Monday, September 28, 2009

இலியட்டும் மகாபாரதமும் - 3


அக்கிலிசை நான் , துரியோதனனுடன் ஒப்பிடும்போது, ஹெக்டரை நான் அர்ஜுனனுடன் ஒப்பிடுவேன். ஹெக்டரும், அர்ஜுனனும் மிகச்சிறந்த வீரர்கள். சொல்லபோனால் இருவருமே அவர்களின் படைக்கு பிரதானமானவர்கள். அவர்கள், அவர்களின் படைகளின் வெற்றி தோல்வியையே நிர்ணயிக்கும் அளவுக்கு திறமைசாலிகளாக இருந்தார்கள்.

பிதாமகர் பீஸ்மரை, ட்ராய் போரில் ஈடுபட்ட நெஸ்டருடன் ஒப்பிடலாம். ஏனெனில் இருவரும் அவர்களின் வயதிர்க்க்காகவும், ஞானத்திற்காகவும் பெரிதும் மதிக்கப்பட்டனர்

பீனிக்ஸ (பறவை அல்ல ), அக்கிலிஸின் ஆசிரியன். இதற்க்காக இவரை நாம் துரோனச்சரியருடன் ஒப்பிடலாம்.

இரண்டு போர்களும் பெண்ணாலும் மண்ணாலும் நேர்ந்தவையே (பொதுவாக பெரும்பாலான போர்கள் பெண்,மண் மற்றும் பொன்னிர்க்காக நடந்தவைகளாகவே இருந்திருக்கின்றன ).

ஒருமுறை துருயோதணன், பாண்டவர்களின் மாளிகைக்குச் சென்றிருக்கும்போது, அங்கிருந்த தடாகத்தை பளிங்குத் தரை என்று நினைத்து, தடாகத்தில் விழுந்து விடுவான். அதைப் பார்த்து திரௌபதை, சிரித்ததில் மிகவும் அவமானப்பட்டு பாண்டவர்களை பழிதீர்க்க வஞ்சம் கொள்வான். ட்ராய் நகரப் போர் ஹெலனைக் கடத்துவதிலிருந்து ஆரம்பம் ஆகிறது. இப்படித் தெரிந்தோ அல்லது தெரியாமலோ இரண்டு போர்களின் ஆரம்பத்திற்கும் பெண்கள் முக்கிய காரணமாயிருந்தனர். இதற்க்காக திரௌபதையை, ஹெலனுடன் ஒப்பிடலாம்.

துருயோதணன், பாண்டவர்களுக்கு ராஜ்ஜியத்தில் இருந்த பங்கைக் கொடுத்திருந்தாலோ அல்லது குறைந்த பட்சம் அவர்கள் கேட்ட ஐந்து கிராமங்களைக் கொடுத்திருந்தாலோ பாரதப் போரே நடந்திருக்காது. அகமெம்னன், ட்ராய் போர் தன் தம்பி மனைவியை மீட்பதே நோக்கம் என்று கூறினாலும், எவராலும் கைப்பற்ற முடியாத ட்ராய் நகரைக் கைப்பற்றுவதே அவனது பிரதான நோக்கமாக இருந்தது. ஹெலனைக் திரும்பக் கைப்பற்றுதல் என்பது ஒரு உடனடிக் காரணமாக அமைந்தது அவனது அதிர்ஷ்டம்.

இப்படி இரண்டு போர்களும் பெண்ணாலும் மண்ணாலும் நிகழ்ந்தன.


இரண்டு போர்களின் முடிவிலும் புகழ் பெற்ற வீரர்கள முக்கால்வாசிப் பேர் அழிந்தனர். அக்கிலிஸ், ஹெக்டர் இருவரும் போரில் மரணம் அடைந்தனர். போரின் முடிவில் அகமெம்னன் நாடு திரும்பிய போது தன் மனைவியால் விஷம் வைத்துக் கொல்லப்பட்டான். பாரதப் போரில் பிதாமகர் பீஸ்மர்,கர்ணன்,துருயோதணன், பாண்டவர்களின் மைந்தர்கள் மற்றும் பலர் மாண்டனர் . போரின் முடிவில், காந்தாரியின் சாபத்தால் கண்ணனும் அவன் குலமும்் அழிந்தது. இப்படி இரண்டு போர்களும் சர்வ நாசங்களை ஏற்படுத்தின.

எனக்கு இலியட்டையும் மகாபாரதத்தையும ஒப்பிடக் காரணமாக இருந்தது,துருயோதனன் மற்றும் அக்கிலிஸ் உயித்தலம் பற்றிய ஒற்றுமைகளே. அதுவே என்னை இப்பெரிய பதிப்பை எழுதத் தூண்டியது. எனக்குத் தெரியும் இப்பதிப்பானது சற்று நீளமானது மற்றும் ஓரளவுக்கு சுவாரசியம் இல்லாத ஒன்றும் கூட. மேலும் இப்பதிபைப் படிப்பதற்கு ஓரளவுக்கு மகாபாரதத்தைப் பற்றியும், இலியட்டைப் பற்றியும் தெரிந்திருக்க வேண்டும் (மிகக் குறைந்தபட்சம் ட்ராய் திரைப்படத்தை பார்த்திருத்தல் நலம்). இலியட்டையும், மகாபாரதத்தையும் பற்றி எழுதிக்கொண்டேச் செல்லலாம். ஏனெனில் இரண்டும் அவ்வளவு பெரிய இதிகாசங்கள். என்னால் முடிந்த மட்டும் எனக்குத் தெரிந்த சிறு விசயங்கைக் கொண்டு மிகக் குறைந்த அளவு எழுதியுள்ளேன்.

பொதுவாக ஒப்பீடுகள் ஆளுக்கு ஆள் வேறுபடும். சில பேர் ஒப்பிடவே முடியாது என்பார்கள். சில பேர் ஒப்பிட இயலும் என்பார்கள், அப்படி ஒப்பிட இயலும் என்று கூறுபவர்கள் பார்க்கும் கோணமும் ஒருவருக்கொருவர் மாறுபடும். இங்கு நான் ஒப்பீடு செய்தவர்களுக்கிடையையே பல வேறுபாடுகள் இருக்கலாம், இருந்த போதிலும் நான் எனக்குத் தெரிந்த வரையில், தெரிந்த முறையில் ஒப்பீடு செய்துள்ளேன். இவற்றில் ஏதேனும் பிழை இருந்தால் சுட்டிக் காட்டுங்கள், குட்டிக் கொள்கிறேன் ;).

Photo Courtesy :http://upload.wikimedia.org/wikipedia/commons/a/a4/Hector_brought_back_to_Troy.jpg

1 comment:

JDK said...

//ஹெக்டரை நான் அர்ஜுனனுடன் ஒப்பிடுவேன்//மச்சி..ஹெக்டர்'க்கு ஒரே ஒரு பொண்டாட்டி ஆனா அர்ஜுனன்'கு கணக்கு வழக்கே இல்ல...paavam paa Hector!!! எ.கொ.ச.இ.??