கடந்த வாரம் என் நண்பரின் நண்பராகிய ஜெர்மனி நாட்டைச் சார்ந்த ஒரு பெண் சென்னை வந்திருந்தார். அவரை அந்த நண்பர் சென்னையைச் சுற்றியுள்ள சில முக்கியமான சுற்றுலா தளங்களுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். அங்கெல்லாம் அப்பெண்ணுக்கு கசப்பான அனுபவங்களே நேர்ந்துள்ளன.
நம் ஊரில் சுற்றுலா தளங்களில் இருக்கும் மிக முக்கியமான பிரச்சினை, பிச்சைக்காரர்கள். இப்பிச்சைக்காரர்கள் எவரையும் விடுவதில்லை, குறிப்பாக வெளிநாட்டுக்காரர்களை. இப்பிச்சைக்காரர்கள் எவரேனும் வெளிநாட்டுக்காரர்களைப் பார்த்தால் அவ்வளவுதான், அவர்களைச் சுற்றிக் கூடி, எவ்வளவு முடியுமோ அவ்வளவு காசு பறிக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். இதனால் வெளிநாட்டுகாரர்கள் நம் சுற்றுலா தளங்களை நிம்மதியாக பார்க்க முடிவதில்லை. இதே அனுபவம் இப்பெண்ணிற்க்கும் நேர்ந்துள்ளது.
ஒரு நாள் இந்த ஜெர்மானியப் பெண் ஒரு டீக் கடையில் ஒரு டீயும் இரண்டு பஜ்ஜியும் சாப்பிட்டு விட்டு நூறு ரூபாய் கொடுத்துள்ளார். அந்த டீக் கடைக்காரன் ஒரு டீ, இரண்டு பஜ்ஜிக்கு நூறு ரூபாய் சரியாகிவிட்டது என்று கூறி மீதி சில்லறை கொடுக்க மறுத்துள்ளான். அதற்க்கு இந்த ஜெர்மானியப் பெண் "i know value of money.This is not worth for 100 Rs" என்று கூறி சண்டை போட்டுள்ளார். பிறகு அந்த சென்னை நண்பர் வந்தபிறகே இந்த டீக் கடைக்காரன் சில்லறை கொடுத்துள்ளான். நம் ஊரைப் பொறுத்தவரையில் வெளி நாட்டுக்காரர்கள் அனைவரும் பணக்காரர்கள். அவர்களிடம் இருந்து எவ்வளவு பணம் பறிக்க முடியுமோ அவ்வளவு பறிக்க வேண்டும் என்று நினைப்பு. இதற்க்கு ம(மா)க்களை மட்டுமே குறை சொல்லிப் பயனில்லை. இந்த புத்தி அரசாங்கத்துக்கே உண்டு, அதனால் தான் சுற்றுலாத் தளங்களில் இந்திய மக்களுக்கு நுழைவுக் கட்டணம் 5 ரூபாய் என்றால் வெளிநாட்டுக்காரர்களுக்கு 50 ரூபாய் என்றிருக்கும். இத்தனைக்கும் இந்தியா வரும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் பெரும்பாலும் மாணவர்களாகவோ அல்லது வெளிநாட்டில் மத்திய தர மக்களாக இருப்பவர்கள்தான், பணக்காரர்கள் அல்ல. பணக்காரர்கள் எவரும் இந்தியா வருவதில்லை. அவர்கள் வெனிஸ், சுவிஸ் என்றுதான் செல்வார்கள். நாம் பணம் பறிப்பது இந்த மாணவர்களிடம் இருந்துதான். இந்த ஜெர்மானியப் பெண்ணும் ஒரு மாணவர்தான் மேலும் அவர் ஜெர்மானிய மத்திய தர வகுப்பைச் சார்ந்தவர்தான். சென்னையில் ஒரு காலச்சார நிகழ்ச்சியில் பங்கேற்ப்பதர்க்காக ஒரு வருடம் ஜெர்மனியில் பகுதி நேர வேலை செய்து, பணம் சேர்த்து சென்னை வந்துருக்கிறார்.
ஒரு நாள் நானும் மதுவும் பைக்கில் சென்று கொண்டிருந்தோம். அப்பொழுது ஒரு பைக்கில் இரண்டு வெளிநாட்டுக்காரர்கள் வந்தார்கள். அவர்கள் ஒரு ஆட்டோகாரனிடம் ஒரு இடத்திற்குச் செல்ல வழி கேட்டார்கள். அதற்க்கு அந்த ஆட்டோகாரன் நான் உங்களை கொண்டு போய்விடுகிறேன் , ஆட்டோவில் ஏறுங்கள் என்றான். அதற்க்கு அந்த வெளிநாட்டுக்காரர்கள் "No no,we have bike. you just say the route" என்றார்கள். அதற்க்கு அந்த ஆட்டோகாரன் வழி எல்லாம் சொல்ல முடியாது, போ என்று கூறினான். நான் இத்தகைய சம்பவங்கள் நேருவது வெளிநாட்டுகாரர்களுக்கு மட்டுமே என்று கருதவில்லை. மொழி தெரியாத , ஊர் தெரியாத யார் மாட்டினாலும் நம் ம(மா)க்கள் பணம் கறக்க நினைக்கிறார்கள்.
சென்ற வருடம் நான், மது மற்றும் என் நண்பன் ஆனந்தபாபு மூவரும் குலு மணாலி சென்றுவிட்டு ஒரு தனியார் பேருந்தில் டில்லி திரும்பிக்கொண்டிருந்தோம். பேருந்தை விட்டு இறங்கிய பிறகுதான் தெரிந்தது, மது பேருந்திலேயே தன்னுடைய பர்ஸ் - ஐ தொலைத்துவிட்டான் என்று. பிறகு வந்த பேருந்தின் register number ஐ கஷ்டப்பட்டு கண்டு பிடித்து அந்த பேருந்து இருக்கும் இடத்தையும் கண்டு பிடித்தோம். இந்த மூவரில் ஆனந்தபாபுவிற்கு மட்டும்தான் ஹிந்தி தெரியும். அவனும் அலுவலகம் செல்ல வேண்டி இருந்ததால் அவன் எங்களுடன் வர முடியாத நிலை. அதனால் நானும் மதுவும் மட்டும் பர்ஸ் - ஐ தேடி சென்றோம். கடைசியாக பேருந்தைக் கண்டு பிடித்து அதனுள் பர்ஸ் - ஐ தேடிப் பார்த்தால், பர்ஸ் - ஐ காணவில்லை. பிறகு அங்கு இருந்த கிளீனரிடம் ஒரு வழியாக சைகை பாசையில் பேசினோம். பிறகு அவன் எங்களை அந்த பேருந்தின் ஓட்டுனரிடம் அழைத்துச் சென்றான். அந்த ஓட்டுனன் ஹிந்தியில் பேசினான். ஹிந்தியில் எனக்கும் மதுவிற்கும் தெரிந்த ஒரே வாக்கியம் "ஹிந்தி நகி மாலும்". இதையே அவனிடமும் கூறினோம். அவன் மேலும் ஹிந்தியில் நிறைய பேசிவிட்டு பர்ஸ் - ஐ கொடுத்தான். பர்ஸ் - ஐ திறந்து பார்த்தால் பர்சில் பணம் எதையும் காணவில்லை . PAN card, ATM card மட்டும் தான் இருந்தது. அவனிடம் எப்படி ஹிந்தியில் பேசுவது என்று தெரியவில்லை. பொதுவாக இந்த மாதிரி சமையங்களில் நாங்கள் ஆனந்தபாபுவிடம் போன் போட்டு , ஹிந்தி பேசுவரிடம் கொடுத்துவிடுவோம். அவன் அவர்களிடம் பேசி புரியவைப்பான். இப்படித்தான் எங்களுடைய தகவல் பரிமாற்றம் டில்லியில் நடந்தது. அன்றும் அதையேதான் செய்தோம். அந்த ஓட்டுனன் ஆனந்தபாபுவிடம் பேசி விட்டு எங்களிடம் போனைக் கொடுத்தான். ஆனந்தபாபு என்னிடம் "அந்த டிரைவர் பர்சுல இருந்த பணம்லாம் தரமாட்டானாம், வேணும்னா பார்ச வாங்கிட்டு போங்கங்கிறான். at least நமக்கு PAN Card,ATM card னாவது கிடச்சதுள்ள. அதனால பர்சனாவது வாங்கிட்டு வந்துரு " என்றான் . ஆக நம் ம(மா)க்கள் வெளி நாட்டுக்காரர்கள் என்று மட்டும் இல்லை, மொழி தெரியாத எவராக இருந்தாலும் அவர்கள் தலையில் மிளகாய் அரைப்பார்கள்.
வெளிநாட்டுப் பெண்கள் இங்கு வரும்போது அவர்களுக்கு நடக்கும் பெருங்கொடுமை பாலியல் வன்முறைகள். நம் ம(மா)க்களுக்கு வெளிநாட்டுப் பெண்கள் என்றாலே கலவியில் அதிக ஈடுபாடு கொண்டவர்கள், அவர்கள் யார் கூப்பிட்டாலும் எளிதில் கலவிக்கு ஒத்துக் கொள்வார்கள் என்று நினைப்பு. அதனாலையே எந்த வெளிநாட்டுப் பெண்களை பார்த்தாலே பாலியல் வன்முறையில் ஈடுபடுகிறார்கள். நான் மேலே கூறிய அந்த ஜெர்மானியப் பெண்ணிற்கும் இதே கொடுமைதான் நேர்ந்தது. அவர் பேருந்தில் சென்ற போது இடிப்பது, கிள்ளுவது போன்ற பாலியல் கொடுமையில் ஈடுபட்டுள்ளார்கள். இதில் படித்தவர்கள் படிக்காதவர்கள் என்றில்லை. கல்லூரி மாணவர்கள் கூட இது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளனர். இதைவிடப் பெருங்கொடுமை இந்த ஜெர்மானியப் பெண்ணிற்கு உதவுவதற்கென்று சென்னையைச் சேர்ந்த ஒருவனை நியமித்திருக்கிறார்கள். அவனும் அவரிடம் இதே போன்ற பாலியல் கொடுமைகளில் ஈடுபட்டுள்ளான். அவனிடமே அவர் "Already i am sweating, you also make me sweat more" என்று கூறியும் அவன் திருந்தவில்லை.
இப்படிப்பட்டவர்களை காட்டுமிராண்டிகள் என்று கூறுவதைத் தவிர்த்து பிறகு எப்படி கூறுவது.
இவ்வளவு நடந்தாலும் வெளிநாட்டுக்காரர்கள் இந்தியாவையும்,அதன் பழமையையும்,அதன் கலாச்சாரத்தையும்(!) நேசிக்கத்தான் செய்கிறார்கள். இந்த ஜெர்மானியப் பெண் மகாபல்லிபுரச் சிற்ப்பங்களையும் , மயிலை கோயில் அழகையும் வியந்து வியந்து புகழ்ந்திருக்கிறார். அவர்களுக்கு நம்முடைய பழமை மிகவும் பிடித்திருக்கிறது. சென்ற வருடம் டில்லிக்கு நான் சென்ற பொழுது நடந்த சம்பவம் எனக்கு ஞாபகம் வருகிறது. அப்பொழுது நானும், மதுவும் சென்ற பேருந்து சிக்னலில் காத்துக்கொண்டிருந்தது. அப்பேருந்திற்க்கு அருகிலேயே ஒரு ஆட்டோவும் காத்துக்கொண்டிருந்தது. அதில் ஒரு வெளிநாட்டுப் பெண் அமர்ந்திருந்தார். அப்பொழுது 6 அல்லது 7 வயதுள்ள ஒரு பெண் குழந்தை கையில் வைத்து எதையோ விற்றுக் கொண்டிருந்தது. அப் பெண் குழந்தை அந்த வெளிநாட்டுப் பெண்ணிடம் விற்க முயன்ற போது அப்பெண் அதை வாங்க மறுத்து தன் பையிலிருந்து ஒரு பிஸ்கட் பாக்கெட்டை எடுத்து அப்பெண் குழந்தையிடம் கொடுத்து போகச் சொன்னார். எனக்கு உடனே அப்பேருந்தை விட்டு இறங்கிச் சென்று அப்பெண்ணின் கையைப் பிடித்துக் குலுக்கிப் பாராட்ட வேண்டும் என்று தோன்றியது. உலகில் நல்லவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.