இன்று பல பேருக்கு இந்த பூமி மனிதர்களுக்கு மட்டுமே என்ற எண்ணம் உருவாகிவிட்டது. உருவாகிவிட்டது என்பதைவிட இயல்பாகவே தோன்றிவிட்டது அதுவும் சிறிது கூட குற்ற உணர்ச்சியே இல்லாமல் . ஏனென்றால் பலருக்கு இந்த பூமியில் இருக்கும் பல உயிர்கள் பற்றியோ அவற்றிற்கிடையேயான பிணைப்பு பற்றியோ சிறிதும் தெரியவில்லை அல்லது அக்கறை இல்லை.
இந்த பூமியில் மனிதன் மட்டுமே தனித்து வாழ்ந்துவிட முடியாது. மனிதன் ஒரு Social Animal ஆனால் Social consciousness இல்லாத ஒரு Social animal. இந்த Social animal என்கிற பதம் மனிதர்களுக்கிடையேயான Social Life ஐப் பற்றிக் கூறவில்லை . இது மனிதன் மற்ற உயிரினங்களைச் சார்ந்திருக்கும் Social life ஐப் பற்றிக் கூறும் பதம்.
உலகில் உருவாகும் ஆக்சிசனில் 20% தென் அமெரிக்காவில் இருக்கும் அமேசான் மழைக்காடுகளால் உருவாகிறது. அதாவது நம் கும்மிடிப்பூண்டியில் இருக்கும் குருசாமி சுவாசிப்பது இங்கிருந்து உலகின் ஏதோ ஒரு மூலையில் இருக்கும் அமேசான் மரம் வெளியிடும் ஆக்சிசன். இப்படி மனிதன் தான் சுவாசிக்க அத்தியாவசியத் தேவையான ஆக்சிசனிலிருந்து , தன் உணவு உற்பத்தியாகத் தேவையான தேனீ போன்ற சிறு பூச்சிகளால் நடக்கும் மகரந்த சேர்கை முதல் , நம் டாய்லட்டுல இருந்து வெளியே போகும் மலத்தை நொதிக்கச் செய்யும் பாக்டீரியா வரை அவன் சார்ந்திருப்பது மற்ற உயிரிகளை. ஆனால் அவனுடைய நினைப்போ இந்த உலகம் நடப்பதே தன்னால்தான் என்ற எண்ணம். சொல்லப் போனால் இந்த பூமி உருப்படியாக இருந்தது மனிதன் உருவாவதற்கு முன்புதான்.
இந்த பூமியில் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு உயிரினம் தன் ஆதிக்கத்தை செலுத்தி வந்திருக்கிறது . அப்பொழுது அதனுடன் போட்டியிட முடியாத அல்லது அந்த சூழ்நிலைக்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொள்ள முடியாத உயிரினம் இந்த பூமியில் இருந்து அழியும் என்பது டார்வின் தத்துவம். இங்கு கவனிக்கவும் ஆதிக்கம் செலுத்தும் உயிரினத்தின் நேரடி போட்டியாளன்தான் இங்கு மறையும். அதுவும் அது நடக்க பல ஆயிரம் ஆண்டுகள் ஆகும். ஆனால் இங்கு மனிதன் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தவுடன் நடப்பது முற்றிலும் வேறானது. இன்று மனிதனின் செயல்பாடால் அழிவது அவன் போட்டி ஆள் அல்ல. அவனுக்கு, அவன் வாழ்விற்கு துணை செய்யும் உயிரினங்கள்தான். ஏனென்றால் அவன் போட்டியாளான நியாண்டர்தால் மனிதனை அவன் என்றோ அழித்துவிட்டான். இன்று எஞ்சி இருப்பது அவன் நண்பர்களே.
மனிதனின் அழித்தொழிப்பு வேகம் எந்த ஒரு உயிரினத்துக்கும் சூழ்நிலை மாற்றத்திற்கு ஏற்ப தங்களை தகவமைப்பு செய்து கொள்ள சிறிது கூட அவகாசமளிக்காத வேகம் . உதாரணத்திற்கு சிட்டுக் குருவி. இங்கிங்கெனாது எங்கும் நிறைந்திருந்த சிட்டுக் குருவிகளை இன்று பார்பதே அபூர்வம். சிட்டுக் குருவிகள் தங்கள் குஞ்சுகளுக்கு ஊட்டுவது வயல் வெளிகளில் இருக்கும் பூச்சிகளையும் , முற்றத்தில் காய வைக்கும் சிறு தானியங்களையும். பூச்சிக் கொல்லிகள் வந்த பிறகு பூச்சிகளும் கிடைக்கவில்லை. கிடைக்கும் பூச்சிகளும் பூச்சிக் கொல்லி விஷம் தாக்கியவை.முற்றத்தில் தானியங்களை காயவைக்கும் பழக்கம் மறைந்த பிறகு தானியங்களும் கிடைக்கவில்லை . அவை கூடு கட்டுவது குடிசை, ஓட்டு வீடு போன்ற வீடுகளில் இருக்கும் சிறு இடை வெளிகளில் . கான்க்ரீட்டு காடுகள் வந்த பிறகு அதற்கும் வழி இல்லை . அப்படியும் தப்பிப் பிழைத்து வாழ்ந்த குருவிகளை அழிக்க வந்தது செல்போன் எமன். இந்த செல்போன் கதிர்களால் இந்த சிட்டுக் குருவிகளின் இனப்பெருக்கம் பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இப்படி சிட்டுக் குருவிகளின் வாழ்க்கையின் அடி மடியிலேயே கை வைக்கப்பட்டுவிட்டது. இவ்வளவு மாற்றங்களும் நடந்தது கடந்த எழுபது ஆண்டுகளில். எழுபது ஆண்டுகள் என்பது பல ஆயிரக்கணக்கான ஆண்டுகள் வாழ்ந்த உயிரினத்தின் வாழ்வில் மிகச் சிறிய பகுதி. இச்சிறு இடைவெளியில் எந்த உயிரினத்தாலும் தங்களுக்குள் மாற்றங்களை ஏற்படுத்தி தங்களை தகவமைத்துக் கொள்ள முடியாது.
இந்த பூமியில் எல்லா காலமும் உயிரினங்கள் தோன்றி பின்னர் முற்றிலும் மறைந்தும் போயிருக்கின்றன. ஆனால் அவை அனைத்தும் இயற்கையாக நடந்தவை. ஆனால் இப்பொழுது உயிரினங்கள் மறைவது முற்றிலும் மனிதன், மனிதனுடைய செயலால் நடப்பது. மனிதனின் எண்ணமானது முற்றிலும் இயற்கைக்கு மாறானது. எடுத்துக்காட்டாக இதுவரை இருந்த அனைத்து உயிரினங்களும் மற்ற உயிரினங்களை தங்களின் உணவின் தேவைக்காக மட்டுமே கொன்றிருக்கின்றன. ஆனால் மனிதன் மட்டும்தான் பொழுதுபோக்கிற்காக வேட்டை என்ற பெயரில் உயிரினங்களை கொன்றான். வேட்டையில் எந்த உயிரினமாவது அழிந்திருக்கிறதா என்று கேட்பவர்களுக்கு ஒரு தகவல் , இந்தியாவில் 1950 வரை இருந்த ஆசிய சிறுத்தை இன்று இல்லை . முற்றிலும் வேட்டையால் அழிந்துவிட்டது. தமிழில் Leopard மற்றும் Cheetah இரண்டிற்கும் சிறுத்தை என்றுதான் பெயர். இப்பொழுது நம்மூரில் சிறுத்தை அடித்துவிட்டது என்று கூறுவது Leopard ஐதான், நான் கூறுவது Cheetah. இன்று உலகில் ஆசிய Cheetah இருப்பது ஈரானில் மட்டும்தான் அதுவும் 100 தான். இப்படி மனிதனின் நேரடி நடவடிக்கையாலும், மறைமுக நடவடிக்கையாலும் பூமியில் பல உயிரினங்கள் அழிவின் விளிம்பில் உள்ளன.
பூமியிலிருந்து உயிரினங்கள் அழியும் வேகம் இன்று மிகவும் அபாயகரமான வேகத்தில் உள்ளது. இன்றைய வேகத்தில் இது தொடர்ந்தால் 2100 இல் உலகில் இருக்கும் உயிரினங்களில் 50% அழிந்துவிடும் என்று கூறப்படுகிறது. இது மிகவும் அபாயகரமானது.
இந்த உலகில் அமெரிக்கா , ஐரோப்பா அளவிற்கு பெரிய தொழிற் புரட்சி நடக்காத பகுதிகள் தென் அமெரிக்கா, ஆப்ரிகா, ஆசியா ஆகும். இவைதான் பல்வேறு உயிரினங்கள் அதிகம் இருக்கும் பகுதிகளும் ஆகும். இவற்றில் பெரும் தொழிற் மாற்றங்கள் ஏற்படும்போதுதான் அதுவும் எந்த ஒரு உயிரினங்களைப் பற்றிய அக்கறையும் இல்லாத தொழிற் புரட்சி ஏற்படும்போது அது பெரும் பேரழிவை ஏற்படுத்தும்.
இப்படி உயிரினங்கள் அழிந்தால் , பின்னர் மனிதன் சுவாசிக்க ஆக்சிசனுக்கே அவன் Chemistry Lab லிலிருந்து கிடைக்கும் ஆக்சிசனையே நம்பி முகத்தில் மாஸ்க்குடந்தான் அலைய வேண்டி இருக்கும். இயற்கையை இயற்கையாக இருக்க விடுங்கள் அது உங்களை இயல்பாக வாழ வைக்கும் .
Photo Courtesy : http://www.tourismtheworld.com/wp-content/uploads/2011/05/forest.jpg