை . அவன் துள்ளி குதித்து கொண்டிருந்தான். பொதுவாக கணேஷிற்கு அம்மாவை விட அப்பாவிடமே பாசம் அதிகம். அதேபோல் அவன் அப்பாவிற்கும் கணேஷிடம் ரொம்ப பாசம் அதிகம். கணேஷின் துள்ளி குதிப்பை அவர் அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தார். அவருக்குத் தெரியும் அவருடைய திடீர் பிரவேசம் அவனை திக்கு முக்காடச் செய்யும் என்று.

அன்று அம்மாவாசை ஆனதால் அவன் அம்மா விருந்து சமைத்து கொண்டிருந்தார். அவன் அப்பாவை அவர் எதிர்பார்த்திருப்பார் போலும். கணேஷ் தான் எதிர்பார்கவில்லை.

அவன் அப்பா இங்கு இருந்த வரை கணேஷ் மனம் கோணக் கூடாதென்று அவன் கூறிய அனைத்தையும் செய்தார் .அவருக்கு அவனுடைய சந்தோசமே பிரதானம். அவர் தபால் துறையில் மிகப் பெரிய அதிகாரியாக இருந்தார். அவர் கடமை தவறாத நேர்மையான அதிகாரியாக இருந்தார் . கணேஷிற்கு அவன் அப்பாவை ரொம்ப பிடிக்கக் காரணம் இதுவும் கூட. அலுவலகத்தில் மிகக் கண்டிப்பான அதிகாரியாக இருந்த அவன் அப்பா வீட்டில் அதற்க்கு நேர் மாறாக தன் பிள்ளைகளிடம் மிக அன்புடன் நடந்து கொண்டிருந்தார். வீட்டில் கணேஷ் தவிர அவன் தம்பி குமாரும் இருந்தான். இருவர் மேலும் அவன் அப்பா அன்பு காட்டினாலும் கணேஷின் மீதுதான் அவருக்கு பாசம் அதிகம். அதற்க்கு ஒரு காரணம் இருந்ததது. கணேஷ் சிறிது அதிர்ந்து பேசினாலோ அல்லது சிறு தோல்வி கண்டாலோ உடனே உடைந்துவிடுவான். அதனாலையே அவர் தன் மகன் மனம் கோணாமல் நடந்து கொண்டிருந்தார் . அவர் தன் பிள்ளைகள் எது கேட்டாலும் வாங்கித் தந்தார். எதற்கும் தன் பிள்ளைகளிடம் எதிர்ப்பு தெரிவிக்கமாட்டார்.

கணேஷ் பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் வரையிலும் கூட அவருடைய விடுமுறை நாட்களில் , மற்றும் கணேஷின் தேர்வு நாட்களில் அவனையும் அவன் தம்பியையும் பள்ளிக்கு தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் கொண்டு சென்று விடுவதும் கூட்டி வருவதும் அவர் தானாகவே விரும்பி ஏற்றுக் கொண்ட ஒரு செயல். அவனுடைய மற்றும் அவன் தம்பியுடைய 11 மற்றும் 12 ஆம் வகுப்பு record நோட்களிலெல்லாம் படம் வரைந்து தருவது கணேஷின் அப்பாவுடைய வேலை. இப்படி பல செயல்களை அவர் தன் மக்களுக்காகச் செய்தார்.

கணேஷ் 12 ஆம் வகுப்பு முடிந்த பிறகு இன்ஜினியரிங் படிப்பிற்காக அவன் சென்னை சென்றான். அவன் ஒவ்வொரு தடவையும் தன் சொந்த ஊரிலிருந்து சென்னைக்குச் செல்லும் போது அவனை தன் இரு சக்கர வாகனத்தில் ஏற்றி வந்து பேருந்து செல்லும் வரைக் காத்திருந்து விடையளிப்பார்.

ஆனால் ஆறு மாதம் கூட கணேஷால் அவன் குடும்பத்தை இருக்க முடியவில்லை. அவன், அவன் அப்பாவிடம் அழுது புரண்டு அவரை சென்னைக்கு மாறுதல் பெற்று வரச் செய்தான். பொதுவாக அவன் அப்பாவிற்கு சென்னையும் , அதன் மரியாதை கெட்டத் தனமும் அறவேப் பிடிக்காது. அவர் தன்னுடைய பணி நாட்கள் முழுவதும் தென் தமிழகத்திலேயே கழித்தவர். அப்படிபட்டவர் தன் மகனுக்காக தனக்குப் பிடிக்காத சென்னைக்கு மாறுதல் பெற்று வந்தார். கணேஷின் அம்மாவும் அரசாங்க வேலை பார்த்ததால் அவர் சொந்த ஊரிலேயே தங்கிவிட்டார். இப்படியா அவர் தன மகனுக்காக தன் மனைவியை விட்டு பிரிந்து சென்னை வந்தார். மேலும் அவர் தன்னுடைய மகன் கல்லூரிக்குச் செல்வதிற்கு கஷ்டப்படக்கூடாதென்று கணேஷின் கல்லூரிக்கு அருகிலேயே வீடு பார்த்து குடியேறினார். குமாரும் சென்னையில் தனியார் கல்லூரியில் எஞ்சினியரிங் சேர்ந்தான். அவரும், குமாரும் தங்கள் பணி மற்றும் கல்லூரி நிமித்தமாக நெடுந்தொலைவு பேருந்தில் பயணப்பட்டனர். அவன் அப்பா கணேஷிர்க்காக அவன் விருப்பப்பட்டதை அனைத்தையும் செய்தார் .

அவர்கள் அப்பொழுது ஒரு வீடு வாங்குவதற்காக பார்த்துக் கொண்டிருந்தனர். அவன் அப்பா ஒரு அழகிய வீட்டையும் குறைந்த விலையில் பார்த்திருந்தார். அந்த வீடு அவருக்கு ரொம்ப பிடித்திருந்தது, ஆனால் கணேஷ் கூறிய உப்பு சப்பில்லாத காரணத்திற்க்காக அதனை வேண்டாம் என்று சொல்லிவிட்டார். இப்படி பல செயல்களை தன் பிள்ளைகளுக்காகச் செய்தார்.

அவன் அப்பா இங்கு இருந்தவரை philatelic ஸ்டாம்ப்ஸ் சேகரித்துக் கொண்டிருந்தார். அவர் மிகப் பெரிய தபால் தலை சேகரிப்பு கொண்டிருந்தார் . அவர் இந்தியாவில் சுதந்திரத்திற்குப் பிறகு வெளி வந்த அனைத்து தபால் தலைகளையும் கொண்டிருந்தார். அவர் போன பிறகு அவர்கள் வீட்டில் அதை பின் தொடர்வோர் யாரும் இல்லை . ஆனால் கணேஷ் மட்டும் அத எப்படியாவது பின் தொடர்வது என்று எண்ணி மாசம் மாசம் தபால் நிலையங்களில் பணம் கட்டி தபால் தலை பெற்றுக் கொண்டிருந்தான். அவன் அம்மாவிற்கு அதில் பெரிதாக ஈடுபாடு இல்லை என்பதால் இது எதற்கு வெட்டிக் காசு என்று திட்டிக் கொண்டிருந்தார், கணேஷிர்க்கும் அதில் ஒன்றும் அவ்வளவு ஈடுபாடு இல்லை தான் . இருந்தாலும் தன் அப்பா தொடர்ந்த செயலை தானும் தொடர வேண்டும் என்று எண்ணித் தொடர்ந்தான்.

தன் அப்பாவிடம் அவர் சென்ற பிறகு தான் சேகரித்த தபால் தலைகள் அனைத்தையும் காட்டி பெருமிதம் கொண்டிருந்தான். மேலும் தன் அம்மாவைப் பற்றியும் கோள் சொல்லிக் கொண்டிருந்தான். அவனுடைய பூரிப்பு தாங்க முடியவில்லை . அவன் அப்பா ஒன்றும் பேசாமல் அவன் செய்வது அனைத்தையும் மௌனமாக கேட்டுக் கொண்டிருந்தார்.

அவன்
அம்மாவும் எதுவும் அலட்டிக் கொள்ளாமல் அவர் பாட்டுக்கு சமையல் செய்து கொண்டிருந்தார். அவரும் எதுவும் பேசவில்லை .ஆனால் வந்ததிலிருந்து அவர் பேசாததுதான் அவனுக்கு நெருடலாக இருந்தது. தீடிரென்று கணேஷின் அம்மா கூப்பிடும் குரல் கேட்டது, "டேய் கணேஷ் எழுந்திரு, போய் காக்கைக்கு சாதம் வை . இன்னைக்கு அம்மாவாசை" என்றார். அப்பொழுதுதான் கணேஷிற்கு விழிப்புத் தட்டியது. எதிரே இருந்த சுவரில் அப்பா போட்டோவில் அசைந்து கொண்டிருந்தார்.

6 comments:

Devaraj Rajagopalan said...

இவை அனைத்தும் கற்பனை கதை இல்லை என்பது நிச்சயம். மிகவும் உருக்கமாக எழுதியுள்ளாய். இப்பதிவை படித்து முடிக்கும் அனைவரின் கண் கலங்குமாறு செய்துவிட்டாய் :)

Haripandi said...

மிக்க நன்றி தேவராஜ்...

Prasanna said...

ஆழ்மனம் நம் ஆசைகளை சுலபமாக காட்டி விடுகிறது.. கனவுகள் மூலம்.. நல்லா இருக்கு தொடருங்கள்.

Devaraj Rajagopalan said...
This comment has been removed by the author.
Haripandi said...

mikka nandri prasanna ....

senthil velayuthan said...

good post