Saturday, October 18, 2014

ஓநாய் குலச்சின்னம் - எனது அனுபவம்


ஒரு பாரில் ஒருவர் ஒயின் குடித்துக்கொண்டிருந்தார் . ரொம்ப நேரம் ஆகியும்  அவர் கையில் இருந்த ஒயின் கிளாஸ் அப்படியே இருந்தது . ஒருவர்  அவரிடம் போய் என்ன சார் நீங்க குடிக்கலையானு கேட்டாராம், அதற்கு அவர், இல்ல அப்பத நான் குடித்த அந்த ஒரு சிப் ஒயினின் சுவையையே இன்னமும் ரசித்துக்கொண்டிருக்கிறேன் என்றார் . அதேமாதிரிதான் நானும் இந்த ஓநாய் குலச்சின்னம்  புத்தகத்தை ரசித்து ரசித்து படித்தேன்.  சில நாளிலாம் புத்தகத்தின் சுவாரசியத்தில் ரொம்ப பக்கங்கள் படித்துவிடுவேன் . கொஞ்ச நேரத்துல, அய்யயோ ரொம்ப பக்கம் படிச்சுட்டோம்னு , டக்குனு புத்தகத்த மூடிருவேன் . இந்த புத்தகத்த ஒரு  சுவாரசியமான புத்தகமாக  மட்டும் கருதி வேகமாக படிக்க விரும்பல. ஏன்னா இந்த புத்தகம் நம் கண் முன்னே மங்கோலியாவையும் அதன் நாடோடி வாழ்க்கையையும் அவ்வளவு அழகா விவரிக்கிறது .

ஓநாய் குலச்சின்னம் - இந்த புத்தகத்த ஒரு வருடத்திற்கே முன்பே எனக்குத் தெரிஞ்சது . இந்த வருட புத்தக கண்காட்சியில் கட்டாயம் வாங்கனும்னு நினைச்சுட்டுப் போன புத்தகமும் இதுதான். இந்த புத்தகம்  என்னை முதலில் கவர்ந்ததற்குக் காரணம் இயற்கையும் ஓநாயும். இயற்கை - எப்பொழுதும் எனக்கு ரொம்ப பிடிச்ச ஒன்று.  அடுத்தது  ஓநாய் என்ற விலங்கைப் பற்றி ஆற்றிய ஆர்வம் . ஓநாயைப் பற்றி எனக்குப் பெரிசா நல்ல அபிப்பிராயம் கிடையாது இந்த புத்தகத்தை படிக்கிறவரை. என்னதான் எனக்கு இயற்கையை ரொம்ப பிடிக்கும், விலங்குகள், பறவைகள ரொம்ப பிடிக்கும்னு சொல்லிக்கிட்டாலும் , புலி , யானை போன்ற பெரிய பாலூட்டிகளின் மீது நல்ல அபிப்பிராயமும், நரி , ஓநாய் , கழுதைப் புலி போன்ற சில விலங்குகளின் மீது நல்ல அப்பிப்பிராயம் இல்லாமல் இருந்தது . இந்த புத்தகத்த படிச்சபுறம்தான்  இப்பூமியில் ஒவ்வொரு உயிரினத்தின் அவசியத்தையும் ஆழமா உணர முடியுது. 

இப்புத்தகம் சீன கலாச்சார புரட்சி காலகட்டத்தில் நடக்கிறது . ஜென்சென்னும் அவருடைய தோழர்கள் மூவர் உட்பட மாணவர்கள் பலர் சீன அரசாங்கத்தால் ஒலோன் புலோக் என்னும் மங்கோலிய உட்பகுதிக்கு அனுப்பப்படுகிறார்கள் . சீன கலாச்சாரப் புரட்சியின் ஒரு பகுதியாக, கிராமப்புற மக்களுடன் பழகுவதற்கும்,  நான்கு பழமைகளான பழைய சிந்தனை, பழைய கலாச்சாரம், பழைய சடங்குகள் , பழைய பழக்க வழக்கங்களை நீக்கி புரட்சியை பூரணமாக்குவதற்காக அக்காலங்களில்சீனாவில் கிராமப்புறங்களுக்கு இவ்வாறு மாணவர்கள் அனுப்பப்பட்டார்கள் . அவர்களுடன் படைப்பிரிவினரும் செல்வார்கள். இப்படியான சீனக் கலாச்சாரப் புரட்சியினால் மங்கோலியர்களின் கலாச்சாரமும், அவர்களின் புல்வெளியும் அந்தப் புல்வெளியைக் காக்கும் ஓநாய்களும் எப்படி பாதிக்கப்படுகின்றன என்பதை மிக இயல்பாக விவரிக்கிறது இந்த  புத்தகம் . இந்த புத்தகத்திலிருந்து மங்கோலியர்களின் நாடோடி வாழ்க்கை முறையையும் , அவர்களின் காலச்சராத்தையும் , இயற்க்கைக்கு அவர்கள் கொடுத்த மதிப்பையும், அதைப் பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வு அவர்களின் ரத்தத்தில் கலந்து ஓடியதையும் மிக அருமையாக விவரிக்கிறது . இந்த புத்தகமானது சீன மாணவர் ஜென்சென்னின் மங்கோலிய அனுபவத்தை அடிப்படையாகக்  கொண்டது. 

கலாச்சார புரட்சியின் ஒரு பகுதியாகச் செல்லும் இந்த மாணவர்கள் அப்பகுதி மக்களுடன் சேர்ந்து வாழ்வார்கள். அவர்களுக்கு அப்பகுதி மக்களுக்குண்டான வேலைகள் பகிர்ந்தளிக்கப்படும். இப்படிச் செல்லும் ஜென்சென், ஒலோன் புலொக்கின் தலைவர் போன்று விளங்கும்  பெரியவர் பில்ஜியுடன் சேர்ந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைக்கும். இப்படி பில்ஜியுடன் இருக்கும்போது, இயற்கையுடன் இயைந்த மங்கோலியர்களின் நாடோடி வாழக்கை முறையையும் , சீனர்கள் வெறுக்கும் ஓநாயை மங்கோலியர்கள் தங்கள் குலச்சின்னமாக போற்றுவதையும் அறிகிறார் . 

மங்கோலியர்களின் வாழ்க்கை முறையானது ஆடு , மாடுகளையும், குதிரைகளையும் மேய்த்து வாழும் ஒரு நாடோடி வாழ்க்கை முறையாகும். இந்த வாழ்க்கை முறையை ஏன் மங்கோலியர்கள் தேர்ந்தெடுத்தார்கள் என்பதை அறிய நாம் மங்கோலியாவை அறிய வேண்டும் . மங்கோலியா ஆசியாவில் சீனாவிற்கும், ரசியாவிற்கும் இடையில் உள்ள முற்றிலும் நிலத்தால் சூழப்பட்ட ஒரு நாடாகும். அந்நாட்டின் பெரும்பகுதியை உலகின் மிகப் பெரிய குளிர்ப்பாலைவனங்களில் ஒன்றான கோபி பாலைவனம் ஆக்கிரமித்திருக்கிறது. அதனாலையே இது ஸ்டெப்பி புல்வெளிகள் அமைந்த, பெரிதாக வேறு எந்த ஒரு பயிரும் விளையாத ஒரு பகுதியாகும். அதனாலையே இப்பகுதி மக்களுக்கு மேய்ச்சல் தவிர வேறு எந்த ஒரு தொழிலும் செய்ய முடியாது இருந்தது. இந்த மேய்ச்சலுக்கு முக்கியத்தேவை புல்வெளி . 

மங்கோலியர்களின் வாழ்க்கைக்கு அடிப்படை, மேய்ச்சல் நிலம். அவர்களைப் பொருத்தவரை மேய்ச்சல் நிலமே பெரிய உயிர். அங்கு வாழும் மற்ற அனைத்து உயிர்களும் மனிதன் உட்பட மேய்ச்சல் நிலம் என்னும் பெரிய உயிரைச் சார்ந்து வாழும் சிறிய உயிர்கள். அந்த பெரிய உயிரைப் பாதுகாக்க ஓநாய்கள், கடவுள் டெஞ்சரால் அனுப்பப்பட்டவை. அவையே மேய்ச்சல் நிலக்காவலன். அவைகளே இந்த புல்வெளியானது மான்களாலும், முயல்களாலும், மோர்மோட்டுகள் என்னும் ஒரு வகை அணில்களாலும், ஆடு, மாடு, குதிரைகளாலும் அதிகமாக மேயப்பட்டு அழிந்துவிடாமல் தடுக்கின்றன. அதானலையே இந்த ஓநாய்கள் மங்கோலியர்களுக்கு  குலச்சின்னம், மேய்ச்சல் நில ஆன்மா.

ஓநாய்கள் 4-5 ஓநாய்கள் உள்ள சிறிய கூட்டத்திலிருந்து, 40-50 ஓநாய்கள் கொண்ட பெரிய கூட்டமாக வாழும். அவை ஒரு தலைவனின் கீழ் செயல்படும். இந்த ஓநாய்களின் அறிவு நுணுக்கத்தையும், வீரத்தையும் பற்றி இந்த புத்தகத்தில் குடுத்திருப்பதைப் படித்தால் மிக ஆச்சரியமாக இருக்கும். உதாரணமாக  ஒரு இடத்தில் ஆயிரம் மான்கள் கொண்ட ஒரு கூட்டத்தை 40-50 ஓநாய்கள் கொண்ட ஒரு கூட்டம் வேட்டையாடும் .  முதலில் தலைமை ஓநாய் அக்கூட்டத்தை அலசும், பின் தன்னுடைய கூட்டத்திலிருந்து ஒரு ஓநாயை மலையின்  அந்தப் பக்கத்திற்கு அனுப்பும் . ஏனென்றால் , மான்களின் கூட்டம் அதிகம் இருப்பதால் மேலும் பல ஓநாய்களைத் திரட்டுவதற்காக. அவை மான் கூட்டத்தை சுற்றி இருந்து சரியான தருணத்தில் வட்டத்தை முடிக்கும் ( சக்கர வியூகம் !) . அப்படி வளைக்கும்போது அக்கூட்டதிலுள்ள பெரிய மான்கள் எல்லாம் ஒன்று திரண்டு ஓநாய் வட்டத்தை ஒரு பகுதியில் உடைத்து வெளியேறும் . அதை தலைமை ஓநாய் பக்கத்திலிருந்தே பார்த்துக் கொண்டிருக்கும் . அந்த பெரிய கொம்பு உள்ள முரட்டு ஆண் மான்கள் வெளியேறியவுடன் , சரியான தருணத்தில் உடைப்பை மூடிவிடும். இப்பொழுது பெரிய மான்களிடம் அடிபட்டு கிழிபட வேண்டாம். அப்பொழுதும் அந்தப் பெரிய கூட்டத்தை  40-50 ஓநாய்கள் சமாளித்துக் கொல்ல முடியாது . அதனாலையே அந்த பலம் குறைந்த மான்களை பனி ஏரிக்கு விரட்டிச் சென்று தள்ளிக் கொள்ளும் . இப்படி பெரிதாக இழப்பின்றி ஒரு பெரிய மான் கூட்டத்தையே வளைத்துவிடும் .

ஓநாய்களிடம் இருந்தே மங்கோலியர்கள் பலவற்றையும் கற்றனர். ஓநாய்கள் வேட்டையாட தக்க தருணம் வரும்வரை மிகப் பொறுமையாகக் காத்திருக்கும். அது ஒரு மிகச் சிறந்த போர் வீரன். அது மிகச் சிறந்த போர் வியூகம் வகுக்கும்.  செங்கிஸ்கான், மங்கோலியாவின் மிகப் பெரும் பேரரசர். இதுவரை உலகில்  இருந்த சாம்ராஜ்ஜியங்களில், பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்திற்கு அடுத்து மிகப் பெரிய சாம்ராஜ்ஜியம் செங்கிஸ்கானின் மங்கோல் சாம்ராஜ்ஜியம். இந்த புத்தகம் முழுவதும் செங்கிஸ்கான் தன்னுடைய போர் திறமைகளை ஓநாய்களிடம் இருந்தே கற்றதாக வரும். மேலே சொன்ன மான் வேட்டை போன்ற ஒரு வியூகத்தை பின்பற்றியே செங்கிஸ்கானின் ஒரு தளபதி , ஹேன் சீனர்களை ஏரியில் தள்ளி வெல்வார் . 

செங்கிஸ்கான் இந்த உலகை வென்றதற்கு ஒரு முக்கிய காரணம் மங்கோலியாவின் நிலப்பரப்பு ஆகும்.  ஏனெனில் மங்கோலியாவின் நிலப்பரப்பு ஈவு இரக்கமற்றது, குரூரமானது . அது கோழைகளை ஏளனம் செய்யும். அங்கு துணிந்தவர்களே உயிர் வாழ முடியும்.  மென்மையான இதயம் கொண்டவர்களால் அங்கு வாழ முடியாது . இந்த யுத்த களமான வாழ்க்கையே மங்கோலியர்களை உலகை  வெல்பவர்கள் ஆக்கியது.  இவைதான்  அந்த காலத்தில் மங்கோலியர்களை கண்டு, உலகை அலறி நடுங்கச் செய்தது.  செங்கிஸ்கானின்  வீரர்கள் குளிக்கமாட்டார்களாம். அதனாலையே ரொம்ப தூரத்திலேயே செங்கிஸ்கான் வீரர்கள் புழுதி பறக்க வரும்போது வரும் வாடையிலேயே பல எதிராளிகள் அலறி அடித்து ஒடுவார்களாம். அந்த அளவிற்குப் அவர்களின் நினைப்பே  பயத்தை ஏற்படுத்தியது .

மங்கோலியாவின் முரட்டுத்தனமான காலநிலை அங்கு  வாழ்ந்த உயிரினங்கள் அனைத்தையும் அந்த  சூழ்நிலையைப் போலவே மாற்றியது . மங்கோலியாவில் குதிரைகள் உண்டு . மங்கோலியக் குதிரைகள் அரபுக் குதிரைகள்  போல் ஆஜானுபாகுவாக உயர்ந்திருக்காது. அரபுக் குதிரைகளை  குள்ளமாக சற்றுக் குண்டாகவும் இருக்கும். ஆனால் முரட்டுத்தனமானது.

செங்கிஸ்கானின் தலைமையிலான மங்கோலியப் படையின் குதிரைப்படையைப் பார்த்தே இந்த உலகம் மிகவும் பயப்பட்டது. மற்ற  படைகளிலிருந்து மங்கோலியப் படை ஒரு விதத்தில் மிகவும் உயர்ந்து இருந்தது . அது விரைந்த தாக்குதல். அவர்கள் ஒரு நாளில் 1000 லீ தூரம் அளவிற்கு கடந்தனர். அதாவது 300 மைலுக்கும் மேலே. சுமார்  50,000 படை வீரர்கள் ஒரு நாளில் 300 மைல் அதாவது சென்னையிலிருந்து மதுரை வரையிலான தூரத்தைக் கடக்க முடிந்தது  அந்த காலத்தில் மிக அசாத்தியமான ஒன்று. அவர்களால் இதைச் சாதிக்க முடிந்தது மங்கோலியக் குதிரைகளினாலே. மங்கோலிய வீரர்கள் ஒவ்வொருவருக்கும் இரண்டு குதிரைகள் இருக்குமாம். இவ்வாறு தாக்குதலின் போது ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்குச் செல்லும்போது ஒரு குதிரை களைத்துவிடும்பொழுது மற்றறொரு குதிரையில் ஏறிக் கொள்வார்களாம் . மங்கோலியர்கள் தங்கள் காலநிலையும் , நிலப்பரப்பும் தங்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்த தகவைமைப்பைக் கொண்டு இந்த உலகையே வென்றனர் . அந்தக் காலத்தில் அறியப்பட்ட உலகமான பழைய உலகில் ( ஐரோப்பா, ஆசியா மற்றும் ஆப்ரிக்கா) கிட்டத்தட்ட 35% ஆண்டனர்

செங்கிஸ்கானிற்கு முன்பே மங்கோலியர்கள் இந்த உலகை வெல்லும் திறமை கொண்டவர்களாகத்தான் இருந்தனர் . செங்கிஸ்கான் செய்தது எல்லாம் ஒன்றே ஒன்றுதான். பல இனக்குழுக்களாக பிரிந்து தங்களுக்குள்ளேயே சண்டையிட்டுக் கொண்டிருந்தவர்களை ஒரு தலைமையின் கீழ் இணைத்து மங்கோலியாவையும்தாண்டி உலகம் உண்டு என்று காட்டியதுதான். 

இந்தப் புத்தகத்தில் மிகப் பெரியளவில் வெளிப்படுவது , இயற்கையுடன் இயைந்த வாழ்வும்,  எதையும் அளவோடு பயன்படுத்தி இயற்கையின் சமநிலையைப் பேணுவதாகும் .  மங்கோலியர்களின் புல்வெளி சீனர்களின் வரவால் எந்த அளவிற்குப் பாதிக்கப்படுகிறது , சீனர்களின்அளவற்றப் பயன்பாட்டால் புல்வெளியில் வாழ்க்கைச் சமநிலை எந்த அளவிற்குப் பாதிக்கப்படுகிறது என்பதைக் காட்டுகிறது. 

பெரியவர் பில்ஜி ஓநாய்களைப் போற்றும் மங்கோலியத் தலைமுறையின் கடைசித் துளி.  தங்கள் கலாச்சாரத்தை விட்டுவிட்டு, ஓநாய்களின் பெருமையையும் அறியாது அவற்றை அழிக்கவும், வரன்முறையற்ற மேய்ச்சலுக்குத் துணை போய் மங்கோலிய  புல்வெளிகள் அழிவதற்குக் காரணமாகும் தங்கள் இனத்தவர்கள் மீது அவருக்குப் பெரும் கோவம். எங்கே தான் இறக்கும் போது ஒலோன் புலோக்கிலுள்ள ஓநாய்களெல்லாம் அழிக்கப்பட்டு தான் வான் சமாதி* அடைய முடியாமல் போய் தான் டெஞ்சரை அடையமுடியாமல் போய்விடுமோ என்று மிகக் கவலை கொள்வார் . அந்தப் பெரியவர் பயப்பட்ட மாதிரி பெரியவர் இறந்த இருபது ஆண்டுகளுக்குள்ளேயே அதீத மேய்ச்சலால் மங்கோலியப் புல்வெளியானது அழிந்துவிட்டது.  அதன் காரணமாக இன்று பீஜிங்கில் புழுதிப் புயல் வீசுகிறது . 

சீன ஹெனனான ஜென்சென்னுக்கும் , ஒலோன் புலொக்கின் பெரியவர் பில்ஜிக்கும் இடையிலான உறவு மிகவும் நெகிழ்வானது . ஜென்சென் , பெரியவர் பில்ஜியை தன் தந்தையைப் போன்றே கருதுவான் . ஓநாயைப் போற்றும் கடைசி மங்கோலியத் தலைமுறையினரான பில்ஜியிடமிருந்து ஓநாய்களைப்  பற்றியும் , மங்கோலியாவின் மேய்ச்சல் கலாச்சாரத்தைப் பற்றியும் , அதன் எளிய வாழ்க்கை முறைப் பற்றியும் அறிய ஆர்வம் கொள்ளுவான் . பில்ஜிக்கோ , தங்கள் மங்கோலியர்களே ஓநாய்களைப் போற்றாத போது , அவற்றின் மீது ஆர்வம் கொள்ளும் ஹேன் சீனன் மீது அவருக்கு அளவுக்கதிக  ஆர்வம் உண்டாகிறது . தான் அறிந்த தன கலாச்சாரத்தை இந்த சீனன் மூலம் கடத்தி அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லலாம் என நினைக்கிறார் . 

 இந்த புத்தகத்தை படித்து முடித்த போது மனம் முழுவதும் ஒலோன் புலோக்கும், டெஞ்சரும், பில்ஜியும், ஓநாய்களுமே நிறைந்திருந்தது . புத்தகம் முழுவதும் குடியானவர்களைப் பற்றிய எள்ளல்கள் அதிகம் . இதன் மீது வைக்கபடும் ஆகப் பெரிய குற்றச்சாட்டும் அதிகம் . இந்த புத்தகம் முழுவதும் மங்கோலியர்கள் சீன ஹெனர்களை ஆட்டிற்கு இணையாகவும் , தங்களை ஓநாய்க்கு இணையாகவும் சொல்வார்கள். அவர்களைப் பொருத்தவரை ஆடுகள் கோழைகள் , ஓநாய்கள் வீரம் நிறைந்தவை.

எனக்கு இந்த புத்தகத்தில் மிகப் பிடித்தது அதன் ஆன்மா. ஆம், நிச்சயமாக. இது எந்த ஒரு நிகழ்வையோ, விசயத்தையோ  வெறும் ஒரு வரலாற்றுப் பதிவாகவோ அல்லது ஒரு சாதாரண விஷயமாகவோ சொல்லாமல் ஒரு உயிரோட்டத்துடன் நம் கண் முன்னே விரிக்கிறது . விரிக்கிறது என்று சொல்வதைக் காட்டிலும் விரிகிறது என்று சொல்லலாம். ஒரு புத்தகத்திற்கு அதன் உயிரோட்டம் முக்கியம. இந்த புத்தகம் எதைப் பற்றி பேச வந்தாலும் அது ஓநாயாகட்டும் , இயற்கை ஆகட்டும் , புல்வெளி ஆகட்டும் , குதிரை ஆகட்டும் , வாழ்க்கைத் தத்துவம் ஆகட்டும்  எதுவாக இருந்தாலும்  அதில் நான் முற்றிலுமாக ஒன்றிப் போனேன் . எனக்கு இந்த புத்தகத்தில் எந்த ஒரு பக்கமும் சுவாரசியமாக இல்லாமல் இல்லை. ஏன் சொல்லப் போனால் ரொம்ப சுவாரசியமாக இருப்பதால் சீக்கிரம் முடிந்துவிடுமோ என்ற கவலைதான் இருந்தது . 

சீனரான ஜியோன்ங் ரோங்க் எழுதிய இந்த புத்தகம் வெளிவந்த இரண்டு ஆண்டுகளில் 40 லட்சம் பிரதிகள் சீனாவில் விற்றுத் தீர்த்துவிட்டது. 

இந்த புத்தகம் இவ்வளவு சுவாரசியமாக இருப்பதற்கு மற்றொரு முக்கிய காரணம் அதன் மொழி நடை. ரொம்ப மிக எளிய மொழி நடையைக் கொண்டு இது ஒரு மொழி பெயர்ப்பு நூல் என்ற நினைப்பே தோன்ற விடமால் செய்கிறது . அந்த ஒரு காரணத்திற்காகவே இதன் மொழி பெயர்ப்பாளர் மோகனைப் பாராட்டலாம். நீங்கள் இயற்கையையும் , அதனுடைய இயைந்த வாழ்வையும் பற்றி அறிய விரும்பினால் இப்புத்தகம் மிகச் சிறந்தது. நீங்கள் அப்படி இல்லாவிட்டாலும் பரவாயில்லை, நீங்கள் ஒரு வாசிப்பாளராக இருந்தாலே போதும் , இந்த புத்தகத்தின் சுவாரசிய ஓட்டமே உங்களைக் கவர்ந்துவிடும் .

பின்குறிப்பு : 

1. இந்த பதிவிற்கு நான் புத்தக விமர்சனம் என்று தலைப்புக் குறிப்பிடவில்லை . இது இந்த புத்தகத்துடனான என்னுடைய  அனுபவத்தையே கூறவருகிறது . மதுவைப் பொருத்தவரை என்னுடைய புத்த விமர்சனங்கள் , விமர்சனங்களாகவே இருப்பதில்லை. உணமைதான் , புத்தகங்களைப்  பற்றிக் கூறவந்தது பெரும்பாலும் என்னுடை அனுபவங்களையே கூறி உள்ளேன் . இந்த பதிவில் கூட சென்கிச்கானைப் பற்றிக் கூறியவற்றில் பெரும்பானவை நான் மற்ற தளங்களில் அறிந்தவையே . எனக்கு புத்தக விமர்சனத்தைவிடவும் அதன் அனுபவத்தைக் கூறவே பிடித்துள்ளது. இருந்துவிட்டுப் போகட்டும் :) 

2. இந்தப் பதிவானது ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு என்ற பதம் என்ற அளவிலேயே கூறி உள்ளேன் . மது சொன்னமாதிரி , புத்தக விமர்சனம், அனுபவம் என்ற பெயரில் மொத்த புத்தகத்தையும் எழுத விரும்பவில்லை. 

3. வான் சமாதி - மங்கோலியர்கள் இறந்தவுடன் அவர்களின் உடல்களை புதைக்கவோ, எரிக்கவோ மாட்டார்கள் . இறந்த உடல்களை மலைச்சரிவில் போட்டுவிடுவார்கள் . அவைகள் ஓநாயால் தின்னப்பட்டுவிடும் . இரண்டு மூன்று நாட்களிலேயே அவர்களின் உடல்கள் உண்ணப்பட்டுவிட்டால் , அவர்கள் டெஞ்சரை அடைந்துவிட்டார்கள் என்று அர்த்தம் . செங்கிஸ்கானின் உடலையும் வான் சமாதிதான்  செய்தார்கள். பார்சி இனத்தவர்களிடமும் இது போன்ற பழக்கம் உண்டு . அவர்களின் உடல்களை  கழுகுக்கு இரையாக்கி விடுவார்கள்.

Photo Courtesy :  eweb4 

Thursday, April 24, 2014

உயிரினங்களுக்கான உலகம் - 4 : யானை

Bull Asian elephant, Bong-Su (centre) with two of his females, matriarch, Num-Oi (left) and Kulan (right). Proud 37-year-old father Bong Su carefully manages his relationships with the four females he must breed with before he is sent home to Thailand

யானையை முத முதல்ல எங்க பாத்தேன். நிச்சயமா எல்லாக் குழந்தைகளையும் போல கோயில்லதான் இருக்கும். ஒரு குழந்தையிடம் உனக்கு என்னனென்ன விலங்குகள் பிடிக்கும்னு கேட்டா அதன் பட்டியலில் யானை நிச்சயம் இடம் பெறும். குழந்தைகளுக்கு யானையிடம் ஈர்ப்பு ஏற்படக் காரணம் என்ன?  அந்தக் கரிய பிரம்மாண்ட உருவமா? இல்ல எந்த விலங்கிற்கும் இல்லாத அந்த வித்தியாசமான நீண்ட தும்பிக்கையா? எது குழந்தைகளை ஈர்க்கிறது. பொதுவாக தன்னைவிட மிகச்சக்தி வாய்ந்த, பிரம்மாண்டமான எந்த ஒரு உயிரினத்தைப் பார்த்தாலும் மனிதனுக்கு இயல்பாக ஏற்படுவது பயம். ஆனால் அதற்கு நேர் மாறாக இந்த பிரம்மாண்ட உருவம் குழந்தைகளுக்கும் பிடிக்கிறது. அதுதான் ஆச்சரியம். பொதுவாக எந்த ஒன்று குழந்தைகளுக்குப் பிடிக்கிறதோ அது நிச்சயம் உலகிற்கும் பிடிக்கும். அதுதான் யானைகளை விருப்பத்திற்கு உண்டான உயிரினமாக ஆக்குகிறது. யானை அத்துனை பிரம்மாண்டமாக இருந்தாலும் அதனுடன் ஒரு ஆத்மார்த்தமான ஒரு அன்பு உருவாகிறது. அது எதனால் என்பது தெரியவில்லை. இவ்வளவு பிரம்மாண்டமாக இருந்தாலும் , எவ்வளவு சக்தி உடையதாக இருந்தாலும் அனைத்தையும் மறைத்துக்கொண்டு ஒரு ஜென்னாக மனிதர்களுடன் பழகுகிறதே அதனாலா?. தெரியவில்லை. ஆனால் மனிதர்க்கும் யானைகளுக்கும் உண்டான பிணைப்பு மிக்க ஆச்சரியம் ஊட்டக்கூடியது. 

நாம் இங்கு ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும், நாம் இன்று கோயில்களிலும் மற்ற இடங்களிலும் பார்க்கும் யானைகள் எவையும் வீட்டு விலங்குகள் அல்ல. அதாவது மனிதனால் வளக்கப்பட்டு, இனவிருத்தி செய்யப்பட்டு நாட்டிலேயே பிறக்கும் விலங்குகள் அல்ல. இந்த யானைகள் யாவும் சிறு குட்டியாகவோ, இல்லை பெரிதாக இருக்கும் போதே காட்டில் பிடிக்கப்பட்டு பின் பழக்கப்படுத்தப்பட்டவையாகவோதான் இருக்கின்றன. நாம் அன்பு காட்டும் நாய், பூனை போன்ற மற்றவை எல்லாம் பெரும்பாலும் வீட்டு விலங்குகள்தான். ஆனால் காட்டில் பிடிக்கப்பட்ட ஒரு ஜீவன் மனிதருடன் இத்துனை உறவாடுவது யானை ஒன்றுதான். 

உலகில் இருக்கும் ஜீவராசிகளில் ஆன்மா என்ற ஒன்று இருப்பதாக நம்பப்படுவது மனிதனுக்கும் யானைக்கும் மட்டும்தான்.ஆன்மீகரீதியாக ஆன்மா என்பதை நாம் ஏற்க மறுத்தாலும் அதிக உணர்ச்சி மிகுந்த விலங்குகளில் மனிதனுக்கு அடுத்து இருப்பது யானைதான். எனக்குத்தெரிந்து அதுதான் மனிதருக்கும் இந்த யானைக்கும் இடையே ஒரு நெருக்கத்தை ஏற்படுத்துகிறதோ என்று தோன்றுகிறது. யானைகள் குடும்பம் குடும்பமாக வாழ்வவை. அவற்றிற்கு இடையேயான பிணைப்பு மனிதர்களுக்குள் இருக்கும் பிணைப்பிற்கு சற்றும் குறைவில்லாதவை. தன் குடும்ப உறுப்பினர்களை பாதுகாக்க அவை சற்றும் தயங்காதவை. தன் குடும்ப உறுப்பினர் மட்டுமல்லாது மற்ற எந்த யானை இறந்தாலும் கூட அவற்றிற்காக துக்கம் கொள்பவை.  யானைக் கூட்டம் நகர்ந்து செல்லும்போது அவை எங்காவது யானைகளின் எலும்புக் கூடைப் பார்த்தால் அங்கு சற்று நின்று அவற்றை முகர்த்து அவற்றை எண்ணி துக்கம் கொள்ளும். இப்படி முகர்த்து பார்க்கும் அவை அந்த எலும்புகளிலிருந்து சில இன்ச் உயரத்திலேயே காற்றில் தும்பிக்கையை துலாவும். அதாவது அதுதான் அந்த யானை உயிருடன் இருந்த பொழுது அதன் தோல் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள் . இது பல தடவை பதிவு செய்யப்பட்டுள்ளது. இப்படி அவை உணர்ச்சியும் அறிவும் மிகுந்தவை.  

நீலகிரியில் யானை டாக்டர் என்று புகழ் பெற்றவர் கிருஷ்ணமூர்த்தி. விலங்கு நல மருத்துவராக தன் வாழ்க்கையைத் தொடங்கியவர், யானைகளின் மீது உள்ள பிரியத்தால் அதில் ஈடுபாடு அதிகமாகி இந்தியாவில் எங்கு யானைகளுக்கு வைத்தியம் தேவைப்பட்டாலும், இல்லை இறந்த காட்டு யானைகளைப் பிணப் பரிசோதனை செய்யவும் இவரைத்தான் அழைத்தனர். இவர் பலதடவை அடிபட்ட காட்டு யானைகளுக்கு வைத்தியம் பார்த்துள்ளார். அப்படி கடுமையாக அடிபட்டு வேதனையுடன் இருக்கும் அந்த பெரிய ஜீவனுக்கு அவர் வைத்தியம் பார்க்கும்போது அவர் தன் உயிர் பாதுகாப்புக்கு நம்புவது, தனக்கு நல்லது செய்வதை அந்த யானை புரிந்து கொள்ளும் என்பதுதான். 

யானைகள் தனக்கு உதவி செய்தவர்களை என்றும் மறப்பதில்லை. இதற்கு உலகில் பல சாட்சிகள் உண்டு. அவற்றிற்கு தனக்கு உதவுபவரையும், தீங்கு இழைப்பவர்களையும் நன்கு உணர முடிகிறது. அவை உள்ளுணர்வு மிக்கவை.  தென் ஆப்பிரிக்காவில் லாரன்ஸ் ஆண்டனி என்பவர் இருந்தார். அப்பொழுது தென் ஆப்பிரிக்காவில் ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு தப்பிப் போகும் ஒரு யானைக் கூட்டத்தை அவர் பாதுகாப்பில் இருக்கும் பகுதியில் வைத்துக்கொள்ள கோரப்பட்டது. அப்படி வந்த அவற்றைப் அந்தப் பகுதியில் பழகும் வரை பொதுவாக மின்சார வேலி கொண்டு அடைத்து வைப்பர். அப்படி அங்கு வந்த யானைக் கூட்டத்தை அடைத்து வைத்த போது  அவை அந்த வேலியை உடைத்து தப்பிப் போகப் மிக பிரயத்தனப்பட்டன. இதைப் பார்த்த லாரன்ஸ் அந்தக் கூட்டத்தின் தலைமை யானையான நானாவுடன் பேசத்தொடங்குகிறார். அவை வெளியே சென்றால் மற்றவர்களால் கொல்லப்படும் என்று வேலிக்கு மறுபக்கம் இருந்து மனதார பேசுகிறார். அவற்றிற்கு தன் மொழி புரியாவிட்டாலும் தன் உள்ளுணர்வு புரியும் என்று மனதார நம்பினார். நானாவும் அவர் பேசியதை நம்பத்தொடங்கியது. தப்பிச் செல்லும் முயற்ச்சியைக் கைவிட்டு அங்கேயே தன் கூட்டத்துடன் தங்கியது. அதற்குப் பிறகு நானாவுக்கும் லாரன்சுக்கும் இடையேயான பந்தம் மிக ஆச்சரியமானது உணர்ச்சிகரமானது . லாரன்ஸ் எங்கேயாவது வெளியூர் சென்று விட்டு வரும்போது சரியாக அவரை வரவேற்க யானைக் கூட்டம் அவர் வீடு வந்தன. இது எதுவும் எதேச்சையானது அல்ல. இது ஒவ்வொரு தடவையும் நடந்தது. 2012 இல் லாரன்ஸ் இறந்த பொழுது அவர் வீட்டை இரண்டு யானைக்கூட்டம் அடைந்தன. கிட்டத்தட்ட இரண்டு நாட்கள் அவை அங்கேயே இருந்தன. அதற்கு முன் ஒரு வருடத்திற்கு முன்தான் யானைக் கூட்டம் அவர் வீட்டைச் சுற்றி வந்தன என்று அறிந்தால் இது மிகவும் ஆச்சரியமானது, உணர்ச்சிமயமானது. 

யானைகள் தங்களுக்குள்ளே மனிதர்களால் கேட்டரியமுடியாத அக ஒலிகளாலும் தகவல் பரிமாறிக்கொள்கின்றன. இதன் மூலம் வெகு தொலைவில் இருக்கும் யானைக் கூட்டத்திற்கும் தகவல் பரிமாறுகின்றன. தங்களுக்கு ஏற்படும் ஆபத்து, தண்ணீர் கிடைக்கும் இடம் போன்றவற்றை எல்லாம் அவை தம் கூட்டத்துடன் அகஒலி  மூலம் மற்ற யானைக் கூட்டத்திற்கு தெரிவிக்கின்ற என்று ஆராய்ச்சிகள் காட்டுகின்றன .

யானைகள் தங்களுக்கு உதவி செய்பவர்களை மட்டுமல்ல தீங்கு இழைப்பவர்களையும் மிகவும் அறியும். ஆப்பிரிக்காவில் மசாய் என்ற பழங்குடியினர் இருக்கிறார்கள். அவர்களுக்கும் யானைகளுக்கும் என்றும் ஆகாது. யானைகளுக்கும் அவர்களுக்கும் என்றும் பிரச்சினைதான். யானைகளைக் கண்டால் அவர்கள் மிகவும் தாக்குவார்கள், கொல்வார்கள். அவர்களைக் கண்டாலோ அல்லது அவர்களின் குரல் கேட்டாலோ யானைகள் மிகவும் சீற்றம் கொள்ளும். ஆனால் மற்ற இனத்தவர்களைக் கண்டால் அவை இவ்வளவு சீற்றம் கொள்வதில்லை. 

மனிதர்களின் குழந்தைப் பருவம் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தால் அவர்கள் பிற்கால வாழ்க்கை மிகவும் பாதிக்கப்படும் என்பதை நாம் அறிவோம். பிற்காலங்களில் மிக அதிக மன உளைச்சலில் பாதிக்கப்படவர்களாகவோ, முரட்டுத்தனமானவர்களாகவோ அவர்கள் இருப்பார்கள். இது யானைகளுக்கும்  பொருந்தும்.யானைகளும் மன அழுத்தத்தால் பாதிக்கப்படுகின்றன. சில காலங்களுக்கு முன் தென் ஆப்பிரிக்காவின் ஒரு பகுதியில் சில இளம் யானைகள் மிகவும் முரட்டுத்தனமாக நடந்து கொண்டன. அவைகள் மனிதர்களை அதிகம் தாக்குபவையாகவும், காண்டாமிருகங்களைக் கற்பழிப்பவையாகவும் ( ஆம் நீங்கள் வாசித்தது சரிதான்  ) இருந்தன. ஆராய்ச்சியின்போது இந்த இளம் யானைகள் குழந்தைப் பருவத்தின் போது அவற்றின் கண் முன்னையே அவர்களின் குடும்பத்தார் வேட்டைக்காரர்களால் கொடூரமாக வேட்டையாடப்பட்டது தெரியவந்தது . 

ஒரு காட்டில் பிறக்கும் ஒரு உயிர் மனிதனுடன் இவ்வளவு நெருக்கமாக இருப்பது யானைதான். இந்தியாவிலும் தெற்காசிய நாடுகளிலும் யானைகளுடனான  நெருக்கம் மிக அதிகம் . அவை எப்பொழுதும் சமூகத்தில் அதிக முக்கியத்துவம் கொண்டவையாகவே இருந்துருக்கின்றன. பாசம் மிகுந்தவை என்று கூறுவதால் அவை காட்டிலிருந்து மேலும் மேலும் வீட்டு விலங்காக்கப்படுவதற்கு  சாக்குப் போக்குகள அதிகரிக்கின்றன என்று மற்ற விலங்கு ஆர்வலர்கள் கோபப்படலாம். நானும் யானைகள் பழக்கபடுத்தப்படுவதற்கு எதிரானவன்தான். ஆனால் யானைகள் மீது பாசம் காட்டுவதன் மூலம் காட்டிலிருந்தே அவற்றின் அழிவு தடுக்கப்படும் என்று நம்பிக்கை கொள்கிறேன். 

இன்று உலகில் யானைகளின்  எண்ணிக்கை மிகவும் அருகிவிட்டது . இந்தியாவில் சில லட்சங்களாக இருந்த யானைகள் 30,000 ஆக சுருங்கி விட்டது .  ஆப்பிரிக்காவில் பல லட்சங்கலிளிருந்து சில லட்சங்களாக சுருங்கிவிட்டது. அதற்கு முக்கிய காரணம் வேட்டையும், அவற்றின் வாழிட அழிப்பும்தான். உருவ அளவில் டைனோசர்களின் எச்சங்களாக, மனிதனுக்கு அடுத்து உணர்ச்சிகள் மிகுந்த உயிரினமாக இருக்கும் யானைகள் அழிந்தால் நம் குழந்தைகள் நம்மை மன்னிக்காது. 

Image Courtesy :


http://www.dailymail.co.uk/news/article-2078671/These-elephants-forget-family-moments-thanks-photographers-Family-Affairs-project.html

Tuesday, January 21, 2014

உயிரினங்களுக்கான உலகம் - 3


தியோடர் பாஸ்கரன் - தமிழ் எழுத்துலகம் அறிந்தவர். சூழலியல் மற்றும் திரைப்படம் சார்ந்த அவருடைய  படைப்புகளும் பங்களிப்புகளும் போற்றத்தக்கவை. என்னுடைய அப்பாவும் அவரும் ஒரே துறையில் பணிபுரிந்ததால் எனக்கு அவரை முன்பே தெரியும். அப்பொழுதெல்லாம் அப்பா சொல்வார்கள், தியோடர் பாஸ்கரன் அவர்கள் புத்தாண்டுக்கு எல்லாம் குடும்பத்துடன் காடுகளுக்குச் சென்று தங்கி கொண்டாடுவார்கள் என்று . இப்படி எனக்கு தியோடர் பாஸ்கரன் முன்பே அறிமுகம். அவரின் புத்தகங்களை படிக்க வேண்டும் என்ற எண்ணம் இப்பொழுதுதான் நிறைவேறியது. மது , தியோடர் பாஸ்கரனின் , "இன்னும் பிறக்காத தலைமுறைக்காக" என்ற புத்தகம் வாங்கி இருந்தான். அது வெவ்வேறு காலகட்டங்களில் பாஸ்கரன் அவர்கள் சூழியல் குறித்து எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு .

இந்த புத்தகம் படித்தவுடன் எனக்கு எல்லா விசயங்களை விட மேல்நோக்கி எஞ்சி இருந்தது அல்லது நான் இருக்க விரும்பியது சூழலியல் சார்ந்த தமிழில் துறைச் சொற்கள் / கலைச் சொற்கள் குறித்த விசயங்கள் . இந்த உலகில் பல உயிரினங்களின் அழிவிற்கும் அதன் காரணமாக சுற்றுச்சூழல் கேட்டிற்கும் பல காரணங்கள் இருந்தாலும் எல்லாவற்றிற்கும் மூலாதாரமாக இருப்பது மக்களுக்கும் , தாவரங்கள் , பறவைகள் , விலங்குகள் , காடுகள் ஆகிய சுற்றுப்புறத்திற்கும் இடையே விழுந்த இடைவெளி. மக்களுக்கும் வெளி உலகத்துக்குமான மிக முக்கிய தொடர்பு ஊடகம் மொழியாகவே இருக்கிறது. அதுவும் ஒரு மனிதனுக்கும் வெளி உலகத்துக்குமான உள்ளார்ந்த ஈடுபாடுடன் கூடிய உறவு எப்பொழுதுமே தாய் மொழி மூலமாகவே நடக்கிறது. நம்மைச் சுற்றி உள்ள சுற்றுப்புறத்துடனான நெருக்கத்தில் இடைவெளி விழ ஆரம்பித்தது நாம் நம் மண்ணின் உயிர்களையே கூட வேற்று மொழியின் பெயர்களாலேயே அழைக்கத் தொடங்கியதில் ஆரம்பித்து அதனாலையே முடிவடைகிறது. ஒரு இடத்தில் ஆசிரியர் மிக அழகாக கூறி இருப்பார் நம் குழந்தைகள் யானையை அந்த உயிரினத்தையே அறிந்திராத அந்த உயிரினமே வாழ்ந்திராத நாட்டின் மொழி கொண்டு படிக்கிறார்கள் என்று கூறி இருப்பார் . அது எவ்வளவு உண்மை. 


இந்த புத்தகம் படித்த பொழுதுதான் நாம் நம் உயிரினங்கள் குறித்த கலைச் சொற்களையே மறந்துவிட்டோம் என்பது உறைக்கிறது. நம் ஊரில் ஒரு காலத்தில் இருந்த சிவிங்கிப் புலியின் பெயரையே மறந்து அதை இன்று  சிறுத்தைப் புலி என்று எவ்வளவு அபத்தமாக அழைக்கிறோம் என்று தெரிகிறது. உண்மையில் சிவிங்கி வேறு சிறுத்தை வேறு. சிவிங்கி என்பது cheetah சிறுத்தை என்பது leopard . இன்னும் சொல்லப் போனால் எனக்குத் தெரிந்து தமிழில் புலி என்பது வெகு காலம் சிறுத்தைப் புலியையே குறித்தது. எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கு , நான் என் அம்மாச்சியுடன் பேசும்போது அவர் சிறுத்தையை குறிக்கவே புலி என்ற வார்த்தையைப் பயன்படுத்தி உள்ளார். புலிக்கு அவர் பயன்படுத்தும் வார்த்தை வேங்கை !. இந்த அறிவு இல்லாமல் பல நேரம் நான் அவரிடம் , நீ தப்புத்தப்பா சொல்ர , புலினா அது புலிதான் சிறுத்தைப் புலி கிடையாது என்று பல நேரம் சண்டை போட்டுள்ளேன் . இதே போன்று நமக்கான துறைச் சொற்களை மறந்து விட்டு, அந்த வெற்றிடத்தை நிரப்ப நாம் வெவ்வேறு உயிரினங்களைக் குறிக்க ஒரே பெயரைப் பயன்படுத்துகிறோம் . இதற்கு இன்னொரு உதாரணம் காட்டெருது. மிகச் சாதாரண வார்த்தைதான். ஆனால் அதை மறந்து விட்டு நாம் பயன்படுத்தும் வார்த்தை காட்டெருமை . இதில் வேடிக்கை என்னவென்றால் காட்டெருமை நம் தமிழ்நாட்டைச் சார்ந்ததல்ல மற்றும் தமிழ்நாட்டில் அது இருந்ததுமில்லை. எப்படி நாம் நம் ஊரில் இருக்கும் ஒரு உயிரினத்தின் பெயரை மறந்து நம் ஊரில் இல்லாத உயிரினத்தின் பெயரைக்கொண்டு அதைக் குறிக்க ஆரம்பித்தோம் என்பது ஆச்சரியமாக இருக்கிறது. மேலும் ஒரு ஆச்சரியத் தகவல் என்னவெனில் , இந்த காட்டெருதுதான் குளம்புக் காலடிகளும், கொம்புகளும் கொண்ட விலங்குகளிலேயே உலகில் மிகப் பெரியது.  இப்படிப்பட்ட பெருமை கொண்ட நம் விலங்கின் பெயரையே நாம் மறந்துவிட்டோம்.

இது போல நாம் மறந்து விட்ட மற்றொரு அழகான பெயர் அலங்கு !. இதற்குப் பதிலாக நாம் இன்று பயன்படுத்தும் வார்த்தை எறும்புதிண்ணி, அதாவது Ant Eater என்ற ஆங்கில பதத்தின் தமிழாக்கம் . என்ன கொடுமை . இதைத் தவிர இந்த புத்தகத்தில் நாம் மறந்துவிட்ட பல அருமையான தமிழ் துறைச் சொற்களைக் காணலாம். அதில் எனக்கு மிகவும் பிடித்த வார்த்தைகளில் ஒன்று 'வலசை' . இந்த உலகில் பல கோடிக்கணக்கான உயிரனங்கள் ஒரு இடம் விட்டு மற்றொரு  இடத்திற்கு உணவிற்காகவும், இணைக்காகவும், சீதோசணத்திற்காகவும் இடம்பெயர்கின்றன.  இதைக் குறிக்க நாம் பயன்படுத்தும் வார்த்தை இடம்பெயர்தல். இடம்பெயர்தல் என்பது நல்ல வார்த்தையாக இருந்தாலும் எனக்கு என்னவோ அது என்றுமே சூழலியலில் பயன்படுத்துவதற்கான வார்த்தையாகத் தோன்றியதில்லை. அதற்கான சரியான வார்த்தையை நான் கண்டறிந்த இடம் இந்த புத்தகம் . 'வலசை' என்ன ஒரு அருமையான வார்த்தை. இடம்பெயரும் பறவைகள் விட வலசை போகும் பறவைகள் என்று கூறுவது எவ்வளவு அழகாக இருக்கிறது. இது போன்று நான் ஆச்சரியப்பட்ட மற்றொரு அழகான வார்த்தை 'ஓங்கில்' . நம் அனைவருக்கும் பிடித்த டால்பினை தமிழில் குறிக்கும் பெயர். 

ஒரு பகுதியில் மிகுதியாக இருப்பவற்றைக் குறிப்பிட அந்தப் பகுதி மொழிகளில் பல வார்த்தைகள் இருக்கும். ஏனெனில் அந்தப் பொருளோ அல்லது உயிரினமோ அந்தப் பகுதி மக்களுக்கு மிகப் பரிச்சயமானதாக இருக்கும் . அதனால் அதன் ஒவ்வொரு நிலையையும் அந்த மக்கள் அறிவார்கள். அதனால் அதன் ஒவ்வொரு நிலையையும் குறிக்க ஒவ்வொரு வார்த்தையை உபயோகித்தார்கள் . எஸ்கிமோக்களின் மொழியில் பனியைக் குறிக்க 100 வார்த்தைகள் இருப்பதாக கூறுவார்கள். அதே போல் தமிழில் சிங்கத்தைக் குறிக்க முடங்களை , கோனரி , கேசரி , சீயம் , வயமா , அரி , மடங்கல் , கண்டீரவம் , ஏறு என்று பல வார்த்தைகள் உண்டு. அனால் அவை எல்லாவற்றையும் மறந்துவிட்டு நாம் பயன்படுத்தும் ஒரே வார்த்தை சிங்கம் . இது நாமே தேடிக்கொண்ட மொழி வறுமை. எனக்குப் பல நேரங்களில் தோன்றும், நம் ஊரில் சிங்கங்கள் அற்றுப்போய் நம் மக்களுக்கு சிங்கங்களுடன் தொடர்பு இல்லாமல் போனதால்தான் சிங்கங்களுக்கான இத்தனை பெயர்கள் மறைந்தனவா, இல்லை நம் மக்கள் தேடிக்கொண்ட மொழி வறுமையால் சிங்கங்களுடனான நெருக்கம் அற்றுப்போய் அவை பற்றிய அக்கறை போய் அவை நம் மண்ணில் இருந்து மறைந்துவிட்டனவா என்று தெரியவில்லை.

நம் முன்னோர்கள் நம் இயற்கைச் சூழலை புரிந்து கொண்டு உருவாக்கிய பல கூறுகளை நாம் இன்று மறந்துவிட்டு , மேலை நாட்டவர்களால் அவர்கள் சூழலுக்கு என்று உருவாக்கப்பட்டதை மோகம் என்ற பெயரால் நமக்குள்ளே திணித்துக் கொண்டு வாழ்கிறோம் . அதற்கு ஒரு உதாரணம் ஆசிரியர் கூறுவது போல் , நம் முன்னோர்கள் வெப்ப மண்டல நாடான நம் நாட்டின் பருவநிலையை இளவேனில், முதுவேனில், கார், கூதிர், முன்பனி, பின்பனி என 6 ஆகப் பிரித்திருந்தனர். இது இது வட இந்தியாவைக் காட்டிலும் கூட வேறுபட்டது. அதை எல்லாம் மறந்து விட்டு நாம் மேலை நாட்டினரின் நான்கு பருவ காலங்களைப் பின்பற்றுகிறோம். இப்படி நாம் கொண்ட மோகத்தால் நம்மிடையே நம்மையே நம்பி இருந்த உயிரினங்களையும் அழித்துவிட்டோம். நம்மிடையே இருந்த நம் சூழலுக்குப் பொருதிப்போன நம் நாட்டின் நாயினங்களான கன்னி, கோம்பை, அலங்கு, கருவாய் செவலை, ராஜபாளையம்,  சிப்பிப் பாறை போன்றவற்றை மறந்து விட்டு நாம் அல்சேசன், டாபர்மேன் போன்ற வெளிநாட்டு இனங்களை நாடிச் சென்றதால் நம் இனங்கள் அழிந்துவிட்டன/அழியும் தருவாயில் உள்ளன. இன்று ஓரளவிற்கு தப்பிப் பிழைத்திருப்பவை ராஜபாளையம் போன்ற நாய் இனங்களே. எனக்கு இன்றும் ஞாபகம் இருக்கிறது, என் அம்மாச்சி மதுரையைச் சேர்ந்த நாயினமான கோம்பை அவ்வளவு சிலாகித்துக் கூறுவார். அவை எல்லாம் இனிமேல் திரும்பக் கிடைக்குமா என்று தெரியவில்லை. 

நாம் ஒன்றை மறந்து விடுகிறோம் . இயற்கையானது பல்லாயிரக்கணக்கான வருடங்களாக இந்தச் சூழலுக்கு இயைந்து போகும், இந்தச் சூழலில் வாழும் மற்ற உயிரினங்களுடன் இயைந்து வாழும் உயிரினங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து வளர்த்து வந்திருக்கிறது. நாம் அவற்றை எல்லாம் மறந்து விட்டு இந்தச் சூழலுக்குப் பொருந்தாத பல உயிரினங்களை கொண்டு வந்து அந்த இயற்கைச் சூழலின் சமநிலையையே குலைத்து விடுகிறோம். தைல மரம், சீகை என்று நாம் இன்று நம் மலைப் பகுதிகளில் அறிமுகப்படுத்திய தாவரங்கள் அந்தப் பகுதியின் சமநிலையையே குலைத்து வருகின்றன. அதேபோன்று பணப்பயிர்களான தேயிலை, நீலகிரியில் எங்கும் பூத்துக் குலுங்கிய குறிஞ்சி மலர்ச் செடிகளை அழித்து உருவாக்கப்பட்டன. குறிஞ்சிப் பூக்கும் காலங்களில் அந்த மலைப் பகுதி முழுவதும் ஒரே நீல நிறமாகத் தோற்றமளிக்கும். நீலகிரிக்கு அந்த பெயர் வந்ததே இதனால்தான் என்பர். இன்று அவை எல்லாம் அழிந்து எங்கும் தேயிலைத் தோட்டமாக இருக்கின்றன. சூழலியலாளர்கள் இந்த தேயிலைத் தோட்டங்களை 'பசுமைப் பாலைவனம்' என்கின்றனர் .

இதைத் தவிர இந்த புத்தகத்திலிருந்து எனக்கு சில அடிப்படையான கேள்விகளுக்கு விடை கிடைத்தது . எனக்கு இது வரை மான்களுக்கும் antelope என்னும் இரலைகளுக்கும் இடையே வித்தியாசம் தெரியாமல் இருந்தது . ஆனால் இந்த புத்தகத்திலிருந்து மான்களுக்கு கொம்புகள் ஆண்டுதோறும் உதிர்ந்து வளரும் ஆனால் இரலைகளுக்கு அப்படி உதிரா என்பது தெரிந்தது . இதுபோன்று சில ஆச்சரியமான சுவாரசியமான விசயங்களும் இந்த புத்தகத்தில் உள்ளன. உலகிலேயே மிகுதியான இனங்கள் கொண்ட தாவர இனம் புற்கள், இரண்டாவது ஆர்கிட் . அதே போன்று பறவையியலாளர்கள் இதுவரை கண்டறிந்த பறவைகளை பட்டியலிட்டிருப்பார்கள் . அதற்கு Life list என்று பெயர் . புதிதாக பார்த்த பறவை lifer என்று பெயர் .

இது தவிர சூழலியல் முன்னேற்றத்திற்கு பாடுபட்டவர்களையும் நம் சுற்றுப்புறச் சூழல் கேட்டிற்கு காரணங்களையும் ஆசிரியர் ஆராய்கிறார். ஆலன் ஆக்டவியன் ஹியூம். நமக்கு பள்ளிக்கூடத்திலேயே அறிமுகமான பெயர்தான். இந்திய தேசிய காங்கிரசை தோற்றுவித்த ஆங்கிலேய ICS அதிகாரி. இதைவிட முக்கியமானது அவர் பறவையியலில் கொண்ட ஈடுபாடு. இவர், தான் இந்தியாவில் பணியாற்றிய காலத்தில் ஆயிரக்கணக்கான பறவைகளையும் அவற்றின் முட்டைகளையும் சேகரித்து பதப்படுத்தினார். இப்படி இவர் இந்தியாவில் பணியாற்றியபோது சேகரித்தது 63,000 பறவைகள், 500 பறவைக்கூடுகள், 18,500 முட்டைகள். இவருடைய சேகரிப்பில் கிட்டதட்ட அன்றைய காலகட்டத்தில்  இந்தியாவில் இருந்த அனைத்துப் பறவைகளும் உள்ளன என்கின்றனர் . இன்று இவை லண்டனில் உள்ளன. இவரைப் போன்று குமரப்பா, மா. கிருஷ்ணன் என்று பலரின் பங்களிப்புகளை ஆசிரியர் குறிப்பிடுகிறார். சூழலியலிற்கு பங்காற்றியவர்களைக் குறிபிடும்போது சூழலியலுக்கு எதிர்மறையான எண்ணம் மக்களில் தோன்றக் காரணமானவர்களையும் ஆசிரியர் குறிப்பிடுகிறார். அப்படிப்பட்டவர்களில் முக்கியமானவர் ஜிம் கார்பெட். இந்தியாவில் வேட்டைக் கலாச்சாரம் ஓங்கி இருந்ததற்கு காரணமானவர்களிலும் அதை ஊக்குவித்தவர்களிலும் முக்கியமானவர் . வேட்டைக்கலாச்சாரத்தை சிலாகித்து இவர் எழுதிய புத்தகங்களால் வேட்டை இலக்கியம் என்றொரு இலக்கிய மரபுக்கு பங்காற்றியவர்களில் முக்கியமானவராக இருந்தார். இது வேட்டையை மேலும் அதிகரித்தது. ஆனால் பல இடங்களில் ஆசிரியர் இப்படிப்பட்ட வேட்டையாடிகளின் இலக்கியங்களின் உண்மைத்தன்மையை கேள்விக்குள்ளாக்குகிறார்.

இதே போன்று முன்னேற்றம் என்பதற்காக நாம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் எப்படி சூழியலில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்பதை அழகாக எடுத்துரைக்கிறார். நதிகள் இணைப்பும் , பெரிய அணைகளினால் ஏற்படக்கூடிய/ஏற்படும் சூழியல் கேடுகளை எடுத்துரைக்கிறார் . அலையாத்திக்காடுகள் அழிக்கப்பட்டதால் நாம் எந்த அளவிற்கு ஆழிப்பேரலையின் போது பாதிக்கப்பட்டோம் மற்றும் அலையாத்திக்காடுகள் இருந்ததால் வேதாரண்யம் போன்ற பகுதிகள் பாதுகாக்கப்பட்டன என்பதையும் கூறுகிறார்.
எனக்கு இந்த புத்தகத்தின் ஆசிரியரிடம் மிகவும் பிடித்தது, ஆசிரியர் இந்த புத்தகத்தில் பல விமர்சனங்களை வைத்தாலும் அது யாரையும் புண்படுத்துவதில்லை.

சூழலியல் குறித்து மேலும் பல நூல்கள் தமிழில் வரவேண்டும் என்பதற்கு இந்த புத்தகம் ஒரு உதாரணம். ஒரு மொழியில் அந்தச் சூழல் குறித்த துறைச் சொற்களும், கலைச் சொற்கள் பாதுகாக்கப்படுவதும் புதிய சொற்கள் உருவாக்கப்படுவதும் அந்த மொழி வளத்திற்கு மட்டுமல்ல அந்தப் பகுதி சூழலுக்கும் வளம் சேர்க்கும் என்பதை இந்த புத்தகம் மூலம் உணர முடிகிறது.  இந்த புத்தகத்தை படித்து முடித்த போது இந்த சுற்றுப்புறத்தை புரிந்து கொள்வதும் அதனுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்வதும், இயைந்து வாழ்வதுமே சுற்றுப்புறத்தையும் அதன் மூலம் நம்மையும் காத்துக்கொள்ள முடியும் என்பதை உணர முடிகிறது . அதனுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள முன்பே குறிப்பிட்டது போல நம் மொழியில் இருக்கும் நம் சூழியல் குறித்த  துறைச் சொற்களை மீட்டெடுக்க  வேண்டும் . அதற்கு தியோடர் பாஸ்கரன் போன்றவர்களின் பங்களிப்பு நிச்சயம் போற்றத்தக்கது. இந்த கலைச்சொற்கள் கொண்ட புத்தகங்கள் நிச்சயம் தமிழில் வரவேண்டும் . 

இந்த புத்தகத்தில் நான் படித்த கலைச்சொற்களை இங்கு குறிப்பிடுகிறேன். 

பல்லுயிரியம் - Biodiversity 
சிவிங்கிப் புலி - Cheetah
மூங்கணத்தான்(ஒரு சிறு விலங்கு) - Madras Tree Shrew
ஆவுளியா  - Dugong 
ஓங்கில்  - dolphin
பங்குனி ஆமை - Olive Ridley
பேராமை - Green Turtle
அழுங்காமை - Howskbil
பெருந்தலையாமை - Loggerhead
தோணியாமை - Leatherback
மயில் கெண்டை - மாஷீர்
வலசை - migration
சீகை மரம் - Wattle
தைல மரம்  - யூகலிப்டஸ் மரம் 
சிலுவை மரம் - Vernonia servarayansis
தங்க நிற வாண்டா - ஒரு வகை ஆர்கிட் 
மௌனப் பள்ளத்தாக்கு , அமைதி பள்ளத்தாக்கு - Silent valley
உள்ளினப் பெருக்கம் - Inbreeding
சூழல்மேம்பாட்டுத்  திட்டம்  - Eco Development
மணிகண்டன் - Ruby-throated Bulbul
உயிர்மண்டலம் - Biosphere
கூகை, சாவுக் குருவி - Barn Owl
வேழம் - யானை 
முடங்களை , கோனரி , கேசரி , சீயம் , வயமா , அரி , மடங்கல் , கண்டீரவம் , ஏறு , சிங்கம் - Lion
நீல்காய் , இரலை மான்  - antelope
வெளிமான் - Black buck , Indian antelope
நதிக்கரை வனாந்திரம் - Riverine forest
புதைபடிவம் - fossil
கூழக்கடா - Rosy pelican
சோலைபாடி - Shama
நீலகிரி காட்டுப்புறா - Nilgiri wood pigeon
கொண்டைக்குருவி - Bulbul
பூங்குருவி - Thrush 
ஒரிடப் பறவைகள் - Endemic birds
சாம்பல் தலை ஈபிடிப்பான்  - Grey-headed flycatcher
சோலை - மழைக்காடு 
பூங்குருவி - Malabar whistling thrush
வர்ணக்காடை - Painted bush quail
பூநாரை - Flamingo 
கடல் ஆலா  - White-bellied Sea Eagle
சுரபுன்னை அல்லது அலையாத்தி மரம் (இது ஒரு காரணப் பெயர் , அலைகளை ஆத்தி அதன் வேகத்தைக் குறைப்பவை ) - Mangrove 
சருகுக் கோழி - Red spurfowl
வரகுக் கோழி - Lesser florican
கண்ணாடி ஆள்காட்டி -Stone plover
உழவாரக்குருவி - Palm swift
வால்க்குருவி - Paradises flycatcher
தையல்சிட்டு - Tailor bird
மஞ்சக்கொழுப்பான் - Golden Oriole
வண்ணாத்திக்குருவி - Pied wagtail
ஆலா - White-bellied sea eagle
பூனைப்பருந்து - Pale harrier
நாரையான் பருந்து - Black-winged kite
கொண்டையான் -  Crested serpent eagle
புஞ்சைப்பருந்து - Tawny eagle
பாம்புவாத்து - Darter
ஆண்டிவாத்து - Shoveller
செங்கால் வாத்து - Spotbill
செந்நாரை - Purple heron
வெண்ணாரை - Large egret
நையாண்டிக்குருவி(இதற்கு இலங்கையில் நாகணவாய்ப்புள் என்று பெயர் ) - Hill myna(Grackle)
கொண்டைக்கரிச்சான் - Racket-tailed drongo
மலைமாங்கு - Great Indian Hornbill
வண்டுகுத்தி - Trogon
சோலைபாடி - Shama
கழுத்தறுப்பான் - Crimson-throated barbet
ஒப்போலிப்பண்பு - mimicry
காசிக்கரட்டி - Pitta
காடை - Quail
கொண்டைக்குருவி - Bulbul
மணிகண்டன் - Ruby throated bulbul
வகைப்பாட்டியல் -  taxaonomy
கானமயில் - The Great Indian Bustard 
மூக்கணத்தான் - Madras Tree Shrew
கறுப்புக் கெண்டைமீன் - Black carp
சருகுமான் , கூரன் பன்றி - Mouse deer
பெரியணத்தான் - Grizzled Squirrel
மத்தி மீன் - சார்டின் மீன் 
சூரை மீன் - ட்யூனா மீன் 

புள்ளினம் - பறவைகள்
இருவாசி
கானாங்கோழி 
வரகுக்கோழி 
வெண்கொக்கு 
வக்கா 
கங்கணம் 
நத்தைகுத்தி நாரை 
நீர்காக்கா 
சங்கு வளை நாரை 
கூளக்கடா 
நீர் வாத்து , சிரவி 
செங்கால் நாரை 
உள்ளான் 
பட்டைதலை வாத்துகள்
பூநாரைகள்

கடம்பை மான் 
கேளையாடு ( ஒரு வகை மானினம்)
வரையாடு 
சருகுமான் 
வெளிமான் 

மழைக்காடுகள் , சோலைக் காடுகள்
ஈட்டி மரம் 
வெண்ணாச மரம் 
கறுப்புக் கெண்டை மீன் 

சுற்றுச் சூழல் புரத்தல் 
வார்ப்போவியம் 
தொல்லெச்சத் தடயங்கள்
அக ஒலி
கூடுகை - சந்திப்பு
கழிமுகம்
ஓத அலைகள் 

Photo courtesy : https://www.worldculturepictorial.com/blog/content/oxygen-grows-green-trees-oceans-international-year-forests-2011