உலகின் மாபெரும் சாம்ராஜ்ஜியங்கள் இந்த உலகையே மாற்றி அமைத்திருக்கின்றன. அது வரலாற்றின் பக்கங்களின் நினைவு தெரிந்து கி.மு 1850களில் அமைந்த உலகின் முதல் மாபெரும் பேரரசான எகிப்து பேரரசு முதல் கடைசியாக அமைந்த பிரிட்டிஷ் பேரரசு வரை வரலாற்றையே மாற்றி அமைத்தன. கி.மு 1850 முதல் இன்று வரை கிட்டத்தட்ட 200 க்கும் மேற்பட்ட மாபெரும் பேரரசுகள் இந்த உலகை ஆண்டன. ஆனால் அவற்றில் பெரிதும் நினைவில் நிற்பவை எகிப்து,ரோம்,அசோகர் தலைமையிலான மௌரிய, முகலாய, சீனாவின் மிங், ஸ்பானிய, பிரிட்டிஷ் என மிகச் சில சாம்ராஜ்ஜியங்களே . இதில் பெரிதும் மறக்கப்பட்ட சாம்ராஜ்ஜியம் என்றால் அது மங்கோல் சாம்ராஜ்ஜியமாகும். இந்த சாம்ராஜ்ஜியம் உலகில் இதுவரை அமைந்த சாம்ராஜ்ஜியங்களில் பிரிட்டிஷிற்கு அடுத்து உலகின் மிக அதிக நிலப்பரப்பை ஆண்ட சாம்ராஜ்ஜியம் ஆகும். அதன் உச்சபட்ச காலகட்டத்தில் அது 2.4 கோடி சகிமீ ஆண்டது . அதாவது உலகின் நிலப்பரப்பில் 16% ஆகும். பிரிட்டிஷ்ஷார் ஆண்டது 3.3 கோடி சகிமீ அதாவது உலகின் நிலப்பரப்பில் 22% ஆகும். அதிலும் மங்கோல் சாம்ராஜ்ஜியம் ஆண்டது உலகின் தொடர்ச்சியான நிலப்பரப்பாகும். அந்த வகையில் அதுவே உலகின் மிகப் பெரியது. இதிலும் பிரிட்டிஷ்ஷார் ஆண்டது பழைய உலகம் மற்றும் புதிய உலகம் எனப்படும் அமெரிக்கா, ஆஸ்திரேலியாவையும் சேர்த்து. ஆனால் மங்கோல் ஆண்டது அவர்கள் காலத்தில் அறியப்பட்டஒரே உலகமான பழைய உலகம் எனப்படும் ஆசியா,ஐரோப்பா மற்றும் ஆப்ரிக்காவில் ஆகும். அதாவது அன்றைய உலகில் 35% ஆகும். இந்த வகையில் பார்த்தால் அது எவ்வளவு பெரியது என்பது தெரிய வரும். ஆனால் அந்த மாபெரும் சாம்ராஜ்ஜியம் முற்றிலும் மறக்கப்பட்டது. அதற்கு ஒரே காரணம் செங்கிஸ்கான். ஆமாம் அந்த மாபெரும் சாம்ராஜ்ஜியத்தை அமைத்தது செங்கிஸ்கான்தான்.
இந்த உலகின் வரலாற்றில் அதிகம் நினைவு கூறப்படும் தலைவர்களில் மிக முக்கியமானவர்கள் என்றால் அது அலெக்சாண்டரும் , செங்கிஸ்கானும் ஆவர். ஆனால் அலேக்சாண்டரால் அதிகம் நினைவு கூறப்படும் ரோம் சாம்ராஜ்ஜியம் அளவிற்கு செங்கிஸ்கானின் மங்கோல் சாம்ராஜ்ஜியம் நினைவு கூறப்படுவதில்லை. அதற்கும் முக்கிய காரணம் செங்கிஸ்கான்தான். ஆமாம் இந்த உலகம் அலெக்சாண்டரை மாபெரும் பேரரசர் என்று எண்ணும் அதே சமயம் அது செங்கிஸ்கானை வெறும் காட்டுமிராண்டித்தனமான ஒரு மாபெரும் கொள்ளைகூட்டத் தலைவன் போன்றே எண்ணுகிறது.
ஏனென்றால் அலெக்சாண்டர் நாடு பிடிக்கும் வெறி கொண்ட ஒரு நாட்டின் அரசராக பார்க்கப்படவில்லை. அதற்கு ஒரு முக்கிய எடுத்துக்காட்டு தன்னிடம் தோற்ற இந்திய மன்னனான போரஸை அவர் நடத்திய விதம். போரில் தோற்ற போரஸ் தன்னை ஒரு மன்னனுக்குரிய அந்தஸ்துடன் நடத்த வேண்டும் என்று அலெக்சாண்டரிடம் கூறிய பொழுது அவர் அவனின் வீரத்தைப் பாராட்டி அவனை தன்னுடன் இணைத்துக் கொண்டார். ஆனால் செங்கிஸ்கான் பெயரைக் கேட்டாலே இந்த உலகம் நடுங்கியது. பெர்சிய(இன்றைய ஈரான்)*1 படையெடுப்பின் போது செங்கிஸ்கானின் 50,000 வீரர்கள் இணைந்து கொன்ற மக்களின் எண்ணிக்கை 12 லட்சம். அதாவது ஈரான் சமவெளியில் இருந்த மக்களில் 3/4 பங்கு. இப்படி எங்கு படையெடுத்தாலும் பேரழிவு. மங்கோல் பேரரசு தான் ஆண்ட 270 வருடங்களில் கொன்ற மக்களின் மொத்த எண்ணிக்கை 3 லிருந்து 6 கோடி. அதாவது அன்றைய மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 7 லிலிருந்து 17 % ஆகும்.
இப்படி செங்கிஸ்கான், வெறி கொண்ட காட்டுமிராண்டித்தனமான ஒரு தலைவனாகவே பார்கப்பட்டான். ஏன் செங்கிஸ்கானின் வழி வந்த முகலாயர்களே தங்களை செங்கிஸ்கானின் வழித் தோன்றலாக கூறிக் கொள்ளாமல் , தங்களை துருக்கிய தலைவனான தைமூரின்*2 வழித் தோன்றலாக கூறிக் கொண்டனர் .
மங்கோலியர்களின் வாழ்க்கை கிட்டத்தட்ட குதிரையிலேயே பிறந்து , குதிரையிலேயே வளர்ந்து , குதிரையிலேயே முடிந்தது. அவர்கள் அளவிற்கு சிறந்த குதிரை வீரர்கள் கிடையாது. அங்கு சிறுவர்களை 4 , 5 வயதிலேயே குதிரையில் ஏற்றிவிடுவார்கள். மங்கோலியாவின் கடினமான காலநிலை அவர்களை முரடர்களாக ஆக்கியது. அந்த முரட்டுத்தனத்தின் மீதான பயம்தான் சீனாவை மங்கோலியாவிலிருந்து பிரிக்க மிகப் பெரிய சீனப் பெரும் சுவரை கட்ட வைத்தது .
செங்கிஸ்கானிற்கு முன் மங்கோலியர்கள் பல இனக் குழுக்களாக பிரிந்து தங்களுக்குள்ளாகவே சண்டையிட்டுக் கொண்டார்கள். செங்கிஸ்கான்தான் அவர்களை எல்லாம் ஒருங்கிணைத்து அவர்களின் தலைவனாகி மாபெரும் மங்கோல் பேரரசை அமைத்தான்.அப்பொழுதுதான், அதிகபட்சம் சீனா வரை அறியப்பட்ட அவர்கள், உலகம் முழுவதும் தெரிந்தார்கள்.
கான் என்று முடிவதாலேயே அதிகம் பேர் செங்கிஸ்கானை ஒரு முஸ்லிம் என்று நினைத்துக் கொள்கின்றனர். ஆனால் அவன் முஸ்லிம் இல்லை . சொல்லப் போனால் செங்கிஸ்கான் , இஸ்லாமின் பொற்காலம் எனப்படும் காலிபாக்களின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்தவன். அவன் மங்கோலியாவைச் சார்ந்த ஒரு உள்ளூர் மதத்தைச் சார்ந்தவன். அவன் அதிக சமய சகிப்புத் தன்மை கொண்டவனாக இருந்தான். அதனாலையே அவன் இந்த நாடு அந்த நாடு என்றில்லாமல் அனைத்து நாடுகளின் மீதும் படையெடுத்தான்.
மங்கோல் சாம்ராஜ்ஜியம் மேற்கே போலந்திலிருந்து கிழக்கே பசிபிக் பெருங்கல்டல் வரையிலும் , வடக்கே சைபீரியாவிலிருந்து தென் கிழக்கே தாய்லாந்த் வரையிலும் , தென் மேற்கே மத்திய கிழக்கு நாடுகள் வரையிலும் பரவியிருந்தது. செங்கிஸ்கானிற்கு பின் மங்கோல் சாம்ராஜ்ஜியம் 4 சாம்ரஜ்ஜியங்களாக பிரிந்தது.
உலகம் செங்கிஸ்கானை ஒரு கொடூரக் கொலைகாரனாக பார்த்த போது, மங்கோலியா அவனை தங்களின் இணையற்ற தலைவனாக பார்த்தது. அதற்கு அவர்கள் கூறும் காரணம், இந்த வரலாற்றை எல்லாம் எழுதுபவர்கள் எல்லாம் மேற்கு உலகத்தவர்கள். அதனால் அவர்கள் அலெக்சாண்டரை மாபெரும் பேரரசராகக் காட்ட செங்கிஸ்கானை ஒரு கொடூரக் கொலைகாரனாக சித்தரிக்கிறார்கள், மேலும் இந்த உலகமே மேன்மை அடைந்த பிறகு நடந்த முக்கியமாக மேற்கு உலக நாடுகளிடையே நடந்த உலகப் போர்களில்தான் இது வரை இல்லாத பேரழிவாக வெறும் 11 ஆண்டுகளில் 5.5 கோடி முதல் 13.5 கோடி மக்கள் இறந்தார்கள். அப்படி எனும் போது செங்கிஸ்கானை மட்டும் கொலைகாரனாக சித்தரிப்பது தவறு என்பது ஆகும்.
1. பெர்சிய படையெடுப்பிற்கு முன் செங்கிஸ்கானின் எண்ணத்தில் இருந்தது பெர்சியா மற்றும் இந்தியா. நல்லவேளையாக அவன் தேர்ந்தெடுத்தது பெர்சியா. தப்பியது இந்தியா !
2. செங்கிஸ்கானுக்கு தைமூர் ஒன்றும் குறைந்தவனில்லை, அவனுடைய படையெடுப்பில் டெல்லி மாநகரமே அழிந்தது.