நாம் இங்கு ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும், நாம் இன்று கோயில்களிலும் மற்ற இடங்களிலும் பார்க்கும் யானைகள் எவையும் வீட்டு விலங்குகள் அல்ல. அதாவது மனிதனால் வளக்கப்பட்டு, இனவிருத்தி செய்யப்பட்டு நாட்டிலேயே பிறக்கும் விலங்குகள் அல்ல. இந்த யானைகள் யாவும் சிறு குட்டியாகவோ, இல்லை பெரிதாக இருக்கும் போதே காட்டில் பிடிக்கப்பட்டு பின் பழக்கப்படுத்தப்பட்டவையாகவோதான் இருக்கின்றன. நாம் அன்பு காட்டும் நாய், பூனை போன்ற மற்றவை எல்லாம் பெரும்பாலும் வீட்டு விலங்குகள்தான். ஆனால் காட்டில் பிடிக்கப்பட்ட ஒரு ஜீவன் மனிதருடன் இத்துனை உறவாடுவது யானை ஒன்றுதான்.
உலகில் இருக்கும் ஜீவராசிகளில் ஆன்மா என்ற ஒன்று இருப்பதாக நம்பப்படுவது மனிதனுக்கும் யானைக்கும் மட்டும்தான்.ஆன்மீகரீதியாக ஆன்மா என்பதை நாம் ஏற்க மறுத்தாலும் அதிக உணர்ச்சி மிகுந்த விலங்குகளில் மனிதனுக்கு அடுத்து இருப்பது யானைதான். எனக்குத்தெரிந்து அதுதான் மனிதருக்கும் இந்த யானைக்கும் இடையே ஒரு நெருக்கத்தை ஏற்படுத்துகிறதோ என்று தோன்றுகிறது. யானைகள் குடும்பம் குடும்பமாக வாழ்வவை. அவற்றிற்கு இடையேயான பிணைப்பு மனிதர்களுக்குள் இருக்கும் பிணைப்பிற்கு சற்றும் குறைவில்லாதவை. தன் குடும்ப உறுப்பினர்களை பாதுகாக்க அவை சற்றும் தயங்காதவை. தன் குடும்ப உறுப்பினர் மட்டுமல்லாது மற்ற எந்த யானை இறந்தாலும் கூட அவற்றிற்காக துக்கம் கொள்பவை. யானைக் கூட்டம் நகர்ந்து செல்லும்போது அவை எங்காவது யானைகளின் எலும்புக் கூடைப் பார்த்தால் அங்கு சற்று நின்று அவற்றை முகர்த்து அவற்றை எண்ணி துக்கம் கொள்ளும். இப்படி முகர்த்து பார்க்கும் அவை அந்த எலும்புகளிலிருந்து சில இன்ச் உயரத்திலேயே காற்றில் தும்பிக்கையை துலாவும். அதாவது அதுதான் அந்த யானை உயிருடன் இருந்த பொழுது அதன் தோல் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள் . இது பல தடவை பதிவு செய்யப்பட்டுள்ளது. இப்படி அவை உணர்ச்சியும் அறிவும் மிகுந்தவை.
நீலகிரியில் யானை டாக்டர் என்று புகழ் பெற்றவர் கிருஷ்ணமூர்த்தி. விலங்கு நல மருத்துவராக தன் வாழ்க்கையைத் தொடங்கியவர், யானைகளின் மீது உள்ள பிரியத்தால் அதில் ஈடுபாடு அதிகமாகி இந்தியாவில் எங்கு யானைகளுக்கு வைத்தியம் தேவைப்பட்டாலும், இல்லை இறந்த காட்டு யானைகளைப் பிணப் பரிசோதனை செய்யவும் இவரைத்தான் அழைத்தனர். இவர் பலதடவை அடிபட்ட காட்டு யானைகளுக்கு வைத்தியம் பார்த்துள்ளார். அப்படி கடுமையாக அடிபட்டு வேதனையுடன் இருக்கும் அந்த பெரிய ஜீவனுக்கு அவர் வைத்தியம் பார்க்கும்போது அவர் தன் உயிர் பாதுகாப்புக்கு நம்புவது, தனக்கு நல்லது செய்வதை அந்த யானை புரிந்து கொள்ளும் என்பதுதான்.
யானைகள் தனக்கு உதவி செய்தவர்களை என்றும் மறப்பதில்லை. இதற்கு உலகில் பல சாட்சிகள் உண்டு. அவற்றிற்கு தனக்கு உதவுபவரையும், தீங்கு இழைப்பவர்களையும் நன்கு உணர முடிகிறது. அவை உள்ளுணர்வு மிக்கவை. தென் ஆப்பிரிக்காவில் லாரன்ஸ் ஆண்டனி என்பவர் இருந்தார். அப்பொழுது தென் ஆப்பிரிக்காவில் ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு தப்பிப் போகும் ஒரு யானைக் கூட்டத்தை அவர் பாதுகாப்பில் இருக்கும் பகுதியில் வைத்துக்கொள்ள கோரப்பட்டது. அப்படி வந்த அவற்றைப் அந்தப் பகுதியில் பழகும் வரை பொதுவாக மின்சார வேலி கொண்டு அடைத்து வைப்பர். அப்படி அங்கு வந்த யானைக் கூட்டத்தை அடைத்து வைத்த போது அவை அந்த வேலியை உடைத்து தப்பிப் போகப் மிக பிரயத்தனப்பட்டன. இதைப் பார்த்த லாரன்ஸ் அந்தக் கூட்டத்தின் தலைமை யானையான நானாவுடன் பேசத்தொடங்குகிறார். அவை வெளியே சென்றால் மற்றவர்களால் கொல்லப்படும் என்று வேலிக்கு மறுபக்கம் இருந்து மனதார பேசுகிறார். அவற்றிற்கு தன் மொழி புரியாவிட்டாலும் தன் உள்ளுணர்வு புரியும் என்று மனதார நம்பினார். நானாவும் அவர் பேசியதை நம்பத்தொடங்கியது. தப்பிச் செல்லும் முயற்ச்சியைக் கைவிட்டு அங்கேயே தன் கூட்டத்துடன் தங்கியது. அதற்குப் பிறகு நானாவுக்கும் லாரன்சுக்கும் இடையேயான பந்தம் மிக ஆச்சரியமானது உணர்ச்சிகரமானது . லாரன்ஸ் எங்கேயாவது வெளியூர் சென்று விட்டு வரும்போது சரியாக அவரை வரவேற்க யானைக் கூட்டம் அவர் வீடு வந்தன. இது எதுவும் எதேச்சையானது அல்ல. இது ஒவ்வொரு தடவையும் நடந்தது. 2012 இல் லாரன்ஸ் இறந்த பொழுது அவர் வீட்டை இரண்டு யானைக்கூட்டம் அடைந்தன. கிட்டத்தட்ட இரண்டு நாட்கள் அவை அங்கேயே இருந்தன. அதற்கு முன் ஒரு வருடத்திற்கு முன்தான் யானைக் கூட்டம் அவர் வீட்டைச் சுற்றி வந்தன என்று அறிந்தால் இது மிகவும் ஆச்சரியமானது, உணர்ச்சிமயமானது.
யானைகள் தங்களுக்குள்ளே மனிதர்களால் கேட்டரியமுடியாத அக ஒலிகளாலும் தகவல் பரிமாறிக்கொள்கின்றன. இதன் மூலம் வெகு தொலைவில் இருக்கும் யானைக் கூட்டத்திற்கும் தகவல் பரிமாறுகின்றன. தங்களுக்கு ஏற்படும் ஆபத்து, தண்ணீர் கிடைக்கும் இடம் போன்றவற்றை எல்லாம் அவை தம் கூட்டத்துடன் அகஒலி மூலம் மற்ற யானைக் கூட்டத்திற்கு தெரிவிக்கின்ற என்று ஆராய்ச்சிகள் காட்டுகின்றன .
யானைகள் தங்களுக்கு உதவி செய்பவர்களை மட்டுமல்ல தீங்கு இழைப்பவர்களையும் மிகவும் அறியும். ஆப்பிரிக்காவில் மசாய் என்ற பழங்குடியினர் இருக்கிறார்கள். அவர்களுக்கும் யானைகளுக்கும் என்றும் ஆகாது. யானைகளுக்கும் அவர்களுக்கும் என்றும் பிரச்சினைதான். யானைகளைக் கண்டால் அவர்கள் மிகவும் தாக்குவார்கள், கொல்வார்கள். அவர்களைக் கண்டாலோ அல்லது அவர்களின் குரல் கேட்டாலோ யானைகள் மிகவும் சீற்றம் கொள்ளும். ஆனால் மற்ற இனத்தவர்களைக் கண்டால் அவை இவ்வளவு சீற்றம் கொள்வதில்லை.
மனிதர்களின் குழந்தைப் பருவம் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தால் அவர்கள் பிற்கால வாழ்க்கை மிகவும் பாதிக்கப்படும் என்பதை நாம் அறிவோம். பிற்காலங்களில் மிக அதிக மன உளைச்சலில் பாதிக்கப்படவர்களாகவோ, முரட்டுத்தனமானவர்களாகவோ அவர்கள் இருப்பார்கள். இது யானைகளுக்கும் பொருந்தும்.யானைகளும் மன அழுத்தத்தால் பாதிக்கப்படுகின்றன. சில காலங்களுக்கு முன் தென் ஆப்பிரிக்காவின் ஒரு பகுதியில் சில இளம் யானைகள் மிகவும் முரட்டுத்தனமாக நடந்து கொண்டன. அவைகள் மனிதர்களை அதிகம் தாக்குபவையாகவும், காண்டாமிருகங்களைக் கற்பழிப்பவையாகவும் ( ஆம் நீங்கள் வாசித்தது சரிதான் ) இருந்தன. ஆராய்ச்சியின்போது இந்த இளம் யானைகள் குழந்தைப் பருவத்தின் போது அவற்றின் கண் முன்னையே அவர்களின் குடும்பத்தார் வேட்டைக்காரர்களால் கொடூரமாக வேட்டையாடப்பட்டது தெரியவந்தது .
ஒரு காட்டில் பிறக்கும் ஒரு உயிர் மனிதனுடன் இவ்வளவு நெருக்கமாக இருப்பது யானைதான். இந்தியாவிலும் தெற்காசிய நாடுகளிலும் யானைகளுடனான நெருக்கம் மிக அதிகம் . அவை எப்பொழுதும் சமூகத்தில் அதிக முக்கியத்துவம் கொண்டவையாகவே இருந்துருக்கின்
இன்று உலகில் யானைகளின் எண்ணிக்கை மிகவும் அருகிவிட்டது . இந்தியாவில் சில லட்சங்களாக இருந்த யானைகள் 30,000 ஆக சுருங்கி விட்டது . ஆப்பிரிக்காவில் பல லட்சங்கலிளிருந்து சில லட்சங்களாக சுருங்கிவிட்டது. அதற்கு முக்கிய காரணம் வேட்டையும், அவற்றின் வாழிட அழிப்பும்தான். உருவ அளவில் டைனோசர்களின் எச்சங்களாக, மனிதனுக்கு அடுத்து உணர்ச்சிகள் மிகுந்த உயிரினமாக இருக்கும் யானைகள் அழிந்தால் நம் குழந்தைகள் நம்மை மன்னிக்காது.
Image Courtesy :