இந்த வருட புத்தக கண்காட்சியில் நான் வாங்கிய புத்தகங்களில் ஒன்று கிழக்கு பதிப்பகத்தின் முகில் எழுதிய கிளியோபட்ரா . உலகை மயக்கிய எகிப்தின் பேரழகி. எனக்கு இந்த புத்தகம் முன்பே அறிமுகம் என்றிருந்தாலும் , முன்பெல்லாம் இதை வாங்க தயங்கினேன். ஏனென்றால் தனி மனிதர்களைப் பற்றி நாம் wikipedia விலேயே எளிதில் படித்துக்கொள்ளலாம் என்று எண்ணி இருந்தேன் . இருந்தாலும் இந்த வருடம் அதிக தடவை புறக்கணித்த புத்தகம் என்பதாலையே இதை வாங்கினேன். கிளியோபட்ரா உலகின் பேரழகியாக இருந்ததோடல்லாமல் உலகின் மிகச் சிறந்த இரண்டு வீரர்களான ஜூலியஸ் சீசர், மார்க் ஆண்டனியை மனதை கவர்ந்தவள் . அதனால் ரோம் சாம்ராஜ்ஜியம் மற்றும் எகிப்தின் வரலாற்றையே மாற்றியவள். கிளியோபட்ரா எகிப்தில் பிறந்ததால் கருப்பழகி என்றும் இல்லை இல்லை ரோம் வம்சத்தில் பிறந்ததால் வெள்ளை அழகியே என்றும் இரு வேறு கருத்து உண்டு. அழகை பற்றிய எண்ணம் காலத்திற்கு காலம் இடத்திற்கு இடம் மாறுபடும் தான். அவளுடைய சிலை மற்றும் அவள் உருவம் பொறித்த நாணயங்கள் அவள் மேல் பெரிய பிரமிப்பை ஏற்படுத்துவதில்லை. அவள் சற்று மூக்கு நீண்டவள்தான். இருந்தாலும் அவள் வாழ்ந்த காலத்தில் அவள் அழகு அனைவரையும் மயக்கியதுதான். ஏன் இன்றும் உலகின் மிகச்சிறந்த பேரழகியாக கருதப்படுபவள்தான். அதே நேரத்தில் அவள் அகந்தை கொண்டவளாகவும் அகங்காரம் கொண்டவளாகவும் தான் நினைத்ததை எப்படியும் சாதிக்கத் தெரிஞ்சவளாகவும் சித்தரிக்கப்படுகிறாள்.
ஆனால் இப்புத்தகம் அவளது கெட்ட குணங்களாக சித்தரிக்கப்படுவதை குறித்து எதுவும் பேசவில்லை. இந்த புத்தகத்தின் மூலம் அவள் மேல் நமக்கு மிகப்பெரிய மதிப்பும் ஒரு பரவச உணர்வும் அதற்கும் மேல் அவள் மேல் நமக்கும் காதல் ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை. அவள் இறக்கும் போது ஐயோ இவ்வளவு பெரிய பேரழகி இப்படி இறக்கிறாளே என்று ஆகப் பெரிய துக்கம் தோன்றுகிறது . இந்த புத்தகத்தின் முக்கிய அம்சம் இது கிளியோபட்ராவை பற்றி மட்டும் பேசாமல் அவள் காலத்தில் நிகழ்ந்த அனைத்து முக்கிய அம்சங்களையும் பற்றி பேசுகிறது. முக்கியமாக ஜூலியஸ் சீசர் மற்றும் மார்க் ஆண்டனி கிளியோபட்ரா மீது காதலில் வீழும் போது அதனால் ரோம் சாம்ராஜ்ஜியத்தில் ஏற்பட்ட மாற்றங்களையும் அவர்களின் குடும்பங்களில் ஏற்பட்ட குழப்பங்களையும் பற்றி விரிவாக பேசுகிறது.
இந்தப் பதிவின் நோக்கம் பேரழகி கிளியோபட்ராதான். கிளியோபட்ரா பற்றி பேசும் போது அவளை சுற்றி நடந்த சம்பவங்களையும் பேசாமல் இருக்க முடியாது. அதனாலையே கிளியோபட்ரா பற்றிய இந்த பதிவில் அவளைப் பற்றி மட்டுமல்லாமல் மற்றவர்களையும் பற்றி வருகிறது. இது சற்றே பெரிய பதிவு என்பதால் இதை இரண்டாகப் பிரிக்கிறேன். முதல் பாகம் கிளியோபட்ராவின் முதல் காதலன் சீசருடனும் , இரண்டாம் பாகம் கிளியோபட்ராவின் இரண்டாம் காதலன் மார்க் ஆண்டநியுடனும் உள்ளது .
மாவீரர் அலெக்ஸ்சான்டரின் முக்கிய தளபதிகளில் ஒருவர் முதலாம் தாலமி சோடர். அலெக்ஸ்சாண்டர் இறந்தபிறகு அவர் அலெக்ஸ்சாண்டரால் வெற்றி கொள்ளப்பட்ட எகிப்தை ஆள கவர்னராக நியமிக்கப்பட்டார். அங்கு கவர்னராக பொறுப்பேற்றுக்கொண்ட சில காலத்திற்கு பிறகு அவர் மாஸிடோனியாவிற்கு கட்டுப்படாத எகிப்தின் சுதந்திர ஆட்சியாளராக ஆனார். இது நடந்தது கிமு 305. எகிப்தின் புதிய தலைநகரம் அலெக்ஸ்சாண்டிரியா. அலெக்ஸ்சாண்டர் தான் வெற்றி கொண்ட நாட்டிலெல்லாம் ஒரு மிகப்பெரிய நகரை உருவாக்கி அதற்கு அலெக்ஸ்சாண்டிரியா என்று பெயரிட்டார். அப்படி உருவான நகரம்தான் இந்த அலெக்ஸ்சாண்டிரியா. இது நைல் நதியின் மேற்கு முகத்துவாரத்தில் அமைக்கப்பட்ட அழகான துறைமுக நகரம். தால்மி அலெக்ஸ்சாண்டிர்யாவில் மேலும் பல மாற்றங்களை ஏற்படுத்தி அதை உலகின் உன்னதமான நகரங்களில் ஒன்றாக மாற்றினார். தால்மி எகிப்தியர்களை கவர எகிப்திய பெண்ணை மணம் முடித்தார். எகிப்திய கடவுள்களை வணங்கினார். எகிப்திய கலாச்சாரத்தை போற்றினார் . தால்மிக்குப் பிறகு தால்மியின் வம்சத்தினர் அடுத்த 253 ஆண்டுகளுக்கு எகிப்தை ஆண்டனர். அந்த பரம்பரையில் வந்த கடைசி ஆட்சியாளர் ஏழாம் கிளியோபட்ரா. நம் பேரழகி கிளியோபட்ரா.
கிமு 58. எகிப்தின் அரசர் 12 ஆம் தால்மி. நம் கிளியோபட்ராவின் தந்தை. 12 ஆம் தால்மிக்கு எதிராக எகிப்தில் வன்முறை. பார்த்தார் ரோமுக்கு தப்பியோடிவிட்டார். அவருக்கு மொத்தம் ஆறு குழந்தைகள். ஆறாம் கிளியோபட்ரா , நான்காம் பெரினைஸ் , ஏழாம் கிளியோபட்ரா , நான்காம் அர்சினோ , 13 ஆம் தால்மி , 14 ஆம் தால்மி . நான்காம் பெரினைஸ் தந்தைக்குப் பிறகு ஆட்சியை கைபற்ற எண்ணினார். அப்பொழுது மகன்களான 13 ஆம் தால்மி , 14 ஆம் தால்மி சிறுவர்கள். அப்பொழுது எகிப்தில் அரசன் அரசியாக இருந்தால் மட்டுமே எகிப்தை ஆள முடியும் . அப்பொழுது எகிப்தில் சகோதரனும் சகோதரியும் திருமணம் செய்து கொள்வது வழக்கம். காரணம் எகிப்தியர்களின் கடவுளின் தாயான ஐசிஸ் தன் சொந்த சகோதரனான ஆஸிரிஸை திருமணம் செய்து கொண்டாள். பார்த்தாள் பெரினைஸ் சிறுவர்களான தன் சகோதர்களை திருமணம் செய்து கொள்ள முடியாது . வெளியிலிருந்து மாப்பிளை தேடி திருமணம் செய்துகொண்டாள். ரோம் தப்பிச் சென்ற 12 ஆம் தால்மி ரோமானியர்களின் உதவியைப் பெற்றார். ஒரு பெரிய ரோமானிய படை எகிப்தின் மீது படையெடுத்து அதை கைபற்றியது . மீண்டும் 12 ஆம் தால்மி அரசரானார். மகள் பெரினைஸ் கொல்லப்பட்டாள். இங்கு கவனிக்க வேண்டிய முக்கிய அம்சம் எகிப்தை கைபற்றிய ரோமானிய படைகளின் துணைத்தளபதி மார்க் ஆண்டனி !.
12 ஆம் தால்மிக்கு வயதாகிவிட்டது. அவர் தனக்குப் பிறகு இருந்தவர்களில் மூத்தவளான நம் கிளியோபட்ராவுக்கு முடிசூட்ட எண்ணினார் . எகிப்தில் அரச அரசிதான் அரசாள முடியுமே அதனால் தன் மகன் 11 வயது 13 ஆம் தால்மிக்கும் 18 வயது மகள் நம் கிளியோபட்ராவுக்கும் மணம் முடித்தார். கிளியோபட்ரா அரசியானார். 12 ஆம் தால்மியின் நெருங்கிய நண்பராக போதினஸ் என்னும் திருநங்கை இருந்தார். அவருக்கு நம் கிளியோபட்ரா அரசியானது பிடிக்கவில்லை. அதனால் 13 ஆம் தால்மியை தூண்டி கலகத்தை ஏற்படுத்தினார். உயிருக்கு பயந்த நம் கிளியோபட்ரா அங்கிருந்து தப்பினார்.
நம் பேரழகி கிளியோபட்ரா தினமும் குளிப்பது கழுதைப் பாலில்தான் . தினமும் ஆலிவ் எண்ணெய் தேய்த்து குளிப்பார். தன் அழகை மெருகூட்ட மருதாணியைப் பயன்படுத்தினார். முகத்துக்கு இயற்கை க்ரீம் , கண்ணுக்கு மை , உதட்டுக்குச் சாயம் , முகப் பொலிவுக்கு பூச்சுகள் , வாசனைக்கு திரவியங்கள் இப்படி எல்லாமே உபயோகப்படுத்தினாள். அவளுக்கு நகைகள் மீது மிகப் பெரிய பிரியம் . கை , கால் , கழுத்து அனைத்துக்கும் தங்க நகைகள். உடை ரோம் கிரேக்க ராஜ குடும்ப பாணியில் . பட்டுத்துணியால் ஆன உள் அங்கி , பின் இடுப்புக் கயிறு, அதற்கு மேல் பெரிய ஆளுயர அங்கி. அவை பல வண்ணங்களில் இருந்தன. கிளியோபட்ராவுக்கு தான் உயரம் குறைவானவள் என்று எண்ணம் . அரண்மனைக்குள் வெறும் காலுடன் நடக்கும் நம் பேரழகி வெளியில் செல்லும் போது குதிங்கால் உயர்ந்த செருப்புகளை அணிந்தாள். தால்மி தன் பெண் மக்கள் உட்பட அனைவரையும் படிக்க வைத்தார். நம் கிளியோபட்ராவுக்கு தத்துவம் , கணிதம் , மருத்துவம் ,கலை, இலக்கியம் , இசை சம்பந்தப்பட்ட பாடங்களில் அதிக ஈடுபாடு . அவளுக்கு எகிப்தியன், அரமைக், எத்தியோபியன்,கிரீக், ஹீப்ரு மற்றும் லத்தீன் ஆகிய ஆறு மொழிகள் தெரியும் .இந்த அழகும் அறிவும் ஒருவருக்காக காத்திருந்தன. அது மாவீரர் ஜூலியஸ் சீசர் !.
அப்பொழுது ரோம் சாம்ராஜ்ஜியம் குடியரசு. அங்கு தேர்ந்தெடுக்கப்பட்ட செனட் சபை இருந்தது. அப்பொழுது ரோமில் இரண்டு பேர் அதிகாரம் மிகுந்தவர்கள் . ஒருவர் ஜூலியஸ் சீசர் . மற்றொருவர் போம்பே . போம்பே சீசரின் மருமகன் தான் . ஆனால் இருவருக்கும் அதிகாரப்போட்டி. சீசர் பல போர்களில் பங்கேற்று போர் பயிற்சி பெற்றவர். ஆனால் போம்பேவோ செனட்டில் அதிகாரம் மிகுந்தவர். இருவருக்கும் ஏற்பட்ட போரில் போம்பே தப்பி 13 ஆம் தால்மியிடம் சரணடைந்தார் . அங்கு அவர் போதினேஸ்ஸால் படுகொலை செய்யபட்டார். காரணம் சீசரின் ஆதரவைப் பெறுவது. இது அறியாமல் அலெக்ஸ்சாண்டிரியா அடைந்த சீசரிடம் பரிசாக போம்பேயின் தலை ஒப்படைக்கப்பட்டது. அதிர்ச்சியடைந்த சீசர் அவர் உடலை மரியாதையுடன் அடக்கம் செய்யச் சொன்னார்.
தப்பிச் சென்ற நம் பேரழகி சீசரின் உதவியைப் பெற்றால் தான் மீண்டும் அரசியாக முடியும் என்று எண்ணி அலெக்ஸ்சாண்டிரியாவை ரகசியமாக அடைந்தார். கிளியோபட்ராவின் உதவியாளன் ஒரு போர்வையில் சுற்றிய பரிசுடன் சீசரை தனிமையில் சந்தித்தான். சீசர் அது என்ன என்று கேட்ட போது அவன் அதை உருட்டி விட்டான் . உருண்டு வந்தது நம் பேரழகி, நிர்வாணமாக !. நீள் வட்ட முகம் , நீள நீல கண்கள் , வளமான புருவம் , வளைவில் மிளிரும் நாசி , வில்வடிவ மேலுதடு , விளைந்த கனியாக கன்னங்கள் , இளமை மிதக்கும் பார்வை , செதுக்கிய கரங்கள் , சிற்றிடை வளைவுகள் , செழுமை கொண்ட அங்கங்கள் , மினுமினுக்கும் சருமம் , மிதமிஞ்சிய பேரழகு. நம் பேரழகியின் அழகில் சீசர் விக்கித்துதான் போய் விட்டார். கீழே விழுந்த பெண்ணை கை பிடித்து தூக்கக் கூடாதா என்று நம் பேரழகி கேட்டவுடன்தான் சீசருக்கு நினைவு திரும்பியது. அதுவரை போதிநேச்சை ஆதரித்த சீசர் நம் பேரழகியின் வலையில் விழுந்து விட்டார் . அந்த கணமே கிளியோபட்ராவுக்காக எதையும் செய்ய துணிந்தார்.
போதிநேச்சுக்கு சீசர் கிளியோபட்ரா பக்கம் சாய்ந்துவிட்டார் என்பது தெரிந்துவிட்டது. ஆகவே சீசரை அலெக்ஸ்சாண்டிரியாவிலேயே வைத்து கொன்றோ அல்லது கைது செய்தோ விடவேண்டும் என்று போதினேஸ் படை திரட்ட ஆரம்பித்தார். இதையடுத்து போதினேஸ் கொல்லப்பட்டார். சீசரிடமும் படை பெரிய அளவில் இல்லை. 13 ஆம் தால்மியிடமும் படை பெரிய அளவில் இல்லை. எகிப்திய படைகள் வெகு தொலைவில் இருந்தன. அந்த படைகள் போதினேசின் துணை தளபதி அக்கிலிஸ் தலைமையில் இருந்தது. போதினேஸ் கொல்லப்பட்டபிறகு 13 ஆம் தால்மியும், அர்சினோவும் வெளியேறி அக்கிலிசிடம் அடைந்தனர். இப்படை பிறகு சீசரால் வீழ்த்தப்பட்டது. சீசர் தன் காதலியின் காலடியில் எகிப்தை வைத்தார். சீக்கிரத்திலேயே கிளியோபட்ரா நல்ல செய்தி சொன்னாள். சீசருக்கும் கிளியோபட்ராவுக்கும் ஆண் குழந்தை பிறந்தது. பெயர் 15 ஆம் தால்மி சீசர். செல்லமாக சீசரியன் (Little Caesar).
சீசருக்கு சீசரியன் தவிர வேற ஆண் வாரிசு இல்லை . கிளியோபட்ராவுக்கு சீசரியனை சீசர் தன் வாரிசாக அறிவிக்க வேண்டும் என்று ஆசை. சீசருக்கும் ஆசைதான். ஆனால் கிளியோபட்ரா சீசரின் காதலியாக இருப்பதற்கே ரோமில் எதிர்ப்பு கிளம்பியிருந்தது . மேலும் எகிப்தியர்களுக்கும் சீசர் கிளியோபட்ரா உறவு பிடிக்கவில்லை. மேலும் ரோமிலிருந்து சீசரை தேடி ஆள் மேல் ஆள் வந்து கொண்டிருந்தார்கள். சீசருக்கு ரோம் கிளம்பவேண்டிய கட்டாயம். கிளியோபட்ராவுக்கு விருப்பமே இல்லை. அழுது அடம் பிடித்தாள். சீசருக்கு அவளை சமாதானப்படுத்துவதே பெரும்பாடாக இருந்தது. ஒருவழியாக சீசர் ரோம் கிளம்பினார்.
சீசருக்கு ரோம் சாம்ராஜ்ஜியத்தின் பேரரசராகவேண்டும் என்பது பெரும் கனவு. கவனிக்கவும் ரோம் அப்பொழுது குடியரசு. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட செனட் நாட்டை ஆண்டது . ரோமை அடைந்த சீசர், தான் பேரரசராக நடவடிக்கைகளை மேற்கொண்டார். செனட்டில் பெரும் எதிர்ப்பு . மேலும் சீசருக்கு கிளியோபட்ராவை பிரிந்திருக்கவும் முடியவில்லை . ஆள் அனுப்பி நம் கிளியோபட்ராவை ரோம் வரவழைத்தார். ரோம் மக்களும் கிளியோபட்ராவின் அழகை பார்த்து வாய் பிளந்தது உண்மை . கிளியோபட்ரா வரும் போது சீசரினையும் கூட்டி வந்திருந்தாள் .
சீசர் அன்று செனட் கிளம்பினார். அன்று அவர் அரசராவது குறித்து செனட்டில் முடிவெடுக்கப்பட இருந்தது . கிளியோபட்ரா ஏதோ கெட்ட சகுனம் கண்டு அவரை செனட் செல்ல வேண்டாம் என்று அழுது அடம்பண்ணினாள். சீசர் அவளை சமாதானம் பண்ணி செனட் கிளம்பினார். செனட்டில் காலடி எடுத்துவைத்தார். ப்ரூட்டசும் (you too brutus புகழ் ) செனட் வந்திருந்தார் . அவரும் செனட் உறுப்பினர். ப்ரூடச்சும் மற்ற செனட் உறுப்பினர்களும் சேர்ந்து தங்கள் அங்கியில் மறைத்து வைத்திருந்த கத்தி கொண்டு சீசரை குத்தினர் . நோக்கம் ரோம் குடியாட்ச்சியை காப்பாற்றுவது. மொத்தம் 23 குத்துகள். சீசர் இறந்தார். கிளியோபட்ராவுக்கு ஆற்ற மாற்றாத துக்கம் . சீசரின் உடலை பார்க்க எண்ணினாள் . இருந்தும் தன் பாதுகாப்பு கருதி தன் மகன் சீசரினுடன் ரோமிலிருந்து வெளியேறினாள். சீசரின் உடல் தகனம் செய்யப்பட்டது. கேள்விப்பட்ட கிளியோபட்ரா தன்னிடம் அவர் உடலை ஒப்படைத்திருந்தால் சீசருக்கு தான் எகிப்தில் ஒரு பிரமிடு கட்டி இருப்பேன் என்றாள்.
Friday, January 28, 2011
கிளியோபட்ரா - 1
Subscribe to:
Posts (Atom)