Saturday, May 7, 2011

My Dear Brother Madu



மது , எனக்கு நினைவு தெரிந்ததிலிருந்து அவன் என்னை அண்ணேனு ஒரு தடவை கூட கூப்பிட்டதே இல்லை . ஆனா எங்க அம்மா சொல்லுவாங்க சின்ன வயசில் அவன் உன்னை எப்பொழுதுமே அண்ணேன்னுதான் கூப்பிடுவான் . ஒரு நாள் நாங்க அவன்ட உன் பேரு சிவானு சொன்னோம். அன்னில இருந்து அவன் உன்ன அண்ணேன்னு கூப்பிட்டதே இல்ல. அன்னேல இருந்து அவனுக்கு நீ சிவாதான்னு சொன்னாங்க. எங்க சித்தாப்பாலாம் அது என்ன அண்ணன அண்ணனு கூப்பிடாம பேர சொல்லி கூப்பிடுரதும்ப்பாங்க. இத்தனைக்கும் அவனுக்கும் எனக்கும் 2 வயசுதான் வித்தியாசம். எங்க வீட்டில் எங்க அம்மா அப்பா பண்ண மிகச் சிறந்த காரியங்களில் ஒன்று மதுவ என்னை சிவானு கூப்பிடவிட்டதுதான். அதனாலதான் எங்களுக்குள்ள வித்தியாசம் அதிகம் இல்லாம இருந்தது. சின்ன வயசுல எங்கள எல்லாரும் twins ஆனுதான் கேட்பாங்க. அந்த அளவிற்கு எங்களுக்கு உருவ ஒற்றுமையும் இருந்தது , அன்னியோன்யம் இருந்தது. அதற்காக நாங்க அதிகம் சண்டை போட்டதில்லைன்னு நான் பொய்லாம் சொல்லமாட்டேன்.

எப்போதும்போல என்னுடைய குணப்படி என் நெருக்கமான மதுகூடையும் அதிகம் சண்டை போடுவேன். எப்போதும்போல அந்த சண்டைகளுக்கும் நான்தான் காரணமாகவும் இருப்பேன். ஆனா சின்ன வயசுல இருந்து மது ரொம்ப பெருந்தன்மையானவன். எனக்கு அவன்ட்ட ரொம்ப பிடிச்ச குணங்களில் ஒன்று அவன் பெருந்தன்மை. அவன் எதையுமே பெரிதாக அலட்டிக்கொள்ளவேமாட்டான். இந்த குணங்கள் எங்க அப்பாட்ட இருந்து வந்தது. நிச்சயமா சொல்லப்போனா அவனைப் பார்த்து நான் பொறாமைபடும் குணங்கள் அவை. நான் எவ்வளவு சிரமப்பட்டும் என்னிடம் வராத குணங்கள் அவை.

படிப்பிலையும் அவன் ரொம்ப சுட்டி. நானும் நன்றாக படிப்பேன் என்றாலும் , அந்த படிப்பு நான் மிகவும் கஷ்டப்பட்டு கொண்டுவருவது. அவனுக்கு படிப்புமே ரொம்ப எளிதாக வரும். அவன் concept ஐ புரிந்துகொள்வதை பார்த்தால் அவ்வளவு அருமையாக இருக்கும். அவன் ஒரு விஷயத்தை படித்துவிட்டு அதை பற்றி சொல்லும்போது எனக்கெல்லாம் பலதடவை தோன்றும் நாமும் இதே புத்தகத்தைதானே படித்தோம், நமக்குப் தோன்றாதது அவனுக்கு மட்டும் எப்படி தோன்றியது என்று. கல்லூரி தேர்வு நாட்களில் என் கல்லூரி நண்பர்கள் , அவன் கல்லூரி நண்பர்கள் மற்றும் நான் உட்பட அனைவரும் அவனிடம் பாடங்களை கதை போல் கேட்டு விட்டு வேறு எதையும் refer பண்ணாமல் மிக எளிதாக தேர்வு எழுதுவோம். அந்த அளவிற்கு அவனால் concept ஐ நன்றாக புரிந்து கொள்வதோடு அதை எளிதாக மற்றவர்களுக்கும் புரியவைக்கவும் முடியும்.அவன் ஒருதடவை படித்ததை மறக்கவே மாட்டான். இந்த திறமையும் எங்களுடைய அப்பாவிடமிருந்தே அவனுக்கு வந்தது.

எனக்கு பலதடவை குழப்பமாக இருக்கும். அவன் hard worker ஆ இல்லையா என்று. சில நேரங்களில் பார்த்தால் ராப்பகலா படிப்பான். சில நேரங்களில் பார்த்தால் தேர்வு நேரத்தில் கூட படிக்காம ஜாலியா இருப்பான். அதே மாதிரிதான் இப்பொழுது அவன் வேலை செய்யும்போதும் நடக்கிறது. ஆனா நிச்சயமா அவன் hard work எல்லாம் பண்ண வேண்டிய தேவையே இல்லாதவன்.

அவனால் எல்லாரையும் அப்படியே ஏற்றுக்கொள்ள முடிகிறது. அவன் அனைவரையும் அவரவர் குணப்படியே அப்படியே ஏற்றுக்கொள்வான். அதனால் அவனால் அனைவரிடமும் இயல்பாக பழக முடிகிறது. நிச்சயமா என்னால் முடியாத குணங்களில் ஒன்று அது. நான் அவனிடமிருந்து இந்த குணத்தை ஏற்றுக்கொள்வதா வேண்டாமா என்று அதிகம் குழம்பும் விசயங்களில் இதுவும் ஒன்று. ஆனால் அவன் செய்யும் அனைத்து செயல்களையும் அவனால் முழுமனதாக செய்ய முடியும். முழுமனதாக ஏற்றுக் கொள்ளாததை அவனால் செய்ய முடியாது. அதேபோல் ஒரு செயலை செய்துவிட்டு இதை ஏன் செய்தோம் என்று அவன் என்றுமே வருத்தப்பட்டதில்லை. அவனைப் பொறுத்தவரை முடிந்து போனதைப் பற்றி கவலைப்படுவதில் பிரயோஜனமில்லை. அவன் செயலில் அவன் தெளிவாக இருப்பான்.
அவனுக்கு humor sense அதிகம். அவன் அதிகமாக எதை பற்றியுமே கவலைப்படாததற்கு இந்த குணமும் காரணம். அவன் அனைத்தையுமே take it easy ஆக எடுத்துக்கொள்வான். அவனால் எந்த ஒரு சூழ்நிலையும் மிக இயல்பாக மாற்ற முடியும்.

எங்கள் குடும்பத்தை பொறுத்தவரை சிவா என்றால் ரொம்ப பொறுப்பாளி. மது என்றால் ரொம்ப சுட்டி. ஆனால் அவன் அலுவலகத்தில் அவன் வேலையில் என்றுமே குறைவைத்ததில்லை. அவனை எப்பொழுதுமே அவன் manager களுக்கு ரொம்ப பிடிக்கும். அவன் ரொம்ப techi. அவன் அலுவலகத்தில் காட்டும் அதே அளவு பொறுப்புணர்வை வீட்டில் காட்டும் தேவை வரவில்லை என்று கூறலாம். ஆனால் அவன் எவ்வளவு பொறுப்பாளி, எவ்வளவு திறமையாக குடும்பத்தை கொண்டு செல்ல முடியும் என்பது கடந்த இரண்டு ஆண்டுகளில்தான் எங்கள் குடும்பத்துக்கு தெரிய வந்தது. எங்கள் குடும்பத்தினர் அனைவரையும் ஆச்சரியப்படுத்திய செயல் அது. எப்போதும் போல் இதையும் அவன் இயல்பாக, எளிதாக எதையும் அலட்டிக்கொள்ளாமல் செய்தான்.

பொதுவா என்னுடைய கல்லூரி நண்பர்களிடம் பேசும்போது நான் மதுட்ட இதை செய்ய சொன்னேன், அதை செய்ய சொன்னேன் என்று எதையாவது சொல்லிக் கொண்டே இருப்பேன். அதற்கு அவர்கள் ஆமாம்டா உனக்கு மதுனு ஒருத்தன் கிடச்சான். எல்லாத்துக்கும் அவனையே சொல்லு என்பார்கள். இப்பொழுது நினைக்கும்போது அவர்கள் சொல்லியது உண்மை. எனக்கு எல்லாவற்றிர்க்கும் மதுனு ஒருத்தன் கிடச்சான்.

சின்ன வயதிலிருந்து நான் அவனுக்குப் பண்ணியதைவிட அவன் எனக்கு பண்ணியது அதிகம். என்றைக்குமே அவன் எல்லாவற்றிலும் என்னை support பண்ணி இருக்கான். என்னுடைய உயர்வு தாழ்வு அனைத்திலும் அவன் என்னை support பண்ணி இருக்கான். சின்ன வயதிலிருந்து நான் அவனிடம் சண்டை போட்டாலும் அடுத்த நிமிடமே அவன் என்னிடம் இயல்பாக பேசுவான். என்னால் நிச்சயமாக சொல்லமுடியும் அவனுடனான என்னுடைய அனைத்து சண்டைகளுக்கும் காரணமாக இருந்தது நான்தான். அதையும் அவனால் எப்பொழுதுமே பொறுத்துக் கொள்ள முடிந்தது. என்னுடைய சண்டைகளை மிக இயல்பாக மறந்துவிட முடிந்தது. அவன் ரொம்ப பொறுமைசாலி கூட.

என்னை அதிகமாக விமர்சிப்பவனும் மதுதான், என்னை அதிகமாக ஆதரிப்பவனும் மதுதான்.

மது என்னை எந்த அளவிற்கு விரும்புகிறான், அவன் எந்த அளவிற்கு என் நலனில் அக்கறை கொண்டவன் , அவன் எந்த அளவிற்கு நான் நன்றாக வாழ வேண்டும் என்று நினைப்பவன் , அவன் எந்த அளவிற்கு என்னை support பண்ணுகிறான் என்பது இந்த இரண்டு ஆண்டுகளில் என்னால் மிக நன்றாக உணரமுடிந்தது.

என்னிடம் மதுவின் team lead உம் எனக்கும் மதுவுக்குமான பொது நண்பருமான சுபாஷ் சொன்னதை நான் என்றுமே மறக்கமாட்டேன். சுபாஷ் சொன்னார் "நான் எனக்கு மது மாதிரி ஒரு தம்பி இல்லையேன்னு பல நாள் வருத்தப்பட்டிருக்கேன். உனக்கு அவ்வளவு அருமையான தம்பி கிடச்சுருக்கான். அவன் மனசு கஷ்டப்படுரமாதிரி நடந்துக்காதேனு" சொன்னார். இதே மாதிரி இன்னொருத்தர் என்னிடம் "தம்பி உடையான் படைக்கு அஞ்சான் என்பார்கள் , அது போன்று உனக்கு மிக அருமையான தம்பி கிடைச்சுருக்கான்" என்றார்.

ராவணனின் பாதி பலம் அவன் தம்பி கும்பகர்ணனிடமிருந்தே வந்தது. அதே மாதிரி என்னுடைய பாதி பலம் மதுவிடமிருந்தே வருகிறது.

எனக்குத் தெரியும் மது , சமீபகாலமாக நான் உன் மனசு கஷ்டப்படுகிரமாதிரி நடந்து கொள்கிறேன். மது, நான் உன்னிடம் கேட்பது ஒன்றுதான், நான் உன் மனசை கஷ்டப்படுத்துற மாதிரி நடந்துக்கிட்டாலும் நீ என்னை விட்டு என்றும் பிரிந்து விடாதே. மது, எனக்கு நீ என்னைக்குமே வேண்டும்.

You are my brother. I love you my dear brother.

Happy Birthday My Dear Madu. Wish you many more happy returns of the day my dear.

P.S: Today is Madu's birthday .