நான் ஒரே சமயத்தில் பல புத்தககங்களை படிக்கும் கேட்ட பழக்கம் கொண்டவன். ஆனால் அதில் ஒரு நன்மை இருக்கிறது. நாம் ஏதேனும் விருப்பமாக படிக்க வேண்டும் என்று எண்ணும் போது புத்தகங்களின் சில பகுதிகள் bore அடிக்கலாம்.அந்த சமயத்தில் வேறுப்பட்ட தளங்களில் அமைந்த மற்ற புத்தகங்களைப் படிப்பது சுவாரசியம் அளிக்கும். இந்த ஆண்டு புத்தக கண்காட்ச்சிக்குச் சென்றிருந்தபோது சில புத்தகங்களை வாங்கினோம். புத்தகக் கண்காட்ச்சியில் நாங்கள் போன நாளில் பத்மஸ்ரீ கமலஹாசன் சிறப்பு விருந்தினர். கமலின் பேச்சைக் கேட்பதற்காகவே சீக்கிரம் புத்தகங்களை வாங்கி முடித்தோம்.
இப்படியாக வாங்கிய புத்தகங்கள் பல தளங்களைச் சார்ந்தவை. இத்தனைப் புத்தகங்களில் எதை முதலில் ஆரம்பிப்பது என்ற குழப்பத்திலேயே சில நாட்கள் கழித்தேன். பிறகு நமக்குப் பிடித்த துறைகளில் ஒன்றான வரலாற்றைப் படிக்கலாமென்று Freedom at Midnight இன் தமிழ் பதிப்பான "நள்ளிரவில் சுதந்திரம்" என்ற நூலை ஆரம்பித்தேன். 600 பக்கங்களில் சுமார் 300 பக்கங்களைப் படித்து முடித்தேன். புத்தகம் சிறிது சுவாரசியம் குறைவதாகத் தோன்றியது. சரி வேறு ஏதாவது புத்தகம் மாற்றலாமா என்றால் எதைப் படிப்பது என்று புரியவில்லை. சரி இப்பத்தகத்திர்க்கு முற்றிலும் மாறுப்பட்ட களத்தைச் சார்ந்த நாகூர் ரூமி எழுதிய "சூபி வழி ஒரு எளிய அறிமுகம்" புத்தகத்தை ஆரம்பித்தேன். புத்தகம் நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்ததது. இதைப் படித்துக்கொண்டிருக்கும் போதே "சீனா விலகும் திரை" கண்ணில் பட்டது. உடனே எனக்கு உள்ளிருந்த வரலாறுப் பேய் வெளியே வந்து விட்டது. உடனே ஆன்மீகத்தேடலான சூபியிலிருந்து , அதற்க்கு முற்றிலும் மாறுபட்ட சொல்லப் போனால் எதிரான கம்யூனிச சீனாவிற்கு மனம் சென்று விட்டது.
"சீனா விலகும் திரை" நூலை எழுதியவர் பல்லவி அய்யர். பல்லவி பிரிட்டன், US போன்ற நாடுகளிலிருந்துவிட்டு சீனாவிற்குச் சென்று அங்கு 5 ஆண்டுகள் இருந்தவர். புத்தகத்தை வாங்கும் போது முன்னுரை, பின்னுரைகள் எதையும் பார்க்கவில்லை. மது புத்தகத்தை பார்த்தவுடனே வாங்கிவிட்டான். சரி புத்தகத்தைப் படிக்கும் போது content பார்த்தால் ஒலிம்பிக்ஸ், சார்ஸ் நோய், திபெத் ரயில் போன்ற தெரிந்த சம்பவங்களாகவே இருந்த்தது. ஒரு கணம் ஏமாந்துவிட்டோமோ என்று தோன்றியது. சரி எப்படியாக இருந்தாலும் படிக்கலாம் என்று தீர்மானித்து படிக்க ஆரம்பித்தேன். நல்லவேளையாக மேலே கூறிய சம்பவங்கள் எல்லாவற்றையும் வெறும் செய்தித்தாள் செய்திகளாகக் கூறாமல் தன் கண்ணெதிரே பார்த்தவற்றை ஒரு தனி மனித கண்ணோட்டத்தில் பதிவு செய்துள்ளார். அது மெச்சத்தக்க வகையில் இருந்த்தது.
சீனா - ஒரு அசுரப் பேய். அனைவரும் ஆச்சரியப்படத்தக்க சொல்லப் போனால் அச்சப்படத்தக்க வகையில் முன்னேறிக்கொண்டிருக்கும் ஒரு நாடு. பல்வேறு ஊடகங்களின் கருத்துகளின்படி 2050 இல் உலகப் பொருளாதாரத்தில் முதலிடம் வகிக்கப் போகின்ற நாடு. இன்னும் சொல்லப் போனால் முதலிடத்தை அதை விட வெகு சீக்கிரத்திலயே தொட்டாலும் தொட்டுவிடும். உலகப் பொருளாதாரங்கள், பொருளாதாரத் தேக்க நிலையில் மாட்டிக்கொண்டு விழி பிதுங்கும் போது தான் மட்டும் சென்ற ஆண்டு 8.7% வளர்ச்சியை எட்டிய நாடு. வரும் மார்ச்சு மாதம் தெரிந்துவிடும், உலகப் பொருளாதாரத்தில் சீனா இரண்டாம் இடம் வகிக்கிறதா அல்லது மூன்றாம் இடம் வகிக்கிறதா என்று. ஜப்பான் தான் தற்போது அமெரிக்காவிற்கு அடுத்த நிலையில் இரண்டாம் இடம் வகிக்கிறது. மார்ச்சு மாதம் ஜப்பான் தன்னுடைய பொருளாதார நிலையைப் பற்றி தெரிவித்துவிடும். அதிலிருந்து சீனா இரண்டாம் இடமா அல்லது மூன்றாம் இடமா என்று தெரிந்துவிடும்.
ஒரு காலத்தில் ரஷ்யாவை இரும்புத்திரை நாடு என்பார்கள். ஏனெனில் அங்கு நடக்கும் எந்த விசயங்களும் வெளியே தெரியாது. சீனாவும் கிட்டத்தட்ட அதே மாதிரித்தான். சீனாவில் நடக்கும் விசயங்களும் வெளியே தெரியாது. சீனா எவ்வளவு தன் ராணுவத்திற்கு செலவழிக்கிறது என்றோ அல்லது அங்கு நிறைவேற்றப்படும் மரண தண்டனைகளின் எண்ணிக்கையோ வெளியே தெரியாது. Amnesty International படி, சீனாதான் உலகிலேயே மரணதண்டனை அதிகமாக நிறைவேற்றும் நாடு. சென்ற ஆண்டு மட்டும் கிட்டத்தட்ட 3000 திற்கும் மேற்ப்பட்ட மரணதண்டனைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இது கூட சீனா கூறியதில்லை. இந்தியாவில் கடந்த பல ஆண்டுகளாக மரணதண்டனை நிறைவேற்றப்படவில்லை என்பதைக் கருத்தில் கொள்ளும்போது இது எவ்வளவு பெரிய எண்ணிக்கை என்று புலப்படும்.
இவ்வளவு குறைகள் இருந்தாலும் சீனாவின் வளர்ச்சி அபரிமிதமானது. கடந்த பல ஆண்டுகளாகவே நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறைந்த்தது 8% இருக்க வேண்டும் என்பதை குறிக்கோளாக கொண்டுள்ளது. உலகில் பயன்படுத்தப்படும் இரும்பில் மூன்றில் ஒரு பங்கு சீனாவில் பயன்படுத்தப்படுகிறது என்பதை அறிந்தால் அது எந்த அளவு அசுரப் பாய்ச்சல் பாய்கிறது என்பதை அறியலாம்.
ஆப்ரிக்கா வரை தன்னுடைய கிளைகளைப் பரப்பி தன் இருப்பை காட்டிக்கொண்டுள்ளது. இப்படிப்பட்ட சீனாவில் பிரச்சினைகள் இல்லாமல் இல்லை. பல பொருளாதார வல்லுனர்கள் சீனாவின் பொருளாதார வளர்ச்சி நீறு பூர்த்த நெருப்பாகவே உள்ளது என்று கணிக்கின்றனர். ஆனால் என்னைப் பொறுத்தவரையில் அதில் பெரிய அளவு உண்மைகள் இருக்கும் என்று தோன்றவில்லை. கடந்த சில ஆண்டுகளில் சீனாவில் உண்டாகிய பிரச்சினைகளில் முக்கியமானவை சார்ஸ் நோய் மற்றும் திபெத் உரிமைப் போராட்டம். சார்ஸ் நோய் மிகப் பெரிய பிரச்சினையாக அமைந்ததற்கு காரணம் சீனா, அந்நோயின் தொடக்கக் காலங்களில் அந்நோய் பரவவில்லை என்றே கூறிவந்தது. நோய் அதிகமாகப் பரவவும், சார்ஸ் நோய் இருப்பதை ஒத்துக்கொண்டது. தீடிரென்று ஒப்புக்கொண்டதாலும் நோயின் தாக்கம் அதிகமாக இருந்ததாலும் மக்கள் பயந்துவிட்டனர். இதேபோல் உலகின் கவனத்தை கவர்ந்த மற்றொரு பிரச்சினை திபெத் உரிமைப் போரின் 50 ஆம் ஆண்டு நிறைவு. இவை இரண்டும் சீனா சமீபத்தில் சந்தித்தப் பிரச்சினைகள். சீனா பல காலமாகவே பல விசயங்களை உலகிற்க்கோ அல்லது தன் மக்களுக்கோ தெரிவித்தது இல்லை. சீனாவில் இருக்கும் கல்லூரி மாணவர்களுக்குக் கூட தலாய் லாமா நோபெல் பரிசு பெற்றது தெரியாது.
ஆனால் பொருளாதாரத்தில் சீனாவின் வளர்ச்சியை எவராலும் நெருங்க முடியவில்லை. இருந்தாலும் இந்தியா சீனாவை தன்னுடைய இலக்காக நினைத்து துரத்திக்கொண்டுள்ளது. ஆனால் சீனா, இந்தியாவை ஒரு பொருட்டாகக் கூட நினைக்கவில்லை. அதனுடைய இலக்கு எல்லாம் அமெரிக்காதான். பார்ப்போம் யார் இந்த போட்டியில் ஜெயிக்கிறார்கள் என்று.