நீரின்றி அமையாது உலகு
எவ்வளவு அருமையான வார்த்தைகள். நீரால் ஆக்கவும் முடியும் அழிக்கவும் முடியும் .
கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை.
மழை பெய்யாமல் மக்களை வதைப்பதும், அதுவே பெய்து அவர்கள் துன்பம் தீர்ப்பதும் மழையே ஆகும் .
நீரைப் போல் உலகில் வரவேற்க்கப்படுவதும் எதுவும் இல்லை வெறுக்கப் படுவதும் எதுவும் இல்லை.
வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று.
உலகத்தை வாழ வைப்பது மழையாக அமைந்திருப்பதால் அதுவே அமிழ்தம் எனப்படுகிறது.
உலகில் அளவான அளவில் இருக்கும் போது அது அமிர்தமாக கருதப்படுகிறது. அதுவே அளவுக்கு மீறும் போது வெறுக்கவும்படுகிறது.
மழை தரும் நாட்கள் மிக அலாதியானவை. அதுவும் முதல் மழை மக்களுக்கு அமிர்தம்.
நீருக்கென்று வடிவம்,நிறம்,மணம் எதுவும் கிடையாது . அது தான் தங்கும் இடத்திற்கு ஏற்ப வடிவத்தையோ , நிறத்தையோ , மணத்தையோ பெறுகிறது. இவ்வாறாக மனிதன் தான் தங்கும் இடத்திற்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொண்டால் உலகில் பல பிரச்சினைகள் தீரும் .
நீரானது ஒரே இடத்தில் தங்கி விட்டால் கேட்டுப் போய் விடும். அதுபோலவே மனிதனும், ஒரே இடத்தில் தங்கி விட்டால் கேட்டுப் போய் விடுவான்.
நீரானது நம் ஊரில் வளத்திற்கு உரியது மட்டும் அல்ல வழிபாட்டிற்கு உரியதும் கூட . கங்கை நீர் பெறும் அளவிற்கு மதிப்பை இந்த உலகில் எந்த ஒரு நதி நீரும் பெறுவதில்லை. இவ்வாறாக நீரானது இந்தியர்களில் இரண்டறக் கலந்தது.
எனக்குத் தெரிந்து கடலில் மிதக்கும் கப்பல்களை விட மழை நீரில் செல்லும் கப்பல்களே அதிகம். கடலில் ஒரு கப்பல் முதல் முதலில் வெள்ளோட்டம் விடும் போது ஏற்ப்படும் ஆர்ப்பரிப்பை விட மழை நீரில் செல்லும் போது ஏற்ப்படும் ஆர்ப்பரிப்பே அதிகம்.
உலகில் நீரானது தூய்மையானதாக கருதப்படுகிறது . உலகில் எவற்றையும் சுத்தப் படுத்த நீரே பிரதானம். நீர் தன்னுடன் சேரும் அனைத்தையும் நீர்த்துப் போகச் செய்கிறது. அதாவது நீரானது தன்னோடு சேரும் அனைத்தையும் தன் இயல்பை ஏற்கச் செய்கிறது அல்லது அவற்றின் இயல்பை ஏற்கிறது.
நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின்
ஆவியான கடல்நீர் மேகமாகி அந்தக் கடலில் மழையாகப் பெய்தால்தான் கடல்கூட வற்றாமல் இருக்கும். மனித சமுதாயத்திலிருந்து புகழுடன் உயர்ந்தவர்களும் அந்தச் சமுதாயத்திற்கே பயன்பட்டால்தான் அந்தச் சமுதாயம் வாழும்.
உலகில் தோன்றிய நாகரீகங்கள் அனைத்தும் ஆற்றுப்படுகைகளில்லேயே தோன்றின. மெசபடோமியா நாகரீகம் யூப்ரடிஸ், டைகிரிஸ் என்ற இரண்டு நதிகளுக்கிடையே ஏற்ப்பட்ட நாகரீகம். மெசபடோமியா என்றாலே இரண்டு நதிகளுக்கிடைய அமைந்த பகுதி என்று பொருள். சிந்து சமவெளி நாகரீகம் சிந்து நதிக்கரையிலும், எகிப்திய நாகரீகம் நைல் நதிக்கரையிலும் ஏற்ப்பட்டவை. இவ்வாறாக மனித நாகரீகங்களை வளர்த்தவை நதிகளே.
மழை தரும் நாட்கள் அற்புதமானவை.எனக்கு எவரையும் சட்டை செய்யாமல், ஏன் மழையையே சட்டை செய்யாமல் மழை நீரில் நனையப் பிடிக்கும். எவர் கைபடாத, இன்னும் மண்ணைச் சேராததால் எந்த ஒரு தன்மையையும் ஏற்காத அந்த தூய்மையான மழை நீரில் நனையப் பிடிக்கும்.
மழை தரும் நாட்கள் அற்புதமானவை.மழை எனக்கு அந்நியமாகத் தோன்றவில்லை. அது என்னுடன் ஒன்றோடொன்று கலந்ததைப் போல் பிடிக்கும். மழை தரும் சிநேகம் அற்புதமானது. மழையன்றி வேறு எந்த ஒரு சிநேகமும் அவ்வளவு அன்னியோன்யமாகவோ அல்லது தூய்மையானதாகவோ தெரிவதில்லை.
மழை தரும் நாட்கள் அற்புதமானவை. மழை வீட்டைக் கழுவி விடுகிறது, மாட்டை கழுவி விடுகிறது , ஆட்டைக் கழுவி விடுகிறது , ஏன் சின்னச் சிறு புல் பூண்டைக் கழுவி விடுகிறது. மழைக்கடுத்து அனைத்தும் அழகாய்த் தோன்றுகின்றன.
மழை தரும் நாட்கள் அற்புதமானவை. பெரு மழை பெய்யும் போது வீட்டிற்க்குள் அமர்ந்து கொண்டு அந்த சூறைக் காற்றை சன்னல் வழியெப் பார்க்கப் பிடிக்கும். எவற்றையும் தன்னுடன் அடித்துச் செல்வது போல் பெய்யும் அந்த சூறைக் காற்று பலத்தின் உதாரணம். அந்த சூறைக் காற்று தெருவின் மூலை முடுக்கில் இருக்கும் அனைத்தையும் அடித்துச் செல்கிறது. அந்த மழையானது தன்னியல்பில் மாறி அனைத்தையும் இழுத்துச் செல்ல நினைக்கிறது.
அனைத்து இடங்களிலிருக்கும் நீருக்கும் தோற்றமும் சேர்தலும் ஒரே இடமே . மழையானது கடலில் தோன்றி கடலிலேயே சென்றடைகிறது.
மழை தரும் நாட்கள் அற்புதமானவை.