Monday, August 10, 2015

சூரிய மின்னாற்றல் : மாற்றம் , முன்னேற்றம்

சென்ற வாரம் ஒபாமா அமெரிக்காவின் Clean Energy கொள்கையை அறிவிச்சிருக்கிறார் . அதன்படி அமெரிக்கா இன்னும் 15 ஆண்டுகளில் 32% கரியமில வாயு வெளியேற்றத்தை தடுத்து நிறுத்தும் . அதாவது நிலக்கரி மூலம் தயாரிக்கப்படும் மின்சாரத்தை குறைத்து சூரிய ஓளி மற்றும் காற்றாலை மூலம் மின்சாரத்தை தயாரிக்கும் . ஒபாமா தன்னுடைய அறிவிப்பில் காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் விளைவுகள் இனிமேலும் அடுத்த தலைமுறைக்கான பிரச்சினையாக இருக்கப்போவதில்லை. மேலும் இதில் அமெரிக்க முன்னெடுக்காமல் வேறு யார் முன்னெடுப்பார்கள் என்றும் சொல்லி இருக்கிறார் . இது மிகச்சிறந்த அறிவிப்பாகும் .  உலகின் கரியமில வாயு வெளியேற்றத்தில் அமெரிக்கா , சீனாவிற்கு அடுத்து இரண்டாம் இடத்தில் இருக்கு . இதுவரை அமெரிக்கா, சீனா  மற்றும் இந்தியா போன்ற வளரும் நாடுகளை குறை மட்டும் சொல்லிக்கொண்டு ,  தான் எதுவும் செய்யாமல் இருந்தது . இப்பொழுதான் தன்னுடைய Clean Energy கொள்கையை தெளிவாக அறிவித்துள்ளது .

இதே போன்று சீனாவும் தன்னுடைய Clean Energy கொள்கையை சிலமாதத்திற்கு முன் அறிவித்தது. அதன்படி சீனா வருடத்திற்கு 10 GW சூரிய மின்னாற்றல் என்ற வீதம் 2020 க்குள் 100 GW சூரிய மின்னாற்றல் தயாரிக்கும் ஆலைகளை நிறுவப்போகிறது . அதேபோன்று 2020 க்குள் 200 GW மின்னாற்றலை தயாரிக்க காற்றாலைகளையும் நிறுவப்போகிறது . இது மிகச்சிறந்த மாற்றம் , முன்னேற்றம் . கீழே உள்ள படத்தைப் பார்த்தாலே அமெரிக்காவும் , சீனாவும் எந்த அளவிற்கு கரியமில வாயுவை வெளியேற்றுகின்றன என்பது தெரியும் . அதனால் அவற்றின் இந்த அறிவிப்பு எந்த அளவிற்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பது புரியும்.

Graphic: Estimated emissions by country, 2013

கரியமில வாயு வெளியேற்றத்தில் இந்தியாவும் குறைந்தது அல்ல . இந்தியா இதில் உலக அளவில் நான்காவது இடத்தில் உள்ளது . அதானால் தான் இந்தியாவும் 2020 க்குள் 20 GW சூரிய மின்னாற்றல் தயாரிக்கும் ஆலைகளை நிறுவப்போவதாக் அறிவித்தது . மோடி பிரதமர் ஆனதும் அதை 100 GW என்று அதிகரித்து இலக்கு நிர்ணயித்தார் . 100 GW  என்பது பெரிய இலக்கு (மார்ச் 2015 இல் இந்தியாவின் மொத்த மின் உற்பத்தியே 271 GW தான்) . ஆனால்  நிச்சயம் இது சிறப்பான முடிவாகும் .

ஒபாமா ஒவ்வொரு மாநிலத்திற்கும் இலக்கு நிர்ணயிக்கப்போவது போல் மோடியும் மாநிலங்களுக்கு என்று இலக்கு நிர்ணயிக்க வேண்டும் . அப்படி செய்தால்தான் 2020க்குள் 100 GW என்ற இலக்கை அடைய முடியும்.

தற்போது உலக அளவில் சூரிய மின்னாற்றல் தயாரிக்கும் நாடுகளில் ஜெர்மனி முதலிடத்தில் உள்ளது . சொல்லப்போனால் நாம் தான் இதில் முன்னோடியாக இருந்திருக்க வேண்டும் . சூரிய ஆற்றல் அபரிமிதமாக கிடைக்கும் நாடுகளில் உலக அளவில் இந்தியா முக்கிய இடத்தை வகிக்கிறது. இந்திய நிலப்பகுதியானது மொத்தம் 5000 ட்ரில்லியன் கிவாட் சூரிய ஆற்றலைப் பெறுகிறது . பெரும்பாலான நிலப்பரப்பானது ஒரு சதுர மீட்டரில் 4-7 கிவாட் சூரிய ஆற்றலை பெறுகிறது . இவ்வளவு ஆற்றலையும் நாம் வீணடித்துக்கொண்டிருக்கிறோம் . 

பூமத்திய ரேகைக்கு அருகில் இருக்கும் நாடுகளில், முன்னேறிய நாடுகள் இந்தியாவும் , பிரேசிலும் தான் . மேலும் தன்னுடைய அன்னியச் செலாவணியை மிக அதிகமாக கரியமில வாயு வெளியிடும் ஆற்றல் மூலங்களுக்கு இந்தியா செலவழிக்கிறது . சூரிய ஆற்றலில் மட்டும் நாம் முன்பே இன்னும் அதிகம் கவனம் செலுத்தி இருந்தால் நன்றாக இருந்திருக்கும்

ஆனால் சூரிய மின் ஆற்றல் தயாரிப்பது குறித்து பல மாற்றுக் கருத்துக்கள் இருக்கத்தான்  செய்கிறது . முக்கியமாக அதை தாயாரிக்க ஆகும் செலவு. சமீபத்தில் தமிழக அரசு அதானி குழுமத்திடம் இருந்து ஒரு யூனிட் 7 ரூபாய்க்கு வாங்குவதாக ஒப்பந்தம் செய்துள்ளது . இதனுடன் தொடர்புடைய மற்ற மானியங்களையும் சேர்த்தால் மொத்தம் 9 ரூபாய் வரை செலவாகும் ( சூரிய மின்னாற்றல் தயாரிக்க அடிப்படை தேவையான PV Cell க்கு நாம் நிறைய மானியம் அளிக்கிறோம் ) . ஆனால் நிலக்கரி மூலம் தயாரிக்கப்படும் மின்னாற்றலுக்கு தற்போது 2 ரூபாய் வரை தான் செலவாகிறது . ஆனால் இந்த நிலைமை மாறும். இதுவரை சீனா , அமெரிக்கா , இந்தியா அளவிற்கு யாரும் இவ்வளவு அதிக சூரிய மின்னாற்றல் தயாரிக்க எண்ணவில்லை (தற்போது ஒரு நாட்டின்  மிக அதிகபட்ச சூரிய மின்னாற்றல் தயாரிப்பே 38 GW  தான் ). இப்பொழுது இந்த நாடுகள் களம் இறங்கி உள்ளதால் PV Cell இன் விலை வருங்காலத்தில் மிக அதிகமாக குறையும் அதன் காரணமாக சூரிய மின்னாற்றலின் விலையும் குறையும் .

இந்தியா , இதற்கு தேவையான மூலப் பொருட்களை உள்நாட்டிலேயே தயாரிக்க வேண்டும். இல்லையென்றால் இதற்கு ஆகும் இத்தனை லட்சம் கோடிகளும் சீனாவிற்குதான் செல்லும் .மேலும் இதில் பல ஆராய்ச்சிகள் செய்வதன் மூலமாக புதிய தொழில்நுட்பங்களை கொண்டு மேலும் இதன் விலையைக் குறைக்கலாம்

சூரிய மின்னாற்றலுக்கு எதிராக வைக்கப்படும் மற்றொரு குற்றச்சாட்டு , இது தயாரிக்க தேவைப்படும் நிலப்பரப்பு . தற்போதைய காலகட்டத்தில்  1 MW தயாரிக்க 4.5 - 7.5 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. மக்கள்தொகைப் பெருக்கத்தால் நிலப்பரப்பு அருகி வரும் இந்தியா போன்ற நாடுகளில் இவ்வளவு நிலப்பரப்பை பெறுவது கடினம் .  ஆனால் இதற்கும் வழிகள் உள்ளன .  நகரங்களில் , வீடுகளிலும், அலுவலங்களிலும் மொட்டைமாடி சூரிய மின் ஆலைகளை ஊக்குவிப்பது மூலம் கணிசமான மின்சாரத்தை நாம் தயாரிக்க முடியும். புதிய  பெரிய அடுக்குமாடி குடி இருப்புகளிலும் , தொழிற் சாலைகளிலும் இதனை கட்டாயமாக்கவும் கூட செய்யலாம் . தொழிற்சாலைகளை குறிப்பிட்ட அளவு மின்சாரத்தை தாங்களே சூரிய ஆலை , காற்றாலைகளை நிறுவதன் மூலம் பெற வேண்டும் என்று கொண்டு வரலாம் . மேலும் ஒவ்வொரு கிராமத்திற்கு வெளியேயும் ஒரு சூரிய மின் ஆலையை நிறுவலாம் . இதனால் இரண்டு பலன்கள் . 1. கிராமங்களும், வீடுகளும் பெருமளவு மின் தன்னிறைவு பெறும். 2. மின் ஆற்றலை ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு செல்ல புதிய கட்டமைப்பு வசதிகளை செய்ய வேண்டியதில்லை மேலும் அதன் மூலம் ஏற்படும் மின் இழப்பையும் குறைக்கலாம் . கவனிக்கவும், மின்சாரத்தைகொண்டு செல்வதிலும் , விநியோகிப்பதிலும்  2012 இல் மட்டும் இந்தியா 17% இழப்பை சந்தித்துள்ளது . மின்னாற்றலை உபயோகிக்கும் இடத்திலேயே தயாரிப்பதன் மூலம் பெருமளவு இழப்பை நாம் குறைக்கலாம்.

அடுத்து நாம் முக்கியமாக கவனிக்கக் வேண்டிய துறை ரயில்வே . இந்திய அளவில், ஒரு தனி நிறுவனமாக மிக அதிக அளவில் மின்சாரத்தை உபயோகிப்பது ரயில்வேதான் . 2013-14 இல் மட்டும் இந்திய ரயில்வே 4000 MW மின்சாரத்தை உபயோகித்துள்ளது. இத்தனைக்கும் இதில் பயணிகள் ரயிலில் 50% மும் , சரக்கு ரயில்களில் 63% தான் மின்சாரத்தில் இயங்குகின்றன . மீதி டீசலில் இயங்கின்றன.இதற்கு என்று ரயில்வே 260 கோடி லிட்டர் டீசலுக்கு 2013-14 இல் மட்டும் 28,592 கோடி ரூபாய் செலவழித்துள்ளது . அதாவது மொத்த எரிபொருள் செலவில் இது 70% . இந்த டீசல்கட்டமைப்புகளை , மின் கட்டமைப்புகளாக மாற்றுவதன் மூலமும், அவற்றை பெருமளவு சூரிய மின்னாற்றலை கொண்டு இயக்குவதன் மூலம் நாம் நிறைய சேமிக்க முடியும் . இவற்றை ரயில்வேயே செய்யவேண்டும் . கவனிக்கவும் , 2006 கணக்கின்படி பாதுகாப்பு துறைக்கு அடுத்து இந்தியாவில் அதிக அளவு நிலத்தை தன்னகத்தே கொண்டிருப்பது ரயில்வேதான். மொத்தம் 4.32 லட்சம் ஹெக்டேர்  (page 2).  இதில் 44894 ஹெக்டேர் நிலம் சும்மாதான் இருக்கு. இதை உபயோக்கிக்கலாம்

இப்படி படிம எரிபொருளிலிருந்து சூரிய ஆற்றல் உள்ளிட்ட புதிப்பிக்கத்தக்க ஆற்றலுக்கு மாறுவதில் பல நன்மைகள் உள்ளன. இதன் மூலம் பசுமை இல்ல விளைவைக் குறைக்கலாம் , நிலக்கரி வெட்டுகிறோம் என்ற பெயரில் காட்டை அழிப்பதைத் தடுக்கலாம் , காற்று மாசு உள்ளிட்ட பல மாசுகளால் ஏற்படும் உடல்நலக் குறைபாட்டைக் குறைக்கலாம். வேறு என்ன வேண்டும்? .

என்னைப் பொறுத்தவரை இதை என்றோ உலக நாடுகள் செய்திருக்க முடியும். ஆனால் உலகில் அதிக அளவு படிம எரிபொருளைப் பயன்படுத்தும் அமெரிக்காவிற்கு அதிலிருந்து வெளியேறும் தேவை இல்லை . ஏனெனில் அதன் பொருளாதாரமே அந்த படிம எரிபொருளில்தான் கட்டமைக்கப்பட்டுள்ளது . உலக அளவில்  நிலக்கரி உற்பத்தியில் அமெரிக்கா இரண்டாவது இடத்தையும் , பெட்ரோலிய உற்பத்தியில் மூன்றாவது இடத்தையும் வகிக்கிறது .  அதனால் அது இதுவரை பெறுமளவில் புதுப்பித்தக்க ஆற்றலில் கவனம் செலுத்தவில்லை . இப்பொழுதும் கூட ஒபாமாவிற்கு எதிராக பல குடியரசுக் கட்சி ஆளுநர்கள், தாங்கள் ஆளும் மாநிலங்களில் இதை செயல்படுத்த மாட்டோம் என்கின்றனர் . அங்கு உள்ள சுரங்கத்துறை தொழிலாளர்களும் இதை எதிர்க்கின்றனர் ஆனால் உலக அளவில் பெரும்பாதிப்பை ஏற்படுத்தும் இந்த காலநிலை மாற்றத்தின் பாதிப்பைக் குறைக்க , பிற நாடுகளைக் கேள்வி கேட்க தனக்கு தார்மீக உரிமை வேண்டுமென்றால் தான் இதில் முன்னிலை வகிக்க வேண்டும்  என்பதை அமெரிக்கா தற்போது உணர்ந்துள்ளது

சீனாவின் நிலையோ வேறு மாதிரி. உலக அளவில் நிலக்கரியை அதிக உற்பத்தி செய்வதும் , அதை அதிக அளவில் நுகர்வதும் சீனாதான் . அதன் பாதிப்பை சீனா இன்று நன்றாகவே உணர்கிறது . உலகப் பெரும் நாடுகளில் உள்ள நகரங்களில் பெய்ஜிங்தான் அதிக காற்று மாசு கொண்ட நகரம். மேலும் சீனா அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளையே தன் போட்டியாக எண்ணும் . அதனால் அந்த நாடுகளுக்கு இணையாக தானும் முன்னேறிவிட்டதை அறிவிக்க அது தன் நகரங்களில் உள்ள மாசைக் குறைக்க வேண்டும். அதனாலையே அது புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கு மாறிக் கொண்டிருக்கிறது

ஆனால் , முன்னர் நான் சூரிய மின்னாற்றல் உற்பத்தியில் இந்தியாதான் முன்னிலை வகித்திருக்கவேண்டும் என்று சொன்னதற்கு மற்றொரு முக்கிய காரணம் உள்ளது. அது, உலகின் உள்ள  மிக அதிகமாக  காற்று மாசு அடைந்த பத்து நகரங்களில்முதல் நான்கு நகரங்கள் உட்பட மொத்தம் ஆறு நகரங்கள் இந்தியாவில் உள்ளன . இதில் முதல் இடம் வகிப்பது நம் தலைநகராம் டில்லி . இதைவிட வேறு என்ன காரணம் நமக்கு வேண்டும் ?. இதை விட புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கு மாற நமக்கு வேறு என்ன காரணம் வேண்டும். 

Photo courtesy : bbc.com