Monday, June 10, 2013

உயரம் தொட்ட சிகரம் !


File:Everest North Face toward Base Camp Tibet Luca Galuzzi 2006.jpg

1802 ஏப்ரலில் சில பிரிட்டிஷார் பரங்கி மலை மற்றும் பெரும்பாக்கம் குன்றின் உயரத்தை அளந்து கொண்டிருந்தனர். அவர்களுக்குத் தெரியும் இது உலகின் உயரத்தை அளப்பதற்கான தொடக்கம் என்று.  Great Trigonometric Survey என்று அழைக்கப்பட்ட அந்த சர்வே உலகின் உயரமான சிகரங்களின் உயரத்தை துல்லியமாக அளப்பதற்காக தொடங்கப்பட்டது. இந்தக் குன்றுகளை அடிப்படையாக வைத்து அளக்கப்படும் அளவே baseline ஆகக் கொள்ளப்பட்டது . எனவே இதில் ஏற்படும் மிகச் சில மில்லிமீட்டர் பிழையும் உலகின் மிக உயரமான சிகரத்தின் உயரத்தை அளப்பதில் பல நூறு மீட்டர் பிழையை ஏற்படுத்திவிடும். ஏனவே அதில் மிக அதிக கவனம் கொள்ளப்பட்டது. இப்படியாக பிரிட்டிஷார் தெற்கிலிருந்து வடக்கு நோக்கி ஒவ்வொரு குன்றுகளின் உயரத்தை அளந்து சென்று இமயமலையின் அடிவாரத்தை அடைந்தனர். அப்பொழுதே வருடம் 1830 கள் ஆகிவிட்டது. ஐந்து வருடங்களில் முடிக்கப்பட்டுவிடும் என்று எண்ணிய சர்வே இத்தனை வருடங்கள் ஆகியும் உலகின் உயரமான சிகரங்களில் ஒன்றைக் கூட அளக்க ஆரம்பிக்கவில்லை.

அப்பொழுது நேபாளம் வெளிநாட்டவர்கள் உள்ளே நுழைய அனுமதி மறுத்திருந்தது. சிகரங்களின் உயரத்தை அளப்பதற்குக்கூட அது அனுமதிக்கவில்லை. அதனால் 1847 களில் பிரிட்டிஷார் நேபாளத்திற்கு வெளியிலிருந்து அதாவது உயரமான சிகரங்களுக்கு கிட்டத்தட்ட 250 km தொலைவு அப்பாலிருந்து அவற்றை அளந்தனர். அந்த காலகட்டங்களில் இந்தியாவிலிருக்கும் கஞ்சன்ஜங்காவே உலகின் உயரமான சிகரமாக கருதப்பட்டது. ஜான் ஆம்ஸ்ட்ராங் என்ற பிரிட்டிஷார் கஞ்சன்ஜங்காவிற்கு தொலைவிலிருந்த ஒரு சிகரம் கஞ்சன்ஜங்காவை விட உயரமாக இருக்கும் என்று எண்ணினார். அதற்கு அவர் 'b' என்று பெயரிட்டார். அதற்கடுத்து நிக்கோல்சன் என்பவர் சிகரம் 'b' இன் உயரத்தை அளக்க அனுப்பப்பட்டார். சிகரம் 'b' க்கு 170 km தூரம் இருந்து அளந்த அவரின் அளவீடுகள் சிகரம் 'b' நிச்சயம் கஞ்சன்ஜங்காவை விட உயரமானது என்பதைக் காட்டியது.  இவர்களின் மூலம் பெறப்பட்ட அளவீடுகளிளிருந்து மேற்கு வங்கத்தை சேர்ந்த ஒரு இந்தியர் 1852 ஆம் ஆண்டு சிகரம் 'b' திட்டவட்டமாக உலகின் உயரமான சிகரம் என்று கண்டறிந்தார். இருந்தபோதிலும் சிகரம் 'b' (இதற்க்கு இப்பொழுது சிகரம் XV என்று பெயரிடப்பட்டிருந்தது) உலகின் உயரமான சிகரம் என்று அறிவிப்பதில் காலதாமதம் ஏற்பட்டது . இதற்கு காரணம் அவர்கள் இதில் எந்த ஒரு தவறும் ஏற்படக்கூடாது என்பதால் திரும்ப திரும்ப தாங்கள் மேற்கொண்ட அளவீடுகளை சரிபார்த்துக் கொண்டிருந்தனர். இறுதியாக அவர்களின் அளவீட்டில் சிகரம் XV இன் உயரம் மிகச் சரியாக 29000 அடி. ஆனால் 29000 அடி என்று சொன்னால் மக்கள் அதை ஏதோ ரவுண்ட் figure ஆக சொல்லிவிட்டார்கள் என்று எண்ணுவார்கள் என்று எண்ணி 29,002 அடி உயரம் என்று குறித்தனர் .

அடுத்து சிகரம் XV க்கு பெயர் வைக்க வேண்டும் . அப்பொழுது இந்தியாவில் சர்வேயர் ஜெனரலாக இருந்தவர் ஆண்ட்ரு  வாக்ஹ் . அவருடைய குருநாதர் சிகரங்களுக்கு பெயர் வைக்கும்பொழுது உள்ளூர் மொழியிலேயே பெயர் வைக்கவேண்டும் என்று அறிவித்திருந்தார். ஆனால் அச்சிகரம் இருந்த நேபாளமும் , திபெத்தும் வெளிநாட்டவருக்கு அனுமதி மறுத்திருந்தது. அதனால் அதன் பெயர் யாருக்கும் தெரியவில்லை . அதனால் வாக்ஹ் தன்னுடைய குருநாதரின் பெயரையே வைத்துவிட்டார். எவரெஸ்ட் ! .

1856 இல் உலகின் உயரமான சிகரம் என்று அறிவிக்கப்பட்ட எவரெஸ்ட்டில் ஏறுவதற்கு அன்று முதல் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அவை பெரும்பாலும் பல உயிர்பலிகளுடன் தோல்வியில் முடிந்தன. கிட்டத்தட்ட நூறு ஆண்டுகளுக்குப் பிறகு 1953 இல் நியூஜிலாந்தின் எட்மண்ட் ஹிலாரியும் நேபாளத்தை  சேர்ந்த செர்பாவான டென்சிங் நார்கேவும் முதலில் சிகரம் தொட்டனர். இருவரில் எவர் முதலில் சிகரம் தொட்டனர் என்பது அவர்கள் இருவர் மட்டுமே அறிந்த ரகசியம். இருவரில் டென்சிங் நார்கே மட்டுமே சிகரத்தை அடைந்தார் , எட்மண்ட் ஹிலாரி அதை தொடவே இல்லை என்று கூறுவோரும் உண்டு. அதற்கு அவர்கள் சான்றாகக் கூறுவது டென்சிங் நார்கே மட்டுமே எவரெஸ்டில் இருப்பது போன்று புகைப்படம் உள்ளது , எட்மண்ட் ஹிலாரி இருப்பது போன்று புகைப்படம் இல்லை என்றனர். அதற்கு எட்மண்ட் , டென்சிங்கிற்கு புகைப்படம் எடுக்கத் தெரியாததால் , நான் எடுத்த அவர் நிற்கும் புகைப்படம் மட்டுமே எங்களிடம் உள்ளது என்றார். அவர்களின் சிகரம் தொட்ட அந்தப் பயணம் வெற்றிகரமாக அமைந்ததற்கு முக்கிய காரணம் அந்தப் பயணத்தில் அது வரை இல்லாத அளவு பயன்படுத்தப்பட்ட அதிகப்படியான  ஆக்சிஜன் ஆகும் .

இருவர் சிகரம் தொட்ட அந்த பயணத்திற்கு 400 பேர் உதவினர் .  நேபாளிகளான ஷெர்பாக்களின் மலை ஏறும் ஆற்றல்  அளப்பெரியது. இன்றும் அவர்களின் உதவி இன்றி இமயமலை சிகரங்கள் அடையமுடியாது . 400 பேர் கொண்ட அந்த குழுவிற்கு தலைமை ஏற்றிருந்த ஜான் ஹன்ட் , எவரெஸ்ட் சிகரம் தொட இரண்டு பேர் இரண்டு பேர் கொண்ட இரண்டு குழுக்களை தேர்ந்தெடுத்திருந்தார். முதல் குழுவைச் சேர்ந்த டோம் போர்டில்லன் மற்றும் சார்லஸ் ஈவான்ஸ் தங்கள் பயணத்தில் சிகரம் தொட முடியாமல் திரும்பிய பொழுது அவர்களுக்கு முன்னே எவரெஸ்ட் 300 அடி தூரத்தில் இருந்தது ! .  முன்னூறு அடி தூரத்தில் உலகம் அவர்களின் பெயரை மறந்துவிட்டது . அவர்கள் திரும்பிய இரண்டு நாட்களில் எட்மண்ட் ஹிலாரியும் டென்சிங் நார்கேயும் தங்கள் பயணத்தை தொடங்கினர். டென்சிங் நார்கேயும் எட்மண்ட் ஹிலாரியும் இணைந்தது உணர்ச்சிகரமானது. ஒரு முறை எட்மண்ட் ஹிலாரி தன்னுடைய மலையேற்றத்தில் அதல பாதாளத்தை நோக்கி விழுந்த போது டென்சிங் நார்கேயின் துரித நடவடிக்கையால் காப்பாற்றப்பட்டார் . அன்றிலிருந்து எட்மண்ட் ஹிலாரி தன்னுடைய பிற்கால பயணங்களுக்கு டென்சிங் நார்கேயை சேர்த்துக் கொண்டார் .

உலகின் உயரமான சிகரமான எவரெஸ்ட் பூமியின் தொலைவான பகுதி கிடையாது. பூமியானது தன்னுடைய பூமத்திய  ரேகை பகுதியில் பருத்துக் காணப்படும். அதனால் பூமியின் மையத்திலிருந்து அளக்கும்போழுது எவரெஸ்ட் சிகரமானது பூமியின் ஐந்தாவது தொலைவான பகுதியே (tallest/farthest point of the earth) ஆகும். முதல் இடத்தை வகிப்பது ஈக்குவடாரில் இருக்கும் சிம்போரசோ ஆகும் . சொல்லபோனால் முதல் நான்கு இடத்தை வகிப்பதும் பூமத்திய ரேகை பகுதியைச் சேர்ந்த சிகரங்களே ஆகும் .கடல் மட்டத்திலிருந்து பார்த்தால் சிம்போரசோ 20,565 அடியே ஆகும் ஆனால் எவரெஸ்ட்டோ 29,029 அடி :).

இன்று சீனா எவரெஸ்ட்டை எவரெஸ்ட் என்று கூறாமல் திபத்திய பெயரான சொமோலுங்க்மா  (Holy Mother) என்றே அழைக்க வேண்டும் என்று கூறுகிறது. ஏனெனில் எவரெஸ்ட்டானது உலகம் அறிவதற்கு முன்பே திபெத்தியர்களால் பல காலம் அறியப்பட்டிருந்தது. அதனால் திபெத்திய பெயராலேயே அது அறியப்பட வேண்டும் என்று கூறுகிறது. இன்று பல நாடுகள் எவரெஸ்ட் என்ற சொமோலுங்க்மா என்று உலகின் மிக உயரமான சிகரத்தை அழைக்க ஆரம்பித்துவிட்டன. ஆனால் திபெத் போன்றே நேபாளிகளால் பல காலம் அறியப்பட்ட அந்த சிகரத்தின் நேபாள பெயரான சகர்மதாவை பலரும் மறந்தது சீனாவின் வல்லரசு ஆற்றலைக் காட்டுகிறது !

Titpits:

1. கடந்த மே 29, 2013 வுடன் எவரெஸ்ட் என்ற சொமோலுங்க்மா என்ற சகர்மதா சிகரம் தொட்டு 60 வருடங்கள் ஆகின்றன .
 2. நாம் அறிந்தவரை மிக உயரமான சிகரம் ஒலிம்பஸ் மோன்ஸ். அமைந்திருப்பது செவ்வாய் கிரகத்தில் . அதன் உயரம் 22 km. நம்முடைய எவரெஸ்டின் உயரம் 8.8 km :(
3. 29029 அடி உயர எவரெஸ்ட் சிகரத்தை 29 ஆம் தேதி முதல் முறையாக அடைந்தார்கள் என்பது இன்னொரு titpits :)