எங்கள் அப்பா தென்னாலிராமன்,மரியாதை ராமன், விக்ரமாதித்தன் கதைகள்,அரபியக் கதைகள், ஆயிரத்தொரு இரவுக் கதைகள், அக்பர்-பீர்பால் கதைகள் எல்லாம் அவ்வளவு அருமையாக கூறுவாங்க. ஓவ்வொரு கதை சொல்லிமுடித்த பிறகும் அக்கதை சொல்லும் நீதி என்ன என்று கேட்ப்பாங்க . நாங்கள் எங்களுக்கு தோன்றியவரையில் கதையின் நீதியைச் சொல்லுவோம். இப்படியாக கேள்வி அறிவையும், ஒரு சம்பவத்தை புரிந்து கொள்ளும் திறமையையும் ஒரே சமயத்தில் எனக்கும் மதுவுக்கும் வளர்த்தார்கள்.
எங்கள் அப்பா கூறும் கதைகளுக்கு சிறுவர்கள் மட்டும் அல்ல பெரியவர்களும் அடிமை ஆகியிருந்தார்கள். இன்றும் கூட எங்கள் மாமா, எங்கள் அப்பா கதை சொல்லும் திறமையைப் பற்றி சிலாகிப்பார்கள். எங்கள் அப்பா எங்களுக்கு வளர்த்த இந்த கேள்வி அறிவை நானும் மதுவும் எங்கள் பிள்ளைகளுக்கு வளர்க்கும் அளவிற்கு திறமை கொண்டிருக்கிறோமா என்பது சந்தேகமே.
we miss you dad. we miss you so much. we miss you in many ways.
எங்கள் அப்பா சிறு வயதில் எங்களுக்கு கூறிய பல கதைகளும் எங்களுக்கு இன்றும் ஞாபகம் இருக்கிறது. சென்ற வாரம் எங்கள் சித்தப்பா வீட்டிற்குச் சென்ற போது "சோவியத் நாட்டுக் கதைகள்" என்ற புத்தகம் எடுத்து வந்தேன். அதில் எங்கள் அப்பா கூறிய பல கதைகள் இருந்தன. அதில் ஒன்று உங்களுக்காக இங்கே.
ஒரு காலத்தில் ஒருவருக்கு ஆறு மகன்களும் ஒரு மகளும் இருந்தனர். ஒரு நாள் சகோதர்கள் ஆறுபேரும் நிலத்தை உழுகச் செல்வர். செல்லும்போது தம் தங்கையிடம் மதிய உணவை அனுப்புமாறு கூறிச் செல்வர். அப்பொழுது தங்கை நீங்கள் இருக்கும் இடத்தை எப்படி அறிவது என்று கேட்கும்போது, நாங்கள் செல்லும் வழியில் கோடு கிழித்துச் செல்கிறோம் அதைப் பார்த்து வா என்பர். அக்காலத்தில் அவர்களின் நிலத்துக்கு அருகில் ஒரு பூதம் வசித்து வந்தது. அது அந்த கோட்டை அழித்து விட்டு தன் வீட்டுக்கு கோட்டைப் போட்டுவிடும். அந்த கோட்டைப் பார்த்துச் சென்ற அவர்களின் சகோதரியைச் சிறை பிடித்துவிடும். சாயங்காலம் சகோதர்கள் ஆறு பேரும் தம் தங்கையைக் காணவில்லை என்று அந்த கோட்டு வழியே பார்த்துச் செல்லும்போது அவர்களை பாதாளச் சிறையில் அடைத்துவிடும்.
சிறிது காலத்திற்குப் பிறகு அந்த அப்பா அம்மாவிற்கு இன்னதொரு மகன் பிறப்பான். அவன் பெயர் பொக்கத்தி - கரோஷிக். அவன் மிகப் பெரிய பலசாலியாக வளர்ந்தான். பெரிய பெரிய பாறைகளை எல்லாம் அனாசயமாக தூக்கிவிடுவான். ஒரு நாள் அவன் தம் தாய் தந்தையரிடம், தமக்கு முன் ஏதேனும் சகோதர சகோதரிகள் பிறந்தனரா என்று கேட்பான். அப்பொழுது அவன் தாய் தந்தையர் நடந்த கதையைக் கூறுவர். உடனே பொக்கத்தி - கரோஷிக் தன் சகோதர சகோதரியை மீட்டு வருவேன் என்று கூறி, அதற்க்கு ஆயுதம் வேண்டும் என்று கூறி மிகப் பெரிய இரும்பு பாளத்தை கொல்லனிடம் கொண்டு பொய் கொடுப்பான். கொல்லனும் அவனுக்கு வேண்டி மிகப் பெரிய வாள் செய்து கொடுப்பான். பொக்கத்தி - கரோஷிக் அந்த வாளை எடுத்து வானில் வீசி, அது திரும்பி வரும் போது தன்னை எழுப்புமாறு கூறி தூங்கச் செல்வான் . இப்படியாக அவன் பன்னிரண்டு நாட்கள் தூங்கினான். பதிமூன்றாம் நாள் அந்த வாள் பெரிய சத்தத்துடன் திரும்பி வரும். அவன் தாய் தந்தையர் அவனை எழுப்புவர். அவன் துள்ளி எழுந்து முஷ்டியை நீட்டினான். அப்பொழுது வாள் அவன் முஷ்டியில் பட்டு இரண்டாக உடைந்தது. இந்த வாள் சரிப்படாது என்று கொல்லனிடம் சென்று புதிய வாள் செய்யச் சொன்னான். கொல்லனும் முன்னைக் காட்டிலும் பெரிய வாள் செய்து கொடுப்பான். பொக்கத்தி - கரோஷிக் அந்த வாளை வானில் தூக்கி எறிந்து விட்டு தூங்கச் செல்வான். பதிமூன்றாம் நாள் எழுந்து முஷ்டியை நீட்டுவான். அப்பொழுது அந்த வாள் அவன் முஷ்டியில் பட்டு சிறிது முனை மழுங்கும். இந்தவாள்தான் சரியானதென்று அதை எடுத்துக்கொள்வான். அந்த வாளை எடுத்துக்கொண்டு தன் சாகோதர சகோதரியை மீட்கச் செல்வான். அங்கு அந்த பூதத்துடன் மோதி தன் சகோதர சகோதரிகளை மீட்டு வருவான்.
ஆனால் இவன் சகோதரர்களுக்கு இவன் யாரென்று தெரியாது. அதனால் அவன் மீது பொறாமை கொண்டு அவன் தூங்கும் பொழுது அவனை ஓக் மரத்துடன் சேர்த்து கட்டி போட்டுவிட்டுச் செல்வார்கள். பொக்கத்தி - கரோஷிக் தூங்கி எழுந்ததும் தன்னை மரத்திலிருந்து அவிழ்த்துவிட்டு தன் சகோதரர்க ள் தனக்குச் செய்த துரோகத்தை எண்ணி வருந்தியபடி நடந்து செல்வான். அப்படி செல்லும் வழியில் அவனுக்கு மலை நகர்த்தி சிவெர்னி - கொராவுடன் நட்பு கிடைக்கும். சிவெர்னி - கொரா மலைகளை நகர்த்தும் திறமை கொண்டவன். இதே போன்று இவர்களுக்கு மரம் பெயர்க்கும் வெர்த்தி-தூபுவுடனும் மீசை முறுக்கி ஆற்றின் வெள்ளம் பிளக்கும் குருத்தி-யூசுவுடனும் நட்பு கிடைக்கும். இவ்வாறாக நால்வரும் சேர்ந்து செல்வார்கள். வழியில் ஒரு குடிசை காலியாக இருக்கும். நால்வரும் அதில் தங்க முடிவெடுப்பார்கள். பொழுது விடிந்ததும் சிவெர்னி - கொராவை சமைக்க சொல்லிவிட்டு மூவரும் வேட்டையாடச் செல்வார்கள். சிவெர்னி - கொரா சாப்பாடு செய்து முடித்ததும் கதவு தட்டப்படும். அப்பொழுது அந்த கதவைத்திறந்து ஒரு குரலிகிழவன் வந்தான். அவன் தாடி ஐந்து அடி நீளத்திற்கு அவன் பின்னால் தொங்கியது. அவன் சிவெர்னி - கொராவை பிடித்து தூக்கி ஆணியிலே தொங்கவிட்டான் . பிறகு அங்கு இருந்தவற்றை அனைத்தையும் சாப்பிட்டு விட்டுச் சென்றுவிடுவான். பிறகு சிவெர்னி - கொரா எப்படியோ ஆணியிலிருந்து இறங்கி சாப்பாடு செய்யும்பொழுது அவன் நண்பர்கள் வந்துவிடுவார்கள். என்ன நீ இன்னும் சாப்பாடு தயாரிக்கவில்லையா என்று கேட்பார்கள். அதற்க்கு சும்மா நேரமாகி விட்டது என்பான் சிவெர்னி - கொரா. இதற்க்கு அடுத்த நாட்களில் வெர்த்தி-தூபுவுக்கும் குருத்தி-யூசுவுக்கும் இதே போன்று நடக்கும்.
நான்காவது நாள் பொக்கத்தி - கரோஷிக் உணவு தயாரிப்பான். அன்றும் அந்த குரலிகிழவன் வருவான். வந்து பொக்கத்தி - கரோஷிக்கை பிடித்து ஆணியில் மாட்ட அவன் சிண்டைப் பிடிக்க முயல்வான். உடனே பொக்கத்தி - கரோஷிக் நீ அப்படிப்பட்டவனா என்று கூறி அவன் தாடியைப் பிடித்து இழுத்துச் சென்று ஓக் மரத்தை இரண்டாகப் பிழந்து அந்தப் பிழவில் கிழவனின் தாடி மாட்டிக்கொள்ளும் படி செய்வான். பின் தன் நண்பர்கள் வந்தவுடன் அவர்களிடம் நடந்ததைக் கூறுவான். அவன் நண்பர்களும் அவனிடம் மற்ற மூன்று நாட்களில் நடந்தவற்றைக் கூறுவார்கள். இப்படிப் பட்ட கிழவனை விடக் கூடாது என்று சொல்லி பொக்கத்தி - கரோஷிக் தன் நண்பர்களுடன் செல்வான். அந்த குரலிகிழவன் ஓக் மரத்தை தாடியுடன் இழுத்துக்கொண்டு தடம் விட்டுச் சென்றிருப்பான். அதைப் பார்த்து நால்வரும் செல்வர். அது ஒரு
குழியைச் சென்றடையும். அந்த குழிக்குள் பொக்கத்தி - கரோஷிக் இறங்குவான். அங்கு ஒரு அழகிய பெரிய மாளிகை இருக்கும். அங்கு ஒரு மிகச் சிறந்த அழகியாகிய ஒரு அரசிளங்குமரி இருப்பாள். அவளிடம் பொக்கத்தி - கரோஷிக் நீ எப்படி இங்கு வந்தாய் என்பான். அதற்க்கு அந்தப் பெண் தன்னை இந்த கிழவன் சிறை பிடித்திருக்கிறான் என்பாள். பொக்கத்தி - கரோஷிக் தான் அவளை மீட்பதாகக் கூறி கிழவனுடன் சண்டையிட்டு அவனைக் கொல்வான். பிறகு அந்த மாளிகையில் இருந்த செல்வங்களை எடுத்து மூட்டையாகக் கட்டி தான் இறங்கி வந்த கயிற்றில் கட்டி மேலே அனுப்புவான். கடைசியாக இளவரசியை அனுப்பிவிட்டு தான் ஏறக் காத்திருப்பான். அப்பொழுது அந்த மூவரும் எப்படியாவது பொக்கத்தி - கரோஷிக்கை கொன்று விட்டால் தாங்களே இளவரசியையும் செல்வங்களையும் அடையாலாம் என்றெண்ணிக் கொள்வார்கள். இதை எப்படியோ உணர்ந்த பொக்கத்தி - கரோஷிக் கடைசியாக ஒரு பெரிய பாறாங்கல்லை கட்டி அனுப்புவான். நண்பர்கள்பாதி தூரம் அதைத் தூக்கி விட்டுவிடுவார்கள். பாறாங்கல் கீழே விழுந்து நொறுங்கிவிடும். பொக்கத்தி - கரோஷிக் கீழேயே மாட்டிக்கொள்வான்.
பொக்கத்தி - கரோஷிக் அந்த குழிக்குள் நடந்து செல்லும்போது அங்கு ஒரு கழுகுக் கூட்டில் கழுகு குஞ்சுகள் குளிரில் நடுங்கிக் கொண்டிருக்கும். அவற்றிக்கு தன் சட்டையை போர்த்தி கதகதப்பு அளிப்பான். கொஞ்ச நேரத்தில் அங்கு வரும் பெரிய கழுகு இதைப் பார்த்து தான் பொக்கத்தி - கரோஷிக்கிற்கு என்ன உதவி செய்ய என்று கேட்கும். அதற்க்கு பொக்கத்தி - கரோஷிக் தன்னை மேலே கொண்டு சேர்க்குமாறு கூறுவான். கழுகும் அவ்வாறே செய்யும். பிறகு பொக்கத்தி - கரோஷிக் மூவரையும் தேடிச் செல்வான். அவர்கள் அரசிளங்குமரியின் அரண்மனையில் இருப்பார். பொக்கத்தி - கரோஷிக் அங்கு சென்றதும் அவர்கள் பொக்கத்தி - கரோஷிக் தங்களைக் கொன்று விடுவான் என்றே நினைத்தனர். ஆனால் பொக்கத்தி - கரோஷிக் தன் சகோதரர்களே தன்னை ஏமாற்றிய பிறகு நீங்கள் எம்மாத்திரம் என்று கூறி அவர்களை மன்னிப்பான். பிறகு அந்த அரசிளங்குமரியைக் கல்யாணம் செய்துகொண்டு நன்றாக வாழ்வான்.