தமிழக வரலாற்றை எடுத்துப் பார்த்தால் எப்பொழுதும் சேர, சோழ மற்றும் பாண்டிய மூவேந்தர்களைப் பற்றிதான் இருக்கும். இத்தனைக்கும் தமிழகத்தின் வடபகுதியை சிறப்பாக ஆண்ட, சிற்பக் கலையில் புரட்சி செய்த , மேலும் தங்களைப் பற்றி நிறைய குறிப்புகளை விட்டுச் சென்ற பல்லவர்களையே மூவேந்தர்களுடன் குறிப்பிடாமல் தனியாகத்தான் குறிப்பிடுவார்கள். இந்த நாலவரைத் தவிர இன்னொரு அரசும் உள்ளது. அதுதான் அதிகம் மறக்கப்பட்ட களப்பிரர்கள். களப்பிரர்கள் தமிழகத்தை கிபி 3 ஆம் நூற்றாண்டிலிருந்து கிபி 6 ஆம் நூற்றாண்டு வரை ஆண்டவர்கள். தமிழகம் என்றால் சேர, சோழ மற்றும் பாண்டிய மூவேந்தர்களையும் வென்று தமிழகம் மற்றும் இன்றைய கேரள பகுதிகளை ஆண்டனர் ( முற்காலத்தில் தமிழகம் என்றால் அது கேரளாவையும் சேர்த்துதான். மலையாளம் என்ற மொழி உருவானதே கிபி 12 ஆம் நூற்றாண்டில்தான். அதுவரை கேரளாவிலும் பேசப்பட்ட மொழி தமிழ்தான்.).
களப்பிரர்கள் புத்த மற்றும் ஜைன மதத்தை சார்ந்தவர்கள் என்று குறிப்பிடப்படுகிறது. அவர்கள் காலத்தில் செழித்து வளர்ந்த மதங்கள் புத்தமும் , ஜைனமும் ஆகும். அவர்கள் ஹிந்து மதத்தையும் ஆதரித்தனர் என்றும் கூறப்படுகிறது ஆனால் அது நடந்தது அவர்களின் இறுதி காலத்தில்தான். ஆனால் அவர்கள் சமஸ்கிரதத்தை ஆதரிக்கவில்லை. அவர்கள் காலத்தில் பிராமணர்களுக்கு வழங்கப்பட்ட நில தானங்களை தடுத்து நிறுத்தினர். இதனாலையே அவர்கள் ஹிந்து மதத்தை ஆதரிக்கவில்லை என்றும் ஒரு கருத்து உண்டு. அவர்கள் கன்னட பகுதிகளிலிருந்து வந்தவர்கள் என்று எண்ணப்படுகிறது . ஆனால் அவர்கள் மொழி தமிழ் என்றே பெரும்பாலும் நம்பப்படுகிறது. அவர்கள் காவேரிப்பட்டணத்தை தலைநகராகக் கொண்டு ஆண்டனர்.
களப்பிரர்களைப் பற்றி பெரிய குறிப்புகள் எதுவும் வரலாற்றில் கிடையாது. அவர்கள் தங்களைப் பற்றி எந்த ஒரு பட்டயங்களையோ, கல்வெட்டுகளையோ விட்டுச் செல்லவில்லை. கிட்டத்தட்ட முன்னூறு ஆண்டுகள் தமிழகத்தை ஆண்டவர்கள் பற்றி எந்த ஒரு குறிப்பும் கிடையாது. 300 ஆண்டுகள் ஆண்ட அரசர்களைப் பற்றியும் குறிப்புகள் கிடையாது. அவர்களைப் பற்றி அறிய உதவும் குறிப்புகள் புத்த மற்றும் ஜைன சமய இலக்கியங்களே. அவையும் பெரிதாக இல்லை. தமிழின் ஐம்பெரும் காப்பியங்களான சீவகசிந்தாமணி, குண்டலகேசி இவர்கள் காலத்திலேயே இயற்றப்பட்டன. இதே போல் பதினென்கீழ்கணக்கு (Eighteen minor works) இவர்கள் காலத்திலேயே இயற்றப்பட்டன.
களப்பிரர்களின் காலம் தமிழகத்தின் இருண்ட காலம் என்று குறிப்பிடப்படுகிறது. அதற்க்கு கீழ்வரும் காரணங்களை நாம் எடுத்துக் கொள்ளலாம்.
1. களப்பிரர்கள் தங்களைப் பற்றி எந்த ஒரு குறிப்புகளும் விட்டுச் செல்லவில்லை. அவர்கள் காலத்திய செப்பேடுகள், கல்வெட்டுகள் இல்லை. இவர்களின் காலத்தில் தமிழகத்தைப் பற்றியே குறிப்புகள் இல்லை எனலாம். இப்படி தங்களைப் பற்றி எந்த ஒரு குறிப்புகளையும் விட்டுச் செல்லாதாலையே அதனை இருண்டகாலம் என்கின்றனர் .
2. தமிழகத்தை ஆண்ட மன்னர்கள் (சேர, சோழ , பாண்டிய மற்றும் பல்லவர்கள்) சைவர்களாகவோ, வைணவர்களாகவோ இருந்தனர். அவர்கள் காலத்தில் பிராமணர்களுக்கு நில தானங்கள் வழங்கப்பட்டன. ஆனால் களப்பிரர்கள் பெரும்பாலும் புத்த , ஜைன மதத்தை ஆதரித்தனர் என்று நம்பப்படுகிறது. அவர்கள் சமஸ்கிரதத்தை ஆதரிக்கவில்லை. மேலும் பிராமணர்களுக்கு வழங்கிய நிலதானத்தை தடுத்து நிறுத்தினர். இப்படி ஹிந்து மதத்தினருக்கு எதிராக, இதற்க்கு முந்திய அரசர்களின் இயல்புக்கு மாறாக செயல்பட்டதால் அவர்களின் காலம் பிற்காலத்தில் வந்தோர்களால் இருண்ட காலம் எனப்பட்டது.
3. களப்பிரர்கள் ஒரு சாராரால் வடமேற்கே கர்நாடகத்திலிருந்து வந்ததாக கூறப்படுகிறது. இப்படி தமிழகம் வடமேற்கிலிருந்து வந்தவர்களால் ஆளப்பட்டதால் அதனை இருண்ட காலம் என்றும் கூறலாம். ஆனால் இந்த கூற்றை அதிகம் ஏற்கமுடியாது. ஏனென்றால் களப்பிரர்கள் மொழி தமிழ் மொழியே ஆகும் . இப்படி தமிழகம் தமிழர்களாலே ஆளப்பட்டது ஒன்றும் தவறல்ல. கன்னடம் என்ற மொழி உருவானதே கிபி 10 ஆம் நூற்றாண்டில்தான்.
4. ஒரு குறிப்பிட்ட காலம் பொற்காலம் என்பதற்கு அந்த காலத்தில் போர் ஏதுமின்றி, அரசியல் குழப்பம் இன்றி நாட்டில் அமைதி நிலவவேண்டும். அக்காலகட்டத்தில் கலை, சிற்பம், ஓவியம், மொழி போன்றவை நன்கு வளரவேண்டும். மக்கள் அமைதியாக வாழவேண்டும். இவையே பொற்காலம் என்று குறிப்பிட காரணிகள் ஆகும். களப்பிரர்கள் காலத்தில் நாட்டில் போர் நடைபெற்றதா, அரசியல் குழப்பம் எதுவும் இருந்ததா, மக்கள் அமைதியுடன் வாழ்ந்தனரா என்பதற்கு ஆதாரங்கள் இல்லை. இரண்டு, அவர்கள் பல்லவர்களைப் போன்று சிற்பக்கலையையோ, சோழர்களைப் போன்று கட்டடக் கலையையோ வளர்த்ததற்கு எந்த ஒரு சின்னங்களும் இல்லை. அவர்கள் காலத்தில் சீவகசிந்தாமணி, குண்டலகேசி மற்றும் பதினென்கீழ்கணக்கு இயற்றப்பட்டன என்றாலும் அதனை மன்னர்கள் ஆதரித்தனரா என்பதற்கு ஆதாரங்கள் இல்லை . இத்தகைய காரணங்களாலே களப்பிரர்களின் காலம் இருண்ட காலம் எனப்பட்டது எனலாம்.
களப்பிரர்கள் சைவ சமயத்தை ஏற்றுக்கொண்டனர். ஆனால் அது நடந்தது அவர்களின் இறுதிக் காலத்தில்தான். களப்பிரர்கள் பாண்டியன் கொடுங்கன் பாண்டியனாலும் , சிம்ஹவிஷ்ணு பல்லவனாலும் மற்றும் சாளுக்கியர்களாலும் கிபி 7 மற்றும் 8 ஆம் நூற்றாண்டில் தோற்கடிக்கப்பட்டனர். தஞ்சை மற்றும் புதுக்கோட்டையை கிபி 8 ஆம் நூற்றாண்டிலிருந்து 11 ஆம் நூற்றாண்டு வரை ஆண்ட முத்தரையர்கள் களப்பிரர்களின் சந்ததியினர் என்று நம்பப்படுகிறது.
Thursday, September 30, 2010
களப்பிரர்கள்
Tuesday, September 28, 2010
101*
ஓடிவிட்டது நூறு பதிவுகள், அதில் கால் பங்கு பின் தொடர்வோர், ஒரு வருடம் । நினைத்துப் பார்க்கவே மிக சந்தோசமாக இருக்கிறது. இந்த பதிவுலகம் மிக புதுமையானது எனக்கு. இது தந்த அங்கீகாரம் நான் என்றும் பெற விரும்புவது. ஒரு வலைப்பூ தொடங்கவேண்டும் என்ற நினைப்பு எனக்கு ரொம்ப காலமாகவே உண்டு. ஆனாலும் பதிவை எப்படி ஆரம்பிப்பது, எந்த மொழியில் ஆரம்பிப்பது, அதன் நோக்கம் என்ன என்பதிலேயே பல காலங்களை கழித்துவிட்டேன். முதலில் என் பதிவிற்கு ஒரு நல்ல பெயர் வைக்கவேண்டும் என்பதிலேயே பல மாதங்கள் கழிந்தது. பிறகு போன வருடம் எனக்கு ஒரு மாறுதல் தேவைப்பட்டது.
ஆகவே போன வருடம் ஆகஸ்டு மாதம் ஒரு நல்ல நாளில் பதிவை ஆரம்பித்தேன். அது எனக்குப் பிடித்த உயிரியலில் இருந்தது. அது cheetah வை பற்றிய ஒரு பதிவு. அது ஆங்கிலத்தில் இருந்தது. பதிவு தொடங்கிய பொழுது, என் பதிவின் நோக்கம் என் ஆங்கில அறிவை வளர்த்துக் கொள்ளவேண்டும் என்பதும் அதில் ஒன்று . ஆகவே என் முதல் பதிவை ஆங்கிலத்தில் ஆரம்பித்தேன். என் ஆங்கில பதிவுகளுக்கு proof reader ஆக இருந்தவர் என் அலுவலகத்தில் பணி புரியும் ஜோதி. அப்பொழுதுதான் jdk எனக்கு போன் பண்ணி இருந்தான் . அவனிடம் நான் பதிவு ஒன்று ஆரம்பித்திருப்பதாகவும் அதனை பார்க்குமாறும் கூறினேன் . அவனிடமிருந்து பாராட்டு வரும் என்று ஆவலுடன் எதிர்பார்த்த எனக்கு ஏமாற்றமே மிஞ்சியது. பதிவை படித்தவன் போன் பண்ணி திட்டினான் . என்னடா தமிழ்ல எழுதாம ஆங்கிலத்துல எழுதிருக்கனு. நான் எதிர்பார்த்தபடி என் முதல் பதிவிற்கு எந்த ஒரு பின்னூட்டமும் வரவில்லை. என்னுடைய இரண்டாவது பதிவிற்கே பின்னூட்டம் வந்தது . அந்தபின்னோட்டத்தை அளித்தவர் என் ஆருயிர் நண்பன் அதே jdk.
பின்னர் சென்ற ஆகஸ்டு மாதம் ஒரு டாக்டரை சந்தித்தேன். அவர் ஒரு மிகச் சிறந்த மருத்துவர் மட்டுமல்லாமல் ஒரு சிறந்த தமிழ் பேச்சாளார். பேச்சாளர் என்பது நான் ஒன்றும் மேடைப் பேச்சை எண்ணிக் கூறவில்லை. அவருடைய தமிழ் மொழி உச்சரிப்பு அவ்வளவு அருமையாக இருந்தது. அப்பொழுதுதான் எனக்குத் தோன்றியது இவ்வளவு அருமையான மொழியான தாய் மொழியாம் தமிழ் மொழியை விட்டு விட்டு ஆங்கிலத்தில் எழுதுகிறோமே என்று. பின்னர் செப்டெம்பர் மாதம் கிட்டத்தட்ட இதே கருத்தில் நான் ஏன் தமிழ் மொழியில் பதிவை எழுதப் போகிறேன் என்று ஒரு பதிவை எழுதினேன் . அதில் நான் இனி தமிழில் பதிவுகளை எழுதப் போகிறேன் என்றும் மேலும் ஆங்கிலத்திலும் எழுதுவேன் என்றும் கூறி இருந்தேன். ஆனால் பின்னர் என்னால் ஆங்கிலத்தில் என் பதிவுகளை எழுத முடியாமல் போய்விட்டது. பின்னர் ஆங்கிலத்தில் பதிவு எழுதாததிற்கு வேண்டுமென்றால் ஆங்கிலத்திற்கு என்று தனி வலைப்பூ தொடங்கிக் கொள்ளலாம் என்று என்னை சமாதானப்படுத்திக் கொண்டேன். ஆனால் அது இன்று வரை நிறைவேறவில்லை :-( . என்னுடைய பதிவுகளை தமிழில் எழுத ஆரம்பித்ததில் ஜோதிக்கு ரொம்ப வருத்தம்தான். ஏனென்றால் அவருக்கு தமிழ் படிக்கத் தெரியாது :-(
பின்னர் தமிழிலேயே பதிவுகளை எழுத ஆரம்பித்தேன். அதற்க்கு முக்கிய காரணம் jdk யும் கூட. முதலில் என்னுடைய பதிவில் வரலாறு மற்றும் தினசரி செய்திகள் பற்றிய பதிவுகளே அதிகம் இருக்கப் போகிறது என்று எண்ணி இருந்தேன். ஏனென்றால் அவையே நான் அதிகம் வாசிப்பவை. ஆனால் என்னுடைய பதிவுகளில் அதிகம் என்னுடைய அன்றாட அனுபவங்களும் படைப்புகளும் அதிகம் இடம் பெற்றதில் எனக்கு மகிழ்ச்சிதான் ;-). மேலும் சில சிறுகதைகள் எழுதவும் முயற்சி செய்தேன். ஒன்றிரண்டு எழுதவும் செய்தேன். ஆனால் என்ன அவை எல்லாம் மௌன ராகம் based ஆன மாதிரி இருந்தது. அதான் அதற்கடுத்து வேறு சிறுகதைகள் எழுதவில்லை. ஒரு பதிவாளனின் எழுத்து எதையுமே நேர்த்தியாக சொல்லுவதில்தான் இருக்கிறது. அப்படி இல்லாவிட்டால் அது வெறும் செய்தி ஆகிவிடும். செய்திகளை தினசரி பத்திரிக்கைகளை பார்த்து தெரிந்து கொள்ளலாம் .
என்னுடைய வலைப்பூவை முதலில் என் நண்பர்களுக்கே அறிமுகப்படுத்தி இருந்தேன். என்னுடைய முதல் followers உம் அவர்கள்தான். முதல் பின்னூட்டம் இட்டவர்களும் அவர்கள்தான் . ஒவ்வொரு தடவையும் பதிவை எழுதிவிட்டு அதை யாராவது வந்து பார்க்க மாட்டார்களா, பின்னூட்டம் இடமாட்டார்களா என்று ஆவலுடன் எதிர்பார்த்திருப்பேன் . நானாக என் நண்பர்களிடம் கூறவும்மாட்டேன், அவர்களே அறிந்து பின்னூட்டம் இட வேண்டும் என்று எண்ணுவேன். அப்பொழுது என்னுடைய பதிவுகளை திரட்டிகளில் இணைக்க அதிகம் தயங்கினேன். பின்னர் jdk இன் பேச்சைக் கேட்டே தமிழிஷில் இணைத்தேன்
என்னுடைய பதிவுகளை பிரபலப்படுத்துவதில் என்னை விட என் நண்பன் jdk யே அதிகம் ஆர்வம் கொண்டான் . அவனுடைய யோசனைப்படியே என் பதிவை தமிழிஷில் இணைத்தேன் . JDK, அவனுடைய twitter account இல் எல்லாம் என்னுடைய வலைப்பூ முகவரியையே அவனுடைய முகவரியாக கொடுத்திருப்பான். பெரும்பாலும் என்னுடைய பதிவின் முதல் பின்னூட்டம் அவனுடையதாகவே இருக்கும். எனக்கு பிற வலைப்பதிவர்களை அறிமுகப்படுத்தியதே jdk தான். நான் பிற பிரபல பதிவர்களின் பதிவுகளில் பின்னூட்டம் எதுவும் இடுவதில்லை என்று என்னை அதிகம் கடிந்து கொள்வான். அப்படி பின்னூட்டம் இட்டால்தான் அதிக வாசகர்களை சென்றடைய முடியும் என்பது அவன் எண்ணம். இப்படி என்னுடைய பதிவைப் பற்றி என்னைவிட அதிகம் அக்கறை எடுத்துக்கொள்வது அவன்தான். மிக்க நன்றி நண்பா.
ஒவ்வொரு தடவையும் பதிவை இட்ட பிறகு அதை யாராவது வந்து பார்த்திருக்கிறார்களா, counter கூடி இருக்கிறதா, பின்னூட்டங்கள் எதுவும் வந்திருக்கிறதா என்று பார்ப்பதில் என் ஆர்வம் அதிகமாகியது. இப்பொழுது யாராவது உன்னுடைய மிகப்பெரிய சந்தோசம் எது என்று கேட்டால், பின்னூட்டத்தின் வரவால் என் mail box இல் "blogspot" எனும் folder, bold ஆவதே என்னுடைய மிகப் பெரிய சந்தோசம் என்பேன். பொண்ணுங்களை sight அடிப்பதைவிடவும் அதிக சந்தோசம் தருவது இதுவே ;-). எப்பொழுதுமே நம்முடைய படைப்புகள் அங்கீகாரம் பெறும்போது கிடைக்கும் மகிழ்ச்சி வேறு எதுவும் இல்லை. நான் அதிகம் நினைப்பது உண்டு இப்பொழுது கடவுள் வந்து என்னிடம் உனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்டால் நாம் என்ன கேட்பது என்று . இப்பொழுது நான் கூறுவேன், உயிர் வாழத் தேவையான இருப்புகளையும் மீறி நான் அந்தக் கடவுளிடம் இந்த அகண்ட பெரிய வலைவெளியில் ஒரு சிலருக்கேனும் என்னை ஆதர்ச எழுத்தாளனாக ஆக்கு என்று கேட்டுவிடுவேனோ என்று பயமாக இருக்கு .
இப்பொழுதெல்லாம் ஏனோ தெரியவில்லை அதிக கனவுகள் வருகிறது. அவை மிக சுவாரசியமாகவும் இருக்கின்றன. அப்படிக் கனவுகள் வரும்போது அந்தக் கனவின் ஊடே நான் நினைத்துக் கொள்வேன் ஆகா இன்று பதிவு போட மிக சுவாரசியமான விஷயம் கிடைத்து விட்டது என்று. ஆனால் விடிந்தெழுந்து பார்த்தால் அந்தக் கனவின் எச்சங்கள் கூட மீதி இருப்பத்தில்லை. இப்படி எதையும் பதிவு போடவேண்டும் என்ற நோக்கில் பார்க்க ஆரம்பித்தேன்.
கடந்த ஒரு வருடங்களாக என்னுடைய எழுத்தை படிப்பவர்களுக்கும் , என்னை இந்தப் பெரிய வலைவெளியில் பின் தொடர்பவர்களுக்கும் , என்னுடைய வலைப்பூவைப் பற்றி ஆரோக்கியமான விமர்சனம் தரும் நண்பர்களுக்கும், என்னைத் தெரிந்தோ தெரியாமலோ இவ்வலைவெளியை அடைந்து வாசிப்பவர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.
Saturday, September 25, 2010
My Dad My Love
அப்பா நீங்கள் எங்கள் கரம் பற்றி அழைத்துச் சென்ற தூரம் மிகக் குறைவே. நீங்களும் நாங்களும் சேர்ந்து இருந்த நாட்களே மிகக் குறைவுதானே. அதிலும் பாதி நாங்கள் ஒன்றும் அறியாத சிறு பிராயமே. எங்களுடன் நீங்கள் கழிக்க காலம் மிகக் குறைவாகவே இருந்தது. பின் வரும் காலத்தை முன்னிட்டே விதியானது எங்களை அப்படி பழக்கியதோ. தெரியவில்லை. என்னுடைய பிடிவாதத்தை தாங்கக் கூடிய பொறுமை உங்களிடம் மட்டுமே இருந்தது. நீங்கள் எங்களை எந்த ஒரு பிரச்சினையையும் அதன் முழு பரிமாணத்தை அறிந்து தீர்வு காண விழைவீர்கள். ஆனால் எனக்கோ அவ்வளவு பொறுமை இருக்காது. எனக்கு எப்பொழுதும் பிரச்சினையை தீர்க்க அவசரத் தீர்வே தேவைப்பட்டது. அதையும் பொறுத்து தீர்வு காணக்கூடிய திறமை உங்களுக்கே இருந்தது.
நீங்கள் நீங்களாகவே இருந்தீர்கள். உங்களைப் பார்த்தே நாங்கள் கற்றுக்கொண்டோம் . முழுவதும் உங்களை அறிய எங்களுக்கு காலமும் போதவில்லை வயசும் போதவில்லை. இன்று நான் உங்களை முழுதும் புரிந்து கொண்டிருக்கிறேன் அப்பா. எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது என் சிறு பிராயத்தில் நீங்கள் அருகில் இல்லாத அந்த காலங்களில் இனம் தெரியாத பயம் வரும் போது நீங்கள் துவட்டி விட்டுச் சென்ற துண்டை முகர்ந்து உங்கள் வாசம் அறிந்து தைரியம் கொண்டிரிக்கிறேன். இன்று பயம் தெளிய நீங்களும் இல்லை உங்கள் வாசமும் இல்லை . உங்களை போல உங்கள் வாசமும் காற்றுடன் கரைந்துவிட்டது.
இன்று என்னில் இருக்கும் பல குணங்கள் உங்களைப் பார்த்தே வந்தது. பணத்தின் மேல் பற்று வைக்காத தன்மை உங்களைப் பார்த்தே வந்தது. எதிலும் நேர்மை உங்களைப் பார்த்தே வந்தது . இன்னும் பல குணங்களை உங்களிடமிருந்து பெற நீங்கள் பொறுமையாக இல்லை . நீங்கள் எங்களை விட்டுப் போன நாட்களில் எத்தனையோ நாட்கள் தலையணையில் முகம் புதைத்து அழுதுரிக்கிறேன் . தைரியம் சொல்லத்தான் நீங்கள் இல்லை.
அனைத்தையும் நாங்கள் உங்களைப் பார்த்தே தெரிந்து கொண்டோம். நான் நானாக இருப்பதைக் காட்டிலும் நீங்களாக இருந்தால் இன்னும் நன்றாக இருப்பேன் அப்பா. இது தன் சுயத்தை இழக்க விரும்புவனின் பேச்சுதான். அது அப்படியே இருக்கட்டும் . ஏனென்றால் எங்களுக்கு role model யே நீங்கள்தானே. நீங்கள் இன்னும் எங்களுடன் இருந்திருந்தால் நாங்கள் இன்னும் நன்றாக இருந்திருப்போம். வாழ்கையைப் பற்றிய பயத்தை போக்குவது எப்படி என்று நாங்கள் உங்களைப் பார்த்து கற்றுக்கொண்டிருப்போம். நாங்கள் உங்கள் சொல் பேச்சு கேட்டதை விட நீங்கள் எங்கள் சொல் பேச்சு கேட்டதுதான் அதிகம். அப்பா என்ற அதிகாரம் மிகுந்த இந்த உலகில் நீங்கள் அபூர்வம்.
எனக்கு இன்றும் நன்றாக நினைவிருக்கிறது. அப்பொழுது நான் கல்லூரியில் சேர்ந்த தருணம். என்னை ஹாஸ்டலில் சேர்த்துவிட்டு என் செலவிற்காக நீங்கள் எனக்காக போஸ்ட் ஆபீசில் பத்தாயிரம் ரூபாய் பணம் வைத்து கணக்குத் தொடங்குனீர்கள். என்னுடைய கல்லூரித் தோழர்கள் பஸ் டிக்கெட்டான 2 ரூபாய்க்கே தங்கள் அப்பாக்களிடம் தொங்கியபோது நீங்கள் என்னை நம்பி பத்தாயிரம் ரூபாய் இருப்பு வைத்தீர்கள். உங்களுக்கு என்றைக்குமே என்மீதும் மது மீதும் நம்பிக்கை அதிகம். அப்படி இல்லாமலா பீரோ சாவியை எங்களிடம் கொடுப்பீர்கள். நாங்கள் என்றைக்குமே உங்களிடம் கணக்குச் சொல்லியதில்லையே. நீங்கள் எனக்கு போஸ்ட் ஆபீசில் கணக்குத் தொடங்கிய பொழுது அந்த போஸ்ட் மாஸ்டர், "சார் நாமினி பேர் பில் அப் பண்ணலையே சார் " என்று கூறிய பொழுது உங்களுக்கு கோவம் வந்துவிட்டது. என்ன இது சின்னப் பைய்யன் அவனுக்கு நாமினியா என்றீர்கள். சும்மா ஒரு பேச்சுக் கூட உங்களால் என் இறப்பை தாங்க முடியவில்லை .ஆனால் நீங்கள் உங்கள் இழப்பை இப்படி எங்களை தாங்க வைத்துவிட்டீர்களே.
நாங்கள் கனவிலும் நீங்கள் எங்களை விட்டுப் போவீர்கள் என்று நினைக்கவில்லை. எனக்கு இன்றும் நல்லா ஞாபகம் இருக்கிறது நீங்கள் எனக்கு ஸ்கூட்டர் ஓட்டக் கற்றுக்கொடுத்தது. வாலிபப் பருவம் தாண்டியும் இரு சக்கர வாகனம் ஓட்டக் கற்றுக் கொள்ளவில்லையே என்ற ஆதங்கம் எனக்கு, உங்களுக்கோ எனக்கு அடி எதுவும் பட்டுவிடக் கூடாது என்ற பயம். உங்களுக்கு எங்கள் இருவரின் மீதும் கரிசனம் அதிகம்.
நாங்களாக என்றும் எங்கள் ரெகார்ட் நோட்டில் படம் வரைந்ததில்லை. அது அனைத்தையும் நீங்களே வரைவீர்கள். உங்களுக்கு ஓவியம் நன்றாக வரும். சில சமயங்களில் நீங்கள் படத்துடன் பாகங்களையும் அதில் குறித்து விடுவீர்கள். அப்பொழுதெல்லாம் நான் உங்கள் கையெழுத்தை ஆசிரியர் கண்டுபிடித்து விடுவார்கள், உங்களை யார் பாகம் குறிக்கச் சொன்னது என்று அதிகப் பிரசங்கித்தனமாக சண்டை போட்டுருக்கிறேன். அப்பொழுதும் நீங்கள் என் மேல் கோபப்படாமல் பொறுமையாக கேட்டுக் கொண்டுரிக்கிறீர்கள். அப்பா என்ற மமதை பிடித்த இந்த உலகில் நீங்கள் அபூர்வம். இன்றும் அந்த ரெகார்ட் நோட்டில் நீங்கள் வரைந்த படங்கள் அழியாமல் உள்ளன . ஆனால் நீங்கள்தான் அழிந்து போய்விட்டீர்கள்.
நீங்கள் எங்களுக்கு நீச்சல் கற்றுக் கொடுக்க முயற்ச்சித்து தோற்றக் கணங்கள் இன்றும் எனக்கு ஞாபகம் இருக்கிறது. எனக்கு இன்றும் நன்றாக ஞாபகம் இருக்கிறது. வீடு வாங்குவதற்கு நீங்கள் அவ்வளவு முயர்ச்சித்தீர்கள். அதே போன்று ஒரு அழகான வீட்டையும் பார்த்தீர்கள். நான் கூறிய உப்புச் சப்பில்லாத காரணத்தால் அந்த வீட்டை ஒதுக்கி விட்டீர்கள். என் பேச்சையும் பெரிதும் மதித்தது நீங்கள்தான் அப்பா. ஒரு வேளை அந்த வீட்டை வாங்கி இருந்தால் நீங்கள் அந்த விபத்தில் சிக்காமல் இருந்துரிப்பீர்கள். அந்த குற்ற உணர்ச்சி என்னை இன்றும் வதைக்கிறது அப்பா. அப்பா என்ற உலகில் நீங்கள் அபூர்வம்.
நீங்கள் எல்லாவற்றிலும் பெஸ்ட் அப்பா . அலுவலகத்தில் உங்கள் வேலையில் ஆகட்டும், வீட்டில் கணவன் என்ற ஸ்தானத்தில் ஆகட்டும் , சிறந்த அப்பா என்பதில் ஆகட்டும், உங்கள் தம்பிகளுக்கு ஒரு சிறந்த அண்ணன் என்பதிலாகட்டும், உங்கள் அம்மா அப்பாவிற்கு ஒரு சிறந்த மகன் என்பதிலாகட்டும், படம் வரைவதிலாகட்டும் அனைத்திலும் நீங்கள் பெஸ்ட். அப்படிப்பட்ட நீங்கள் சமையலிலும் பெஸ்ட் ஆவீர்கள் என்று நாங்கள் நினைக்கவில்லை . retired ஆன பின்னால் நீங்கள் சமையலிலும் சிறந்து விளங்க ஆரம்பித்தீர்கள் . தான் ஈடுபட்ட அனைத்திலும் பெஸ்ட் ஆவது உங்களால்தான் முடியும்.
நீங்கள் செய்யும் அனைத்திலும் ஒரு நேர்த்தி இருக்கும். அதில் ஏதேனும் தவறு நேர்ந்ததால் அதை பற்றியே கூறி கூறி ஆய்ந்து ஓய்ந்து போவீர்கள். ஒரு தடவை அடுப்பில் பால் குக்கரை வைப்பதற்கு பதிலாக தவறுதலாக எண்ணெய் பாக்கெட் இருந்த குக்கரை எடுத்து வைத்து விட்டீர்கள். அதனால் அந்த பாத்திரம் வீணாகி விட்டது .அதனை எத்தனை தடவை என்னிடம் கூறி ஆய்ந்து ஓய்ந்து போனீர்கள். ஒரு சிறு தவறுக்கு கூட வருந்தியதால்தான் உங்களால் அனைத்திலும் பெஸ்ட் ஆக இருக்க முடிந்தது.
நீங்கள் சும்மா ஓய்வாக இருந்து நான் பார்த்ததே இல்லை. எப்பொழுதும் ஏதாவது செய்து கொண்டே இருப்பீர்கள் அல்லது ஏதேனும் ஆங்கில நாவல் படித்துக் கொண்டிருப்பீர்கள். இன்றும் எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது, நான் உங்களிடம் கேட்டேன் இவ்வளவு சுறுசுறுப்பாக இருக்கும் நீங்கள் retired ஆன பிறகு என்ன பண்ணுவீர்கள் என்று . அதற்க்கு நீங்கள், நான் சும்மா எல்லாம் இருக்க மாட்டேன், வெளியில் at least ஒரு பெட்டிக் கடை போட்டாவது வேலை பார்ப்பேன் என்றீர்கள் . ஒரு retired IPS அதிகாரி இப்படி கூற ஒரு கர்வமற்ற தன்மை வேண்டும் . அது உங்களிடம் தான் இருந்தது.
மிகப் பொறுமை சாலியான நீங்கள் சாவில் மட்டும் ஏன் அவசரப்பட்டீர்கள்.
We love you my dad. We love you so much. May your soul rest in peace.
பின் குறிப்பு : இது என்னுடைய நூறாவது பதிவு.
Thursday, September 23, 2010
இடைக்காலச் சோழர்கள் (Medieval Chozhas)
நான் சோழர்கள் புத்தகம் வாங்கிய பிறகு சோழர்களைப் பற்றி இரண்டு பதிவுகளே போட்டேன். அந்த புத்தகத்தை பாதியில் முடித்த பிறகு அதை தொடவில்லை. எனக்கு இருக்கும் மிகப் பெரிய கெட்ட பழக்கம் நான் ஏதேனும் புத்தகங்களை பாதியில் விட்டு விட்டால் அதனை பின் தொடவேமாட்டேன். அப்படியேதான் இதிலும் ஆகியது. நான் பாதியில் விட்டு தொடர வேண்டும் என்று மிக ஆவல் கொண்ட புத்தகங்கள் "நள்ளிரவில் சுதந்திரம்" மற்றும் " சோழர்கள் " . இரண்டும் அவ்வளவு விஷயம் கொண்ட புத்தகங்கள். அதிலும் நள்ளிரவில் சுதந்திரம் புத்தகம் மிகக் குறுகிய காலத்தை பற்றி மிக அதிகமாக பேசும் புத்தகம்.
பராந்தகச் சோழனின் காலத்தில் சோழர்களின் நிலப்பரப்பு
சரி இப்பொழுது சோழர்கள் பற்றிப் பார்ப்போம். சங்க காலச் சோழர்களுக்கும் இடைக்காலச் சோழர்களுக்கும் இடைப்பட்ட சோழர்களைப் பற்றி வரலாற்றுக் குறிப்புகள் பெரிதாக எதுவும் இல்லை. இவர்களின் காலம் கிபி மூன்றாம் நூற்றாண்டிலிருந்து 9 ஆம் நூற்றாண்டு வரை. கிபி 3 ஆம் நூற்றாண்டிலிருந்து 6 ஆம் நூற்றாண்டு வரை களப்பிரர்கள் தமிழகத்தை ஆண்டனர். இக்காலகட்டத்தில் தமிழகத்தை பற்றியே எந்த குறிப்புகளும் இல்லை எனலாம். அதனாலையே இதனை தமிழகத்தின் இருண்ட காலம் என்கின்றனர். பின்னர் 6 ஆம் நூற்றாண்டில் வடக்கே பல்லவர்களும் , தெற்க்கே பாண்டியர்களும் எழுச்சி பெற்று களப்பிரர்களை தோற்கடித்தனர். இக்காலகட்டத்தில் சோழர்கள் பாண்டிய, பல்லவர்களுக்கு உடன்பட்டவர்களாகவே இருந்தனர். அக்காலங்களில் இவர்களுக்கும் பாண்டிய, பல்லவர்களுக்கும் திருமண உறவுகள் இருந்தது. இக்காலங்களில் சோழர்கள் உறையூரைத் தலைநகராகக் கொண்டு அதைச் சுற்றியுள்ள பகுதிகளை ஆண்டனர். இப்பகுதி பாண்டிய பல்லவர்களுக்கு இடையே இருந்தது. அதனால் இப்பகுதி பாண்டிய பல்லவ போர்களில் முக்கிய பங்காற்றியது. சோழர்களும் அந்தந்த காலகட்டதிற்க்கேற்ப பல்லவர்களையோ அல்லது பாண்டியர்களையோ ஆதரித்தனர்.
இதன் பிறகு விஜயால சோழன் கிபி 848 இல் தஞ்சாவூரைத் தாக்கிக் கைப்பற்றியதிலிருந்து இடைக்காலச் சோழர்களின் காலம், ஏன் சோழர்களின் பொற்காலம் ஆரம்பிக்கிறது என்றே சொல்லலாம். தஞ்சாவூரைக் கைப்பற்றிய விஜயாலன் அதனை தன தலைநகராகக் கொண்டான். விஜயாலச் சோழனுக்குப் பின் வந்த ஆதித்ய சோழன் மற்றும் பராந்தகச் சோழன் இருவரும் பாண்டிய பல்லவர்களுடன் போரிட்டு சோழர்கள் ஆண்ட பகுதியை விஸ்தீகரித்தனர்.
விஜயாலன் பல்லவர்கள் பக்கம் இருந்தான். தஞ்சையை ஆண்ட முத்தரையர்கள் பாண்டிய மன்னன் வரகுணவர்மனின் பக்கம் இருந்தனர். அதனால் விஜயால சோழன் முத்தரையர்கள் மீது படை எடுத்து தஞ்சையை கைபற்றினான். இது இந்தியாவில் மிகப் பெரிய ஹிந்து சாம்ராஜ்யத்தை அமைக்கப் போகிறது என்று அவனே எதிர்பார்த்திருக்கவில்லை. திருப்புறம்பயத்தில் நடந்த பெரும் போரில் விஜயாலனின் மகனான ஆதித்ய சோழன் பல்லவ மன்னன் அபராஜித மன்னனுடன் இருந்து போரிட்டான். பின்னர் இதே அபராஜித மன்னனை ஆதித்யன் தோற்கடித்து வடக்கே தன் எல்லையை விஸ்தீகரித்தான். ஆதித்யனுக்கும் சேரர்களுக்கும் நல்ல உறவு இருந்தது. ஆதித்யனின் மகன் பராந்தகச் சோழன் சேர இளவரசியை மணந்தான்.
சோழர்கள் இப்படி பெரும் வெற்றி பெற சோழர்களில் பெரும் வீரனும், சிறந்த ராஜதந்திரியுமான ஆதித்ய சோழனே காரணம்.
முதலாம் பராந்தகச் சோழன் பாண்டியர்களை முறியடித்து தன் ஆட்சியை கன்னியாகுமரி வரை விரிவுபடுத்தினான்.
மேலும் எஞ்சி இருந்த பல்லவர்களையும் முறியடித்து தன் எல்லையை வடக்கே நெல்லூர் வரை விரிவுபடுத்தினான். இவனது ஆட்சிக் காலத்தின் இறுதியில் வட மேற்க்கிலிருந்து மூன்றாம் கிருஷ்ணன் மிக மூர்க்கமாகத் தாக்கினான். இப்போரில் பராந்தகச் சோழன் தன் மகன் ராஜதித்தனை இழந்தான். இதற்கடுத்து ராஜராஜ சோழன் அரியணை ஏறும் 30 ஆண்டுகளும் சோழர்களின் ஆட்சி இருளில் மூழ்கியது. பராந்தகன் பாண்டியர்களுடன் மோதிய போரில் பாண்டியன் ஈழ மன்னனின் உதவியைப் பெற்றான். இருந்த போதிலும் அவனால் பராந்தகனை வெற்றி கொள்ள முடியவில்லை. பராந்தகன் பாண்டிய மன்னன் ராஜசிம்மனை வெற்றி கொண்டான். தோல்வியடைந்த ராஜசிம்மன் முதலில் இலங்கையின் உதவியை நாடினான். பின் தன் தாய் பிறந்த தேசமான கேரளத்தை அடைந்து அதன் உதவியை நாடினான். ஆனால் அன்றைய சேர மன்னர்கள் சோழர்களுடன் நட்புடன் இருந்தனர்.
பொன்னியின் செல்வனில் அருள்மொழிவர்மன் பாண்டிய மணிமகுடத்தையும் பிற உயரிய பொருட்களையும் ஈழத்திலிருந்து மீட்க முயன்றான் என்று வரும். அந்த மணிமகுடமும் பிற உயரிய பொருட்களும் இந்த ராஜசிம்மனாலேயே இலங்கை மன்னனிடம் கொடுக்கப்பட்டது. இவற்றை கைப்பற்ற முயன்று முதலாம் பராந்தகச் சோழன் தோல்வியடைவான். இந்த மணிமகுடமும் பிற உயரிய பொருட்களும் பின்னர் பேரரசன் ராஜேந்திர சோழனாலயே மீட்கப்படும்.
இப்புத்தகத்தில் உத்தமச் சோழனே இரண்டாம் ஆதித்யன் இறக்கக் காரணமானவன் என்று ஆசிரியர் முற்றிலும் முழுதாக நம்புகிறார். பொன்னியின் செல்வனிலும் கல்கி உத்தமச் சோழன் மீது இதே போன்று குற்றச்சாட்டைக் கூறுவார். மேலும் அவன் நல்ல தாய் தந்தையருக்குப் பிறந்த துர்குணம் கொண்டவன் என்கிறார் ஆசிரியர். இதே போல்தான் கல்கியும் கூறுவார். இதிலிருந்து கல்கி தான் பொன்னியின் செல்வன் எழுத நீலகண்ட சாஸ்திரியின் இந்த நூலை ஆதாரமாக கொண்டிருப்பார் என்று அறியலாம்.
Vijayalaya Chola | ||||||||
| | ||||||||
Aditya Chola I | ||||||||
| | ||||||||
Parantaka Chola I 907 - 950 | ||||||||
| | ||||||||
-- | -- | Arinjaya 956 - 957 | ||||||
| | | | |||||||
Uththama Chola 970 - 985 | Sundara Chola 957 - 970 | |||||||
| | ||||||||
Aditya Karikala | -- | Rajaraja Chola I 985 - 1014 | -- | Kundavai | ||||
| | ||||||||
Rajendra Chola I 1012 - 1044 | ||||||||
| | ||||||||
Rajadhiraja Chola I 1018 - 1054 | -- | Rajendra Chola II 1051 - 1063 | -- | Virarajendra Chola 1063 - 1070 | -- | Kundavai | ||
| | ||||||||
சோழர்களைப்பற்றி அறிய பொன்னியின் செல்வன் மிகச் சிறந்த நாவல். அதில் இடம் பெற்ற முக்காலே மூணு வீசம் கதாப்பாத்திரங்கள் உண்மையானவை மற்றும் சம்பவங்களும் உண்மை. பராந்தகச் சோழனுக்கு மூன்று மகன்கள் ராஜாதித்ய, கண்டராதித்ய மற்றும் அரிஞ்சய சோழன். இதில் ராஜாதித்ய சோழன் இடையிலேயே இறந்துவிடுகிறான். அதற்கடுத்து கண்டராதித்ய சோழன் அரியணை ஏறினான் . அவனுக்கு அரசியலை விட சைவ சமய ஈடுபாடே அதிகம் . அதனால் அவனுக்கு அடுத்து அவன் தம்பியான அரிஞ்சய சோழன் பதவி ஏறினான். அவனுக்கு அடுத்து அவனுடைய மகனான சுந்தரச் சோழன் பதவி ஏறினான். அக்காலகட்டத்தில் கண்டராதித்ய சோழனின் மகனான உத்தமச் சோழன் மிக இளையவன். சுந்தரச் சோழனுக்கு ஆதித்ய கரிகார்ச் சோழன் , ராஜராஜ சோழன் என்னும் இரு மகன்கள் , குந்தவை என்னும் ஒரு மகள். இதில் ஆதித்ய கரிகார்ச் சோழன் மர்மமான முறையில் இறந்து விடுகிறான். இக்கொலையில் உத்தமச் சோழனுக்கு பங்கிருப்பதாக சந்தேகிக்கப்பட்டது. பின்னர் உத்தமச் சோழனுக்கும் , சுந்தரச் சோழனுக்கும் ஏற்ப்பட்ட ஒப்பந்தத்தின் படி சுந்தரச் சோழனுக்குப் பிறகு உத்தமச் சோழன் அரியணை ஏறுவதாகவும், உத்தமச் சோழனுக்குப் பிறகு ராஜராஜ சோழன் அரியணை ஏறுவதாகவும் ஒப்பந்தம் ஏற்ப்பட்டது. பொன்னியின் செல்வனில் இது வரை சரியாகவே இருக்கும், இதற்கடுத்து உண்மையான உத்தமச் சோழன் இறந்து விடுவதாகவும் அதற்கடுத்து வேறொருவன் உத்தமச் சோழனாக அரியணை ஏறுவதாகவும் கூறப்பட்டிருக்கும் . அதுதான் தவறு.
ராஜராஜன் அரியணை ஏறுவதிலிருந்து சோழர்களின் பொற்காலம் ஆரம்பிக்கிறது. நாம் ராஜராஜ பெருவேந்தனைப் பற்றி விரிவாக மற்றொரு பதிவில் காண்போம் .
Wednesday, September 15, 2010
என்னதான் நடக்கிறது காஷ்மீரில்?
இந்தியாவிற்கு இப்பொழுது நல்ல நேரம் இல்லை. ஒரு பக்கம் மாவோயிஸ்டுகளின் தாக்குதல்கள் மற்றொரு பக்கம் காஷ்மீர் பற்றி எரிகிறது. இரண்டு விவகாரங்களிலும் இந்திய அரசின் நடவடிக்கைகள் சரி இல்லை. இங்கு மிக முக்கிய பிரச்சினையே பிரச்சினை இருப்பதை அரசு புரிந்து கொள்ளவில்லை அல்லது புரிந்து கொள்ள மறுக்கிறது. இன்று காஷ்மீரில் போராடுபவர்கள் நிச்சயம் தீவிரவாதிகள் அல்ல. அவர்களை தீவிரவாதிகள் என்ற நோக்கில் அணுக கூடாது. அவர்கள் இந்திய குடிமக்கள். நம் அரசு சொல்வது போல் கற்கள் ஒன்றும் பாகிஸ்தானிலிருந்து இறக்குமதி செய்யப்படவில்லை. இத்தனை நாட்கள் பார்த்த காஷ்மீர் பிரச்சினை வேறு இப்பொழுது பார்ப்பது வேறு. இத்தனை நாட்களாக இந்தியா துப்பாக்கிகளுடன் சண்டை போட்டது. ஆனால் இன்று சண்டை போடுவதோ கற்களுடன். துப்பாக்கிகளை விட கற்கள் தரும் ரணம் மோசமானவைகள்.
இத்தனை வருடங்களாக இல்லாமல் இந்த வருடம் காஷ்மீரில் தீவிரவாதத்தால் இறந்தவர்களை விட நம் போர்ப்ப்படைகளால் இறந்தவர்கள் அதிகம். இது நிச்சயம் மோசமானது. ஒரு மக்களை நம்மிடம் பிரியாமல் வைக்க அவர்கள் மனதில் முதலில் இடம் பெற வேண்டும். இந்தியா காஷ்மீரில் அதில் வெற்றி பெறவில்லை. பிரச்சினை மிகத் தீவிர முடிச்சு இந்த ஜூன் மாதம் ஒரு இளைஞன் போர்ப்படையால் கொல்லப்பட்டதிலிருந்து ஆரம்பம் ஆயிற்று . அதிலிருந்து இது வரை 80 துக்கும் மேற்ப்பட்ட பொது மக்கள் பாதுகாப்புப் படையினருடன் நடந்த சண்டையில் கொல்லப்பட்டுள்ளனர்.
எப்போதும் இல்லாதவகையில் இன்று வீதியில் இறங்கிப் போராடுபவர்களில் பெரும்பான்மையோர் பெண்கள், சிறுவர்கள், இளைஞர்கள். நேற்று மட்டும் நடந்த போராட்டத்தில் 15 க்கும் மேற்ப்பட்ட பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இன்று பிரதமர் இவ்விகாரத்தில் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி உள்ளார். அதில் எந்த அளவிற்கு பயனளிக்கும் என்று தெரியவில்லை.
இங்கு கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம் ஜம்மு & காஷ்மீர் , ஜம்மு , காஷ்மீர், லடாக் என்ற மூன்று பகுதிகளைக் கொண்டது. ஜம்முவில் ஹிந்துக்கள் அதிகம், லடாக்கில் புத்த மதத்தை சார்ந்தவர்கள் அதிகம். பிரச்சினை இருக்கும் காஷ்மீரில் அதிகம் வசிப்பது முஸ்லீம்கள். பிரச்சினை இருப்பது காஷ்மீரில்தான், ஜம்முவிலோ அல்லது லடாக்கிலோ எந்த ஒரு பிரச்சினையும் கிடையாது.
காஷ்மீர் பொருளாதார நிலையில் ஒன்றும் மேல் நிலையில் இல்லை. இந்தியாவில் பிரச்சினை இருக்கும் அத்தனை பகுதிகளையும் எடுத்துக் கொண்டீர்களானால் எந்த பகுதியுமே பொருளாதார நிலையில் சிறந்து விளங்கவில்லை. அது மாவோயிஸ்டுகள் அதிகம் இருக்கும் மத்திய கிழக்கு மாநிலங்களாகட்டும், காஷ்மீரைப் போல பிரிவினைவாதம் அதிகம் தலை தூக்கும் வட கிழக்கு மாநிலங்களாகட்டும், இல்லை இப்பொழுது பிரச்சினை இருக்கும் காஷ்மீராகட்டும், அனைத்தும் பொருளாதார நிலையில் பின்தங்கிய பகுதிகள். இவற்றில் பொருளாதார நிலையை மேம்படுத்த அரசு எந்த ஒரு காரியமும் செய்யவில்லை. சுதந்திரம் கிடைத்த இந்த 63 ஆண்டுகளில் இப்பொழுதுதான் காஷ்மீருக்கு ரயில் போக்குவரத்தை தொடக்கி உள்ளது இந்தியா. அதுவும் ரயில் போக்குவரத்து காஷ்மீரின் மையப் பகுதியை எட்டவில்லை.
காஷ்மீரில், பாதுகாப்புப் படையால் பிரச்சினை இல்லை என்கிறாயா என்கிறீர்களா , நிச்சயம் பாதுகாப்புப் படையினரால் பிரச்சினை இருக்கிறது. காஷ்மீரில் சமீபத்தில் நிகழ்ந்த போலி என்கவுண்டர்கள் பாதுகாப்புப் படையினரால் பிரச்சினை இருப்பதை காட்டுகிறது. இது நிச்சயம் மிக மோசமான செயல். இப்படி இருந்தால் நாம் எப்பொழுதும் காஷ்மீர் மக்களின் மனதை கவர முடியாது.
சரி பிரச்சினைக்கு தீர்வுதான் என்ன? . காஷ்மீரின் பொருளாதாரம் மேம்படுத்தப் படவேண்டும். காஷ்மீரில் பாதுகாப்புப் படையினரின் செயல்கள் கட்டுப்படுத்தப்படவேண்டும்.
காஷ்மீர் பிரச்சினை என்பது அங்கு இருக்கும் முஸ்லீம்கள் பிரச்சினை மட்டும் அல்ல அங்கு இருந்து வெளியேறிய ஹிந்து பண்டிட்டுகளின் பிரச்சினைகளும் கூட. 1980 களின் இறுதியில் ஏற்ப்பட்ட தீவிரவாத பிரச்சினைகளால் காஷ்மீரிலிருந்து ஹிந்து பண்டிட்டுகள் வெளியேறி தற்போது டில்லியில் வசிக்கிறார்கள். காஷ்மீர் பிரச்சினை தீர்ந்தவுடன் அவர்களும் காஷ்மீரில் குடி ஏற்றப்படவேண்டும்.
Tuesday, September 14, 2010
ஜின்னா - வரமா? சாபமா ?
முஹம்மத் அலி ஜின்னா - பாகிஸ்தான் இந்திய மக்களால் என்றும் மறக்க முடியாத பெயர். ஒவ்வொருவராலும் ஒவ்வொரு காரணத்திற்காக மறக்க முடியாத பெயர். பாகிஸ்தானியர்களால் Quaid-e-Azam என்றும் Baba-e-Quam என்றும் அழைக்கப்பட்டவர். பாகிஸ்தானியருக்கு பாகிஸ்தானை உருவாக்கிய தந்தை. இந்தியருக்கு இந்தியாவை இரண்டாகப் பிரித்து , பிரிவினையின் போது பல லட்சக்கணக்கானவர்கள் இறக்கக் காரணமானவர்.
முஹம்மத் அலி ஜின்னா ஒரு முஸ்லிமாக இருந்தபோதிலும் அவருடைய மூதாதையர்கள் ஹிந்துக்கள் என்பது ஒரு சுவாரசியமான விஷயம் . அவருடைய தாத்தா ஒரு ஹிந்து ராஜபுத்திரர். ஜின்னாவின் வம்சம் ஹிந்துவிலிருந்து முஸ்லிமாக மத மாறிய வம்சம். அவருடைய இரண்டாவது மனைவி பார்சி இனத்தவர் . அது ஒரு காதல் திருமணம் . இருவருக்கும் இடையே 25 வருட இடைவெளி. அவருடைய ஒரே மகளான டினா ஜின்னா ஒரு பார்சி இனத்தவரை திருமணம் செய்து கொண்டார். அதுவும் காதல் திருமணம் . எப்படி ஜின்னாவின் திருமணம் பெண் வீட்டாரால் எதிர்க்கப்பட்டதோ அதே போன்று ஜின்னா தன மகளின் திருமணத்தை எதிர்த்தார். டினா ஜின்னாவின் கணவர் வேறு யாரும் அல்ல Bombay-dying முதலாளிதான் அவர். இப்படி ஒரு முஸ்லிம் தேசத்தை உருவாக்க வேண்டும் என்று கனவு கொண்ட ஜின்னைவைச் சுற்றி அவர் அறிந்தோ அறியாமலோ இருந்தவர்கள் முஸ்லிம் அல்லாதவர்களே.
பாகிஸ்தானை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் ஒன்றும் ஜின்னாவிற்கு மத உணர்வால் ஒன்றும் ஏற்ப்படவில்லை. அவர் ஒரு பெரிய மதவாதி எல்லாம் அல்ல. அவர் மது குடிப்பார், மேற்கத்திய பாணிய உடைகளையே அணிவார். அவர் மேற்கத்திய கலாச்சாரங்களையே பின் பற்றினார். அவருக்கு ஆங்கிலம் தெரிந்த அளவிற்கு உருது தெரியாது. உண்மையில் அவர் முதலில் சேர்ந்த இயக்கம் முஸ்லிம்-லீக் அல்ல . ஏனெனில் அது அதிக முஸ்லிம் தன்மையோடு இருந்ததே காரணம். அவர் முதலில் சேர்ந்த இயக்கம் காங்கிரஸ்தான். இப்படிப்பட்ட ஜின்னாவை ஒரு தனி முஸ்லிம் நாடு கேட்கத்தூண்டியது காங்கிரஸ்தான்.
ஜின்னாவும் நேருவும் பல விதங்களில் ஒரே மாதிரியானவர்கள். இருவருமே மிகப் பெரிய பணக்காரர்கள். இருவருமே லண்டனில் படித்தவர்கள் . இருவருமே வக்கீல்கள். இருவருமே மேற்கத்திய பாணியை அதிகம் விரும்பியவர்கள் . அதனாலையே இருவருக்கும் தங்கள் மதங்களின் மீது அதிகம் பிடித்தம் கிடையாது. அப்படிப்பட்ட இருவருக்குமே காங்கிரசில் தங்களுக்கே அதிக முக்கியத்துவம் இருக்கவேண்டும் , தாங்களே இந்தியாவை ஆள வேண்டும் என்ற எண்ணமும் இருந்ததுதான் துரதிஷ்டவசமானது.
காங்கிரசில் நேரு அதிக முக்கியத்துவம் பெற்றதால் ஜின்னா முஸ்லிம் லீக்கில் சேர்ந்தார். தான் ஆள பாகிஸ்தான் என்ற நாட்டைக் கேட்டார். இப்படியே பாகிஸ்தான் என்ற நாடு உருப்பெற்றது. ஜின்னா, தான் முக்கியத்துவம் பெற எந்த அளவிற்கும் செல்வார் என்பது அவர் "நேரடி நடவடிக்கை நாள்" -ஐ அறிவித்ததிலிருந்து அறியலாம். அதாவது தான் ஆள ,பாகிஸ்தான் என்ற நாட்டை உருவாக்க அவர் அறிவித்தே நேரடி நடவடிக்கை நாள். அப்போது நடைபெற்ற கலவரத்தில் கல்கத்தா மிக மோசமாக பாதிக்கப்பட்டது. நேரடி நடவடிக்கை நாளான 16, ஆகஸ்டு 1946 நாளிலிருந்து சரியாக ஒரு வருடம் கழித்து பாகிஸ்தான் விடுதலை பெற்றது.
பிரிவினைக்கு ஜின்னாவை மட்டும் குற்றம் சாட்டுவோர் மட்டும் இல்லாமல் நேருவை குற்றம் சாட்டுவோரும் உள்ளனர். இந்தியா பிரிவதை ஆரம்பத்திலிருந்து எதிர்த்தார் காந்தி. இந்திய பிரிவினையை தடுக்க ஒரு கட்டத்தில் காந்தி, இந்தியாவை ஆளும் உரிமையை ஜின்னாவிற்கு அளித்தார். ஆனால் இதை நேரு மிகத் தீவிரமாக எதிர்த்தார். நேரு சிறிது விட்டுக் கொடுத்துப் போய் இருந்தால் இந்தியப் பிரிவினையையும் அதனைத் தொடர்ந்து நடந்த பிரிவினை கலவரத்தில் நிகழ்ந்த பத்து லட்சம் படுகொலைகளையும் தடுத்திருக்கலாம். இருவருடைய ஈகோவும் சேர்ந்து 10 லட்சம் படுகொலைகள் நடக்க காரணமாயிற்று.
ஜின்னாவிற்கு காசநோய் இருந்தது. ஆனால் அது துரதிஷ்டவசமாக தெரிய வந்தது பாகிஸ்தானிய விடுதலைக்கப்புறம்தான். இதை ஏன் துரதிஷ்டவசம் என்கிறேன் என்றால் அது முன் கூடியே தெரிய வந்திருந்தால் இந்த துணைக் கண்டத்தின் விதியே மாறி இருக்கலாம். ஏனெனில் அது முற்றிய நிலையில் இருந்தது. அது மட்டும் விடுதலைக்கு முன்பே தெரிந்திருந்தால் ஒரு வேளை ஜின்னா பிரிவினையை விரும்பாதிருந்திருக்கலாம், இல்லை பிரிட்டிசார் பிரிவினையை ஜின்னா இறப்பு வரை தள்ளி போட்டிருக்கலாம், இல்லை ஒருவேளை நேரு இன்னும் சிறிது காலம் தானே என்று ஜின்னாவிற்கு நாட்டை ஆள விட்டுக் கொடுத்திருக்கலாம், இல்லை ஒரு வேளை ஜின்னா ஒரு சிறந்த கட்டமைப்பு பெற்ற பாகிஸ்தானை உருவாக்க பாடுபட்டிருக்கலாம். ஜின்னா பாகிஸ்தான் உருவாகிய ஓராண்டிலயே இறந்துவிட்டார்.
இன்று பாகிஸ்தான் ஜின்னா விரும்பிய வகையில் இன்று இல்லை. ஜின்னா ஜனநாயகத்தில் அதிக நம்பிக்கை கொண்ட ஒரு பாகிஸ்தானை உருவாக்க எண்ணினார். ஆனால் இன்றைய பாகிஸ்தானோ தான் உருவாகிய 63 ஆண்டுகளில் பாதி நாட்களை ராணுவ ஆட்சியிலயே கழிந்தது. இதற்க்குக் காரணம் பாகிஸ்தான் ஜின்னாவிர்க்குப் பிறகு நாடு போற்றிய தலைவரை உருவாக்கவில்லை . ஆனால் அதன் சகோதரியான இந்தியாவோ அதே போன்று தன் நாடு போற்றும் தலைவரான காந்தியையும் சுதந்திரம் பெற்ற ஒரே ஆண்டில் இழந்தாலும் நாட்டை காக்க நேரு, படேல்,ராஜேந்திர பிரசாத் போன்ற எண்ணற்ற தலைவர்களைக் கொண்டிருந்ததது. அதானலையே அது ஒரு சிறந்த அரசியலமைப்பு கொண்ட குடியரசாக மூன்று ஆண்டுகளையே எடுத்துக் கொண்டது . பாகிஸ்தானிற்க்கோ அதற்க்கு ஒன்பது ஆண்டுகள் ஆனது .அவருடைய பாகிஸ்தான் மதச் சார்பற்றதா இல்லையா என்று சரியாகத் தெரியவில்லை. பாகிஸ்தான் உருவான காலகட்டத்தில் அவருடைய பார்வை ஒரு மதச் சார்பற்ற நாட்டை உருவாக்குவதாக இருந்தது. ஆனால் பாகிஸ்தானிய பொருளாதாரம் ஒரு இஸ்லாமிய பொருளாதாரத்தை அடிப்படையாக கொண்டிருக்க வேண்டும் என்றும் எண்ணினார். ஆனால் நிச்சயம் பாகிஸ்தானிய அரசியலமைப்பு ஜின்னா எண்ணிய வகையில் இன்று இல்லை. அது குடியரசின் மேல் நம்பிக்கை வைக்க எடுத்துக்கொண்ட காலமும் அதிகம் . இந்தியா விடுதலையான மூன்றே ஆண்டுகளில் குடியரசான போது பாகிஸ்தான் குடியரசாக ஒன்பது ஆண்டுகள் எடுத்துக்கொண்டது.
இன்றைய காஷ்மீர் பிரச்சினைக்கும் முழு முதற்காரணம் ஜின்னாவும், நேருவுமே. சுதந்திரம் அடைந்தவுடன் அந்த கோடை காலத்தை கழிப்பதற்க்காக ஜின்னா தான் காஷ்மீர் வந்து ஓய்வு எடுப்பதாக காஷ்மீர் மன்னர் ஹரிசிங்கிடம் சொன்னார் . அந்த சமயம் ஹரிசிங் இந்தியாவுடனோ அல்லது பாகிஸ்தானுடனோ சேராமல் காஷ்மீர் தனித்த சுதந்திரம் பெற்ற நாடாக இருக்க வேண்டும் என்று எண்ணினார். அதனால் ஜின்னா காஷ்மீர் வருவதை அனுமதித்தால் தான் பாகிஸ்தான் பக்கம் சாய்ந்து விட்டதான ஒரு தோற்றத்தை ஏற்ப்படுத்திவிடும் என்று எண்ணினார். அதனால் ஜின்னா காஷ்மீர் வர அனுமதி மறுத்தார். இது காஷ்மீர் எப்படியும் பாகிஸ்தானுடன் சேர்ந்துவிடும் என்று எண்ணிய ஜின்னாவிற்கு மிகப் பெரிய அடி. அதனால் ஜின்னா பாகிஸ்தானிய பழங்குடியினரான பதான்களைத் தூண்டிவிட்டு காஷ்மீரில் கலவரத்தை ஏற்ப்படுத்தினார். பிறகு ஹரிசிங் காஷ்மீர் இந்தியாவுடன் சேர சம்மதித்தார். பின்னர் இரு நாட்டுப் படைகளும் காஷ்மீரை ஆக்கிரமித்தன. இந்த சமயத்தில் நேரு இந்த விவகாரத்தை வல்லபாய் படேலின் வார்த்தையையும் மீறி ஐநாவிடம் கொண்டு சென்றார். ஐநா உடனே எந்த எந்த படைகள் எங்கெங்கு இருக்கின்றனவோ அந்தப் பகுதிகள் அவரவர்க்கு சொந்தம் என்று அறிவித்துவிட்டது. நேரு மட்டும் இந்த விவகாரத்தை ஐநாவிடம் கொண்டு சென்றிருக்காவிட்டால் இந்தியப் படைகள் முழு காஷ்மீரையும் கைப்பற்றி இருக்கும் . இப்பொழுது காஷ்மீரின் மொத்தப் பரப்பளவான 2,20,000 sqkm இல் 1,00,000 sqkm இந்தியாவுடனும், 80,000 sqkm பாகிஸ்தானுடனும் மீதி 40,000 sqkm சீனாவிடமும் உள்ளது.
இப்படியாக ஜின்னா இந்தியர்கள் மற்றும் பாகிஸ்தானியர்களின் வாழ்வில் பிரிக்க முடியாதவர்.
பின் குறிப்பு :1. செப்டெம்பர் 11 ஜின்னாவின் இறந்த தினம். ஜின்னா 1948 இல் இறந்தார்.
2. A nice blog post about Jinnah and his secular Pakistan(in his own news paper ;-) ) http://blog.dawn.com/2010/09/11/with-us-or-against-us/
Photo Courtesies : wikimedia.org , pakteahouse.files.wordpress.com, greathindu.com,thehindu.com
Friday, September 10, 2010
கடவுளும் நானும்
கடவுள் நம்பிக்கை என்பது ஆளுக்கு ஆள் வேறுபடும் . சிலர் எப்பொழுதும் ஆத்திகராக இருப்பார்கள். சிலர் எப்பொழுதும் நாத்திகராக இருப்பார்கள். சிலர் சில நேரம் நாத்திகராகவும், சில நேரம் ஆத்திகராகவும்இருப்பார்கள் . நானும் அப்படி தான் சில காலங்களில் ஆத்திகனாகவும் சில காலங்கள் நாத்திகனாகவும் இருந்திருக்கிறேன். நான் பத்தாவது படிக்கும் பொழுது மிகத் தீவிர ஆத்திகன். அப்பொழுது என் இஷ்ட தெய்வம் பிள்ளையார். எப்பொழுதும் சாமி கும்பிட்டுக் கொண்டே இருப்பேன். பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் காலத்தில் எனக்கு , என்னை சார்ந்தவர்களுக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்ற பயம் இருந்து கொண்டே இருக்கும். அது என்னை பயங்கரமாக பாதித்தது. அந்த பயத்திலிருந்து மீள இன்னும் அதிகமாக சாமி கும்பிட்டேன். நம்மை மீறி எதாவது நடந்து விடுமோ என்ற பயம் இருக்கும் காலத்தில் நம்மை நாம் யாரிடமாவது சரண் அடைத்து விடுகிறோம். நான் சரண் அடைந்தது கடவுளிடம்.
பின்னர் என் அப்பா விபத்தில் சிக்கி மருத்துவமனையில் இருந்த பொழுது மீண்டும் ஆத்திகம் அதிகமாக தலை தூக்கியது. அந்த காலங்களில் நான் மருத்துவமனையில் இருந்ததை விட கோயிலிலேயே அதிகம் இருந்தேன். பின்னர் அந்த விபத்தில் எங்க அப்பா இறந்த பிறகு கடவுளின் மீது இருந்த நம்பிக்கையே போய்விட்டது. நான் எதற்கு கடவுளை கும்பிட வேண்டும் கடவுள் எனக்கு என்ன செய்தார் என்று கேட்க ஆரம்பித்தேன். அப்பொழுது முழு நாத்திகனாக மாறினேன்.
பின்னர் இன்னும் சில காலங்கள் கழிந்த பிறகு மீண்டும் சாமி கும்பிட ஆரம்பித்தேன். ஆனால் இப்பொழுது சிறிது தெளிவு பிறந்திருந்தது. அதோடு கடவுள் இருக்கிறாரா இல்லையா என்ற கேள்வியும் கூடவே பிறந்தது. இவ்வளவு சாமி கும்பிடுகிறோம், பூசை புனஸ்காரம் பண்ணுகிறோம் , இத்தனை பண்ணிய பிறகு கடவுள் இல்லையென்றால் அனைத்துமே வீண்தானே என்ற கேள்வியும் கூட பிறந்தது. அதனால் கடவுள் இருக்கிறாரா இல்லையா என்று ஆராயத் தொடங்கினேன். இதன் பின் வீட்டில் செய்யும் அனைத்து சாத்திர சம்பிரதாயங்களில் அனைத்திலும் கேள்வி கேட்க ஆரம்பித்தேன்.
அம்மாவசை அன்று எங்கள் அப்பாவை வரவேற்க எங்கள் அம்மா செய்யும் அனைத்து செயல்களும் தேவை அற்றது என்றே எண்ண ஆரம்பித்தேன். என்னை பொறுத்தவரை எங்கள் அப்பா இறந்துவிட்டார். அவ்வளவுதான். இதைத் தவிர அம்மாவசை அன்று அப்பா ஆவியாக வருவார், அவரை வரவேற்க வீடு வாசலை சுத்தம் செய்து வாழை இலையில் சாப்பிடுவதெல்லாம் அதிகபட்சம் தூய்மையாக இருக்கவே செய்தது. மற்றபடி வேறு ஒன்றும் இல்லை. இதையும் மீறி கடவுள் இருக்கிறார், எங்கள் அப்பா ஆவியாக இருப்பது உண்மை என்றாலும் மேற்க்கூறிய சம்பிரதாயங்களை செய்யாவிட்டால் அவர்கள் கோபித்துக் கொள்வார்கள் என்றெல்லாம் இல்லை. என்னளவில் நான் உண்மையானவனாக பிறருக்கு தீமை செய்யாதவனாக இருந்தாலே, என்னளவில் நான் நாத்திகனாக கூட இருந்திருந்தாலும் கடவுள் என்று ஒருவர் இருந்தால் அவரைப் பொறுத்தவரையில் நான் ஆத்திகன்தான் .
இந்த சாத்திர சம்பிரதாயங்கள் அனைத்தும் கடவுளுக்காக ஏற்ப்பட்டதல்ல. நமக்காகவே ஏற்ப்பட்டது என்று முழுதாக நம்ப ஆரம்பித்தேன். நல்ல நாளில் வீடு கூடி கழுவுவது எதற்கு?. நாம் சுத்தமாக இருப்பதற்கே. கடவுள் வீட்டிற்கு வருவதற்க்கல்ல. அப்படியே கடவுள் இருந்தாலும் அவர் வருவது ஒரு உபகாரணம்தான். நாம் தூய்மையாக ஆரோக்கியமாக இருக்கவேண்டும் .அதுதான் சாத்திர சம்பிரதாயங்களின் நோக்கம். எங்கள் அப்பா இறந்த வீட்டில் நான் சாப்பிடும்பொழுது , நான் சாப்பிடுவதற்கு முன் எங்கள் அப்பாவிற்கு என்று சிறிது சாதம் எடுத்துவைக்கவேண்டும் என்றார்கள். அது எங்கள் அப்பா சாப்பிடுவதற்கு என்று சொன்னாலும் அது உண்மையில் நாய், கோழிக்கு இரை போடவே . இன்றும் அந்த பழக்கத்தை கடைபிடிப்பவன்தான்.
இதேபோல் ஜோசியம் என்று வரும்போது அந்த நம்பிக்கையை எப்படி எடுத்துக்கொள்வது என்று தெரியவில்லை. கடவுள் நம்பிக்கை என்று வரும்போது ஜோசிய நம்பிக்கை எல்லாம் அதில் மிகச் சிறிய பகுதிதான். எப்படி இந்த ஒன்பது கோள்கள் மனிதனின் வாழ்க்கையை தீர்மானிக்கிறது. இதை எப்படி நம்புவது. அதில் சிறிதளவாவது உண்மை உள்ளதா. கோள்களின் ஈர்ப்புவிசை ஒவ்வொரு மனிதன் பிறந்த நேரத்தைப் பொறுத்து அவன் மீது தன் ஆட்ச்சியை செலுத்துகிறது என்று கூறினால், நிலவில் இறங்கிய அதன் ஈர்ப்பு விசை அதிகம் பாதித்த நீல் ஆம்ஸ்ட்ராங்கை அல்லவா அது அதிகம் பாதித்திருக்க வேண்டும். ஒன்றும் புரியவில்லை.
நம்மை மீறிய சக்தி உள்ளதா?. அப்படி இருந்துவிட்டால் கூட பரவாயில்லை, இல்லாவிட்டால் , கடவுள் இருக்கிறார் என்று எண்ணி நாம் செய்யும் அனைத்து செயல்களும் வீண்தானே.
நிஜமாகவே இப்படி கடவுள் இருக்கிறார் என்று எண்ணி நாம் செய்யும் செயல்கள் அனைத்தும் வீண்தானா? கடவுள் இல்லை என்கிற நம்பிக்கை , கடவுள் இருக்கிறார் என்ற நம்பிக்கையை விட நம்மை தீமையிலிருந்து மீட்டுவிடுமா?. கடவுள் இல்லாவிட்டாலும் கடவுள் இருக்கிறார் என்ற போலி நம்பிக்கையில் நாம் செய்யும் அனைத்து செயல்களும் நம்மை தீமையிலிருந்து மீட்டுவிடுமா?. போக்கத்தவனுக்கு ஏதாவதொரு புகலிடம் வேண்டுமே, அது போலி புகலிடமாக இருந்தாலும் பரவாயில்லையா?
கடவுள் என்பது பூமிக்கு மட்டும்தானா? பூமியை மீறிய வாழ்க்கை உலகில் இருக்கிறதா? பூமியைத்தவிர வேறு எங்கேனும் உயிரினங்கள் உள்ளனவா? கடவுள் என்று ஒருவர் இருந்தால் பூமியை மீறிய வாழ்க்கை ஒன்று நிச்சயம் இருக்கவேண்டும். பூமியைத்தவிர வேறு எங்கேனும் உயிரினங்கள் இருக்கவேண்டும். ஏனெனில் சூரியன் தன் வாழ்நாளில் பாதியை முடித்து விட்டது. இன்னும் மீதி வாழ்நாளில் பூமியும் இறந்துவிடும் . பிறகு வாழ்கை எங்கே? பூமி எங்கே ? மனிதன் எங்கே ? பக்தர்கள் எங்கே ?. பக்தன் என்று ஒருவன் இல்லாத கடவுள் உண்டா? உயிரினம் என்ற ஒன்று இல்லாத கடவுள் எதற்கு ?.
கடவுள் நம்பிக்கை இருந்தாலும் கூடவே கடவுள் இருக்கிறாரா இல்லையா என்ற இந்த கேள்வியையும் என்னால் கூடவே வைத்திருக்க முடிந்தது. இயற்பியலில் ஒரு விதி உண்டு. ஒளி, அலை வடிவத்தில் செல்கிறதா இல்லை போட்டான்களாக செல்கிறதா என்று . அதற்க்கு ஒளி இரண்டு வடிவத்திலும் செல்கிறது என்பார்கள் . அதாவது சில தியரங்களை விளக்க ஒளி அலைவடிவத்திலும், மற்ற தியரங்களை விளக்க ஒளி போட்டான்களாக செல்வதாக கொண்டார்கள் . அதே போல்தான் நான் சில கேள்விகளை விளக்க கடவுள் இருக்கிறார் மற்ற கேள்விகளை விளக்க கடவுள் இல்லையென்றும் கொண்டேன் .
Photo Courtesy : http://www.modernartwork.net/wallpaperinterstellar-beingness-web-modern-art-work.jpg
Saturday, September 4, 2010
IAF இல் சச்சின்
எங்கள் தானைத்தலைவர் சச்சினுக்கு குரூப் கேப்டன் பதவி கொடுத்து இந்திய விமானத்துறை சச்சினை பெருமைப்படுத்தி உள்ளது. இதற்க்கு முன்னர் இதே போன்று பதவிகளை இந்திய ராணுவம் கபில் தேவுக்கும், நடிகர் மோகன்லாலுக்கும் கொடுத்து அவர்களை கவுரவப்படுத்தி இருந்தனர்.
இந்திய போர்ப்படைகளுக்கு தேவையான ஜவான்கள் அதிக அளவில் கிடைக்கிறார்கள் . ஆனால் அதிகாரிகள் மட்டத்தில்தான் ஆட்கள் கிடைப்பத்தில்லை . இளைஞர்களை போர்ப்படைகளில் அதிக அளவு ஈர்ப்பதற்காகவே இவ்வாறு சமுதாயத்தில் பிரபலமானவர்களுக்கு கௌரவ பதவிகளை போர்ப்படைகள் வழங்குகின்றன.
Recession அதிகமாக இருந்த காலத்தில் IAF வெளியிட்ட விளம்பரம் ஒன்று ஞாபகத்திற்கு வருகிறது. Recession எதுவும் உங்களை பாதிக்காது , IAF இல் சேருங்கள் என்று கூறியது அந்த விளம்பரம்.
நானும் சிறுவனாக இருந்த காலத்தில் இந்திய ராணுவத்தில் சேரவேண்டும் என்று மிகவும் ஆசைப்பட்டேன். அது தேசிய உணர்வை வெளிப்படுத்த மிகச் சிறந்த வழி என்று கருதினேன். அதிலும் அதிகாரி அளவிலாம் சேர ஆசைப்படவில்லை. ஒரு சாதாரண ஜவானாக சேரவே ஆசைப்பட்டேன். அப்பொழுதுதான் துப்பாக்கி எல்லாம் தூக்கிக்கொண்டு எதிரிகளுடன் சண்டை போட முடியும் என்ற எண்ணம். எங்கள் அப்பாவும் இந்திய ராணுவத்தில் இருந்தபடியால் அதன் மேல் இயல்பான ஈர்ப்பு இருந்தது. எங்கள் அப்பாவிற்கும் என்னையும் மதுவையும் எப்படியாவது ராணுவப் பள்ளியில் சேர்த்துவிட வேண்டும் என்ற எண்ணம். துரதிஷ்டவசமாக அது நிறைவேறவில்லை.
அதன் பிறகு கல்லூரிப் படிப்பு முடித்த பிறகு நானும் மதுவும் Common Defense Service (CDS) exam எழுதினோம். எங்கள் நண்பர்களுடன் சேர்ந்து எழுதியதில் நானும், மதுவும் மட்டுமே தேறினோம். எங்கள் அப்பாவிற்கு திரும்பவும் ராணுவத்தில் சேர்த்துவிடும் ஆசை ஏற்ப்பட்டது. எங்கள் அப்பா Officers level இல் இருக்கும் தனி வேலை ஆள், தனி mess என்று அதில் இருக்கும் வசதிகள் அனைத்தையும் கூறி எங்களுக்கு ஆசையை ஏற்ப்படுத்தினார். CDS இல் தேறிய பிறகு நேர்முகத் தேர்வுக்கு எங்களை அலகாபாத் கூப்பிட்டிருந்தார்கள். போக வர ரயில் டிக்கெட் இலவசம். அனைத்து ஏற்ப்பாடுகளும் அவர்களே பார்த்துக்கொள்வார்கள். எங்கள் அப்பா மிக மகிழ்ச்சியோடு எங்களை தேர்வுக்கு தயார்ப்படுத்தினார்கள். ஆனால் நேர்முகத் தேர்வு செல்ல வேண்டிய அதே தருணத்தில் துரதிஷ்டவசமாக எங்கள் அப்பா இறந்தபடியால் எங்களால் செல்ல முடியவில்லை. ராணுவத்தில் தன் மகன்களை சேர்க்க வேண்டும் என்ற எங்கள் அப்பாவின் கனவும் நிறைவேறவில்லை .
Ok, leave my part .. Congratulations my dear Sachin . We are proud of you once again .
photo courtesy : The Hindu